Wednesday, June 1, 2022

GST இழப்பீடு குழப்பங்கள்

னைத்து மாநிலங்களுக்கும் உரிய GST நிலுவைத் தொகையை நேற்றைய தினம் ஒன்றிய அரசு விடுவித்து இருப்பதாக நிதி அமைச்சக செய்திக்குறிப்பு வெளியாகி உள்ளது. 



ஒன்றிய அரசின் கையில் Compensation CESS ₹25,000 கோடி தான் இருந்தது. எனினும் பிற கணக்குகளில் இருந்து பாக்கி தொகை போட்டு நிலுவை தொகையை மொத்தமாக ₹86,912 கோடி மாநிலங்களுக்கு கொடுத்து இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்து இருக்கு. 

அதுவும் 31.05.2022 வரை கணக்கிட்டு நிலுவை தொகையை கொடுத்ததாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

முதலில் Compensation CESS என்றால் என்ன என சுருக்கமாக பார்ப்போம்.

GST சட்டம் அமல் ஆகும் முன்பு இருந்த VAT, CST, Central Excise, Service Tax போன்ற வரிகளின் மூலம் மாநிலங்களுக்கு கிடைத்துக் கொண்டு இருந்த வரி வருவாய் எவ்வளவு என பார்த்து..

GST வந்த பிறகு சில குறிப்பிட்ட பொருட்கள் தவிர பெரும்பாலான பொருட்களுக்கு அந்த பழைய வரிகள் எல்லாம் செல்லாது என அறிவிக்கப்பட்டு GST வரி மட்டும் தான் என ஆன பிறகு, மாநிலங்களுக்கு கிடைக்கும் வருவாயை கணக்கிட்டு..

இரண்டுக்கும் இடையிலான வருவாய் மாறுபாடு பற்றாக்குறை ஆக இருந்தால், அதாவது முன்பு கிடைத்த வரியை விட GST வருவாய் குறைந்து இருந்தால், அந்த பற்றாக்குறையை ஈடு செய்ய வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. 

அந்த வரி வருவாய் பற்றாக்குறையை மாநிலங்களுக்குஈடு செய்வது தான் Compensation CESS வழியிலான இழப்பீடு. 

இந்த Compensation CESS ஐ தான் ஒன்றிய அரசு நேற்று விடுவித்து இருக்கிறது.

இந்த ₹86,912 கோடியில் தமிழக அரசுக்கு நிலுவை தொகையாக ₹9,602 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.



இது தவிர இன்னொரு பங்கும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கொடுக்கவேண்டும்.

மாநிலம் விட்டு மாநிலம் நடக்கும் வர்த்தகங்களுக்கு (Inter State Transactions) ஒன்றிய அரசு மொத்தமாக வசூலிக்கும் IGST வரியில் இருந்து மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகையை இன்னமும் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை.

அந்த வகையில் தமிழகத்துக்கு இன்னமும் சுமார் ₹4,400 கோடி வர வேண்டி உள்ளது.

ஆனால் நேற்றைய ஒன்றிய அரசின் அறிக்கையில் எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை.

அதெப்படி 31.05.2022 வரை இழப்பீட்டை கணக்கிட்டு கொடுத்தார்கள்?

மே மாத விற்பனை விவரங்களை வணிகர்கள் ஜூன் மாதம் 11 ஆம் தேதி தான் தாக்கல் செய்வார்கள். Input Tax Credit (ITC) விவரங்களை ஜூன் மாதம் 20 ஆம் தேதி தான் வணிகர்கள் முழுமையாக தாக்கல் செய்வார்கள். இந்த அனைத்து விவரங்களும் GST இணைய தள ஒருங்கிணைப்பு பிரிவில் ஜூன் மாதம் 21 ஆம் தேதி தான் கிடைக்கும்.

இப்படி இருக்க, மே மாதம் 31 ஆம் தேதி வரையிலான இழப்பீடு என எப்படி கணித்து இருப்பார்கள் என்று புரியவில்லை.



மாதக் கடைசி நாளில் பெரும்பாலும் இரவு வரை விற்பனை இருக்கும். வெளி மாநிலத்துக்கு அனுப்ப வேண்டிய பொருட்கள் இரவு தான் ஏற்றி அனுப்புவார்கள். 

அப்படியான இறுதி நாள் வர்ததகங்கள் நடைபெறும் முன்பே எப்படி இழப்பீடு கணிக்க முடியும்?

ஒன்று.. குத்து மதிப்பாக கணித்து பணத்தை கொடுத்து இனி கொடுக்க எதுவும் இல்லை என பொறுப்பினை தட்டிக் கழிக்க நடக்கும் முயற்சியாக இருக்கலாம்.

அல்லது, பெருமைக்காக மொத்தமாக கொடுத்து விட்டதாக சொல்லி பின்னர் கணக்கு பார்த்து சரிக் கட்டிக் கொள்ளலாம் என நினைத்து இருக்கலாம்.

இரண்டுமே நிதி அமைச்சகம் மாதிரியான பொறுப்பான துறைக்கு அழகல்ல.

வரும் ஜூன் 2022 வரை தான் Compensation CESS ஒன்றிய அரசால் இழப்பீடு வழங்க முடியும். அதன் பின் மாநிலங்கள் அவரவர் வரி வருவாயை அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது சட்டம். 

இந்த கால அளவை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என மாநிலங்கள் கேட்டு கொண்டு இருக்கும் வேளையில், எல்லா பாக்கியையும் கொடுத்து விட்டோம் என ஒன்றிய அரசு அவசரம் அவசரமாக கணக்கை முடிக்க முயற்சி செய்வது, கால அளவை நீட்டிக்கும் உத்தேசம் ஒன்றிய அரசுக்கு இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறது.

அப்படி கால அளவு நீட்டிக்கப் படாமல் போனால், கடந்த இரண்டு ஆண்டுகள் கோவிட் காரணமாக பொருளாதாரம் தொய்வு அடைந்து வரி வருவாய் குறைந்து இப்போது தான் அதில் இருந்து மீள தொடங்கி இருக்கும் நிலையில் மாநிலங்கள் எல்லாம் மிகுந்த நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

அது மற்ற துறைகளை பாதித்து ஒட்டு மொத்தமாக மாநிலங்களுக்கு பெரும் சிக்கலை உண்டு பண்ணவும் சாத்தியம் உண்டு.

நிதி அமைச்சகம் இந்த குழப்பங்களை எல்லாம் போக்கும் விதமாக இப்போது உடனடியாக செய்ய வேண்டியது:

1. நேற்றைய இழப்பீடு எந்த அடிப்படையில் கணக்கிட பட்டு உள்ளது என விளக்குவது.

2. IGST நிலுவை எவ்வளவு என தெளிவு படுத்துவது.

3. மே & ஜூன் நிலுவை எப்போது விடுவிப்பார்கள் என உறுதிப் படுத்த வேண்டியது.

4. Compensation CESS கால அளவை நீட்டிக்கும் எண்ணம் உண்டா என தெளிவு படுத்த வேண்டியது.

இவற்றை பொறுப்போடு செய்வார்களா.. அல்லது வழக்கம் போல பொறுப்பு இல்லாமல் இருப்பார்களா என்பதை நிதி அமைச்சகத்தின் நடவடிக்கைகள் தான் நமக்கு உணர்த்தும்.
















https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1829777

No comments:

Post a Comment

Printfriendly