வராது வந்த மாமணியாய் தமிழகத்தில் பல
நேர்மையான அதிகாரிகள் வந்து போனதுண்டு. பிரமிக்கத்தக்க சாதனைகள் செய்தும், மக்களிடம் எளிமையாக பழகியும், நேர்மையை
மட்டுமே கைக்கொண்டும் பெயரும் பெருமையும் பெற்றவர்கள் மிக பலர்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில்
எஸ்.ராதாகிருஷ்ணன், சி.வி.ராவ், மு.கலைவாணன், அபூர்வா போன்றோரும், ஐ.பி.எஸ் அதிகாரிகளில் சைலேந்திரபாபு, ரவி ஆறுமுகம், கருணாசாகர், திரிபாதி போன்றோரும் அந்த நீளமான
பட்டியலில் சிலர். இதில் பலரும் எந்த விளம்பரமும் இன்றி மக்கள் சேவையும்
நேர்மையும் மட்டுமே பிரதானமாக கொண்டு தங்கள் அரசு பணியை சிறப்பாக செயல்படுத்தி
மக்களிடமும் அன்பையும் அபிமானமும் பெற்றவர்கள். சிலர் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து துணிச்சலுடன் போராடி அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல் பணியாற்றி பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த பட்டியலில் மிக சமீபத்திய
இணைப்பு திரு. உபகாரம்பிள்ளை சகாயம் அவர்கள். பெயரை போலவே எல்லோருக்கும் உபகாரமாக
திகழ்பவர். பல பல அதிரடி நடவடிக்கைகளை மக்களுக்காக எடுத்தவர். 23 முறைக்கு மேல்
அவரது நேர்மைக்காகவே பந்தாடப்பட்டவர். எத்தனை மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள்
வந்தாலும் கலங்காமல் நேர்மையாய் இருப்பவர். எளிமையான அதிகாரி. முதல் முதலாக தானாக
முன்வந்து தனது சொத்து கணக்கை வெளியிட்ட அதிகாரி. மக்களிடம் எளிமையாக
பழக்கக்கூடியவர். அதைஎல்லாம் விட என்னை மிகவும் கவர்ந்தது அவரது தெளிவான
வெள்ளமெனப்பாயும் அழகு தமிழ் பேச்சு. மிக மிக அதிகமாக நம்மால் நேசிக்கப்படும் அந்த அதிகாரி தான் இப்போது சமீப
காலமாக மீடியாக்களில் அதிகம் அடிபடும் நபராக இருக்கிறார். காரணம் கிரானைட் குவாரி
முறைகேடு.
பின் கதை சுருக்கம்:
2008 ஆம் ஆண்டு ஒரு சமூக சேவகரால்
வெளிக்கொண்டு வரப்பட்டது தான் இந்த கிரானைட் முறைகேடு விவகாரம். அப்போது அது
யாராலும் அதிகமாக கண்டுகொள்ளப்படவில்லை. 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதுரை மாவட்ட
கலெக்டராக திரு சகாயம் அவர்கள் பொறுப்பேற்றதும், இந்த
முறைகேடு குறித்து விசாரித்து, மூன்று பெரிய நிறுவனங்கள்
இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டி 2012 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி
முதல்வர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினார். திரு. பி. ஆர். பழனிச்சாமி
அவர்களின் பி.ஆர்.பி கிரானைட்ஸ் மற்றும் சிந்து கிரானைட்ஸ்,
ஒலிம்பஸ் கிரானைட்ஸ் ஆகியவை தான் அந்த மூன்று நிறுவனங்கள். இந்த கடிதம்
கிடைக்கபெற்ற .நான்கு தினங்களிலேயே அதாவது 2012 மே 23 ஆம் தேதியே அப்போதைய முதல்வர்
புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் சகாயத்தை மதுரை கலெக்டர் பதவியிலிருந்து
விடுவித்து கோ ஆப்டெக்ஸின் அதிகாரியாக நியமித்து பந்தாடினார். அப்போது முதல்வர்
ஜெ.ஜெயலலிதா அவர்கள் பலத்த விமர்சனத்துக்கு ஆளானது தனி கதை. ( சகாயம் மதுரை கலெக்டராக பணியாற்றிய காலம்
மத்திய அரசு அறிக்கையில் வேறு மாதிரி காட்டப்பட்டு இருக்கிறது. அது ஏன் என்பதும் புரியவில்லை.)
சகாயம் அவர்களது சர்வீஸ் ரெகார்டு. ஹைலைட் செய்த காலம் அவர் மதுரை கலெக்டராக இருந்தார். ஆனால் ரெக்கார்டில் வேறு மாதிரி இருக்கிறது |
ஆனால் சகாயத்துக்கு பதிலாக மதுரை
கலெக்டராக நியமிக்கப்பட்ட திரு அன்சுல் மிஸ்ரா,
இந்த கிரானைட் முறைகேட்டை விரிவாக ஆராய்ந்து மொத்தம் 175 நிறுவனங்கள் முறைகேட்டில்
ஈடுபட்டிருப்பதாக கண்டு பிடித்து அவற்றில் 02.08.2012 ஆம் தேதி ரெய்டு நடத்த
உத்தரவிட்டார். (இதில் ஆச்சரியமான விஷயம் 19.05.2012 ஆம் தேதி முதல்வருக்கு சகாயம்
அனுப்பிய கடிதம், அன்சுல் மிஸ்ரா ரெய்டுக்கு முந்தய நாள் அதாவது
01.08.2012 ஆம் தேதி ‘யாராலோ’ லீக்
செய்யப்பட்டு, பத்திரிக்கைகளில் வெளியானது. ஆனால் 2012 ஜூன் மாதத்திலிருந்தே அன்சுல் மிஸ்ரா முறைகேடுகள் குறித்து விசாரித்து விரிவான
அறிக்கையை அரசுக்கு அனுப்பி ரெய்டுக்கு அனுமதியும் பெற்று அதன் பேரில் தான்
02.08.2012 ஆம் தேதி ரெய்டு நடத்தப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும். ரெய்டுக்கான
நடவடிக்கை தொடங்கியதை துறையின் பிற அதிகாரிகள் மூலம் அறிந்த திரு சகாயம் அவர்கள் தான்
ரெய்டுக்கு முந்தய நாள் அந்த கடிதத்தை வெளியிட்டார் என பரபரப்பாக பேசப்பட்டாலும், அப்படியெல்லாம் விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு தனக்கான கிரெடிட்டை தேடி
பெற்று கொள்ளும் நபர் சகாயம் அல்ல என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.)
திரு. அன்சுல் மிஸ்ரா IAS |
அப்படி அன்சுல் மிஸ்ரா ரெய்டு நடத்தி
பதிவு செய்த வழக்குகள் தான் நீதிமன்றத்தில் வேகம் பிடித்து இன்றைக்கு மிக பெரிய
முறைகேட்டை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ஏன் சகாயம் அவர்கள் மூன்றே மூன்று
நிறுவனங்களை மட்டும் குற்றம் சாட்டினார் என பலரும் விவாதித்துக்கொண்டிருந்தாலும், அந்த மூன்று நிறுவனங்களில் முக்கியமான பி.ஆர்.பி நிறுவனம்
தான் இந்த முறைகேட்டில் மிக முக்கியமான நிறுவனம் என்பதை எல்லோரும்
ஒப்புக்கொண்டார்கள். ( அன்சுல் மிஸ்ரா கிரானைட் முறைகேட்டை மிக
மிக தீவிரமாக விசாரிக்க தொடங்கியதும் அவரும் மதுரை கலெக்டர் பதவியிலிருந்து மாண்புமிகு புரட்சி தலைவி அவர்களால் மாற்றப்பட்டார். அன்சுல் என்ன நினைத்தாரோ, அவர் தமிழக அரசு பணியே வேண்டாம் என்று மத்திய
அரசு பணிக்கே சென்று விட்டார்.)
நரபலி விவகாரம்:
பி.ஆர்.பி நிறுவனம் சார்பாக மனநலம்
பாதிக்கப்பட்ட சிலரை நரபலி கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டு 2004 ஆம் ஆண்டிலேயே
புகாராக கொடுக்கப்பட்டது. ஆனால் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சகாயம் கலெக்டராக இருந்தபோதும் (2011-12) அதன் மீது நடவடிக்கை எதுவும் இல்லை.
ஆனால் அன்சுல் மிஸ்ரா அந்த புகாரை விசாரித்தபின் என்ன காரணத்தாலோ புகார் தாரரான
சேவற்கொடியோனை அழைத்து அவர் குறிப்பிடும் இடங்களில் ஏதேனும் அடையாளத்தை நட்டு
வைத்து கண்காணித்துவர சொன்னார். அவரும் அதே மாதிரி அந்த இடங்களில் கல் நட்டு
கண்காணித்து வந்தார். 2013 ஆம் ஆண்டு மீண்டும் சேவற்கொடியோன் இந்த நரபலி தொடர்பாக
மாவட்ட எஸ்.பிக்கு ஒரு புகார் அளித்தார். அதன் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லாமல்
போனது.
இப்போதைய எபிசோட்:
இந்த நிலையில் சமூக சேவகர்கள் சார்பாக
கிரானைட் முறைகேடு உயர்நீதிமன்றத்தை எட்டியது. நீதிபதிகள் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி
மூலம் விசாரிக்கவேண்டும் என சொல்ல திரு சகாயம் அவர்களின் பெயர் முன்மொழியப்பட்டு
2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அவர் கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க
நியமிக்கப்பட்டார். ஆனால் தமிழக அரசு அவருக்கு எந்த ஒத்துழைப்பையும் கொடுக்க
மறுத்து விட்டது. அவருக்கான அலுவலகம், வாகனம், உதவியாளர்கள் ஏன் ஸ்டேஷனரி கூட கொடுக்க முன்வரவில்லை. ஒவ்வொன்றுக்கும்
உயர்நீதிமன்றத்தை நாடி தான் சகாயம் அவர்கள் இந்த முறைகேட்டை விசாரிக்க
தொடங்கினார். சகாயம் நியமனத்தை எதிர்த்து தமிழக
அரசு உயர்நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால் அதை நீதிமன்றம்
நிராகரித்து விட்டது. அதன் பின் உயர்நீதிமன்றம் கொடுத்த கண்டிப்பான உத்தரவுகளால் தமிழக
அரசு வேறு வழி இல்லாமல் திரு. சகாயத்துக்கு ஒத்துழைக்க தொடங்கியது.
அக்டோபர் மாதம் அனைத்து மாவட்ட
கலெக்டர்களும் கிரானைட் மற்றும் கனிம வள விவரங்கள் குறித்த தகவல்களை தனக்கு
தாக்கல் செய்யவேண்டும் என சகாயம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட
வழக்கில் 2014 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த
உத்தரவில், சகாயத்தின் விசாரணை எல்லை மதுரை
மாவட்டத்துக்குள் மட்டும் தான் எனவும் மற்ற மாவட்ட கலெக்டர்களை அவர்
கட்டுப்படுத்தமுடியாது என சொல்லிவிட்டது. அதன் பின் தான் மதுரை கிரானைட் முறைகேடு
விசாரணை தீவிரமடைந்தது. (அவர் எதற்காக எல்லா மாவட்ட ஆட்சியாளர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுக்க முனைந்தார் என்பது இன்னமும் கூட புரியாத புதிர் தான்)
2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம்
தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டிய நிர்பந்தம் இருந்த நிலையில், கிரானைட் முறைகேடு எனும் மெயின் மேட்டரை விட்டு நகர்ந்து நரபலி
விவகாரத்தை கையில் எடுத்தார் சகாயம். 2004, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட புகார்களை தூசு தட்டி எடுத்து அவற்றை
விசாரிக்க தொடங்கினார்.
நரபலி கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட
இடத்தை தோண்டி ஆய்வு செய்ய அவர் முடிவு செய்தபோதும் தமிழக அரசு அவருக்கு
ஒத்துழைக்கவில்லை. அன்றைய இரவில் அவர் அந்த மயானத்திலேயே படுத்து உறங்கி போராடி
பின்னர் தான் அரசின் ஒத்துழைப்பை அவரால் பெற முடிந்தது.
தோண்டிய இடத்தில் 5 எலும்புக்கூடுகள்
தென்பட்டது. அதில் 4 எலும்பு கூடுகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. எலும்புக்கூடுகள்
4 முதல் 5 அடி ஆழத்தில் கிடைத்திருக்கின்றன. (10 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட பிணத்தின் எலும்புகள் எப்படி 5 அடி
ஆழத்திலேயே கிடைத்தது என்கிற கேள்வி பதிலளிக்கப்படாமல் கிடக்கிறது)
முதல் பிணம் தெற்கு நோக்கி தலைவைத்தும்
மற்றவை தென்மேற்கு திசை நோக்கி தலைவைத்தும் புதைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு
சிறுவனின் பிணம் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த மரணம் பற்றி ஊர்க்காரர்கள் விவரித்து உறுதிப்படுத்தியதால் அதன் மீதான விசாரணை கைவிடப்பட்டது.
நரபலி புகார் கொடுத்த திரு
சேவற்கொடியோன் பி.ஆர்.பி நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்தவர். கிரானைட் முறைகேடு
விசாரணையை திசை திருப்பத்தான் இப்படி ஒரு நரபலி புகாரை அவர் முன்வைத்திருக்கிறார் என
பேசப்பட்டாலும், கிடைத்திருக்கும் சடலங்கள் அவர் சொல்லியதில்
உண்மை இருக்கலாமோ என சந்தேகிக்க வைக்கிறது.
இன்னொருபுறம், அந்த இடம் மயானமே அல்ல என சகாயம் அரசு ஆவணங்களை காட்டி சொல்லி
இருக்கிறார். அதாவது, அந்த இடத்தை மயான பயன்பாட்டுக்காக அரசு ஒதுக்கவில்லை, அதனால் அங்கே கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் நரபலி கொடுக்கப்பட்டவை தான் என்கிறார். ஆனால் ஊர்க்காரர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடத்தை தான் மயானமாக
பயன்படுத்தி வருகிறார்கள் எனவும், இப்போது கண்டு பிடிக்கப்பட்ட
சடலங்கள் எல்லாம் சமீபத்தில் புதைக்கப்பட்டவை எனவும், சேவற்கொடியோனும்
சகாயமும் சொல்வதை போல 10 வருடங்களுக்கு முன் புதைக்கப்பட்டவை அல்ல எனவும், அப்படி இருந்திருந்தால் அவை வெறும் 5 அடி ஆழத்திலேயே கிடைத்திருக்க வாய்ப்பில்லை
எனவும் சிலரால் பேசப்படுகிறது. எலும்புக்கூடுகளில் சுற்றப்பட்ட சிவப்பு துணி (உறவினர்கள் போர்த்தும்
கோடி துணி?) சற்றே புதிதாக தென்படுவதை அதற்கு ஆதாரமாக சொல்கிறார்கள்.
ஒரு சாமானியனாக நமக்குள் எழும் கேள்விகள்
எல்லாம்..
- முக்கிய வழக்கான கிரானைட் முறைகேட்டை விட்டு நகர்ந்து நரபலி பக்கம் விசாரணை திசை திரும்பியது எதற்காக?
- நரபலி தானா அவை? அல்லது மயானத்தில் இயல்பாக கிடைக்கும் சடலங்களை வைத்து வழக்கை நரபலி என மேலும் இறுக்க முயற்சி நடக்கிறதா?
- குறித்த காலகெடுவுக்குள் முடிக்கப்படவேண்டிய விசாரணையின் தாமதத்தை நரபலி விசாரணை மூலம் சரி செய்ய முயற்சி நடக்கிறதா?
- தமிழக அரசு ஏன் இந்த அளவுக்கு இந்த முறைகேடு விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறது?
- விசாரணை கால அளவை நீட்டிக்கவும், திட்ட செல்வை விட அதிக தொகையை ஒதுக்குமாறும் கேட்டு சகாயம் இப்போது கோரிக்கை வைக்க வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?
- உயர்நீதிமன்றம் கொடுத்திருக்கும் விசாரணை வரம்பின் கீழ் கிரானைட் முறைகேடு மற்றும் அரசுக்கு அதன் மூலமான இழப்பை கணக்கீட்டு தருவது மட்டும் தானே அடங்கும்?
என்றெல்லாம் நீள்கிறது தான்.
இதற்கான விடை அடுத்த மாதம் விசாரணை அறிக்கை
உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படுகையில் தெரிய வரலாம். அதுவரை காத்திருப்போம்
நண்பர்களே.
விரிவான அலசல்! நன்றி!
ReplyDelete