Monday, February 10, 2025

ஈரோடு கிழக்கு சொல்லும் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் நமக்கு சொல்லும் செய்திகள் பல..

இடைத்தேர்தல் அறிவித்ததும் அதிமுக பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மட்டுமல்லாமல் தவெக போன்ற புதிய கட்சிகளும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன..
பொதுவாக இடைத்தேர்தல் என்பது அவரவர் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு எவ்வளவு இருக்கிறது என்பதை பரிசோதித்து பார்க்கும் களமாக தான் எப்போதும் இருக்கும்.

ஆனால் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்பது பலருக்கு ஆச்சர்யம் தந்தாலும், அந்த புறக்கணிப்புக்கு இரண்டு காரணங்கள் இருப்பதை அரசியல் அறிந்த எல்லோரும் கிட்டத்தட்ட யூகித்து இருந்தார்கள்.

1. திமுக அரசு மீது மக்களுக்கு மதிப்பு குறைந்து உள்ளதா? கூடி உள்ளதா?

2. நாதக கட்சிக்கு மக்களிடம் உள்ள ஆதரவு என்ன?

இந்த இரண்டு கேள்விகளில், திமுக அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை குறையவே இல்லை என்பது பிரச்சார காலத்திலேயே தெளிவாக தெரிந்து விட்டது.

ஆனால் நாதக கட்சி பற்றிய கேள்வி தான் பலத்த எதிர்பார்ப்புக்குள்ளானது. வேறு எந்த கட்சியும் போட்டியிடாத நிலையில், திமுக மீது அதிருப்தியில் உள்ளவர்கள் நாதகவை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது.

கூடவே தேர்தலை புறக்கணிப்பதாக சொன்ன கட்சிகளின் ஆதரவாளர்களும் நாதகவை ஆதரிப்பார்கள் என்றும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

அதிலும் ஈரோடு பகுதியை பொறுத்தவரை அதிமுக பலமான இயக்கம். பாமக, பாஜக போன்ற கட்சிகளும் கணிசமான மக்கள் செல்வாக்கு பெற்றவையே. இவர்கள் திமுகவை ஆதரிக்க மாட்டார்கள். எனவே அந்த வாக்குகள் எல்லாம் நாதகவுக்கு தான் வரும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால்,

பதிவான 1.54 லட்சம் வாக்குகளில் 1.15 லட்சம் வாக்குகள் திமுகவுக்கும், 23,810 வாக்குகள் நாதகவுக்கும் கிடைத்து உள்ளது.

நாதக/அதிமுக/பாஜக/பாமக போன்ற கட்சியினர், ஆதரவாளர்கள், திமுக எதிர்ப்பாளர்கள் என எல்லோரும் சேர்ந்தே 23,810 வாக்குகள் தான் என்பது தான் ஆச்சர்யம்.

இவை சொல்லும் செய்திகளில் சில முக்கியமானவை:

1. வலுவான அதிமுக கூட திமுகவை எதிர்த்து வாக்களிக்கவில்லை

2. பாஜகவினர் ஆதரவு கூட நாதகவுக்கு கிடைக்கவில்லை

3. திமுகவை எதிர்ப்பவர்களை விடவும் திமுகவை ஆதரிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். இது திமுக அரசின் மீதான நம்பிக்கையை காட்டுகிறது.

4. ஆளும்கட்சி அதிகார துஷ்பிரயோகம் செய்து வென்றது, பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார்கள் போன்ற கதைகள் எல்லாம் இந்த தேர்தலை பொறுத்தவரை பயன் அளிக்காது. காரணம் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கூடவா திமுகவை எதிர்த்து வாக்களிக்காமல் இருக்கும்?

5. போட்டியிட களத்தில் வேறு யாருமே இல்லாத நிலையில், வாக்குகள் பிரியாத சூழ்நிலையில், பிற கட்சிகளின் மறைமுக ஆதரவு இருந்தும் கூட வெறும் 23,810 வாக்குகளை தான் நாதக பெற்றிருக்கிறது என்றால், நாதக பெரிதாக யாருக்கும் நம்பிக்கையான கட்சியாக அமையவில்லை என அர்த்தம்.

6. திமுக எதிர்ப்பாளர்கள் கூட நாதகவுக்கு வாக்களிப்பதை விட திமுகவுக்கு வாக்களிப்பது நல்லது என்கிற முடிவுக்கு வரவேண்டும் என்றால்.. திமுகவின் நல்ல பல மக்கள் நல திட்டங்கள் மக்களை ஈர்த்து இருப்பதாக கொள்ளலாம்

7. மிக முக்கியமாக, தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பு இருந்து பெரியாரை சிருமைப்படுத்தியும் களங்கப்படுத்தியும் சீமான் பேசி வந்ததை யாரும் ரசிக்கவில்லை என்பதோடு, அதற்கு எதிர்வினை ஆற்றவும் தயாராக இருக்கிறார்கள் என்பதை உணரலாம். நாதகவுக்கு விழுந்து இருக்கக்கூடிய அதிமுக வாக்குகள் கூட அந்த பேச்சால் தான் விழாமல் போயிருக்கும் என நினைக்கிறேன்.
கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டு காலம் கட்சி நடத்தியும் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாத நிலையில் ஒரு கட்சி இருப்பது அந்த கட்சி தன்னை தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதை காட்டுகிறது.

இனியேனும் மக்கள் நலன் சார்ந்து நாதக சிந்திக்குமேயானால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அது கைகொடுக்கும்.

மக்களின் மன நிலை என்ன என்பதை அறிவதற்காக தான் அதிமுக பாஜக போன்ற கட்சிகள் தேர்தலில் இருந்து ஒதுங்கி நின்றது என்பது உண்மையானால் இப்போதைக்கு திமுகவுக்கு கிடைத்து இருக்கும் ஆதரவு அவர்களது சட்டமன்ற தேர்தல் கூட்டணி கணக்கை முடிவு செய்து இருக்கும்.

திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருந்திருந்தால் திமுக இத்தனை வாக்குகள் பெற்று இருக்காது. நாதகவும் இவ்வளவு குறைவாக பெற்று இருக்காது.

எனவே மக்களுக்கு திமுக அரசின் மீதான நம்பிக்கை குறையவில்லை என்பதை ஈரோடு தேர்தல் உறுதி பட எடுத்து காட்டி இருக்கிறது.

இதனால் பாஜக தனித்து போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்து தாங்கள் பயணிக்க அதிமுகவின் தயவை நாடும் என எதிர்பார்க்கலாம்.

நாதக கைவிடப்பட்ட நிலையில் தவெக மாற்று கட்சியாக முன் நிறுத்தப்படலாம்.

எப்படி இருப்பினும் 2026 தேர்தல் களம் மிகுந்த சுவாரசியமாக தான் இருக்கும் என நினைக்கிறேன்.


Saturday, February 1, 2025

திமுக - எதிர்கொள்ள வேண்டிய மாயவலை

2021 ஆம் ஆண்டு திமுகவுக்கு தந்த வாய்ப்பு அலாதியானது.

2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா பெற்று தந்த வெற்றி.. அவரது மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி என மாறி மாறி 2021 தேர்தலில் திமுக தவிர நமக்கு வேறு யாரும் இல்லை என்கிற முடிவுக்கு பெரும்பாலான தமிழ்நாடும் வந்து ஒன்று சேர்ந்து கொடுத்த அற்புதமான வெற்றி அது.

நான்கு ஆண்டுகள் கழித்து இப்போது பார்க்கும் போது, திமுகவை வென்றெடுக்க கூடிய வலுவான எதிர்கட்சி என்று எதுவுமே இல்லை.

அதிமுக வலு இழந்து நிற்கிறது. எடப்பாடி அவர்கள் மீதான அதிருப்தி கட்சிக்குள்ளேயே அதிகரித்து வரத் தொடங்கி இருக்கிறது. அடுத்து என்ன செய்வது என புரியாது தவிக்கும் அதிமுக ஒரு பக்கம்.

திடீர் என இறக்குமதி செய்யப்பட்ட தலைவரை கொண்டு தட்டு தடுமாறி பாஜக தவழ தொடங்கி உள்ளது. ஆனால் தன்னால் தன் சொந்த தொகுதியில் கூட வெல்ல முடியாத அளவுக்கு செல்வாக்கு (!) கொண்டு இருக்கும் மாநில தலைவரையும், தமிழ்நாட்டுக்கு வெளியேயும் இந்தியாவுக்கு வெளியேயும் உள்ள இணைய பதிவர்களை மட்டுமே நம்பி இருக்கும் ஐடி விங்கையும் வைத்துக்கொண்டு தமிழ்நாடு தேர்தலில் வென்று விட முடியும் என்கிற குருட்டு நம்பிக்கையில் உழன்று கொண்டு இருக்கும் பாஜக ஒரு பக்கம்.

பன்னிரண்டு ஆண்டுகளாக கட்சி நடத்தியும் சட்டமன்றத்துக்கு நுழைய முடியாமல் தவிக்கும் நா.த.க ஒரு பக்கம்.

திடீர் என முகிழ்த்து அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கும் த. வெ.க ஒரு பக்கம்.

என பல பல கட்சிகள் களத்தில் இருந்தாலும் திமுகவை திமுக கூட்டணியை வென்று விடக்கூடிய அளவுக்கான மக்கள் செல்வாக்கு கொண்ட கட்சி என்று இப்போது எதுவும் இல்லை என்பதே நிதர்சனம்.

அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் களம் வரை இதே நிலை நீடிக்குமா? காட்சிகள் மாறுமா என தெரியாது.

அதனால் தானோ என்னவோ திமுக அதீத நம்பிக்கையுடன் வலம் வந்து கொண்டிருப்பதாக ஒரு தோற்றம் உருவாகிக் கொண்டு இருக்கிறது.

நிற்க!

2021 ஆம் ஆண்டு திமுகவை அரியணை ஏற்றி அழகு பார்த்த தமிழக மக்களுக்கு நிறைய நிம்மதியும் அதை விட கூடுதலான எதிர்பார்ப்புகளும் இருந்தன. அதில் பெரும்பாலானவற்றை திமுக நிறைவேற்றியும் விட்டது.

ஆனால் கட்சி அமைப்பாக எங்கேயோ திமுக சறுக்கிக் கொண்டு இருக்கிறதோ என்கிற கவலையும் இல்லாமல் இல்லை.

திமுக என்பது தீரர்களால் செயல் வீரர்களால் தொண்டர் பாசறைகளால் காத்து வரப்பட்ட இயக்கம். அந்த அடிப்படை கட்டமைப்பு இருக்கும் வரை திமுகவை யாராலும் வெல்ல முடியாது.



மாவட்ட அளவில், வட்ட அளவில், கிளைக்கழக அளவில் கட்சியை வலுப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் மக்கள் மனதில் திமுகவை பற்றி தவறான தகவல்கள் பரவாமல் தடுப்பது, கழக ஆட்சியின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்வது, திரும்ப திரும்ப திமுகவின் அடிப்படை கொள்கைகளை மக்கள் மனதில் பதியச் செய்து கொண்டே இருப்பது ஆகியவையும் முக்கியம்.

சமூக வலை தளங்கள் இல்லாத கால கட்டத்தில் கூட தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ச்சியாக தம்பிகளுக்கு கடிதம் என தன் மனதில் நினைப்பதை எல்லாம் எழுதி அதை நாளிதழ் மூலமாக கழக உடன் பிறப்புகள் மட்டும் அல்லாது பொது மக்களும் அறிய செய்து வந்தார். அந்த கடிதங்களில் பெரும்பாலும் அரசின்/கட்சியின் முடிவுகள், நிலைப்பாடுகள் ஆகியவை பற்றி விரிவாக எடுத்து சொல்லுவார்.

கழக அமைப்பு என்பதும் சுற்றி சுற்றி சுழன்று கொண்டே இருக்கும். பொதுக்கூட்டம், மாநாடு, பேரணி, சாதனை விளக்க கூட்டம், பட்ஜெட் விளக்க கூட்டம், மாநில உரிமை குறித்த கருத்தரங்கம் என தொய்வில்லாமல் மக்கள் மனதில் திமுகவை திமுக அரசை திமுகவின் நிலைப்பாட்டை பதிய செய்து கொண்டே இருப்பார்.

இப்போது அதில் எல்லாம் ஒரு சிறு சுணக்கம் வந்து விட்டதோ என ஐயமாக இருக்கிறது.

திமுக பற்றி பொய்களும் புனை கதைகளும் சரளமாக பரப்பட்டு வரும் சூழலிலும், அதற்கு தகுந்த பதில் கொடுக்காமல் இருப்பது, எதிர் விளக்கம் கொடுக்காமல் இருப்பது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காமல் இருப்பது போன்றவை அப்படியான பொய்களை, புனை கதைகளை திமுக பெரிய விஷயமாக எடுத்து கொள்ளவில்லையா என்கிற கேள்வியை எழுப்பாமல் இல்லை.

அவை சின்ன சின்ன பொய்களாக, கட்டு கதைகளாக, அவதூறுகளாக, மெல்ல மெல்ல திமுகவுக்கு எதிராக பின்னப்பட்டு வரும் மாயவலை. அந்த வலையை எதிர்கொண்டு அறுத்து எறியாமல் போனால் அந்த வலையில் சிக்கிக் கொள்ளும் சூழல் கூட ஏற்பட்டுவிட கூடும். அது மக்கள் திமுக மீது வைத்த நம்பிக்கையை சிதைப்பதாகவும் ஆகிவிடும்.

பரபரப்பு நிறைந்த வாழ்க்கையில் உழலும் மக்களுக்கு எதையும் நின்று நிதானமாக படித்து பார்த்து ஆராயும் பொறுமையோ அதற்கான நேரமோ இருப்பது இல்லை. உள்ளங்கைகளில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் செல்பேசி திரைகளில் ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு சில நொடி செய்தி துனுக்கிகளின் இருவரி தலைப்புகள் போதுமானதாக இருக்கிறது மனதில் தங்கி கொள்ள. 

எத்தனை பக்கத்துக்கு பத்திரிகைகளில் பின்னாளில் விளக்கங்கள் வந்தாலும், மனதில் உட்கார்ந்து கொண்ட அந்த சில வரிகள் அத்தனை சீக்கிரம் அழிவது இல்லை. 

இந்த சில வரிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது தான். ஆனால் இது போல பல செய்திகள் தொடர்ச்சியாக திமுக குறித்தான தவறான கண்ணோட்டத்தை கொடுத்து கொண்டே இருந்தால் மனதில் திமுக மீதான மதிப்பு குறைய தொடங்கும் என்பது இயல்பு. அந்த பொய்களுக்கான மறுப்பு உடனடியாகவும் வீரியமாகவும் வராத வரை அந்த பொய்கள் உண்மை என்றே உட்கார்ந்து கொள்ளும். தாமதமாக வரும் தர்க்கங்கள் அதனை அவ்வளவு சீக்கிரமாக நீர்த்து போகச் செய்து விட முடியாது.

இது ஒரு வகையான உளவியல். இந்த உளவியல் கருத்தாக்கத்தை நிறுவ பல கட்சிகளும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். அதை மறுப்பதும் திமுகவின் சாதனைகளை தொடர்ச்சியாக மக்கள் மனதில் பதிய வைப்பதும் இந்த வேகமான வாழ்க்கை முறையில் அவசியமான ஒன்றாக ஆகிவிட்டது. இதை கட்சி உணர்ந்து இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

எத்தனையோ நல்ல விஷயங்களை செய்தாலும் அதை மக்களிடம் கொண்டு செல்லாமல் இருப்பது, பிற கட்சிகள் ஏற்படுத்தும் களங்கங்களை துடைத்து எறியாமல் விடுவது ஆகிய இரண்டும் அடுத்த ஆண்டு தேர்தல் நேரத்தில் இரண்டு நிமிடம் மட்டுமே வாக்குப் பதிவு எந்திரத்தின் முன் நிற்கும் வாக்காளனின் மனதை மாற்றி விட முடியும்.

இந்த விழுமியங்களை அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வது அவசியம். நமக்கு உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, காலச்சூழலில் அதற்கு ஒப்ப பயணிப்பதே எந்த ஒரு இயக்கத்தையும் உயிர்ப்போடு வைக்கும்.

என்னை பொறுத்த வரை..

எதிர்கட்சிகளின் பொய்களை தோலுறிப்பது, திமுகவின் சாதனைகளை விளம்பரப்படுத்திக் கொண்டே இருப்பது ஆகியவை மக்களின் மனதில், நாம் தேர்ந்தெடுத்த திமுக நம் நம்பிக்கையை குலைக்கவில்லை.. நமக்காக செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்கிற உத்திரவாதத்தை நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்கும்.

கடைசி நேரத்தில் தேர்தல் அறிவித்த பிறகு பிரச்சாரத்தில் பார்த்து கொள்ளலாம் என்கிற நிலைப்பாடு எடுப்பதாக இருந்தால்.. இன்றிலிருந்து மக்கள் மனதில் எதிர்கட்சிகள் விதைத்து வரும் பொய்களை எல்லாம் மொத்தமாக அகற்றும் அளவுக்கு பெரும் பலமான பிரச்சாரமாக அது இருக்க வேண்டும்.

அதை விட எளிமையான வழி.. அவ்வப்போது வரும் பொய்களை அவ்வப்போது உடைத்து எறிவது. இது தான் மக்கள் மனதை தெளிவாக வைக்க உதவும்.

கிடைத்து இருக்கும் ஆட்சி மிக முக்கியமானது. இதனை இன்னும் சில காலங்கள் தக்கவைத்து கொள்ள வேண்டும் என்றால், தொடர்ந்து வெல்ல வேண்டும் என்றால், தொடர்ச்சியாக மக்கள் மனதில் கழகம் குறித்து நல்ல விஷயங்களை பதிய செய்து கொண்டே இருக்க வேண்டும்.

உரியவர்கள் ஆவன செய்வார்களா அல்லது கடைசியில் பார்த்து கொள்ளலாம் என இருக்க போகிறார்களா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.


Printfriendly