Wednesday, September 29, 2021

பெட்ரோல் டீசல் GST யின் கீழ் வருமா?

சமீப காலமாக மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது, பெட்ரோல் மற்றும் டீசலை GST ககுள் கொண்டு வரவேண்டும் என்கிற விவாதம்.

பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இது குறித்த விவாதம் GST council கூட்டத்தில் விவாதிக்க படாமலேயே சென்று கொண்டு இருக்கிறது.

பெட்ரோல் டீசல் ஆகியவற்றை GST வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து பலருக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்கள் இருக்கலாம். என்னிடம் பல நண்பர்கள் அவர்களது சந்தேகங்களை கேட்டார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு இங்கே முக்கியமான ஐந்து கேள்விகளுக்கு சுருக்கமாக விளக்க முயற்சிக்கிறேன்.

1. GST வரம்புக்குள் பெட்ரோல் டீசல் ஆகியவற்றை கொண்டு வந்தால் அதன் விலை குறையுமா?

குறையும். எப்படி என சொல்கிறேன்.

இப்போது GST இல்லாத காரணத்தால் GST க்கு முன்பு இருந்த சட்டங்களின் அடிப்படையில் தான் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரி விதிக்கப்படுகிறது.

பெட்ரோலை உதாரணமாக எடுத்து கொள்வோம். (விலை ஒரு லிட்டருக்கு)

பெட்ரோல் அடிப்படை விலை (உற்பத்தி ஆகி பெட்ரோல் பங்குக்கு வரும் விலை) - ₹40

அதன் மீது மத்திய அரசு விதிக்கும் Excise மற்றும் CESS வரி (இது மொத்தமும் மத்திய அரசுக்கு போகும்) - ₹32

பெட்ரோல் பங்க் டீலர் கமிஷன் - ₹4

இவை மூன்றையும் சேர்த்தால் - ₹76

இந்த ₹76 மீது மாநில அரசு விதிக்கும் வரி - ₹23

இதையும் சேர்த்தால் விற்பனை செய்யப்படும் விலை - ₹99

GST குள் கொண்டு வரப்பட்ட பிறகு இது என்ன ஆகும் என பார்ப்போம்.

பெட்ரோல் அடிப்படை விலை (உற்பத்தி ஆகி பெட்ரோல் பங்குக்கு வரும் விலை) - ₹40

Excise மற்றும் CESS வரி (GST வந்தால் இந்த வரிகள் ரத்து ஆகி விடும்) - ₹0

பெட்ரோல் பங்க் டீலர் கமிஷன் - ₹4

இவை மூன்றையும் சேர்த்தால் - ₹44

இந்த ₹44 மீது GST வரி - ₹12 (இதில் மாநில அரசுக்கு ₹6 மத்திய அரசுக்கு ₹6 போகும்)

GST யின் படி அதிக பட்ச வரி 28% என்பதால் அதை கணக்கு இட்டு உள்ளேன்.

GST லும் CESS உள்ளது. ஆனால் அது Luxury Items வகைகளுக்கு மட்டுமே பொருந்தும். பெட்ரோல் டீசல் Luxury Item ஆக வராது.

எனவே இப்போது ₹99 ஆக இருக்கும் பெட்ரோல் விலை GST யின் கீழ் ₹56 ஆகும்.

2. மாநிலங்கள் பெட்ரோல் டீசலை GST குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

மேலே சொன்ன கணக்கீடு படி, மத்திய அரசுக்கு கிடைத்து வந்த வரியான ₹32 என்பது ₹6 ஆக குறைகிறது. மாநில அரசுக்கு கிடைத்து வந்த வரியான ₹23 என்பது ₹6 ஆக குறைக்கிறது.

அதாவது சுருக்கமாக சொன்னால் ஒரு லிட்டருக்கு, மத்திய அரசுக்கு ₹26 மாநில அரசுக்கு ₹17 இழப்பு ஆகும்.

இப்போதைய சூழலில் மாநில அரசுக்கான பெரும் வருவாய் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இருந்தும், மது விற்பனையில் இருந்தும் தான் கிடைக்கிறது. எனவே இந்த இழப்பு மிகப்பெரிய நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தி விடும்

ஏற்கனவே, GST வந்த பிறகு ஏற்கனவே கிடைத்து வந்த வரி வருவாய் கிடைக்காமல் பற்றாக்குறையில் இருக்கும் நிலையில் வருகின்ற கொஞ்ச நஞ்ச வருவாயையும் இழக்க மாநிலங்கள் தயாராக இல்லை.

3. GST குள் கொண்டு வந்த பின்னால் வரியை அரசுகள் உயர்த்தி இப்போதைய விலைக்கே கொண்டு வராதா?

GST சட்டம் அதிக பட்சமாக 28% வரி கொண்டது. அதை விட அதிகமாக வரி விதிக்க இப்போதைக்கு சட்டத்தில் இடம் இல்லை.

GST விதிக்கும் போது வேறு வரிகள் நிழைக்கவும் சட்டத்தில் இடம் இல்லை.

ஒன்று எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய விலையை இப்போது இருக்கும் ₹40 லிருந்து உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தினால் அதன் அடிப்படையில் வரியும் உயரும். ஆனால் அது பெரிய அளவுக்கு அரசுக்கு பயன் தராது.

4. பெட்ரோலுக்கு வசூல் ஆகும் வரிகள் மாநிலத்துக்கு கிடைக்காமல் இழுத்தடிக்க வாய்ப்பு உள்ளதா?

பெட்ரோலை பொறுத்த வரை, பங்கில் இருந்து வாகனத்துக்கு செலுத்துவது தான் விற்பனை எனப்படும். இரண்டும் ஒரே இடத்தில் தொடங்கி ஒரே இடத்தில் முடியும் (பெட்ரோல் பங்க்).

எனவே GST யின் Place of Supply Rules படி, இது மாநிலத்திலேயே நடக்கும் விற்பனையாகத் தான் கருதப்படும்.
பெட்ரோல் பங்க் தமிழகத்தில் இருந்தாலும் பெட்ரோல் வாங்கும் வாகனம் டெல்லியை சேர்ந்தது ஆக இருந்தாலும் அது Interstate வியாபாரம் ஆகாது. Intra-State வியாபாரமாக தான் கருதப்படும்.

எனவே இதற்கான வரி, CGST & SGST கணக்கில் தான் வரவு வைக்கப்படுமே தவிர IGST கணக்கில் வராது.

SGST தொகை நேரடியாக மாநிலத்துக்கு கிடைத்து விடும். CGST தொகை நேரடியாக மத்திய அரசுக்கு சென்று விடும்.

எனவே, மத்திய அரசு மாநிலத்துக்கு வரி தராமல் இழுத்தடிக்கும் வாய்ப்பு இதில் ஏற்படாது. ஏனெனில் மாநிலத்தின் பங்கு நேரடியாக மாநிலத்துக்கு வந்து விடும்.

5. எல்லா வகையிலும் மக்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் GST வரம்புக்குள் பெட்ரோல் டீசல் ஏன் கொண்டு வரக்கூடாது?

மக்கள் நலன் முக்கியம் எனில் தாராளமாக GST குள் பெட்ரோல் டீசலை எப்போதோ கொண்டு வந்திருக்க முடியும் 

அவ்வளவு ஏன், இப்போது இருக்கும் Excise வரியை 23 முறைக்கு மேல் உயர்த்தி இருக்கும் மத்திய அரசு, மக்கள் நலன் முக்கியம் எனில் அப்படி உயர்த்தாமல் தவிர்த்து இருக்கும்.

GST குள் கொண்டு வராமலேயே விலையை குறைத்து இருக்க முடியும்.

ஆனால் இங்கே எல்லா அரசுகளும் பார்ப்பது வரி வருவாய் எனும் ஒரே விஷயத்தை தான்.

பொருளாதாரம் வீழ்ந்து கிடக்கும் நிலையில் வரி வருவாயை இழக்க எந்த அரசும் விரும்பவில்லை. இப்போது கிடைத்துக் கொண்டு இருக்கும் வரியே குறைவு எனும் நிலையில் மேலும் குறைக்க யாரும் தயார் இல்லை.

அப்படி ஆனால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்க வேண்டி வரும். அதற்கான வட்டி கட்ட கூட மேலும் வரி உயர்த்தும் நிலை வரும்.

GST வரம்பில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றை கொண்டு வர மாநிலங்கள் சம்மதித்தால் கூட மத்திய அரசு சம்மதிக்காது. ஏனெனில் அதிக இழப்பு மத்திய அரசுக்குத் தான்.

எனவே இது முடிவு இல்லாமல் நீண்டு கொண்டு இருக்கும் பிரச்சினையாகவே என்றென்றும் நிலைத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

****
உங்களுக்கு இது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் கமெண்டில் பதிவு செய்யவும்.

அடுத்த பாகத்தில் விளக்க முயற்சி செய்கிறேன்.






Saturday, September 18, 2021

ஏர் இந்தியா விற்பனை

ஏர் இந்தியாவை விற்கும் முடிவில் உறுதியாக இருக்கும் ஒன்றிய அரசு, அதற்கான விருப்பங்ளை கோரி இருந்தது.

டாடா நிறுவனமும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் கடந்த செப் 15 ஆம் தேதி தங்களது விருப்பத்தை தெரிவித்து உள்ளது.

யார் அந்த நிறுவனத்தை பெற போகிறார்கள் என்பதை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

*****

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இப்போது சுமார் ₹43,000 கோடி கடன் உள்ளது. அதற்காக அந்த நிறுவனத்தை விற்பனை செய்யும் முடிவுக்கு வந்தது ஒன்றிய அரசு.

ஏர் இந்தியா  நிறுவனம் முழுமையும், விமானங்கள், பராமரிப்பு நிறுவனம், நிலங்கள், அலுவலகங்கள், வீட்டு குடியிருப்புக்கள் என எல்லாவற்றையும் விற்பனைக்கு அறிவித்து இருக்கிறது அரசு.

இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, விமான பயணங்கள் அதி வேகமாக வளர்ந்து வரும் இப்போதைய காலகட்டத்தில் ஏன் நஷ்டம் ஆனது, ஏன் அதனை சீரமைக்காமல் விற்பனை செய்யப்படுகிறது என்பது எல்லாம் மிகப் பெரிய புதிர் தான்

உள்நாட்டு விமான சேவை கொள்கையில் அரசால் செய்யப்பட்ட மாறுதல்கள் காரணமாக ஏர் இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய லாபகரமான வழித்தடங்கள் எல்லாம் தனியார் நிறுவனங்களுக்கு கிடைத்தன.

அதிக பயணிகள் பயணிக்கும் வழித்தடங்களில் ஏர் இந்தியாவை விட அதிகமாக தனியாருக்கு அனுமதி கொடுத்தது.. அதிக பயணிகள் இல்லாத இரண்டாம் மூன்றாம் நிலை நகரங்களுக்கு ஏர் இந்தியாவை இயக்க செய்ததும் தான் நஷ்டத்தில் மிக முக்கிய காரணி

சுமார் 127 விமானங்கள் கொண்டது ஏர் இந்தியா. அதில் 4 ஜம்போ ஜெட் (B 747) விமானங்களும் அடக்கம். இது தவிர ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சுமார் 24 விமானங்கள் வைத்து இருக்கிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் பெரும்பாலான சேவை முக்கியம் அல்லாத வழித் தடங்களில் தான் அமைந்து இருக்கின்றன.

அதிக பயணிகள் தேவை உள்ள வழித்தடங்களில் ஏர் இந்தியாவுக்கு கிடைத்த அனுமதி மிகக் குறைவே.

இது தவிர மற்றொரு முக்கிய காரணி, ஏர் இந்தியாவை முழு சேவை கொண்ட நிறுவனமாக (Full Service Carrier) நடத்துவது.

இந்தியாவில் இப்போது குறைந்த செல்லவுள்ள விமான  சேவைகள் (LCC - Low Cost Carriers) தான் பயணிகளிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. எல்லா முக்கிய வழி தடங்களும் சுமார் 2 மணி நேரத்துக்குள் பயணிக்கத் தக்கவை என்பதால் முழு சேவை அவசியம் இல்லை.

உணவு தேவைப்படும் பயணிகள் அதை தனியாக வாங்கி கொள்ளலாம். இப்படி தான் தனியார் விமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அவற்றின் கட்டணங்களும் குறைவே.

ஆனால் ஏர் இந்தியா இன்னமும் Full Service Airline ஆக செயல்பட்டு சில வழித் தடங்களில் தனியாரின் போட்டியை சமாளிக்க கட்டண குறைப்பையும் அறிவிப்பதால் நஷ்டம் ஏற்படுகிறது.

உணவு மற்றும் பிற சேவைகளுக்காக கொடுத்த காண்டிராக்ட் ரத்து செய்யும் துணிச்சலான முடிவை எடுக்க முடிந்தால், ஏர் இந்தியாவையும் LCC ஆக மாற்ற முடிவு எடுக்கக் கூடிய திராணி உள்ள ஒரு அரசு அமைந்தால், நிச்சயமாக operating cost கணிசமாக குறைந்து நஷ்டத்தில் இருந்து மீள்வதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் என்ன காரணத்தாலோ அரசு இந்த முடிவை எடுக்கவே இல்லை.

UDAAN போன்ற சேவைகள் வரக்கூடிய நேரத்தில் ஏர் இந்தியாவுக்கு மிகப் பிரகாசமான வாய்ப்புக்கள் உள்ளன.

Indigo நிறுவனம் 200+ விமானங்கள் இப்போது கைவசம் வைத்து இருந்த போதும் இன்னமும் 500+ விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து இருப்பதில் இருந்தே இந்திய விமான சேவை துறைக்கு உள்ள வாய்ப்புக்கள் எவ்வளவு என்பது தெளிவு ஆகும்.

இச்சூழலில் 127 விமானங்கள் கொண்ட ஏர் இந்தியா முழு கொள்ளளவு நிறைய பயணிகளை கொண்டு பறப்பது சுலபம். இன்னமும் கூட விமானங்களை வாங்கி அவற்றையும் முழு கொள்ளளவுடன் இயக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் என்ன? நல்ல டிமாண்ட் உள்ள வழித்தடங்களை ஏர் இந்தியாவுக்கு அரசு கொடுக்க வேண்டும்.

உதாரணமாக சென்னை - மும்பை வழி தடத்தில் 11 விமானங்கள் இயங்கினால் அதில் 3 தான் ஏர் இந்தியா. கோவை மும்பை வழித்தடத்தில் 7 க்கு 1 தான் ஏர் இந்தியா. அதிலும் ஏர் இந்தியாவுக்கு PHS எனும் Peak Hour Service நேரமான காலை மாலை வேளைகளில் அனுமதி கொடுக்காமல் அதிக பயணிகள் இல்லாத மதிய நேரத்தை கொடுத்து இருக்கிறது அரசு. எப்படி ஏர் இந்தியா வருவாய் பார்க்கும்?

எனவே எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்க்கையில் திட்டமிட்டே அரசு ஏர் இந்தியாவை நஷ்டத்துக்கு தள்ளி விட்டதோ? அதையே காரணம் காட்டி தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சி செய்கிறதோ? என்கிற சந்தேகங்கள் பலருக்கும் வருவதில் வியப்பு இல்லை.

அதை மேலும் அதிகரிக்கும் விதமாக, தனியார் நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்க காட்டும் ஆர்வம், ஏர் இந்தியா ஒரு மதிப்பு மிக்க, வருவாய் ஈட்டும் வாய்ப்பு கொண்ட நிறுவனம் என அவர்கள் புரிந்து கொண்டதை தெளிவு ஆக்குகிறது.

ஏர் இந்தியாவிடம் போயிங் மற்றும் ஏர் பஸ் ஆகிய இரண்டு வகை விமானங்களும் உள்ளன. மேலும் ATR விமானங்களும் உள்ளன. அவற்றுக்கான ரிப்பேர் & சேவை அமைப்பும் சொந்தமாக உள்ளன.

இத்தனை பெருமையும் வசதிகளும் கொண்ட நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார் வாங்க துடிப்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.

தனியார் நிறுவனங்களால் ஏர் இந்தியாவை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றால், அரசால் ஏன் அதை செய்ய முடியவில்லை?
சரியான நிர்வாகிகளை நியமித்து, விமான கொள்கைகளை சீர் திருத்தினால் ஏர் இந்தியா மீண்டும் பழைய பெருமையை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. சரியான நிர்வாகி கிடைக்கவில்லை எனில், மூன்றாம் நபர் நிர்வாக அமைப்பை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கலாம். Contract based third party administrator. 

ஏர் இந்தியாவை சீர் செய்ய வேண்டும் என நினைத்தால் அரசுக்கு அது மிக மிக எளிதான காரியம் தான்.

அதிலும் வெறும் ₹43,000 கோடி கடனுக்காக அதை விட அதிக மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்வது எல்லாம் பலருக்கும் பல விதமான சந்தேகத்தை கிளப்பாமல் இல்லை.

பெட்ரோல் டீசல் போன்றவற்றின் வரி வருவாய் மூலம் மட்டுமே சுமார் ₹3 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் ஒரு அரசுக்கு, ₹43,000 கோடி ரூபாய் எல்லாம் ஒரு விஷயமே அல்ல.

ஆனால் அரசு ஏனோ ஏர் இந்தியாவை விற்றே ஆக வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி கொண்டு இருக்கிறது.

BSNL நிறுவனத்தை போலவே ஏர் இந்தியாவையும் அவற்றுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கூட கொடுக்காமல் மறுதலித்து நஷ்டத்துக்கு உள்ளாக்கி தனியாருக்கு தாரை வார்ப்பதாக குற்றச்சாட்டு கிளம்பி இருந்தாலும் அதை எல்லாம் பொருட் படுத்தாமல் ஏர் இந்தியாவை விற்பனை செய்வதில் உறுதியாக இருக்கிறது அரசு.

அரசின் முடிவில் மாற்றம் இல்லை என்பது தெளிவான பிறகு நாம் இனி அதை யார் வாங்குவார்கள்? ஏர் இந்தியாவின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? ஊழியர்கள் நிலை என்ன என்பதை பற்றிய கவலைக்கு திரும்புவதே சரியாக இருக்கும்

அதற்கு.. யார் வாங்க போகிறார்கள் என தெரிய வேண்டும்.

அது வரை காத்திருப்போம்.





Wednesday, September 1, 2021

திருக்கோவிலில் திருக்குறள்

நடைபெற்று வரும் தமிழ் நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் "தமிழ் வளர்ச்சி துறை" மானிய கோரிக்கை குறித்த விவாத்துக்கு பதில் அளித்து பேசிய மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

அதில் ஒன்று இந்து சமய அறநிலைய துறையுடன் இணைந்து, கோவில்களில் திருக்குறள் வகுப்பு நடத்தப்படும் என்பதும் ஒன்று.

தேவாரம், திருவாசகம் ஆகியவை கோவில்களில் வகுப்பு எடுப்பதை போல திருக்குறளையும் கோவில்களில் வகுப்பாக எடுக்க தமிழக அரசு திட்டம் அறிவித்து இருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் இது தமிழை வளர்க்கும் மற்றும் ஒரு திட்டம் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.

ஆனால் இதன் பின்னே இருக்கும் சில சிக்கல்களை இந்த அரசு ஆராய்ந்து பார்த்ததா என தெரியவில்லை.

சமீப காலங்களாக தமிழ்நாட்டில் திருவள்ளுவரை வைத்து சர்ச்சைகள் உருவாகி வருவது நமக்கு தெரிந்த ஒன்றே.

திருவள்ளுவர் இந்து மத முனிவர் என்றும் திருக்குறள் இந்து மத நூல் என்றும் பாஜகவும் அதன் துணை அமைப்புக்களும் ஒரு புனை கதையை ஏற்கனவே பரப்பி விட தொடங்கி இருக்கிறது.

திருவள்ளுவர் இந்து முனிவர் அல்ல, திருக்குறள் இந்து மத நூல் அல்ல, திருக்குறள் அனைத்து மதங்களுக்கும் பொதுவான கருத்துக்களை வாழ்வியல் அறிவுரைகளை கொண்ட "உலக பொது மறை" என விளக்கங்கள் கொடுத்து கொடுத்து ஓய்ந்து போய் கொண்டு இருக்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

இதற்கிடையில் பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் குதர்க்க புத்தியுடன் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிந்து இருப்பது போல ஒரு போலி படம் ஒன்றை உருவாக்கி பரப்ப தொடங்கினர்.

தமிழ் நாடு அரசு தீர்க்கமான முடிவை எடுத்து திருவள்ளுவர் என்பவர் அதிகாரப்பூர்வமாக வெள்ளுடை அணிந்து வெண்தாடியுடன் வீற்றிருக்கும் திருக்கோலம் தான் தமிழ்நாடு அரசு அங்கீகரித்த படம் என சொல்லி அந்த பிரச்சனைக்கும் முற்றுப் புள்ளி வைத்தது.

***

இப்படியான சர்ச்சைகள் ஒரு வழியாக ஓய்ந்து இருக்கும் வேளையில் தான் தமிழ்நாடு அரசு இப்போது திருக்கோவில்களில் திருக்குறள் வகுப்பு எடுக்கும் திட்டம் பற்றி அறிவித்து இருக்கிறது

மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களின் அறிவிப்பு வந்த உடனேயே, பாஜகவின், அதன் துணை அமைப்புக்களின் ஆதரவாளர்கள், "திருவள்ளுவர் இந்து மத முனிவர் என்பதையும், திருக்குறள் இந்து மத நூல் என்பதையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டது" என்பதை போல ஒரு செய்தியை எல்லோருக்கும் பரப்பி வருகிறார்கள். 

அரசு அறிவிப்பின் உண்மை தன்மையை விளக்கி சொல்ல முடியாத நிலையை தமிழக அரசு நமக்கு ஏற்படுத்தி இருப்பது தான் இப்போதைய சிக்கல். 

அரசின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இருக்கையில் அதற்கு வேறு எந்த காரண காரியங்களையும் சொல்லி நம்மால் மடை மாற்றி விட முடியாது.

நோக்கம் என்னவோ திருக்குறளை பரவலாக்க கொண்டு சேர்க்கும் நோக்கம் தான். ஆனால் அதை கோவில்களில் சொல்லி கொடுப்போம் என்பதையும் தேவாரம் திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்களுடன் ஒப்பிட்டு சொல்லி இருப்பதும் தான் பிரச்சனையை வேறு வகையில் திருப்பி இருக்கின்றன.

உதாரணமாக, இந்து மத கோவில்களில் இருந்து கொண்டு வரும் பழங்களை கூட ஏற்காத சிலர் பிற மதத்தில் குறிப்பாக கிறித்துவ மதத்தில் இருக்கிறார்கள். வேறு ஒரு மதத்தின் அடையாளமாக எது இருந்தாலும் அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள்.

திருக்குறள் இதுவரை பள்ளிகளிலும், பேருந்துகளிலும், அரசு அலுவலகங்களிலும் என பொதுவாக இருந்த நிலையில், குறிப்பிட்ட ஒரு மதத்தின் வழிபாட்டு தலத்தில் திருக்குறளை கொண்டு போய் வைப்பது எத்தகைய மாறுபாடான நிலைப்பாட்டை குழப்பத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்பதை சொல்லி தெரிய வைக்க வேண்டியது இல்லை.

திருக்குறளை ஒரு மதம் சார்ந்த நூலாக மக்களிடத்தில் இந்த திட்டம் கொண்டு சேர்த்து விடுமோ என்கிற அச்சம் எழுவது இயல்பே.

இந்து மதம் என சுருக்காமல் எல்லா வழிபாட்டு தலங்களிலும் என சொல்லி இருந்தால் கூட பிரச்சனை இருந்து இருக்காது என நினைக்கிறேன்.

தமிழ் இலக்கியங்களை பரவலாக்கம் செய்வது தான் நோக்கம் எனில் திருக்குறள் மட்டும் அல்லாமல் வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி என எல்லா தமிழ் இலக்கியத்தையும் கொண்டு சேர்த்து இருக்கலாம்.

திருக்குறள் ஏற்கனவே பள்ளிகளில் கட்டாயமாக்கபபட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் பேருந்துகள் என எங்கும் திருக்குறள் சென்று சேர்ந்து இருக்கிறது. பெரும்பாலான மக்களிடம் திருக்குறள் குறித்த புரிதல் உள்ளது. அதை மீண்டும் கோவில்கள் மூலம் கற்றுக் கொடுக்க வேண்டும் என அரசு முனைவது எதனால் என்பது புரியவில்லை. 

திருக்குறளை பரவலாக்க பல்வேறு வழி முறைகள் இருக்கின்றன.

தமிழ் இலக்கிய பரவல் தான் நோக்கம் எனில் முன்பே சொன்னது போல இதுவரை பரவலாகக் கிடைக்காத பிற தமிழ் இலக்கியங்களை கொண்டு சேர்க்க முயற்சி செய்து இருக்கலாம்

எது எப்படியோ, அரசின் முடிவுக்கு, அது சரியோ தவறோ, ஏதேனும் ஒரு வகையில் நியாயம் கற்பித்து, அரசு செய்வது தான் சரி என சொல்லியாக வேண்டிய நிலையில் பலரும் உள்ளனர்.

ஆழ்ந்து யோசிக்கையில், திருவள்ளுவர் இந்து மத முனிவர் அல்ல என மூச்சு பிடித்து உரக்க சொல்லி களமாடிய நண்பர்களுக்கு தர்ம சங்கடத்தை கொடுத்து இருக்கிறது இந்த அரசு என்று தான் சொல்ல வேண்டும்.







Wednesday, July 21, 2021

GST வரி வசூலும் மாநில உரிமைகளும்

சமீப காலங்களாக இணையத்தில் பெரும் விவாதம் ஆன விஷயங்களில் ஒன்று GST வரி வசூல் குறித்தது.

ஒன்றிய அரசு எல்லா வரியையும் வசூலித்து மாநிலங்களுக்கு தராமல் ஏமாற்றுவதாக ஒரு கருத்து உள்ளது.
மாநிலங்களுக்கு வரி பங்கு முறையாக ஒன்றிய அரசு தரவில்லை என்பது உண்மை தான். ஆனால் ஒட்டுமொத்தமாக மாநிலங்களுக்கு வரி வசூல் எதுவுமே கிடைக்கவில்லை என்பது சரியல்ல.

விளக்கமாக சொல்கிறேன்.

GST வருவதற்கு முன்னர், உற்பத்தி நிறுவனஙகள் Excise வரி செலுத்த வேண்டும். சேவை நிறுவனங்கள Service Tax செலுத்த வேண்டும். இந்த இரண்டும் ஒன்றிய அரசின் கணக்குக்கு போகும்.

விற்பனையை பொறுத்த வரை, மாநிலத்துக்கு உள்ளே நடைபெறும் விற்பனைக்கு VAT வரியும் மாநிலத்துக்கு வெளியே நடைபெறும் விற்பனைக்கு CST வரியும் அந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.

இதில் VAT வரி மாநில அரசுக்கும், CST வரி ஒன்றிய அரசுக்கும் போகும்.

அதாவது Excise, Service Tax, CST ஆகியவை ஒன்றிய அரசுக்கும், VAT வரி மட்டும் மாநில அரசுக்கும் கிடைக்கும்.

GST யிலும் இதே முறை தான் சற்றே மாறுதலுடன் அமல் படுத்தப்பட்டது.

Excise Service Tax ஆகியவை ஒழிக்கப்பட்டு, GST யின் கீழ் கொண்டு வரப்பட்டது.

மாநிலத்துக்கு உள்ளே நடைபெறும் விற்பனைக்கு SGST & CGST ஆகியவையும், மாநிலத்துக்கு வெளியே நடைபெறும் விற்பனைக்கு IGST வரியும் இப்போது நிறுவனங்கள் கட்ட வேண்டும்

இதில் SGST நேரடியாக முழுமையாக மாநில அரசுக்கு கிடைத்து விடும்.

CGST முழுமையாக ஒன்றிய அரசின் கைக்கு போகும்

IGST வரியில் தான் மாநிலங்களுக்கு உரிய பங்கு பகிர்ந்து அளிக்கப் படும்.

இவை தவிர CESS வரி என்று ஒன்று ஆடம்பர பொருட்களுக்கு விதிக்கப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் வரியை மாநிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையாக (Compensation CESS) ஆக கொடுக்கப் படுகிறது. இந்த CESS பற்றி பிறகு சொல்கிறேன்.
இதில் இருந்து VAT வரி போலவே SGST வரியும் மாநிலங்களுக்கு நேரடியாக கிடைக்கிறது என்பது புரியும்.

GST என்பது மாநிலங்களின் உரிமையை மனதில் வைத்து இயற்றப் பட்ட சட்டம் என்பதால், சேவைகளுக்கும், உற்பத்திக்கும் கூட GST வரி அமல் ஆனது. இதன் மூலம் GST க்கு முன்பு கிடைக்காத வரிகளும் மாநிலத்துக்கு கிடைக்கத் தொடங்கி உள்ளது

உதாரணமாக ஒரு சேவை நிறுவனம் (service Industry) எடுத்து கொள்வோம். Contract Labour Supply செய்யும் நிறுவனத்தை மனதில் வைத்து கொள்ளுங்கள்.

அவர்களுக்கு ஆபீஸ் சென்னையில் உள்ளது. கோவையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கும், பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்துக்கும் அவர்கள் ஆட்களை அனுப்பி வைக்கிறார்கள் என்றால் அவர்களின் பில் இப்படி இருக்கும்

கோவை நிறுவனத்துக்கு - SGST 9% & CGST 9% என வரி விதித்து கட்டுவார்கள். இதில் SGST மாநிலத்துக்கு நேரடியாக கிடைக்கும்.

பெங்களூர் நிறுவனத்துக்கு - IGST 18% என வரி விதித்து கட்டுவார்கள். இதில் மாநிலத்தின் பங்கு பகிர்ந்து அளிக்கப்படும்.

GST வருவதற்கு முன்பு இந்த மாதிரி அல்லாமல் மொத்தமாக Service Tax 14.50% வரி கட்டி அது மொத்தமும் ஒன்றிய அரசுக்கு மட்டுமே போகும். மாநிலத்துக்கு உள்ளே நடந்தாலும் மாநிலத்துக்கு வெளியே நடந்தாலும் எல்லா வரியும் ஒன்றிய அரசுக்கு தான் போய் கொண்டு இருந்தது.

GST அதை மாற்றி, மாநிலத்தில் நடைபெறும் சேவையில் பாதி வரி நேரடியாக மாநிலத்துக்கு கிடைக்க வழி செய்து உள்ளது. 

இது தவிர முன்பு மாநிலத்துக்கு உள்ளே விற்பனை ஆகும் பொருளுக்கு VAT வரி 5% என்று இருந்தது. ஆனால் GST சட்டம் மூலம் அதற்கு சராசரியாக 18% வரி விதிக்கப்பட்டு அதில் பாதியான 9% வரி மாநிலத்துக்கு கிடைக்கிறது. இது முன்னர் கிடைத்த 5% வரியை விட 4% அதிகம் ஆகும்.

இதனால் மாநில வரி வருவாய் உயரும் என்பது தான் நோக்கம்.

முன்னர் Excise வரி செலுத்தும் உற்பத்தி நிறுவனங்களின் வரி முழுமையும் ஒன்றிய அரசுக்கு தான் போகும். இப்போது அதுவும் GST மூலம் மாநிலத்துக்கு உரிய வரி நேரடியாக கிடைக்க வழி செய்யப்பட்டு உள்ளது.
இவை எல்லாம் வைத்து பார்த்தால் மாநிலங்கள் வரி வருவாயில் அதிக லாபம் அடைவதை போல தோன்றும்.

ஆனால் சட்டம் சரியாக இருந்தாலும் அதை செயல்படுத்தும் ஒன்றிய அரசு அதை முறையாக செய்யாமல் இருப்பதால் தான் மாநிலங்கள் கஷ்டப்படுகின்றன.

மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டிய பங்கை கொடுக்காமல் இருப்பதால் மாநிலங்கள் கடன் வாங்கி சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.

GST செய்த முக்கியமான மற்றும் ஒரு மாற்றம், பொருள் சென்று சேரும் இடம் எதுவோ அந்த மாநிலத்துக்கு தான் பங்கு என மாற்றியது. (Consumption based tax)

இதனால் உற்பத்தி மாநிலங்களாக உள்ள தமிழ்நாடு, கர்நாடக, குஜராத் மாநிலங்கள் பாதிக்கப்பட்டு, பொருட்களை பெறும் மாநிலங்களான பீகார் அசாம் போன்ற மாநிலங்களுக்கு வரி பங்கு அதிகம் கிடைக்க தொடங்கி உள்ளது.

இது வளர்ச்சியை நோக்கி திட்டங்கள் தீட்டும் மாநிலங்களுக்கான தண்டனையாக அமைந்து விட்டது

மாநில உரிமையின் அடிப்படையில், வளர்ச்சி திட்டங்களை செய்யும் மாநிலங்களுக்கு வரி பங்கு கிடைக்குமாறு சட்டத்தை மாற்ற வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை யாரும் இதுவரை செய்யவில்லை.

முறையாக வரி பங்கீட்டை மூன்று மாதத்துக்கு ஒரு முறை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி இருக்க வேண்டும். அதையும் மாநிலங்கள் செய்யவில்லை. அல்லது வலியுறுத்தியும் அது நடைபெறவில்லை.

இவைகளால் தான் மாநில பொருளாதாரம் சிக்கலுக்கு ஆளாகிறது.

இனி CESS விஷயத்துக்கு வருகிறேன்.

GST வருவதற்கு முன்பு மாநிலங்களுக்கு கிடைத்த வரியையும், GST வந்த பிறகு மாநிலங்களுக்கு கிடைக்கும் வரியையும் ஒப்பிட்டு GST காரணமாக வரி வருவாய் குறைந்து இருந்தால் அதை ஈடு கட்ட உருவாக்கப்பட்டது தான் இந்த Compensation CESS. இதுவும் 5 ஆண்டு காலத்துக்கு தான் தர முடியும் என சட்டம் சொல்கிறது. அதற்கு பிறகு அந்தந்த மாநிலங்கள் அவர்களாகவே சமாளித்து கொள்ள வேண்டும்.

இது மாநில உரிமைக்கு எதிரானது.

ஏற்கனவே சொன்னது போல, நாம் உற்பத்தி செய்து பின் தங்கிய மாநிலங்களுக்கு விற்பனை செய்தால் அதற்கான பலன் பின் தங்கிய மாநிலங்களுக்கு தான் செல்லும் எனில், நமக்கான வரி இழப்பை எப்படி ஈடு கட்டுவது?

CESS பங்கீடு ஒழுங்காக செய்யப்படவில்லை என்கிற குறை ஒருபுறம் இருந்தாலும், CESS பங்கீடு அடுத்த ஆண்டு முடிவுக்கு வந்து விட்டால், அதன் பிறகு எந்த இழப்பீடும் இல்லாமல் மாநிலங்கள் எப்படி சமாளிக்கும் என்பது தான் முக்கியமான கேள்வி

ஆனால், இது குறித்து கூட பெரிதாக எந்த மாநிலங்களும் அக்கறை காட்டியதாக தெரியவில்லை.

கவுன்சில் கூட்டத்தில் வாக்கு சதவீதம் குறைவு போன்ற முக்கியமல்லாத விஷயங்களை விவாதிப்பதை விடவும் அவசியமானது Consumption Based Taxing முறையை மாற்றுவது என்பதை யாரும் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.

அடுத்த ஆண்டு CESS முடிவுக்கு வந்தால் ஒவ்வொரு மாநிலமும் இழப்பை நோக்கி செல்கையிலாவது சுதாரித்து கொள்கிறார்களா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்



Thursday, July 8, 2021

எழுவர் விடுதலையும் அதன் அரசியலும்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்பு உடைய எழுவர் விடுதலை தொடர்பாக இப்போது தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள், இயக்கங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

சமீபத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பு ஏற்று உள்ள திமுக, அந்த எழுவரில் ஒருவரான திரு. பேரறிவாளன் அவர்களுக்கு சட்ட விதிகளை தளர்த்தி சிறப்பு விடுமுறை கொடுத்து வெளியே அனுப்பியது. அந்த விடுமுறை மீண்டும் நீட்டிக்கப் பட்டு உள்ளது. இப்படியே அந்த விடுமுறை நீட்டிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமற்ற விடுதலையாக அது மாறும் வாய்ப்பு உள்ளது. மகிழ்ச்சி.

மீதம் உள்ள ஆறு பேரின் (முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்) விடுதலைக்காகவும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. 

இணையத்தில், இந்த எழுவர் விடுதலை என்பது "ஈழ மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்பு" என்கிற கருத்துருவாக்கம் இன்னொரு புறம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது

ஈழ மக்களுக்காக நாம் செய்ய கூடிய செய்தே ஆக வேண்டிய மிக மிக முக்கியமான விஷயமாக இந்த எழுவர் விடுதலை முன்வைக்கப் பட்டு வருகிறது.

அநேகமாக இப்போது எடுக்கும் வேகமான நடவடிக்கைகளை பார்த்தால் அடுத்த ஓராண்டு காலத்துக்குள் அவர்கள் விடுதலை ஆவதற்கான வாய்ப்புக்கள் தெரிகின்றன. 

இவை எல்லாம் இப்போது நடைபெற்று வருபவை.

எழுவர் விடுதலை என்பது எந்த வகையில் ஈழ மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கை என்பது மட்டும் இங்கே பலருக்கும் புரியவில்லை. அப்படியானால் ராஜீவ் கொலை என்பது ஈழ மக்கள் நலன் சார்ந்த ஒன்றா என்பதையும் யாரும் இன்னமும் தெளிவு படுத்தவில்லை.

ராஜீவ் கொலை என்பது வெறும் ராஜீவ் கொலை மட்டுமல்ல. அது அந்த வழக்கின் தீர்ப்பிலேயே விவரிக்கப்பட்டது போல "மிக மிக அரிதிலும் அரிதான திட்டமிட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதல்".

ராஜீவ் கொலைக்கு இந்த வெடிகுண்டு தாக்குதல் முறையை தேர்ந்தெடுத்தவர்கள், அந்த பொது கூட்டத்தில் இந்த வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தினால் பல அப்பாவி பொதுமக்களும் இறந்து போவார்கள் என நன்றாக தெரிந்தவர்கள் தான். அது தெரிந்தும், தமிழக தமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை என திட்டமிட்டு செயல்படுத்திய பயங்கரவாத தாக்குதல் அது.

அப்பாவி பொது மக்கள், தமிழ் நாட்டு தமிழர்கள் 15 பேர் வரை பலியான நிகழ்வு அது. 40 பேருக்கு மேல் மிக கடுமையாக காயம்பட்டு உடல் உறுப்புக்களை இழந்து வாழ்வாதாரம் நொடிந்து போனது எல்லாம் தனி கதை.

தமிழ் நாட்டு தமிழர்கள் மீது, அவர்களுக்கான உதவிகள் மீது அக்கறை கொண்டு, உயிர் இழந்தவர்களுக்கு, படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதற்காக போராட வேண்டிய தமிழ் நாட்டு இயக்கங்கள், அதில் போதுமான கவனம் செலுத்தாமல், அந்த பயங்கரவாத நிகழ்வுக்கு துணை நின்றவர்களை பாதுகாப்பதில் காட்டும் அரசியல் தான் முப்பது ஆண்டுகளாக இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.

****
முப்பது ஆண்டுகள் சிறையில் அவர்கள் தண்டனை பெற்று வந்தார்கள் என்கிற பரிதாபமான குரல்களும் இப்போது அதிகமாக கேட்க தொடங்கி இருக்கின்றன.

பயங்கரவாத தடுப்பு சட்டப்படி, பயங்கரவாத நிகழ்வு நடக்கப் போவது குறித்த தகவல் தெரிந்தாலே அரசிடம் அதை சொல்ல வேண்டும். தகவல் தெரிந்து அரசிடம் சொல்லாமல் இருப்பதே தண்டனைக்கு உரிய குற்றம். 

இந்நிலையில் அந்த பயங்கரவாத செயல் நிகழ்த்த தேவைப்படும் உதவிகள் செய்து, அந்த பயங்கரவாதிகளை அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வைத்தது எல்லாம் கடுமையான தண்டனைக்கு உரிய குற்றமாக TADA & POTA சட்டங்கள் வரையறை செய்து உள்ளது.

அந்த வகையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உச்ச பட்ச தண்டனையை, குறைப்பதற்கான மேல் முறையீடு, கருணை மனு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான கால அவகாசம் வரை அவர்களுக்கான தண்டனை தள்ளி வைக்கப்பட்டது. ஆதனால் முப்பது ஆண்டு காலம் "தண்டனை" என்பதை விட அவர்களுக்கான சலுகை பெறுவதற்கான கால அவகாசம் என்றே சட்டம் பார்க்கும்.

அவர்களுக்கான தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படவே பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த பதினைந்து ஆண்டுகளும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை தள்ளி வைக்கப்பட்டு தண்டனை குறைபுக்காக கால அவகாசம் கொடுக்கப்பட்டது என்பதே உண்மை.

இதில் இன்னொரு புறம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் தண்டனையை பற்றி புரியாமல் சாதாரண குற்றவியல் தண்டனை சட்ட விதிமுறைகளின் படி நினைத்து பேசும் பெரும் தலைவர்களின், அவர்தம் தொண்டர் அடிபொடிகளின் விவாதங்கள் வேறு ஆச்சர்யம் தருகின்றன.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கொடுக்கப் பட்ட தண்டனை ஏற்கனவே குறைக்கப்பட்ட நிலையில் (remission) இன்னும் ஒரு தண்டனை குறைப்பு (second remission) சாத்தியமா என்பது போக போக தான் தெரியும்.

ஆனால் இந்தியாவில் சட்டத்தை விட அரசியல் தானே சக்தி வாய்ந்தது? 

தேவைப்பட்டால் சட்டத்தையே கூட திருத்தி முன் தேதி இட்டு வெளியிட செய்தாலும் ஆச்சர்யம் இல்லை.

****

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில், பேருந்தை எரிப்பது தான் நோக்கம், ஆனால் துரதிர்ஷ்ட வசமாக மூன்று மாணவிகளும் பலியானார்கள் என்கிற வாதத்தை நாமெல்லாம் எந்த அளவுக்கு கடுமையாக எதிர்த்தோம் என்பது தெரியும். 

ஆனால் ராஜீவ் கொலையின் போது உடன் இறந்த அப்பாவி தமிழர்கள் பற்றி எந்த கவலையும் இன்றி கொலைக்கு உதவி செய்தவர்களை காப்பாற்றும் முனைப்பில் மட்டுமே தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இயங்கி கொண்டு இருப்பது வியப்பு தான்.

ஈழ மக்கள் நலன் என்கிற ஒற்றை புள்ளியில் நாம் நமது மக்களை சமரசம் செய்து கொள்கிறோமோ என தோன்றுகிறது.

எனினும் நான் முன்பே சொன்னது போல, ராஜீவ் கொலைக்கான பயங்கரவாத நிகழ்வு நடைபெற உதவியவர்களை காப்பாற்றுவது என்பது எந்த வகையில் ஈழ மக்களின் நலனுக்கு உதவும் என்பதை யாராவது விளக்கினால் நல்லது.

ஈழ மக்களின் நலம் என்பது எழுவர் விடுதலையில் தான் இருக்கிறது என்கிற கட்டமைப்பு எதற்காக உருவாக்கப்படுகிறது என்பதையும் விளக்கினால் மேலும் நல்லது.

என்னை போன்ற சாமானியர்கள் அதன் தொடர்பை, அதன் பின்னுள்ள அரசியலை பற்றி புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

யாரேனும் விளக்குவார்களா?


Friday, June 18, 2021

தங்கத்துக்கு ஹால்மார்க் கட்டாயம் - விரிவான தகவல்கள்

நேற்று இந்திய அரசு எடுத்த முடிவின் படி, இனிமேல் நகைக் கடைகள் விற்கும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் (Hallmark) தர முத்திரை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த ஜனவரி 16 ஆம் தேதி அமல் ஆக வேண்டிய இந்த கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்ட நிலையில் இப்போது அமல் ஆகி உள்ளது.

இந்தியாவில் தங்கம் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. தங்க நகைகளின் மீதான ஆர்வம் இந்தியர்களுக்கு மிக அதிகம்.

மொத்த தங்கத்தில் 49% இந்தியர்களின் வீடுகளில் உள்ளன. 22% கோவில்களிலும். மற்றவை பார்கள், காயின்களாக உள்ளவை.

வீடுகளிலும் கோவில்களிலும் உள்ள நகைகள் பெரும்பாலும் ஹால்மார்க் முத்திரை இல்லாத பழைய நகைகள். 

2000 ஆண்டு முதல் தான் BIS (Bureau of Indian Standards) இந்திய தர நிர்ணய அமைப்பு, Hallmark முத்திரையை தங்க நகைகளுக்கு வழங்கும் முறையை கொண்டு வந்தது. தங்கத்தின் சுத்தத்தன்மை பரிசோதிக்கப்பட்டு இந்த சான்றிதழ் வழங்கப்படும். 0.916 கிராம் சுத்தமான தங்கம் கொண்ட நகைகள் என்கிற உறுதியை இது வழங்கும். (1 கிராம் தங்க நகையில் 0.916 கிராம் தங்கமும், 0.084 கிராம் இதர உலோகங்களும் கொண்டவை என்கிற உறுதி சான்றிதழ்)

Hallmark இல்லாத நகைகளில் பிற உலோகங்களின் கலப்பு மிக அதிகமாக இருக்கும். அவை சுத்தமான தங்கம் அல்ல என்பது BIS நிறுவனத்தின் முடிவு.

பொதுமக்கள் இது போன்ற ஏமாற்றங்களை தவிர்த்து அவர்கள் கொடுக்கும் பணத்துக்கு ஈடான சுத்தமான நம்பகமான தங்க நகைகளை வாங்க வேண்டும் என்பதற்காக அரசு இந்த முடிவை எடுத்து உள்ளது.

இதன் படி, எந்த ஒரு நகை கடையும் இன்று முதல் (18.06.2021) பொது மக்களுக்கு விற்கும் நகைகள் கட்டாயமாக Hallmark முத்திரை கொண்டதாகவும், 6 இலக்க குறியீடு கொண்டதாகவும், BIS தர நிறுவனம் கொடுத்த சான்றிதழ் உள்ளதாகவும் இருக்க வேண்டும்
Hallmark இல்லாத நகைகளை விற்பனை செய்தால் நகையின் விலையை போல ஐந்து மடங்கு அபராதமும் ஓராண்டு சிறையும் தண்டனையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சில விதி விலக்குகள் இதில் உள்ளன.

ஆண்டுக்கு ₹40 லட்சம் வரையே விற்பனை உள்ள நகை கடைகளும், ஜாப் வர்க் முறையில் நகைகளை செய்து கொடுக்கும் நிறுவனங்களும் இந்த விதிகளின் கீழ் வராது.

முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 256 மாவட்டங்களில் (தங்க நகை பரிசோதனை நிலையங்கள் உள்ள மாவட்டங்கள்) கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களும் விரைவில் இந்த விதி முறையின் கீழ் கொண்டு வரப்படும்.

பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய நகைகளை விற்க விரும்பினால் அதை நகை கடைகள் வாங்கி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் மாத இறுதி வரை அதற்கு எந்த அபராதமும் தண்டனையும் கிடையாது என்று ஒரு விதி விலக்கும் அளிக்கப் பட்டு உள்ளது.

இப்போது நாம எதார்த்த விஷயத்துக்கு வருவோம்.

வீடுகளில் உள்ள பழைய தங்க நகைகளை ஆகஸ்டு மாதம் வரை வழக்கம் போலவே நகை கடைகளில் கொடுத்து புதிய Hallmark நகைகளாக மாற்றி வாங்கிக் கொள்ளலாம். வித்தியாச தொகை மட்டும் கட்டினால் போதும்

ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு நகைக் கடைகள் பழைய நகைகளை வாங்குவார்களா என தெரியாது. வாங்கினால் அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது நடக்கும். பொது மக்கள் ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு விற்கும் பழைய நகைகளுக்கு உரிய மதிப்பு மிக மிக குறைவாகவே கிடைக்கும். எனவே மாற்ற விரும்புபவர்கள் ஆகஸ்ட் இறுதிக்குள் மாற்றி விடுவது லாபம்.
இப்போது இருக்கும் சூழலில் நகைகளை மாற்றவும் செலவு செய்ய வேண்டி இருக்கும் (வித்தியாச தொகை). பலரது பழைய நகைகள் அடமானத்தில் இருக்கும். அதை மீட்டு மறு அடகு வைக்க வேண்டும் என்றாலும் பணம் வேண்டும்.

திடீர் என்று இத்தனை பணத்துக்கு பொது மக்கள் எங்கே போவார்கள் என அரசு யோசித்தது மாதிரி தெரியவில்லை.

தங்க கடத்தல் அதிகம் நடப்பது ஜாப் வர்க் முறையில் நகைகளை செய்து கொடுக்கும் நபர்கள் & சிறு நகை கடைகள் மூலம் தான் என்பது தெரிந்தும் ஏன் அவர்களுக்கு மட்டும் இந்த விதிகளில் விலக்கு கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் புரியவில்லை.

பெரிய கடைகள் தாங்கள் கைவசம் வைத்து இருக்கும் நகைகளுக்கு கட்டாயம் purchase details வைத்து இருக்க வேண்டும். பொது மக்களிடம் இருந்து பழைய நகைகளை வாங்கினாலும் அவர்களிடம் இருந்து declaration வாங்கி இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் சிறு சிறு கடைகள் மூலம் தான், எங்கிருந்து வாங்கப்பட்டது என்கிற விவரங்கள் இல்லாத தங்கம், வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம், கணக்கில் வராத தங்கம், ஆகியவை நகைகளாக மாற்றப்பட்டு மறு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் கூட வருமான வரித்துறை நடத்திய ரெய்டுகளில் சம்மந்தப்பட்ட நகை விற்பனையாளர்கள் அதிகமாக தெரியாத பிரபலம் அல்லாத நிறுவனங்கள் தான்.

எனவே அவர்களுக்கான விலக்கு யோசிக்க வைக்கிறது.

எது எப்படியோ.. இந்த முடிவு உண்மையில் வரவேற்க வேண்டிய ஒன்று.

இனி தங்கம் வாங்குவதாக இருந்தால் பெரிய கடைகளில் சென்று தர சான்றும் Hallmark குறியீடும் கொண்ட நம்பகமான சுத்தமான தங்க நகைகளை மட்டுமே வாங்குங்கள். எல்லா கடைகளிலும் தங்கத்தின் விலை ஒன்று தான். சிறிய கடைகளில் சென்று Hallmark இல்லாத நகைகளை வாங்கி ஏமாற வேண்டாம்

கைவசம் பழைய நகைகள் இருந்தால் எவ்வளவு சீக்கிரம் மாற்றிக் கொள்ள முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாற்றி கொள்வது நஷ்டத்தை குறைக்கும். ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு பழைய நகை வாங்க கடைகள் யோசிக்கக் கூடும். அப்படியே வாங்கினாலும் மிக குறைந்த தொகையே மதிப்பீடு செய்து கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.

அரசு Hallmark கட்டாயம் என அறிவித்த செய்தி குறிப்பு இங்கே காணலாம்.


Wednesday, May 26, 2021

தமிழக அரசும் தடுப்பூசி முகாம்களும்

சத்தமே இல்லாம தமிழகத்தில் தடுப்பூசி போடும் முகாம்கள் தமிழக அரசின் சார்பில் பெரிய அளவில் நடந்துகொண்டு இருக்கிறது.

பெரிய நகரங்களில் நடமாடும் மினி கிளினிக் மூலமும், பிற மாவட்டங்களில் PHC மூலமும் பல்லாயிரக்கணக்கான ஊசிகள்  போடப்படுகிறது
தமிழக சுகாதாரத்துறை கட்டமைப்பு நம் எல்லோருக்கும் அறிந்த ஒன்றே. நகரங்கள் மட்டும் அல்லாமல் கிராமங்கள், மலை பகுதி மக்கள் வாழிடங்கள், தொலை தூர குடியிருப்புக்கள் என அனைத்து இடங்களிலும் கூடுமானவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப் பட்டு உள்ளன.

மத்திய அரசின் தடுப்பூசி தகவல்கள் பதிவேற்றப்படும் CoWin இணைய தளம் அல்லாமல் தமிழக அரசு தனக்கு என தனியான ஒரு தகவல் தளத்தை உருவாக்கி அதில் தடுப்பூசி குறித்த தகவலைக் குறித்து வருகிறது.

தமிழக அரசின் முகாம்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள CoWin தளத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆதார் அட்டை எடுத்து சென்று நேரடியாக போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி போட்டு கொண்டதற்கு சான்றாக தமிழக அரசு தற்காலிகமாக ஒரு அட்டை தருகிறார்கள். பின்னர் சான்றிதழ் வழங்கப்படும்.

CoWin தளத்தை மட்டுமே பார்த்து தமிழக அரசு மீது குறை சொல்வோர் விரைவில் ஒரு பெரும் சாதனை செய்தியைப் பற்றி அறிவார்கள் என நம்புகிறேன். எந்த வித விளம்பரங்களும் இல்லாமல் தமிழக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் ஒரு பெரிய இயக்கம் மாநிலம் முழுவதிலும் சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை கொண்ட பெரிய தொழிற்சாலைகளில் தனி தனியாக முகாம் போட்டு எல்லா தொழிலாளர்களுக்கும் அந்தந்த தொழிற்சாலைகளில் தடுப்பூசி முகாம்கள் நடந்து கொண்டு இருக்கிறது. 
இது போக பள்ளிகள் கல்லூரிகளில் வேறு தனியாக முகாம்கள் நடக்கிறது இருக்கு.

அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் கூட முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

PHC, Mobile Clinics இன்னொரு புறம் மக்களுக்கு இலவசமாக ஊசிகள் போட்டுக் கொண்டு இருக்கு

வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள எனது நண்பர்கள் உறவினர்கள் மூலம் அறிந்த தகவலின் படி கிராமங்கள் மலை கிராமங்கள் தொலை தூர பகுதி மக்களுக்கு கூட நடமாடும் வாகனம் மூலம் சென்று ஊசி போட்டு வருகிறது தமிழக அரசு

ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும் ஊசி போதுமான அளவு இல்லை, குறைவு தான் என்றாலும் அத்தனையும் உபயோகிக்கிறது தமிழக அரசு. 
சராசரியாக ஒவ்வொரு PHC யிலும் 200 பேருக்கு ஒரு நாளில் தடுப்பூசி போடப்படுகிறது. சில மையங்களில் ஒரு நாளைக்கு 500 ஊசிகள் எல்லாம் போடப்பட்டு இருக்கிறது.

கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு நாளில் 14000 ஊசிகள் இலவசமாக போடப்படுகிறது
ஆனைமலை சேத்துமடை என உட்பகுதி கிராமங்கள், நஞ்சுண்டாபுரம் பீளமேடு என நகர பகுதிகள் என எல்லா இடங்களிலும் முகாம்கள் உள்ளன.

இங்கே கள நிலவரம் தெரியாமல் இணைய தகவல்களை மட்டுமே பார்த்து தமிழக அரசை திமுகவை குறை சொல்லி கொண்டு இருக்கும் பலருக்கு விரைவில் இந்த தகவல்கள் எல்லாம் தெரிய வரும் போது மிக பெரிய ஆச்சர்யமாக அவர்களுக்கு இருக்கக்கூடும்

திமுக அரசு எப்போதும் போல விளம்பரம் இல்லாமல் மக்கள் பணி செய்வதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து கொண்டு இருக்கிறது

ஒரு சந்தோஷமான சாதனை செய்தி on the way மக்களே.. 

Tuesday, May 25, 2021

சமூக வலைதளங்களும் அரசின் கட்டுப்பாடும்

கடந்த பிப் மாதம் மத்திய அரசு, இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது (பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமலேயே)

அதன் படி இந்தியாவில் இயங்கும் சமூக வலை தள நிறுவனங்கள் சில விதிகளை கடை பிடிக்க வேண்டும்

1. குறை தீர்ப்பு குழு அமைத்தல்

2. மாதா மாதம், பெறப்பட்ட குறைகளின் எண்ணிக்கை, அதில் தீர்க்கப்பட்ட குரைகளின் நிலை ஆகியவற்றை அரசுக்கு அனுப்புவது
இதனுடன் இன்னொரு விதியாக

3. பயனர்கள் பதிவுகளை முன்னதாக தணிக்கை செய்து சட்டப்படி ஏற்புடைய சரியான பதிவுகளை மட்டுமே வெளியிட வேண்டும்
4. வெளியான பதிவுகளின் மீது அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படும் எனில் அதற்கான பொறுப்பு சமூக வலைதள நிறுவனங்களை தான் சேரும்

5. பயனர் தவறுக்கு நிறுவனங்களே பொறுப்பு
இந்த விதிகள் எல்லாம் மே 26 ஆம் தேதி அமலுக்கு வரும்

அரசின் இந்த விதிமுறை ஏற்காத நிறுவனங்கள் செயல்பட முடியாது

இது பேச்சுரிமை / கருத்து உரிமையை கட்டுப்படுத்தும் செயல் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்
WhatsApp நிறுவனம் பயனர்களின் பதிவை கட்டுப்படுத்த முடியாது என அறிவித்து உள்ளது

Facebook நிறுவனம் குறை தீர்க்கும் குழு விதியை ஏற்பதாக சொல்லி உள்ளது.

Twitter முடிவு தெரியவில்லை

இந்நிலையில் மே 26 காலை முதல் சமூக வலை தளங்கள் இயங்காதோ என்கிற அச்சம் பயனர்களிடம் இப்போது உள்ளது

என்னை பொறுத்த வரை.. இயங்க தடை விதிக்கப்படாது என்றே நினைக்கிறேன்

மேலும் கால அவகாசம் கொடுக்க வாய்ப்பு உள்ளது

அல்லது பயனர்களை tracking செய்யும் அமைப்பை வைக்க சொல்லக் கூடும்

பயனர்களை track செய்வது என்பது.. எல்லா பயனாளர்களையும் validate செய்வது.. (Aadhaar, PAN, License போன்றவை மூலம்)

இப்போதே Twitter தனது users verification செய்ய ஆவணங்களை கேட்கிறது. இதே போல அனைத்து பயனர்களுக்கும் கொண்டு வரலாம்.

தவறான பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க இது உதவும்

இதன் மூலம் fake ID, ananymous tweets ஆகியவை கட்டுப்படுத்தப்படும்

பயனாளர்கள் தவறான அல்லது சட்ட விரோத கருத்துக்கள் வெளியிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவரை கண்டு பிடிக்கவும் இந்த ஆவணங்கள் & validation உதவும்

இப்படியான practical rules விதிக்க தான் வாய்ப்பு உள்ளது

எது எப்படி ஆகினும் சமூக வலை தளங்களை இயங்காமல் செய்வது என்பது இயலாத காரியம்

சில கட்டுப்பாடுகளுடன் அவை தொடர்ந்து இயங்கும் என்றே நான் நம்புகிறேன்

அத்தகைய கட்டுப்பாடுகள் சமூக வலைதள பதிவுகளை சரியான வழியில் கொண்டு செல்லவும் உதவக்கூடும்.

பார்ப்போம்.. என்ன நடக்கிறது என்று 

Friday, May 21, 2021

பேரறிவாளன் விடுப்பு

முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான திரு. பேரறிவாளன் அவர்களின தாயார் அற்புதம்மாள் அவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறார்கள்.

"நோய் தொற்று பாதிப்பு அபாயம் உள்ள காரணத்தால் எனது மகன் பேரறிவாளனுக்கு நீண்ட விடுப்பு அளிக்க வேண்டும்" என்பதே அந்த கோரிக்கை.

இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் மனிதாபிமான அடிப்படையில், வழக்கமான விதிகளை எல்லாம் "தளர்த்தி" திரு. பேரறிவாளனுக்கு 30 நாட்களுக்கு சாதாரண விடுப்பு வழஙக உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்து வருகிறது.

******

கைதிகளில் இரண்டு வகை உண்டு. தண்டனை கைதிகள். விசாரணை கைதிகள்.

குற்றம் நிரூபணம் ஆகாத நிலையிலும் விசாரணை நடந்து கொண்டு இருப்பதால் ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகள் பலர்.

நோய் தொற்று அபாயம் தான் விடுப்புக்கான காரணம் என்றால், அதன் அடிப்படையில் விடுப்பு வழஙகுவதற்கான முன்னுரிமை விசாரணை கைதிகளுக்கு கொடுத்து இருக்கலாம்.

தண்டனை கைதிகளுக்கு, அதிலும் தூக்கு தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட கைதிகளுக்கு கூட விடுப்பு கொடுக்க விதிகளை தளர்த்த முடியும் என்கிற செய்தி ஆச்சர்யமாக உள்ளது.

இதே போன்ற கோரிக்கையுடன் பிற தண்டனை கைதிகள் அல்லது விசாரணை கைதிகளின் உறவினர்கள் தமிழக அரசை அணுகினால், இதே போன்று விடுப்பு கொடுக்கப்படுமா என தெரியவில்லை. 

நோய் தொற்று அபாயம் பிற கைதிகளுக்கும் உள்ளதால் அவர்களையும் விடுப்பில் அனுப்ப அரசு முன் வருமா என்ன?

எனவே இப்போதைய இந்த விடுப்பில், தனிப்பட்ட ஒருவருக்காக விதிகளை தளர்த்துவதில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு "சிறப்பு தன்மை" தானாகவே வந்து உட்கார்ந்து விடுகிறது.

அரசு அதிகாரம் என்பது தனக்கு வேண்டப்பட்டவர்கள் பலன் அடைவதற்காக விதிகளை தளர்த்துவதற்காக பயன்படுத்தப் படுவதல்லை. விதி தளர்வு என்பது பொதுவானதாக இருக்க வேண்டும். தனிப்பட்ட காரணங்களுக்காக இருப்பது சரியல்ல.

அரசு என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தால் தான் பெருமை என கருதுகிறேன்

எல்லோரும் தண்டனை அனுபவிக்கும் சிறை கூடத்தில் ஒருவருக்கு மட்டும் நோய் தொற்று அபாயத்தை காரணம் காட்டி விடுப்பு அளிப்பது விசித்திரமாக இருக்கிறது.

பேரறிவாளன் அவர்கள் விடுப்பில் வருவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அதே விதி மற்ற கைதிகளுக்கு பொருந்தாது என சொல்லப்படுவது சட்டத்தை இஷ்டத்துக்கு வளைப்பதை போல ஒரு தோற்றத்தை உருவாக்குவதை தவிர்க்க முடிவதில்லை.

எல்லோருக்கும் ஒரே நிலைப்பாடு எடுப்பதே ஒரு நல்ல அரசுக்கு அழகு. 

தமிழக சிறை துறை வரலாற்றில் மற்றும் ஒரு தவறான முன் உதாரணத்தை இப்போது எழுதி வைத்திருக்கிறது இந்த அரசு என்றே கருதுகிறேன்.






Sunday, March 28, 2021

சூயஸ் கால்வாய் முடக்கம்

கடல் வாணிபம் கொஞ்ச காலம் முடங்கி போகும் அளவுக்கு ஆகி உள்ளது இப்போதைய #SuezCrisis காரணமாக

சுருக்கமா அதைப் பார்ப்போம்

அரபி கடல் - செங்கடல் - மத்திய தரைக் கடல் மூலமா இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு பயணிக்க குறுக்கு வழி இந்த #SuezCanal 


இப்போது #Evergreen நிறுவனம் இயக்கும் #Evergiven எனும் கன்டெய்னர் கப்பல் அந்த கனாலில் சிக்கி கொண்டு உள்ளது..

25 பேர் கொண்ட இந்திய மாலுமிகளால் இயக்கப்பட்ட கப்பல் அது. 

நேராக பயணிக்க வேண்டிய கப்பல் தடுமாறி கரையில் தட்டி நின்று விட்டது 

கிட்டத்தட்ட 20,000 கண்டெய்னர் சுமந்து வரும் பிரம்மாண்டமான கப்பல் அது

அது #Suez கால்வாயை கிட்டத்தட்ட குறுக்காக மறித்து நிற்பதால் சுமார் 300 கும் அதிகமான கப்பல்கள் அந்த கால்வாயில் பின்னோக்கி இயக்கவும் முடியாமல் முன்னோக்கி செல்லவும் முடியாமல் ஜாம் ஆகி நிற்கின்றன. 

இந்த கப்பலை சரியான திசைக்கு திருப்பி இயங்க செய்யும் நடவடிக்கைகள் சில நாட்களாக நடைபெற்று வந்தாலும் இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை

இரு பக்கமும் கரைகளை சேதப்படுத்தாமல் மீட்கும் சவாலான செயல் அது. கரை கொஞ்சம் உடைந்தாலும் அந்த நாட்டுக்குள் கடல் நீர் புகுந்து விடும் 

இந்த பிரச்சனை காரணமாக கடல் வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. உலகின் மொத்த கடல் வாணிபத்தில் 15% இந்த கால்வாய் வழியாக நடைபெறுகிறது

தெற்கு ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் முக்கிய கடல் வழி தடம் இது

இப்போது கப்பல்கள் ஆப்பிரிக்காவை சுற்றி செல்கின்றன 

இதனால் கால விரையம், எரிபொருள் விரயம், பொருள் விரையம், கட்டண உயர்வு, அதனால் பொருட்களின் உயர்வு என பாதிப்புக்கள் ஒரு புறம்

தாமதமான பொருள் வரவு காரணமாக உற்பத்தி தாமதம் ஆவது, குறித்த நேரத்தில் பொருட்களை விற்க முடியாதது என வணிக பாதிப்புகள் மறு புறம்

அதிகம் இந்த பிரச்சனையால்  பாதிப்பது இந்தியா 

இந்திய தொழிற்சாலைகளுக்கு ஐரோப்பாவில் இருந்து வர வேண்டிய பொருட்களும், இந்தியாவில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களும் முடங்கி கிடக்கின்றன

முடங்கிய கப்பல்களில் எரிபொருள் உணவு பற்றாக்குறை என்பது அந்த கப்பல்களில் காத்துகிடப்போருக்கு மற்றொரு பாதிப்பு 

#Suez கால்வாயில் இப்போது சுமார் 300+ கப்பல்கள் நின்று கொண்டு இருக்கின்றன

அதில் உள்ளவர்களுக்கு எந்த உதவியும் யாரும் செய்ய முடியாத நிலை. 

எத்தனை நாள் அங்கே இருக்க வேண்டி இருக்கும் என்பது இன்னும் தெளிவு இல்லை

அது வரை உணவு கையிருப்பு & எரிபொருள் உள்ளதா என்று தெரியவில்லை 

இவை எல்லாம் சேர்ந்து அடுத்த சில மாதங்களுக்கு இந்திய தொழில் துறைக்கும், இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதிக்கு மிக பெரிய சவால் இருக்க கூடும்

இப்போது மாற்று வழியில் பயணிப்போம் என நினைத்தால் அதற்கான கூடுதல் செலவு ஏற்றுமதி செய்யும் பொருளின் விலையில் சேர்க்க வேண்டி இருக்கும். 

அப்படி விலையை ஏற்ற வாய்ப்பில்லாத நிலையில் அந்த கூடுதல் செலவு பொருளாதார இழப்பாக பெரும் சுமையாக தொழிற்சாலைகளுக்கு அழுத்தம் கொடுக்கும்

#SuezCrisis தீரும் வரை தீர்ந்து எல்லா கப்பல்களும் இயல்பாக சென்றுவரும்வரை இந்திய தொழில் துறைக்கு ஏற்படும் இழப்புகள் பல்லாயிரம் கோடிகள் ஆகும்

விரைவில் இது சரியாக வேண்டும்

இனி அவ்வழி இயங்கும் கப்பல்களில் தேர்ந்த மாலுமிகள் நியமித்து எந்த பிரச்சனையும் இல்லாமல் பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்

இப்போதைய #SuezCrisis கடல் சார் வாணிபத்தில் மிகப் பெரிய பாடமாக அமைந்து உள்ளது நமக்கு.

Saturday, February 27, 2021

தமிழக சட்டமன்ற தேர்தல் - 2021

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் தொடங்குவதாக அறிவித்தது சரி தான்.

மற்ற மாநிலத்தில் தேர்தல் வாக்கு பதிவு இன்னமும் மிச்சம் இருக்கும் போது இன்னொரு மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியானால் அது மிச்சம் இருக்கும் வாக்கு பதிவை மக்களின் மன நிலையை மாற்றும் என்பதால் எல்லா வாக்கு பதிவுகளும் முடிந்த பிறகு ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படுகிறது. இது கால காலமாக நடக்கும் ஒன்றே.

ஆனால் இது போன்ற சமயங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் மாநிலத்தில் வாக்குப்பதிவை முதலில் நடத்தாமல் இறுதி கட்டத்தில் நடத்தினால் காத்திருக்கும் நேரம் குறைவாகும். அதாவது மற்ற மாநிலங்களில் இறுதி கட்ட வாக்கு பதிவு நடக்கும் நாளில் தமிழ் நாட்டில் வாக்கு பதிவு வைத்து இருந்து இருக்கலாம்.

தேர்தல் ஆணையம் அது போல செய்யாமல் முதலில் தமிழகத்தில் வைத்து காத்திருக்க வைப்பது தேவையற்றது.

***

தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

கிராம சபை கூட்டங்கள் வாயிலாக திமுக கிட்டத்தட்ட அனைத்து மாவட்டஙகளிலும் ஒரு சுற்று பிரச்சாரத்தை முடித்து விட்டது. திமுக தரப்பில் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, என பலரும் சுற்று பயணம் செய்து மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தனர்

அதிமுகவின் ஒரே பிரச்சாரகர் ஆக உள்ள முதல்வர் எடப்பாடி அவர்களும் தமிழகம் முழுவதும் முதல் சுற்று பிரச்சாரத்தை முடித்து விட்டார்.

இப்போதைய நிலையில் திமுக தான் அடுத்து ஆட்சிக்கு வரும் என்பது மக்களின் மனதிலும் மீடியாக்கள் பார்வையிலும் மிக தெளிவாக பதிவாகி விட்ட ஒன்று

திமுகவை எதிர்த்து நிற்கவோ, திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்தவோ தகுந்த எதிர் அணி என எதுவும் இப்போது இல்லை. அதிமுக கூட்டணியில் அதிமுக மட்டுமே ஓட்டு வாங்கும் கட்சி. பாஜகவுக்கு என தனியான ஓட்டு வங்கி இல்லை. அதிமுகவின் தொண்டர்கள் உழைத்து அதிமுக ஆதரவாளர்கள் போடும் ஓட்டுகளை நம்பியே பாஜக இருப்பதால், மற்ற மாநிலங்களை போல அதிகாரம் செலுத்தும் நிலையிலோ தேர்தல் வியூகத்தை வகுக்கும் நிலையிலோ பாஜக தமிழகத்தில் இல்லை.

எனவே அதிமுக மட்டுமே திமுகவுக்கு எதிராக நிற்கிறது. பிற உதிரி கட்சிகள் எல்லாம் ஒற்றை இலக்க இடங்களை வெல்வதற்கே வாய்ப்பு இல்லாத கட்சிகளாக இருக்கின்றன.

அதிமுகவின் நிலையும் மோசமாகவே உள்ளது. மக்களை சந்தித்து ஆதரவை கேட்டு பெறும் அளவுக்கு மக்களை ஈர்க்க கூடிய தலைவரோ, மக்களிடம் சொல்ல கூடிய அளவுக்கு சாதனைகளோ இல்லாமல் திமுக மீதான அவதூறுகளை சொல்லியே பிரச்சாரம் செய்ய வேண்டிய கையறு நிலையில் தான் அதிமுக உள்ளது.

மேலும் இப்போது சசிகலா விடுதலை ஆகி தனது பொது செயலாளர் பதவிக்காக நீதிமன்றத்தை நாடி உள்ள நிலையில், அதிமுகவின் மற்ற தலைவர்கள் அமைச்சர்கள் எல்லோரும் என்ன செய்வது என தெரியாமல் அமைதி காப்பதால், எவருடைய துணையும் கிடைக்காமல் முதல்வர் ஒருவர் மட்டுமே பிரச்சாரம் செய்து ஆக வேண்டிய சூழல்.
சசிகலா கைக்கு அதிமுக போகுமா? போனால் கூட்டணியில் மாற்றம் வருமா? என்பது எல்லாம் தெரியாத நிலையில் அதிமுகவின் பிரச்சாரம் அடக்கியே வாசிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் மறு பக்கம், மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு செய்து வரும் துரோகங்கள், அதிமுக பாஜகவிடம் விட்டுக்கொடுத்து உள்ள மாநில உரிமைகள், தமிழக அரசின் நிர்வாக சீர்கேடுகள், ஊழல்கள் என எல்லா குறைகளையும் திமுக தரப்பு பொது மக்களிடம் விரிவாக பட்டியலிட்டு புரியவைத்து இருக்கிறது.

இன்னும் சொல்ல போனால், இந்த முறை தேர்தல் பிரச்சாரம் வழக்கமான பிரச்சாரமாக இல்லாமல், ஒரு இடத்தில் மக்களை எல்லாம் அழைத்து அமர்ந்து நீண்ட நேரம் கலந்துரையாடல் போல சகஜமாக பேசி, இயல்பான மொழியில் அவர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து அவர்களுக்கு கொஞ்சம் நெருக்கமாக நடந்து கொள்வது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. மட்டும் அல்ல மேடை போட்டு அடுக்கு மொழியில் பேசி புரிய வைக்க முடியாத பல விஷயங்களை, இப்படி கலந்துரையாடலில் இயல்பாக பேசி புரிய வைக்க முடிந்து இருக்கிறது.

*****

மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் இதை எல்லாம் உணர்ந்து இருப்பார் என நினைக்கிறேன்.

திமுக தலைவர் அறிவிக்கும் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை தனதாக்கி கொள்ள அதே திட்டத்தை தமிழக அரசும் உடனே உடனே அறிவித்தது அதற்கான சான்று.

அடுத்த ஆட்சி திமுக தான் என உறுதி ஆனா நிலையில் கஜானாவை சுத்தமாக காலி செய்து ₹5.70 லட்சம் கோடி கடனையும் வைத்து செல்கிறது அதிமுக அரசு.

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இந்த ஆண்டு யாரும் ஓய்வு பெறாமல் பார்த்து கொண்டது. இதன் மூலம் இப்போது பணி கொடை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதிமுகவுக்கு இல்லை. ஆனால் எதிர்வரும் திமுக ஆட்சியில் முதல் இரண்டு வருடங்களுக்குள் அதை கொடுப்பதற்கான நிதி ஆதாரத்தை உருவாக்க வேண்டி இருக்கும்

அதே போல பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தும் வராத திட்டங்கள் எல்லாம் ஆட்சியை விட்டு இறங்க போகும் கடைசி ஓரிரு தினங்களில் வெறும் அறிவிப்பாக வெளியிட்டு அதற்கான நிதி ஆதாரம் எதையும் ஏற்படுத்தாமல் வெற்று அறிவிப்பாக விட்டு செல்கிறது அதிமுக அரசு.

கூட்டுறவு கடன் தள்ளுபடி, சுய உதவி குழு கடன் தள்ளுபடி, பயிர்க்கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி என அரசுக்கான வருவாய் அனைத்தும் தள்ளுபடி செய்வது என்பது புதிய ஆட்சி வந்து நிதி ஆதாரத்தை உருவாக்கி பின்னர் செய்ய வேண்டியவை.

ஆனால் அதை எல்லாம் கூட ஆட்சியில் இருந்து இறங்கி செல்லும் கடைசி நாட்களில் அறிவித்து விட்டு வெளியேறுவது.. அடுத்து வரும் திமுக ஆட்சிக்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்

மிகப்பெரும் சவாலான நிதி மேலாண்மையை அடுத்து வரும் அரசு எப்படி சமாளிக்க போகிறது என்பது மிகப்பெரிய கேள்வி

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகைகளை கேட்பதற்கு எந்த உறுதியான முயற்சியும் எடுக்க தயங்கும் அதிமுக அரசு, இப்படி கையில் உள்ள நிதி ஆதாரங்களையும் மொத்தமாக காலி செய்வது சிறு பிள்ளை தனமான ஒன்று.

அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை நன்கு உணர்ந்து திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகவே கஜானா காலியாக்கும் நிகழ்வை பார்க்கிறேன்.

தேர்தல் முடிவு என்ன என்பது ஓரளவு தமிழகத்தில் எல்லோரும் ஊகித்து வைத்து உள்ளனர்.

தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்து அவர்கள் எப்படி தமிழகத்தை வழி நடத்தி செல்ல போகிறார்கள் என்பதை காணவே எல்லோரையும் போல நானும் ஆவலாக உள்ளேன்

வாருங்கள்.. காத்திருப்போம்


Tuesday, February 2, 2021

பட்ஜெட் 2021 - GST திருத்தங்கள்

இந்திய அரசின் பட்ஜெட் 2021 நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் GST தொடர்பான சில சட்ட திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான திருத்தங்களை குறித்து சுருக்கமாக பார்ப்போம்

Section 16(2)(aa)

இந்த புதிய விதிப்படி, பொருளை விற்பனை செய்த / சேவையை வழங்கிய நிறுவனம் தனது பில்லை GST இணைய தளத்தில் GSTR 1 ரிட்டர்ன் தாக்கல் செய்து அது வாங்கியவரின் GSTR 2A படிவத்தில் வெளியானால் மட்டுமே வாங்கியவர் Input Tax Credit (ITC) எடுக்க முடியும்

இது வரை, அப்படி GSTR 2A வில் வராவிட்டாலும் அவரது கொள்முதல் படிவம் (Purchase Register) அடிப்படையில் ITC எடுத்து வந்தனர்.

பின்னர் Rule 36(4) எனும் புது விதி கொண்டு வரப்பட்டு GSTR 2A வில் உள்ள ITC உடன் கூடுதலாக 5% ITC எடுத்து கொள்ள அனுமதிக்கப் பட்டு இருந்தது

இனி மேல் GSTR 2A வில் இருந்தால் மட்டுமே ITC எடுக்க முடியும்
இது வாங்கியவர் மீது கூடுதல் சுமையை ஏற்றும். விற்பனை செய்தவர் ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் வாங்கியவர் ITC எடுக்க முடியாது. தன்னிடம் சட்டப் பூர்வமாக அனைத்து ஆவணங்கள் இருந்தாலும் ITC எடுக்க முடியாமல் பணமாக வரியை கட்ட வேண்டி வரும். அவரது Working Capital அடி வாங்கும்

மேலும் இருக்கிற வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்து, தனக்கு விற்பனை செய்தவர் ரிட்டர்ன் தாக்கல் செய்து விட்டாரா இல்லையா என தினமும் கண்காணித்து வரவேண்டும். அவரை ரிட்டர்ன் தாக்கல் செய்ய சொல்லி நினைவுறுத்தும் கடிதங்கள் அனுப்ப வேண்டும். இப்படி எல்லாம் மெனக்கெட்டு அவர் ரிட்டர்ன் தாக்கல் செய்தால் தான் ITC கிடைக்கும். அவர் தாக்கல் செய்ய தாமதிக்கும் காலம் வரை வாங்கியவர்களுக்கு சிக்கல் தான்.

ஒரு நிறுவனத்துக்கு 50 பேர்களிடம் இருந்து பொருட்கள் / சேவைகள் வாங்கினால் அந்த 50 பேரையும் கண்காணிக்க வேண்டும்

பெரு நிறுவனங்கள் நிலை இதை விட மோசம். அவர்கள் ஆயிரக்கணக்கான நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் / சேவைகள் பெறுகிறார்கள். அத்தனை பேரின் ரிட்டர்ன் தாக்கல் நிலவரத்தை இனி கண்காணிக்க வேண்டும்.

முறையாக ரிட்டர்ன் தாக்கல் செய்யாத விற்பனையாளர்கள் மேற்கொண்டு தங்களுக்கு வியாபாரம் நடக்காது என்கிற நிலைக்கு வரக்கூடும். பெரு நிறுவனங்கள் அப்படி பட்ட வரி தாக்கல் தாமதிக்கும் நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் / சேவைகள் பெறுவதை நிறுத்தி கொள்ள கூடும்

சிறு நிறுவனங்கள், ஒரு மாதத்தில் விற்பனை செய்த அனைத்து பொருட்களுக்கும் உரிய வரியை 20 நாளுக்குள் அரசிடம் கட்ட வேண்டும் என்கிற நிலையை பார்த்தால் நிதி பற்றாக்குறை, விற்பனை செய்யப்பட்டதற்கான தொகை 60 நாட்களுக்கு பிறகு கிடைப்பது, அதனால் வரி கட்ட வாங்க வேண்டிய கடன் என தொழிலின் முக்கிய தேவையான உற்பத்திக்கு தேவையான working capital கிடைக்காமல் வரியை மட்டுமே கட்டி கொண்டு இருக்க நேரும். 

எந்த ஒரு நிறுவனம், தனது வாடிக்கையாளர் பணம் தரும் வரை தனது சொந்த காசை போட்டு வரி கட்டி வரும் அளவுக்கு நிதி நிலை ஆதாரம் கொண்டு இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே இனி தாக்கு பிடிக்க முடியும்.

Section 35(5) நீக்கம் & Section 44 திருத்தம்

இதன் படி ஒவ்வொரு ஆண்டும் Annual Return ஐ ஆடிட்டர்களிடம் கொடுத்து certify செய்து வாங்கி தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இனி இல்லை. 

அவரவர் கணக்கை அவரவர்களே சரிபார்த்து Self Assessment முறையில் தாக்கல் செய்தால் போதும்

இது மிக மிக நல்ல முடிவு. ஆடிட்டர்களின் தேவையற்ற கெடுபிடிகள், வியாபாரத்தை / உற்பத்தியை சரிவர புரிந்து கொள்ளாமல் ஆடிட்டர்கள் அவர்களாக கற்பிதம் செய்து கொண்டு கேட்கும் கேள்விகளுக்கான விடை தேடல்கள், ஆடிட்டர்களுக்கு கொடுக்கவேண்டிய மிக அதிகமான கட்டணம் ஆகிய அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை

அவரவர் தொழிலை நன்றாக புரிந்து வைத்து இருப்பதால் அது குறித்த தகவல்களை அவர்களே இனி தாக்கல் செய்யலாம் 

Section 50 திருத்தம்

இது வரை வட்டி கட்டும் போது மொத்த தொகைக்கும் வட்டி கட்ட வேண்டும் என்று இருந்ததை திருத்தி இனி நிகர தொகைக்கு மட்டும் வட்டி காட்டினால் போதும் என்று மாற்றப்பட்டு உள்ளது. இதுவும் நல்ல முடிவே

உதாரணமாக:

கட்ட வேண்டிய வரி ₹1,000/-
ITC இருப்பு ₹800
பாக்கி ₹200

என இருந்தால் இதுவரை ₹1,000/- க்கு வட்டி வாங்கி வந்தார்கள். இனிமேல் ₹200/- க்கு கட்டினால் போதும்

Section 107(6)

வாகனங்களை விடுவிக்க தொடுக்கும் வழக்கு அப்பீல் செய்யும் போது இனி பெனால்டி தொகையில் 25% முன்பணமாக கட்டினால் தான் அப்பீல் செய்ய முடியும்

Section 129 திருத்தம்

வாகனங்களை அரசு சோதனைக்காக நிறுத்தி அதில் குறைகள் இருப்பதாக நோட்டீஸ் கொடுத்தால், நாம் அடைக்கவேண்டிய வரியுடன் 200% கூடுதல் பெனால்டி சேர்த்து அடைத்தால் தான் இனி வாகனத்தை விடுவிக்க முடியும்.

உதாரணம்:

வாகனத்தில் உள்ள பொருளின் மதிப்பு - ₹10,00,000/- எனில்

அந்த பொருளுக்கான 18% வரி - 1,80,000/-
பெனால்டி (வரியின் 200%) - 3,60,000/-

என மொத்தமாக ₹3,60,000/- செலுத்தினால் தான் வண்டி விடுவிக்கப்படும்.

அதிலும் முன்னெல்லாம் ₹3,60,000/- க்கு Bank Guarantee கொடுத்தால் போதும். ஆனால் இப்போது ₹3,60,000/- மொத்தமாக வங்கியில் செலுத்தி சலாண் காட்ட வேண்டும். அப்போது தான் விடுவிக்கப்படும்.

ஒரு வேளை 7 நாட்களுக்குள் நாம் பெனால்டி அடைக்க முன் வராவிட்டால்

பொருளின் மதிப்பில் 50% - ₹5,00,000/-
அல்லது
வரியின் மதிப்பில் 200% - ₹3,60,000/-
இதில் எது அதிகமோ அதை செலுத்தினால் தான் (₹5,00,000/-) வண்டி விடுவிக்கப்படும்

சிறு பிழைகள், கணக்கீடுகள் ஏற்படும் சிறு தவறுகள் ஆகியவை கூட இப்படியான பெரும் தொகையை கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படும்.
EWB எனப்படும் வழி கடவு சீட்டு காலாவதி ஆனால் கூட பெனால்டி அடைக்க வேண்டும்.

எல்லா டாக்குமெண்ட் சரியா இருந்தாலும் EWB தயாரிக்கும் போது சிறு பிழைகள் ஏற்பட்டால் கூட இந்த அளவு பெனால்டி அடைக்க வேண்டி இருக்கும்

எனவே டாகுமெண்ட் தயாரிக்கும் போதும், அதில் கையெழுத்து இட்டு கொடுத்து அனுப்பும் போதும் முழுமையாக சரி பார்த்து விடுவது நல்லது.

Section 130 திருத்தம்

நிறுத்தி வைக்கப்பட்ட வண்டிக்கு 7 நாட்களுக்குள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும், அந்த நோட்டீஸ் கொடுத்த 7 நாட்களுக்குள் ஆர்டர் கொடுக்க வேண்டும் என்று நேர வரையறை செய்யப்பட்டு உள்ளது. இது வரை பல நாட்கள் எந்த நடவடிக்கையும் இல்லாமல் வண்டி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்.

மேலும், நோட்டீஸ் கொடுத்து 15 நாட்கள் வரை பொருளின் உரிமையாளர் பெனால்டி கட்டவில்லை என்றால் அந்த பொருளை விற்று பெனால்டி தொகையை எடுத்து கொள்ள அரசுக்கு இப்போது அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

வண்டியை 15 நாள் கழித்து விடுவித்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு லாரி உரிமையாளர் ₹1 லட்சம் வரை செலுத்த வேண்டும்.

அதாவது பொருளின் உரிமையாளர் தவறு செய்தாலோ, அரசு அதிகாரி தனது தவறான புரிதல்கள் காரணமாகவோ வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டால், பொருளின் உரிமையாளர் பெனால்டி கட்டாத பட்சத்தில் லாரி உரிமையாளர் ₹1 லட்சம் கட்டி தான் வண்டியை எடுக்க முடியும். அதுவும் 22 நாட்கள் கழித்து.

இது லாரி தொழிலை கடுமையாக பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

IGST Section 16 திருத்தம்

SEZ எனப்படும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் '0%' வரி என்று இருந்ததை திருத்தி அந்த SEZ நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட உற்பத்திக்கு தேவையான பொருட்களுக்கு மட்டுமே இனி Zero Rated Supply செய்ய முடியும். 

இனி SEZ க்கு விற்பனை செய்யும் நிறுவனங்கள், தாங்கள் சப்ளை செய்யும் பொருட்கள் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்திக்கு தான் போகிறதா என பார்த்து போகிறது என்றால் 0% வரியிலும் இல்லை என்றால் முழு வரியிலும் விற்பனை செய்ய வேண்டும்

இது SEZ க்கு supply செய்யும் ஆர்வத்தை குறித்து விடும். 

ஏற்கனவே SEZ நிறுவனங்களுக்கு கிடைத்து வந்த வருமான வரி சலுகை பரிக்கபப்ட்ட நிலையில் இது போன்ற கெடுபிடிகளும் சேர்ந்தால் SEZ அமைப்பதே வீண் என்று ஆகி விடும்.

****

மறைமுக வரிகள் எனப்படும் Indirect Taxes ஐ பொறுத்த வரை இந்த பட்ஜெட் ஓரளவு நல்ல பட்ஜெட் என்றே நினைக்கிறேன்.

பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் அவை எல்லாம் வரி செலுத்தும் வழக்கத்தை முறைப்படுத்தும் முயற்சியாகவே நான் பார்க்கிறேன்

இப்போதைய திருத்தங்கள் விற்பனை செய்வோர் முறையாக வரி செலுத்தவும் வாங்குவோர் அதை கண்காணித்து ITC எடுக்கவும் பொருட்களை அனுப்பும் பொது கொடுக்கப்படும் ஆவணங்கள் பிழை இல்லாமல் இருக்கவும் ஏற்படுத்தப்பட்ட முயற்சி என்றே நான் பார்க்கிறேன்

ஒரு Honest Tax Paying Culture உருவாக்க இப்படியான கடுமையான சட்ட திருத்தங்கள் தேவை என்றாலும், நமது அரசு அதிகாரிகளின் மன நிலை, நோக்கம் என்ன என்பதை கால காலமாக புரிந்த நமக்கு அவர்கள் இதை வைத்து இன்னும் என்னென்ன வகையில் தொழில் துறையினரை அவதிக்கு உள்ளாக்குவார்கள் என்று யோசிக்கும் போது அச்சமாக தான் இருக்கிறது

தொழில் முனைவோர் எல்லோரும் தவறு செய்பவர்கள், அரசு அதிகாரிகள் எல்லோரும் அதை கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக நியமனம் ஆகி உள்ளவர்கள் என்கிற மன நிலை அரசு அதிகாரிகளிடம் இருக்கும் வரையில் இப்படியான சட்ட திருத்தங்கள் அதன் உண்மையான நோக்கத்தை அடைவது கஷ்டமே.




Printfriendly