Thursday, September 3, 2015

வருங்கால முதல்வர் ஸ்டாலின்?


ட்டமன்ற தேர்தல் நெருங்குது. வழக்கமான தேர்தல் அலைன்னு எதுவும் இப்போதைக்கு இல்லை. (இனிமேல் தான் யாராச்சும் அப்படி ஒண்ணை உருவாக்கணும்). ஆனா யார் முதல்வர்ங்கற விவாதம் மட்டும் சூடு பிடிச்சிருச்சு.

லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பில் ஸ்டாலினுக்கு கலைஞரை விட அதிக ஆதரவு கிடைச்சது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்திருக்கு. (பிற சலசலப்புக்கள்: சீமானுக்கும் வைகோவுக்கும் கிட்டத்தட்ட சரிநிகர் செல்வாக்கு, அதாவது சீமான் வைகோ அளவுக்கு உயர்ந்துட்டார் என்பதும், அன்புமணி கணிசமான மக்களிடம் டீசண்டான ஆதரவு வாங்க்கிருக்கார் என்பதும்). 

திமுகவின் சலசலப்பை மேலும் கல்லு விட்டு கலகலக்க வைக்கும் விதமா அண்ணன் அழகிரி கொடுத்திருக்கும் பேட்டியில் “ஸ்டாலின் முதல்வராக முடியாது”ன்னு சொல்லி இருக்கார். அவர் என்ன காரணத்துக்காக சொல்லி இருக்கார்னு தெரியாது. ஆனா அதுக்கு லைட்டா சாத்தியமிருக்குன்னு தான் எனக்கு தோணுது. நாம அது பத்தி கொஞ்சம் விரிவா பேசலாம்.


நான் ஏற்கனவே பல பதிவுகளில் சொல்லியிருப்பது மாதிரி, ஸ்டாலின் சட்டுனெல்லாம் அரசியல் அரங்கத்துக்கோ லைம்லைட்டுக்கோ வந்தவர் அல்ல. மிக இளம் வயதிலிருந்தே கழகத்தின் அடிப்படை தொண்டரா இருந்து களங்கள் பல கண்டு சிறை ஏகி காலங்களாய் காத்திருந்து தலைவர் மகனெனும் சலுகைகளையெல்லாம் புறம்தள்ளி சுய திறமையால் மெல்ல மெல்ல முன்னேறி கழக அரசின் துணை முதல்வராக அமர்ந்தவர். மிக பெரிய சரித்திர சாதனை புத்தகமே எழுதலாம். அத்தனை தன்னம்பிக்கை நிறைந்த போராட்ட வாழ்வு அவருடையது. ஆனால் இப்போதைய நிலைமை என்ன?

100 க்கு 80 சதவீதம் அடுத்தமுறையும் அதிமுகவே ஆட்சி அமைக்கும்ன்ற பரவலான எண்ணத்தை முதலில் உடைச்சவர் அவர் தான். மெல்ல மெல்ல மக்களுடன் மீடியாக்கள் மூலமா பழகி, அவருடைய இயல்பான எளிய பழகும் திறனால் மக்களின் மனதிலிருந்த வேதனைகளை எல்லாம் அறிந்து அது தொடர்பான போராட்டங்கள் பொதுக்கூட்டங்கள் ஆர்பாட்டங்கள் மாநாடுகள் என நடத்தி, உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என கழகத்தை மக்கள் மனதில் உயரத்தில் மீண்டும் உட்கார்த்தி வைத்திருக்கிறார். இப்போதைய மக்களின் மனநிலை மெல்ல மாறி அதிமுக திமுக இரண்டுக்கும் அடுத்த தேர்தலில் சம வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டாலும், திமுகவுக்கு ஒரு அதீத நம்பிக்கை துளிர்த்திருப்பதை பரவலாக காண முடிகிறது. கழக உடன்பிறப்புக்களுக்கெல்லாம் அடுத்ததா நம்ம ஆட்சி தான் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையே ஏற்பட்டு இருக்கு. நல்ல விஷயம் தான். ஆனா யார் முதல்வர்? ஸ்டாலினா அல்லது மீண்டும் தலைவரேவா? இது தான் குழப்பம். இந்த மாதிரியான ஒரு சீன்ல தான் அண்ணன் அழகிரியின் சமீபத்திய டயலாக் டெலிவரியை பார்க்கிறேன் நான்.

2016 தேர்தலில் வெற்றி பெற்றதுமே ஸ்டாலின் முதல்வராகணும்னு ஒரு தரப்பும், இல்லை இல்லை தலைவர் ஒருவருஷமோ ரெண்டுவருஷமோ முதல்வரா இருந்துட்டு அதுக்கு பின் ஸ்டாலினை முதல்வராக்கலாம், அதுவரைக்கும் துணை முதல்வரா இருக்கட்டும்னு மற்றொரு தரப்பும் விவாதிச்சிட்டு இருக்காங்க. (இப்படியான விவாதங்கள் மக்கள் மத்தியில் என்ன மாதிரியான மனநிலையை உண்டுபண்ணும்னு கலைஞர் அறியாதவர் அல்ல, ஆனாலும் அதை தடுக்கும் எந்த நடவடிக்கையும் காணோம்)

ஏன் கலைஞர் முதல்வரா இருக்கணும்?

இப்போதைக்கு தமிழகத்தை பொருத்தவரைக்கும் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் ஸ்தம்பிச்சு கிடக்கு. சுத்தமா எந்த ஒரு விஷயத்திலும் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படலை. வளர்ச்சி திட்டங்கள்னு எதுவுமே செயல்படுத்தப்படலை. துறை அமைச்சர்களுக்கு தங்கள் துறையில் என்ன நடந்துட்டு இருக்குன்னே தெரியலை. (துறையில் இருப்பவங்களுக்கு யார் அமைச்சர்னே தெரியலை, அது வேறொரு தனி கதை). அதிமுககாரங்களே சலிப்படையுற அளவுக்கு எல்லா திட்டங்களிலும் முடக்கம். அதிமுக மீதான இந்த விரக்தி மனநிலை திமுகவுக்கு சாதகமா மாறும் தான். அப்படி மாறி திமுக கையில் ஆட்சிக்கு வந்ததும், முதலில் செய்யவேண்டிய பணியே நிர்வாக சீர்திருத்தம் தான். அதுக்கு தலைவர் தான் சரியான ஆள். குறுகிய காலத்துக்குள் நிர்வாகத்தை அதன் சீரான பாதையில் நிறுத்தும் திறன் இப்போதைக்கு அவருக்கு மட்டும் தான் இருப்பதா பலரும் நம்புகிறார்கள்.

அவர் அப்படி இரண்டு வருஷம் நிர்வாகத்தை சீராக்கி அதன் பின் ஸ்டாலினை அரியணையில் அமர்த்தினால் எந்த சிக்கலும் இருக்காது. மாறாக ஸ்டாலின் எடுத்த எடுப்பிலேயே முதல்வராகி அவரால் சீர்திருத்த நடவடிக்கைகளை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் போனால் கழகத்துக்கு அது ஒரு தீராத களங்கமாக, மக்கள் மத்தியில் திமுகவின் நிர்வாகத்திறமை தோற்றுவிட்டதான உணர்வாக, மீண்டு எழமுடியாத ஒரு அவநம்பிக்கையாக மாற வாய்ப்பு இருக்கு. இது தான் அந்த பயம்.

சரி, ஏன் ஸ்டாலினால் சீர்திருத்தம் செய்ய முடியாது?

ஏற்கனவே சென்னை மாநகர மேயராக, உள்ளாட்சி துறை அமைச்சராக, துணை முதல்வராக சிறப்பாக பணியாற்றி மக்களிடம் பெரும் பாராட்டை பெற்றவர் ஸ்டாலின். ஆனாலும் அவர் மிக எளிமையாக பழக்கக்கூடியவர், யாரிடமும் அனாவசியமாக அதிகமாக கண்டிப்பு காட்டாதவர், சிலர் கொடுக்கும் சமாளிபிக்கேஷன் விளக்கங்களை அப்படியே எற்றுக்கொண்டவர் என்றெல்லாம் சில செய்திகள் வந்தன. மேலும் அவரது பேச்சாற்றல் திமுகவிலேயே பலரை சங்கடப்படுத்தக்கூடியவை. பேச்சை அடிப்படையாக வைத்து மக்களிடம் வளர்ந்த ஒரு மாபெரும் இயக்கத்தில் பேச்சு திறமை அற்ற ஒரு தலைவர் என்பதை பலரும் ஜீரணிக்கவில்லை.


இணைய தளங்களில் அவர் எழுதுவதில் தெறிக்கும் தெளிவும் சிந்தனை செறிவும் நிர்வாக திறமும் பேச்சில் தெரிவதில்லை. பெரும்பாலும் மேடைகளில் பேசுவதை விட வாசிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனால் என்ன பிரச்சனை என்று பலரும் கேட்கலாம். இணைய தளங்களை படித்து தெரிந்து கொள்பவர்களை விட செய்தி ஊடகங்களிலும் செய்தி தாள்களிலும் நேரடியான மேடைகளிலும் பேச்சுக்களை கேட்டு பெர்சனாலிட்டியை தீர்மானிக்கும் மக்களை அதிகமாக கொண்ட தமிழகத்தில் அவர் ஒவ்வொரு மேடையிலும் தெளிந்த நீரோடை போலல்லாமல் ஆங்காங்கே திக்கி அவ்வப்போது தடுமாறி (மன்னிக்கவும்னு செய்தி வாசிப்பாளர் மாதிரி சொன்னாலும் கூட) பேசுவதை கவனிக்கும் மக்கள் அதை வைத்து அவரது திறமையை எடைபோட்டு கொண்டிருப்பதை அவர் அறிவாரோ என்னவோ? அந்த எடைபோடல் தான் அவருக்கான செல்வாக்கை தீர்மானிக்கும், அவருக்கு கட்டுப்படும் தன்மையை மற்றவர்களிடம் வளர்க்கும் சக்தியாக விளங்குகிறது. அந்த அடிப்படையில் அவரது பேச்சை ஒலிபரப்பு மூலமும் மேடையிலும் காணும் மக்களின் / அதிகாரிகளின் மனநிலை, இவரை ஜமாய்ச்சிறலாம் எனும் தொனியில் இருப்பதாலோ என்னவோ, குறுகிய காலத்துக்குள் நிர்வாகத்தை அவரால் சீரமைத்துவிட முடியுமா என்கிற சந்தேகத்தை எல்லோர் மனதிலும் தூவி விட்டு சென்றிருக்கிறது. அப்படி தூவப்பட்ட விதை நாற்றாக பரிணமிக்கும் முன் அவர் சுதாரித்துக்கொள்வது, அவருக்கும், கழகத்துக்கும் தமிழகத்துக்கும் நல்லது என்று நினைக்கிறேன்.

பேச்சு பயிற்சிக்காக பாசறை நடத்திய பேரியக்கம் திமுக. ஆனால் இப்போதெல்லாம் அவை அரிதாகிவிட்டன. இரண்டாம் மூன்றாம் நிலை தலைவர்கள் கூட தங்கு தடையில்லாமல் பேசும் திறன் இழந்திருப்பதும், முன்போல் அடிக்கடி பொதுக்கூட்டங்கள் நடத்தாமல் இருப்பதும் (இப்போது தொடங்கி இருக்கிறது) மக்கள் மனதில் ஒரு தேக்க நிலையை ஏற்படுத்தி இருக்கக்கூடும். கலைஞர் இனியேனும் சுதாரித்து கழக பேச்சு பயிற்ச்சி பாசறைகளை தீவிரமாக முன்னெடுத்து சென்றாலொழிய மக்களிடம் இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பது கடினம் என நினைக்கிறேன்.

நிச்சயமாக ஸ்டாலின் முதல்வரானால் அடிப்படை மக்களின் துயரங்கள் களைவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கு முன்பாக அவர் செய்யவேண்டிய விரைவான குறுகிய கால பணியான நிர்வாக சீர்திருத்தத்தில் எந்த அளவுக்கு வெற்றி பெற்று தமிழக அதிகாரிகளை, மேலாண்மையை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்போகிறார் என்பதில் தான் இருக்கிறது எல்லாமே.

அதை விட பெட்டர், கலைஞரே சில காலம் முதல்வராக இருந்து எல்லா சீர்திருத்தங்களையும் செய்து அலுங்காமல் குலுங்காமல் நிர்வாகத்தை ஸ்டாலினிடம் ஒப்படைத்தால் அதை முன்னெடுத்து மெருகேற்றி செல்லக்கூடிய திறமை அவரிடம் இருப்பதால் தமிழகம் நலம் பெறும்.

அடுத்த வருஷம் இதை பற்றி ஆராயலாம் நாம்.



No comments:

Post a Comment

Printfriendly