Saturday, July 19, 2025

தமிழ்நாடு அரசியல் ஏன் வித்தியாசமானது?

தேர்தல் அரசியலில் தமிழ்நாடு எப்போதும் ஏன் வேறுபட்டதாகவே உள்ளது?

*****

நமக்கு ஒரு சிறந்த தலைவராக, மாபெரும் தலைவராக பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் கிடைத்தார். அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதி மற்றும் அரசியல் விழிப்புணர்வு குறித்து அவரது தொடர்ச்சியான எழுத்துக்களாலும், பேச்சுக்களாலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழ்நாட்டு மக்கள் இயல்பாகவே மிகுந்த மத நம்பிக்கை கொண்டவர்கள், ஆனால் அவர்கள் ஒருபோதும் தேர்தலில் மதத்தை கலக்க மாட்டார்கள். மத வழிபாடு கடவுள் நம்பிக்கை எல்லாம் தனிப்பட்ட விஷயங்கள் என்பதை தெளிவாக அறிந்தவர்கள்.

உதாரணமாக, அனைத்து மத விழாக்களும் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். ஆனால் தேர்தல்களுக்கு வரும்போது, அவர்கள் தங்களது, தங்கள் பிள்ளைகளது, எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஒவ்வொரு முறையும் முடிவெடுக்கிறார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் எல்லா வித கட்சிக் கூட்டத்திற்கும் சென்று அவர்கள் பேசுவதைக் கேட்கிறார்கள். ஓவ்வொரு கட்சியும் என்ன சொல்கிறது என கேட்பதில் ஆர்வம் காட்டுவார்கள். அதற்காக அவர்கள் அந்த கட்சியின் ஆதரவாளர்கள் என்று அர்த்தம் ஆகி விடாது. 

நிறை குறைகளை ஆராய்ந்து முடிவெடுக்க எல்லா கட்சிகளின் கருத்தையும் கேட்கும் வழக்கம் தமிழ் நாட்டில் வெகு காலமாகவே உள்ளது. அதனாலேயே எல்லா கட்சி தலைவர்களின் பேச்சுக்கும் அதீதமான கூட்டம் கூடும். 

ஆனால் தேர்தல் பூத் சென்றதும் தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் மற்றும் மக்களின் எதிர்காலத்தின் அடிப்படையில் தான் வாக்குச் சாவடியில் முடிவு செய்கிறார்கள்.

உதாரணமாக, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்களால் தனது கூட்டங்களுக்கு பெரும் கூட்டத்தை ஈர்க்க முடிந்தது, ஆனால் அவரால் ஒரு MLA யாக வெல்ல முடியவில்லை, அதுவும் அவரது சொந்தத் தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.

அதேபோல நாதக தலைவர் சீமான் அண்ணாமலையை விட அதிகமான மக்கள் கூட்டத்தை தான் பேச்சால் ஈர்க்கும் ஒரு சிறந்த பேச்சாளர், மேலும் பத்து வருடங்களுக்கும் மேலாக ஒரு கட்சியை வெற்றிகரமாக நடத்துகிறார். ஆனாலும் இன்னும் அவரால் ஒரு தொகுதியையும் வெல்ல முடியவில்லை.

தமிழ்நாட்டில் பேச்சை கேட்கும் கூட்டம் என்பது வாக்குகளையோ அல்லது புகழையோ தீர்மானிப்பதில்லை. என் பேச்சுக்கு கூடிய கூட்டம் வாக்கு அளித்து இருந்தால் கூட நான் MLA ஆகி இருப்பேனே என்பது பல காலமாக பலர் வழக்கமாக சொல்லும் விஷயம் தான்.

எனவே கூட்டத்தை வைத்து எல்லாம் ஆதரவை கணிப்பது என்பது காமெடியாக தான் அமையும். தமிழ்நாடு அரசியல் குறித்த புரிதல் இல்லாதவர்கள் தான் அப்படியான கணிப்புகளை சொல்வார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் அரசியல் விளையாட்டுகள், சில ஆண்டுகளாக பரவி வரும் அரசியல் பொய் பிரச்சாரங்கள், மத துவேஷங்கள் பற்றி எல்லாம் நன்கு புரிந்து கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் அத்தகைய பிரச்சாரங்களுக்கு ஒருபோதும் அடிபணிவதில்லை

தமிழ்நாடு வாக்காளர்களின் உளவியலைப் புரிந்துகொள்வதும், தமிழக மக்களின் அரசியல் விழிப்புணர்வைப் புரிந்துகொள்வதும் தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்து வரும் "நிபுணர்களுக்கு" எப்போதும் ஒரு எட்டாத பகுதியாகும்.

கற்பனையான கருத்தாக்கத்தை உருவாக்கும் எந்தவொரு முயற்சியும் கடைசியில் தோல்வியடையும். காரணம் தமிழ்நாட்டு மக்களிடம் நிலவும் அரசியல் தெளிவு தான்.

இங்கே மத நல்லிணக்கத்தை குலைப்பதோ, மத ரீதியாக தேர்தலை மாற்றுவதோ, மாநில மக்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகள் வெற்றி பெறுவதோ.. ஒருபோதும் நடக்காது.

தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு தமிழ்நாட்டின் அரசியல் களம் ஒருபோதும் பிடிபடாது.

நம் அனைவரையும் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெற்ற சமூகமாக மாற்றிய அண்ணாவுக்கு நன்றி 🙏🙏🙏

அவர் எப்போதோ சொன்னது போல், தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த அரசியல் தெளிவு இருக்கும் வரை, இந்த தமிழ்நாடு எப்போதும் அண்ணாதுரையால் ஆளப்படும் மாநிலமாக தான் இருக்கும் 💪💪

அண்ணாவின்
மரபு என்றென்றும் தொடரும் 🔥🔥

No comments:

Post a Comment

Printfriendly