Friday, December 11, 2020

ரஜினியின் அரசியல் வருகை

1990 க்களின் துவக்கத்தில் இருந்து இதோ வர்றேன் அந்தோ வர்றேன் என போக்கு காட்டி கொண்டு இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு வழியா ஒரு அறிவிப்பை கொடுத்து இருக்கார்

அதாவது, ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப்படும் (ஜனவரி 2021 என்றுதான் நினைக்கிறேன்) அது தொடர்பான அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என சொல்லி இருக்கிறார்.

சோ, அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்கிற அளவில் இப்போது வந்து நிற்கிறது.

இது எதிர்வரும் தமிழக தேர்தல் 2021 இல் என்ன மாதிரியான விளைவுகளை, மாற்றத்தை, ஏமாற்றத்தை, பாதிப்பை தரக்கூடும் என பார்ப்போம்.
அரசியலுக்கு வர தயக்கம் காட்டி பேசி இரண்டு நாளுக்குள் அரசியலுக்கு வருவதை அறிவிக்கும் அளவுக்கு அவருக்கு என்ன பிரஷர் என்கிற குழப்பமான கேள்வியை தவிர்த்து விட்டு போவோம்

தமிழகத்தில் 234 தேர்தலிலும் தனித்து போட்டி இடப்போவதாக ரஜினி ஏற்கனவே சொல்லி இருந்தார். எனவே அவர் எந்த அணியிலும் சேர மாட்டார் என தோன்றுகிறது.

ஆட்சி மாற்றம் தான் குறிக்கோள் என சொல்லி இருப்பதையும் வைத்து பார்த்தால் அவர் அதிமுக & பாஜக ஆகிய கட்சிகளுக்கு எதிராகத் தான் கட்சி தொடங்குவதாக தோன்றும்.

ஆனால், பாஜக அவரை ஆதரித்து மகிழ்ந்து துள்ளி குதிப்பதை பார்த்தால் அஜெண்டா வேறு ஏதோ ஒரு ரூட்டில் பயணிப்பது புரியும்.

இப்போதைய சூழலில் அதிமுக ஸ்ட்ராங்கா இல்லை. திமுக மக்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது. தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைக்கும் என்பது கிட்டத்தட்ட நிச்சயம் ஆகிவிட்டது போல ஒரு தோற்றமும் தெரியத் தொடங்கி இருக்கிறது.

பாஜக + அதிமுக அணிக்கு வாக்குகளை கவரக்கூடிய முகம் எதுவும் இல்லை. திமுக மக்களிடம் பெற்று வரும் அசுர பலம் கொண்ட ஆதரவை முறியடிக்க தகுந்த வழிகள் எதுவும் பாஜக + அதிமுக கூட்டணியில் இல்லை. மேலும் அதிமுக மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது.

இப்போது இருக்கும் ஒரே வழி.. அதிமுகவுக்கு எதிராக உள்ள வாக்குகளை மொத்தமாக திமுக பக்கம் போகாமல் பார்த்துக் கொள்வது மட்டும் தான் அதிமுக + பாஜக வெல்ல ஒரே வழி

எனவே, கமல் தலைமையில் மக்கள் நீதி மய்யமும், ரஜினி தலைமையில் "பெயர் சூட்டப் படாத" அவரது கட்சியும் எல்லா 234 தொகுதிகளிலும் போட்டி இடுவது தான் பாஜக + அதிமுக வெல்ல ஒரே வழி

அதிமுக மீது அதிருப்தி கொண்டவர்கள் திமுகவுக்கு தான் ஓட்டு போட்டு ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தை மாற்றி, கமலுக்கு அல்லது ரஜினிக்கு கூட போடலாமே என்கிற சாய்சை மக்களுக்கு கொடுத்தால் அதிமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் பிரியும்.

அந்த எதிர்ப்பு ஓட்டுக்கள் திமுகவை நோக்கி செல்லாமல், கமல், ரஜினி, சீமான் என பிரிவது திமுகவை பலவீனம் ஆக்கும். 

அதிமுக அதிருப்தி ஓட்டுக்கள் மட்டும் அல்லாமல் எந்த கட்சியும் சாராத நடுநிலை வாக்குகளும் ரஜினி எனும் ஆளுமை மீதான ஈர்ப்பால் அவருக்கு ஓட்டு போட வாய்ப்பு இருக்கிறது. இதை குறி வைத்தே ரஜினி நல்லவர் வல்லவர் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் என பாஜக தரப்பில் இருந்தே ரஜினியின் இமேஜை பூஸ்ட் செய்யும் பணிகள் நடக்கிறது.

ரஜினியின் "பெயர் அறிவிக்காத கட்சி"யின் தலைமை ஒருங்கிணப்பாளர் பதவிக்கு பாஜகவில் இருந்து ஆளை அனுப்பி வைத்த நிகழ்வும், குருசாமி போன்றோர் ரஜினி குறித்து கட்டமைத்து வரும் உயர் பிம்பமும் அதை ஆமோதிப்பது போலுள்ளது.

எனவே கமல் & ரஜினி இருவரும் அதிமுக+பாஜக கூட்டணி வெற்றிக்காக மறைமுகமாக செயல்படுவதாக ஒரு தோற்றம் தான் இன்றைய சூழலில் இருக்கிறது.

ஒருவேளை, ரஜினி உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்யவேண்டும், ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் அவரது செயல்பாடு வேறு மாதிரி இருக்கும்.

வெறும் சினிமா புகழ் வைத்து அரசியலில் வாக்குகள் பெற முடியாது. அப்படி இருந்தால், சிவாஜி எப்போதோ முதல்வர் ஆகி இருப்பார். 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எல்லோரும் தேர்தலை சந்திக்கும் முன்பே, மக்களின் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்துவது, மக்களுக்காக குரல் கொடுப்பது, மக்களோடு மக்களாக நிற்பது என தங்கள் இமேஜை ஒரு நடிகர் என்பதில் இருந்து மாற்றி, மக்களுக்கான தலைவராக உருமாற்றி பிறகு தான் தேர்தலில் வென்றார்கள்.

எனவே, சினிமா புகழில் யாரும் வென்றிடவில்லை. அரசியல் களமாக தந்து களத்தை மாற்றி அதில் போராடி அதில் இருந்து தான் வென்று வந்தார்கள்.
எந்த ஒரு அரசியலும் களத்தில் நின்று தான் செய்ய முடியுமே தவிர வீட்டு போர்டிகோவில் இருந்தோ ஆபீஸ் அறையில் இருந்தோ டிவி நிகழ்ச்சிகளில் போடியத்தில் இருந்தோ நிகழ்த்த முடியாது.

எனவே ரஜினி உண்மையிலேயே ஆட்சி அதிகாரத்துக்கு வர நினைத்தால்.. அவர் செய்ய வேண்டியது எல்லாம்:

- இப்போதைய மக்கள் பிரச்சனைகளில் தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்த வேண்டும்

- மக்கள் பாதிக்கப்படும் போது (இயற்கை சீற்றங்கள்) அவர்களோடு நின்று ஆறுதல் சொல்ல வேண்டும்

- மக்களின் தேவைகளுக்கு அவர்களோடு நின்று குரல் கொடுக்க வேண்டும்

- ஆளும் அரசுகள் மக்கள் விரோத நடவடிக்கைகள் எடுக்கும் போது அதை எதிர்த்து போராட வேண்டும்

இப்படி எல்லாம் செய்தால் தான் அரசியல் களத்தில் வெல்ல முடியுமே தவிர வெறும் பேச்சுக்கள் உதவாது

எனவே.. முதலில்.. ரஜினி அவர்களது நோக்கம்

மக்களுக்காக ஆட்சி அமைத்து நல்லது செய்வதா

அல்லது

அதிமுக+பாஜக அதிருப்தி வாக்குகளை பிரித்து அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதா என்பதை அவர் தெளிவு படுத்தி பேசுவது நல்லது

அது வரை இது வெறும் "அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிக்கப்படும் அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும்" என்கிற அறிவிப்பாக மட்டுமே நீடிக்கும்

No comments:

Post a Comment

Printfriendly