இப்போது சமீப காலமாக மீண்டும் ஓங்கி உயர்ந்து ஒலிக்க தொடங்கியிருக்கு மரணதண்டனை
பற்றிய பெரும் விவாதம்! மரண தண்டனையே கூடாதுன்னு சிலரும், அது தவறில்லைன்னு சிலரும்
பல பல பாய்ண்டுகளா அள்ளி வீசிட்டு இருக்காங்க! இதில் என் கருத்து என்னன்னு விரிவா எழுத
சொல்லி ஒரு 'வம்பு'க்குரிய நண்பர் எனக்கு கோரிக்கை மெயில் கொடுத்திருக்காரு!
இப்போ ஏன் திடீர்னு மரண தண்டனை பத்தின விவாதம்னு ஒரு கேள்வி வருது! இந்திய
சைக்காலஜியில் எதுவுமே நிலையானது இல்லை! எப்ப எல்லாம் பரபரப்பு வேணுமோ, அப்பப்ப மட்டும்
கொஞ்சம் பரபரப்பை உருவாக்கிட்டு கொஞ்ச நாளில் அமைதியாயிருவாங்க. அப்படித்தான் இப்பவும்!
மரணதனடனையே வேண்டாம்னு ஒரு வருஷம் முன்னாடி முழங்கிட்டு ஓய்ஞ்சவங்களுக்கு மீண்டும்
அந்த ஸ்லோகம் இப்போ ஞாபகம் வர காரணமாயிருச்சு, சமீபத்தில் உச்சநீதிமன்றம் கசாபின் தூக்கு
தண்டனையை உறுதி செஞ்சு அளித்த தீர்ப்பு!
இந்த தீர்ப்பு வந்ததுமே தமிழகத்தில் சிலர், மிகச்சிலர் மட்டும் அந்த தீர்ப்பு
தவறுன்னும், மரணதண்டனையே கூடாதுன்னும் முழங்க ஆரம்பிச்சிருக்காங்க. அதன் நோக்கம் ரொம்ப
சிம்பிள்!
தமிழகத்தின் வேலூர் சிறையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு, காத்திருக்கும்
மூன்று பேரையும் எப்படியாவது விடுதலை செய்யணும்னு கேட்டு தமிழகத்தில் சில அமைப்புக்கள்
தொடர்ந்து போராடிட்டு இருக்காங்க! அவங்க நோக்கத்துக்கு ஆதரவா இருக்கணும்ங்கறதுக்காக
(வேறே வழியில்லாம) கசாபின் தண்டனையையும் எதிர்க்கவேண்டி இருக்கு அவங்களுக்கு!
நான் இந்த இரண்டு வழக்கையும், தமிழகத்தில் அதன் பிரதிபலிப்புக்களையும் மட்டும்
இங்கே கொஞ்சம் விரிவா விவாதிக்கலாம்னு இருக்கேன்!
முதலில் கசாப் விவகாரத்தை எடுத்துப்போம். அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை
ரத்து செய்யணும்னு இங்கே தமிழகத்தில் குரல்கொடுப்பவர்களின் வாதம் நியாயமானதா?
கசாப், பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி எடுத்து, இந்தியாவில் அச்சுறுத்தலையும்,
பொதுமக்களை கொல்லும் நோக்கிலும் திருட்டுத்தனமாக இந்தியாவுக்குள் நுழைந்து, கண்மூடித்தனமாக
மும்பையில் பல உயிர்களை சுட்டு கொன்றவன். அவனுடன் வந்தவர்கள் பலரும் தாக்குதலிலேயே
இறந்துவிட, கசாப் மட்டும் மாட்டிக்கொண்டான். அவனிடமிருந்து உண்மைகளையும் விவரங்களையும்
வரவழைக்கும் விசாரணை அதிகமாக பலன் கொடுக்கவில்லை. அதனால் அவனுக்கு உதவியவர்கள் குறித்தான
அவனது வாக்குமூலம் கிடைக்கவில்லை. இந்திய உளவு அமைப்புகள், இந்த சதி செயலுக்கு பின்ன்ணியிலிருந்தவர்கள
ஆதாரத்துடன் பாகிஸ்தானிடம் அடையாளம் காட்டியுள்ளது. கசாபின் குற்ற செயல் சந்தேகமின்றி
தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கசாப் நடத்திய தாக்குதல் வீடியோக்கள், மிக மிக அதிர்ச்சிக்குள்ளாக்கி
இருக்கின்றன. மும்பையில் இன்னமும் பலருக்குள் மனவியல் ரீதியாக அச்சத்தில் உறைந்திருப்பதை
மறுக்கமுடியாது. ஒரு கொடூர தாக்குதலை, பல உயிர்களை கொல்ல காரணமாக இருந்த செயலை, எந்தவித
முன்விரோதமுமின்றி, நீண்டகாலமாக திட்டமிட்டு, நிறைவேற்றி இருக்கிறார்கள் கசாபும் அவனது
கூட்டாளிகளும்.
குற்றத்தின் தன்மை, அதன் பின்னணி, கொடூரம், தெளிவான ஆதாரங்கள் ஆகிய அனைத்தையும்
விரிவாக விவாதித்து தான் அவனுக்கு தூக்குதண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம்.
இந்தியாவில் நீதிமன்றத்தின் மீது பல குறைகள் சொல்லப்பட்டாலும், அத்தகைய
குறைகள், பெரும்பாலும் கீழ் கோர்ட்டுகளிலும், மாவட்ட கோர்ட்டுகளிலுமே நடைபெறும். இது
போன்ற அதிக முக்கியத்துவமான வழக்குகளில், மரணதண்டனைக்கு தீர்ப்பாகும் வழக்குகளில் இந்த
நிமிடம் வரை இந்திய நீதிமன்றங்கள் நியாயமாகவும், சிறப்பாகவும் தான் செயல்பட்டு வந்திருக்கின்றன
என்பதை அடித்து சொல்ல முடியும். மேலும், இந்தியாவில் இன்னொரு சிறப்பு அம்சம், தண்டனை
விதிக்கப்பட்டாலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு சட்டத்துக்குட்பட்டு, அவர் தனது தரப்பை
தெளிவு படுத்தி, எடுத்து சொல்லி, அவர் பக்கம் கொஞ்சமேனும் நியாயமிருந்தால் அதன் அடிப்படையில்
மரணதண்டனையை குறைக்கவும் முழுமையாக சட்டரீதியான வாய்ப்பு வழங்கப்படுத்துகிறது. எல்லா
விதமான அப்பீல்களிலும் அவரது தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே, தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இந்த சூழலை பின்னணியாக வைத்து பார்த்தால், கசாபுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையும்,
அதை நிறைவேற்றாமல் அவருக்கு மேல்முறையீட்டுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதையும், அதிலும்
அந்த தண்டனை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதையும் அறியலாம்!
இனி, நான் தமிழக விஷயத்துக்கு வருகிறேன்!
இங்கே வேலூர் சிறையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு
தண்டனை விதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருப்பதால்,
அவர்களை விடுதலை செய்யவேண்டும் என சில இயக்கங்கள்
போராடி வருகின்றன. திமுக தலைவர் கலைஞர் கூட, இத்தனை ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பின்
அவர்களுக்கு மரண தண்டனை என்பது இரட்டை தண்டனையாக அமையும், எனவே அவர்களை மன்னித்து விடுதலைசெய்யவேண்டும்
என சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே, நான் சொன்னதை போல, இந்திய நீதிமன்றங்கள், மரணதண்டனை விஷயத்தில்
மிக மிக கவனமாகவும், பொறுப்பாகவும் தான் இதுவரை செயல்பட்டு வந்திருக்கின்றன. அரிதிலும்
அரிதான கொடூர குற்ற செயல்களுக்கு மட்டுமே நீதிமன்றங்கள் மரண தண்டனை விதிக்கிறது மேலும்
தண்டனை விதிக்கப்பட்டாலும், அவர்கள் விடுதலை ஆவதற்கான எல்லா சாத்தியங்களையும் திறந்து
வைத்து, சட்டப்படி, அவர்கள் தங்களது தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லி வெளிவருவதற்கான
முழுமையான சந்தர்ப்பத்தை இந்திய நீதி துறை தருகிறது. அதன் அடிப்படையில் தான் 1992ம்
ஆண்டு முதல் அவர்களுக்கான தண்டனை இன்னமும் நிறைவேற்றப்படாமல் அவர்களுக்கு உரிய நியாயமான
வாய்ப்புக்களை (பூந்தமல்லி நீதிமன்றம், தடா சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம்,
உச்ச நீதிமன்றம், உச்சநீதிமன்ற பெஞ்ச், குடியரசு தலைவருக்கான கருணைமனு என எல்லா வகையிலான
வாய்ப்புக்களையும்) அவர்களது தண்டனையை குறைப்பதற்காக வழங்கப்பட்டது. இவை அனைத்திலுமே,
அவர்களது குற்றச்செயலின் தன்மையை கருத்தில்கொண்டு தீர்ப்பை உறுதி செய்திருக்கிறார்கள்.
இப்படியான மேல் முறையீட்டுக்கான கால அளவு தான் இந்த 20 ஆண்டுகள் என்பதை கவனித்தால்,
அவர்களுக்கான தண்டனையை, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புக்களை பயன்படுத்தி கொள்வதற்காக
20 ஆண்டுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதை எல்லோருமே உணரலாம்! எனவே 20 ஆண்டுகள் அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்
என்கிற கலைஞரின் வாதம் சரியல்ல.
அவர்களை விடுதலை செய்வதற்கு சொல்லப்படும் மற்றொரு விசித்திரமான காரணம்,
அவ்ர்கள் தமிழர்கள் என்பது. அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்பது தமிழினத்தின்
மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்றெல்லாம் கூட ‘மே17 இயக்கத்தினர்’ முழங்க கேட்டிருக்கிறேன்.
தமிழுணர்வு, இனவுணர்வு உள்ள அனைவருமே அவர்களது விடுதலைக்கு பாடுபடவேண்டும் எனவும் கோரிக்கை
விடப்பட்டது!
தமிழர் என்பதால், தண்டனை கூடாது என்று சொன்னால் அதனை பொதுமை படுத்தி, தமிழகத்தில்
சிறையிலிருக்கும் அனைத்து தமிழர்களையும் விடுதலை செய்ய முனையவேண்டும், தமிழர்களுக்கு
கொடுக்கப்படும் தண்டனை இனத்துக்கு எதிரான தாக்குதல்னு முழங்கி மொத்தமுள்ள 16000 சொச்சம்
தமிழர்களையும் சிறையிலிருந்து விடுவிக்க போராடியிருக்கணும். அது தான் உண்மையான தமிழுணர்வாக
இருக்கமுடியும். ஆனால் இப்போது அப்படி இல்லை. இந்த மூவரை மட்டும் தான் விடுதலை செய்யவேண்டும்
என கோரிக்கை. அப்படியெனில், இந்த மூவருக்கு தமிழர் என்பதை தாண்டி இன்னும் ஏதோ ஒரு சிறப்பு
இருக்கணும் இல்லையா?
விடுதலை புலிகள் இயக்கத்தை சார்ந்தவர்கள் / ஆதரவாளர்கள் என்பதால் மட்டும்
தான் அவர்கள் விடுதலைக்காக அத்தனை முயற்சிகளும் நடைபெற்று வருகிறது என்பதும், அப்படி
வெளிப்படையாக அதை சொல்லி ஆதரவு திரட்டமுடியாது என்பதால், தமிழுணர்வு பூச்சு பூசி மெழுகி
உணர்ச்சிகரமான உரைகளால் மக்களை திசை திருப்ப பிரத்தனப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நல்லவேளையாக
தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
ராஜீவ் கொலை எந்த அளவுக்கு முட்டாள்தனமானதோ, அதை விட முட்டாள்தனமானது அவர்கள்
மனித வெடிகுண்டை பயன்படுத்தி அவரை கொன்றது.
ராஜீவ் கொல்லப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட 05-03.1991 ல்
பிரபாகரனின் பிரதிநிதியாக டெல்லிவந்த கவிஞர் காசி அனந்தன் அவர்கள், ராஜீவை சந்தித்துவிட்டு
அவர் வீட்டு முன்பு கொடுத்த நன்றி அறிக்கையும், 15-03-1991 ல் விடுதலை புலிகள் கொடுத்திருக்கும்
அறிக்கையும் ராஜீவ்-புலிகள் உறவு மிக சிறப்பாக இருந்ததை தெளிவாக சொல்கிறது. அதற்கு
ஒராண்டுக்கு முன்பே அதே ராஜீவை கொல்ல ஆட்களையும் அதே இயக்கம் அனுப்பி வைத்திருக்கிறது.
இந்த நிமிடம் வரை ராஜீவ் கொல்லப்பட்டதற்கான உண்மையான காரணம் யாராலும் தெளிவுபடுத்த்ப்படவேயில்லை.
அமைதிப்படையின் அட்டூழியம் தான் காரணி என சப்பைக்கட்டு
தான் கட்டப்ப்டுகிறது. (தமிழர்களை பாதுகாக்க அமைதிப்படை அனுப்பப்பட்டது – புலிகளுடன் இணைந்து இலங்கையை எதிர்த்தது – உண்மை நிலவரம் என்ன என்பதறிந்து இந்தியாவுக்கு சொன்னது
– இந்தியா தமிழர்களுக்கு உரிய அரசியல் ரீதியான
தீர்வுக்கு முயன்றது – புலிகள் விரும்பியபடி,
ஆட்சி அதிகாரத்தை நேரடியாக புலிகள் கையில் தூக்கி கொடுக்க இந்தியா சம்மதிக்காமல் தேர்தல்
முறையை ஆதரித்தது – அதிருப்தி அடைந்த புலிகள்
இயக்கம் ஜெயவர்த்தனாவுடனேயே கூட்டு சேர்ந்து இந்தியாவை எதிர்த்தது – அமைதிப்படை வெளியேற்றப்பட்ட பின் மீண்டும் தமிழர்களை
பகடையாக்கி கேடைய போர் நடத்தியது போன்ற தனி ஆட்சி பதவி மோக வரலாறுகள் முழுமையாக நீங்கள்
எல்லோரும் அறிந்திருப்பீர்கள், சிலருக்கு மாற்று கருத்தும் சில அரசியல் இயங்கங்களின்
புனைகருத்துக்களின் மீதான கண்முடித்தனமான நம்பிக்கையும் இருக்கக்கூடும், அது விரிவாக
விவாதிக்கப்படக்கூடியது. அது இந்த பதிவுக்கு அவசியமற்றது எனபதால் அதை கடந்து சென்று
விடுவோம்!)
ராஜீவை கொல்வது என்று முடிவெடுத்திருந்தாலும் அதை மனிதவெடிகுண்டு உபயோகித்து
கொடூரமாக கொன்றிருக்க அவசியமே அப்போது எழவில்லை. அப்போது ராஜீவ் சாதாரணமான ஒரு எம்.பி
தான். ஒரு அரசியல் கட்சியின் தலைவர். அவருக்கு முன்பு கொடுக்கப்பட்டிருந்த 495 பேரடங்கிய
NSG பாதுகாப்பும் கூட, அப்போது துணைபிரதமாராக இருந்த தேவிலால் அவர்க்ள் உத்தரவின்படி
விலக்கிக்கொள்ளப்பட்டு இருந்தது. வெறும் 10 சாதாரண போலீசாருடன் தான் அவர் சுற்றுப்பயணம்
மேற்கொண்டிருந்தார். தமிழகத்திலும் அப்போது கவர்னர் ஆட்சி தான் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இப்படியான ஒரு மிக மிக சாதாரணமான சூழலில், அசாதாரணமாக மனிதவெடிகுண்டு வைத்து தாக்குதல்
நடத்தியிருப்பதன் கொடூரத்தை நாம் கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தாலே, யாரும் அதை ஆதரிக்கமாட்டோம்.
அதை நான் ராஜீவ் மீதான தாக்குதலாக அல்லாமல் நம் தமிழகம் மீதான தாக்குதலாகவே காண்கிறேன்.
குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு இப்போது மேல் முறையீட்டு வாய்ப்புக்காக
நாம் பாதுகாத்துக்கொண்டிருக்கும் அந்த மூவரும், அந்த கொடூர தாக்குதலுக்கு உதவி செய்தவர்கள்.
ஒரு மிகப்பெரிய குற்றச்செயல் நடைபெறவிருப்பதை அறிந்தும் அதை மறைத்ததோடு அதற்குரிய உதவிகளை
செய்தவர்கள். இனி இந்தியாவில் இதுபோலொரு கொடூர நிகழ்வு நடைபெறக்கூடாது என்பதற்கான படிப்பினையாகவே,
குற்றத்தின் அடிப்படையிலும், குற்றச்செயலின் தன்மையிலும் உள்ள கொடூரத்தை கருத்தில்
கொண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறத. எல்லா நீதிமன்றங்களும் வலுவான ஆதாரங்கள்
அடிப்படியில் அதை உறுதி செய்திருக்கின்றன.
மேலும், ராஜீவ் மீதான வெற்று கோபத்துக்கு விலையாக, அந்த தாக்குதல் சம்பத்தில்
அப்பாவி தமிழர்களும் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று, தமிழுணர்வு, இன உணர்வு என்றெல்லாம்
பொங்குபவர்கள், அந்த அப்பாவி தமிழர்களை பற்றி என்றைக்காவது சிந்தித்திருப்பார்களா என
யோசித்து பாருங்கள். அவர்களை பற்றி எந்த அக்கறையும்
யாருக்கும் இல்லை. அவர்கள் தமிழர்கள் இல்லையா? நம் இனம் இல்லையா? அவர்கள் மீதெல்லாம்
தமிழுணர்வு ஆதரவாளர்களுக்கு இரக்கம் இருக்காதா? உண்மையான தமிழுணர்வாளர்கள், “உங்களுக்கிடையிலான முட்டாள்தனமான
சண்டையில் என் சகோதரர்களள எதற்கு கொன்றீர்கள்” என்று அவர்கள் மீது தான் கோபப்பட்டிருக்கவேண்டும்.
ஆகையினால், சுயசிந்தனை உள்ள எல்லோருக்குமே, இன்று அந்த மூவரின் விடுதலைக்காக
போராடுபவர்களுக்கு இருப்பது, தமிழுணர்வா, இனவுணர்வா, மனித உரிமை ஆர்வமா, இயக்க ஆதரவா
என்பது தெளிவாக புரிந்திருக்கும்!
இந்த இரண்டு வழக்குகளையும் பார்க்கும்பொழுது, இரண்டு தாக்குதல்களிலும் ஈடுபட்டவர்கள்
நீண்ட காலமாக திட்டமிட்டு, தெரிந்தே, மன ஒப்புதலுடனேயே மிகக்கொடூரமான இந்த தாக்குதலை
நடத்தியிருப்பது தெளிவாகும். கொல்லப்பட்டவர்களுக்கும், கொன்றவர்களுக்கும் எந்த முன்விரோதமும்
இல்லை என்பதும் தெளிவாகும். இப்படி காரணமேயில்லாமல் கொடூர கொலை நிகழ்த்துவோரையும் அதை
ஆதரிப்போரையும் தண்டிக்கக்கூடாது என்பது சரிதானா என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.
இனி மரணதண்டனை பற்றி வருவோம்!
ஒட்டுமொத்தமாக மரணதண்டனையே கூடாது என நாம் முடிவெடுக்கவேண்டும் எனில், அத்தகைய தண்டனைக்குரிய
குற்றத்தை செய்யாதவர்களாக நமது சமூகம் பண்பட்டு இருக்கவேண்டும். குற்றங்கள் கொடூரமாக
இருக்கும் ஆனால் தண்டனை மென்மையாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமல்ல. நாம் குற்றம் செய்யாதபோது,
நமக்கு தண்டனை இல்லை எனப்து தான் இங்கே நிதர்சனம்!
கொடூர செயல்கள் இருக்கும் வரையும் அதற்குண்டான தண்டனையும் இருக்கவேண்டும்
என்பது தான் பொதுவான கருத்து. மேலும் இந்திய நீதித்துறை மரணதண்டனை விதிப்பது அபூர்வமானது,
தகுந்த காரணமின்றி அப்படி ஒரு தீர்ப்பு வராது, அப்படியே தண்டனை கொடுத்தாலும், அவர்களுக்கு
முறையான அனைத்து வாய்ப்புக்களும் வழங்கி அவர்கள் விடுதலைக்காக சட்டப்படியான நடவடிக்கைகள்
இருக்கும், அதையும் மீறி அனைத்து சட்டமும் அவர்களது தண்டனையை உறுதிப்படுத்தினால் தான்
தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்கிற வழக்கத்தையெல்லாம் கவனிக்கையில், மரணதண்டனை இருப்பதில்
எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. இன்றைய சமூகத்தில் அப்படியொரு தண்டனை அவசியமும் கூட.
நாம் மரண தண்டனை வேண்டாம் என சொல்கிற அளவுக்கு
பண்பாடும், நாகரீகமும் கொண்டவர்களாக இன்னும் ஆகவில்லை!