Monday, June 8, 2020

இந்தியா சீனா வர்த்தகம்

மீப காலமாக இணைய வெளிகளில் அதிகமாக பேசப்படும் விஷயம் சீன பொருட்களை புறக்கணிப்போம் என்பது.. இது விவரம் தெரியாத கத்துக்குட்டி கட்சி தொண்டர்கள் முதல், பெரும் தலைகள், பல நிறுவனங்களில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள்.. அவ்வளவு ஏன் ஒரு சில அமைச்சர்கள் கூட வெளிப்படையாக சொல்ல தொடங்கி உள்ளனர். வாட்ஸ் அப் ட்விட்டர் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களில் கூட இது பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.. அதுவும்.. இது ஒரே நாளில் நிறுத்த முடியாது.. மக்களாக பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக சீன பொருட்களை தவிர்க்க வேண்டும்.. அதன் முதல் கட்டமாக உங்கள் போனில் உள்ள சீன ஆப்களை எல்லாம் நீக்குங்கள் என்றெல்லாம் புதுப்புது விதிமுறைகள் வகுக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

சரி.. சீன பொருட்களை நாம் தவிர்ப்பது அவ்வளவு எளிதா?

இதற்கு பதில் தெரிய நாம் முக்கியமான இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில்.. இறக்குமதி ஏற்றுமதி எதனால் ஏற்படுகிறது? அதை சுருக்கமாக பார்ப்போம்

ஒரு நாட்டின் உற்பத்தி தேவைகளுக்காக, தொழிற்சாலை இடுபொருட்கள் தேவைக்காக, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பல பொருட்களை நாம் பல நாடுகளில் இருந்து வாங்குகிறோம். இந்தியாவில் கிடைக்காத பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இப்படி இறக்குமதி செய்து கொள்கிறோம்.
அதேபோல நமது நாட்டு பொருட்களையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களையும் வைத்து நாம் நமது தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் பொருட்களை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்கிறோம்

இவ்வாறாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை விட ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு கூடுதலாக இருந்தால் அது பொருளாதார பலத்தை காட்டும். அன்னிய செலாவணியை ஈட்டி தரும்.

மாறாக இறக்குமதி அதிகமாகவும் ஏற்றுமதி குறைவாகவும் இருந்தால் அது பொருளாதார பற்றாக்குறையை காட்டும். இது CAD - Current Account Deficit எனப்படும்.

இந்தியா எப்போதுமே இந்த CAD வகையில் தான் இருக்கிறது. காரணம் நாம் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்கிறோம்
குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள், தீபாவளி பட்டாசு முதல் விண்வெளி தகவல் தொழில்னுட்பத்திற்கான கருவிகள் வரை அதிக பொருட்களை நாம் இறக்குமதியை நம்பியே இருக்கிறோம்.

இந்த இறக்குமதி ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது யார்? மாநில அரச மத்திய அரசா?

மத்திய அரசு தான். மத்திய நிதித்துறை & வர்த்தக துறை தான் இதற்கான கட்டுப்பாட்டு அமைச்சகம்.

நிதித்துறையின் கீழ் CBIC Central Board of Indirect Tax and Customs உள்ளது. இதில் உள்ள Customs (சுங்கத்துறை) தான் நாட்டின் எல்லா ஏற்றுமதி இறக்குமதியையும் கட்டுப்படுத்துகிறது.

எல்லா விமான நிலையங்கள், துறைமுகங்கள் வழியாக நடக்கும் அனைத்து சரக்கு பரிமாற்றமும் சுங்கத்துறை தணிக்கைக்கு பிறகே அனுமதிக்கப்படும்.

அப்படியானால் எந்த பொருளை வேண்டுமானாலும் இறக்குமதி ஏற்றுமதி செய்துகொள்ளலாமா? என்றால் இல்லை. அப்படி செய்ய முடியாது.

எந்தெந்த பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யலாம் என்பதை DGFT - Director General of Foreign Trade எனும் மத்திய அரசு அமைப்பின் அதிகாரி முடிவு செய்வார்.

சமீபத்தில் கூட.. HCQ மாத்திரைகள், மாஸ்க் போன்றவற்றை ஏற்றுமதி செய்ய தடை விதித்து DGFT வெளியிட்ட Notification நினைவு இருக்கும்.

சரி, அப்படி என்றால் DGFT தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியுமா? என்றால் அதுவும் இல்லை. இந்தியாவுக்கான வெளிநாட்டு வர்த்தக கொள்கை தனியாக உள்ளது. FTP - Foreign Trade Policy. ஒவ்வொரு ஐந்து ஆண்டு காலத்துக்குமான இந்த கொள்கை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வெளியிடப்படும். அதன் அடிப்படையில் தான் DGFT செயல்படும். இப்போது கடந்த 2015 முதல் அமலில் உள்ள FTP 2015-2020 தான் நாட்டில் பின்பற்றப்பட்டு வருகின்றது. கொரோனா காரணமாக அது 2021 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதல், அடுத்த FTP 2021 ஆம் ஆண்டு தான் வெளியாகும்

சரி.. மத்திய அரசு நினைத்தால் FTP ஐ தனது விருப்பப்படி தீர்மானித்து கொள்ள முடியுமா என்றால்.. அதுவும் இல்லை.
இந்தியா உலக வர்த்தக அமைப்பில் WTO - World Trade Organization உறுப்பினராக உள்ள நாடு. அதன் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு தான் நாம் நமது கொள்கைகளை வகுக்க முடியும். 

இது தவிர பல்வேறு நாடுகளுடன் நாம் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் BTA - Bilateral Trade Agreement போட்டு உள்ளோம். அதில் பலவும் FTA - Free Trade Agreement வகை.

அதாவது இரு நாடுகள் இடையே FTA ஒப்பந்தம் இருந்தால் அந்த நாடுகளுக்கு இடையே நடைபெறும் வர்த்தகத்துக்கு இரு நாடுகளிலும் வரி விதிக்க மாட்டார்கள்.

உதாரணமாக இலங்கை. இலங்கையில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் டீ, இந்தியாவில் அஸ்ஸாம், ஊட்டி, மூணாறில் இருந்து வாங்கும் டீயை விட விலை மலிவு. காரணம் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்தால் வரி இல்லை. அஸ்ஸாமில் இருந்து வாங்கினால் வரி உண்டு.

இந்தியாவில் உள்ள தேயிலை உற்பத்தியாளர்கள் பாதிப்பு அடைவார்களே என்றெல்லாம் எண்ணி இந்த இறக்குமதியை நிறுத்திவிட முடியாது. காரணம் நாம் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் அதிகம். அது நமது தொழில்துறை வளர்ச்சிக்கு அவசியம் என்பதால்.. இறக்குமதியை அனுமதிக்கிறோம்.

இது போன்ற BTA தவிர அமைப்புக்களுடனும் நாம் ஒப்பந்தம் போட்டு உள்ளோம். அதில் ASEAN - Association of South East Asian Nations ஒப்பந்தமும் ஒன்று

இப்படியான ஒப்பந்தங்கள் அடிப்படையில் தான் நாம் வெளிநாட்டு வர்த்தகத்தை தீர்மானிக்க முடியும்.

இனி சீனா விஷயத்துக்கு வருவோம்

இந்தியா செய்யும் மொத்த இறக்குமதியில் பாதிக்கு பாதி சீனாவில் இருந்து தான். இரண்டாம் இடம் அமெரிக்கா. அடுத்ததாக வளைகுடா நாடுகள் மற்ற நாடுகள் எல்லாம் வரும்

ஏற்கனவே சொன்னது போல விளையாட்டு பொம்மை முதல் பெரும் தொழில் நிறுவனங்களுக்கான மெஷினெரி வரை சீனாவை நம்பி தான் நாம் உள்ளோம்.

சுதந்திரம் கிடைத்து இந்த 70 ஆண்டுகளில் நாம் நமது அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம், போக்குவரத்து, குடியிருப்பு, தொழில்துறை, விஞ்ஞானம் ஆகியவற்றுக்கு கவனம் செலுத்தியதில் போதுமான அளவுக்கு உற்பத்தித்துறைக்கான கவனத்தை கொடுக்க முடியவில்லை. மேலும் இத்தனை மனித வளம் இருந்தும் Innovative Manufacturing எதையும் நாம் இதுவரை செய்யவில்லை. எனவே பல டெக்னிகல் எலக்டிரானிக்கல் பொருட்களை நாம் இறக்குமதி தான் செய்கிறோம். அதில் பெரும்பான்மையானவை சீனாவில் இருந்து.

தொழிற்சாலைக்கு தேவையான இரும்பு, இந்தியாவில் வாங்குவதை விட சீனாவில் வாங்குவது விலை குறைவாகவும் தரமானதாகவும் இருக்கும். சீன பொருட்கள் தரமற்றவை என்பதே மற்றுமொரு மாயப்பிரச்சாரம் தான். இந்தியா சீனாவில் இருந்து ₹430 பில்லியனுக்கு இறக்குமதி செய்கிறது.. தரமில்லாமலா என்ன? இரண்டாம் இடத்தில் இருக்கும் அமேரிக்காவிடம் இருந்து நாம் ₹200 பில்லியனுக்கு தான் இறக்குமதி செய்கிறோம். இந்த கணக்கு சொல்லும் நாம் எந்த அளவுக்கு சீன பொருட்களை சார்ந்து இருக்கிறோம் என்பதை.

இப்படி இருக்க சீன பொருட்களை தவிர்ப்பது சாத்தியமா?

ஏற்கனவே சொன்னபடி DGFT ஒரு Notification போட்டு நாளை முதல் சீன பொருட்களை இறக்க அனுமதி இல்லை என சொன்னால் போதும். சாத்தியம் தான். ஆனால் அது அவ்வளவு எளிது அல்ல.

சீன பொருட்களுக்கு நம்மிடையே மாற்று இல்லை. நம்மிடம் அந்த அளவு உற்பத்தி திறன் இல்லை. சீனாவுக்கு பதிலாக வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் விலை அதிகம். அது நமது தொழில் துறையை பாதிக்கும்.

நாம் நமது தொழில்துறையை வளப்படுத்தாமல், புதிது புதிதான கண்டுபிடிப்புக்கள் செய்யாமல், உற்பத்தி திறனை அதிகரிக்காமல் சீனாவையோ வேறு நாட்டையோ உதாசீனப்படுத்தி விட முடியாது

இந்த விஷயங்களை எல்லாம் புரிந்து கொள்ளாமல் போனில் உள்ள டிக்டாக் ஆப் மாதிரி ஆப்களை நீக்கினால் இந்தியா சுய சார்பு அடைந்து விடும் என்பது போன்ற சமூக வலை தள செய்திகளை புறக்கணிப்பதே அறிவார்ந்த செயல்..

மெத்த படித்தவர்கள், பெரும் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளாவர்கள், அமைச்சர்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரையில் இது போன்ற சீன புறக்கணிப்பு செய்தியை பகிர்ந்து வருவது ஆச்சர்யம் தருகிறது

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

எனும் வள்ளுவன் வாக்கின் படி, பொய் புரட்டு கற்பனை செய்திகளை புறக்கணித்து நமது உற்பத்தி திறனை அதிகரிக்க வழி பார்ப்பது நல்லது


5 comments:

Printfriendly