Thursday, May 30, 2024

இந்திய நாடாளுமன்ற தேர்தல் - 2024

2024-29 கால கட்டத்துக்கான இந்திய அரசை நடத்தப்போவது யார் எனும் தேடல் இந்திய நாடாளுமன்ற தேர்தலாக தற்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கிறது. மொத்தமுள்ள ஏழு கட்ட தேர்தலில் இது வரை ஆறு கட்ட தேர்தல் முடிவடைந்து அதன் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் முதல் நாள் நடைபெறும். ஜூன் நான்காம் நாள் வாக்கு எண்ணிக்கை. ஜூன் ஐந்தாம் தேதி மாலை அடுத்த ஆட்சி யார் கையில் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிடும்.

என்னுடைய ஊகம் என்னவென்றால், மூன்றாவது முறையாகவும் பாஜக தான் ஆட்சி அமைக்கக் கூடும், ஆனால் அது நிச்சயமாக அறுதி பெரும்பான்மை கொண்ட ஆட்சியாக அல்லாமல் சிறுபான்மை ஆட்சி / கூட்டணி ஆட்சியாக அமையவே வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். காரணம் காங்கிரஸ் தலைமையிலான "INDIA" கூட்டணியின் எழுச்சியும் அதற்கு மக்களிடம் கிடைத்து வரும் அமோக வரவேற்பும் தான்.

ஒருவேளை கடைசி நேர சுதாரிப்பாக அல்லாமல் முன் கூட்டியே இந்த அணி அமைக்கப்பட்டு தேர்தல் கால பணிகளுக்கான முன்னேற்பாடுகள் நடத்தி இருந்தால் ஆட்சியை பிடிக்கக்கூடிய வாய்ப்பை கூட பெற்று இருக்கக்கூடும் என நினைக்கிறேன். 

இந்திய அரசை ஆட்சி செய்ய 272 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

குஜராத், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், ராஜஸ்தான், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் இப்போதும் பாஜக வலுவாக உள்ளது. மேலும் அங்குள்ள மக்கள் மத ரீதியான உணர்வுகள் அடிப்படையில் வாக்குகளை தீர்மானிப்பதால் பாஜகவும் இந்த முறை தேர்தல் பிரச்சாரம் முழுமையும் மத ரீதியாகவே செய்து வந்தது. ஆகையால் அந்த மாநிலங்களில் எல்லாம் பெருவாரியாக வெற்றி பெற பாஜகவுக்கு கஷ்டம் ஒன்றும் இருக்காது.

தென் மாநிலங்களை பொறுத்த வரை பாஜகவுக்கு கஷ்டம் தான். ஆனால் தென்மாநிலங்களில் ஒரே ஒரு உறுப்பினர் கூட கிடைக்காமல் போனாலும் 272 உறுப்பினர்களை பிற மாநிலங்களில் இருந்து பெற்றுக்கொள்வது பாஜகவுக்கு சுலபமே. 

ஒரு வேளை கூட்டணி ஆட்சி, சிறுபான்மை ஆட்சி என்கிற நிலையில் பாஜக ஆட்சி செய்யும் எனில் எதிர்கட்சி வரிசையில் காங்கிரஸ் கூட்டணி மிக பலமாக அமையும் என்பதால் பாஜகவின் கனவு திட்டங்கள் எதையும் அமல் செய்ய முடியாமல் போகும். பாஜகவின் எதேச்சாதிகார போக்குக்கு காங்கிரஸ் அணி மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்து தவறான முடிவுகளை பாஜக எடுக்காமல் பார்த்துக்கொள்ளும்.

தமிழ்நாடு & புதுவையை பொறுத்தவரை, 40/35 திமுக கூட்டணி நிச்சய வெற்றி பெறும். அதிமுக இரண்டு இடங்களிலும் (கோவை, ஈரோடு) பாஜக அணி மூன்று இடங்களிலும் (நெல்லை, வேலூர், தர்மபுரி) வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன என்றாலும் அங்கேயும் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்திலாவது வெற்றி பெற்றாலும் ஆச்சர்யம் இல்லை.

கேரளாவில் பாஜக ஒரே ஒரு இடத்தில் (திருச்சூர்) வெற்றி பெற வாய்ப்பு உண்டு. மற்றவற்றில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக நினைக்கவில்லை.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் YSR காங்கிரஸ் கட்சியும் கர்நாடகத்திலும் தெலுங்கானாவிலும் எல்லாம் காங்கிரஸ் கட்சியும் வலுவாக உள்ளது. அங்கே சிற்சில இடங்களை பாஜக வெல்லக்கூடும் எனினும் அவை ஒற்றை இலக்க எண்களாக தான் இருக்கக்கூடும்.

எனவே, தென் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் இனி இந்திய நாட்டின் வரலாற்றை தீர்மானிக்க போகிறவர்கள். குறிப்பாக திராவிட முன்னேற்ற கழக கூட்டணி உறுப்பினர்கள். அவர்கள் எதை அனுமதிக்க போகிறார்கள் எதிர்க்க போகிறார்கள் என்பதை பொறுத்தே சட்டங்களும் திட்டங்களும் அமையும். அந்த வகையில் நாடு முழுமையும் இனி ஸ்டாலின் ஆட்சி என சொன்னாலும் அது மிகை அல்ல.

அடுத்த வாரம் முடிவுகள் வந்த பின் விரிவாக அலசுவோம்.


Saturday, April 22, 2023

வேலை நேர சட்ட திருத்தம்

தமிழ்நாடு அரசு நேற்று சட்டமன்றத்தில் விவாதம் எதுவும் இல்லால் 17 சட்ட முன்வடிவுகளை தாக்கல் செய்தது.

அதில் ஒன்றாகதொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான பணி நேரத்தை உயர்த்தி ஒரு சட்ட திருத்தம் Factories Act இல் கொண்டு வந்து உள்ளது. இந்த சட்டத்திருத்தம், ஒரு நாளுக்கு இப்போது இருக்கும் 8 மணி நேர வேலை என்பதில் இருந்து 12 மணி நேரம் ஆக இயல்பான வேலை நேரத்தை உயர்த்திக் கொள்ள வழி வகை செய்கிறது.

இது எதற்காக கொண்டு வரப்பட்டது யாருக்காக கொண்டு வரப்பட்டது என்பது எல்லாம் தெரியவில்லை. ஆனால் காரணம் என்னவாக இருந்தாலும் இது சரியானது அல்ல.

இளைஞர்களின் வேலை வாய்ப்பை குறைக்கும், வேலை செய்வோரை மேலும் மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும் இந்த சட்டம், இன்னும் ஒரு வாரத்தில் மேதினம் கொண்டாட இருக்கும் நேரத்தில் வந்து இருப்பது ஆச்சர்யம் தான். 

அதற்காக மே தினம் முடிந்த பிறகு கொண்டு வந்தால் ஓகேவா என சிலர் கிண்டல் செய்ய கூடும்.

மே தினம் எதற்காக கொண்டாடப் படுகிறது என்கிற அடிப்படை விஷயம் தெரிந்த யாரும் இந்த சட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒரு மனிதனுக்கு இயல்பாக தேவைப்படும் ஓய்வை கொடுக்க வேண்டும் என்பதற்காக 8 மணி நேர உழைப்பு, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பதனை உறுதி செய்வதற்காக போராடி பெற்ற உரிமை தான் இந்த மே தின கொண்டாட்டத்தின் அடிப்படை. 

நேற்று சட்டமன்றத்தில் இந்த சட்டம் அறிமுகம் ஆனபோது எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சியினருக்கு வாழ்த்துக்கள்.

இந்த சட்ட திருத்தம் முழுக்க முழுக்க உற்பத்தி துறை சார்ந்த Factories Act உட்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது 50 பேருக்கு மேல் பணி செய்யும் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அப்படியான தொழிற்சாலைகளில் இயல்பான வேலை நேரம் 8 மணி நேரம் என்றாலும் கூட, விதிவிலக்காக வேலை அவசரம், அல்லது வேலை எதிர்பார்த்த நேரத்தில் முடியவில்லை போன்ற தருணங்களில் கூடுதல் நேரம் (Over Time) வேலை செய்ய வைக்கலாம் என Factories Act ஏற்கனவே வழி வகை செய்து உள்ளது.

அப்படியான Over Time நேரத்தில் இயல்பான நேரத்துக்கு கொடுக்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்கிற சட்டம் ஏற்கனவே உள்ளது.

இப்போது, இயல்பான வேலை நேரமே 12 மணி நேரம் வரை வைத்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு சட்ட திருத்தம் சொல்வதால், Over Time என்று தனியாக கூடுதல் சம்பளம் கொடுத்து வேலை செய்ய வைக்க வெண்டியது இல்லை. இயல்பான சம்பளத்தில் 12 மணி நேரம் வரை வேலை செய்ய வைக்கலாம்.

எப்போதேனும் Over Time என்று அல்லாமல் தினசரி கூட இனி 12 மணி நேரம் வேலை வைக்க முடியும்.

நிச்சயமாக இது உற்பத்தியை அதிகரிக்க செய்யும் தான். ஆனால் அதே அளவு நிச்சயம் தொழிலாளர்களின் உடல்நிலை மன நிலையையும் பாதிக்கும் என்பதும்.

ஒரே நாளில் 17 சட்ட மசோதாக்கள் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டு உள்ளதன் பின்னணி எதுவாக இருந்தாலும் ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அதை ஆதரிக்க மாட்டார்கள். போலவே அதில் ஒன்றான இந்த வேலை நேர சட்ட திருத்தத்தை தொழிலாளர் நலன் மீது அக்கறை கொண்ட யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

இரண்டு வருஷம் முன்பு இதே போன்ற சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வர முனைந்த போது அதை கடுமையாக எதிர்த்த கழகம் இப்போது அதே சட்டத்தை கொண்டு வந்து இருப்பது வருத்தமானது.

அப்போது இந்த சட்டத்தை எதிர்த்து திமுக சொன்ன விஷயங்கள் எதுவும் இப்போது மாறிவிடவில்லை தானே?தொழிலாளர் விருப்பப்பட்டால் மட்டுமே இந்த பணி நேரத்தை தொழிற்சாலைகள் அமல் செய்ய முடியும் என அமைச்சர் சொல்லி இருக்கிறார். தினசரி எல்லா தொழிற்சாலைகளும் என்ன செய்கின்றன என அரசு கண்காணிப்பது சாத்தியம் இல்லை.

Inspector of Factories (தொழிற்சாலை ஆய்வாளர்) இதை தினசரி செய்யவும் முடியாது. தொழிற்சாலை அவரை "ஒப்புக்கொள்ள வைக்க" எதையும் செய்யும். ஊழலுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கும் சட்ட திருத்தம் இது.

மேலும், தொழிலாளர் விருப்பம் என்று ஒன்று ஒருபோதும் இருந்தது இல்லை. தொழிற்சாலை பணித்தால் தொழிலாளர்கள் அதை செய்து தான் ஆக வேண்டி இருக்கும். அப்படி செய்யாத தொழிலாளர்களுக்கு பதில் மாற்று தொழிலாளர்களை வைக்க தொழிற்சாலைகள் தயஙகாது. எப்படி பார்த்தாலும் பாதிக்கப்பட போவது தொழிலாளர்கள் தான்.

இந்த சட்ட திருத்தத்தின் சாதக பாதகஙகளை பற்றி ஆராய உயர் மட்ட குழு அமைக்கப் போவதாக அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.

எதிர்ப்பு வந்தால் மறு பரிசீலனை என்பதை விட சட்டம் கொண்டு வரும் முன்பு தொழிற் சங்கங்களை ஆலோசித்து கொண்டு வருவது தான் இது வரை ஜனநாயகமாக இருந்தது.

உயர்மட்ட குழு எல்லாம் சட்ட முன்வரைவு நேரத்திலேயே இருந்து இருக்க வேண்டும். அதை மசோதாவாக தாக்கல் செய்த பிறகு உயர்மட்ட குழு அமைப்பது சரியல்ல.

அரசு இது தொடர்பாக தொழிற்சங்கங்களை அழைத்து பேசி அவர்கள் கருத்தையும் கேட்டு முடிவு செய்து இருக்கலாம். குறைந்த பட்சம் திமுகவின் தொழிற்சங்கம் LPF கருத்தையாவது கேட்டு இருக்கலாம். LPF எல்லா சூழலிலும் தொழிலாளர் பக்கமே நின்ற வரலாறு உண்டு. தவறை தவறு என தயஙகாமல் சொல்லும் துணிவும் உண்டு.

டிரைவர்கள், டீச்சர், மருத்துவர், கட்டிட வேலை செய்வோர், டெக்ஸ்டைல், கணினி துறை, கடைகள், சூப்பர் மார்க்கெட், ஹோட்டல் போன்ற பல துறைகளில் ஏற்கனவே தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்கிறார்களே என்பது போன்ற பொருந்தாத ஒப்பீடுகள் கொண்டு வந்து இந்த சட்ட திருத்தத்தை ஆதரித்து பேசுவோர் எவரும் இந்த துறைகள் எல்லாம் Factories Act இல் வராத துறைகள் என புறியாதவற்களாக தான் இருக்க கூடும். அவர்களின பிரச்சாரத்தை எல்லாம் புறக்கணித்து விட்டு அரசு இந்த சட்ட திருத்தத்தின் உண்மையான பாதிப்பை அனுபவிக்க போகும் தொழிற்சாலை தொழிலாளர்களின் கருத்துக்களை கேட்டு நல்ல முடிவினை எடுத்தால் நல்லது.
Tuesday, March 7, 2023

தனியார் மயம் ஆகிறதா MTC?

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்க ஏதுவாக தனியார் பங்களிப்புடன் 1,000 பேருந்துகள் வாங்க திட்டம் இருப்பதாக ஒரு செய்தி வந்தது.

இது தொடர்பான டெண்டர் விவரஙகளில், Gross Cost Contract (GCC) முறையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அதற்கான நிறுவனஙகளை தேர்ந்தெடுப்பது, ஆய்வு செய்வது ஆகியவற்றக்காக ஒரு consultancy நிறுவனத்தை தெரிவு செய்வதற்கான டெண்டர் ஆக அது வெளியாகி இருக்கிறது.இந்த செய்தி வெளியானதும், இது மாநில அரசு இதுவரை பின்பற்றி வந்த போக்குவரத்து கொள்கைக்கு எதிரானது என்றும், போக்குவரத்து தொழிலாளர் நலன் பாதிக்கப்படும் என்றும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

இது பற்றி பார்ப்போம்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை போக்குவரத்து கழகம் என்பது தொழிலாக அல்ல சேவையாகவே நடத்தப்பட்டு வருகிறது.

தனியார் பேருந்துகளை நடத்தி வந்த காலஙகளில், வருவாய் அதிகம் உள்ள வழித்தடங்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு தூர கிராமஙகள், மலை பகுதி குடியிருப்புகள் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து சேவை இல்லாமல் இருந்தது. அதனால் அங்கிருந்த மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் இல்லாமல், கல்வி வேலை வாய்ப்பு ஆகியவற்றில் பின் தங்கி இருந்தனர். மேலும் மருத்துவம் அரசு சேவைகள் ஆகியவை பெற அதிக தூரம் நடந்தோ மாட்டு வண்டி சைக்கிள் போன்றவற்றில் பயணித்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

தமிழ்நாடு அரசு 1969 ஆம் ஆண்டு பேருந்துகளை தேசியமயமாக்கி, அரசு போக்குவரத்து கழகத்தை தொடங்கி, அனைத்து ஊர்களுக்கும் பேருந்து வசதி செய்து கொடுத்து, "ஒரே ஒரு பயணியாக இருந்தாலும் அவருக்காக பேருந்து இயக்கப்படும்" என அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களின் வாக்குறுதி படி இன்று வரை லாப நஷ்டம் பார்க்காமல் முழுக்க முழுக்க மக்கள் நல சேவையாக நடைபெற்று வருகிறது.

சென்னை & கன்னியாகுமரி மாவட்டங்கள் தவிர பிற மாவட்டஙகளில் பிற்பாடு தனியார் நிறுவனஙகளும் பேருந்துகளை இயக்க அனுமதி பெற்று இயக்கி வருகிறார்கள்.

மற்ற மாநிலங்களுக்கு குறிப்பாக வட இந்திய மாநிலங்களுக்கு பயணித்தவர்கள் அங்கே இப்போதும் போக்குவரத்து வசதிகள் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை நன்கு அறிவார்கள்.

சென்னையை பொறுத்த வரை நகர பேருந்துகள் முழுமையும் அரசு மாநகர போக்குவரத்து கழகம் (MTC) சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. (ஒரே ஒரு தனியார் பேருந்து 54T மட்டும் கோர்ட் அனுமதியுடன் இயங்குகிறது).


இப்போது உலக வங்கி கடன் நிபந்தனை அடிப்படையில் தனியார் பங்களிப்புடன் இந்த ஆண்டு 500 பேருந்துகளும், 2025 ஆம் ஆண்டு மேலும் 500 பேருந்துகளும் ஆக மொத்தம் 1,000 பேருந்துகள் தனியார் மூலம் இயக்க திட்டம் இட்டு, அதற்காக டெண்டர் விடப்பட்டு இருக்கிறது.

இது தனியார் மயமா? தனியார் பங்களிப்பா?

தனியாருடன் அரசு இணைந்து செயலாற்ற பல முறைகள் உண்டு.

1. Dry Lease/Wet Lease முறையில் தனியாரின் பேருந்துகளை அரசு பயன்படுத்தி அரசின் பெயரில் போக்குவரத்து சேவை அளிப்பது. அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா மாநிலங்களில் வோல்வோ, ஸ்கேனியா பேருந்துகளை இந்த முறையில் தான் இயக்குகிறார்கள். பேருந்து வாங்கும் செலவு அரசுக்கு இல்லை. குத்தகைக்கு எடுத்தால் போதும். அரசு விரும்பும் வழித்தடத்தில் அரசு இயக்கி கொள்ளும். 

2. தனியார் நிறுவன பேருந்துகளுக்கு என தனியாக permit கொடுத்து அவர்கள் விரும்பும் வழித்தடத்தில் இயக்கிக் கொள்ள அனுமதி கொடுப்பது. பல மாவட்டஙகளில் நகர, புறநகர் பேருந்துகள் இப்படி தான் இப்போது இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

3. Special Purpose Vehicle - அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தில் தனியாரை ஆலோசகராக நியமித்து நிர்வாகம் செய்வது. பேருந்துகள் எல்லாம் அரசின் சொத்து.. ஆனால் நிர்வாகம் செய்வதில் தனியார் மேலாண்மை நிறுவனம் துணை நிற்கும். கேரளாவில் KSRTC - SWIFT நிறுவனம் இப்படி இயங்குகிறது.

4. Joint Venture - தனியார் நிறுவன பஸ் அரசின் சார்பாக இயக்கப்படுவது. இதில் இருவரின் பெயரும் (போக்குவரத்து கழகம் & தனியார் நிறுவனம்) இருக்கும். பெங்களூர் நகரில் இப்படியான சேவை இருக்கிறது.

5. இவை போக இந்த GCC முறையும் ஒன்று. அதாவது Gross Cost Contract. பேருந்துகள் தனியாருடையது. ஓட்டுநர் தனியார் சார்பில். நடததுனர் அரசின் சார்பில். ரூட் அரசின் பெர்மிட். அந்த ரூட்டை டெண்டரில் வாங்கும் நிறுவனம், அந்த ரூட்டுக்கு என்று வருவாய் நிர்ணயித்து அரசுக்கு கொடுக்கும். அது தான் Gross Cost (for that route). அதன் அடிப்படையில் அந்த ரூட்டில் தனியார் பேருந்தை இயக்குவார்கள்.

நிர்ணயித்த தொகையை விட அதிக வருவாய் வந்தால் அது அந்த தனியாருக்கு கிடைக்கும் லாபம். ஒருவேளை நிர்ணயித்த தொகையை விட குறைவாக வந்தால் எவ்வளவு குறைந்தது என பார்த்து அந்த இழப்பை அரசு ஈடு செய்யும்.

எப்படி பார்த்தாலும் தனியாருக்கு நஷ்டம் இல்லை.

சரி இதனால் என்ன பாதிப்பு வரும்?

அரசு தனக்கு என்று பேருந்துகளை சொந்தமாக வாங்க தேவை இல்லை. தனியாரின் பேருந்துகள் இயங்க அனுமதி கொடுத்தால் போதும். ஓட்டுநர் கூட அவர்களே பார்த்து கொள்வார்கள். காலப் போக்கில் அரசு பேருந்துகள் அரசு ஓட்டுனர்கள் வாய்ப்பு இழப்பார்கள். அல்லது தனியார் நிறுவனம் நோக்கி செல்ல வேண்டி இருக்கும். இது பணி பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்படுத்தும்.

நிர்ணயம் செய்யப்படும் Gross Cost எப்படி அளவிடப் போகிறார்கள் என்பது அடுத்த கவலை. புறநகர் பேருந்துகள் போல அல்லாமல் நகர பேருந்துகளின் பயண பயன்பாடு வேறுபாடானது. அதிலும் சென்னை நகர பேருந்துகளை வருவாய் அடிப்படையில் வகைப்படுத்துவது சிரமம். ஒவ்வொரு ரூட்டும் ஒவ்வொரு வகையான வருவாய் கொண்டவை.

எனவே தனியார் நிறுவனம் கூடுமான வரை குறைவான தொகைக்கே நிர்ணயம் செய்ய எத்தனிக்கும். அப்படி நிர்ணயம் செய்யும் தொகையை விட அதிக வருவாய் வருவது அவர்களுக்கு லாபம். குறைந்தாலும் அரசு கொடுத்து விடும். இழப்பும் நஷ்டமும் அரசுக்கு தான். அதாவது மக்களின் வரி பணத்துக்கு.

Gross Cost சரியாக நிர்ணயம் செய்யப்பட்டாலும், தினசரி வருவாயை எப்படி கணக்கிடுவார்கள் என்பது அடுத்த கவலை. மாணவர், மகளிர், முதியோர் சலுகைகள் எல்லாம் அரசு திருப்பி கொடுக்கும் என்பதால் அதன் கணக்கும், நார்மல் பயணிகள் வருவாய் கணக்கும் எப்படி கண்காணிக்க போகிறார்கள் என்பது பெரிய சவால் தான்.

சுருக்கமாக சொல்வதானால், அரசின் வழித்தடத்தில் அரசின் பெர்மிட்டில், தனியாரை பேருந்து இயக்க வைத்து அவர்கள் சொல்லும் தொகையை அரசு கொடுக்கும். அதை விட கூடுதல் வந்தால் தனியாருக்கு.

இது கிட்டத்தட்ட அரசின் விமான நிலையங்களை பராமரிக்கும் பணி என ஒரு குறிப்பிட்ட தனியாருக்கு கொடுத்து, அதற்காக நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் சில காலத்துக்கு பிறகு அந்த தனியாரால் உயர்த்தப்பட்டு முழு விமான நிலையமும் அவர்கள் கட்டுப்பாட்டுக்கு போன கதை போல ஆகக்கூடும் என்பதே பலரது அச்சம்.

வருவாய் குறைவான வழித்தடத்தில் அரசு இயக்கும். தனியார் இயக்குவார்களா என்பது சந்தேகமே. மக்களின் போக்குவரத்து வசதி அதனால் பாதிக்கப்படும். தமிழ்நாடு போராடி அரசூடைமை ஆக்கிய போக்குவரத்து சேவை அர்த்தம் இல்லாதது ஆகிவிடும் என்பதே பலரது கவலை.

நாளடைவில், அரசு சார்பில் புதிய பேருந்துகள் வாங்காமல் தனியார் மூலம் இயக்கப்பட்டு வருகையில் காலாவதி ஆகும் (FC expired) அரசு பேருந்துகளுக்கு கூட தனியார் பேருந்துகளை ஈடு செய்து வந்தால் (Substitute) அரசு போக்குவரத்து கழகம் மெல்ல மெல்ல கரைந்து போய்விடக் கூடும்.

இதை விட அரசே பேருந்துகளை வாங்கி அரசே இயக்குவது நல்லது. 


கலைஞர் மினி பஸ் திட்டத்தை கொண்டு வந்தபோது கூட அவர்களுக்கு என்று தனி பெர்மிட் தான் கொடுத்தார். தனியார் பேருந்துகள் மாநிலம் முழுவதும் இயக்க அனுமதி கொடுத்தாலும் சென்னையில் மட்டும் மினி பஸ் சேவையை அரசே நடததியது.

எந்த சூழலிலும் அரசின் பெர்மிட்டை தனியார் பயன்படுத்த தமிழ்நாடு இதுவரை அனுமதித்தது இல்லை. தனியாருக்கு தனி பெர்மிட் அரசுக்கு தனி பெர்மிட். அவரவர் பெர்மிட்டில் அவரவர் இயக்கி கொள்வது தான் நல்லது.

சென்னை போன்ற நகரங்களில் பேருந்துகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. காரணம் MRTS, EMU போன்ற ரயில் சேவைகளும், Metro சேவையும், சொந்த கார் பைக் எண்ணிக்கை அதிகரிப்பும், நிறுவனஙகள் பள்ளி கல்லூரி போன்றவை தங்களுக்கு என்று பேருந்துகளை இயக்குவதும் என பல காரணங்கள்.

இந்நிலையில் தனியாருக்கு 1,000 வழித்தடம் கொடுத்து அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடுகட்டும் என்பது போன்ற திட்டஙகள் சரியானது தானா என்பது யோசிக்க வேண்டிய ஒன்று.

நாட்டில் முன்மாதிரி போக்குவரத்து கழகங்கள் தமிழ் நாட்டின் சிறப்பு. அந்த சிறப்பு தொடர வேண்டும். அவை தனியார் மயம் ஆக்கப்படக்கூடாது என்பது தான் எல்லோரும் விரும்பும் நிலைப்பாடு.

அரசு எந்த தனியாரின் நலன் கருதி இந்த திட்டத்தை கொண்டு வந்தது என தெரியாது. ஆனால் அதை கைவிட்டு கலைஞர் வழியில் மக்களின் நலன் கருதி திட்டத்தை மாற்றம் செய்வது நல்லது.

****

பார்வை:

1. செய்தி 

2 டெண்டர்
Tuesday, November 8, 2022

EWS வழக்கு தீர்ப்பு

டந்த 2019 ஆம் ஆண்டு, ஒன்றிய அரசு, முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது.

பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆம் ஆத்மி, என பல கட்சிகளும் இந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்து இருந்தார்கள். தமிழ்நாட்டில் இருந்து அதிமுக இந்த சட்டத்தை ஆதரித்தது. திமுக இந்த சட்டத்தை எதிர்த்து வாக்களித்தது.

Economically Weaker Section எனும் EWS சட்டம் சமூக நீதிக்கு எதிரானது என பல எதிர்ப்புகள் வந்து, இந்த சட்டத்தை எதிர்த்து வழக்குகளும் தாக்கல் செய்யப் பட்டன.

இந்த சட்டத்தின் படி ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கு கீழே உள்ள முற்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு பெற தகுதி பெறுவார்கள். வேறு எந்த இட ஒதுக்கீட்டிலும் வராதஅ சமூகத்தினருக்கு மட்டுமே இது பொருந்தும்.

சுருக்கமாக சொன்னால் முற்பட்ட அல்லது சமூக ரீதியாக முன்னேறிய வகுப்பினரில் உள்ள பொருளாதார நலிவடைந்த மக்கள்.

ஆனால் ஆண்டு வருமானம் ₹8 லட்சம் வாங்கும் ஒருவர் எப்படி பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவில் வர முடியும்? என்கிற கேள்விக்கு இது வரை விடை இல்லை.

பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு கொடுக்க இந்திய அரசியல் சாசனத்தில் வழி இல்லை. சமூக ரீதியாக கல்வி ரீதியாக பின் தங்கியுள்ள மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் என இந்திய அரசியல் சாசனம் கூறுகிறது. எனில், இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு சட்டம் செல்லுமா என்பதும் மற்றொரு கேள்வி.

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில், மொத்த இட ஒதுக்கீடு என்பது 50% க்கு கூடுதலாக கொடுக்க முடியாது என சொல்லி இருக்கிறது. ஏற்கனவே 22.50% தாழ்த்தப்பட்ட பழஙகுடி மக்களுக்கும் 27% இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ஒதுக்கீடு கொடுத்து மொத்தம் 49.50% ஒதுக்கீடு கொடுத்து விட்டதால் இதற்கு மேல் கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை. எனில் இப்போது கூடுதலாக 10% இட ஒதுக்கீடு எப்படி கொடுக்க முடியும்? என்பதும் கேள்வியே. 

(இந்த 50% இட ஒதுக்கீடு உச்ச வரம்பு என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் பொருந்தாது. தமிழ் நாட்டை பொறுத்தவரை 69% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டம் அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்கப்பட்டு இருப்பதால் சட்ட ரீதியான பாதுகாப்பும் இருக்கிறது. எனவே தமிழ்நாட்டு இட ஒதுக்கீடு கொள்கைக்கு இந்த 50% உச்ச வரம்பு எல்லாம் இல்லை)

இப்படியான பல்வேறு கேள்விகளை உள்ளடக்கிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சமூக நீதிக்கான போராட்டத்தை எப்போதும் முன்னெடுத்து செல்லும் இயக்கமான திமுக இந்த வழக்கில் தொடர்ந்து ஆணித் தரமான வாதஙகளை எடுத்து வைத்து, EWS ஒதுக்கீடு எந்த அளவுக்கு சட்டத்தின் பார்வையில் தவறானது என விரிவாக வாதாடியது.

இந்த வழக்கில் நேற்று வந்த தீர்ப்பு, இந்த வழக்குக்கான தீர்வாக அமையாமல் மேலும் பல வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டிய சூழலுக்கு எல்லோரையும் தள்ளும் அளவுக்கு புதிய குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஐந்து நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வந்தது. அதில் நீதியரசர்கள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பார்டிவாலா ஆகிய மூன்று நீதிபதிகள் EWS ஒதுக்கீடு செல்லும் என்றும், நீதியரசர்கள் ரவீந்திர பட், யூ. யூ.லலித் ஆகிய இரண்டு நீதிபதிகள் EWS ஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பு அளித்து உள்ளனர்.

இது தவிர நேற்றைய தீர்ப்பு இன்னும் பல விஷயங்களையும் குறிப்பிடுகிறது. அதாவது மிக நீண்ட காலத்துக்கு இட ஒதுக்கீடு தொடர முடியாது என்றும், விரைவில் இட ஒதுக்கீடு முறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும், எல்லா வகுப்பினருக்கும் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு கொடுக்க ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு சொல்கிறது.

பொருளாதாரம் என்பது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடக் கூடியது. இன்றைக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் நாளையே கல்வி கற்று நல்ல வேலை நல்ல பதவி பெற்று பொருளாதார ரீதியாக முன்னேறி விட முடியும். ஆனால் சமூக ரீதியான ஒடுக்குமுறை என்பது எவ்வளவு பணம் செல்வாக்கு இருந்தாலும் மாறவே மாறாது. எவ்வளவு உயர் பதவியை அடைந்தாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு எல்லோரையும் போல சமமான உரிமைகள் கிடைப்பது இல்லை. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.

எனவே பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பதே அடிப்படையில் தவறான முடிவு.

ஆனால், பெரும்பான்மை அடிப்படையில் மூன்று நீதிபதிகளின் கருத்துப் படி, இப்போதைக்கு EWS ஒதுக்கீடு செல்லும் எனபது தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தரும் செய்தி. எனவே இப்போதைக்கு EWS ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

EWS ஒதுக்கீடு செல்லும் என மூன்று நீதிபதிகள் எந்த அடிப்படையில் சொன்னார்கள் என்பது தான் ஆச்சர்யம்.ஏற்கனவே சொன்னது போல இந்திய அரசியல் சாசனம் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு கொடுக்க வழி வகுக்கவே இல்லை எனும் போது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் எடுக்க முடியுமா என்கிற புதிய கேள்வி இப்போது எழுகிறது.

எனவே, இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டு அரசியல் சாசன பெஞ்ச் முன் விவாதிக்கப்படும் என்று நான் நினைக்கிறேன்.

அரசியல் சாசன சட்ட விதிகளில் இல்லாத ஒரு விதியை நீதிபதிகள் உருவாக்க முடியுமா? 50% ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக ஒதுக்கீடு கொடுக்க முடியுமா? சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நீதியை மறுக்க முடியுமா? என்பன போன்ற ஆக்கப்பூர்வமான விவாதஙகளை இனி எதிர்பார்க்கலாம்.

1990 களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு அமல் செய்யப்பட்ட உடனே நம்முடைய மிகப்பெரிய போராட்டம் வெற்றி பெற்று விட்டதாக கருதி ஓய்வெடுக்க தொடங்கி விட்டதாக ஒரு உணர்வு மேலிடுகிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீடு எதற்காக தேவை என்பதே புரியவில்லை. EWS ஒதுக்கீடு காரணமாக பாதிக்கப்படும் மக்கள் யார் என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. அரசியல் ரீதியாக தாங்கள் சார்ந்த கட்சியின் நிலைப்பாட்டை மட்டுமே ஆதரித்து வரும் மக்களாக அவர்கள் மாறிப் போயிருக்கும் நிலையில், நம்முடைய முதல் கட்ட நடவடிக்கை இட ஒதுக்கீடு குறித்த சரியான புரிதல்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டியதாக இருக்க வேண்டும். அதற்காக, சமூக நீதிக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

நேற்றைய தினம் மாண்புமிகு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான திரு. ஸ்டாலின் அவர்கள் இந்த தீர்ப்பு குறித்து வெளியிட்ட அறிக்கை கூட அதை தான் சொல்லி இருக்கிறது. 

சமூக ரீதியான விளக்க கூட்டஙகள், அரசியல் ரீதியான காய் நகர்த்தல்கள் ஆகியவற்றுடன் சட்ட ரீதியான போராட்டமும் ஒருங்கிணைந்து தான் கால காலமாக ஒடுக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கான நீதியை பெற்று தர முடியும்.

நேற்றைய தீர்ப்பை எதிர்த்து விரைவில் மேல் முறையீடு செய்யப்படும் என நம்புகிறேன். இதுவரை அரசியல் சாசன பெஞ்ச் அரசியல் சாசனத்திற்கு எதிராக எந்த நிலைப்பாடும் எடுத்தது இல்லை என்பதால் அங்கே இந்த சமூக நீதி போராட்டத்துக்கு சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறேன்.Monday, October 24, 2022

தீபாவளி கொண்டாட்டம்

ல்லா சிறுவர்களை போலவே எனது பால்யமும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் கலந்தே கழிந்ததால் பண்டிகைகளை பல நேரங்களில் நான் சிறப்பாக எல்லாம் கொண்டாடியது இல்லை.

எனினும், எல்லோரையும் போலவே எனக்கும் தீபாவளி பண்டிகை என்பது கொஞ்சம் சிறப்பு வாய்ந்தது தான்.

எந்த பண்டிகை கொண்டாடாமல் போனாலும், தீபாவளிக்கு எப்படியாவது புது துணி, பட்டாசு, பலகாரம் கிடைத்து விடும். வருஷம் தவறாமல் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றால் அது என்னளவில் தீபாவளி தான்.உறவுகள் என்று எல்லாம் அப்போது பெரிதாக யாரும் கண்டு கொள்வது இல்லை என்பதால், உறவினர் வீடு விஜயம், கூடி கொண்டாடுதல் போன்றவை எதுவும் இருந்தது இல்லை. ஆனாலும் எப்படியாவது தீபாவளிக்காக புது துணி கடைசி நேரத்திலாவது எடுத்து பண்டிகையை நண்பர்களுடன் கொண்டாடுவது தடைபட்டது இல்லை.

முக்கியமான விஷயம், தீபாவளிக்கு கண்டிப்பாக புதுப்படம் பார்த்தே ஆக வேண்டும் என்பது. தீபாவளி ரிலீஸ் படங்களை தீபாவளி அன்றே பார்க்கும் வழக்கம் அப்போது இருந்தது.

குணா, தளபதி இரண்டும் ஒரே நாளில் பேக் டூ பேக் பார்த்த பரவச நினைவுகள் எல்லாம் இப்போதும் பசுமையாக இருக்கிறது.

வளர்ந்து எப்படியோ தட்டு தடுமாறி படித்து முடித்து வேலைக்கு போக ஆரம்பித்து சுயமாக சம்பாதிக்க தொடங்கிய காலத்தில் மெல்ல மெல்ல இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் குறைந்து போய் விட்டது.

அதிகமாக புத்தகஙகள் படிக்க ஆரம்பித்ததும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். புத்தகம் வாசித்தல், சிந்தித்தல்,  சுயமரியாதை, பகுத்தறிவு போன்றவை இது போன்ற பண்டிகைகள் பற்றி நமக்குள்ளேயே கேள்விகளை எழுப்ப தொடங்கி விடும். அவற்றுக்கான சரியான, நம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கங்கள் கிடைக்கும் வரையும் அந்த கேள்விகள் உறுத்திக் கொண்டே தான் இருக்கும்.

அந்த கேள்விகளுக்கு உரிய பதில்கள் கிடைக்காததாலோ என்னவோ மெல்ல மெல்ல தீபாவளி பண்டிகை மீதான ஆர்வம் எனக்கு குறைய தொடங்கி விட்டது.

அப்படியான கேள்விகள் நமக்கு அமையும் ஆசிரியரை பொறுத்தும் அமையலாம். 

என் பள்ளிக் காலங்களில் தீபாவளி பண்டிகையின் வரலாறு குறித்து என் ஆசிரியர்களில் ஒருவர் சுருக்கமாக சொன்னது இங்கே பலரும் விளக்கமாக இப்போது பல நண்பர்கள் இணையத்தில் விரிவாக எழுதுவதை பார்க்கையில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.

தீபாவளி பண்டிகை வட மாநிலங்களில் சந்தோஷமான பண்டிகையாகவும், தமிழ் நாட்டில் முன்னோர்/நீத்தோர் வழிபாடாகவும் கொண்டாடப்படும் வித்தியாசம் எதனால்? என என் சக மாணவர் ஒருவர் அப்போது கேள்வி எழுப்பினார்.

இது குறித்து எனது ஆசிரியர் சொன்ன காரணங்களில் ஒன்று.. "நரகாசுரன் என சொல்லப்படும் அசுரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்பவர் தென்னாட்டு கடைநிலை மக்கள் என்பதை போன்ற புனைவுகள் தான் புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.இறைவனின் பிரியத்துக்குரிய உயர் வகுப்பு தேவர்கள் யாகம் செய்வதற்கு நரகாசுரன் இடையூறாக இருப்பதாக கிருஷ்ணரிடம் தேவர்கள் புகார் சொல்ல அவர்களுக்காக நரகாசுரனை பகவான் கிருஷ்ணன் வெற்றி கொள்கிறார். அந்த வெற்றியை கொண்டாடும் பண்டிகையாக வட மாநில மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

அசுரர்கள் என குறிப்பிடப்படும் மக்களாகிய நாம், தோல்வி உற்ற காரணத்தால் நீத்தார் வழிபாடாக முன்னோர் வழிபாடாக இந்த நாளை கொண்டாடுகிறோம். அதனால் தான் தீபாவளி அன்று உச்சந்தலையில் நல்லெண்ணெய் வைத்து குளிப்பது (பெல குளி போல), முன்னோருக்கு படையல் வைப்பது போன்ற சடஙகுகள் நாம் செய்கிறோம். காரணம் இது நம் முன்னோர்கள் இழந்த நாள். அதனால் இதில் நாம் மகிழ்ச்சியாக கொண்டாட எதுவும் இல்லை" என சொல்வார் ஆசிரியர்.

இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் கூட இது என் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் சென்று தங்கிக் கொண்டது. 

எனது ஆசிரியர் அப்போத  சொண்ணதைப் போன்ற கருத்துக்களைக் கொண்ட பல பதிவுகள் இங்கே சமீப காலமாக இணையத்தில் காணக் கிடைக்கிறது. 

நான் ஏற்கனவே சொன்னதை போல, சம்பாதிக்க தொடங்கிய பிறகான பொறுப்புகள், கடமைகள் ஆகியவற்றின் பின்னால் ஓடிக் கொண்டு இருக்கையில் கொண்டாட்டங்கள் குறைந்து போக தொடங்கியதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. 

எந்த குழப்பமும் இல்லாத பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாட எந்த தயக்கமும் வந்தது இல்லை. ஆனால், விடை தெரியாத கேள்விகள் வேறு உள்ளுக்குள் உட்கார்ந்து கொண்டு இருந்ததால் தீபாவளிக்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பதை மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டேன்.

சில வருடங்கள் இப்படி போக, சிவகாசி பட்டாசு ஆலை விபத்து ஒன்று 2000 களின் துவக்கத்தில் நிகழ்ந்து பல குழந்தை தொழிலாளர்கள் உயிரிழந்த செய்திக்கு பின் பட்டாசு வாங்குவது குறைந்து, பண்டிகை ஆர்வமே இல்லாத போது புது துணி எதுக்கு என அதுவும் நின்று, நாம் தோற்ற நிகழ்வுக்கு வாழ்த்து எதற்கு என வாழ்த்து அட்டை அனுப்புவதற்கும் மனமின்றி நிறுத்தி.. சில ஆண்டுகள் இப்படியே கழிந்தது.

ஆனால், வாழ்க்கை ஒரு வட்டம் ஆயிற்றே.

மீண்டும் குடும்பம், புதிய உறவுகள், சம்பாத்தியம், விட்டு போன உறவுகள் என எல்லாம் சேர சேர.. நாமும் ஊருடன் சேர்ந்து வாழ தயார் ஆகி தீபாவளி கொண்டாடும், புது துணி எடுக்கும், குழந்தைக்காக பட்டாசு வாங்கும், இனி பிரிந்து போய் விடாமல் தக்கவைத்து கொள்வதற்காக தேடி தேடி போய் உறவுகளுடன் ஒன்று சேர்ந்து கொண்டாடும் ஒரு பெரும் நிகழ்வாக தீபாவளி என் வாழ்வில் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது.

வாழ்க்கையில் நமது கொள்கைகளை விடவும் மேலானதாக ஆகி விடுகிறது குடும்பத்திற்கான சில சடஙகுகள்.

அப்படி ஒரு சடங்காக, சம்பிரதாயமான நிகழ்வாக, இன்றைக்கும் கழிந்து போய் கொண்டு இருக்கிறது இந்த தீபாவளி. 

இனி என்றைக்கும்.. 


Monday, August 22, 2022

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்

ர்ச்சகர்கள் வழக்கில் இன்று திமுக அரசின் முடிவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து உள்ளது.

பிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்கிற நிலையை மாற்றி, பிராமணர் அல்லாத ஹிந்துக்கள் எல்லோரும் முறையாக வேதாகமம் படித்தால் அர்ச்சகர் ஆகலாம் என்பதை திமுகவின் சட்டம் உறுதி செய்து உள்ளது.

அந்த சட்டத்தை எதிர்த்து பிராமணர்கள் தாக்கல் செய்த வழக்கில் தான் இன்றைக்கு திமுக அரசின் சட்டம் செல்லும் என தீர்ப்பு ஆகி இருக்கிறது.இந்துக்களாய் ஒன்றிணைவோம் என தேர்தலுக்காக மட்டும் பேசும் பாஜக போல அல்லாமல், உண்மையிலேயே இந்துக்களாக ஒன்றிணைத்து உள்ளது திமுக.

பிராமணர்கள், பிராமணர் அல்லாதோர் என ஹிந்துக்களை இரண்டாக பிரித்து வைத்து பாகுபாடு பார்த்து பதவி கொடுத்த நிலையை மாற்றி எல்லா ஹிந்துக்களும் ஹிந்துக்களே எனும் ஒற்றை புள்ளியில் கொண்டு வந்து எல்லோரையும் சமமாக பாவித்து பதவி கொடுக்க திமுகவின் புதிய சட்டம் வழி செய்கிறது.

ஹிந்துவாக இருந்தும் இறைவனுக்கு சேவை செய்ய முடியவில்லையே என வருந்திய பிராமணர் அல்லாத ஹிந்துக்களுக்கு அந்த வாய்ப்பை அந்த உரிமையை இன்றைக்கு பெற்றுக் கொடுத்து இருக்கிறது திமுக.

இந்துக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டிய பாராட்டத்தக்க செயல் இது என்பதில் சந்தேகம் இல்லை.நமக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அப்படி நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஏற்படும் உரிமை பிரச்சனைகளில் கூட திமுக பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக நின்று அவர்களுக்கான உரிமை கிடைக்க எப்போதும் போராடும் என்பதற்கு இன்றைய தீர்ப்பு இன்னும் ஒரு சான்று

ஒடுக்கப்பட்டவர்களின் குரல் திமுக 🙏🙏

Sunday, August 14, 2022

வீட்டு வாடகைக்கு GST - விளக்கங்கள்

நடந்து முடிந்த GST கவுண்சில் கூட்டத்தில் நிறுவனஙகள் வாடகைக்கு எடுக்கும் வீடுகளுக்கும் இனி GST வரி செலுத்த வேண்டும் என முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிறுவனஙகள் எதற்காக வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும்?உதாரணமாக அரியலூர் பெரம்பலூர் போன்ற பகுதிகளில் ஒரு தொழிற்சாலை இருக்கிறது என வைத்து கொள்வோம். அந்த தொழிற்சாலைக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள், அதிகாரிகள், பொருட்கள் வழங்கும் நிறுவனததினர், சேவை வழங்கும் நிறுவனத்தினர், புதிய ஆர்டர்கள் வாங்க வருவோர் என பலரும் தொழில் நிமித்தமாக வந்து செல்வார்கள்.

திருச்சியில் தங்கி அங்கே வந்து செல்ல சிரமப்படுவதை தவிர்க்க தொழிற்சாலை நிர்வாகம் அந்த ஊரிலேயே சகல வசதிகளும் கொண்ட ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும். 

தொழில் நிமித்தமாக தொழிற்சாலைக்கு வருவோர் ஒன்றிரண்டு நாட்கள் தங்கி செல்ல அந்த வீடு பயன்படும். 

அந்த தொழிற்சாலையின் தலைமை அலுவலகம் டெல்லியில் இருக்கிறது என வைத்து கொள்வோம். அங்கிருந்து இதே நிறுவனத்தின் அதிகாரிகள் தொழிற்சாலையில் மீட்டிங், ரிவியூ போன்றவற்றுக்கு வரும் போதும் அந்த வீட்டை பயன் படுத்தி கொள்வார்கள்.

இது ஒரு உதாரணமாக சொன்னது தான்.

டெல்லி மும்பை சென்னை பெங்களூரு ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் தலைமை அலுவலகம் கொண்ட நிறுவனஙகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தங்கள் நிறுவன ஊழியர்கள் அதிகாரிகள் தங்க அங்கே பல வீடுகளை வாடகைக்கு எடுத்து வைக்கும்.

ஒரு சில பெரிய நிறுவனஙகள் தங்கள் நிறுவன இயக்குநர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் போன்றவர்களுக்கு தங்குமிடம் கொடுப்பது வழக்கம். கம்பெனி செலவில் வீட்டு வசதி கொடுப்பது.. குறிப்பாக அந்த அதிகாரிகள் வெளியூர் ஆட்களாக இருந்து இந்த வேலைக்காக இந்த ஊருக்கு வரவேண்டும் என்று இருந்தால்.. அவர்களை போன்றவர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது நிறுவனஙகள் வழக்கமாக செய்வது தான்.

இப்படியாக தொழில் நிமித்தமாக கெஸ்ட் ஹவுஸ், transit accommodation, employee accommodation என பல காரணங்களுக்காக வீடு வாடகைக்கு எடுப்பது உண்டு.

அவ்வாறு எடுக்கப்படும் வாடகை வீடுகளுக்கு இனி GST வரி உண்டு என்பது தான் GST கவுண்சில் எடுத்து இருக்கும் முடிவு.

ஒரு நிறுவனம் தனது தொழில் சார்ந்து வாடகைக்கு எடுக்கும் அலுவலகம், தொழிற்சாலை, கடை, வணிக வளாகம் போன்றவற்றுக்கு எப்படி வரி கட்டுகிறதோ அதே போல தொழில் நிமித்தமாக எடுக்கும் வீடுகளுக்கும் வரி கட்ட வேண்டும் என்பது சரியான முடிவு தான்.

இந்த வரியை கூட வீட்டு உரிமையாளர் செலுத்த தேவை இல்லை. 

வாடகைக்கு வீடு எடுக்கும் நிறுவனமே Reverse Charge Mechanism (RCM) முறையில் இந்த GST வரியை கட்டி விடும்.

அப்படி கட்டிய வரியை Input Tax Credit ஆக மீண்டும் அந்த நிறுவனங்களே எடுத்துக் கொள்ளும். தொழில் நிமித்தமாக எடுத்த வீடு என்பதால் ITC கு தடை இல்லை.

இதனால் அரசுக்கு ஒரு பைசா வருமானமும் இல்லை. நிறுவனஙகளுக்கு ஒரு பைசா நஷ்டமும் இல்லை.

யார் யாருக்கு வாடகையாக எவ்வளவு தொகை ஒரு ஆண்டில் கொடுக்கப் படுகிறது. அப்படி வாடகையாக வாங்கும் வருவாயை வீட்டு உரிமையாளர் தனது வருமான வரி விவரஙகளில் முறையாக காட்டி இருக்கிறாரா போன்ற தகவல்களை ஆராய இந்த புதிய நடைமுறை உதவும்.

இதன் மூலம் இது வரை இருந்த வருமான வரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்படும்.

இந்த செய்தியின் உண்மை தன்மை புரியாமல் இனி வாடகை வீடுகளுக்கு எல்லாம் GST வரி விதிக்கப்பட்டு உள்ளது என ஒரு தவறான செய்தி இணைய தளங்களில் சுற்றிக் கொண்டு இருக்கிறது.

தனி நபர் தனது குடும்பத்துக்காக எடுக்கும் வாடகை வீட்டுக்கு GST கிடையாது.

நிறுவனஙகள் தங்கள் தொழில் தேவைக்காக எடுக்கும் வாடகை வீட்டுக்கு மட்டுமே GST வரி விதிக்கப்படும்.

அந்த வரியை நிறுவனஙகள் செலுத்தி திரும்ப எடுத்துக் கொள்ளும்.

யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லாத வெறும் declaration process தான் இது.

நன்றி
Printfriendly