2017 ஆம் ஆண்டு துவக்கத்தில் சிறை சென்ற சசிகலா வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி விடுதலை ஆகக்கூடும் என்கிற ஊகங்கள் மெல்ல பவனி வருகின்றன.
நான்காண்டு சிறை தண்டனையில் இப்போது மூன்றரை ஆண்டு முடிந்து இருக்கிறது. ஏற்கனவே அவர் சிறையில் இருந்த காலங்களையும், இப்போது சிறையில் சட்டப்பூர்வமாக அவருக்கு உள்ள விடுமுறைகளையும் கணக்கில் எடுத்து பார்த்து தான் இந்த ஆகஸ்ட் 14 என்கிற நாளை குறித்து இருப்பார்கள் என தோன்றுகிறது.
சிலர் 'இது அவரது நன்னடத்தைக்காக கிடைத்த சலுகை. அதனால் முன்கூட்டியே விடுதலை ஆகிறார்' என்கிறார்கள். ஆனால் மேலே சொன்ன கணக்கை பார்த்தால் முன்கூட்டி விடுவிக்கும் 'சலுகை' எல்லாம் இல்லாமலே நியாயமாகவே அவர் விடுதலை ஆகவேண்டிய காலகட்டமாக தான் ஆகஸ்ட் மாதம் அமைகிறது.
எது எப்படியோ.. அவர் விடுதலை ஆகி இப்போது தமிழகம் வந்தால் என்ன நடக்கும் என்கிற கேள்வியும் அதற்கான பற்பல யூகமான பதில்களும் எதிர்பார்ப்புக்களும் சுற்ற தொடங்கி விட்டன.
தமிழகம் வந்தால் என்ன ஆகும்? எனும் கேள்விக்கு 14 நாள் குவாரண்டைன் தான் ஆகும் என்கிற மொக்கை ஜோக்குகளை புறம் தள்ளி விட்டு.. அரசியல் அரங்கில் என்னவெல்லாம் நடக்கும் என்கிற யூகங்கள் பற்றி பார்ப்போம்.
அவர் மீண்டும் அரசியலுக்குள் இறங்குவாரா அல்லது இது வரை ஆனதெல்லாம் போதும் என அமைதியாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பாரா என்பது தான் முதல் கேள்வி.
இதற்கான விடை அரசியலில் மீண்டும் ஈடுபடுவார் என்கிற யூகமாக இருந்தால் தான் மேற்கொண்டு பேச வேண்டும். ஒதுங்கி இருப்பார் எனில் விவாதிக்க எதுவுமே இல்லை. எனவே அவர் அரசியலில் தொடர்வார் என்கிற யூகத்திலேயே பயணிப்போம்.
அரசியலில் அவருக்கு இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன.
டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் தலைமை ஏற்று அதிமுக & திமுக இருவருக்கும் எதிராக களமாடுவது
ஆனால் அதை அவர் விரும்பமாட்டார் என்பதே பொதுவான கருத்து. அதிமுக தலைமையை கைப்பற்றுவது தான் அவரது இலக்காக இருக்கக்கூடும். அது தான் முக்கியமான பதவியாகவும் இருக்கும்
இப்போது அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி இல்லை. எடப்பாடி அவர்களும் பன்னீர்செல்வம் அவர்களும் ஒருங்கிணைப்பாளர்கள் தான். பொதுச்செயலாளர் அல்ல.
அதிமுகவின் சட்டப்படி பொதுச்செயலாளர் தான் சர்வ வல்லமை பொருந்தியவர். அவரது அனுமதி ஒப்புதல் இன்றி எதையும் செய்ய முடியாது
ஜெயலலிதா மறைவுக்கு பின் பொதுக்குழு கூடி ஒருமனதாக சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளர் ஆக தேர்ந்தெடுத்தது. பொதுச்செயலாளர் பதவிக்கான அனைத்து அதிகாரங்களையும் கொடுத்தது. முறையாக தேர்தல் நடத்தி பொதுச்செயலாளர் தேர்ந்து எடுக்கப்படும் வரை இந்த ஏற்பாடு.
ஆனால் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கி அறிவிப்பு வந்தது. சசிகலா தற்காலிக பொதுச்செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று வழக்கும் தொடரப்பட்டது. பொதுச்செயலாளர் பதவி குறித்த முடிவு தெரியும் வரை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது
இன்னொரு புறம், தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என சசிகலா தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது.
அனைத்து வழக்குகளும் இன்னமும் முடிவு தெரியாமல் நிலுவையில் தான் உள்ளன.
என்னுடைய பார்வையில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது சட்டப்படி நிற்காது. காரணம் ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்க வேண்டும் எனில் அதற்கு பொதுச்செயலாளர் ஒப்புதல் வேண்டும். எனவே ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது.
அமைப்பு செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர் என யாருக்கும் பொதுச்செயலாளரை நீக்கும் அதிகாரம் இல்லை. லாஜிக்காக பார்த்தால் நீதிமன்ற முடிவுகள் வரும் வரை பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா தான் தற்போதைய தற்காலிக பொதுச்செயலாளர்.
எனவே நீதிமன்றம் அதிமுக சட்ட விதிகளின் முடிவு செய்வதானால், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என சொல்லவே அதிக வாய்ப்பு உள்ளது.
இதை எல்லாம் சசிகலா நன்றாக உணர்ந்திருப்பார். மேலும் அமமுகவை விட அதிமுக தான் பலம் பொருந்தியது. எனவே அதிமுக தலைமையை குறிவைத்தே அவரது காய் நகர்த்தல்கள் இருக்கும்.
இன்னொரு பக்கம்.. அதிமுகவில் இப்போது இரு அணிகள் உள்ளதாக சொல்கிறார்கள். EPS அணி & OPS அணி. (மூன்றாவதாக சசிகலா அணியும் கூட இருப்பதாக யூகங்கள் சுற்றுகின்றன)
இதில் OPS பாஜகவை ஆதரிக்கும் அணி என்பது பொதுவான கருத்து.
சசிகலா பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்பது வெளிப்படையான விஷயம்.
எனவே சசிகலா தலைமைக்கு வந்தால் OPS நிலை என்ன என்பது கேள்விக்குறியே. அவர் தனியே போவாரா அல்லது பாஜக ஆதரவு நிலைப்பாட்டை கைவிட்டு அதிமுகவிலேயே தொடர்வாரா எப்பது முக்கியமான கேள்வி
அதிமுக தலைமையை சசிகலாவிடம் எடப்பாடி எளிதாக ஒப்படைத்து விடுவார் என்பதும் சந்தேகமே.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தனக்கென்று ஒரு பிம்பத்தை கட்டமைத்து தன்னை பலப்படுத்தி கொண்டு வந்துள்ளார் எடப்பாடி. அவருக்கென்று உள்ள நம்பிக்கையான அமைச்சர்கள் கொண்டு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மக்களின் மனதையும் எளிமையான செயல்பாடுகளால் மக்களின் நம்பிக்கையையும் எளிதாக அணுகும் பக்குவத்தால் கட்சியினர் அபிமானத்தையும் பெற்று உள்ளார். சுதந்திரமான செயல்பாடுகளை ஊக்குவித்து அதிகாரிகள் அளவிலும் நம்பிக்கைக்கு உரியவராக மாறி இருக்கிறார்.
இவை எல்லாம் இல்லாவிட்டால், எந்தவித நட்சத்திர அந்தஸ்த்தோ பிரபலமோ செல்வாக்கோ இல்லாத எடப்பாடியால் கட்சியையும் ஆட்சியையும் இத்தனை காலம் பிரச்சனை இல்லாமல் கட்டி காத்து இருக்க முடியாது என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்.
கட்சியில் அவரை விட சீனியர்கள் முக்கியஸ்தர்கள் அனுபவஸ்தர்கள் பலர் இருக்க அவர்கள் யாரும் இவருக்கு எதிராக கிளர்ந்து எழாமல் இருப்பது கூட இவர் மீதான நம்பிக்கையால் என்றே நம்பப்படுகிறது. ஆறு மாதங்கள் கூட தாக்குப் பிடிக்கமாட்டார் என சொல்லப்பட்ட எடப்பாடி இத்தனை காலமும் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பது சாதாரணமானது அல்ல.
தமிழக அரசு அதிகாரிகள் எத்தனை வலிமையானவர்கள் என்பதை நான் விளக்க வேண்டியது இல்லை. அரசு நிர்வாகம் இதுவரை அதிருப்தி அடையாமல் எந்த ஒரு பெரிய போராட்டமும் நடத்தாமல் எடப்பாடி அவர்களுக்கு கொடுக்கும் ஒத்துழைப்பும் அதிகாரிகளின் கட்டுப்பாடும் அவரது நிர்வாகத்தை பற்றி நமக்கு சொல்கிறது.
மக்கள் மத்தியில் அதிருப்தி எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே மக்களின் நேரடி தொடர்பாக இருக்கும் அத்தியாவசிய தேவைகளில் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார். சாலை, போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், ரேஷன் என பலவும் அன்றாட மக்கள் பயன்பாட்டில் குறை இல்லாமல் இருக்கும்படி நடைபெற வைக்கப்படுகிறது.
இதை எல்லாம் அவர் திட்டமிட்டு தனது நிலையை தக்கவைப்பதற்காக செய்தாரா என்பது தெரியாது. ஆனால் இன்றைய நிலையில் அவர் தனது நிலையை ஓரளவு தக்கவைத்து மக்களிடமும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளதாகவே நாம் காண்கிறோம்.
இந்த நிலையில் சசிகலா வந்ததும் அவரிடம் சட்டென்று சரண் அடைந்து விடுவார் என்பதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது தான்.
சசிகலா vs எடப்பாடி என பலப்பரீட்சை நடக்குமானால் அது திமுகவுக்கான ஜாக்பாட். அடுத்த ஆண்டு தேர்தல் இருக்கும் நிலையில் திமுகவுக்கு இது மிக மிக சாதகமாக ஆகும்.
ஆனால் சசிகலாவுக்கான ஆதரவு அதிமுகவுக்குள் எவ்வளவு என்பது தெரியாது.
பாஜகவுடன் அதிமுக அணி சேர்ந்தது அதிமுக கட்சியில் பெரும்பாலோருக்கு பிடிக்கவில்லை என்பது கடந்த தேர்தலில் அவர்கள் களப்பணியில் காட்டிய அலட்சியம் வெளிச்சமாக்கி விட்டது. அவர்கள் எல்லோரும் சசிகலாவை ஆதரிக்க வாய்ப்பு இருந்தது தெரிந்தோ என்னவோ சமீப காலமாக மத்திய அரசுக்கு எதிரான வழக்குகள், மத்திய அரசு திட்டத்துக்கான எதிர்ப்புக்கள் என எடப்பாடியும் பாஜக எதிர்ப்பு நிலையையே எடுத்து வர தொடங்கி இருக்கிறார்.
சசிகலா தண்டனை முடிந்து விடுதலை ஆனாலும் அவரால் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே ஆட்சி தலைமையை அவர் குறி வைக்க மாட்டார்.
எடப்பாடி சசிகலாவுடன் இணைந்து செயல்பட முன்வந்தால் அவரே முதல்வராக தொடரவும் வாய்ப்பு உள்ளது. அனேகமாக இந்த ஏற்பாட்டுக்கு எடப்பாடி ஒப்புக்கொள்வார் என்றே பலரும் நினைக்கிறார்கள். அதற்கு ஆதாரமாக சசிகலாவின் நம்பிக்கைக்கு உரியவரும் சசிகலாவுக்காக பெங்களூரு நீதிமன்றத்தில் தனது சொத்துக்களை collateral guarantee ஆக கொடுத்த திரு புகழேந்திக்கு இப்போது அதிமுகவில் முக்கிய பதவி கொடுத்து இருப்பதை சொல்கிறார்கள். சசிகலாவுக்கு சாதகமாக கட்சியை மாற்றும் முயற்சியில் அவர் ஈடுபடக்கூடும்.
ஒருவேளை எடப்பாடி முரண்டு பிடித்தால் சசிகலாவின் நம்பிக்கைக்கு உரியவர்கள் யாரேனும்.. ஏன் டிடிவி தினகரனே கூட ஆட்சி தலைமை ஏற்று.. சசிகலா வழிகாட்டுதல் படி செயல்படக்கூடும்.
ஆனால் இவை எல்லாம் வெறும் ஊகங்களே. சசிகலா நீக்கப்பட்டது சரி தான் என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் எடப்பாடி அசைக்கமுடியாத பலத்தை பெற்று நிலைத்து நிற்பார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதே.
இவை தவிர ஜெயலலிதா சொத்துக்கள், சசிகலா மீதான இதர வழக்குகள் என இன்னும் பலவற்றிலும் சசிகலா என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
அடுத்த சில மாதங்களில், தமிழக அரசியல் களம் என்னென்ன பரபரப்புக்களை என்னென்ன மாற்றங்களை காணப்போகிறதோ தெரியவில்லை
நாம் வேடிக்கை பார்க்க தொடங்குவோம்.
No comments:
Post a Comment