அதுக்கு அடுத்தபடியா அதிக மாற்றத்துக்கு உள்ளாகப்போவது என எல்லோராலும ஊகிக்கப்படுவது, போக்குவரத்து..
இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் Social Distancing எனும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது தவிர்க்க முடியாதது ஆகிறது. லாக்டவுன் முடிந்த பிறகும் இந்த முறை தொடர வேண்டும் என MHA அறிவுரை சொல்லி உள்ளது
ஆனால் அது இந்தியா போன்ற ஒரு நாட்டில் அவ்வளவு எளிதாக சாத்தியமாகக்கூடிய விஷயம் அல்ல
பைக்கில் ஒருவர் தான் பயணிக்க வேண்டும். பில்லியனில் ஆள் கூடாது என்பது ஒரு கட்டுப்பாடு.
எளிய மனிதர்கள் அதிகமாக கொண்ட நம் நாட்டில் ஒரு குடும்பத்தில் பைக் என்பது ஒன்று தான் பெரும்பாலும் இருக்கும். அதில் மனைவி குழந்தைகள் என குடும்பமாக பயணிப்பதே வழக்கம்.
புதிய விதிமுறை கட்டாயம் ஆக்கப்பட்டால் வெளியே செல்வதே இல்லாது ஆகிவிடும்
பஸ்சில் இருக்கைகளில் ஒருவர் தான் அமரவேண்டும் என்ற ஒரு விதி போட்டு உள்ளார்கள். இது நிச்சயமாக சாத்தியமே இல்லை.
இப்போது டவுன் பஸ்சில் அனுமதிக்கப்பட்ட அளவு என்பது 57 பேர் அமரவும் 25 பேர் நிற்கவும். சாதாரணமாகவே சென்னை போன்ற நகரங்களில், நின்றும் படிகளில் தொற்றியும் ஒரு பஸ்சில் 60 பேர் வரையும் (உட்கார்ந்து இருக்கும் 57 பேர் தவிர) பயணிப்பதே வழக்கம். அதாவது ஒரு பஸ்சில் ஒரு நேரத்தில் சுமார் 120 பேர்.
இனி ஒரு பஸ்சில் மொத்தமே 28 பேர் தான் பயணிக்க முடியும் எனில், பஸ்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தி ஆக வேண்டும். அல்லது பலரும் பயணிக்க முடியாமல் போய்விடும். உடனடியாக அத்தனை பஸ்களை வாங்கும் அளவுக்கு அரசுகளிடம் வாய்ப்பு உள்ளதா என தெரியவில்லை
ரயிலிலும் அதே போல தான் என்கிறார்கள். ரிசர்வ் செய்யப்பட்ட கோச்களில் சமூக இடைவெளி சரி. அதிலும் குறைவான எண்ணிக்கை பயணிகள் தான் எனில் இயல்பாகவே கட்டணம் உயர்ந்து விடும். அன்ரிசர்வ்டை யோசித்து பாருங்கள்.
108 இருக்கை உள்ள கோச்சில் சுமார் 250 பேர் வரை பயணிக்கும் நிலையில் அதை 54 ஆக குறைப்பது அத்தனை எளிதல்ல.
சென்னை மும்பை போன்ற பெருநகர EMU ரயில்களின் நிலை இன்னமும் மோசம். தொங்கியபடி தான் பீக் ஹவர் ஜர்னி இருக்கும். இதில் எப்படி சமூக இடைவெளி கடைபிடிப்பது?
கார்களில் அதிக பட்சம் மூன்று பேர். இது சாத்தியம். பைக்கில் ஒருவர். இது கூட ஓரளவுக்கு சாத்தியம்
ஆனால் பஸ் ரயில் போக்குவரத்தில் எல்லாம் சமூக இடைவெளி சாத்தியம் இல்லை.
ஒரு வேளை சமூக இடைவெளி கட்டாயம் எனில் இப்போது இருக்கும பஸ் ரயில் எண்ணிக்கையை உடனடியாக மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டி வரும். அது இந்தியாவின் இப்போதய பொருளாதார நிலையில் சாத்தியம் இல்லை
எனவே வேலைக்கு, பள்ளி கல்லூரிகளுக்கு போய் வருவோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நிலை வரும். வீடு தான் ஆபீஸ். வீடு தான் ஸ்கூல்.
சரி இந்த காரணங்கள் தவிர சுற்றுலா செலவது எல்லாம்?
மாநிலங்களுக்கு இடையே பொது போக்குவரத்து எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை. ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களை சந்தேகத்தோடே பார்த்துக்கொண்டு உள்ளன. மாநிலங்களை விடுங்க.. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதே சந்தேகம் தான்.
இந்நிலையில் சுற்றுலா எப்போது சாத்தியப்படும் என தெரியல.
உதாரணமாக ஊட்டி, கொடைக்கானலுக்கு சென்னையில் இருந்து போக முடியுமா என கேட்டால் அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் போக முடியாது.
அத்தியாவசிய காரணங்கள் என்றாலும் அங்கே போனதும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்
இது போன்ற சூழலில் போக்குவரத்து இயல்பு நிலை அடைய இன்னும் நிறைய நாட்கள் ஆகும் என்றே நினைக்கிறேன்
என்னை கேட்டால்.. வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு உள்ளவர்களை அப்படியே தொடர விடுவது போக்குவரத்தை குறைக்கும். வேலை, பள்ளி, கல்லூரி, மருத்துவம், அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் பயணிக்காமல் இருப்பது, பயணிக்க கட்டுப்பாடுகள் விதிப்பது ஆகியவை தான் போக்குவரத்தை குறைக்கும்.
அரசு என்ன முடிவு எடுக்க போகிறது என பொறுத்து இருந்து பார்ப்போம்
No comments:
Post a Comment