Thursday, May 30, 2024

இந்திய நாடாளுமன்ற தேர்தல் - 2024

2024-29 கால கட்டத்துக்கான இந்திய அரசை நடத்தப்போவது யார் எனும் தேடல் இந்திய நாடாளுமன்ற தேர்தலாக தற்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கிறது. மொத்தமுள்ள ஏழு கட்ட தேர்தலில் இது வரை ஆறு கட்ட தேர்தல் முடிவடைந்து அதன் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் முதல் நாள் நடைபெறும். ஜூன் நான்காம் நாள் வாக்கு எண்ணிக்கை. ஜூன் ஐந்தாம் தேதி மாலை அடுத்த ஆட்சி யார் கையில் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிடும்.

என்னுடைய ஊகம் என்னவென்றால், மூன்றாவது முறையாகவும் பாஜக தான் ஆட்சி அமைக்கக் கூடும், ஆனால் அது நிச்சயமாக அறுதி பெரும்பான்மை கொண்ட ஆட்சியாக அல்லாமல் சிறுபான்மை ஆட்சி / கூட்டணி ஆட்சியாக அமையவே வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். காரணம் காங்கிரஸ் தலைமையிலான "INDIA" கூட்டணியின் எழுச்சியும் அதற்கு மக்களிடம் கிடைத்து வரும் அமோக வரவேற்பும் தான்.

ஒருவேளை கடைசி நேர சுதாரிப்பாக அல்லாமல் முன் கூட்டியே இந்த அணி அமைக்கப்பட்டு தேர்தல் கால பணிகளுக்கான முன்னேற்பாடுகள் நடத்தி இருந்தால் ஆட்சியை பிடிக்கக்கூடிய வாய்ப்பை கூட பெற்று இருக்கக்கூடும் என நினைக்கிறேன். 

இந்திய அரசை ஆட்சி செய்ய 272 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

குஜராத், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், ராஜஸ்தான், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் இப்போதும் பாஜக வலுவாக உள்ளது. மேலும் அங்குள்ள மக்கள் மத ரீதியான உணர்வுகள் அடிப்படையில் வாக்குகளை தீர்மானிப்பதால் பாஜகவும் இந்த முறை தேர்தல் பிரச்சாரம் முழுமையும் மத ரீதியாகவே செய்து வந்தது. ஆகையால் அந்த மாநிலங்களில் எல்லாம் பெருவாரியாக வெற்றி பெற பாஜகவுக்கு கஷ்டம் ஒன்றும் இருக்காது.

தென் மாநிலங்களை பொறுத்த வரை பாஜகவுக்கு கஷ்டம் தான். ஆனால் தென்மாநிலங்களில் ஒரே ஒரு உறுப்பினர் கூட கிடைக்காமல் போனாலும் 272 உறுப்பினர்களை பிற மாநிலங்களில் இருந்து பெற்றுக்கொள்வது பாஜகவுக்கு சுலபமே. 

ஒரு வேளை கூட்டணி ஆட்சி, சிறுபான்மை ஆட்சி என்கிற நிலையில் பாஜக ஆட்சி செய்யும் எனில் எதிர்கட்சி வரிசையில் காங்கிரஸ் கூட்டணி மிக பலமாக அமையும் என்பதால் பாஜகவின் கனவு திட்டங்கள் எதையும் அமல் செய்ய முடியாமல் போகும். பாஜகவின் எதேச்சாதிகார போக்குக்கு காங்கிரஸ் அணி மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்து தவறான முடிவுகளை பாஜக எடுக்காமல் பார்த்துக்கொள்ளும்.

தமிழ்நாடு & புதுவையை பொறுத்தவரை, 40/35 திமுக கூட்டணி நிச்சய வெற்றி பெறும். அதிமுக இரண்டு இடங்களிலும் (கோவை, ஈரோடு) பாஜக அணி மூன்று இடங்களிலும் (நெல்லை, வேலூர், தர்மபுரி) வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன என்றாலும் அங்கேயும் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்திலாவது வெற்றி பெற்றாலும் ஆச்சர்யம் இல்லை.

கேரளாவில் பாஜக ஒரே ஒரு இடத்தில் (திருச்சூர்) வெற்றி பெற வாய்ப்பு உண்டு. மற்றவற்றில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக நினைக்கவில்லை.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் YSR காங்கிரஸ் கட்சியும் கர்நாடகத்திலும் தெலுங்கானாவிலும் எல்லாம் காங்கிரஸ் கட்சியும் வலுவாக உள்ளது. அங்கே சிற்சில இடங்களை பாஜக வெல்லக்கூடும் எனினும் அவை ஒற்றை இலக்க எண்களாக தான் இருக்கக்கூடும்.

எனவே, தென் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் இனி இந்திய நாட்டின் வரலாற்றை தீர்மானிக்க போகிறவர்கள். குறிப்பாக திராவிட முன்னேற்ற கழக கூட்டணி உறுப்பினர்கள். அவர்கள் எதை அனுமதிக்க போகிறார்கள் எதிர்க்க போகிறார்கள் என்பதை பொறுத்தே சட்டங்களும் திட்டங்களும் அமையும். அந்த வகையில் நாடு முழுமையும் இனி ஸ்டாலின் ஆட்சி என சொன்னாலும் அது மிகை அல்ல.

அடுத்த வாரம் முடிவுகள் வந்த பின் விரிவாக அலசுவோம்.


Printfriendly