Wednesday, September 1, 2021

திருக்கோவிலில் திருக்குறள்

நடைபெற்று வரும் தமிழ் நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் "தமிழ் வளர்ச்சி துறை" மானிய கோரிக்கை குறித்த விவாத்துக்கு பதில் அளித்து பேசிய மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

அதில் ஒன்று இந்து சமய அறநிலைய துறையுடன் இணைந்து, கோவில்களில் திருக்குறள் வகுப்பு நடத்தப்படும் என்பதும் ஒன்று.

தேவாரம், திருவாசகம் ஆகியவை கோவில்களில் வகுப்பு எடுப்பதை போல திருக்குறளையும் கோவில்களில் வகுப்பாக எடுக்க தமிழக அரசு திட்டம் அறிவித்து இருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் இது தமிழை வளர்க்கும் மற்றும் ஒரு திட்டம் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.

ஆனால் இதன் பின்னே இருக்கும் சில சிக்கல்களை இந்த அரசு ஆராய்ந்து பார்த்ததா என தெரியவில்லை.

சமீப காலங்களாக தமிழ்நாட்டில் திருவள்ளுவரை வைத்து சர்ச்சைகள் உருவாகி வருவது நமக்கு தெரிந்த ஒன்றே.

திருவள்ளுவர் இந்து மத முனிவர் என்றும் திருக்குறள் இந்து மத நூல் என்றும் பாஜகவும் அதன் துணை அமைப்புக்களும் ஒரு புனை கதையை ஏற்கனவே பரப்பி விட தொடங்கி இருக்கிறது.

திருவள்ளுவர் இந்து முனிவர் அல்ல, திருக்குறள் இந்து மத நூல் அல்ல, திருக்குறள் அனைத்து மதங்களுக்கும் பொதுவான கருத்துக்களை வாழ்வியல் அறிவுரைகளை கொண்ட "உலக பொது மறை" என விளக்கங்கள் கொடுத்து கொடுத்து ஓய்ந்து போய் கொண்டு இருக்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

இதற்கிடையில் பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் குதர்க்க புத்தியுடன் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிந்து இருப்பது போல ஒரு போலி படம் ஒன்றை உருவாக்கி பரப்ப தொடங்கினர்.

தமிழ் நாடு அரசு தீர்க்கமான முடிவை எடுத்து திருவள்ளுவர் என்பவர் அதிகாரப்பூர்வமாக வெள்ளுடை அணிந்து வெண்தாடியுடன் வீற்றிருக்கும் திருக்கோலம் தான் தமிழ்நாடு அரசு அங்கீகரித்த படம் என சொல்லி அந்த பிரச்சனைக்கும் முற்றுப் புள்ளி வைத்தது.

***

இப்படியான சர்ச்சைகள் ஒரு வழியாக ஓய்ந்து இருக்கும் வேளையில் தான் தமிழ்நாடு அரசு இப்போது திருக்கோவில்களில் திருக்குறள் வகுப்பு எடுக்கும் திட்டம் பற்றி அறிவித்து இருக்கிறது

மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களின் அறிவிப்பு வந்த உடனேயே, பாஜகவின், அதன் துணை அமைப்புக்களின் ஆதரவாளர்கள், "திருவள்ளுவர் இந்து மத முனிவர் என்பதையும், திருக்குறள் இந்து மத நூல் என்பதையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டது" என்பதை போல ஒரு செய்தியை எல்லோருக்கும் பரப்பி வருகிறார்கள். 

அரசு அறிவிப்பின் உண்மை தன்மையை விளக்கி சொல்ல முடியாத நிலையை தமிழக அரசு நமக்கு ஏற்படுத்தி இருப்பது தான் இப்போதைய சிக்கல். 

அரசின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இருக்கையில் அதற்கு வேறு எந்த காரண காரியங்களையும் சொல்லி நம்மால் மடை மாற்றி விட முடியாது.

நோக்கம் என்னவோ திருக்குறளை பரவலாக்க கொண்டு சேர்க்கும் நோக்கம் தான். ஆனால் அதை கோவில்களில் சொல்லி கொடுப்போம் என்பதையும் தேவாரம் திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்களுடன் ஒப்பிட்டு சொல்லி இருப்பதும் தான் பிரச்சனையை வேறு வகையில் திருப்பி இருக்கின்றன.

உதாரணமாக, இந்து மத கோவில்களில் இருந்து கொண்டு வரும் பழங்களை கூட ஏற்காத சிலர் பிற மதத்தில் குறிப்பாக கிறித்துவ மதத்தில் இருக்கிறார்கள். வேறு ஒரு மதத்தின் அடையாளமாக எது இருந்தாலும் அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள்.

திருக்குறள் இதுவரை பள்ளிகளிலும், பேருந்துகளிலும், அரசு அலுவலகங்களிலும் என பொதுவாக இருந்த நிலையில், குறிப்பிட்ட ஒரு மதத்தின் வழிபாட்டு தலத்தில் திருக்குறளை கொண்டு போய் வைப்பது எத்தகைய மாறுபாடான நிலைப்பாட்டை குழப்பத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்பதை சொல்லி தெரிய வைக்க வேண்டியது இல்லை.

திருக்குறளை ஒரு மதம் சார்ந்த நூலாக மக்களிடத்தில் இந்த திட்டம் கொண்டு சேர்த்து விடுமோ என்கிற அச்சம் எழுவது இயல்பே.

இந்து மதம் என சுருக்காமல் எல்லா வழிபாட்டு தலங்களிலும் என சொல்லி இருந்தால் கூட பிரச்சனை இருந்து இருக்காது என நினைக்கிறேன்.

தமிழ் இலக்கியங்களை பரவலாக்கம் செய்வது தான் நோக்கம் எனில் திருக்குறள் மட்டும் அல்லாமல் வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி என எல்லா தமிழ் இலக்கியத்தையும் கொண்டு சேர்த்து இருக்கலாம்.

திருக்குறள் ஏற்கனவே பள்ளிகளில் கட்டாயமாக்கபபட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் பேருந்துகள் என எங்கும் திருக்குறள் சென்று சேர்ந்து இருக்கிறது. பெரும்பாலான மக்களிடம் திருக்குறள் குறித்த புரிதல் உள்ளது. அதை மீண்டும் கோவில்கள் மூலம் கற்றுக் கொடுக்க வேண்டும் என அரசு முனைவது எதனால் என்பது புரியவில்லை. 

திருக்குறளை பரவலாக்க பல்வேறு வழி முறைகள் இருக்கின்றன.

தமிழ் இலக்கிய பரவல் தான் நோக்கம் எனில் முன்பே சொன்னது போல இதுவரை பரவலாகக் கிடைக்காத பிற தமிழ் இலக்கியங்களை கொண்டு சேர்க்க முயற்சி செய்து இருக்கலாம்

எது எப்படியோ, அரசின் முடிவுக்கு, அது சரியோ தவறோ, ஏதேனும் ஒரு வகையில் நியாயம் கற்பித்து, அரசு செய்வது தான் சரி என சொல்லியாக வேண்டிய நிலையில் பலரும் உள்ளனர்.

ஆழ்ந்து யோசிக்கையில், திருவள்ளுவர் இந்து மத முனிவர் அல்ல என மூச்சு பிடித்து உரக்க சொல்லி களமாடிய நண்பர்களுக்கு தர்ம சங்கடத்தை கொடுத்து இருக்கிறது இந்த அரசு என்று தான் சொல்ல வேண்டும்.







No comments:

Post a Comment

Printfriendly