எழுத்தாளர் மாலன் அவர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான "சாகித்ய அகாதமி" விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு சின்னதாக ஒரு சர்ச்சையை எழுப்பி இருக்கிறது
எழுத்தாளர் சைரஸ் மிஸ்ட்ரி எழுதிய 'Chronicle of a Corpse Bearer' என்னும் ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்' நூலுக்காக திரு மாலன் அவர்களுக்கு இந்த சாகித்ய அகாதமி விருது "மொழி பெயர்ப்பு நூல்" பிரிவில் அறிவிக்கப்பட்டது.
இந்திய அரசால் எழுத்தாளர்கள், நூல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக சாகித்திய அகாடமி விருது கருதப்பட்டு வருகிறது. 1955 ஆம் ஆண்டில் இருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த புத்தகங்களுக்கு ஆண்டுதோறும் சாகித்திய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் மொழி பெயர்ப்பு நூல்களுக்கும் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த விருதை பெறுபவர்களுக்கு ரூ.50,000 ரொக்கம், சால்வை செப்பு பட்டயம் ஆகியவை வழங்கப்படும்.
இந்த மொழி பெயர்ப்பு பிரிவில் தான் திரு. மாலன் அவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
திரு. மாலன் அவர்கள் மிக பிரபலமான எழுத்தாளர். குமுதம், குங்குமம், புதிய தலைமுறை, இந்தியா டுடே போன்ற பல பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தவர்.
இவரது எழுத்துக்களுக்கு என்று ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது. இவரது சிறுகதைகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டு உள்ளது.
"வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்", 'நந்தலாலா", "தப்புக் கணக்கு" போன்ற நூல்களும், "மனம் எனும் வனம்" கவிதை தொகுப்பும் எல்லோரும் படித்து இருக்கலாம். இவை தவிர எழுத்தாளர் திரு லா.சா.ராமாமிர்தம் அவர்களை பற்றி எழுதிய "மனவெளிக் கலைஞன்" புத்தகம் மிக நெகிழ்ச்சியான ஒன்று.
மேலும் நிறைய புத்தகங்கள் எழுதிய சிறந்த எழுத்தாளர் அவர். அதில் சந்தேகம் இல்லை.
ஆனால் இந்த விருது சர்ச்சை ஆனதற்கு காரணம் அவர் தகுதி இல்லாதவர் என்று எல்லாம் அல்ல. அவர் தகுதியானவர் தான்.
சாகித்ய அகாதமி பொது ஆலோசனை குழுவில் தமிழ் நாடு சார்பாக திரு. மாலன் அவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.
அவர் ஆலோசனை குழு உறுப்பினராக இருக்கும் நிலையில் அவருக்கே விருது அறிவிக்கப்பட்டு உள்ளது அறத்தின் அடிப்படையில் சரியா என்பது தான் விவாதமே.
தார்மீக அடிப்படையில் திரு. மாலன் அவர்கள் இந்த விருதை தவிர்த்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது அவரது எழுத்தின் வலிமையை குறைத்து மதிப்பிட்டு, அவர் குழு உறுப்பினர் என்பதால் கிடைத்த விருது என சிறுமைப் பட்டு விடக் கூடும்.
பாரம்பரியம் மிக்க சாகித்ய அகாதமி விருது தேர்வு முறையையும் அது இனி சந்தேகத்துக்கு உள்ளாக்கி விடக்கூடும்.
பொதுவாகவே, அங்கீகாரம் அளிக்கும் இடத்தில் இருப்பவர்கள் அவர்களுக்காக அந்த அங்கீகாரத்தை எடுத்து கொள்வதை சரியானது என சொல்ல மாட்டார்கள்.
அப்படியான ஒரு விமர்சனத்தில் இருந்து திரு மாலன் அவர்கள் வெளி வர இன்னமும் காலம் இருக்கிறது
No comments:
Post a Comment