Wednesday, December 30, 2020

ரஜினியின் முடிவு - இனி என்ன?

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நீடித்து வந்த ஒரு எதிர்பார்ப்பு இன்று முடிவுக்கு வந்து உள்ளது.

அரசியலுக்கு வருவார் ரஜினி, தமிழகத்தை ஆட்சி செய்வார் என்ற அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும், ரஜினி எனும் பிம்பத்தை வைத்து அரசியல் லாபம் பார்க்க நினைத்த சில அரசியல் இயக்கங்களையும் ஒரு சேர முடிவுக்கு கொண்டு வந்து விட்டார்.

சில வாரங்களுக்கு முன்பு கூட, ஏதோ ஒரு அழுத்தம் காரணமாக, ஜனவரி மாதம் கட்சி ஆரம்பித்து விடுவேன்.. அது தொடர்பான அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பேன் என சொல்லி இருந்தார். 

பாஜகவின் "அறிவுசார்" அணியின் தலைமை பொறுப்பில் இருந்த திரு.அர்ஜுன மூர்த்தியை அந்த பதவியில் இருந்து பாஜக "விடுவித்து" அவர் ரஜினியுடன் இணைந்து ரஜினியின் அறிவிக்கப்படாத கட்சியின் தலைமை ஒருஙகினைப்பாளர் ஆக பொறுப்புக்கு கொண்டு வந்தார்.

ரஜினி சார்பாக கட்சி பெயர் பதிவு, ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு என்றெலலாம் வந்த செய்திகள் அவர் அரசியலுக்கு வருவதில் தீவிரமாக இருப்பதாக நம்ப வைத்தன.

ஆனால் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக அவர் அரசியலுக்கு வரவில்லை என்பதை முடிவு செய்து அறிவித்து விட்டார். இது இறுதி முடிவா அல்லது வழக்கமான "மாறுதலுக்கு உட்பட்ட" முடிவா என்பது தெரியவில்லை.

ரஜினியின் இந்த முடிவுக்கு பிறகு தமிழக தேர்தல் களம் எப்படி இருக்கும்?

ரஜினி கட்சி தொடங்கி கூட்டணி இல்லாமல் தனித்து போட்டி இட வேண்டும் என்பதில் பாஜக தான் தீவிர ஆர்வம் காட்டி வந்தது. அதற்கான கணக்கீடுகள் இல்லாமல் இல்லை.

இன்றைய சூழலில் திமுக மக்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்று வருகிறது. அடுத்த ஆட்சி திரு ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி என மக்கள் மனநிலைக்கு வந்து விட்டனர்.

திமுக ஆட்சிக்கு வராமல் இருக்க வேண்டும் என்றால், அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்களும், நடுநிலை ஓட்டுக்களும் திமுகவுக்கு போகாமல் தடுக்க வேண்டும்.

எனவே ரஜினி கட்சி ஆரம்பிப்பது, அதிமுக & பாஜக கூட்டணிக்கு மிக அவசியமாக இருந்தது.

திமுக & அதிமுகவை விரும்பாத நபர்கள் வாக்கு அளிக்க ஒரு நம்பிக்கையான முகம் தேவை ஆக இருந்தது. எனவே பாஜகவின் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்தே ரஜினியின் பிம்பத்தை மெருகேற்றும் அறிக்கைகள் வெளிப்படையாக வர தொடங்கின.

ரஜினி மிக நல்லவர். மக்களுக்கு ஏதாவது செய்ய ஆசை படுகிறார், அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என குருமூர்த்தி போன்ற தீவிர பாஜக ஆதரவாளர்கள் சொல்லியது எல்லாம் பாஜக ரஜினியை எதற்காக முன்னிறுத்திக் கொண்டு உள்ளது என்பதை புரிய வைத்தது.

ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு, பாஜகவின் தலைவர்கள் வெளிப்படையாக அதிமுகவை விமர்சிக்க ஆரம்பித்தனர். 

"மக்களிடம் கொள்ளை அடித்த பணத்தில் இருந்து தான் பொங்கல் பரிசை அதிமுக தருகிறது" என்றும்

"கார் டயரை கும்பிடும் தலைவர்களை கொண்ட கட்சி" என்றும்

"தமிழகத்தில் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜகவின் டெல்லி தலைமை தான் அறிவிக்கும். அதிமுக அறிவிப்பை ஏற்க முடியாது" என்றும்

"பாஜகவுக்கு அமைச்சர் பதவி கட்டாயம்" என்றும்

பாஜக துணிச்சலாக பேச ரஜினியின் வருகை ஒரு முக்கிய காரணம்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகி ரஜினி தலைமையில் அணி அமைக்க பாஜக காய் நகர்த்துவது போன்ற ஒரு தோற்றம் தெரிய தொடங்கியது.

அதிமுக சமீபத்தில் நடத்திய தேர்தல் பரப்புரை தொடக்க கூட்டத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்தது, அவர்களுக்கு இடையிலான உறவில் விரிசல் அதிகரித்ததை காட்டுகிறது.

இந்த சூழலில் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்கிற அறிவிப்பு பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சி தந்ததில் வியப்பு இல்லை.

அறிவிப்பு வந்த சில மணி நேரத்திலேயே பாஜக ஆதரவாளர்கள் ரஜினியை விமர்சிக்கத் தொடங்கியது அவர்களது பெருத்த ஏமாற்றத்தை காட்டுகிறது.

இனி என்னென்ன வழிகள் உள்ளது?

பாஜகவுக்கு அதிமுகவுடன் இணைவது தான் அதன் வளர்ச்சிக்கு நல்லது. எனவே அதிமுக குறித்து விமர்சித்து பேசிய தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதிமுகவை சமாதானப்படுத்தும் வழிகளை தான் முதலில் முயற்சி செய்வார்கள் என நினைக்கிறேன்.

அதிமுக பாஜகவின் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் அதிமுகவின் ஊழல்கள் குறித்த விரிவான பட்டியலை திமுக சமீபத்தில் தான் ஆளுநரிடம் சமர்ப்பித்து இருக்கிறது. அதை வைத்து பாஜக அதிமுகவை பணிய வைக்கக் கூடும்.

ஒருவேளை அதிமுக பாஜக பிரிந்தால், பாஜக அடுத்ததாக மக்கள் நீதி மையத்தின் உதவியை நாடும். அவர்களுடன் இணைந்து மூன்றாவது அணி அமைத்து தேர்தலில் போட்டி இடலாம். ஆனால் இதற்கான வாய்ப்பும் இது நடந்தால் வெற்றி வாய்ப்பும் மிக மிக குறைவு.

இந்த நிமிடம் தமிழக தேர்தல் களம் திமுக & அதிமுக இருவருக்கானது.

அவர்களை தலைமையாக கொண்டு இயங்கும் கட்சிகள் அணி சேர்ந்து இரு முனை போட்டியாக தேர்தல் களம் அமையும் என்றே எதிர் பார்க்கிறேன்.

தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு சாதாரண கட்சி. புதிதாக தொடங்கப்பட்ட மக்கள் நீதி மையம் பெற்று இருக்கும் மக்கள் ஆதரவு அளவு கூட மக்களிடம் ஆதரவு இல்லாத கட்சி.

எனவே இந்த எதார்த்தத்தை புரிந்து கொண்டு அதிமுகவின் கீழ் தேர்தலை சந்திப்பது தான் பாஜக எடுக்கக்கூடிய சரியான முடிவாக இருக்கும்.

ரஜினி தனது முடிவை மீண்டும் மாற்றி கொள்ளாத வரை, தமிழக தேர்கள் களம் அதிமுக & திமுக அணிகளுக்காக களமாக தொடரும்.

பார்ப்போம்

No comments:

Post a Comment

Printfriendly