Monday, April 20, 2020

கொரோனா Rapid Test Kit விலை பிரச்சனை

தமிழக அரசு கொரோனா தொற்று கண்டறிவதற்கான Rapid Test Kit வாங்கிய விவகாரத்தில் பிரச்சனை எழுப்பப்பட்டு உள்ளது

சட்டீஸ்கார் அரசு தென் கொரியாவில் இருந்து Rapid Test Kit ஒன்றுக்கு ₹337 எனும் விலையில் வாங்கப்போவதாக அறிவித்ததில் கிளம்பியது பிரச்சனை

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசு வாங்கும் விலை என்ன என்பதை வெளியிடவேண்டும் என கேட்டார்

அதை அடுத்து தமிழக அரசும் சீனாவில் இருந்துநாம் Kit ஒன்றுக்கு ₹600 (வரிகள் தனி) என வாங்குவதாகவும் இந்த விலை ICMR ஆல் நிர்ணயிக்கப்பட்டது எனவும் சொல்லி அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டது.

இத்துடன் முடிந்து இருக்க வேண்டிய பிரச்சனை.. வேறு வகையில் மற்றவர்களால் திருப்பப்பட்டது

அதாவது சட்டீஸ்கார் ₹337 க்கு வாங்கும் kit ஐ எதற்காக தமிழகம் ₹600 க்கு வாங்க வேண்டும்? டெல்லி சொல்வதை தான் தமிழகம் கேட்க வேண்டுமா? தமிழக அரசும் டெண்டர் முறையில் வாங்கினால் குறைவாக கிடைக்குமே என்று எல்லாம் கேள்விகள் எழுந்தன. இந்த கேள்விகள் அனைத்தும் முதல் நோக்கில் நியாயமானவை எனினும் சற்றே இதன் விவரங்களை சுருக்கமாக பார்ப்போம்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி தினசரி 100 என்கிற எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்ப்ட்டு வந்தது. பரிசோதனை நிலையங்கள் குறைவு. பரிசோதனை முடிவுகள் தாமதமாக வந்து கொண்டு இருந்தன.

நமக்கு கிட்கள் மிக அவசரமாக தேவைப்பட்டது. ICMR ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கருவிகளின் பட்டியலை இறுதி செய்து இருந்ததாலும், மத்திய அரசின் முடிவுப்படி ICMR தான் கொரோனா நோய்த் தடுப்பு பணியின் Nodal Agency என்பதாலும், அவர்கள் ஏற்கனவே சீன நிறுவனமான Wondfo வின் kit வாங்க ஆர்டர் செய்து இருப்பதாலும், தமிழகமும் அதே கருவியை அதே விலைக்கு ஆர்டர் செய்து இருக்கக் கூடும். இதில் தவறு ஒன்றும் இல்லை.

சட்டீஸ்கார் நிலைமை வேறு. 

நேற்று வரை அங்கே 36 பேருக்கு தான் பாதிப்பு (தமிழகத்தில் சுமார் 1500). அவர்கள் நிதானமாக டெண்டர் கோரி தென் கொரிய நிறுவனத்தை இறுதி செய்து உள்ளனர். இனி ஆர்டர் கொடுத்து எப்போது வரும் என்பது தெரியாது. நமக்கு கிட் வந்து சேர்ந்து சோதனைகள் செய்ய தொடங்கியாகி விட்டது.

இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.. இரண்டும் வெவ்வேறு நாட்டு பொருள் (சட்டீஸ்கார் வாங்குவது தென் கொரியா பொருள், தமிழகம் வாங்குவது சீன பொருள்). 
மேலும் இரண்டு பொருட்களின் specification உம் வெவ்வேறு. எனவே இரண்டுக்கும் ஒரே விலை எதிர்பார்ப்பது தவறு.

எனவே, சட்டீஸ்கார் ₹337 கொடுத்து வாங்கிய பொருளை தமிழகம் ₹600 கொடுத்து வாங்கி இருப்பதாக சொல்வது சரி அல்ல. தமிழகம் வாங்கி இருப்பது சட்டீஸ்கார் வாங்கிய பொருள் அல்ல. இந்த புரிதல் அவசியம்.

அடுத்ததாக ICMR முடிவு செய்த விலைக்கு தான் தமிழகமும் வாங்கி உள்ளது. 

அவசர நிலையில் டெண்டர் வழிமுறைகளில் விலக்கு உள்ளது. அதிக விலை கொடுத்தாவது உடனடியாக kit வாங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனாலும் ICMR நிர்ணயித்த விலைக்கே தமிழக அரசும் வாங்கி உள்ளது.  ஒரு ரூபாய் கூட அதிகம் இல்லை.

இன்னொரு குற்றச்சாட்டு என்னவெனில் ஆர்டர் ஏன் சென்னையில் ஒரு சிறு நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது என்பது.

மருத்துவ பொருட்கள் இறக்குமதி லைசன்ஸ், அதன் பகிர்மானம், வினியோகம் என்பது குறித்த புரிதல் உள்ளவர்கள் நிச்சயமாக இப்படி கேள்வி கேட்க மாட்டார்கள். 
ICMR டெல்லியில் Aark Pharmaceutical எனும் நிறுவனம் மூலமாகவும் தமிழக அரசு சென்னையில் Shan Biotech எனும் நிறுவனம் மூலமாகவும் ஆர்டர் கொடுத்து உள்ளது. இரண்டு நிறுவனங்களும் சீனாவின் Wondfo நிறுவனத்தின் அதே Test Kit ஐ தான் வாங்கி கொடுக்கிறது. விலையும் அதே ₹600 (வரிகள் தனி) தான். இதில் என்ன தவறு உள்ளது என்றும் புரியவில்லை.

நல்லவேளையாக தமிழக அரசு விலை விவரத்தை வெளியிட வேண்டும் என கேட்ட திமுக தலைவர், விலை விவரம் மற்றும் ஆவணங்கள் வெளியான பின் அதை வைத்து அரசியல் செய்ய முயலவில்லை. 

இரண்டும் வெவ்வேறு நாட்டு நிறுவனங்கள்.. வெவ்வேறு கருவிகள்.. அதனால் வெவ்வேறு விலை இருப்பது இயல்பு என்கிற புரிதல் திமுக தலைமைக்கு நிச்சயமாக இருக்கும். அதனால் தானோ என்னவோ இன்று வரை இந்த விஷயத்தில் சிறுபிள்ளைத்தனமான கேள்விகள் எதையும் கேட்காமல் பொறுப்போடு நடந்து கொண்டு வருகிறது தான்.

ஆனால் திமுகவின் ஆதரவாளர்களாக காட்டிக்கொள்ளும் பலரும் ₹337 பொருளை ₹600 கொடுத்து வாங்கி முறைகேடு செய்து இருப்பதாக சமூக வலை தளத்தில் குற்றம் சாட்டுவது.. பொதுவாக திமுகவின் நற்பெயரை களங்கப்படுத்தும் செயலாகவே பார்க்கப்படும் என்கிற விஷயத்தை திமுக உணர்வது நல்லது.

வெவ்வேறு பொருளுக்கு ஒரே விலை எதிர்பார்க்கலாமா என்கிற லாஜிக்கான கேள்விகள் கேலியாக எழுமானால், திமுக போன்ற இயக்கத்தின் இமேஜுக்கு அது நல்லது அல்ல என்பதை திமுக தலைமை உணர்ந்து நடவடிக்கை எடுப்பது நலம்.

இந்த நிமிடம் வரை திமுக தலைவரோ அல்லது முக்கியஸ்தர்களோ இந்த மாதிரி கேள்விகளை முன் வைக்காமல் இருப்பதே அவர்களது புரிதலுணர்வையும் பக்குவத்தையும் நிர்வாக அறிவையும் உணர்த்துகிறது.

தமிழக மக்களின் நலன், அவர்களது ஆரோக்கியம் ஆகியவை முதன்மையாக கருதி எல்லோரும் களத்தில் சுழன்று கொண்டு இருக்கும் நிலையில் இல்லாத ஒரு பிரச்சனையை கிளப்பிக் கொண்டு இருப்பது சரியல்ல என்பதை திமுக தலைவர்கள் உணர்வார்கள் என நம்பலாம். 

மாறாக, தமிழகத்துக்கு வரவேண்டிய kit களை சீனா அமேரிக்காவுக்கு திருப்பி விட்டதன் தாமதத்தையும், மத்திய அரசு இடை புகுந்து தமிழக ஆர்டரில் இருந்து பிரித்து பிற மாநிலங்களுக்கு வழங்குவதையும் தமிழக அரசுடன் இணைந்து கேள்வி கேட்பது தான் தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய கடமையாக இருக்கும் என்பதையும் யாரேனும் எடுத்து சொல்வது நலம்.


No comments:

Post a Comment

Printfriendly