Saturday, July 20, 2019

தமிழ்நாடு நாள்

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சட்டமன்றத்தில் வெளியிட்ட ஒரு அறிவிப்பு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நவம்பர் மாதம் முதல் நாள், இனி ஆண்டு தோறும் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்பது தான் அந்த அறிவிப்பு.

இது சரியான முடிவா என கேட்டால் நிச்சயமாக இல்லை என்பேன்.

இந்தியா 1947 ஆகஸ்டு 15 ஆம் நாள் விடுதலை அடைந்தது. 1950 ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு ஆனது. அன்று முதல் சென்னை மாகாணமாக இருந்துவந்த நமது மாநிலம், 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டது.

கன்னட மொழி பேசும் பகுதி கர்நாடகம் என்றும், தெலுங்கு மொழி பேசும் பகுதி ஆந்திர பிரதேசம் என்றும், மலையாளம் மொழி பேசும் பகுதி கேரளா என்றும் பிரித்து கொடுக்கப்பட்டது. மீதம் இருந்த பகுதி தான் சென்னை மாகாணமாக தொடர்ந்தது.

இப்படி மொழி வாரி மாநிலமாக பிரிக்கப்படும் போது, எல்லை பிரிப்பதில் பல பல பிரச்சனைகள் எழுந்து பல போராட்டங்கள் நடத்தி தான் இன்றைய எல்லை வகுக்கப்பட்டது.

திருப்பதியை தமிழகத்துக்கு தர மறுத்து ஆந்திரா எடுத்து கொண்டது. தேவிகுளம் பீர்மேடு போராட்டம் நமக்கும் கேரளாவுக்கும் இடையில் நடந்தது. கன்னியாகுமரி நம்மிடமே தக்க வைத்துக்கொள்ள நாம் பெரும் போராட்டம் நடத்த வேண்டி வந்தது.

இதில் நாம் இழந்தவைகள் அதிகம்.

இந்த பிரிவினை நமக்கு சந்தோஷம் தந்த நிகழ்வு அல்ல. எனவே இதில் கொண்டாட எதுவும் இல்லை.

அப்படியென்றால், தமிழ்நாடு நாள் என நாம் கொண்டாட வேண்டாமா?

கேரளா, கர்நாடகா, எல்லாம் நவம்பர் முதல் நாளை தங்கள் மாநில நாளாக கொண்டாடுவதை போல நமக்கும் ஒரு நாள் வேண்டாமா? அது எந்த நாள்?

தமிழ்நாடு நாள் என நாம் கொண்டாட பொருத்தமான நாள் எனில் அது ஜனவரி மாதம் 14 ஆம் நாள் தான். தை திங்கள் முதல் நாள்.

1969 ஆம் ஆண்டு, ஜனவரி 14 தேதி வரை சென்னை மாகாணம் என் இருந்த நமது மாநிலத்தின் பெயர் அன்று முதல் தான் ' தமிழ்நாடு ' என மாற்றப்பட்டது.

இந்த சிறப்புமிகு தீர்மானத்தை பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி, நமது மாநிலத்துக்கு ' தமிழ்நாடு ' என பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

எனவே தமிழ்நாடு நாள் என்பதை நவம்பர் முதல் நாளுக்கு பதிலாக ஜனவரி 14 அல்லது தை முதல் நாளில் கொண்டாடுவது தான் பொருத்தமாக இருக்கும்

தமிழக அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Printfriendly