Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

Tuesday, September 12, 2017

நவோதயா பள்ளியும் தமிழகமும்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை சமீபத்தில் அளித்த தீர்ப்புக்குப் பின் சட்டென தமிழகத்தில் ரெண்டு நாளா ஒரு பரபரப்பு ‘நவோதயா பள்ளிகள்’ பற்றி!

நீதி அரசர்கள் சசிதரன் அவர்களும் சுவாமிநாதன் அவர்களும் வழங்கிய தீர்ப்பில், "மத்திய அரசு தமிழை ஒரு கட்டாய பாடமாக கற்பிக்க முடிவு எடுத்திருப்பதால் இனியும் இழுத்தடிக்காமல் தமிழகத்தில் நவோதையா பள்ளிகளுக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும்" என தமிழக அரசுக்கு உத்தரவு இட்டிருக்கிறார்கள்.

அதென்ன நவோதயா பள்ளிகள்?

1986 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இந்த ‘ஜவஹர்லால் நவோதயா பள்ளிகள்’. பின் தங்கிய மாவட்டத்தில் கல்வி வசதி கிடைக்கப்பெறாத குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் நோக்குடன் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பள்ளி வீதம் தொடங்கப்பட்டு அவர்களுக்கான உண்டு உறைவிட பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது இந்த திட்டம்.

ஆனால் இப்போது ‘நன்கு படிக்கும் மாணவர்களை’ தேர்ந்தெடுத்து அவர்களை மேலும் மெருகேற்றும் நோக்கத்தோடு செயல்படும் ஒரு கோச்சிங் சென்டர் போல பல இடங்களிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

மாநில அரசு 30 ஏக்கர் நிலம் கொடுத்தால் (?) அதில் மத்திய அரசு இந்த நவோதையா பள்ளிகளை அமைத்து, அந்தந்த மாவட்டத்தில் உள்ள நல்ல மாணவர்களை தேர்ந்தெடுத்து ஹாஸ்டலில் தங்கவைத்து படிக்கவைத்து பாசாக்குவது தான் இந்த நவோதையா முறை.

அதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்ன என்றால், இங்கே 6 ஆம் வகுப்பில் இருந்து தான் மாணவர் சேர்க்கையே ஆரம்பிக்கிறது. அதாவது 5 ஆம் வகுப்பு வரை மாநில கல்வியில் படித்து, அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே ஆறாம் வகுப்பில் நவோதையா பள்ளிகளில் சேர முடியும். இதற்கென தனியாக தகுதி தேர்வும் உள்ளது. அதில் நல்ல மதிப்பெண் எடுப்பவர்கள் மட்டுமே இந்த பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

உதாரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டில் தகுதி தேர்வு எழுதிய 18.78 லட்சம் பேரில் தேர்வு பெற்றவர்கள் வெறும் 41 ஆயிரம் பேர் தான். அதாவது தேர்ச்சி விகிதம் வெறும் 2%. அப்படி எனில் அந்த பாட திட்டத்தின் கடுமை புரியும்.

அதாவது மாநில கல்வி திட்டத்தில் நல்ல மதிப்பெண் வாங்குவோரை மட்டுமே தேர்ந்தெடுத்து அவர்களுக்காகவே நடத்தப்படும் ஒரு மத்திய அரசு பள்ளி... அவ்வளவு தான் நவோதையா!

1985-86 கல்வி ஆண்டில் 2 பள்ளிகளுடன் தொடங்கிய இந்த திட்டம் இப்போது 598 பள்ளிகளை கொண்ட பெரும் அமைப்பாக வளர்ந்திருக்கிறது. (660 பள்ளிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.. அதில் 586 தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது).


தமிழகம் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் இந்த பள்ளிகள் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் அனுமதி கொடுக்காமல் இருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் சமீபத்தில் அனுமதி வழங்க சொல்லி தீர்ப்பு கொடுத்திருக்கிறது மதுரை நீதிமன்றம்.

தமிழகம் ஏன் இதை எதிர்க்கிறது?

முதலில் சொல்லப்பட்ட விஷயம், இந்த பள்ளிகள் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது. அதாவது ஆங்கிலம் & ஹிந்தி மட்டும் தான் பயிற்று மொழி. மாநில மொழிக்கு இடமில்லை என்பது. ஆனால் இப்போது மத்திய அரசு, "மாநில மொழி பயிற்றுவிக்க தயாராக இருப்பதாகவும் 6-10 ஆம் வகுப்பு வரை தமிழை கட்டாயம் ஆக்குவதாகவும், 11,12 ஆம் வகுப்புக்கு தமிழை விருப்ப பாடமாக அனுமதிப்பதாகவும்" சொல்லி இருக்கிறது.

ஆனால், எப்படியும் ஹிந்தியும் ஆங்கிலமும் தான் முக்கிய பயிற்று மொழி என்பதை மறுப்பதற்கில்லை. அலுவல் மொழியான ஹிந்தியை வளர்ப்பதற்கும் அதை மானவர்களிடத்தில் பரப்புவதற்கும் என தனியாக ஒரு குழுவே இந்த நவோதயா பள்ளிகளில் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இது மட்டுமே காரணமாக இருக்க முடியாது.

ஹிந்தி மட்டும் தான் காரணம் எனில் திமுக ஆட்சி செய்த 1989-1991; 1996-2001; 2006-2011 ஆகிய காலகட்டத்தில் அனுமதி கொடுக்காமல் இருந்ததற்காக அதை காரணம் காட்டிக்கொள்ளலாம்.

ஆனால் 1986 என்பது எம்.ஜி.ஆர் ஆட்சி. அதன்பின் 1991-1996; 2001-2006; 2011-2017 என ஜெயலலிதா ஆட்சி செய்த காலத்திலும் கூட நவோதயா பள்ளிகளுக்கு தமிழகம் அனுமதி கொடுக்கவில்லை.

இதை புரிந்துகொள்ள வேண்டும் எனில் தமிழகம் திராவிட இயக்கங்களான அதிமுக திமுக ஆகியோரின் ஆட்சி காலத்தில் எத்தகைய சமூக வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்பதை உணரவேண்டியது அவசியம்.

மற்ற மாநிலங்களை போலல்லாமல் தமிழகம், மாநிலம் முழுமையும் ஒட்டுமொத்த ஒருமித்த வளர்ச்சியை கண்டது என்பதை மாநிலம் முழுக்க பயணித்தவர்களால் உணர முடியும்.

தமிழகத்தில் அனைத்து குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்பதில் எல்லா ஆட்சியாளர்களுமே கவனமாக இருந்தார்கள்.

மதிய சாப்பாட்டுக்கு வழியில்லையா – அரசு கொடுக்கும்
உடை வாங்க வசதி இல்லையா – அரசு கொடுக்கும்
புத்தகங்கள் வாங்க சிரமமா – அரசு கொடுக்கும்
பயணிக்க தூரமாக இருக்கிறதா – இலவசமா பஸ் பயணம் அரசு தரும்
பஸ் வசதி இல்லாத பகுதியா – இலவசமாக சைக்கிள் தரும்
பயிற்சி செய்ய கணினி இல்லையா – அரசு லேப்டாப் தரும்

இப்படி மாணவர்கள் படிப்பதற்கு என்னென்ன சிரமங்கள் உள்ளதோ அத்தனையையும் அரசு ஏற்றுக்கொள்கிறது. எதற்காக. மாணவர்கள் படித்தால் மட்டும் போதும். அது அவர்களது எதிர்காலத்துக்கு பேருதவியாக இருக்கும் என்கிற நல்ல எண்ணத்தில் தான்.

இப்படி மாணவர்களுக்கு வசதிகள் செய்துகொடுத்து அவர்களை படிக்க வைக்கும் எந்த அரசாவது இந்தியாவில் இருக்கிறதா?

இந்த காரணங்களால், தமிழகத்தில் குக்கிராமங்களில் கூட, மலைப்பகுதிகளில் கூட அடிப்படை கல்வியும் உயர்கல்வியும் படித்த இளைஞர்களை சாதாரணமாக காண முடிகிறது.

ஆனால் ஜார்க்கண்டு, ஓடிஷா, சட்டீஸ்கார் போன்ற மாநிலங்களில் நிலைமை வேறு. அங்கே குழந்தைகள் படிக்க ஆசைப்பட்டாலும் அதற்கான வாய்ப்புக்கள் இல்லை. போதிய பள்ளிக்கூடங்கள் மாநில அரசுகள் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. போக்குவரது வசதி இல்லை. குடும்பங்களில் பொருளாதார வசதி இல்லை. எனவே பல குழந்தைகள் படிப்பதே இல்லை.

அவர்களை போன்றோர் இது போன்ற உண்டு உறைவிட பள்ளிகளில் சேர்ந்து அங்கேயே தங்கி படித்து முன்னேறுவது இயல்பு.

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அப்படி ஒரு துர்ப்பாக்கிய நிலை இல்லை. 5 கி.மீக்குள் எப்படியும் ஒரு உயர்நிலை பள்ளி இருக்கும். 10 கி.மீக்குள் எப்படியும் ஒரு மேல்நிலை பள்ளி இருக்கும். போக வர பஸ் அல்லது சைக்கிள் இருக்க, குடும்பத்தை விட்டு விட்டு ஹாஸ்டலில் தங்கி படிக்க தேவையே இல்லை.

அதை விட நான் முன்பே சொன்னது போல, 5 ஆம் வகுப்பு வரை படித்து அதில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களால் மட்டுமே நவோதயா பள்ளிக்களில் 6 ஆம் வகுப்பில் சேர முடியும். அதாவது ஓரளவு நடுத்தர வர்க்க அல்லது மேல்நிலை வர்க்க மாணவர்கள் என வைத்துக்கொள்ளலாம். அபூர்வமாக குக்கிராம பகுதிகளில் இருந்து வரும் அசாத்திய திறமை கொண்டவர்களையும் இதில் சேர்த்து கொள்ளலாம். அப்படியானவர்கள் மட்டுமே படிக்க வசதி உள்ள ஒரு மத்திய அரசு பள்ளியை மாவட்டத்துக்கு ஒன்று என கொண்டு வர அனுமதிப்பதால் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு எந்த பயனும் இல்லை.

அதை விட மாநில பள்ளி கல்வி துறையின் பள்ளிகளிலேயே நல்ல முறையில் கல்வி கற்றுக்கொடுப்பதுடன், அனைத்து கிராமங்களிலும் பள்ளிகள் அமைக்கப்பட்டு இருப்பதாலும், அரசே கல்விக்கான பெரும்பாலான செலவை ஏற்றுக்கொள்வதாலும், நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் இல்லாதிருப்பதால் எந்த நஷ்டமும் இல்லை. நவோதயா வருவதால் எந்தவித லாபமும் இல்லை.

இதை தமிழகத்தை இதுகாறும் ஆண்டுவந்த அனைத்து ஆட்சியாளர்களும் தெளிவாக உணர்ந்திருந்ததால் தான் இன்று வரை நவோதையா பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

இனி தமிழக அரசு செய்யவேண்டியது என்ன?

புரட்சி தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் அரசு என மாண்புமிகு தமிழக முதல்வர் சொல்லிக்கொள்வது உண்மையானால், மதுரை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து, மாநில உரிமையை நிலைநாட்ட முன் முயற்சி செய்யவேண்டியது அவசியம்.

தற்பொழுது தமிழகத்தில் உள்ள கல்விக்கூடங்களை மேம்படுத்தவும், கல்வி தரத்தை உயர்த்தவும் ஆவன செய்யவேண்டியதும் அவசியம்.

செய்வார்களா?

Monday, May 30, 2016

நேர் நிரை – கூவிளம்

உமாராணி மிஸ். 

கோவை சித்தாபுதூர் ஸ்கூலில் இவங்க தான் என்னுடைய தமிழாசான்.. ச்சே.. தமிழாசிரியை. மிக மிக அருமையா தமிழை, தமிழ் இலக்கணத்தை யாப்பை, யாப்பின் கட்டுக்களை எளிமையா புரியறமாதிரி எனக்கு சொல்லி கொடுத்தவங்க.
 
Thanks: PaddathumSuddathum.blogspot.com

யாப்பிலக்கணத்தின் அடிப்படையே சொல்லின் ஒலி குறிப்புத்தானே? நெடில் – நேர்; குறில் – நேர்; நெடில் நெடில் – நேர் நேர்; குறில் நெடில் – நிரை நேர்; நெடில் குறில் – நேர் நிரை; குறில் குறில் நிரை நிரை. அவ்வளவு தான் யாப்பு. இதில் இரட்டை & மூன்று ஒலிக்குறிப்புக்கும் இன்னொரு அடுக்கு 'கோடு வேர்டு' இருக்கு. நேர் நேர் – தேமா; நிரை நேர் – புளிமா; நேர் நிரை – கூவிளம்; நிரை நிரை – கருவிளம். இதெல்லாம் இரட்டை ஒலிக்குறிப்புக்கள். இதுக்கு அடுத்தபடியா மூணாவது சொல் நேர்னு வந்தா காய்; நிறைனு வந்தா கனி. இவ்வளவு சிம்பிளா யாப்பை சொல்லிக்கொடுத்ததோட, அவங்க சொல்ற சொல் என்ன ஒலிக்குறிப்பு அதுக்கு என்ன கோடு வேர்டுனு கேள்வி கேட்டு கேட்டு தினம் கொஞ்ச நேரம் விளையாடுவாங்க. இது மிக அற்புதமான பயிற்சியா அமைஞ்சு இன்னை வரைக்கும் யாப்பை மறக்கவிடாம செஞ்சிருக்கு.

வைரமுத்துவின் ‘இதுவரை நான்’ படிச்சப்ப அவர் இதே மாதிரி யாப்பை முதல் முதலா படிச்சு புரிஞ்சுகிட்டபோது திருக்குறளின் 1330 குறளையும் பகுத்து பார்த்தார்னு எழுதி இருக்கிறதை படிச்சேன். அதனால தான் அவர் கவிப்பேரரசர். நான் அந்த அளவுக்கெல்லாம் யோசிக்கலை. தினம் அப்பா வீட்டில் வாங்கும் தினத்தந்தியின் தலைப்பு செய்திகளை பகுத்து பார்த்து அதை சின்ன தாளில் எழுதி எடுத்துட்டு போயி உமாராணி மிஸ் கிட்டே காட்டுவேன். சரியா பகுத்திருக்கேனான்னு என்னை நானே அப்ரைசல் செஞ்சுக்க.

உதாரணமா இந்த பிளாக்கின் தலைப்பை எடுத்துகோங்க. ‘மனவுரை’ ம-குறில்; ன – குறில்; வு – குறில்; ரை – குறில். எல்லாமே குறில் தான். அதை சேர்த்தா.. குறில் குறில் – நிரை; நிரை நிரை – கருவிளம். சுருக்கமா மனவுரை = நிரை நிரை = கருவிளம். சொல்லி பாருங்க மூணு வார்த்தையும் ஒரே மாதிரி தான் உச்சரிக்கும்.

இது தவிர வேற்றுமை உருபு, குற்றியலுகரம், குற்றியலிகரம் அது இதுன்னு அந்த ரெண்டு வருஷத்தில் (9th & 10th) ஆல்மோஸ்ட் இலக்கணத்தில் மொத்த பேசிக்கையும் சொல்லி கொடுத்துட்டாங்க.

Thanks: Ponkarthikeyan.wordpress.com

எனது பிற்கால யாத்திரைகளில் இந்த யாப்பு ஒலிக்குறிப்பு இன்னொரு தேடலுக்கு வழி வகுத்துச்சு. அது தான்.. இதெல்லாம் என்ன காய் கனி? தேமா – தேன் மாங்கா; புளிமா – புளிமாங்கா புரிஞ்சுது.. ஆனா இந்த கூவிளம் & கருவிளம்??

எனக்கொரு மதுரைக்கார தோழி உண்டு. அவர் தான் விளம் என்பது விளாம்பழம் / விளாங்காய் என்பதை குறிக்கும்னு சொன்னார். மதுரைக்கு போயிருந்தபோது விளாங்குடி கூட்டிட்டு போனார். நான் கூட சுத்து முத்தும் விளா மரமா தோப்பு தோப்பா இருக்கும்னு ஆசையா எதிர்பார்த்து போனேன். ஆனா அது ஒரு வழக்கமான நகர பகுதியா தான் இருந்துச்சு.

******  *******

சென்னை கன்னிமாரா நூலகம் எனக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர்களில் பல வகையினர். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், சொற்பொழிவாளர்கள்… வைரமுத்து விழாக்களில் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் சொல்லாடலை கண்டு சொக்கி போயிருந்த காலங்கள் அவை.

மெல்ல மெல்ல மனம் லக்ஷ்மி, வாஸந்தி, அகிலன், சாண்டில்யன், கல்கி, அசோகமித்த்ரன், லா.ச.ரா, ஜெயகாந்தன், பாலகுமாரன், தமிழ்வாணன் மாதிரியானவர்களிடமிருந்து விலகி தமிழ் கவிஞர்களின் அதிலும் மரபு கவிஞர்களின் படைப்புக்கள் பக்கமாக ஒதுங்க தொடங்கினேன். மாயவநாதன், சுரதா, மருதகாசி, பாரதிதாசன் மாதிரியான ஹேரிடெஜ் கவிஞர்களில் இருந்து, வைரமுத்து, முத்தையா, வாணிதாசன், பாவலர் தேவகி மாதிரியான கவிஞர்களின் படைப்புகள் வரை எல்லோரது எழுத்துக்களும் வசீகரித்தன. 

மாயவநாதன் பத்தி சொல்லும்போது அந்த வானம்பாடி படத்தின் ‘காகித ஓடம் கடலலை மீது’ பாடலை சொல்லாமல் இருக்கமுடியாது. (ஏற்கனவே பலரும் பல தடவை சொன்னது தான். நானும் ஒரு தடவை சொல்லிக்கறேனே).

காகித (நேர் நிரை) ஓடம் (நேர் நேர்) கடலலை (நிரை நிரை) மேலே (நேர் நேர்).  இந்த பாடலை எழுதுநது என்னவோ கலைஞர் தான். ஆனா உண்மையிலேயே இந்த டியூன் மாயவநாதனுக்கு தான் கொடுக்கப்பட்டது. அதுவும் ஒரு கோபத்தில் மகாதேவன் கொடுத்த டியூன் அது. ரொம்ப நாளா டியூனு டியூனுனு நச்சு பண்ணிட்டு இருந்த மாயவநாதன்கிட்டே கடுப்பாகி மகாதேவன் சொன்னாராம்.. ‘என்னய்யா டியூனு பெரிய டியூனு? மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்’ இதான் டியூனு முடிஞ்சா எழுதிக்கொன்னு’ சொன்னாராம். மாயவநாதன் அந்த டியூனுக்கு பாட்டு எதையும் எழுதலை. ஆனா விஷயத்தை கேள்விப்பட கலைஞர் அந்த 'மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்' டியூனையே அடிப்படையா வெச்சு காகித ஓடம் கடலலை மேலே போவது போலே மூவரும் போவோம்னு எழுதுனாரு. அதுமட்டுமல்ல. அந்த பாடல் முழுக்கவே இந்த ஒரே டியூன் தான்.

இதுக்கு அடிப்படையும் யாப்பு தான். அந்த மாயவநாதன்ற வார்த்தையின் ஒலிக்குறிப்பு மா(நேர்) யவ(நிரை) நா(நேர்) தன்(நேர்) – நேர் நிரை நேர் நேர். இதை பேசிக்கா வெச்சு தான் கா(நேர்) கித(நிரை) ஓ(நேர்) டம்(நேர்) னு எழுதி இருப்பார் கலைஞர். நீங்க அந்த வார்த்தைகளை சொல்லிப்பாருங்க. மாயவ நாதன், நேர்நிரை நேர்நேர், காகித ஓடம்... ஒரே மாதிரி உச்சரிப்பு வருதுல்ல?

மொத்த பாடலின் அத்தனை வரியையும் மாயவநாதன் மாயவனாதாண்ணே போட்டு பாடினாலும் கரெக்டா வரும். அத்தனை எடத்திலேயும் அதுக்கு தகுந்த மாதிரி யாப்பு தப்பாம வார்த்தைகளை போட்டு ஒரு உருக்கமான பாட்டை எழுதிருப்பாரு கலைஞர்.

“கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்”

“மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்
மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்
மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்
மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்”

பாடி பாருங்க. சேம் டியூன் யூ நோ.

இந்த செய்தியை படிச்சப்பறம் திரைப்பாடல்களை கூட சந்தம் பிரிக்க ஆரம்பிச்சேன். எங்கெல்லாம் தளை தட்டுது எங்கெல்லாம் வார்த்தைகள் தப்பு தப்பா வருதுன்னு எல்லாம் ஈஸியா புரிய ஆரம்பிச்சுது. பல பல பாடல்களை கண்ணதாசனே தப்பா எழுதி இருக்காரு. ஆனா பிரபலமான கவிஞர்கள் தப்பு செஞ்சா அது தப்பு லிஸ்ட்ல வராதுன்றதால விட்டுடலாம்.

பிற்காலத்தில் பாட்டுப்போட்டி, கவிதை போட்டில எல்லாம் கலந்துக்கும்போது இந்த யாப்பு இலக்கணம் எனக்கு நிறையவே கை கொடுத்துச்சு. பாரதியார் கவிதைகளை பாடலா பாடும்போது வார்த்தைகள் தவறாமல் இருக்க இந்த எதுகை மோனையும், தாள சந்த யாப்பு மரபும் உதவின மாதிரி வேற எதுவும் உதவலை.

'காற்று வெளியிடை கண்ணம்மா' என்னுடைய ரொம்ப ரொம்ப பேவரைட் பாட்டு. பல தருணங்களில் அதை பாடி இருக்கேன். நீயெனதின்னுயிர் கண்ணம்மா வரிக்கு அடுத்த வரி திக்கும்போதெல்லாம் ‘யெ’ எதுகை தான் கை கொடுத்து, போயின போயின துன்பங்கள்... வாயினிலே அமுதூறுதே... தீயினிலே வரும் ஜோதியே... னு அடுத்தடுத்த வரிகளை நிஜாபகப்படுத்திட்டே இருக்கும். எல்லாமே அந்த யெ, யி எதுகையை வெச்சும், நேர் நிரை நேர் நிரை தாள சந்தமும் தான் கை கொடுத்துச்சு.

யாப்பு படிக்காம கவிதை எழுதரவங்க ஒரு பக்கம் அதை புதுக்கவிதைன்னு எழுதிட்டு இருந்தாலும், அது என்னவோ ஸ்பிலிட் செஞ்சு உடைச்சு போட்ட உரைநடை மாதிரி தான் தோணுது.

இப்போதைக்கு பேஸ்புக்கில் நிறைய மரபு கவிஞர்களை பார்க்க முடியுது. சந்தோஷம். நா.சொக்கன் எல்லாம் மகான். ரொம்ப ரொம்ப கேசுவலான விஷயத்துக்கு எல்லாம் அசால்டா வெண்பா எழுதுராறு. அலட்டிக்கறதே இல்லை. தூய சங்ககால செந்தமிழ் தான் வேணும்னு இல்லை.. பேச்சு மொழி, பிற மொழி சொல்லை கூட அழகா பொருத்தி அட்டகாசமான வெண்பாவை ஜஸ்ட் லைக் தத் அடிச்சு விட்டு அசர வைக்கிறாரு. மிகப்பெரிய ஆச்சரிய போதை இருந்தும் அவரை சந்துச்சு பேசிய அந்த அபூர்வமான அற்புதமான அரை மணி நேரத்தில் எதையும் சொல்ல தோணாமல் அவரை சந்திச்ச ஆச்சரிய பிரமிப்பிலேயே கழிஞ்சு போனது.

இனி வரும் தலைமுறைக்கு தமிழையும் தமிழ் இலக்கணத்தையும் யாப்பின் அடிப்படையையும் தெளிவா சொல்லிக்கொடுத்து தமிழை வளர்க்க எல்லோரும் உதவலாம். ஆனா அதுக்கு நமக்கு முதலில் யாப்பு தெரிஞ்சிருக்கணும். யாப்பு தெரிஞ்சா நாமே தமிழை அவ்வளவு ஈடுபாட்டோட ரசிக்க ஆரம்பிச்சிருவோம்.

மெல்ல தமிழ் இனி சாகும்னு இனியும் பிரகடன படுத்திட்டு இருக்காம, யாப்பிலக்கணத்தை ஜஸ்ட் 10 மார்க் விஷயமா மட்டும் பார்த்து சாய்ஸில் விடாம, தமிழ் பாடத்தில் கட்டாய பகுதியா அது இருக்கணும்ன்றது என்னுடைய ஆசை.

நாமெல்லாம் ஆசை மட்டும் தான் பட முடியும்.


Tuesday, May 28, 2013

யாதொன்றும் யாமறியேன்!



“எனக்கு தெரியாமல் அரசு அதிகாரிகள் அவர்களாகவே முடிவெடுத்து அறிவித்துவிட்டார்கள்” இன்றைக்கும் மற்றுமொரு முறை இப்படி அப்பாவியாக சொல்லி இருக்கிறார் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு புரட்சி தலைவி பொன்மனசெல்வி காவிரி தந்த கலைச்செல்வி அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்கள். தமிழக வரலாற்றின் மிக சிறந்த நிர்வாகி என பெயரெடுத்தவர்.

விஷயம் வேறொன்றும் இல்லை. சமீபத்தில் தமிழக அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி, தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் (‘மற்றும்’ என்கிற சொல் பயன்படுத்தக்கூடாது. “கலையும் அறிவியலும்”-னு தான் சொல்லவேண்டும் எனும் குதர்க்கம் பேசும் தமிழுணர்வு தோழர்கள் மன்னிப்பார்களாக!) உட்தேர்வுகள் (இண்டர்னல் எக்ஸாம்ஸ்) இனிமேல் ஆங்கில மொழியில் தான் எழுதவேண்டும். மாணவர்களுக்கு ஆங்கில அறிவை மேம்படுத்தும் நோக்கில் இப்படி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு பல முனைகளிலிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இன்றைக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள், அப்படி ஒரு அறிவிப்பு வந்ததே தனக்கு தெரியாது எனவும், தனக்கு தெரியாமல் அரசு அதிகாரிகளே அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதாகவும் சொல்லி, அந்த உத்தரவை ரத்து செய்திருக்கிறார்.


இப்படி அவர் சொல்லுவது இது முதல் முறை அல்ல. மிக மிக நீளமான பட்டியலே இருக்கிறது. அவற்றுள் சில உங்கள் மறு நினைவுறுத்தலுக்காக.

டான்சி நில விற்பனை விவகாரத்தில் ஆவணங்களில் இருந்தது தனது கையெழுத்தே அல்ல என சொல்லி, உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தபின் தனது கையெழுத்து தான் என ஒப்புக்கொண்டார்.

2006 சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு, அப்படி போட்டியிட்ட நான்கு தொகுதி வேட்புமனு பட்டியலிலும் ‘நான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட விண்ணப்பிக்கவில்லை’ என அத்தாட்சி அளித்திருந்தார். தேர்தல் விதிமுறை படி, இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக்கூடாது என்பதால் அந்த வழக்கு இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

2011 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போழுதே வேட்பாளர் பட்டியல் வெளியானது. வாத பிரதிவாதங்கள் வலுக்கவே வேட்பாளர் பட்டியல் தனக்கு தெரியாமலேயே வெளியிடப்பட்டுவிட்டதாக சொல்லி பட்டியலை ரத்து செய்தார்.

அண்ணா பவழவிழா வளைவு அகற்றப்பட்டபோதும், பலத்த எதிர்ப்பு வந்ததும் தனக்கு தெரியாமலேயே அந்த வளைவு இடிக்கப்பட்டதாக சொல்லி, மீண்டும் அதை அதே இடத்தில் மறு நிர்மாணம் செய்தார்.

தமிழகத்தில் கடுமையான மின் வெட்டு நிலவுவதை எதிர்த்து தமிழகம் முழுதும் பொதுமக்கள் பரவலாக சாலையில் இறங்கி மறியல் செய்தவுடன், தமிழகத்தில் இப்படி ஒரு மின்வெட்டு நிலவுவதை அமைச்சர்கள் என் கவனத்துக்கு கொண்டுவரவேயில்லை. எனக்கு இந்த விஷயமே தெரியாது என சொல்லி கைதட்டல் வாங்கிக்கொண்டார்.

சமீபத்தில் கூட, கட்சியிலும், ஆட்சியிலும் தனக்கு தெரியாமலேயே சிலர் பல்வேறு நிர்வாக முடிவுகளை எடுத்து வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். பின்னர் அப்படி தான் பேசவில்லை என்றொரு சிறிய அறிக்கையும் வெளியானது.

அண்ணா நூலக கட்டிடம் திருமணவரவேற்புக்கு வாடகைக்குவிட்டது, ராணிமேரி கல்லூரி தலைமை செயலகமாக மாற்றப்பட முயற்சித்தது, கண்ணகி சிலை அகற்றப்பட்டது என முதல்வருக்கு தெரியாமலேயே நடைபெற்ற நிகழ்வுகள் பல பல.

ஒரு விஷயத்துக்காக அவரை பாராட்டவேண்டும்.

இப்படி எல்லாம் சொல்லி அந்த நேரத்தில் விவகாரத்தை சரிக்கட்டிவிட்டாலும், இது வரை எந்த அதிகாரியையும், அமைச்சரையும் இந்த காரணத்துக்காக அவர் நடவடிக்கை எடுத்ததில்லை. ‘பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? எதுவும் தவறல்லவே’ என்பதை முதல்வர் நன்றாக உணர்ந்து நடுநிலையோடு நடந்துகொண்டிருக்கிறார்.

இவ்வளவு கடுமையான மின்வெட்டு நிலவுவதை தன்னிடம் மறைத்து, தன்னை ஆருயிர் அன்பு சகோதரியாக கொண்டாடும் தமிழக மக்களை வாட்டி வதைத்த மின் துறை அமைச்சர் மீதே அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதில் இருந்தே அவரது தாயுள்ளத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

எனக்கு மிக நெருங்கிய ஒரு அரசு அதிகாரி முன்பு ஒருமுறை என்னிடத்தில் சொன்னார். தமிழகத்தில் ஜெ. தலைமையிலான அதிமுக அரசு அமைந்தால் உடனடியாக அமலுக்கு வரும் ஒரே கொள்கை “அதிகாரிகளின் சாதனைகள் என்பது அரசின் சாதனையாக பார்க்கப்படும்; ஆனால் அரசின் தவறுகள் எல்லாம் அதிகாரிகளின் தவறுகளாகவே சித்தரிக்கப்படும்” ஆறுதல் என்னவென்றால், அப்படி சித்தரிக்கப்பட்ட தவறுகளை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எதுவும் இருக்காது.

எது எப்படியோ, தமிழகத்தின் மிக சிறந்த நிர்வாகி என புகழப்பட்ட ஜெயலலிதா அவர்களின் நிர்வாக பல்டிகள் மக்களுக்கும் மீடியாவுக்கும் பழகிப்போய்விட்டன. அதனால் தான் ஒவ்வொரு முறை அவர் தவறு செய்யும்போதும், அந்த தவறை மற்றவர்கள் மீது தூக்கி எறியும்போதும் யாரும் பெரிதாக எந்த உணர்வும் வெளிப்படுத்துவதில்லை.

அப்படியான ஒரு நிகழ்வாகவே இன்றைய நிகழ்வும் அமையும், இனியும் அமையும் என எதிர்பார்ப்போமாக. ஒரு வழிப்போக்கன் போல காட்சிமாற்றங்களை கண்டு ரசிக்கும் நமக்கு இவை ஒரு நல்ல கேளிக்கை என்பதை தவிர குறிப்பிடத்தக்க எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

Monday, May 27, 2013

அரசு பள்ளியும் ஆங்கில கல்வியும்


 
சமீபத்தில் தமிழக அரசு ஒரு உத்தரவை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டில் இருந்து ஆங்கில வழி கல்வியும் வழங்கப்படவேண்டும்.

இந்த அறிவிப்பு வெளியானதும் திமுக தலைவர் தனது முதலாவது கண்டன அறிக்கையை வெளியிட்டு அரசின் அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தியுள்ளார். மேலும் பல தமிழுணர்வாளர்களும் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்!

என்னை பொறுத்தவரை அரசின் இந்த அறிவிப்பில் எதிர்ப்பதற்கு எதுவுமிருப்பதாக தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் மகிழ்ச்சியோடு வரவேற்கவேண்டிய ஒரு அறிவிப்பு இது.

இந்த திட்டம் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1982ல் கொண்டு வந்த திட்டம் தான். குறிப்பிட்ட சில அரசு பள்ளிகளில் மட்டும் இருக்கும் இந்த திட்டம் இனி அனைத்து அரசு பள்ளிகளுக்கும், மாநகராட்சி/நகராட்சி பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட்டு இருக்கிறது.

1985 ம் ஆண்டு வரை (எனது ஐந்தாம் வகுப்பு வரை) நான் ஆங்கிலவழி மெட்ரிகுலேஷன் பள்ளியில் தான் படித்து வந்தேன். அப்பாவின் வேலை பிரச்சனைகாரணமாகவும் குடும்ப சூழல் காரணமாகவும் 6 ம் வகுப்பிலிருந்து தனியார் பள்ளியில் தொடர்ந்து பயில முடியாத நிலை.

கோவை சித்தாபுதூரில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தான் எனது 6 ம் வகுப்பு தொடர்ந்தது. அதுவும் ஆங்கில வழியில். அப்போதே அந்த வசதி இருந்ததை சுட்டிக்காட்டவே இந்த சம்பவத்தை சொல்கிறேன்.

 

குறைந்த கட்டணத்தில், அரசு பள்ளியில் தரமான ஆங்கில கல்வி பெற்றதன் பயன் தான் எனது இன்றைய வளர்ச்சி என்பதில் எனக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு!

ஆங்கிலவழி கல்வி ஏன்?

இந்தியா மிக வேகமாக வளரும் நாடு. பல்வேறு நாடுகளுடனும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வர்த்தக தொடர்புடையவர்கள் தான் நாம் எல்லோருமே. எனவே எந்த ஒரு விஷயத்துக்கும் நமக்கு ஆங்கில அறிவு அவசியமாகிவிட்டது.

ஆயிரம் ரூபாய்க்கு ஒரு செல்ஃபோன் வாங்கினாலே அதன் வழிகாட்டி புத்தகத்தை படித்தறிந்துகொள்ள ஆங்கிலம் தேவை. தமிழகத்துக்குள்ளேயே உழன்றுகொண்டிருக்கும் புழுக்கள் அல்ல நாம். பிற மாநிலங்கள் பயணிக்கையிலும், பிற நாடுகள் கடக்கையிலும் நமக்கு ஆங்கிலம் அவசியம் ஆகிறது.

ஆங்கில அறிவு என்பது கிட்டத்தட்ட அடிப்படை தகுதி என்கிற அளவிற்கு இன்று ஆகிவிட்டது. எந்த ஒரு தகவலும் ஆங்கிலம் இன்றி வருவதில்லை.

தாய்மொழியிலேயே பயின்றால் என்ன குறை?

ஒரு சாரார் தங்களது வழக்கமான குதர்க்க கேள்விகளை முன்வைத்து வாதாடுவது உண்டு. இந்த விஷயத்திலும் அது இல்லாமல் இல்லை. சீனா போன்ற நாடுகள் முழுமையாக தாய்மொழி கல்வி தானே அமல்படுத்தி இருக்கின்றன? அவர்கள் வளரவில்லையா? என்றொரு கேள்வி இணையதமிழுணர்வாளர்களால் சுற்றுக்கு விடப்பட்டு இருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் நியாயமான கேள்வி போல தான் தோன்றும்!

சீனா மிக பெரிய நாடு. மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு. ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி என்பதால் பரந்து விரிந்த அந்த நாட்டின் எந்த மூலை முடுக்குக்கு சென்றாலும் ஒரு சீனன் தகவல் பிரச்சனையில் சிக்கிக்கொள்ளாமல் முழு ஆயுள்காலமும் வாழ்ந்துவிட முடியும். வெளிநாடு செல்ல நேர்கையில் மட்டும் தான் அவனுக்கு சிக்கல்.

இந்தியா அப்படி அல்ல. இந்தியா அடிப்படையில் ஒரு நாடு அல்ல. இது மாநிலங்களின் கூட்டமைப்பு. இங்கு வழக்கத்தில் இருக்கும் மொழிகள் 200க்கும் மேல். அதில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 21.

நமது தாய்மொழியை எடுத்துக்கொண்டால், தமிழகம் புதுவை தவிர பிற மாநிலங்களுக்கு செல்கையில் நமக்கு நம் தாய்மொழியால் எந்த உபயோகமும் இல்லை. இதே நிலை தான் மற்ற நாடுகளுக்கு பயணிக்கையிலும்.

தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்து புதைந்துகொள்ளும் மனிதர்களுக்கும், தமிழகம் தவிர பிற மாநிலங்களோடோ, பிற நாடுகளோடோ எந்த தகவல் தொடர்பும் வைத்துக்கொள்ளாத மனிதர்களுக்கும் வேண்டுமானால் தமிழ் போதுமானதாக இருக்கும். ஆனால் பிற மாநிலங்கள், பிற நாடுகள் ஆகியவற்றுடன் தொழில், பயண தொடர்பு கொண்டவர்களுக்கு தமிழ் போதாது.

இதை இன்னும் கொஞ்சம் சுருக்கி பார்த்தால், இந்தியாவில் பயணிக்க ஹிந்தியும், பிற நாடுகளுடன் தொடர்புக்கு ஆங்கிலமும் என்றொரு மும்மொழி கொள்கைக்கு முன்னர் இந்திய அரசு முயற்சி செய்தது நினைவுக்கு வரலாம். ஒருவேளை அந்த கொள்கை வென்றிருந்தால், இந்தியாவில் அனைத்து மாநிலத்தவரும் தத்தம் தாய்மொழியோடு, ஆங்கிலம் ஹிந்தி ஆகிய பொதுமொழியையும் கற்று இந்தியாவுக்கு என்று ஹிந்தியும் பிற நாடுகளுக்கு என்று ஆங்கிலமும் என வழக்கத்திற்கு வந்திருக்கும். இது கிட்டத்தட்ட சீனாவை உதாரணம் காட்டும் ‘தமிழுணர்வாளர்களின்’ கருத்துக்கு உடன்பாடானதாக இருந்திருக்கும்.

ஆனால், நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் இரு மொழி கொள்கையே போதும் என உறுதியாக இருந்ததால், மாநிலத்துக்கு தாய்மொழி என்றும், பிற மாநிலங்கள், பிற நாடுகள் என அனைத்துக்கும் பொதுவாக ஆங்கிலம் என்றும் இன்றைக்கு முடிவாகி இருக்கிறது.

இப்போது என்ன அவசியம்?

இதுவரை தமிழகம் உலக வரைபடத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்திருந்த ஒற்றை மாகாணம். ஆனால் இப்போதோ உலக வரைபடத்தில் மிக முக்கியமான மாகாணம். தகவல் தொழில் நுட்பம், வாகன உற்பத்தி, உயர் தகுதி இயந்திர உற்பத்தி, என பல துறைகளிலும் வேகமாக முன்னேறி வரும் பகுதி. இங்குள்ளவர்களுக்கு அடுத்த இருபது ஆண்டுகளுக்கான தொழில்வாய்ப்புக்கு இப்போதே ஆச்சாரம் இட்டுக்கொண்டிருக்கும் பகுதி.

நம் மக்களுக்கான வேலை வாய்ப்பு, வளர்ச்சி எல்லாமும் இது போன்ற பெரும் தொழில் நிறுவனங்களை நம்பி என ஆகிவரும் சூழலில், உலகோடு ஒத்திசைந்து வாழவேண்டும் எனும் வள்ளுவன் வாய்மொழிக்கேற்ப நம்மை நாமே தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசர அவசிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது. எனவே தான் அனைவரும் ஆங்கில கல்வி பயின்று அதில் தக்க தேர்ச்சியும் பெறவேண்டும், அது தான் இனி வரும் காலங்களில் அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் என்பதை இப்போதைய அரசு உணர்ந்து இந்த திட்டத்தை அறிவித்து இருக்கிறது.

எதிர்கால கல்வி வளர்ச்சி?

ஆங்கிலம் என்பது அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் மட்டுமே பயில முடியும் என்கிற நிலையில் இருந்ததால், நம் மக்களில் 63% பேர் இன்னமும் அரசு பள்ளிகளில் தான் பயின்று வருகிறார்கள். இன்றைக்கு வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களிடம் திறமை இருக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு இல்லாததால் தான் பலரும் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கிறோம் என்கிற ஆணவத்திலேயே பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஏகபோகமாக செயல்பட்டு வருவதையும் நாம் அறிவோம்.

அரசே அரசு பள்ளிகளில் குறைந்த கட்டணத்தில் ஆங்கில கல்வி அளிப்பதன் மூலம் இனி அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கவும், தங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளவும், வேலை வாய்ப்பில் தன்னம்பிக்கையுடன் போட்டியிடவும் ஒரு சிறப்பான வாய்ப்பு ஏற்படும்.

ஆங்கில கல்வி அறிவு இல்லாததால் மேல்படிப்பு படிக்க தயங்கி 12ம் வகுப்போடு படிப்பை ஏறக்கட்டிய நிலை மாறி அனைவருமே பட்டதாரியாகவும் இது அடிப்படை வாய்ப்பாக அமையும்.

இதன் மூலம் கல்வி வளர்ச்சியும் மேம்படும். தனியார் கல்வி நிலையங்களின் ஆதிக்கமும் மட்டுப்படும். ஊரக மாணவர்களும் நகர மாணவர்களுக்கு நிகரான கல்வியறிவு பெறுவார்கள்.

இப்படியான ஒரு திட்டத்தை கண்டிக்கும் நபர்கள் யாராயினும் அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, நம் மாணவர்களை ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே அடைத்து வளர்ச்சியடைய முடியாமல் செய்ய விரும்பும் சிறுமதியாளர்கள் என்றும் முத்திரை குத்தப்படவேண்டியவர்களாகின்றார்கள்.

*** **** **** ****

பிற்சேர்க்கை : 17 ஆண்டுகளுக்கு பின் என் பள்ளிக்கு மீண்டும் சென்று வந்த நினைவலைகள். புகைப்பட தொகுப்பு http://www.facebook.com/media/set/?set=a.1210434535992.2034092.1082597225&type=3

Tuesday, August 28, 2012

கல்வி அறிவு ஏன் 100% இல்லை ?


கல்வி ஓன்றே அழியா செல்வம். 

பல்லாயிரம் வருஷத்துக்கும் முன்பே நம் தமிழ் ஆன்றோர்கள் இதை தெளிவா புரிஞ்சு வெச்சு சொல்லியிருக்காங்க. ஏன் அப்படி சொன்னாங்க? சொத்து சுகம், நிலம், புலம் நீச்சு, மச்சு பரம்பு எல்லாமே அழிஞ்சு ஒருவனை வாழவிடாம செஞ்சிர வாய்ப்பு இருக்கு. ஆனா படிச்ச படிப்பு எந்த காலத்திலும் அவனை கைவிடாது. ஒருவேளைன்னாலும் ஒருவேளை சோத்துக்கு அவனுக்கு அது வழிபண்ணும்னு தான் தெளிவா சுருக்கமா அதை சொல்லி வெச்சாங்க நம்ம முன்னோர்கள்.

சரி, நாம இப்போதைய கதைக்கு வருவோம்.

கேரளா & புதுவையில் கல்வி கற்றவர்களின் சதவிகிதம் 100% மற்ற மாநிலங்களில் எதிலும் 100% கல்வி அறிவு உள்ளவர்கள் இல்லை. தமிழ்நாட்டில் 80.3% (2011). இதிலிருந்து நமக்கு தெரியவர்ற விஷயம் என்னன்னா, படிக்காதவங்க, படிப்பறிவு இல்லாதவங்க நாட்டில் ஜாஸ்தி இருக்காங்க. ஒட்டு மொத்த இந்தியாவில் 70% தான் கல்வியறிவு. அதாவது 30% பேர் கிட்டத்தட்ட 33 கோடி பேருக்கு கல்வியறிவு இல்லை.
இந்தியா சுதந்திரம் கிடைச்சு, 65 வருஷம் ஆயிருச்சு. நம்மை நாமே ஆண்டுட்டு வர்றதா பெருமை பேசிட்டு இருக்கோம். ஆனா, நம்ம பிள்ளைகளுக்கு நம்மால் படிப்பு சொல்லி கொடுக்க முடியலை.

இந்திய அரசியல் அமைப்பு விதி 21A என்ன சொல்லுது?

The State shall provide free and compulsory education to all children of the age of six to fourteen years in a such manner as the State may, by law, determine

அதாவது, தங்கள் மாநிலத்திலுள்ள குழந்தைகளுக்கு 6 முதல் 14 வயதுவரையும் கட்டாய இலவச கல்வி அளிக்கவேண்டியது ஒவ்வொரு அரசின் கடமை.

இது படி பார்த்தா, ஒவ்வொரு மாநிலத்திலும் 14 வயசுக்கு மேல கல்வியறிவு இல்லாதவங்களே இருக்க கூடாது! அனா, அதே அரசுகள் தான் எங்கள் ஆட்சியில் இத்தனை சதவிதத்தில் இருந்து இத்தனை சதவிதமாக கல்வியறிவை மேம்படுத்தியிருக்கிறோம்னு பெருமையா சொல்லிக்கிறாங்க. நாமளும் சந்தோஷமா கைதட்டிட்டு வந்திடுறோம். ஆனா நாம கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, நியாயமா பார்த்தா 100% ஆகியிருக்கணுமே, ஏன் ஆகலைன்னு யோசிக்கணும். நமக்கு தான் லாஜிக்கா யோசிக்கிற பழக்கமே கிடையாதே?

சரி, இப்படி கடமையை செய்யாத அரசுக்கு தண்டனை இல்லையா? இருக்கு. அதே அரசியல் சட்டம் என்ன சொல்லுதுன்னா, அரசியல் சட்டம் சொல்லும் கடமைகளை சட்டப்படி அமல்செய்வேன், அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட்டு ஆட்சி செய்வேன்னு சொல்லி பதவி ஏற்கிற அரசுகள், அப்படி அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றலைன்னா அதை கலைச்சிரலாம்னு சொல்லுது. அப்படி பார்த்தா, கேரளா & புதுவை மாநிலங்களை தவிர வேறு எந்த மாநில அரசுக்கும் இன்னைய தேதிக்கு ஆட்சி செய்யும் உரிமை இல்லை, மத்திய அரசு உட்பட. ஏன்னா அவங்க ஒரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கல்வி உரிமையை மறுத்திருக்கறதோடு, அரசியல் சட்டம் விதிச்ச கடமையையும் மீறி இருக்காங்க. ஆனா இப்படி எல்லாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை.

அதனால் நாம மத்த விஷயங்களை பத்தி அலசலாம்!

சட்டம் சொல்றபடி 6 – 14 வயசு வரைக்கும் உள்ளவங்களுக்கு இலவச கட்டாய கல்வி இப்போ கொடுக்கப்படுதா?

அந்த சட்டத்தை எந்த அரசுமே மதிக்கலை. மதிச்சிருந்தா, அந்த அரசியல் சட்டப்படி நடந்திருந்தா, நாட்டில் தனியாக் பள்ளிகளே இருந்திருக்காது. தனியார் பள்ளிகளை மேம்படுத்தறதுக்காக, அரசு பள்ளிகளை தரமில்லாததா ஆக்கியதோட, சட்டப்படியான கடமையையும் எந்த அரசாங்கமும் (கட்வி வேறுபாடு இல்லாம) கண்டுக்கவேயில்லை. கேரளாவில் மட்டும் தான் அரசு பள்ளிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கறாங்க.

நாம நம்ம தமிழ்நாட்டை பற்றி மட்டும் லைட்டா விவாதிக்கலாம்!

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், எல்லா குழந்தைகளும் பள்ளிக்கூடம் வந்து படிக்கணும்னு முடிவு பண்ணினாரு. ஆனா அதில் நிறைய சிக்கல்கள் இருந்தது. முதல் சிக்கல், ஜாதி ரீதியா சில மானவர்கள் சில மாணவர்களுடன் சேர்ந்து படிக்க அவங்க பெற்றோர்கள் விரும்பலை. இதை தடுக்க இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரிவு படுத்தினாரு. அதுக்கு அப்புறம், புள்ளைங்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டு நாங்க என்ன பண்றது? 

வேலைக்கனுப்பினாலாவது கால் காசு சம்பாதிக்கும்ன்ற புலம்பலை கேட்டு, ஏற்கனவே காமராஜர் கொண்டுவந்த மதிய உனவு திட்டத்தை எல்லா பள்ளிகளுக்கும் கட்டாயமாக்கி விரிவு படுத்தினாரு. யூனிசெஃப் அறிக்கையில் குழந்தைகளுக்கு உரிய ஊட்டச்சத்து கிடைக்கறதில்லைங்கறதை படிச்சிட்டு, மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமா மாற்றி ஊட்டச்சத்துக்கும் வழி செஞ்சாரு. புஸ்தகம், நோட்டு, சீருடை கவலை எல்லாம் பெற்றவங்களுக்கு இருக்கக்கூடாதுன்றதுக்காக, எல்லாத்தையுமே அரசே இஅலவசமா செய்யும்னு அறிவிச்சாரு. ரொம்ப தூரத்தில் பள்ளிக்கூடம் இருக்கே எப்படி போறதுன்னு யோசிச்சவங்களுக்காக, எல்லா அரசு பஸ்களிலும் இலவசமா பயணிக்க பாஸ் கொடுத்தாரு. இத்தனையும் எதுக்காக செஞ்சாரு எம்.ஜி.ஆர்?
நம்ம புள்ளைங்க நல்லா படிக்கணும். படிப்புன்ற ஒரு விஷயம் அவங்களுக்கு இருந்தாலே போதும், அவங்க வாழ்க்கையை அவங்களே அழகா தீர்மானிச்சுப்பாங்க, எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறிடுவாங்கன்னு தீர்க்கதரிசனமா முடிவு செஞ்சு இத்தனையையும் செஞ்சாரு. இதன் காரணமா தமிழகத்தில் கல்வியறிவு விகிதம் 52% னு உயர்ந்தது.

எம்.ஜி.ஆருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவங்க சின்ன சின்னதா சில முன்னேற்றங்களை கொடுத்தாங்க. ஜானகி எம்.ஜி.ஆர் இலவசமா செருப்பு கொடுத்தார். கருணாநிதி, சத்துணவுடன் முட்டையும் பழமும் கொடுத்தார். பஸ் வசதியில்லாத பகுதிகளிலிருந்து 10 வகுப்புக்கு மேல் யாரும் தொலை தூரம் பயணித்து படிப்பதில்லைன்றதை அறிஞ்ச ஜெயலலிதா இலவச சைக்கிள் கொடுத்தார். இப்படி எல்லாருமே நம் பிள்ளைகள் படிக்கணும்னு தான் எல்லா முயற்சியும் செஞ்சாங்க.



பள்ளி குழந்தைகள் சரி. வயசானவங்க, வேலைக்கு போறவங்க எல்லாம்?
அதுக்காக தான் மத்திய அரசு,அனைவருக்கும் கல்வி (SSA – Sarva Siksha Abhyan)னு ஒரு திட்டம் கொண்டுவந்தாங்க. முதியோர் கல்வி, வேலைக்கு போறவங்களுக்காக இரவு பாட சாலை ன்னு பல பல திட்டங்களை கொண்டுவந்து சமூகத்தின் அனைத்து தரப்பினரும் கல்வியறிவு பெற்று எல்லோரும் எழுத படிக்க தெரிந்திருக்கவேண்டும்னு முடிவு செஞ்சு நடந்துட்டு இருக்கு.

இதுக்காக மத்திய மாநில அரசுகள் பட்ஜெட்டில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கி எல்லோருக்கும் கல்வி கொடுக்க முயற்சி செய்யுறாங்க.

மத்திய அரசு இன்னும் ஒரு படி மேலே போயி, மத்திய அரசுக்கு செலுத்தும் எல்லா நேரடி, மறைமுக வரிகளிலும் 2% கல்வி துணைவரியும் (Education CESS) 1% உயர்கல்வி துணைவரியும் (Secondary & Higher Education CESS) வசூலிக்கிறாங்க. 

இது எதுக்காக? 

மத்திய மாநில அரசுகள் எவ்வளவு நிதி ஒதுக்கியும், நாட்டில் எல்லோருக்கும் கல்வி கொடுக்க முடியலை. பள்ளிகள் கல்லூரிகளை தரமுயர்த்த முடியலை. அதனால் அதுக்கான செலவுக்கான தொகையை இப்படி வசூலிச்சு அதை முழுக்க முழுக்க கல்விக்கே செலவு செய்யணுமு 2007 ம் ஆண்டு முடிவு செஞ்சு அன்னையிலிருந்து வசூலிக்க ஆரம்பிச்சாங்க. முதல் வருஷம் 10,300 கோடி ரூபாய் வசூல் ஆச்சு. அதுக்கப்புறம் சேவை வரி விரிவாக்கம் காரணமா வருஷத்துக்கு சராசரியா 20,000 கோடி ரூபாய் கல்வி துணை வரி மட்டுமே வசூல் ஆச்சு. இது தவிர பட்ஜெட் நிதி ஒதுக்கீடு வேறே (2010-11 ம் ஆண்டுக்கான ஒதுக்கீடு 21,000 கோடி ரூபாய். ஆனால் அனில் போர்டியா குழு பரிந்துரை 35,659 கோடி. அரசு அதை விட குறைவா தான் ஒதுக்கிச்சு! அது தனி சப்ஜெக்டு)

இப்படி வசூலான கல்வி துணை வரியை கிட்டத்தட்ட 3 வருஷமா மத்திய அரசு உபயோகமே படுத்தாம வெச்சிருந்தாங்க. யாரோ ஒரு புண்ணியவான் போட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த சுளீருக்கு பிறகு, இப்போ அதை செலவு செய்ய அரசு திட்டமிட்டிருக்கிறதா தகவல் வருது.

இன்னும் இதில் விரிவா பேச நிறைய இருந்தாலும், நான் முக்கியமான விஷயங்களை மட்டும் உங்ககிட்டே சொல்லி இருக்கேன். இதில் இருந்தே நீங்க சில விஷயங்களை யூகிச்சிக்கலாம்.

எத்தனையோ கோடி அரசு செலவு செய்யுறதா சொல்றாங்க, ஆனா அரசு பள்ளிகள், கல்லூரிகள் தரமுயரலை. தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் கொள்ளை கொள்ளளயா சம்பாதிக்கிறாங்க. ஆனாலும் கல்வி தரம் உயரலை. (டிகிரி படிச்சிட்டேன்னு பெருமை சொல்றவங்களுக்கு பேங்குக்கு போயி அவ்ங்க ஃபீஸ் கட்டறதுக்கான ஒரு டி.டி கூட எடுக்க தெரியாத கல்வியை தான் நாம கொடுத்திருக்கிறோம்!) எல்லா பணத்தையும் கோடி கோடியா அரசு செலவு செய்ததா சொல்லுது. ஆனாலும் 100% கல்வி அறிவு முழுமையா கிடைக்கலை. அப்படி கடமையை செய்ய தவறிய அரசுகள் மேல இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இது தான் இந்த நாட்டின் கல்வி நிலைமை. பி.எஸ் வீரப்பாவின் வசனம் ஞாபகம் வருது இல்லே? “இந்த நாடும்.. நாட்டு மக்களும்……”


Related Posts:

Printfriendly