Saturday, April 22, 2023

வேலை நேர சட்ட திருத்தம்

தமிழ்நாடு அரசு நேற்று சட்டமன்றத்தில் விவாதம் எதுவும் இல்லால் 17 சட்ட முன்வடிவுகளை தாக்கல் செய்தது.

அதில் ஒன்றாகதொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான பணி நேரத்தை உயர்த்தி ஒரு சட்ட திருத்தம் Factories Act இல் கொண்டு வந்து உள்ளது. 



இந்த சட்டத்திருத்தம், ஒரு நாளுக்கு இப்போது இருக்கும் 8 மணி நேர வேலை என்பதில் இருந்து 12 மணி நேரம் ஆக இயல்பான வேலை நேரத்தை உயர்த்திக் கொள்ள வழி வகை செய்கிறது.

இது எதற்காக கொண்டு வரப்பட்டது யாருக்காக கொண்டு வரப்பட்டது என்பது எல்லாம் தெரியவில்லை. ஆனால் காரணம் என்னவாக இருந்தாலும் இது சரியானது அல்ல.

இளைஞர்களின் வேலை வாய்ப்பை குறைக்கும், வேலை செய்வோரை மேலும் மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும் இந்த சட்டம், இன்னும் ஒரு வாரத்தில் மேதினம் கொண்டாட இருக்கும் நேரத்தில் வந்து இருப்பது ஆச்சர்யம் தான். 

அதற்காக மே தினம் முடிந்த பிறகு கொண்டு வந்தால் ஓகேவா என சிலர் கிண்டல் செய்ய கூடும்.

மே தினம் எதற்காக கொண்டாடப் படுகிறது என்கிற அடிப்படை விஷயம் தெரிந்த யாரும் இந்த சட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒரு மனிதனுக்கு இயல்பாக தேவைப்படும் ஓய்வை கொடுக்க வேண்டும் என்பதற்காக 8 மணி நேர உழைப்பு, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பதனை உறுதி செய்வதற்காக போராடி பெற்ற உரிமை தான் இந்த மே தின கொண்டாட்டத்தின் அடிப்படை. 

நேற்று சட்டமன்றத்தில் இந்த சட்டம் அறிமுகம் ஆனபோது எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சியினருக்கு வாழ்த்துக்கள்.

இந்த சட்ட திருத்தம் முழுக்க முழுக்க உற்பத்தி துறை சார்ந்த Factories Act உட்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது 50 பேருக்கு மேல் பணி செய்யும் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அப்படியான தொழிற்சாலைகளில் இயல்பான வேலை நேரம் 8 மணி நேரம் என்றாலும் கூட, விதிவிலக்காக வேலை அவசரம், அல்லது வேலை எதிர்பார்த்த நேரத்தில் முடியவில்லை போன்ற தருணங்களில் கூடுதல் நேரம் (Over Time) வேலை செய்ய வைக்கலாம் என Factories Act ஏற்கனவே வழி வகை செய்து உள்ளது.

அப்படியான Over Time நேரத்தில் இயல்பான நேரத்துக்கு கொடுக்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்கிற சட்டம் ஏற்கனவே உள்ளது.

இப்போது, இயல்பான வேலை நேரமே 12 மணி நேரம் வரை வைத்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு சட்ட திருத்தம் சொல்வதால், Over Time என்று தனியாக கூடுதல் சம்பளம் கொடுத்து வேலை செய்ய வைக்க வெண்டியது இல்லை. இயல்பான சம்பளத்தில் 12 மணி நேரம் வரை வேலை செய்ய வைக்கலாம்.

எப்போதேனும் Over Time என்று அல்லாமல் தினசரி கூட இனி 12 மணி நேரம் வேலை வைக்க முடியும்.

நிச்சயமாக இது உற்பத்தியை அதிகரிக்க செய்யும் தான். ஆனால் அதே அளவு நிச்சயம் தொழிலாளர்களின் உடல்நிலை மன நிலையையும் பாதிக்கும் என்பதும்.

ஒரே நாளில் 17 சட்ட மசோதாக்கள் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டு உள்ளதன் பின்னணி எதுவாக இருந்தாலும் ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அதை ஆதரிக்க மாட்டார்கள். போலவே அதில் ஒன்றான இந்த வேலை நேர சட்ட திருத்தத்தை தொழிலாளர் நலன் மீது அக்கறை கொண்ட யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

இரண்டு வருஷம் முன்பு இதே போன்ற சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வர முனைந்த போது அதை கடுமையாக எதிர்த்த கழகம் இப்போது அதே சட்டத்தை கொண்டு வந்து இருப்பது வருத்தமானது.

அப்போது இந்த சட்டத்தை எதிர்த்து திமுக சொன்ன விஷயங்கள் எதுவும் இப்போது மாறிவிடவில்லை தானே?



தொழிலாளர் விருப்பப்பட்டால் மட்டுமே இந்த பணி நேரத்தை தொழிற்சாலைகள் அமல் செய்ய முடியும் என அமைச்சர் சொல்லி இருக்கிறார். தினசரி எல்லா தொழிற்சாலைகளும் என்ன செய்கின்றன என அரசு கண்காணிப்பது சாத்தியம் இல்லை.

Inspector of Factories (தொழிற்சாலை ஆய்வாளர்) இதை தினசரி செய்யவும் முடியாது. தொழிற்சாலை அவரை "ஒப்புக்கொள்ள வைக்க" எதையும் செய்யும். ஊழலுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கும் சட்ட திருத்தம் இது.

மேலும், தொழிலாளர் விருப்பம் என்று ஒன்று ஒருபோதும் இருந்தது இல்லை. தொழிற்சாலை பணித்தால் தொழிலாளர்கள் அதை செய்து தான் ஆக வேண்டி இருக்கும். அப்படி செய்யாத தொழிலாளர்களுக்கு பதில் மாற்று தொழிலாளர்களை வைக்க தொழிற்சாலைகள் தயஙகாது. எப்படி பார்த்தாலும் பாதிக்கப்பட போவது தொழிலாளர்கள் தான்.

இந்த சட்ட திருத்தத்தின் சாதக பாதகஙகளை பற்றி ஆராய உயர் மட்ட குழு அமைக்கப் போவதாக அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.

எதிர்ப்பு வந்தால் மறு பரிசீலனை என்பதை விட சட்டம் கொண்டு வரும் முன்பு தொழிற் சங்கங்களை ஆலோசித்து கொண்டு வருவது தான் இது வரை ஜனநாயகமாக இருந்தது.

உயர்மட்ட குழு எல்லாம் சட்ட முன்வரைவு நேரத்திலேயே இருந்து இருக்க வேண்டும். அதை மசோதாவாக தாக்கல் செய்த பிறகு உயர்மட்ட குழு அமைப்பது சரியல்ல.

அரசு இது தொடர்பாக தொழிற்சங்கங்களை அழைத்து பேசி அவர்கள் கருத்தையும் கேட்டு முடிவு செய்து இருக்கலாம். குறைந்த பட்சம் திமுகவின் தொழிற்சங்கம் LPF கருத்தையாவது கேட்டு இருக்கலாம். LPF எல்லா சூழலிலும் தொழிலாளர் பக்கமே நின்ற வரலாறு உண்டு. தவறை தவறு என தயஙகாமல் சொல்லும் துணிவும் உண்டு.

டிரைவர்கள், டீச்சர், மருத்துவர், கட்டிட வேலை செய்வோர், டெக்ஸ்டைல், கணினி துறை, கடைகள், சூப்பர் மார்க்கெட், ஹோட்டல் போன்ற பல துறைகளில் ஏற்கனவே தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்கிறார்களே என்பது போன்ற பொருந்தாத ஒப்பீடுகள் கொண்டு வந்து இந்த சட்ட திருத்தத்தை ஆதரித்து பேசுவோர் எவரும் இந்த துறைகள் எல்லாம் Factories Act இல் வராத துறைகள் என புறியாதவற்களாக தான் இருக்க கூடும். அவர்களின பிரச்சாரத்தை எல்லாம் புறக்கணித்து விட்டு அரசு இந்த சட்ட திருத்தத்தின் உண்மையான பாதிப்பை அனுபவிக்க போகும் தொழிற்சாலை தொழிலாளர்களின் கருத்துக்களை கேட்டு நல்ல முடிவினை எடுத்தால் நல்லது.




No comments:

Post a Comment

Printfriendly