Saturday, June 27, 2026

வைகோ

 2004 பிப் 7 - மறக்கமுடியாத நாள்

என்னுடைய பிறந்தநாள் என்பதற்காக மட்டும் அல்ல

அன்றைக்கு தான் அண்ணன் வைகோ வேலூர் சிறையில் இருந்து வெளி வந்தார். 

தேர்தல் காலம்

வேலூரில் இருந்து வந்தவர் அன்று மாலை ஷெனாய் நகர் பொதுக்கூட்டத்தில் பேசினார்

நானும் நண்பர்களும் அந்த கூட்டத்தில் இருந்தோம். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் தீவிர மதிமுக நிர்வாகி. அவருடன் சென்று இருந்தேன்.

ஏற்கனவே வைகோ அவர்களின் பேச்சுக்கு நான் ரசிகன். ஓங்கி உயர்ந்து ஆரோகணமும் அவரோகணமுமாக அவர் ஆற்றும் தெள்ளு தமிழ் உரையை அதற்கு முன்பும் சில முறை நேரில் கேட்டு இருக்கிறேன். அதனால் நண்பன் அழைத்ததும் வேலையில் இருந்து நேரே ஷெனாய் நகர் போய்விட்டோம்.

திமுக கூட்டணியில் 4 தொகுதிகள் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.

மிகப்பிரமாதமான ஒரு அரசியல் பேருரை.. அன்று அனலாக பொழிந்தது அவரது பேச்சு..

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர பேச்சின் இறுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிக்க தொடங்குகிறார்..

மூன்று பேரின் பெயர்களை அறிவித்து விட்டு கொஞ்சம் இடைவெளி கொடுத்தார்.

மிச்சம் இருக்கும் தொகுதி.. சிவகாசி. 

அவர் தான் வேட்பாளராக இறங்குவார் என நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்து நிற்க.. 

"நாடாளுமன்ற தேர்தல்.. சிவகாசி தொகுதி.. போட்டியிடும் கட்சி மதிமுக.. போட்டியிடும் சின்னம் பம்பரம்.. போட்டியிடும் வேட்பாளர்..." என்று சொல்லி மேலும் சஸ்பென்ஸ் வைத்தார்..

எங்களுக்கு நெஞ்சு துடிப்பு அதிகரிக்க தொடங்கியது..

தொண்டர்கள் பட்டாசுகளை கொளுத்த தொடங்கினார்கள்..

வானவேடிக்கை முழங்கி கொண்டு இருக்க

"..போட்டியிடும் வேட்பாளர்.. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன்.. நன்றி வணக்கம்" என சொல்லி விடு விடுவென்று மேடையை விட்டு இறங்கி விட்டார்

நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றோம்.. அவர் என்ன சொன்னார் என புரியவே சில கணங்கள் ஆகிவிட்டது.



பதவி ஆசைகளுக்கு அதிகாரங்களுக்கு புகழுக்கு என எதற்கும் ஆசைப்படாத.. கொள்கை குன்றாக அன்றைக்கு எங்களுக்கு காட்சி அளித்தார் அண்ணன் வைகோ.

திமுக கூட்டணியில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றது மதிமுக.

ஆனால் அதற்கு அடுத்த ரெண்டு வருஷத்திலேயே 2006 சட்டமன்ற தேர்தலில் 21 தொகுதிகள் திமுக ஒதுக்கியும், ஒரே ஒரு தொகுதியை காரணமாக வைத்து அதிமுக அணிக்கு தாவி அங்கே 35 தொகுதிகள் வாங்கி அதில் 6 தொகுதிகள் மட்டுமே வென்றார். ஒருவேளை திமுக கூட்டணியில் நின்று இருந்தால் அதிக தொகுதிகள் வென்று இருப்பார்.

கடைசி நேரத்தில் திமுகவை விட்டு சென்றதும், அதற்கு அவர் சரியான காரணங்கள் எதுவும் சொல்லாததும், எனக்கு  அவர் மீதான மதிப்பு சரிய காரணமானது.. 

இப்போதும் அதே போல எந்த விதமான காரணமும் சொல்லாமல் கூட்டணியை விட்டு விலகி இருக்கிறார். அது அவரது கட்சியின் நலன் சார்ந்து அவர் எடுத்த முடிவு என புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதற்காக தேவையே இல்லாமல் ஸ்டாலின் தன்னை மரியாதைக்குறைவாக நடத்தினார், சரியாக பேசவில்லை என்று எல்லாம் குற்றம் சாட்டி உள்ளது தான் ஆச்சரியமாக இருக்கிறது. அவருக்கு அப்படி என்ன சூழல் என எனக்கு தெரியவில்லை.

எத்தனை முறை கைவிட்டு சென்ற போதும்.. திரும்பி வந்த நேரங்களில் ஆரத்தழுவி அவரை ஏற்றுக்கொண்ட இயக்கமாக திமுக இருந்திருக்கிறது.

மீண்டும் அப்படி ஒரு சூழல் வந்தாலும் திமுக அப்படி தான் இருக்கும். அது தான் திமுகவின் பண்பாடு

ஆனால் தனிப்பட்ட முறையில் என்னுடைய ஆசை எல்லாம்.. அப்படி ஒரு சூழல் இனி வந்தால் மீண்டும் ஏற்றுக்கொள்ள தேவை இல்லை என்பதே.

நான் மாபெரும் மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்த மற்றும் ஒரு தலைவரை நான் இப்போது வெறும் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதியாக பார்க்க நேர்கிறதே என்கிற வருத்தம் இன்றைக்கு எனக்கு உண்டு.

உங்கள் தமிழுக்கும் நீங்கள் எங்களுக்கு புரியவைத்த உலக அரசியல் வரலாற்றுக்கும் நன்றி அண்ணா  🙏🙏🙏

Sunday, November 23, 2025

கோவை மெட்ரோ திட்டம்

கோவை & மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது தான் சமீபத்திய பரபரப்பு.

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோயம்புத்தூர் (கோவை) தனது தொழில் வளர்ச்சி வேகத்தால் தென்னிந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக மாறி வருகிறது.

IT நிறுவனங்கள் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமான கோவை நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது.



எதிர்கால தேவைக்கான போக்குவரத்து வசதிகளை தொலைநோக்கோடு ஆரம்பிக்கும் விதமாக டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது (2006-11) திட்டம் தீட்டப்பட்டு கோவை நகருக்கான வளர்ச்சியை கருதி மெட்ரோ சேவைக்கான முதல் கட்ட கணக்கெடுப்பும் திட்ட வரையறையும் செய்யப்பட்டது.

ஆனால் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் ஆட்சிக்கு வந்த அதிமுக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், கோவைக்கு மெட்ரோ திட்டம் தேவை இல்லை என அந்த திட்ட பணிகளை கிடப்பில் போட்டார்கள். மெட்ரோவுக்கு பதிலாக மோனோ ரயில் திட்டத்தை கோவைக்கு கொண்டு வருவோம் என அதிமுக சொன்னது. ஆனால் அதற்கும் எந்த ஆக்கப்பூர்வமான பணிகளையும் அதிமுக எடுக்கவில்லை.

2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி அவர்களது ஆட்சியில் (2017–2021) கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் கையிலெடுக்கப்பட்டு அதற்கான  feasibility studies  மேற்கொள்ளப்பட்டன.

2021 தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்தபிறகு தான் கோவைக்கான விடிவுகாலம் பிறந்தது. 

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு இருந்த கோவை மெட்ரோ திட்டத்தை மீண்டும் உத்வேகம் பெறவைத்தது திமுக . CMRL (Chennai Metro Rail Ltd) மூலமாக திட்ட அறிக்கை DPR தயாரிப்பு செயல்முறைகள் வேகமெடுத்து 2023இல் DPR மாநில அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 

2024 ஆம் ஆண்டு Phase-1 DPR மற்றும் CMP சமர்ப்பிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

அப்படி அனுப்பப்பட்ட திட்டம் தான் இப்போது மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது.

திட்டத்தை திருப்பி அனுப்பியதற்கு மத்திய அரசு சொன்ன முக்கியமான காரணங்கள்:

🔹2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கோவை நகரின் மக்கள் தொகை 15 லட்சம் தான். குறைந்தது 20 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ திட்டம் அனுமதி அளிக்கப்படும்

🔹கோவை மெட்ரோவில் 5-6 லட்சம் பேர் பயணிப்பார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது. சென்னை நகரிலேயே மெட்ரோ ரயிலில் இப்போது 4 லட்சம் பேர் தான் பயணிக்கிறார்கள் என்கிற நிலையில் கோவையில் 5 முதல் 6 லட்சம் பேர் வரை பயணிப்பார்கள் என சொல்லி இருப்பது அதிகமாக தோன்றுகிறது.

🔹கோவை மெட்ரோ திட்ட அறிக்கையில் ரயில் 34 கிமீ வேகத்தில் பயணிக்கும் என சொல்லப்பட்டு உள்ளது. இந்த வேகத்தில் செல்வதற்கு ஆட்டோ ரிக்ஷா போதும். 

🔹கோவை நகருக்கு மெட்ரோ திட்டம் தேவை இல்லை. அதற்கு பதிலாக BRTS போன்ற பேருந்து திட்டங்களை செய்தால் போதும்

இப்படியான காரணங்களை குறிப்பிட்டு கோவை நகருக்கான மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பி இருக்கிறது.

மத்திய அரசு சொன்ன காரணங்கள் நியாயமானவை தானா? என்பது தான் கடந்த சில நாட்களாக நடந்து வரும் விவாதத்தின் முக்கிய காரணி. அது நியாயமான காரணங்கள் தானா என்பதை பார்ப்போம்.

மக்கள் தொகை போதுமானதாக இல்லை:

2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் DPR தயாரிக்கப்பட்டு உள்ளது. அப்போது கோவை நகரின் மக்கள் தொகை சுமார் 15 லட்சம். 14 ஆண்டுகள் கழித்து இப்போது கோவையின் மக்கள் தொகை சுமார் 32 லட்சம். ஆனால் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை வெறும் 15 லட்சம் தான் இருந்தது என்பதால் மெட்ரோ ரயில் திட்டம் அனுமதிக்க முடியாது என மத்திய அரசு சொல்லி இருக்கிறது.

இப்போது அனுமதி கொடுத்தாலும் மெட்ரோ செயல்பாட்டுக்கு வர சுமார் ஐந்து வருடங்கள் ஆகலாம். அப்போதைய தேவையை கருத்தில் கொண்டு தான் DPR தயாரிக்கப்பட்டு உள்ளது.

இப்போதே சுமார் 30 லட்சம் மக்கள் தொகை கோவையில் உள்ளது. IT நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகள், Multi Model Logistics Park (MMLP), Defense Industrial Corridor என பல தொழிற்சாலைகள் கோவைக்கு இன்னும் சில ஆண்டுகளில் வரவுள்ளன.

கல்லூரிகள், தொழிற்சாலைகள் ஆகிய நிறுவனங்களுக்கு வரும் மக்கள், நீலகிரி வால்பாறை போன்ற சுற்றுலா தலங்கள், கோவில்கள் ஆகியவற்றுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகம்.

மெட்ரோ ரயிலை கோவையில் வசிக்கும் மக்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள் என்கிற வாதம் சரியானது அல்ல. கோவைக்கு வேளை விஷயமாகவும் வேறு காரணங்களுக்காகவும் வந்து செல்லும் மக்களும் தினசரி உபயோகிப்பார்கள்.

கோவை விமான நிலையம் 2025 ஏப்ரல் - செப்டம்பர் மாதத்தில் மட்டுமே 17 லட்சம் பயணிகளை கையாண்டு உள்ளது. அவர்களுக்கும் கோவை நகரத்துக்குள் வர மெட்ரோ தான் உதவும்.

எனவே 2011 ஆம் ஆண்டு (14 வருஷத்துக்கு முன்னர்) கோவையில் மக்கள் தொகை குறைவாக இருந்ததை காரணம் காட்டி 2023 இல் வரவேண்டிய மெட்ரோ திட்டத்தை திருப்பி அனுப்புவது எல்லாம் நியாயமே இல்லாத செயல்.

சென்னையை விட கூடுதல் பயணிகள்?

சென்னையை விட கோவையில் அதிக பயணிகள் பயணிப்பார்கள் என DPR சொல்லி இருக்கிறது. அது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. சென்னை மெட்ரோவில் நான்கு லட்சம் பேர் தான் பயணிக்கிறார்கள். ஆனால் சென்னை மெட்ரோவை விட குறைவான தூரம் பயணிக்கும் கோவை மெட்ரோவில் எப்படி 5 லட்சம் பேர் பயணிப்பார்கள் என மத்திய அரசு கேள்வி கேட்டு உள்ளது.

சென்னையில் புறநகர் ரயில் சேவைகள், MRTS ரயில் சேவைகள் எல்லாம் உள்ளது. அதிலெல்லாம் பெரும்பாலான மக்கள் பயணிக்கிறார்கள். அது போக மற்றவர்கள் தான் மெட்ரோவை பயன் படுத்துகிறார்கள்.

கோவையின் நிலை அப்படி அல்ல. கோவையில் புறநகர் ரயில் சேவை இல்லை. இப்போது விமான நிலையம் செல்ல பேருந்து அல்லது கார் தான் பயன்படுத்த முடியும். மெட்ரோ வேண்டும் எல்லோரும் அதை தான் பயன்படுத்துவார்கள்.



கோவை மெட்ரோ பாதையே கல்லூரிகள், IT நிறுவனங்கள், விமான நிலையம் ஆகியவற்றை மத்திய நகரத்துக்கு இணைக்கின்ற வகையில் அமைக்கப்படுகிறது. அதனால் மெட்ரோ வந்துவிட்டால் பெரும்பாலான மக்கள் மெட்ரோவை தான் பயன்படுத்துவார்கள்.

இதை எல்லாம் ஆலோசித்து தான் தெளிவான விரிவான திட்ட அறிக்கையை கொடுத்து இருக்கிறார்கள்.

ஆனால் நியாயமான காரணங்கள் எதுவும் இல்லாமல் அந்த திட்டங்களை திருப்பி அனுப்பியதோடு, கோவை & மதுரைக்கு மெட்ரோ தேவை இல்லை. அதற்கு பதிலாக BRTS வசதியை பயன்படுத்தலாமே என போகிற போக்கில் ஒரு ஆலோசனையையும் வழங்கி இருக்கிறது மத்திய அரசு.

கோவை மதுரையை விட குறைவான மக்கள் தொகையை கொண்ட பல நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்களை அனுமதித்த மத்திய அரசு கோவை & மதுரைக்கு மட்டும் திட்டத்தை தகுந்த காரணங்கள் இல்லாமல் திருப்பி அனுப்பி இருப்பது தமிழ்நாட்டின் அபரிமிதமான வளர்ச்சியை மட்டும்படுத்தும் செயல் போல தோன்றுகிறது.

தமிழ்நாட்டிலேயே இருக்கும் கோவையிலேயே வசிக்கும் பலரும் கூட அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசின் மறுப்பை நியாயப்படுத்தும் விதமாக கோவைக்கு மெட்ரோ தேவை இல்லை என சொல்ல தொடங்கி இருப்பதும் வருத்தமானது.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி சிந்திக்கும் திமுக அரசு தொலைநோக்கு பார்வையில் அடுத்த ஐந்து காண்டுகளுக்கு பிறகான தேவையை கருத்தில் கொண்டு கோவை நகரை மேம்படுத்த எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை நாம் ஆதரித்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தான் கோவை நகரம் வளர்ச்சி பெற உதவும்.

அரசியல் வேறுபாடுகளை கடந்து கோவைக்கான திட்டங்களை எல்லோரும் ஆதரிக்க வேண்டும், அவற்றை முடக்கும் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது தான் இப்போதைய தேவை



Saturday, July 19, 2025

தமிழ்நாடு அரசியல் ஏன் வித்தியாசமானது?

தேர்தல் அரசியலில் தமிழ்நாடு எப்போதும் ஏன் வேறுபட்டதாகவே உள்ளது?

*****

நமக்கு ஒரு சிறந்த தலைவராக, மாபெரும் தலைவராக பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் கிடைத்தார். அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதி மற்றும் அரசியல் விழிப்புணர்வு குறித்து அவரது தொடர்ச்சியான எழுத்துக்களாலும், பேச்சுக்களாலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழ்நாட்டு மக்கள் இயல்பாகவே மிகுந்த மத நம்பிக்கை கொண்டவர்கள், ஆனால் அவர்கள் ஒருபோதும் தேர்தலில் மதத்தை கலக்க மாட்டார்கள். மத வழிபாடு கடவுள் நம்பிக்கை எல்லாம் தனிப்பட்ட விஷயங்கள் என்பதை தெளிவாக அறிந்தவர்கள்.

உதாரணமாக, அனைத்து மத விழாக்களும் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். ஆனால் தேர்தல்களுக்கு வரும்போது, அவர்கள் தங்களது, தங்கள் பிள்ளைகளது, எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஒவ்வொரு முறையும் முடிவெடுக்கிறார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் எல்லா வித கட்சிக் கூட்டத்திற்கும் சென்று அவர்கள் பேசுவதைக் கேட்கிறார்கள். ஓவ்வொரு கட்சியும் என்ன சொல்கிறது என கேட்பதில் ஆர்வம் காட்டுவார்கள். அதற்காக அவர்கள் அந்த கட்சியின் ஆதரவாளர்கள் என்று அர்த்தம் ஆகி விடாது. 

நிறை குறைகளை ஆராய்ந்து முடிவெடுக்க எல்லா கட்சிகளின் கருத்தையும் கேட்கும் வழக்கம் தமிழ் நாட்டில் வெகு காலமாகவே உள்ளது. அதனாலேயே எல்லா கட்சி தலைவர்களின் பேச்சுக்கும் அதீதமான கூட்டம் கூடும். 

ஆனால் தேர்தல் பூத் சென்றதும் தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் மற்றும் மக்களின் எதிர்காலத்தின் அடிப்படையில் தான் வாக்குச் சாவடியில் முடிவு செய்கிறார்கள்.

உதாரணமாக, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்களால் தனது கூட்டங்களுக்கு பெரும் கூட்டத்தை ஈர்க்க முடிந்தது, ஆனால் அவரால் ஒரு MLA யாக வெல்ல முடியவில்லை, அதுவும் அவரது சொந்தத் தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.

அதேபோல நாதக தலைவர் சீமான் அண்ணாமலையை விட அதிகமான மக்கள் கூட்டத்தை தான் பேச்சால் ஈர்க்கும் ஒரு சிறந்த பேச்சாளர், மேலும் பத்து வருடங்களுக்கும் மேலாக ஒரு கட்சியை வெற்றிகரமாக நடத்துகிறார். ஆனாலும் இன்னும் அவரால் ஒரு தொகுதியையும் வெல்ல முடியவில்லை.

தமிழ்நாட்டில் பேச்சை கேட்கும் கூட்டம் என்பது வாக்குகளையோ அல்லது புகழையோ தீர்மானிப்பதில்லை. என் பேச்சுக்கு கூடிய கூட்டம் வாக்கு அளித்து இருந்தால் கூட நான் MLA ஆகி இருப்பேனே என்பது பல காலமாக பலர் வழக்கமாக சொல்லும் விஷயம் தான்.

எனவே கூட்டத்தை வைத்து எல்லாம் ஆதரவை கணிப்பது என்பது காமெடியாக தான் அமையும். தமிழ்நாடு அரசியல் குறித்த புரிதல் இல்லாதவர்கள் தான் அப்படியான கணிப்புகளை சொல்வார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் அரசியல் விளையாட்டுகள், சில ஆண்டுகளாக பரவி வரும் அரசியல் பொய் பிரச்சாரங்கள், மத துவேஷங்கள் பற்றி எல்லாம் நன்கு புரிந்து கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் அத்தகைய பிரச்சாரங்களுக்கு ஒருபோதும் அடிபணிவதில்லை

தமிழ்நாடு வாக்காளர்களின் உளவியலைப் புரிந்துகொள்வதும், தமிழக மக்களின் அரசியல் விழிப்புணர்வைப் புரிந்துகொள்வதும் தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்து வரும் "நிபுணர்களுக்கு" எப்போதும் ஒரு எட்டாத பகுதியாகும்.

கற்பனையான கருத்தாக்கத்தை உருவாக்கும் எந்தவொரு முயற்சியும் கடைசியில் தோல்வியடையும். காரணம் தமிழ்நாட்டு மக்களிடம் நிலவும் அரசியல் தெளிவு தான்.

இங்கே மத நல்லிணக்கத்தை குலைப்பதோ, மத ரீதியாக தேர்தலை மாற்றுவதோ, மாநில மக்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகள் வெற்றி பெறுவதோ.. ஒருபோதும் நடக்காது.

தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு தமிழ்நாட்டின் அரசியல் களம் ஒருபோதும் பிடிபடாது.

நம் அனைவரையும் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெற்ற சமூகமாக மாற்றிய அண்ணாவுக்கு நன்றி 🙏🙏🙏

அவர் எப்போதோ சொன்னது போல், தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த அரசியல் தெளிவு இருக்கும் வரை, இந்த தமிழ்நாடு எப்போதும் அண்ணாதுரையால் ஆளப்படும் மாநிலமாக தான் இருக்கும் 💪💪

அண்ணாவின்
மரபு என்றென்றும் தொடரும் 🔥🔥

Sunday, June 8, 2025

கொடிக்கம்பங்கள் சொல்லும் செய்தி



நீங்க ஹைவே பயணங்களில் அங்கங்கே வரும் சின்ன சின்ன ஊர்களில்/கிராமங்களில் நுழைவு சாலைகளில் பல கட்சி கொடிகள் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதை பற்றி எப்போதாவது யோசித்தது உண்டா?

ஏன் இத்தனை கொடி கம்பங்கள்? அது ஏன் சில இடங்களில் சில கட்சி கொடிகள் இல்லை? அது ஏன் சில கட்சி கொடி உயரம் அதிகமாக இருக்கு? இப்படி ஏதாவது கேள்வி உங்களுக்குள் எழுந்து இருக்கா?

அதற்கான விடை தெரியணும் என்றால் தமிழ்நாட்டில் காலகாலமாக பின்பற்றப்பட்டு வரும் அரசியல் வழக்கங்கள் பற்றி அறிய வேண்டும்.

ஒரு ஊரில் எந்த கட்சிகள் செல்வாக்காக இருக்கிறதோ அவர்களின் கொடிகள் ஊர் எல்லையில் நடப்பட்டு இருக்கும். 

அதே ஊரில் பிற கட்சிகளின் ஆதரவாளர்களும் இருக்க கூடும். ஆனால் "கொடி வைக்கும் அளவுக்கு" அங்கே ஆள்பலம் இல்லை என அறியலாம்.

அந்த பகுதியில் செல்வாக்கு இல்லாத கட்சிகள் அந்தந்த பகுதிகளில் கொடிக்கம்பம் வைப்பது என்பது கொஞ்சம் சிரமமான செயல். 

சில ஊர்களில் கொடிகளின் உயரம் சொல்லும் அந்த ஊரில் எந்த கட்சி அதிக செல்வாக்கு என்பதை. அதிக செல்வாக்கு உள்ள கட்சிகளின் கொடிகள் உயரமாக இருக்கும். செல்வாக்கு குறைந்த கட்சிகள் உயரமான கொடி நடுவதற்கு கூட பல ஊர்களில் அந்த செல்வாக்கு உள்ள கட்சிகள் சம்மதிக்க மாட்டார்கள். மாநிலத்தில் மிகப்பெரிய செல்வாக்கு கொண்ட கட்சிகளுக்கே சில ஊர்களில் செல்வாக்கு இருக்காது. அப்படியான ஊர்களில் அவர்களது கொடி மரம் பிற கட்சிகளின் கொடி மரத்தை விட உயரம் குறைவாகவே இருக்கும். இன்னும் சில ஊர்களில் கொடி வைக்கும் அளவுக்கு மாநிலத்தின் சக்திவாய்ந்த கட்சிக்கே செல்வாக்கு இருக்காது. அந்த ஊரில் வேறு கட்சிகள் செல்வாக்காக இருக்கும்.

இதன் மூலம் ஒரு ஊரில் உள்ள கட்சி கொடிகளை வைத்து அந்த ஊரில் எந்தெந்த கட்சிகளுக்கு செல்வாக்கு இருக்கு என்பதை ஹைவேயில் பயணிக்கும் போதே கணித்து விட முடியும்.

இப்போது எல்லாம் அப்படி கிடையாது என பொத்தாம் பொதுவாக இதை மறுப்பவர்களும் உண்டு.

பொதுவாகவே தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநிலம் முழுவதும் பரந்து வியாபித்து இருக்கும் கட்சிகள். எனவே இந்த கட்சிகளின் கொடிகளை கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் காணலாம்.

பரவலாக தேமுதிக, நாதக, மதிமுக ஆகிய கட்சி கொடிகளும் மாநிலம் முழுவதுமே அதிக இடங்களில் காணலாம்.

இவை தவிர வடக்கு & மேற்கு தமிழக மாவட்டங்களில் பாமக கொடிகளும், வடக்கு மாவட்டங்களிலும் அரிதாக சில தென் மாவட்டங்களிலும் விசிக கொடிகள் காணலாம்.

கொடிகள் இல்லை என்றால் அங்கே அந்த கட்சி இல்லை என்றோ அந்த கட்சிக்கான ஆதரவாளர்கள் இல்லை என்றோ அர்த்தம் அல்ல. அந்த கட்சியை விட அதிக செல்வாக்கு உள்ள கட்சிகள் அங்கே இருப்பதால் இவர்களின் கொடிகள் காணப்படவில்லை என சொல்லலாம்.

கட்சிகள் மாநிலம் முழுவதும் கொடி ஏற்று விழா நடத்துவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். எல்லா ஊர்களிலும் "கொடியேற்று விழா" என தனியாக நடத்தி கொடி கம்பம் நடுவதென்பது கிட்டத்தட்ட கட்சி அமைப்பை அந்த ஊரில் நிறுவுவதற்கு சமம். அது சாதாரண கொடி கம்பம் நடும் விழா அல்ல. அதனால் தான் பெரிய தலைவர்களை அழைத்து வந்து விமரிசையாக கொடியேற்று விழா நடத்துகிறார்கள்.
இந்த கட்சி தான் இங்கே எல்லாம் என மக்களுக்கு காட்டுவதற்கும், மக்களுக்கு இந்த கட்சியை அணுகினால் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை விதைப்பதற்கும் இந்த கொடியேற்று விழா உதவுகிறது.

அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆரம்ப கால அரசியல் என்பதே மாநிலம் முழுவதும் "எல்லா ஊர்களுக்கும்" பயணித்து அங்கே கொடி ஏற்று விழா நடத்துவது, கிளைக்கழகங்கள் அமைப்பது ஆகியவை தான். இதன் மூலம் அந்தந்த ஊர் மக்களை நேரடியாக சந்திப்பதற்கும் அவர்களின் வாழ்க்கை முறையை அறிவதற்கும் அவர்களுக்கு அது உதவியாக இருந்தது.

பின்னர் மதிமுக, தேமுதிக, நாதக ஆகிய கட்சிகளும் இவ்வாறு கொடி ஏற்றும் நிகழ்ச்சியை எல்லா ஊர்களிலும் நடத்தின. இப்போது பல ஊர்களில் அவர்களின் கொடிகள் இல்லை என்பது அந்த பகுதியில் அந்த கட்சியின் செல்வாக்கு குறைந்து விட்டது என்பதை பூடகமாக சொல்லும் செய்தி.

கட்சி கொடி மரத்தை அகற்றுவது, வெட்டுவது, வீழ்த்துவது எல்லாம் மிகப்பெரிய விஷயமாக தமிழகத்தில் கருதப்படுகிற ஒன்று. அது கிட்டத்தட்ட கட்சி அமைப்பை அவமானப்படுத்தும் செயலாக பார்க்கப்படும். கட்சி கொடி மர விவகாரங்களுக்காகவே பிரச்சனைகள் நடந்த கதைகள் எல்லாம் முன்பு இருந்தது. 

கட்சி கொடி என்பது அத்தனை சென்சிடிவான விஷயமாகும்.

கட்சிக்கு என்று கிளை கழக செயலாளர், மாவட்ட செயலாளர் என இருந்தாலும் ஒரு கட்சியின் அமைப்பு செயலாளரின் பங்கு தான் கட்சி அமைப்பின் வலுவை தீர்மானிக்கும்.

திறமையான அமைப்பு செயலாளர், செயல்வீரரான மாவட்ட செயலாளர் ஒரு கட்சிக்கு மிக முக்கியம். மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர் என ஒருவரை நியமிப்பது என்பது அந்த மாநில விஷயங்களை அரசிடம் நேரடியாக கொண்டு சேர்க்க உதவும். ஆனால் மாவட்ட செயலாளரின் பங்கு தான் மாவட்ட அளவில் கட்சியின் அமைப்பை தீர்மானிக்கும். சரியான மாவட்ட செயலாளர் இல்லாத பெரிய கட்சிகள் கூட மற்ற மாவட்டங்களில் மிகப்பெரிய செல்வாக்கு இருந்தும் அந்த மாவட்ட அளவில் சரியாக மக்கள் செல்வாக்கு பெற முடியாமல் போன வரலாறு எல்லாம் உள்ளது. மாவட்ட செயலாளர் அமைவது எல்லாம் கிட்டத்தட்ட வரம் மாதிரி.

இந்த கொடி மரத்தால் இன்னும் பல பயன்கள் கட்சியினருக்கு உள்ளது. 

பல வருஷங்களுக்கு முன்பெல்லாம் பயணத்தில் சிக்கல், வாகன பழுது போன்ற காரணங்களால் பயணம் தடைபட்டால் அந்த ஊரில் நம் கட்சி ஆட்கள் இருக்கார்களா என கவனித்து அவர்களை அணுக கொடி மரங்கள் உதவியது. தெரியாத ஆட்களாக இருந்தாலும் தங்க வைத்து உதவி செய்து அனுப்புவார்கள். "உறுப்பினர் அடையாள அட்டை" எனும் எளிய கார்டின் அவசியம் புரிந்த நாட்கள் அவை. அப்போதெல்லாம் கட்சி உறுப்பினர்கள் குடும்பமாக பரிணமித்து அப்படி தான். 
இது எங்கள் குடும்பத்தில் நடந்த சொந்த அனுபவ அடிப்படையில் சொல்கிறேன். அப்படி ஒரு பயண சிக்கல் தருணத்தில் கோபியில் இருந்து கோவைக்கு வந்து கொண்டு இருந்த என் அப்பா பெருமாநல்லூரில் கொடி மரம் பார்த்து ஊரில் விசாரித்து அணுகிய கட்சி தோழர் அப்பாவுக்கு உதவியதோடு பின் நட்பாகி பல வருஷம் எங்கள் குடும்ப நண்பராகவே இருக்கிறார். இப்படி பலர் கட்சி சார்ந்த நண்பர்களாக எங்களுக்கு உண்டு. கட்சியே குடும்பமாக மாறிய கதைகளில் பாதி தெரியாத ஊரில் அறிமுகம் ஏற்படுத்தி கொடுத்த கொடி மரம் காரணமாகக் கூட இருக்கலாம்.

சோஷியல் மீடியாவில் புனை கதைகள், போட்டோ ஷாப் கார்டுகள் மூலமெல்லாம் கட்சியை வளர்க்க முடியாது, என்பதும் கிளைக்கழக அளவில் மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் துயரங்களில் தேவைகளில் தோளுக்கு தோளாக நின்று தான் கட்சியை வளர்க்க முடியும் என்பது தான் இன்றைக்கும் தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் உள்ள நிதர்சனம்.

இணைய வழியில் கட்சி நடத்தலாம் என நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு இந்த கட்சி அமைப்பின் வேர்களும் அதன் நுணுக்கமான அரசியலும் ஒருபோதும் புரியாது.

தமிழ்நாட்டு வாக்காளர்களை அவர்களின் மனநிலையை கணிக்கிறேன் என கிளம்பி 500 பேரிடம் கேள்வி கேட்டு பதில் வாங்கி அது தான் 6 கோடி மக்களின் மனநிலை என கட்டமைக்க போராடும் நிபுணர்கள், ஒரு நடை தமிழகம் முழுவதும் பயணித்து பார்த்தாலே மாநிலத்தின் மன நிலை என்ன என்பதை யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசாமலேயே கணித்து விட முடியும்.

இனி பயணிக்கும் போது கொடி மரங்களை கவனியுங்கள். முடிந்தால் குறிப்பெடுத்து கொள்ளுங்கள். எந்த ஊரில் எந்த கட்சி என கணித்து பாருங்கள். தேர்தல் முடிவுகளின் போது அநேகமாக உங்கள் கணிப்பு சரியாகக் கூட அமையக்கூடும்.

Wednesday, May 28, 2025

இசை இறைவனின் தரிசனம்

சை என்பது திரைப்படங்களை சுவாரசியமாக கொண்டு செல்ல மட்டுமே இருந்த காலங்கள் கடந்து.. இசையால் ஒவ்வொரு மனித மனங்களையும் ஆட்கொள்ள முடியும், ஆற்றுப்படுத்த முடியும்,  என காட்டியவர் இசைஞானி இளையராஜா.

என் வாழ்வின் பல்வேறு தருணங்களில் மனதை துவளாமல் தாங்கிக் கொண்டு மீட்டெடுக்க இளையராஜா அவர்களின் இசையால் முடிந்தது. 

"இளையராஜா இசை மட்டும் இல்லை என்றால்.. என்றோ என்றோ இறந்திருப்பேன்" என்பது என் அனுபவத்தில் மிகையான வாக்கியம் அல்ல. இன்றைக்கும் நான் இருக்கிறேன் என்பதற்கு அந்த இசை கொடுத்த ஆறுதல் மிகப்பெரிய காரணம்.

இளையராஜாவை பார்க்கவேண்டும்.. தூரத்தில் இருந்தாவது தரிசிக்க வேண்டும்.. என்கிற தீரா ஆசை பல்லாயிரம் பேருக்கு இப்போதும் உண்டு. அதில் ஒரு சிறு துளியாய் நானும்.

என்றேனும் அவரை சந்திக்க வேண்டும்.. என்னை பல தருணங்களில் மீட்டெடுத்து கொண்டு வந்து இன்றளவும் உயிர்த்திருக்க வைத்து இருக்கும் இசையை தந்தமைக்காக பாதங்கள் பணிந்து நன்றி சொல்லவேண்டும் என்கிற ஏக்கம் வெகு காலமாக என்னுள் இருந்தது.

சில நாட்கள் முன்பு அதற்கான வாய்ப்பு ஒரு நண்பர் மூலமாக வாய்த்தது.

ஞாயிறு காலை 8 மணிக்கு சென்னையில் இருக்க முடியுமா? என்கிற அவரது கேள்விக்கு "கண்டிப்பாக முடியும்" என்பதை தவிர வேறு என்ன பதில் இருந்துவிட முடியும்?

பரபரவென்று மனம் படபடக்கத் தொடங்கியது. 

நிச்சயமாக அவரை சந்திப்போமா, எத்தனை நேரம் இருப்போம், அவரது வேலைப்பளு இடையே எத்தனை நிமிஷம் நமக்கு ஒதுக்குவார், என்ன பேசுவது, என்னென்ன சொல்வது, எப்படி நடந்து கொள்வது என்பது போன்ற பல விஷயங்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டும் ஒத்திகைகள் பார்த்துக்கொண்டும் இருந்தன.

முக்கியமான ஒரு கேள்வியை மனைவி கேட்டார். "என்ன பரிசு கொடுப்பது? வெறுங்கை வீசிக் கொண்டு சென்றால் நல்லா இருக்காதே?". நியாயம் தான். 

என்ன வாங்குவது என பெரிய பட்டிமன்றமே நடந்தது. இறுதியில் கேரள மாடல் குத்து விளக்கு (நில விளக்கு) ஒன்று வாங்கி கொடுக்க முடிவு செய்து அதை வாங்கி பேக்கிங் செய்து கொண்டோம்.

அந்த நாளும் வந்தது.

ஞாயிறு காலை சென்னை வந்து அறை எடுத்து ரெடியாகி ஆட்டோ பிடித்து 8:30 கெல்லாம் ஸ்டுடியோ வாசலில் சென்று இறங்கினோம்.
ஆளை விட உயரமான அந்த கதவின் முன் நிற்கையிலேயே மனதில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

எத்தனை எத்தனை இசைப் பாடல்களை உருவாக்கிய இடம் அது? எத்தனை எத்தனை ஜாம்பவான்கள் நுழைந்து பார்க்க துடிக்கும் கதவு அது?

உள்ளே நுழையும்போதே செகியூரிட்டி " இடது ஓரமாவே போங்க" என்றார். நடைபாதையின் வலது புறம் அலுவலகம் இருக்க.. நடைபாதையின் இடது புறமாக தயங்கி தயங்கி நடந்தபடி உள்ளே சென்றேன்.

எதேச்சையாக வலது புறம் அலுவலக அறையின் கண்ணாடி கதவு வழி
 பார்க்கயில், உள்ளே தூய வெள்ளுடையில் அமர்ந்திருந்தார் இசை இறைவன். 

பார்த்த கணத்தில் எனது கை தன்னிசசையாக என் நெஞ்சை தொட்டு வழிபாடு
 செய்ததை பின்னர் தான் கவனித்தேன்.. தன்னியல்பாகவே அந்த மரியாதையும் பக்தியும் நமக்குள்ளே நமக்கு தெரியாமலேயே உட்கார்ந்து இருக்கும் போல.

அப்படியே நடந்து நடைபாதை முடிவில் இருந்த சிறிய ஓய்விடத்தில் போடப்பட்டு இருந்த இருக்கைகளில் சென்று அமர்ந்தோம். அவராக அழைப்பார், காத்திருங்கள் என உதவியாளர் சொன்னார்.

சற்று நேரத்தில் "சார்" அழைப்பதாக சொல்லி எங்களை உள்ளே போக சொன்னார்.

ஒரு மாபெரும் திருக்கோவிலுக்குள் முதல் முறையாக நுழையும் பக்தனின் படபடப்போடும் பிரமிப்போடும் உள்ளே நுழைந்தேன்.

வெண்ணிற உடையில் சோஃபாவில் அமர்ந்து இருந்தார் இசை ஞானி. அவரை அத்தனை அருகில் பார்த்ததும் எனக்குள் சொல்ல முடியாத ஒரு பரவசம் படரத் தொடங்கியது.

அவர் அருகில் அழைத்தார்.. சென்றோம்.. என்ன என்பது போல பார்த்தார்.. "நாங்க கோவைல இருந்து வர்றோம்" என்றேன்.. 
கொண்டு வந்து இருந்த குத்து விளக்கு கிஃப்ட்ட நீட்டினேன்..என்ன என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.. "கேரள நில விளக்கு" என்றேன். எழுந்து நின்று வாங்கி மெல்ல அருகில் இருந்த டீபாய் மேல் வைத்தார்.

எனக்கும் என் மனைவிக்கும் கண்கள் மெல்ல கலங்கி.. பேச நா தழுதழுத்து.. கொஞ்சம் பதட்டம் கூடி.. என ஒரு மாதிரி கலவையான மனநிலையில் இருந்தோம்.. 

சில நொடிகள் நாங்கள் ஆசுவாசப்படுத்தி கொள்ளும் வரை எங்களை பார்த்து கொண்டே இருந்தார்.

சற்று நிதானத்துக்கு வந்தோம்.

சொல்லுங்க என்றார்.. "என் வாழ்வில் பல ஏற்ற இறக்கங்கள்.. நான் துவண்டு போன போதெல்லாம் என்னை மீட்டு கொடுத்தது உங்கள் இசை தான்.. அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லணும் என வந்தோம்" என்றேன்.. சிரித்தார்..

அப்படி எல்லாம் இல்லை என்பது போல மெல்லியதாக தலையாட்டினார்..

உங்க ஆசீர்வாதம் வேண்டும் என கேட்டு நானும் என் மனைவியும் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினோம். அன்போடு ஆசீர்வதித்தார்.

பின் போட்டோ எடுத்து கொள்ளலாமா என கேட்டோம்.. சந்தோஷமாக சம்மதித்தார்.

நான் தனியாகவும்.. நானும் மனைவியும் சேர்ந்தும்.. மனைவி தனியாகவும் போட்டோக்கள் எடுத்து கொண்டோம்.
ரொம்ப சந்தோஷம் சார் என்றோம்.. மகிழ்ச்சியோடு வழி அனுப்பி வைத்தார்..

என்னென்னவோ பேச வேண்டும் என மனப்பாடம் செய்து வந்து இருந்தேன். ஆனால் அங்கே அவர் முன்பு எதுவும் பேச வரவே இல்லை. 

சுமார் 10 நிமிடத்துக்கும் குறைவான நேரம் தான் அந்த மொத்த சந்திப்பும் நிகழ்ந்தது. பேசுவதற்காக எங்களுக்கு அதிக நேரமும் கிடைக்கவில்லை. கிடைத்த நேரத்திலும் பிரமிப்பில் நின்றபடி சில நிமிடமும், நெகிழ்ச்சியில் நனைந்தபடி வார்த்தை வராமல் சில நிமிடமும் செலவானது.

அவரது அலுவலகத்தில் அவருக்கு ஒரு அடி தூரத்தில் நிற்கிறோம்.. அவர் நம்மிடம் கேள்வி கேட்கிறார்..நாம் அவருக்கு பதில் சொல்லி கொண்டு இருக்கிறோம்.. அவர் காலில் விழுந்து அவரின் ஆசியை வாங்கிக் கொண்டு இருக்கிறோம்.. என்பதெல்லாம் ஒரு கனவு போல..வேறு எங்கோ வேறு யாருக்கோ நிகழ்வது போல தோன்றி கொண்டே இருந்தது.

வெளியே வந்து மீண்டும் அந்த ஓய்விடத்துக்கு வந்தமர்ந்தோம்.

நடந்ததை நினைத்து நினைத்து பார்த்து கொண்டு இருந்தோம்.. மற்றவர்களுக்கு இது ஒரு சாதாரண நிகழ்வாக தோன்றலாம். ஆனால் எங்களுக்கு இது எத்தனை பெரிய அனுபவம் என்பதை விவரிக்க தெரியவில்லை.

தூர நின்றாவது அவரை பார்த்து விட மாட்டோமா? அவர் நடத்தும் நிகழ்ச்சியில் அவர் வீற்று இருக்கும் மேடை எதிரே மிக தூரத்தில் அமர்ந்தாவது அவரது குரலை நேரடியாக கேட்டு விட மாட்டோமா? அவர் சுவாசிக்கும் அதே காற்றை அதே நேரத்தில் நாமும் சுவாசித்து விட மாட்டோமா? என்றெல்லாம் கால காலமாக ஏங்கி கொண்டு இருந்த எங்களுக்கு.. அவருக்கு அருகாமையில் நின்று அவருடனேயே உரையாடுகிறோம் என்கிற அந்த நினைப்பு எத்தனை பெரிய வரம் என்பது எங்களுக்கு மட்டுமே புரியக்கூடிய ஒன்று.

வாழ்நாள் முழுமைக்குமான அனுபவம். இதை விட வேறு எதுவும் மகிழ்ச்சியோ நெகிழ்ச்சியோ எங்களுக்கு தந்து விடப்போவதில்லை என நினைக்கும் அளவுக்கான அலாதியான அனுபவம் அது.

மனம் ஒரு திருப்தி அடைய தெரியாத ஜந்து என்பது உண்மை தான். 

அவரை கண்டு பேசிய பிறகு அதோடு திருப்தி அடையாமல் அவரது ஸ்டுடியோ முழுக்க பார்க்க வேண்டும்.. அவர் இசை அமைப்பதை தூர நின்று ரசிக்க வேண்டும்..அவரது இசை குழுவினர் இசைப்பது காண வேண்டும் என்றெல்லாம் இன்னும் ஆசைகள் ஒவ்வொன்றாக முளைத்து கொண்டே இருக்கிறது. 

இனி வாழ்நாளில் அவரை மீண்டும் சந்திப்பேனா என்பது தெரியாது. ஆனால் அந்த சில நிமிட சந்திப்பு வாழ்நாள் முழுமைக்கும் போதுமானதாக இருக்கிறது.

இன்றே வாழ்வின் இறுதி என்றாலும் நன்றே என்று நினைக்கும் அளவுக்கு மிக திருப்தியான மனநிலைக்கு அன்று வந்துவிட்டோம். அப்படியான ஒரு உச்ச பட்ச பரவச உணர்வு நிலை அது.

இந்த ஜென்மத்துக்கான மொத்த பிறவிப் பயனும் அந்த பத்து நிமிடங்களுக்குள் அடைந்து விட்டோம்.

அப்படி ஒரு மகானுபவத்தை எங்களுக்கு ஏற்படுத்தி கொடுத்த நண்பருக்கு எவ்வளவு நன்றி கடன் பட்டு இருக்கிறோம் என்பது எங்களுக்கு மட்டுமே புரியும்.

🙏🙏🙏



Sunday, March 16, 2025

தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை

தமிழ்நாட்டில் இப்போது மிக பரபரப்பாக இருக்கும் விஷயம் மும்மொழியா இருமொழியா என்கிற விவாதம். இப்போது இதை தொடங்கி வைத்தது, புதிய கல்விக் கொள்கையை அமல் செய்யாவிட்டால் தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதி விடுவிக்கப்படாது என்கிற ஒன்றிய அரசின் நிபந்தனையும் அதை தொடர்ந்து இந்த பிரச்சனையை திசை திருப்ப பாஜக அதை மடை மாற்றி, தமிழ்நாடு இந்தியை எதிர்க்கிறது அதனால் தான் புதிய கல்வி கொள்கையை மறுக்கிறது என்கிற பிரச்சாரமும்.
முதலில் தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை என்ன? எதற்காக இந்தியை எதிர்க்கிறோம் என்பதை பார்ப்போம்.

தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை:

தமிழ்நாட்டை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை அமலில் உள்ளது. 

இங்கே கொள்கை என்பது அரசின் கொள்கை என்பதை கவனத்தில் வைக்கவும். தனியார் பள்ளிகள் அவரவர் விருப்பப்படி பயிற்று மொழிகளை வைத்து கொள்ளலாம். மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம். மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் CBSE பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை தமிழ் ஒரு பாடமாக இருக்கலாம். 

எனவே அரசின் கொள்கை என்பது அரசு பள்ளிகளுக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கும் மட்டுமே பொருந்தும்.

இரு மொழி என தமிழ்நாடு முடிவு செய்ய காரணம் சிந்தனையை துண்ட தாய்மொழி மற்றும் உலகோடு இணைந்து செயலாற்ற ஆங்கிலம் என்பது. இவை இரண்டும் மொழிப் பாடங்கள்.

இவை தவிர வாழ்க்கைக்கு அடிப்படை தேவையான அறிவியல், கணிதம், புவியியல், வரலாறு ஆகியவை இதர பாடங்கள்.

அடிப்படை பாடங்கள் 3, மொழிப்பாடங்கள் 2 என்பது தான் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி பாட திட்டம்.

மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள சில பள்ளிகளில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை கூடுதலாக பயிற்றுவிக்க படுகிறது.

இந்த பாட திட்டத்தில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் பிறகு அவரவர்க்கு விருப்பமுள்ள மொழிகளை கற்றுக்கொள்ளலாம். 

ஒரு அரசு தன் பிள்ளைகளுக்கு "அடிப்படை கல்வியை" கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்பது அரசியல் சாசன கட்டளை. அதை தமிழ்நாடு சிறப்பாக செய்கிறது. கூடுதல் மொழிகள் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. சிலருக்கு ஜெர்மன், ஜப்பான், ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ் போன்ற அயல்நாட்டு மொழிகள் மீது ஆர்வம் இருக்கும். இன்னும் சிலருக்கு ஹிந்தி சமஸ்கிருதம் போன்ற இந்திய மொழிகள் மீது ஆர்வம் இருக்கும்.

ஒரே வகுப்பில் உள்ள 30 மாணவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மொழி மீது ஆர்வம் இருக்கலாம். அத்தனையும் ஈடு செய்ய எல்லா பள்ளிகளிலும் எல்லா வகுப்பும் வெவ்வேறு மொழிப் பாட ஆசிரியர்களை நியமிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம். ஆசிரியர்கள் கிடைப்பதை பொறுத்து அவை மெல்ல மெல்ல சுருங்கி குறிப்பிட்ட ஒரு சில மொழிகள் மட்டுமே கற்றுத் தரும் நிலைக்கு தள்ளப்படும்.

அதைவிட.. மொழியின் தேவை அவசியமாகும் நேரத்தில், உயர்கல்வி, வேலைவாய்ப்பு காரணமாக, அவரவர்க்கு தேவைப்படும் மொழியை அவர்கள் கற்றுக் கொள்வது தான் எதார்த்தமான தீர்வாக இருக்க முடியும்.

வெளிநாடு செல்ல விரும்புவோர் அந்த நாட்டு மொழியையும் அதற்கான தேர்வுகளையும் (TOEFL போன்றவை) அப்போது படித்து கொள்ளலாம். போலவே டெல்லி மும்பை போன்ற நகரங்களுக்கு வேலைக்கு போகிறவர்கள் ஹிந்தி மொழியை கற்கலாம். ஆந்திராவில் வேலைக்கு போகிறவர்கள் தெலுங்கு, பெங்களூருக்கு வேலைக்கு போகிறவர்கள் கன்னடம் என அப்போதைய தேவைகளை பொறுத்து மொழிகளை கற்றுக் கொள்ளலாம்.

எனவே மக்களின் வரிப்பணத்தில் இருந்து பள்ளிகளை நடத்தும் அரசு அடிப்படை கல்வியை மாணவர்களுக்கு கற்று கொடுப்பது தான் கடமை. அதற்கு பின் அந்த அடிப்படை கல்வியை வைத்து மாணவர்கள் அவர்களுக்கு ஆர்வமுள்ள இதர பாடங்களை, மொழிகளை கற்றுக்கொள்வது என்பது தனிப்பட்ட விருப்பம்.

இது தான் தமிழ்நாட்டின் மொழிக் கொள்கையாக இருந்து வருகிறது.

இப்போதைய பிரச்சனை:

காலகாலமாக தமிழ்நாட்டில் அடிப்படை கல்வி கற்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உயர்கல்வி வேலைவாய்ப்பு பெற்று பெரிய பதவிகளை பலரும் வகித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் கல்வித் தரம் சிறப்பு வாய்ந்தது என எல்லா ஆய்வுகளும் சொல்லி வருகின்றன. தமிழக மாணவர்கள் மிகப் பரவலாக நல்ல வேலை வாய்ப்பை பெற்று இருப்பதை தினசரி பல செய்திகள் சொல்லிக் கொண்டு இருக்கின்றன.

இச்சூழலில், மத்திய அரசு தனது புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு கொடுக்கவேண்டிய கல்விக்கான நிதியின் பங்கை விடுவிப்போம் என மத்திய அரசு புதிதாக ஒரு நிபந்தனையை விதித்து இருக்கிறது. 

தமிழ்நாடு, புதிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது என திட்டவட்டமாக சொல்லி விட்டது. புதிய கல்வி கொள்கையை ஏற்காவிட்டால் நிதியை விடுவிக்க முடியாது என மத்திய அரசும் உறுதியாக இருக்கிறது.

இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய ரூ. 2,100 கோடி நிதி தமிழ்நாட்டுக்கு கிடைக்கவில்லை. அந்த நிதியை வைத்து தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகளை செய்ய முடியவில்லை.

புதிய கல்விக் கொள்கையை எதற்காக தமிழ்நாடு எதிர்க்கிறது?

புதிய கல்வி கொள்கை நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வியை கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் பல நல்ல விஷயங்கள், நவீன காலத்துக்கு ஏற்ப மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கவேண்டிய பாடங்கள் குறித்து எல்லாம் பல நல்ல வழிகாட்டுதல்கள் உள்ளன. அதன் கூடவே, மும்மொழி கொள்கை கட்டாயம், குலத்தொழில்க்கல்வியை நோக்கிய பாட திட்டம் போன்ற பிற்போக்குத்தனமான பரிந்துரைகளும் உள்ளன.

குலத்தொழில்க்கல்வி என்பது அவரவர் குலம் சார்ந்த, இனம் சார்ந்த தொழில்களை பற்றிய முறையான கல்வியை வழங்கும் என சொல்லப்பட்டாலும், இன்றைக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரை எல்லோருக்கும் எல்லா கல்வியும் கொடுக்கும் நோக்கில் செயல்பட்டு கொண்டு இருக்கும் தமிழ்நாடு அரசு, எல்லா மக்களுக்கும் அவரவர் விரும்பும் கல்வியை கொடுத்து சமூகப் படி நிலைகளில் அவர்களை உயர்த்தி கொண்டு இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் இந்த முற்போக்கான செயல் தடைபடும்.

மும்மொழி கொள்கை என பொதுவாக சொன்னாலும், அதன் நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்து பார்த்தால் அது இந்தி மொழியை கற்பிப்பதில் மட்டுமே வந்து நிற்கும்.

இந்திய மொழிகள் எதை வேண்டுமானாலும் கற்கலாம் என புதிய கல்வி கொள்கையில் சொல்லப்பட்டு இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள 37,000+ அரசுப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் வெவ்வேறு மொழிப்பாட ஆசிரியர்கள் நியமிப்பதில், ஒரே வகுப்பில் வெவ்வேறு மொழிகளை கற்பிக்க பல்வேறு ஆசிரியர்களை நியமிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும், அத்தனை ஆசிரியர்கள் கிடைப்பார்களா என்கிற எதார்த்தையும் கவனித்தால் கடைசியில் ஹிந்தி ஆசிரியர்கள் மட்டுமே உள்ளார்கள் அதனால் ஹிந்தி மட்டுமே படியுங்கள் என சொல்லக் கூடிய நிலைக்கு கொண்டு வந்து விடும் அபாயம் உள்ளது.

அடிப்படை கல்வி கற்கும் நேரத்தில், கூடுதலாக ஒரு மொழி, அதுவும் நாம் விருப்பப்படாத ஒரு மொழியை கற்பதில் செலவிடப்படும் நேரம் என்பது மாணவர்களுக்கு அத்தியாவசியமான அடிப்படை கல்வியை முறையாக முழுமையாக கற்க முடியாத நிலைக்கு கொண்டு தள்ளும்.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் மாணவர்களுக்கு கூடுதல் சுமையை கொடுத்துவிடக் கூடாது என்று தான் தமிழ்நாடு அரசு மும்மொழி கொள்கையை எதிர்க்கிறது.

இனி அடுத்து என்னவாக இருக்கும்?

இந்திய அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு என்று சில உரிமைகளை தந்து இருக்கிறது. மத்திய அரசு எந்த கொள்கையை சட்டத்தை கொண்டு வந்தாலும் மாநிலங்கள் விரும்பாவிட்டால் அதை அமல் செய்ய முடியாது. மாநிலங்களுக்கு என்றுள்ள தனிப்பட்ட அதிகாரம் அது.

புதிய கல்வி கொள்கையை 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தாலும் இன்று வரை தமிழ்நாடு அதை அனுமதிக்கவில்லை. அப்படி அனுமதிக்காத தமிழ்நாடு மீது மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது. காரணம் அனுமதிப்பதா வேண்டாமா என தீர்மானிப்பது மாநிலத்தின் உரிமை.

மத்திய அரசு மீண்டும் மீண்டும் கோரிக்கை வைக்கலாம்.. நிதி ஒதுக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கலாம்.. அதற்கு மேல் எதுவும் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.

எனவே தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ள திருத்தங்களை கொண்டு வந்தால் மட்டுமே புதிய கல்வி கொள்கை தமிழ்நாட்டில் அமலாகும் என நினைக்கிறேன். அதில் முக்கியமான திருத்தம் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழி கொள்கை. 

ஒன்று தமிழ்நாட்டில் புதிய கல்வி கொள்கை அமலாகாது

அல்லது மத்திய அரசு தமிழ்நாடு குறிப்பிட்ட திருத்தங்களை கொண்டு வந்து அமல் செய்யும்.

எதுவானாலும் தமிழ்நாட்டு மாணவர்கள் நலனை முன்னிறுத்தியே தமிழ்நாடு அரசு செயல்படும் என நான் திடமாக நம்புகிறேன்.









Wednesday, March 12, 2025

நவோதையா பள்ளிகள் - தமிழ்நாட்டுக்கு தேவையா?

நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டுக்கு அவசியமற்றது என்பது எதனால்?

ஜவஹர்லால் நேரு நவோதயா பள்ளிகள் முழுக்க முழுக்க மத்திய அரசால் நடத்தப்படுவது. 

பள்ளிகள் செல்ல பல கிலோமீட்டர் செல்ல வேண்டி இருக்கும் மாநிலங்களில் மாணவர்கள் பள்ளியில் சேராமல் இருப்பது அதிகரித்து வந்ததால்.. அதற்கு தீர்வாக பள்ளியிலேயே தங்கி படிக்கும் வகையிலான உண்டு உறைவிட பள்ளியாக (ஹாஸ்டல் வசதியுடன்) நவோதயா பள்ளிகள் தொடங்கப்படுகிறது.

மாவட்டத்துக்கு ஒரு பள்ளி, அதில் அந்த மாவட்ட மாணவர்கள் மட்டுமே சேர முடியும். 

நவோதயா பள்ளிகள் 6 - 12 ஆம் வகுப்பு வரையே உள்ளன. ஐந்தாம் வகுப்பு வரை அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தான் நவோதயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் இருந்து சேர்த்து கொள்ளப் படுவார்கள். அதற்காக ஒரு நுழைவு தேர்வு உள்ளது. அதில் தேர்ச்சி பெற்றால் தான் பள்ளியில் சேர்க்க முடியும்.

9-12 வகுப்பு மாணவர்கள் "வித்யாலயா விகாஸ் நிதியாக" மாதம் ₹600/- செலுத்த வேண்டும்.

அதிகமாக பள்ளிக்கூட வசதி இல்லாத மாநிலங்களில் நவோதயா பள்ளிகள் நல்ல பலனை கொடுக்கின்றன 

ஆனால்...

ஊருக்கு ஊர் துவக்கப் பள்ளிகள், நடுநிலை பள்ளிகள், ஐந்து கிமீ தொலைவுக்குள் மேல்நிலை பள்ளிகள் என எக்கச்சக்கமாக பள்ளிகள் கட்டி வைத்து இருக்கும் தமிழ்நாட்டில் அப்படி உண்டு உறைவிடமாக தங்கி படிக்க வேண்டிய அவசியம் இல்லையே. தினசரி வீட்டில் இருந்து பள்ளிக்கு போய் வர கூடிய எல்லா வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளது.

இலவச புத்தகம், இலவச சீருடை, இலவச உணவு, இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், இலவச லேப்டாப் என மாணவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் தமிழ்நாடு அரசு கொடுக்கிறது.

அதை விட முக்கியம்.. மாணவர்கள் மாதக் கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை. கல்வி முற்றிலும் இலவசம்.

மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். மற்ற எல்லாவற்றையும் தமிழ்நாடு அரசு பார்த்துக் கொள்ளும்.

இவ்வளவு வசதிகள் தமிழ்நாடு அரசு கொடுக்கும் போது, மாதக் கட்டணம் செலுத்தி நவோதயா பள்ளிகளில் தங்கி படிக்க வேண்டிய அவசியம் இல்லையே?

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.

🙏🙏🙏

நவோதையா பள்ளிகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள:

https://navodaya.gov.in/nvs/en/Academic/school-administration/facilities-in-jnvs/students/

Monday, February 10, 2025

ஈரோடு கிழக்கு சொல்லும் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் நமக்கு சொல்லும் செய்திகள் பல..

இடைத்தேர்தல் அறிவித்ததும் அதிமுக பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மட்டுமல்லாமல் தவெக போன்ற புதிய கட்சிகளும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன..
பொதுவாக இடைத்தேர்தல் என்பது அவரவர் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு எவ்வளவு இருக்கிறது என்பதை பரிசோதித்து பார்க்கும் களமாக தான் எப்போதும் இருக்கும்.

ஆனால் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்பது பலருக்கு ஆச்சர்யம் தந்தாலும், அந்த புறக்கணிப்புக்கு இரண்டு காரணங்கள் இருப்பதை அரசியல் அறிந்த எல்லோரும் கிட்டத்தட்ட யூகித்து இருந்தார்கள்.

1. திமுக அரசு மீது மக்களுக்கு மதிப்பு குறைந்து உள்ளதா? கூடி உள்ளதா?

2. நாதக கட்சிக்கு மக்களிடம் உள்ள ஆதரவு என்ன?

இந்த இரண்டு கேள்விகளில், திமுக அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை குறையவே இல்லை என்பது பிரச்சார காலத்திலேயே தெளிவாக தெரிந்து விட்டது.

ஆனால் நாதக கட்சி பற்றிய கேள்வி தான் பலத்த எதிர்பார்ப்புக்குள்ளானது. வேறு எந்த கட்சியும் போட்டியிடாத நிலையில், திமுக மீது அதிருப்தியில் உள்ளவர்கள் நாதகவை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது.

கூடவே தேர்தலை புறக்கணிப்பதாக சொன்ன கட்சிகளின் ஆதரவாளர்களும் நாதகவை ஆதரிப்பார்கள் என்றும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

அதிலும் ஈரோடு பகுதியை பொறுத்தவரை அதிமுக பலமான இயக்கம். பாமக, பாஜக போன்ற கட்சிகளும் கணிசமான மக்கள் செல்வாக்கு பெற்றவையே. இவர்கள் திமுகவை ஆதரிக்க மாட்டார்கள். எனவே அந்த வாக்குகள் எல்லாம் நாதகவுக்கு தான் வரும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால்,

பதிவான 1.54 லட்சம் வாக்குகளில் 1.15 லட்சம் வாக்குகள் திமுகவுக்கும், 23,810 வாக்குகள் நாதகவுக்கும் கிடைத்து உள்ளது.

நாதக/அதிமுக/பாஜக/பாமக போன்ற கட்சியினர், ஆதரவாளர்கள், திமுக எதிர்ப்பாளர்கள் என எல்லோரும் சேர்ந்தே 23,810 வாக்குகள் தான் என்பது தான் ஆச்சர்யம்.

இவை சொல்லும் செய்திகளில் சில முக்கியமானவை:

1. வலுவான அதிமுக கூட திமுகவை எதிர்த்து வாக்களிக்கவில்லை

2. பாஜகவினர் ஆதரவு கூட நாதகவுக்கு கிடைக்கவில்லை

3. திமுகவை எதிர்ப்பவர்களை விடவும் திமுகவை ஆதரிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். இது திமுக அரசின் மீதான நம்பிக்கையை காட்டுகிறது.

4. ஆளும்கட்சி அதிகார துஷ்பிரயோகம் செய்து வென்றது, பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார்கள் போன்ற கதைகள் எல்லாம் இந்த தேர்தலை பொறுத்தவரை பயன் அளிக்காது. காரணம் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கூடவா திமுகவை எதிர்த்து வாக்களிக்காமல் இருக்கும்?

5. போட்டியிட களத்தில் வேறு யாருமே இல்லாத நிலையில், வாக்குகள் பிரியாத சூழ்நிலையில், பிற கட்சிகளின் மறைமுக ஆதரவு இருந்தும் கூட வெறும் 23,810 வாக்குகளை தான் நாதக பெற்றிருக்கிறது என்றால், நாதக பெரிதாக யாருக்கும் நம்பிக்கையான கட்சியாக அமையவில்லை என அர்த்தம்.

6. திமுக எதிர்ப்பாளர்கள் கூட நாதகவுக்கு வாக்களிப்பதை விட திமுகவுக்கு வாக்களிப்பது நல்லது என்கிற முடிவுக்கு வரவேண்டும் என்றால்.. திமுகவின் நல்ல பல மக்கள் நல திட்டங்கள் மக்களை ஈர்த்து இருப்பதாக கொள்ளலாம்

7. மிக முக்கியமாக, தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பு இருந்து பெரியாரை சிருமைப்படுத்தியும் களங்கப்படுத்தியும் சீமான் பேசி வந்ததை யாரும் ரசிக்கவில்லை என்பதோடு, அதற்கு எதிர்வினை ஆற்றவும் தயாராக இருக்கிறார்கள் என்பதை உணரலாம். நாதகவுக்கு விழுந்து இருக்கக்கூடிய அதிமுக வாக்குகள் கூட அந்த பேச்சால் தான் விழாமல் போயிருக்கும் என நினைக்கிறேன்.
கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டு காலம் கட்சி நடத்தியும் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாத நிலையில் ஒரு கட்சி இருப்பது அந்த கட்சி தன்னை தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதை காட்டுகிறது.

இனியேனும் மக்கள் நலன் சார்ந்து நாதக சிந்திக்குமேயானால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அது கைகொடுக்கும்.

மக்களின் மன நிலை என்ன என்பதை அறிவதற்காக தான் அதிமுக பாஜக போன்ற கட்சிகள் தேர்தலில் இருந்து ஒதுங்கி நின்றது என்பது உண்மையானால் இப்போதைக்கு திமுகவுக்கு கிடைத்து இருக்கும் ஆதரவு அவர்களது சட்டமன்ற தேர்தல் கூட்டணி கணக்கை முடிவு செய்து இருக்கும்.

திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருந்திருந்தால் திமுக இத்தனை வாக்குகள் பெற்று இருக்காது. நாதகவும் இவ்வளவு குறைவாக பெற்று இருக்காது.

எனவே மக்களுக்கு திமுக அரசின் மீதான நம்பிக்கை குறையவில்லை என்பதை ஈரோடு தேர்தல் உறுதி பட எடுத்து காட்டி இருக்கிறது.

இதனால் பாஜக தனித்து போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்து தாங்கள் பயணிக்க அதிமுகவின் தயவை நாடும் என எதிர்பார்க்கலாம்.

நாதக கைவிடப்பட்ட நிலையில் தவெக மாற்று கட்சியாக முன் நிறுத்தப்படலாம்.

எப்படி இருப்பினும் 2026 தேர்தல் களம் மிகுந்த சுவாரசியமாக தான் இருக்கும் என நினைக்கிறேன்.


Saturday, February 1, 2025

திமுக - எதிர்கொள்ள வேண்டிய மாயவலை

2021 ஆம் ஆண்டு திமுகவுக்கு தந்த வாய்ப்பு அலாதியானது.

2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா பெற்று தந்த வெற்றி.. அவரது மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி என மாறி மாறி 2021 தேர்தலில் திமுக தவிர நமக்கு வேறு யாரும் இல்லை என்கிற முடிவுக்கு பெரும்பாலான தமிழ்நாடும் வந்து ஒன்று சேர்ந்து கொடுத்த அற்புதமான வெற்றி அது.

நான்கு ஆண்டுகள் கழித்து இப்போது பார்க்கும் போது, திமுகவை வென்றெடுக்க கூடிய வலுவான எதிர்கட்சி என்று எதுவுமே இல்லை.

அதிமுக வலு இழந்து நிற்கிறது. எடப்பாடி அவர்கள் மீதான அதிருப்தி கட்சிக்குள்ளேயே அதிகரித்து வரத் தொடங்கி இருக்கிறது. அடுத்து என்ன செய்வது என புரியாது தவிக்கும் அதிமுக ஒரு பக்கம்.

திடீர் என இறக்குமதி செய்யப்பட்ட தலைவரை கொண்டு தட்டு தடுமாறி பாஜக தவழ தொடங்கி உள்ளது. ஆனால் தன்னால் தன் சொந்த தொகுதியில் கூட வெல்ல முடியாத அளவுக்கு செல்வாக்கு (!) கொண்டு இருக்கும் மாநில தலைவரையும், தமிழ்நாட்டுக்கு வெளியேயும் இந்தியாவுக்கு வெளியேயும் உள்ள இணைய பதிவர்களை மட்டுமே நம்பி இருக்கும் ஐடி விங்கையும் வைத்துக்கொண்டு தமிழ்நாடு தேர்தலில் வென்று விட முடியும் என்கிற குருட்டு நம்பிக்கையில் உழன்று கொண்டு இருக்கும் பாஜக ஒரு பக்கம்.

பன்னிரண்டு ஆண்டுகளாக கட்சி நடத்தியும் சட்டமன்றத்துக்கு நுழைய முடியாமல் தவிக்கும் நா.த.க ஒரு பக்கம்.

திடீர் என முகிழ்த்து அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கும் த. வெ.க ஒரு பக்கம்.

என பல பல கட்சிகள் களத்தில் இருந்தாலும் திமுகவை திமுக கூட்டணியை வென்று விடக்கூடிய அளவுக்கான மக்கள் செல்வாக்கு கொண்ட கட்சி என்று இப்போது எதுவும் இல்லை என்பதே நிதர்சனம்.

அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் களம் வரை இதே நிலை நீடிக்குமா? காட்சிகள் மாறுமா என தெரியாது.

அதனால் தானோ என்னவோ திமுக அதீத நம்பிக்கையுடன் வலம் வந்து கொண்டிருப்பதாக ஒரு தோற்றம் உருவாகிக் கொண்டு இருக்கிறது.

நிற்க!

2021 ஆம் ஆண்டு திமுகவை அரியணை ஏற்றி அழகு பார்த்த தமிழக மக்களுக்கு நிறைய நிம்மதியும் அதை விட கூடுதலான எதிர்பார்ப்புகளும் இருந்தன. அதில் பெரும்பாலானவற்றை திமுக நிறைவேற்றியும் விட்டது.

ஆனால் கட்சி அமைப்பாக எங்கேயோ திமுக சறுக்கிக் கொண்டு இருக்கிறதோ என்கிற கவலையும் இல்லாமல் இல்லை.

திமுக என்பது தீரர்களால் செயல் வீரர்களால் தொண்டர் பாசறைகளால் காத்து வரப்பட்ட இயக்கம். அந்த அடிப்படை கட்டமைப்பு இருக்கும் வரை திமுகவை யாராலும் வெல்ல முடியாது.



மாவட்ட அளவில், வட்ட அளவில், கிளைக்கழக அளவில் கட்சியை வலுப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் மக்கள் மனதில் திமுகவை பற்றி தவறான தகவல்கள் பரவாமல் தடுப்பது, கழக ஆட்சியின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்வது, திரும்ப திரும்ப திமுகவின் அடிப்படை கொள்கைகளை மக்கள் மனதில் பதியச் செய்து கொண்டே இருப்பது ஆகியவையும் முக்கியம்.

சமூக வலை தளங்கள் இல்லாத கால கட்டத்தில் கூட தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ச்சியாக தம்பிகளுக்கு கடிதம் என தன் மனதில் நினைப்பதை எல்லாம் எழுதி அதை நாளிதழ் மூலமாக கழக உடன் பிறப்புகள் மட்டும் அல்லாது பொது மக்களும் அறிய செய்து வந்தார். அந்த கடிதங்களில் பெரும்பாலும் அரசின்/கட்சியின் முடிவுகள், நிலைப்பாடுகள் ஆகியவை பற்றி விரிவாக எடுத்து சொல்லுவார்.

கழக அமைப்பு என்பதும் சுற்றி சுற்றி சுழன்று கொண்டே இருக்கும். பொதுக்கூட்டம், மாநாடு, பேரணி, சாதனை விளக்க கூட்டம், பட்ஜெட் விளக்க கூட்டம், மாநில உரிமை குறித்த கருத்தரங்கம் என தொய்வில்லாமல் மக்கள் மனதில் திமுகவை திமுக அரசை திமுகவின் நிலைப்பாட்டை பதிய செய்து கொண்டே இருப்பார்.

இப்போது அதில் எல்லாம் ஒரு சிறு சுணக்கம் வந்து விட்டதோ என ஐயமாக இருக்கிறது.

திமுக பற்றி பொய்களும் புனை கதைகளும் சரளமாக பரப்பட்டு வரும் சூழலிலும், அதற்கு தகுந்த பதில் கொடுக்காமல் இருப்பது, எதிர் விளக்கம் கொடுக்காமல் இருப்பது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காமல் இருப்பது போன்றவை அப்படியான பொய்களை, புனை கதைகளை திமுக பெரிய விஷயமாக எடுத்து கொள்ளவில்லையா என்கிற கேள்வியை எழுப்பாமல் இல்லை.

அவை சின்ன சின்ன பொய்களாக, கட்டு கதைகளாக, அவதூறுகளாக, மெல்ல மெல்ல திமுகவுக்கு எதிராக பின்னப்பட்டு வரும் மாயவலை. அந்த வலையை எதிர்கொண்டு அறுத்து எறியாமல் போனால் அந்த வலையில் சிக்கிக் கொள்ளும் சூழல் கூட ஏற்பட்டுவிட கூடும். அது மக்கள் திமுக மீது வைத்த நம்பிக்கையை சிதைப்பதாகவும் ஆகிவிடும்.

பரபரப்பு நிறைந்த வாழ்க்கையில் உழலும் மக்களுக்கு எதையும் நின்று நிதானமாக படித்து பார்த்து ஆராயும் பொறுமையோ அதற்கான நேரமோ இருப்பது இல்லை. உள்ளங்கைகளில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் செல்பேசி திரைகளில் ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு சில நொடி செய்தி துனுக்கிகளின் இருவரி தலைப்புகள் போதுமானதாக இருக்கிறது மனதில் தங்கி கொள்ள. 

எத்தனை பக்கத்துக்கு பத்திரிகைகளில் பின்னாளில் விளக்கங்கள் வந்தாலும், மனதில் உட்கார்ந்து கொண்ட அந்த சில வரிகள் அத்தனை சீக்கிரம் அழிவது இல்லை. 

இந்த சில வரிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது தான். ஆனால் இது போல பல செய்திகள் தொடர்ச்சியாக திமுக குறித்தான தவறான கண்ணோட்டத்தை கொடுத்து கொண்டே இருந்தால் மனதில் திமுக மீதான மதிப்பு குறைய தொடங்கும் என்பது இயல்பு. அந்த பொய்களுக்கான மறுப்பு உடனடியாகவும் வீரியமாகவும் வராத வரை அந்த பொய்கள் உண்மை என்றே உட்கார்ந்து கொள்ளும். தாமதமாக வரும் தர்க்கங்கள் அதனை அவ்வளவு சீக்கிரமாக நீர்த்து போகச் செய்து விட முடியாது.

இது ஒரு வகையான உளவியல். இந்த உளவியல் கருத்தாக்கத்தை நிறுவ பல கட்சிகளும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். அதை மறுப்பதும் திமுகவின் சாதனைகளை தொடர்ச்சியாக மக்கள் மனதில் பதிய வைப்பதும் இந்த வேகமான வாழ்க்கை முறையில் அவசியமான ஒன்றாக ஆகிவிட்டது. இதை கட்சி உணர்ந்து இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

எத்தனையோ நல்ல விஷயங்களை செய்தாலும் அதை மக்களிடம் கொண்டு செல்லாமல் இருப்பது, பிற கட்சிகள் ஏற்படுத்தும் களங்கங்களை துடைத்து எறியாமல் விடுவது ஆகிய இரண்டும் அடுத்த ஆண்டு தேர்தல் நேரத்தில் இரண்டு நிமிடம் மட்டுமே வாக்குப் பதிவு எந்திரத்தின் முன் நிற்கும் வாக்காளனின் மனதை மாற்றி விட முடியும்.

இந்த விழுமியங்களை அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வது அவசியம். நமக்கு உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, காலச்சூழலில் அதற்கு ஒப்ப பயணிப்பதே எந்த ஒரு இயக்கத்தையும் உயிர்ப்போடு வைக்கும்.

என்னை பொறுத்த வரை..

எதிர்கட்சிகளின் பொய்களை தோலுறிப்பது, திமுகவின் சாதனைகளை விளம்பரப்படுத்திக் கொண்டே இருப்பது ஆகியவை மக்களின் மனதில், நாம் தேர்ந்தெடுத்த திமுக நம் நம்பிக்கையை குலைக்கவில்லை.. நமக்காக செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்கிற உத்திரவாதத்தை நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்கும்.

கடைசி நேரத்தில் தேர்தல் அறிவித்த பிறகு பிரச்சாரத்தில் பார்த்து கொள்ளலாம் என்கிற நிலைப்பாடு எடுப்பதாக இருந்தால்.. இன்றிலிருந்து மக்கள் மனதில் எதிர்கட்சிகள் விதைத்து வரும் பொய்களை எல்லாம் மொத்தமாக அகற்றும் அளவுக்கு பெரும் பலமான பிரச்சாரமாக அது இருக்க வேண்டும்.

அதை விட எளிமையான வழி.. அவ்வப்போது வரும் பொய்களை அவ்வப்போது உடைத்து எறிவது. இது தான் மக்கள் மனதை தெளிவாக வைக்க உதவும்.

கிடைத்து இருக்கும் ஆட்சி மிக முக்கியமானது. இதனை இன்னும் சில காலங்கள் தக்கவைத்து கொள்ள வேண்டும் என்றால், தொடர்ந்து வெல்ல வேண்டும் என்றால், தொடர்ச்சியாக மக்கள் மனதில் கழகம் குறித்து நல்ல விஷயங்களை பதிய செய்து கொண்டே இருக்க வேண்டும்.

உரியவர்கள் ஆவன செய்வார்களா அல்லது கடைசியில் பார்த்து கொள்ளலாம் என இருக்க போகிறார்களா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.


Thursday, May 30, 2024

இந்திய நாடாளுமன்ற தேர்தல் - 2024

2024-29 கால கட்டத்துக்கான இந்திய அரசை நடத்தப்போவது யார் எனும் தேடல் இந்திய நாடாளுமன்ற தேர்தலாக தற்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கிறது. மொத்தமுள்ள ஏழு கட்ட தேர்தலில் இது வரை ஆறு கட்ட தேர்தல் முடிவடைந்து அதன் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் முதல் நாள் நடைபெறும். ஜூன் நான்காம் நாள் வாக்கு எண்ணிக்கை. ஜூன் ஐந்தாம் தேதி மாலை அடுத்த ஆட்சி யார் கையில் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிடும்.

என்னுடைய ஊகம் என்னவென்றால், மூன்றாவது முறையாகவும் பாஜக தான் ஆட்சி அமைக்கக் கூடும், ஆனால் அது நிச்சயமாக அறுதி பெரும்பான்மை கொண்ட ஆட்சியாக அல்லாமல் சிறுபான்மை ஆட்சி / கூட்டணி ஆட்சியாக அமையவே வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். காரணம் காங்கிரஸ் தலைமையிலான "INDIA" கூட்டணியின் எழுச்சியும் அதற்கு மக்களிடம் கிடைத்து வரும் அமோக வரவேற்பும் தான்.

ஒருவேளை கடைசி நேர சுதாரிப்பாக அல்லாமல் முன் கூட்டியே இந்த அணி அமைக்கப்பட்டு தேர்தல் கால பணிகளுக்கான முன்னேற்பாடுகள் நடத்தி இருந்தால் ஆட்சியை பிடிக்கக்கூடிய வாய்ப்பை கூட பெற்று இருக்கக்கூடும் என நினைக்கிறேன். 

இந்திய அரசை ஆட்சி செய்ய 272 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

குஜராத், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், ராஜஸ்தான், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் இப்போதும் பாஜக வலுவாக உள்ளது. மேலும் அங்குள்ள மக்கள் மத ரீதியான உணர்வுகள் அடிப்படையில் வாக்குகளை தீர்மானிப்பதால் பாஜகவும் இந்த முறை தேர்தல் பிரச்சாரம் முழுமையும் மத ரீதியாகவே செய்து வந்தது. ஆகையால் அந்த மாநிலங்களில் எல்லாம் பெருவாரியாக வெற்றி பெற பாஜகவுக்கு கஷ்டம் ஒன்றும் இருக்காது.

தென் மாநிலங்களை பொறுத்த வரை பாஜகவுக்கு கஷ்டம் தான். ஆனால் தென்மாநிலங்களில் ஒரே ஒரு உறுப்பினர் கூட கிடைக்காமல் போனாலும் 272 உறுப்பினர்களை பிற மாநிலங்களில் இருந்து பெற்றுக்கொள்வது பாஜகவுக்கு சுலபமே. 

ஒரு வேளை கூட்டணி ஆட்சி, சிறுபான்மை ஆட்சி என்கிற நிலையில் பாஜக ஆட்சி செய்யும் எனில் எதிர்கட்சி வரிசையில் காங்கிரஸ் கூட்டணி மிக பலமாக அமையும் என்பதால் பாஜகவின் கனவு திட்டங்கள் எதையும் அமல் செய்ய முடியாமல் போகும். பாஜகவின் எதேச்சாதிகார போக்குக்கு காங்கிரஸ் அணி மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்து தவறான முடிவுகளை பாஜக எடுக்காமல் பார்த்துக்கொள்ளும்.

தமிழ்நாடு & புதுவையை பொறுத்தவரை, 40/35 திமுக கூட்டணி நிச்சய வெற்றி பெறும். அதிமுக இரண்டு இடங்களிலும் (கோவை, ஈரோடு) பாஜக அணி மூன்று இடங்களிலும் (நெல்லை, வேலூர், தர்மபுரி) வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன என்றாலும் அங்கேயும் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்திலாவது வெற்றி பெற்றாலும் ஆச்சர்யம் இல்லை.

கேரளாவில் பாஜக ஒரே ஒரு இடத்தில் (திருச்சூர்) வெற்றி பெற வாய்ப்பு உண்டு. மற்றவற்றில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக நினைக்கவில்லை.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் YSR காங்கிரஸ் கட்சியும் கர்நாடகத்திலும் தெலுங்கானாவிலும் எல்லாம் காங்கிரஸ் கட்சியும் வலுவாக உள்ளது. அங்கே சிற்சில இடங்களை பாஜக வெல்லக்கூடும் எனினும் அவை ஒற்றை இலக்க எண்களாக தான் இருக்கக்கூடும்.

எனவே, தென் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் இனி இந்திய நாட்டின் வரலாற்றை தீர்மானிக்க போகிறவர்கள். குறிப்பாக திராவிட முன்னேற்ற கழக கூட்டணி உறுப்பினர்கள். அவர்கள் எதை அனுமதிக்க போகிறார்கள் எதிர்க்க போகிறார்கள் என்பதை பொறுத்தே சட்டங்களும் திட்டங்களும் அமையும். அந்த வகையில் நாடு முழுமையும் இனி ஸ்டாலின் ஆட்சி என சொன்னாலும் அது மிகை அல்ல.

அடுத்த வாரம் முடிவுகள் வந்த பின் விரிவாக அலசுவோம்.


Saturday, April 22, 2023

வேலை நேர சட்ட திருத்தம்

தமிழ்நாடு அரசு நேற்று சட்டமன்றத்தில் விவாதம் எதுவும் இல்லால் 17 சட்ட முன்வடிவுகளை தாக்கல் செய்தது.

அதில் ஒன்றாகதொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான பணி நேரத்தை உயர்த்தி ஒரு சட்ட திருத்தம் Factories Act இல் கொண்டு வந்து உள்ளது. 



இந்த சட்டத்திருத்தம், ஒரு நாளுக்கு இப்போது இருக்கும் 8 மணி நேர வேலை என்பதில் இருந்து 12 மணி நேரம் ஆக இயல்பான வேலை நேரத்தை உயர்த்திக் கொள்ள வழி வகை செய்கிறது.

இது எதற்காக கொண்டு வரப்பட்டது யாருக்காக கொண்டு வரப்பட்டது என்பது எல்லாம் தெரியவில்லை. ஆனால் காரணம் என்னவாக இருந்தாலும் இது சரியானது அல்ல.

இளைஞர்களின் வேலை வாய்ப்பை குறைக்கும், வேலை செய்வோரை மேலும் மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும் இந்த சட்டம், இன்னும் ஒரு வாரத்தில் மேதினம் கொண்டாட இருக்கும் நேரத்தில் வந்து இருப்பது ஆச்சர்யம் தான். 

அதற்காக மே தினம் முடிந்த பிறகு கொண்டு வந்தால் ஓகேவா என சிலர் கிண்டல் செய்ய கூடும்.

மே தினம் எதற்காக கொண்டாடப் படுகிறது என்கிற அடிப்படை விஷயம் தெரிந்த யாரும் இந்த சட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒரு மனிதனுக்கு இயல்பாக தேவைப்படும் ஓய்வை கொடுக்க வேண்டும் என்பதற்காக 8 மணி நேர உழைப்பு, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பதனை உறுதி செய்வதற்காக போராடி பெற்ற உரிமை தான் இந்த மே தின கொண்டாட்டத்தின் அடிப்படை. 

நேற்று சட்டமன்றத்தில் இந்த சட்டம் அறிமுகம் ஆனபோது எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சியினருக்கு வாழ்த்துக்கள்.

இந்த சட்ட திருத்தம் முழுக்க முழுக்க உற்பத்தி துறை சார்ந்த Factories Act உட்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது 50 பேருக்கு மேல் பணி செய்யும் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அப்படியான தொழிற்சாலைகளில் இயல்பான வேலை நேரம் 8 மணி நேரம் என்றாலும் கூட, விதிவிலக்காக வேலை அவசரம், அல்லது வேலை எதிர்பார்த்த நேரத்தில் முடியவில்லை போன்ற தருணங்களில் கூடுதல் நேரம் (Over Time) வேலை செய்ய வைக்கலாம் என Factories Act ஏற்கனவே வழி வகை செய்து உள்ளது.

அப்படியான Over Time நேரத்தில் இயல்பான நேரத்துக்கு கொடுக்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்கிற சட்டம் ஏற்கனவே உள்ளது.

இப்போது, இயல்பான வேலை நேரமே 12 மணி நேரம் வரை வைத்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு சட்ட திருத்தம் சொல்வதால், Over Time என்று தனியாக கூடுதல் சம்பளம் கொடுத்து வேலை செய்ய வைக்க வெண்டியது இல்லை. இயல்பான சம்பளத்தில் 12 மணி நேரம் வரை வேலை செய்ய வைக்கலாம்.

எப்போதேனும் Over Time என்று அல்லாமல் தினசரி கூட இனி 12 மணி நேரம் வேலை வைக்க முடியும்.

நிச்சயமாக இது உற்பத்தியை அதிகரிக்க செய்யும் தான். ஆனால் அதே அளவு நிச்சயம் தொழிலாளர்களின் உடல்நிலை மன நிலையையும் பாதிக்கும் என்பதும்.

ஒரே நாளில் 17 சட்ட மசோதாக்கள் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டு உள்ளதன் பின்னணி எதுவாக இருந்தாலும் ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அதை ஆதரிக்க மாட்டார்கள். போலவே அதில் ஒன்றான இந்த வேலை நேர சட்ட திருத்தத்தை தொழிலாளர் நலன் மீது அக்கறை கொண்ட யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

இரண்டு வருஷம் முன்பு இதே போன்ற சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வர முனைந்த போது அதை கடுமையாக எதிர்த்த கழகம் இப்போது அதே சட்டத்தை கொண்டு வந்து இருப்பது வருத்தமானது.

அப்போது இந்த சட்டத்தை எதிர்த்து திமுக சொன்ன விஷயங்கள் எதுவும் இப்போது மாறிவிடவில்லை தானே?



தொழிலாளர் விருப்பப்பட்டால் மட்டுமே இந்த பணி நேரத்தை தொழிற்சாலைகள் அமல் செய்ய முடியும் என அமைச்சர் சொல்லி இருக்கிறார். தினசரி எல்லா தொழிற்சாலைகளும் என்ன செய்கின்றன என அரசு கண்காணிப்பது சாத்தியம் இல்லை.

Inspector of Factories (தொழிற்சாலை ஆய்வாளர்) இதை தினசரி செய்யவும் முடியாது. தொழிற்சாலை அவரை "ஒப்புக்கொள்ள வைக்க" எதையும் செய்யும். ஊழலுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கும் சட்ட திருத்தம் இது.

மேலும், தொழிலாளர் விருப்பம் என்று ஒன்று ஒருபோதும் இருந்தது இல்லை. தொழிற்சாலை பணித்தால் தொழிலாளர்கள் அதை செய்து தான் ஆக வேண்டி இருக்கும். அப்படி செய்யாத தொழிலாளர்களுக்கு பதில் மாற்று தொழிலாளர்களை வைக்க தொழிற்சாலைகள் தயஙகாது. எப்படி பார்த்தாலும் பாதிக்கப்பட போவது தொழிலாளர்கள் தான்.

இந்த சட்ட திருத்தத்தின் சாதக பாதகஙகளை பற்றி ஆராய உயர் மட்ட குழு அமைக்கப் போவதாக அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.

எதிர்ப்பு வந்தால் மறு பரிசீலனை என்பதை விட சட்டம் கொண்டு வரும் முன்பு தொழிற் சங்கங்களை ஆலோசித்து கொண்டு வருவது தான் இது வரை ஜனநாயகமாக இருந்தது.

உயர்மட்ட குழு எல்லாம் சட்ட முன்வரைவு நேரத்திலேயே இருந்து இருக்க வேண்டும். அதை மசோதாவாக தாக்கல் செய்த பிறகு உயர்மட்ட குழு அமைப்பது சரியல்ல.

அரசு இது தொடர்பாக தொழிற்சங்கங்களை அழைத்து பேசி அவர்கள் கருத்தையும் கேட்டு முடிவு செய்து இருக்கலாம். குறைந்த பட்சம் திமுகவின் தொழிற்சங்கம் LPF கருத்தையாவது கேட்டு இருக்கலாம். LPF எல்லா சூழலிலும் தொழிலாளர் பக்கமே நின்ற வரலாறு உண்டு. தவறை தவறு என தயஙகாமல் சொல்லும் துணிவும் உண்டு.

டிரைவர்கள், டீச்சர், மருத்துவர், கட்டிட வேலை செய்வோர், டெக்ஸ்டைல், கணினி துறை, கடைகள், சூப்பர் மார்க்கெட், ஹோட்டல் போன்ற பல துறைகளில் ஏற்கனவே தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்கிறார்களே என்பது போன்ற பொருந்தாத ஒப்பீடுகள் கொண்டு வந்து இந்த சட்ட திருத்தத்தை ஆதரித்து பேசுவோர் எவரும் இந்த துறைகள் எல்லாம் Factories Act இல் வராத துறைகள் என புறியாதவற்களாக தான் இருக்க கூடும். அவர்களின பிரச்சாரத்தை எல்லாம் புறக்கணித்து விட்டு அரசு இந்த சட்ட திருத்தத்தின் உண்மையான பாதிப்பை அனுபவிக்க போகும் தொழிற்சாலை தொழிலாளர்களின் கருத்துக்களை கேட்டு நல்ல முடிவினை எடுத்தால் நல்லது.




Tuesday, March 7, 2023

தனியார் மயம் ஆகிறதா MTC?

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்க ஏதுவாக தனியார் பங்களிப்புடன் 1,000 பேருந்துகள் வாங்க திட்டம் இருப்பதாக ஒரு செய்தி வந்தது.

இது தொடர்பான டெண்டர் விவரஙகளில், Gross Cost Contract (GCC) முறையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அதற்கான நிறுவனஙகளை தேர்ந்தெடுப்பது, ஆய்வு செய்வது ஆகியவற்றக்காக ஒரு consultancy நிறுவனத்தை தெரிவு செய்வதற்கான டெண்டர் ஆக அது வெளியாகி இருக்கிறது.



இந்த செய்தி வெளியானதும், இது மாநில அரசு இதுவரை பின்பற்றி வந்த போக்குவரத்து கொள்கைக்கு எதிரானது என்றும், போக்குவரத்து தொழிலாளர் நலன் பாதிக்கப்படும் என்றும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

இது பற்றி பார்ப்போம்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை போக்குவரத்து கழகம் என்பது தொழிலாக அல்ல சேவையாகவே நடத்தப்பட்டு வருகிறது.

தனியார் பேருந்துகளை நடத்தி வந்த காலஙகளில், வருவாய் அதிகம் உள்ள வழித்தடங்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு தூர கிராமஙகள், மலை பகுதி குடியிருப்புகள் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து சேவை இல்லாமல் இருந்தது. அதனால் அங்கிருந்த மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் இல்லாமல், கல்வி வேலை வாய்ப்பு ஆகியவற்றில் பின் தங்கி இருந்தனர். மேலும் மருத்துவம் அரசு சேவைகள் ஆகியவை பெற அதிக தூரம் நடந்தோ மாட்டு வண்டி சைக்கிள் போன்றவற்றில் பயணித்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

தமிழ்நாடு அரசு 1969 ஆம் ஆண்டு பேருந்துகளை தேசியமயமாக்கி, அரசு போக்குவரத்து கழகத்தை தொடங்கி, அனைத்து ஊர்களுக்கும் பேருந்து வசதி செய்து கொடுத்து, "ஒரே ஒரு பயணியாக இருந்தாலும் அவருக்காக பேருந்து இயக்கப்படும்" என அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களின் வாக்குறுதி படி இன்று வரை லாப நஷ்டம் பார்க்காமல் முழுக்க முழுக்க மக்கள் நல சேவையாக நடைபெற்று வருகிறது.

சென்னை & கன்னியாகுமரி மாவட்டங்கள் தவிர பிற மாவட்டஙகளில் பிற்பாடு தனியார் நிறுவனஙகளும் பேருந்துகளை இயக்க அனுமதி பெற்று இயக்கி வருகிறார்கள்.

மற்ற மாநிலங்களுக்கு குறிப்பாக வட இந்திய மாநிலங்களுக்கு பயணித்தவர்கள் அங்கே இப்போதும் போக்குவரத்து வசதிகள் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை நன்கு அறிவார்கள்.

சென்னையை பொறுத்த வரை நகர பேருந்துகள் முழுமையும் அரசு மாநகர போக்குவரத்து கழகம் (MTC) சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. (ஒரே ஒரு தனியார் பேருந்து 54T மட்டும் கோர்ட் அனுமதியுடன் இயங்குகிறது).


இப்போது உலக வங்கி கடன் நிபந்தனை அடிப்படையில் தனியார் பங்களிப்புடன் இந்த ஆண்டு 500 பேருந்துகளும், 2025 ஆம் ஆண்டு மேலும் 500 பேருந்துகளும் ஆக மொத்தம் 1,000 பேருந்துகள் தனியார் மூலம் இயக்க திட்டம் இட்டு, அதற்காக டெண்டர் விடப்பட்டு இருக்கிறது.

இது தனியார் மயமா? தனியார் பங்களிப்பா?

தனியாருடன் அரசு இணைந்து செயலாற்ற பல முறைகள் உண்டு.

1. Dry Lease/Wet Lease முறையில் தனியாரின் பேருந்துகளை அரசு பயன்படுத்தி அரசின் பெயரில் போக்குவரத்து சேவை அளிப்பது. அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா மாநிலங்களில் வோல்வோ, ஸ்கேனியா பேருந்துகளை இந்த முறையில் தான் இயக்குகிறார்கள். பேருந்து வாங்கும் செலவு அரசுக்கு இல்லை. குத்தகைக்கு எடுத்தால் போதும். அரசு விரும்பும் வழித்தடத்தில் அரசு இயக்கி கொள்ளும். 

2. தனியார் நிறுவன பேருந்துகளுக்கு என தனியாக permit கொடுத்து அவர்கள் விரும்பும் வழித்தடத்தில் இயக்கிக் கொள்ள அனுமதி கொடுப்பது. பல மாவட்டஙகளில் நகர, புறநகர் பேருந்துகள் இப்படி தான் இப்போது இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

3. Special Purpose Vehicle - அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தில் தனியாரை ஆலோசகராக நியமித்து நிர்வாகம் செய்வது. பேருந்துகள் எல்லாம் அரசின் சொத்து.. ஆனால் நிர்வாகம் செய்வதில் தனியார் மேலாண்மை நிறுவனம் துணை நிற்கும். கேரளாவில் KSRTC - SWIFT நிறுவனம் இப்படி இயங்குகிறது.

4. Joint Venture - தனியார் நிறுவன பஸ் அரசின் சார்பாக இயக்கப்படுவது. இதில் இருவரின் பெயரும் (போக்குவரத்து கழகம் & தனியார் நிறுவனம்) இருக்கும். பெங்களூர் நகரில் இப்படியான சேவை இருக்கிறது.

5. இவை போக இந்த GCC முறையும் ஒன்று. அதாவது Gross Cost Contract. பேருந்துகள் தனியாருடையது. ஓட்டுநர் தனியார் சார்பில். நடததுனர் அரசின் சார்பில். ரூட் அரசின் பெர்மிட். அந்த ரூட்டை டெண்டரில் வாங்கும் நிறுவனம், அந்த ரூட்டுக்கு என்று வருவாய் நிர்ணயித்து அரசுக்கு கொடுக்கும். அது தான் Gross Cost (for that route). அதன் அடிப்படையில் அந்த ரூட்டில் தனியார் பேருந்தை இயக்குவார்கள்.

நிர்ணயித்த தொகையை விட அதிக வருவாய் வந்தால் அது அந்த தனியாருக்கு கிடைக்கும் லாபம். ஒருவேளை நிர்ணயித்த தொகையை விட குறைவாக வந்தால் எவ்வளவு குறைந்தது என பார்த்து அந்த இழப்பை அரசு ஈடு செய்யும்.

எப்படி பார்த்தாலும் தனியாருக்கு நஷ்டம் இல்லை.

சரி இதனால் என்ன பாதிப்பு வரும்?

அரசு தனக்கு என்று பேருந்துகளை சொந்தமாக வாங்க தேவை இல்லை. தனியாரின் பேருந்துகள் இயங்க அனுமதி கொடுத்தால் போதும். ஓட்டுநர் கூட அவர்களே பார்த்து கொள்வார்கள். காலப் போக்கில் அரசு பேருந்துகள் அரசு ஓட்டுனர்கள் வாய்ப்பு இழப்பார்கள். அல்லது தனியார் நிறுவனம் நோக்கி செல்ல வேண்டி இருக்கும். இது பணி பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்படுத்தும்.

நிர்ணயம் செய்யப்படும் Gross Cost எப்படி அளவிடப் போகிறார்கள் என்பது அடுத்த கவலை. புறநகர் பேருந்துகள் போல அல்லாமல் நகர பேருந்துகளின் பயண பயன்பாடு வேறுபாடானது. அதிலும் சென்னை நகர பேருந்துகளை வருவாய் அடிப்படையில் வகைப்படுத்துவது சிரமம். ஒவ்வொரு ரூட்டும் ஒவ்வொரு வகையான வருவாய் கொண்டவை.

எனவே தனியார் நிறுவனம் கூடுமான வரை குறைவான தொகைக்கே நிர்ணயம் செய்ய எத்தனிக்கும். அப்படி நிர்ணயம் செய்யும் தொகையை விட அதிக வருவாய் வருவது அவர்களுக்கு லாபம். குறைந்தாலும் அரசு கொடுத்து விடும். இழப்பும் நஷ்டமும் அரசுக்கு தான். அதாவது மக்களின் வரி பணத்துக்கு.

Gross Cost சரியாக நிர்ணயம் செய்யப்பட்டாலும், தினசரி வருவாயை எப்படி கணக்கிடுவார்கள் என்பது அடுத்த கவலை. மாணவர், மகளிர், முதியோர் சலுகைகள் எல்லாம் அரசு திருப்பி கொடுக்கும் என்பதால் அதன் கணக்கும், நார்மல் பயணிகள் வருவாய் கணக்கும் எப்படி கண்காணிக்க போகிறார்கள் என்பது பெரிய சவால் தான்.

சுருக்கமாக சொல்வதானால், அரசின் வழித்தடத்தில் அரசின் பெர்மிட்டில், தனியாரை பேருந்து இயக்க வைத்து அவர்கள் சொல்லும் தொகையை அரசு கொடுக்கும். அதை விட கூடுதல் வந்தால் தனியாருக்கு.

இது கிட்டத்தட்ட அரசின் விமான நிலையங்களை பராமரிக்கும் பணி என ஒரு குறிப்பிட்ட தனியாருக்கு கொடுத்து, அதற்காக நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் சில காலத்துக்கு பிறகு அந்த தனியாரால் உயர்த்தப்பட்டு முழு விமான நிலையமும் அவர்கள் கட்டுப்பாட்டுக்கு போன கதை போல ஆகக்கூடும் என்பதே பலரது அச்சம்.

வருவாய் குறைவான வழித்தடத்தில் அரசு இயக்கும். தனியார் இயக்குவார்களா என்பது சந்தேகமே. மக்களின் போக்குவரத்து வசதி அதனால் பாதிக்கப்படும். தமிழ்நாடு போராடி அரசூடைமை ஆக்கிய போக்குவரத்து சேவை அர்த்தம் இல்லாதது ஆகிவிடும் என்பதே பலரது கவலை.

நாளடைவில், அரசு சார்பில் புதிய பேருந்துகள் வாங்காமல் தனியார் மூலம் இயக்கப்பட்டு வருகையில் காலாவதி ஆகும் (FC expired) அரசு பேருந்துகளுக்கு கூட தனியார் பேருந்துகளை ஈடு செய்து வந்தால் (Substitute) அரசு போக்குவரத்து கழகம் மெல்ல மெல்ல கரைந்து போய்விடக் கூடும்.

இதை விட அரசே பேருந்துகளை வாங்கி அரசே இயக்குவது நல்லது. 


கலைஞர் மினி பஸ் திட்டத்தை கொண்டு வந்தபோது கூட அவர்களுக்கு என்று தனி பெர்மிட் தான் கொடுத்தார். தனியார் பேருந்துகள் மாநிலம் முழுவதும் இயக்க அனுமதி கொடுத்தாலும் சென்னையில் மட்டும் மினி பஸ் சேவையை அரசே நடததியது.

எந்த சூழலிலும் அரசின் பெர்மிட்டை தனியார் பயன்படுத்த தமிழ்நாடு இதுவரை அனுமதித்தது இல்லை. தனியாருக்கு தனி பெர்மிட் அரசுக்கு தனி பெர்மிட். அவரவர் பெர்மிட்டில் அவரவர் இயக்கி கொள்வது தான் நல்லது.

சென்னை போன்ற நகரங்களில் பேருந்துகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. காரணம் MRTS, EMU போன்ற ரயில் சேவைகளும், Metro சேவையும், சொந்த கார் பைக் எண்ணிக்கை அதிகரிப்பும், நிறுவனஙகள் பள்ளி கல்லூரி போன்றவை தங்களுக்கு என்று பேருந்துகளை இயக்குவதும் என பல காரணங்கள்.

இந்நிலையில் தனியாருக்கு 1,000 வழித்தடம் கொடுத்து அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடுகட்டும் என்பது போன்ற திட்டஙகள் சரியானது தானா என்பது யோசிக்க வேண்டிய ஒன்று.

நாட்டில் முன்மாதிரி போக்குவரத்து கழகங்கள் தமிழ் நாட்டின் சிறப்பு. அந்த சிறப்பு தொடர வேண்டும். அவை தனியார் மயம் ஆக்கப்படக்கூடாது என்பது தான் எல்லோரும் விரும்பும் நிலைப்பாடு.

அரசு எந்த தனியாரின் நலன் கருதி இந்த திட்டத்தை கொண்டு வந்தது என தெரியாது. ஆனால் அதை கைவிட்டு கலைஞர் வழியில் மக்களின் நலன் கருதி திட்டத்தை மாற்றம் செய்வது நல்லது.

****

பார்வை:

1. செய்தி 

2 டெண்டர்












Tuesday, November 8, 2022

EWS வழக்கு தீர்ப்பு

டந்த 2019 ஆம் ஆண்டு, ஒன்றிய அரசு, முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது.

பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆம் ஆத்மி, என பல கட்சிகளும் இந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்து இருந்தார்கள். தமிழ்நாட்டில் இருந்து அதிமுக இந்த சட்டத்தை ஆதரித்தது. திமுக இந்த சட்டத்தை எதிர்த்து வாக்களித்தது.

Economically Weaker Section எனும் EWS சட்டம் சமூக நீதிக்கு எதிரானது என பல எதிர்ப்புகள் வந்து, இந்த சட்டத்தை எதிர்த்து வழக்குகளும் தாக்கல் செய்யப் பட்டன.

இந்த சட்டத்தின் படி ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கு கீழே உள்ள முற்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு பெற தகுதி பெறுவார்கள். வேறு எந்த இட ஒதுக்கீட்டிலும் வராதஅ சமூகத்தினருக்கு மட்டுமே இது பொருந்தும்.

சுருக்கமாக சொன்னால் முற்பட்ட அல்லது சமூக ரீதியாக முன்னேறிய வகுப்பினரில் உள்ள பொருளாதார நலிவடைந்த மக்கள்.

ஆனால் ஆண்டு வருமானம் ₹8 லட்சம் வாங்கும் ஒருவர் எப்படி பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவில் வர முடியும்? என்கிற கேள்விக்கு இது வரை விடை இல்லை.

பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு கொடுக்க இந்திய அரசியல் சாசனத்தில் வழி இல்லை. சமூக ரீதியாக கல்வி ரீதியாக பின் தங்கியுள்ள மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் என இந்திய அரசியல் சாசனம் கூறுகிறது. எனில், இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு சட்டம் செல்லுமா என்பதும் மற்றொரு கேள்வி.

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில், மொத்த இட ஒதுக்கீடு என்பது 50% க்கு கூடுதலாக கொடுக்க முடியாது என சொல்லி இருக்கிறது. ஏற்கனவே 22.50% தாழ்த்தப்பட்ட பழஙகுடி மக்களுக்கும் 27% இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ஒதுக்கீடு கொடுத்து மொத்தம் 49.50% ஒதுக்கீடு கொடுத்து விட்டதால் இதற்கு மேல் கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை. எனில் இப்போது கூடுதலாக 10% இட ஒதுக்கீடு எப்படி கொடுக்க முடியும்? என்பதும் கேள்வியே. 

(இந்த 50% இட ஒதுக்கீடு உச்ச வரம்பு என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் பொருந்தாது. தமிழ் நாட்டை பொறுத்தவரை 69% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டம் அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்கப்பட்டு இருப்பதால் சட்ட ரீதியான பாதுகாப்பும் இருக்கிறது. எனவே தமிழ்நாட்டு இட ஒதுக்கீடு கொள்கைக்கு இந்த 50% உச்ச வரம்பு எல்லாம் இல்லை)

இப்படியான பல்வேறு கேள்விகளை உள்ளடக்கிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சமூக நீதிக்கான போராட்டத்தை எப்போதும் முன்னெடுத்து செல்லும் இயக்கமான திமுக இந்த வழக்கில் தொடர்ந்து ஆணித் தரமான வாதஙகளை எடுத்து வைத்து, EWS ஒதுக்கீடு எந்த அளவுக்கு சட்டத்தின் பார்வையில் தவறானது என விரிவாக வாதாடியது.

இந்த வழக்கில் நேற்று வந்த தீர்ப்பு, இந்த வழக்குக்கான தீர்வாக அமையாமல் மேலும் பல வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டிய சூழலுக்கு எல்லோரையும் தள்ளும் அளவுக்கு புதிய குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஐந்து நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வந்தது. அதில் நீதியரசர்கள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பார்டிவாலா ஆகிய மூன்று நீதிபதிகள் EWS ஒதுக்கீடு செல்லும் என்றும், நீதியரசர்கள் ரவீந்திர பட், யூ. யூ.லலித் ஆகிய இரண்டு நீதிபதிகள் EWS ஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பு அளித்து உள்ளனர்.

இது தவிர நேற்றைய தீர்ப்பு இன்னும் பல விஷயங்களையும் குறிப்பிடுகிறது. அதாவது மிக நீண்ட காலத்துக்கு இட ஒதுக்கீடு தொடர முடியாது என்றும், விரைவில் இட ஒதுக்கீடு முறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும், எல்லா வகுப்பினருக்கும் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு கொடுக்க ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு சொல்கிறது.

பொருளாதாரம் என்பது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடக் கூடியது. இன்றைக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் நாளையே கல்வி கற்று நல்ல வேலை நல்ல பதவி பெற்று பொருளாதார ரீதியாக முன்னேறி விட முடியும். ஆனால் சமூக ரீதியான ஒடுக்குமுறை என்பது எவ்வளவு பணம் செல்வாக்கு இருந்தாலும் மாறவே மாறாது. எவ்வளவு உயர் பதவியை அடைந்தாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு எல்லோரையும் போல சமமான உரிமைகள் கிடைப்பது இல்லை. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.

எனவே பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பதே அடிப்படையில் தவறான முடிவு.

ஆனால், பெரும்பான்மை அடிப்படையில் மூன்று நீதிபதிகளின் கருத்துப் படி, இப்போதைக்கு EWS ஒதுக்கீடு செல்லும் எனபது தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தரும் செய்தி. எனவே இப்போதைக்கு EWS ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

EWS ஒதுக்கீடு செல்லும் என மூன்று நீதிபதிகள் எந்த அடிப்படையில் சொன்னார்கள் என்பது தான் ஆச்சர்யம்.



ஏற்கனவே சொன்னது போல இந்திய அரசியல் சாசனம் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு கொடுக்க வழி வகுக்கவே இல்லை எனும் போது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் எடுக்க முடியுமா என்கிற புதிய கேள்வி இப்போது எழுகிறது.

எனவே, இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டு அரசியல் சாசன பெஞ்ச் முன் விவாதிக்கப்படும் என்று நான் நினைக்கிறேன்.

அரசியல் சாசன சட்ட விதிகளில் இல்லாத ஒரு விதியை நீதிபதிகள் உருவாக்க முடியுமா? 50% ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக ஒதுக்கீடு கொடுக்க முடியுமா? சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நீதியை மறுக்க முடியுமா? என்பன போன்ற ஆக்கப்பூர்வமான விவாதஙகளை இனி எதிர்பார்க்கலாம்.

1990 களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு அமல் செய்யப்பட்ட உடனே நம்முடைய மிகப்பெரிய போராட்டம் வெற்றி பெற்று விட்டதாக கருதி ஓய்வெடுக்க தொடங்கி விட்டதாக ஒரு உணர்வு மேலிடுகிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீடு எதற்காக தேவை என்பதே புரியவில்லை. EWS ஒதுக்கீடு காரணமாக பாதிக்கப்படும் மக்கள் யார் என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. அரசியல் ரீதியாக தாங்கள் சார்ந்த கட்சியின் நிலைப்பாட்டை மட்டுமே ஆதரித்து வரும் மக்களாக அவர்கள் மாறிப் போயிருக்கும் நிலையில், நம்முடைய முதல் கட்ட நடவடிக்கை இட ஒதுக்கீடு குறித்த சரியான புரிதல்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டியதாக இருக்க வேண்டும். அதற்காக, சமூக நீதிக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

நேற்றைய தினம் மாண்புமிகு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான திரு. ஸ்டாலின் அவர்கள் இந்த தீர்ப்பு குறித்து வெளியிட்ட அறிக்கை கூட அதை தான் சொல்லி இருக்கிறது. 

சமூக ரீதியான விளக்க கூட்டஙகள், அரசியல் ரீதியான காய் நகர்த்தல்கள் ஆகியவற்றுடன் சட்ட ரீதியான போராட்டமும் ஒருங்கிணைந்து தான் கால காலமாக ஒடுக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கான நீதியை பெற்று தர முடியும்.

நேற்றைய தீர்ப்பை எதிர்த்து விரைவில் மேல் முறையீடு செய்யப்படும் என நம்புகிறேன். இதுவரை அரசியல் சாசன பெஞ்ச் அரசியல் சாசனத்திற்கு எதிராக எந்த நிலைப்பாடும் எடுத்தது இல்லை என்பதால் அங்கே இந்த சமூக நீதி போராட்டத்துக்கு சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறேன்.



Monday, October 24, 2022

தீபாவளி கொண்டாட்டம்

ல்லா சிறுவர்களை போலவே எனது பால்யமும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் கலந்தே கழிந்ததால் பண்டிகைகளை பல நேரங்களில் நான் சிறப்பாக எல்லாம் கொண்டாடியது இல்லை.

எனினும், எல்லோரையும் போலவே எனக்கும் தீபாவளி பண்டிகை என்பது கொஞ்சம் சிறப்பு வாய்ந்தது தான்.

எந்த பண்டிகை கொண்டாடாமல் போனாலும், தீபாவளிக்கு எப்படியாவது புது துணி, பட்டாசு, பலகாரம் கிடைத்து விடும். வருஷம் தவறாமல் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றால் அது என்னளவில் தீபாவளி தான்.



உறவுகள் என்று எல்லாம் அப்போது பெரிதாக யாரும் கண்டு கொள்வது இல்லை என்பதால், உறவினர் வீடு விஜயம், கூடி கொண்டாடுதல் போன்றவை எதுவும் இருந்தது இல்லை. ஆனாலும் எப்படியாவது தீபாவளிக்காக புது துணி கடைசி நேரத்திலாவது எடுத்து பண்டிகையை நண்பர்களுடன் கொண்டாடுவது தடைபட்டது இல்லை.

முக்கியமான விஷயம், தீபாவளிக்கு கண்டிப்பாக புதுப்படம் பார்த்தே ஆக வேண்டும் என்பது. தீபாவளி ரிலீஸ் படங்களை தீபாவளி அன்றே பார்க்கும் வழக்கம் அப்போது இருந்தது.

குணா, தளபதி இரண்டும் ஒரே நாளில் பேக் டூ பேக் பார்த்த பரவச நினைவுகள் எல்லாம் இப்போதும் பசுமையாக இருக்கிறது.

வளர்ந்து எப்படியோ தட்டு தடுமாறி படித்து முடித்து வேலைக்கு போக ஆரம்பித்து சுயமாக சம்பாதிக்க தொடங்கிய காலத்தில் மெல்ல மெல்ல இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் குறைந்து போய் விட்டது.

அதிகமாக புத்தகஙகள் படிக்க ஆரம்பித்ததும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். புத்தகம் வாசித்தல், சிந்தித்தல்,  சுயமரியாதை, பகுத்தறிவு போன்றவை இது போன்ற பண்டிகைகள் பற்றி நமக்குள்ளேயே கேள்விகளை எழுப்ப தொடங்கி விடும். அவற்றுக்கான சரியான, நம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கங்கள் கிடைக்கும் வரையும் அந்த கேள்விகள் உறுத்திக் கொண்டே தான் இருக்கும்.

அந்த கேள்விகளுக்கு உரிய பதில்கள் கிடைக்காததாலோ என்னவோ மெல்ல மெல்ல தீபாவளி பண்டிகை மீதான ஆர்வம் எனக்கு குறைய தொடங்கி விட்டது.

அப்படியான கேள்விகள் நமக்கு அமையும் ஆசிரியரை பொறுத்தும் அமையலாம். 

என் பள்ளிக் காலங்களில் தீபாவளி பண்டிகையின் வரலாறு குறித்து என் ஆசிரியர்களில் ஒருவர் சுருக்கமாக சொன்னது இங்கே பலரும் விளக்கமாக இப்போது பல நண்பர்கள் இணையத்தில் விரிவாக எழுதுவதை பார்க்கையில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.

தீபாவளி பண்டிகை வட மாநிலங்களில் சந்தோஷமான பண்டிகையாகவும், தமிழ் நாட்டில் முன்னோர்/நீத்தோர் வழிபாடாகவும் கொண்டாடப்படும் வித்தியாசம் எதனால்? என என் சக மாணவர் ஒருவர் அப்போது கேள்வி எழுப்பினார்.

இது குறித்து எனது ஆசிரியர் சொன்ன காரணங்களில் ஒன்று.. "நரகாசுரன் என சொல்லப்படும் அசுரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்பவர் தென்னாட்டு கடைநிலை மக்கள் என்பதை போன்ற புனைவுகள் தான் புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.



இறைவனின் பிரியத்துக்குரிய உயர் வகுப்பு தேவர்கள் யாகம் செய்வதற்கு நரகாசுரன் இடையூறாக இருப்பதாக கிருஷ்ணரிடம் தேவர்கள் புகார் சொல்ல அவர்களுக்காக நரகாசுரனை பகவான் கிருஷ்ணன் வெற்றி கொள்கிறார். அந்த வெற்றியை கொண்டாடும் பண்டிகையாக வட மாநில மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

அசுரர்கள் என குறிப்பிடப்படும் மக்களாகிய நாம், தோல்வி உற்ற காரணத்தால் நீத்தார் வழிபாடாக முன்னோர் வழிபாடாக இந்த நாளை கொண்டாடுகிறோம். அதனால் தான் தீபாவளி அன்று உச்சந்தலையில் நல்லெண்ணெய் வைத்து குளிப்பது (பெல குளி போல), முன்னோருக்கு படையல் வைப்பது போன்ற சடஙகுகள் நாம் செய்கிறோம். காரணம் இது நம் முன்னோர்கள் இழந்த நாள். அதனால் இதில் நாம் மகிழ்ச்சியாக கொண்டாட எதுவும் இல்லை" என சொல்வார் ஆசிரியர்.

இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் கூட இது என் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் சென்று தங்கிக் கொண்டது. 

எனது ஆசிரியர் அப்போத  சொண்ணதைப் போன்ற கருத்துக்களைக் கொண்ட பல பதிவுகள் இங்கே சமீப காலமாக இணையத்தில் காணக் கிடைக்கிறது. 

நான் ஏற்கனவே சொன்னதை போல, சம்பாதிக்க தொடங்கிய பிறகான பொறுப்புகள், கடமைகள் ஆகியவற்றின் பின்னால் ஓடிக் கொண்டு இருக்கையில் கொண்டாட்டங்கள் குறைந்து போக தொடங்கியதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. 

எந்த குழப்பமும் இல்லாத பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாட எந்த தயக்கமும் வந்தது இல்லை. ஆனால், விடை தெரியாத கேள்விகள் வேறு உள்ளுக்குள் உட்கார்ந்து கொண்டு இருந்ததால் தீபாவளிக்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பதை மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டேன்.

சில வருடங்கள் இப்படி போக, சிவகாசி பட்டாசு ஆலை விபத்து ஒன்று 2000 களின் துவக்கத்தில் நிகழ்ந்து பல குழந்தை தொழிலாளர்கள் உயிரிழந்த செய்திக்கு பின் பட்டாசு வாங்குவது குறைந்து, பண்டிகை ஆர்வமே இல்லாத போது புது துணி எதுக்கு என அதுவும் நின்று, நாம் தோற்ற நிகழ்வுக்கு வாழ்த்து எதற்கு என வாழ்த்து அட்டை அனுப்புவதற்கும் மனமின்றி நிறுத்தி.. சில ஆண்டுகள் இப்படியே கழிந்தது.

ஆனால், வாழ்க்கை ஒரு வட்டம் ஆயிற்றே.

மீண்டும் குடும்பம், புதிய உறவுகள், சம்பாத்தியம், விட்டு போன உறவுகள் என எல்லாம் சேர சேர.. நாமும் ஊருடன் சேர்ந்து வாழ தயார் ஆகி தீபாவளி கொண்டாடும், புது துணி எடுக்கும், குழந்தைக்காக பட்டாசு வாங்கும், இனி பிரிந்து போய் விடாமல் தக்கவைத்து கொள்வதற்காக தேடி தேடி போய் உறவுகளுடன் ஒன்று சேர்ந்து கொண்டாடும் ஒரு பெரும் நிகழ்வாக தீபாவளி என் வாழ்வில் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது.

வாழ்க்கையில் நமது கொள்கைகளை விடவும் மேலானதாக ஆகி விடுகிறது குடும்பத்திற்கான சில சடஙகுகள்.

அப்படி ஒரு சடங்காக, சம்பிரதாயமான நிகழ்வாக, இன்றைக்கும் கழிந்து போய் கொண்டு இருக்கிறது இந்த தீபாவளி. 

இனி என்றைக்கும்.. 


Monday, August 22, 2022

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்

ர்ச்சகர்கள் வழக்கில் இன்று திமுக அரசின் முடிவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து உள்ளது.

பிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்கிற நிலையை மாற்றி, பிராமணர் அல்லாத ஹிந்துக்கள் எல்லோரும் முறையாக வேதாகமம் படித்தால் அர்ச்சகர் ஆகலாம் என்பதை திமுகவின் சட்டம் உறுதி செய்து உள்ளது.

அந்த சட்டத்தை எதிர்த்து பிராமணர்கள் தாக்கல் செய்த வழக்கில் தான் இன்றைக்கு திமுக அரசின் சட்டம் செல்லும் என தீர்ப்பு ஆகி இருக்கிறது.



இந்துக்களாய் ஒன்றிணைவோம் என தேர்தலுக்காக மட்டும் பேசும் பாஜக போல அல்லாமல், உண்மையிலேயே இந்துக்களாக ஒன்றிணைத்து உள்ளது திமுக.

பிராமணர்கள், பிராமணர் அல்லாதோர் என ஹிந்துக்களை இரண்டாக பிரித்து வைத்து பாகுபாடு பார்த்து பதவி கொடுத்த நிலையை மாற்றி எல்லா ஹிந்துக்களும் ஹிந்துக்களே எனும் ஒற்றை புள்ளியில் கொண்டு வந்து எல்லோரையும் சமமாக பாவித்து பதவி கொடுக்க திமுகவின் புதிய சட்டம் வழி செய்கிறது.

ஹிந்துவாக இருந்தும் இறைவனுக்கு சேவை செய்ய முடியவில்லையே என வருந்திய பிராமணர் அல்லாத ஹிந்துக்களுக்கு அந்த வாய்ப்பை அந்த உரிமையை இன்றைக்கு பெற்றுக் கொடுத்து இருக்கிறது திமுக.

இந்துக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டிய பாராட்டத்தக்க செயல் இது என்பதில் சந்தேகம் இல்லை.



நமக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அப்படி நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஏற்படும் உரிமை பிரச்சனைகளில் கூட திமுக பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக நின்று அவர்களுக்கான உரிமை கிடைக்க எப்போதும் போராடும் என்பதற்கு இன்றைய தீர்ப்பு இன்னும் ஒரு சான்று

ஒடுக்கப்பட்டவர்களின் குரல் திமுக 🙏🙏

Printfriendly