Showing posts with label Black Money. Show all posts
Showing posts with label Black Money. Show all posts

Wednesday, November 9, 2016

செல்லா காசுகள்

ன்னைக்கு காலைல முழிச்சதே ஒரு ஆச்சரிய அதிர்ச்சியான சந்தோஷ தகவல் மீது தான். அரை தூக்கத்தில் மொபைலை எடுத்து டிவிட்டரை ஓப்பன் செஞ்சா நேற்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூ நோட்டுக்கள் செல்லாதுன்னு பிரதமர் அறிவீச்சிருக்கிறதாவும் அதை எப்படி எங்கே எப்போது வரை மாற்றலாம்னும் விரிவா நிறைய தகவல்கள். போதாக்குறைக்கு வாட்சப் பூரா அதே மெசேஜ். ஒரு புதிய இந்தியா உதயம் என தலைவர் ரஜினி போட்ட டிவீட் வேற அடிக்கடி டைம்லைனுக்கு வந்து போச்சு. ஓவர் நைட்ல என்ன என்னமோ நடந்திருக்கு. நான் என்னடான்னா நேத்து சாயந்தரத்துல இருந்து எந்த கவலையும் இல்லாம ஊர் சுத்திட்டு இருந்திருக்கேன்.



சரி ஆனது ஆச்சு.. இனி இதை பத்தி விரிவா அலசலாமா?

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் பிரபலமடைந்த ஐடியா தான் இது. 500, 1000 நோட்டெல்லாம் செல்லாதுன்னு திடீர்னு அறிவிச்சா கருப்பு பணமா கணக்கில் காட்டாம பதுக்கி வெச்சவனுக்கெல்லாம் திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி இருக்கும். நேர் வழியில் சம்பாதிச்சு வெச்சிருக்கறவனெல்லாம் அதை பேங்கில் கொண்டு போய் கட்டிடுவான். இது தான் ஐடியா. சமீபத்தில் வந்த பிச்சைக்காரன் படத்தில் கூட இந்த ஐடியாவை காமெடியா சொல்லிருப்பாங்க. இப்போ அது நிதர்சனமாகி இருக்கு.

என்னை பொறுத்தவரை இது மிக மிக அரிதிலும் அரிதான அதிரடி முடிவு. இதுவரை எத்தனையோ பிரதமர்கள் இருந்தும் அவர்களிடத்தில் இந்த ஐடியாவை பலரும் சொல்லி இருந்தும் யாரும் எடுக்க துணியாத முடிவு இது. இந்த ஒரு விஷயத்துக்காகவே மோடியை எவ்வளவு வேணும்னாலும் கொண்டாடலாம். ஆனா இந்த முடிவுக்கு பின்னாடி இன்னும் சில கருப்பான விஷயங்களும் இருக்கு.

அதாவது, 1லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு போலி ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவில் புழக்கத்துக்கு விடப்பட்டு இருக்குன்னும், அதற்கு இந்தியாவை பொருளாதார ரீதியா நசுக்க நினைக்கும் பாகிஸ்தானின் சதியும் காரணம்னும் சில தகவல்கள் பல காலமாகவே சுத்திட்டு இருக்கு. நிதி அமைச்சகம் ஏனோ இது பற்றி பெரிசா எந்த அக்கறையும் காட்டிக்கிடலை. ஏகனாமிக் இண்டெலிஜென்ஸ் தகவல்களின் படி 500, 1000 நோட்டுக்கள் ரிசர்வ் பேங்க் சைடிலிருந்து புழக்கத்தில் விட்ட அளவை விட அதிகமா (கிட்டத்தட்ட ரெண்டு மடங்கு) மக்கள் கிட்டே புழக்கத்தில் இருக்கு. சில மாசங்களுக்கு முன் குறிப்பிட்ட சீரியல் எண் உள்ள 500 ரூ நோட்டெல்லாம் செல்லாதுன்னு வங்கிகளில் ஒரு அறிவிப்பு வெச்சிருந்தாங்க. 500 ரூ நோட்டுன்னாலே எல்லாருமே சந்தேகமா பார்க்கிற அளவுக்கு நிலமை இருந்துச்சு. ஆனால் அதை எல்லாம் கடந்து ஓவரா கள்ள நோட்டு புழக்கத்துக்கு வர்ற வரைக்கும் அரசாங்கம் மெத்தனமா இருந்திருக்கு. நிலைமை கைமீறி போனபின், இந்திய பொருளாதாரத்துக்கே வேட்டு விழும்ன்ற நிலை வந்தபின் பிரதமரே நேரடியா தலையிட்டு இந்த அதிரடி முடிவு எடுத்திருக்கார். இந்த முடிவின் மூலம் இதுவரை இருந்த கையாலாகத்தனமும் மெத்தனமும் நிர்வாகத்திறமையின்மையும் மறைக்கப்பட்டு வெற்றி வீரரா வலம் வருகிறார். என்ன தான் காரண காரியங்களை சொன்னாலும் இது ஒரு அசாத்தியமான துணிச்சலான கம்பீரமான முடிவு என்பதை மறுக்க முடியாது. மோடி அந்த வகையில் பாராட்டுக்குரியவர் தான்.

சரி. இந்த முடிவினால் என்னென்ன மாற்றங்கள் வரும்?

கருப்புப்பணம் ஊழல் லஞ்சம் எல்லாம் ஒழிஞ்சிருமான்னா நிச்சயமா இல்லை. கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் முடிவு தான் அரசின் குறிக்கோள். ஆனா அதன் பிற பலா பலன்களா (ஏற்கனவே பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும்) கருப்புப்பணம் ஓரளவுக்கு வெளியே வரும்.

இன்னைக்கு காலையில் கூட செக்போஸ்டில் ஒரு டிரக் டிரைவர் கடை கடையா ஏறி 1000 ரூ நோட்டுகளுக்கு சில்லறை கேட்டுட்டு இருந்தாரு. செக்போஸ்டில் கொடுக்கவேண்டிய லஞ்சத்தை இப்போ 100 ரூ நோட்டா மாத்தி தர சொல்லி இருக்காங்களாம். ஆக மொத்தம் லஞ்சமோ ஊழலோ ஒழியாது. மோடு ஆஃப் ஆபரேஷன் வேணும்னா மாறும்.


நிச்சயமா பெரிய தொழிலதிபர்கள் மிக பெரிய அரசியல்வாதிகள் இதில் சிக்க மாட்டார்கள். ஏன்னா யாரும் அவ்வளவு தொகையை கேஷா பதுக்கி வைக்க மாட்டாங்க. மிடில் கிளாஸ், சம்பளதாரர்கள், தினசரி செலவு செய்வோர், மளிகை கடை, நகைக்கடை, அடமான கடை நடத்துவோர், கந்துவட்டி / சீட்டு / வட்டிக்கு விடுவோர், குறு சிறு தொழில் முனைவோர், ரியல் எஸ்டேட், வீடு மனை விற்பனை செய்வோர் / வாங்குவோர், திருமணம் / பத்திரபதிவு மாதிரியான காரியங்களுக்காக பணம் சேர்த்து வைத்திருப்போர், சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள், வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், தினசரி கூலிக்கு ஆட்கள் பிடித்து தரும் ஏஜெண்டுகள் போன்றோர், லஞ்சம் வாங்கி சேர்த்து வைத்திருக்கும் (கீழ் நிலை / இடை நிலை) அரசு ஊழியர்கள், காவலர்கள், வட்டார போக்குவரத்து / வணிகவரி ஊழியர்கள், லோக்கல் அரசியல்வாதிகள், அரசு கான்டிராக்டர்கள்..  இந்த மாதிரி நபர்களிடம் தான் எப்போதுமே அதிக அளவில் 500 1000 ரூபாய் நோட்டுக்கள் இருக்கும்.

இப்போது நேற்றிரவில் இருந்து செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் அடுத்த ரெண்டொரு நாட்களுக்கு மேலே சொன்னவர்கள் பாடு தான் திண்டாட்டம். அதற்காக அவர்கள் எல்லோருமே தவறான முறையில் பணம் சேர்த்ததாக அர்த்தம் அல்ல. தினசரி பெரிய அளவில் செலவு செய்யக்கூடியவர்கள் அவர்கள். அதில் பலர் நேர் வழியிலும் சம்பாதித்து இருக்கலாம். ஆனா திடீர் என இரண்டு நாட்களுக்கு பணம் செல்லாது, வங்கியும் இல்லை, மாற்றவும் முடியாது என்றால் எல்லா வேலைகளும் நின்று போய் விடும். திருமணம் போன்றவை நின்றால் வாழ்க்கையே போன மாதிரி தானே? அந்த மாதிரியான அதீத பாதிப்புக்களை பற்றி எல்லாம் அரசு சிந்தித்ததாக தெரியவில்லை.

கையில் இருக்கும் 500 1000 நேர் வழியில் சம்பாதித்தது என்றாலும் கூட அதை மாற்ற இரண்டு நாள் காத்திருக்கணும். அதுவரை டெபிட் கார்டு கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யலாம். ஆனால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்தணும். மேலும் பேங்க் அக்கவுண்டில் பேலன்சும் இருக்கணும். நாம் ஏதோ ஒரு செலவுக்காக மொத்தமாக துடைத்து எடுத்து வீட்டில் வெச்சிருப்போம். அவ்வளவு தான். பணம் இருந்தும் உபயோகப்படுத்த முடியாத நிலை தான்.

அரசு 500 1000 செல்லாது என முடிவெடுப்பதற்கு முன்பாக அதற்கான மாற்று ஏற்பாடுகள் பற்றி சிந்திச்சிருக்கணும். கார்டு மூலம் செய்யும் பரிமாற்றங்களுக்கு கட்டணம் இல்லைன்னு அறிவிச்சிருக்கணும். எல்லா தனி நபருக்கும் வங்கி கணக்கு இருக்கான்னு யோசிச்சிருக்கணும். எதையும் செயலை.

நேர்வழியில் சம்பாதிச்சவங்க எல்லாம் ரெண்டு நாள் கழிச்சு அவங்கவங்க கிட்டே இருக்கிற 500 1000 நோட்டுக்களை பேங்கில் அவங்க அக்கவுண்டில் கட்டிட்டு அப்புறமா ஏ.டி.எம் மூலமா எடுத்துக்கலாம். எந்த பிரச்சனையும் இல்லை. அதிக அளவில் பணம் கையிருப்பில் இருந்தா அது எதனாலன்னு ஒரு விளக்கம் எழுதி கொடுக்கணும்னு அரசு சொல்லி இருக்கு. இதெல்லாம் ஓகே தான். பெரிய பிரச்சனை இல்லை.

நேர் வழி அல்லாமல் கள்ளத்தனமாக சம்பாதித்த பணம் பதுக்கி வெச்சிருக்கறவங்க தான் சிக்குவாங்க. பதுக்கி வெச்சிருக்கிற பணத்தை பேங்கில் கட்டவும் முடியாம (கணக்கும் காரணமும் பணம் வந்த வழியும் கேப்பாங்களே?) செலவு செய்யவும் முடியாம (யாரும் வாங்க மாட்டாங்க) பதுக்கி வைக்கவும் முடியாம (அதான் செல்லாதே?) மொத்தத்தில் ஒரு பண்டில் பேப்பரை பார்க்கிற மாதிரி பார்த்துட்டு இருக்க வேண்டியது தான். 

ஜூவல்லரி, மளிகைக்கடை, நகை அடமான கடை போன்றோர் தான் அதிக அளவில் கணக்கில் காட்டாத பணத்தை எப்போதுமே கைவசம் வைத்திருப்பார்கள்.

ரியல் எஸ்டேட், கன்ஷ்டிரக்ஷன் போன்ற துறையினரும் பணத்தை அதிக அளவில் இருப்பு வெச்சிருப்பாங்க ஆனா அதை கணக்கில் காட்டிட முடியும். அதற்கான சோர்ஸ் தெளிவா இருக்கும்.

பார்ப்போம் இதுவரை எத்தனை பேரு அதிர்ச்சியில் என்னென்ன ஆகியிருக்காங்கன்னு.

மத்தபடி கட்டுக்கட்டா பணத்தை சாக்கு மூட்டையில் கட்டி தோட்டத்தில் பதுக்கி வெக்கிற அளவுக்கு கருப்புப்பணம் வெச்சிருக்கிற ஆட்களுக்கு தான் கவலை அதிகமா இருக்கும். நம்மை போல அன்னாடம் காய்ச்சிகளுக்கு அடுத்த ரெண்டு நாள் எப்படி ஒட்டுறதுன்ற கவலை மட்டும் தான் இருக்கும்.

இந்த திட்டத்துக்கான அஸ்திவார பணிகள் 2011 ஆம் வருஷமே தொடங்கிச்சு. ஜீரோ பேலன்ஸ் பேங்க் அக்கவுண்ட் அறிமுகம் செய்து (நோ பிரில் அக்கவுண்ட்) எல்லோரையும் வங்கி கணக்கு எடுக்க வெச்சு, எல்லோருக்கும் டெபிட் கார்டு கொடுத்து நாடு முழுதும் ஏ டி எம் எண்ணிக்கையை அதிகரிச்சு, அரசு துறைகளில் எலக்டிரானிக் பேமெண்ட் சிஸ்டத்தை உருவாக்கி எல்லாருமே 100% உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி முடிக்க இத்தனை காலம் ஆகி இருக்கு.

இதன் பின் விளைவுகள் என்ன என்ன ஆகும்ன்றது, எத்தனை பேர் அளவுக்கு அதிகமா கருப்பு பணம் பதுக்கி வெச்சு இப்போ திவால் ஆகி இருக்காங்கன்ற தகவல்கள் வர தொடங்கினப்புறம் தான் தெளிவா அலச முடியும். லஞ்சமா வாங்கி வீட்டில் பதுக்கி வெச்சிருக்கிற அரசு ஊழியர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன். மத்த பெரும் கருப்புபணங்கள் எல்லாம் ஆஸ்தியாவோ சொத்தாவோ வீடாவோ எப்பவோ வாங்கிருப்பாங்க. யாரும் கேஷா பதுக்கி வெச்சிருக்க மாட்டாங்க. ஆக பாதிப்பு என்பது மிடில் கிளாஸ் வர்க்கத்தில் தவறு செய்தவர்களுக்கு மட்டும் தான்.

கருப்பு பணம் இனி மேல் வராமல் இருக்கவும் லஞ்சம் ஊழல் சுத்தமா ஒழியவும் ஒரே வழி தான் இருக்கு.

எல்லா பரிமார்ரங்களும் வங்கி மூலமா இருக்கணும். 10000 ரூபாய்க்கு மேல் யார் கிட்டேயும் கேஷா இருக்கக்கூடாது.


இந்த ரெண்டு கட்டுபாடு இருந்தாலே 90% கருப்புபணம் வெளியே வந்திரும். பார்ப்போம் அரசு என்ன செய்யபோகுதுன்னு. 

*********

தொடர்புடைய பதிவுகள்:
  1. லஞ்சம் ஊழல் கருப்புப்பணம் – அலசல் – பாகம் 1
  2. லஞ்சம் ஊழல் கருப்புப்பணம் – அலசல் – பாகம் 2 

Thursday, August 9, 2012

லஞ்சம், ஊழல், கறுப்புப்பணம் – அலசல் – 2


டந்த பதிவில் லஞ்சம், ஊழல் பற்றி பார்த்தோம், அடுத்ததாக இந்த பதிவில் வருவது கறுப்புப்பணம்.
 
என் சின்ன வயசு காலங்களில் நான் கறுப்புப்பணம் என்பது கறுப்பு கலர்ல இருக்கும்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். அது சாமானிய மக்கள் கிட்டே எல்லாம் கறுப்பு பணம் இருக்காது, பெரிய பெரிய பணக்காரங்க கிட்டே மட்டும் தான் இருக்கும்னு சொல்ல கேட்டிருக்கேன். அதனால் எப்படியாவது பெரிய பணக்காரனாகி நானும் கறுப்பு பணத்தை வாங்கிரணும்னு எல்லாம் நினைச்சிருக்கேன்!

ஆனா அது பணக்காரங்க சாமானியப்பட்டவங்கன்ற பேதமில்லாம எல்லாருகிட்டேயும், உங்ககிட்டேயும், என்கிட்டேயும் தினசரி புழங்கிட்டு தான் இருக்குன்றதையும், நாமளே கறுப்புபண டீலிங் நிறைய தினசரி செஞ்சிட்டு இருக்கோம்ன்றதையும் பின்னாடி தான் புரிஞ்சுகிட்டேன்.

கறுப்புப்பணம்ங்கறது கணக்கில் காட்டப்படாத பணம். 

அதென்ன கணக்கில் காட்டுறது, காட்டாதது?

இது கொஞ்சம் பெரிய சப்ஜெக்ட், இருந்தாலும் நான் சுருக்கமா சொல்லமுடியுமான்னு பார்க்கிறேன்!





நாம வாங்குற சம்பளத்துக்கு அரசாங்கத்துக்கு வரி கட்டணும்! எனக்கு வருஷத்துக்கு 4 லட்சம் வருமானமிருந்தா, அதில் 1.80 லட்சம் (நிலையான வரிவிலக்கு) போக மிச்ச பணத்துக்கு 10% வரி கட்டணும்! அதாவது 22,000 ரூபாய் வரி கட்டணும். நாம அவனவன் கிட்டே ஏச்சும் பேச்சும் வாங்கி வாயை கட்டி வயித்தை கட்டி சம்பாதிச்ச பணத்தில் 22,000 நம்மளால அனுபவிக்க முடியாம போயிருதேன்னு பலருக்கும் ஆதங்கம் இருக்கும்!

ஆனா, நான் என் வருமானமே 2.50 லட்சம் தான்னு சொல்லிட்டா.. வெறும் 7000 வரி கட்டினா போதுமில்லே? அப்படின்னா, என் 4 லட்ச ரூபாய் வருமானத்தில் 1.50 லட்சம் ரூபாயை கணக்கில் காட்டாமல் விட்டால், அது தான் என் கறுப்புப்பணம்.

இது, சினிமா துறையில் பெரிய அளவில் நடக்குது. அதுக்கு அடுத்தபடியா, தொழில் துறையில் அதிக அளவில் நடக்குதுன்னு சொல்றாங்க! வருவாயை குறைச்சு காண்பிக்கிறது, கணக்கில் வராமல் செலவு செய்யுறது இரண்டுமே கறுப்பு பண  பரிவர்த்தனை தான்! அவங்க மட்டும் தான் கறுப்புபண பரிவரித்தனை செய்யுறாங்கன்னு அர்த்தமில்லை! அது பெரிய தொகையா இருக்கிறதால் பெரிசா பேசப்படுதே தவிர, நாம ஒவ்வொருத்தருமே கறுப்புப்பண பரிவர்த்தனை தினசரி செஞ்சிட்டு தான் இருக்கோம்!
  •   பில் போடாம நாம வாங்குற பொருள் ஒவ்வொண்ணுக்கும் அரசுக்கு முறைய வரி போகாது. அதனால் அப்படியான பரிவர்த்தனைகள் கறுப்புபண பரிவர்த்தனை ஆகும்.
  •   ஒரு பொருளின் உண்மையான விலையை விட கூடுதல் விலை போட்டு பில் வாங்குறது. உண்மையான விலையை கடைக்காரரிடம் கொடுத்துட்டு, மிச்சத்தை நமக்குன்னு ஆட்டைய போடுறது ஊழல். இது மூலமா நமக்கு கிடைக்கும் வருவாய் கறுப்புப்பணம் தான்.
  •   சினிமா துறையில் வருமான வரிக்கான தொகையை மட்டும் அக்ரிமெண்டில் போட்டு, செக் மூலம் பணம் வாங்கிட்டு, மீதி தொகையை பணமா வாங்கி அதுக்கு அரசுக்கு வரி கட்டாம விடுறது!
  •   தொழில்துறையில், கூடுதலா செலவாகும் தொகக (லஞ்சம், கமிஷன் போன்றவை), கணக்கில் வரவு வைக்காத விற்பனை, வரி கட்டப்படாத வருமானம் எல்லாமே கறுப்புப்பண பரிவர்த்தனை தான்!
  •   சொந்த நிலம் வாங்கும் ஒவ்வொருவருமே விதிவிலக்கில்லாமல் கறுப்புப்பண பரிவர்த்தனை தான் செய்கிறார்கள். நிலத்தின் விலை 20 லட்சம் என்றால், அரசுக்கு பத்திரப்பதிவு செய்து வரி கட்டுவது 8 லட்சம் என்கிற தொகைக்காக இருக்கும். (அதாவது அரசின் வழிகாட்டி மதிப்பை ஒட்டிய தொகை. ஆனால் சந்தை விலை என்பது அதை விட பன்மடங்கு அதிகம் இருக்கும். இதனால் அரசுக்கு ஏற்படும் நஷ்டம் என்பது தனி கதை. விரிவாக அதை இன்னொரு முறை பார்க்கலாம்) இப்படி முத்திரை தீர்வையை குறைவாக கட்டுவதற்காக. குறைந்த தொகைக்கு பதிவு செய்வது போக மிச்சமான 12 லட்சம் ரூபாய் பரிவர்த்தனை கறுப்புப்பண பரிவர்த்தனை ஆகும்! வாங்குபவர் அதை எந்த கணக்கிலும் வரவு வைக்க முடியாது. அது மற்றுமொரு கறுப்பு பண பரிவர்த்தனைக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும்.
இப்படி எங்கெங்கும் எல்லோரிடத்திலும் வெவ்வேறு வகைகளில், வெவ்வேறு தொகைகளில் கறுப்புப்பணம் புழங்கிட்டுதான் இருக்கு!

அரசை பொறுத்தவரை, லஞ்சம் ஊழல் மூலம் வருகின்ற எல்லா வருவாயும் கறுப்புப்பணம் தான். அதை எந்த அக்கவுண்டிலும் வைக்க முடியாது!

சுருக்கமா சொல்லப்போனா, நியாயமான வழியில் வராத எல்லா வருவாயும், முறையான வழியில் செய்யப்படாத எல்லா செலவுகளின் தொகையும் கறுப்புப்பணம் தான்!

சரி இந்த கறுப்புப்பணத்தை அவர்கள் என்ன தான் செய்கிறார்கள்?

1.  மற்றொரு கறுப்புப்பண பரிவர்த்தனையில் அதை செலவு செய்யணும்.
2.  அரசுக்கு தெரியாமல் அதை பேங்கில் போட்டு எதிர்காலத்துக்காக எடுத்து வைக்கணும்.

இந்தியாவிலுள்ள எல்லா வங்கிகளும் அவங்ககிட்டே இருக்கிற கணக்கு விவரங்களை ரிசர்வ் பேங்க் மூலமா அரசிடம் பகிர்ந்துகிட்டு இருக்கு. அதனால் தான், நீங்க வருமான வரி கட்டுறவரா இருந்தா, நீங்க தாக்கல் செய்த ரிட்டர்னில் உள்ள விவரங்களும், அரசிடம் உள்ள விவரங்களும் மேட்ச் ஆகுதான்னு பார்த்து, அப்படி மேட்ச் ஆகாத ஆளுங்களை ரெயிடு விட்டு ஆவணங்களை அள்ளிட்டு போயி கேஸ் போட்டு அந்த பணத்தையோ, பணத்துக்கான வரியையோ அரசு வசூலிச்சிருது! இது எப்படி சாத்தியம்னு கேக்குறீங்களா?

இப்போ தான் எல்லாருமே, பந்தாவுக்காகவாவது பான் கார்டு வாங்கி வெச்சிருக்காங்களே. அது மூலமா தான். பான் கார்டுங்கறது வருமான வரி கட்டுறவங்களுக்கான நிரந்தர கணக்கு எண். ஆனா வரி கட்டாதவங்க, வரி லிமிட்டுக்குள்ளே வராதவங்க கூட இப்போ பான் கார்டு வாங்கி வெச்சிருக்காங்க.

இன்னொரு பக்கம், எல்லாவிதமான பண பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு கேக்கிறாங்க. வண்டி வாங்கினா, வீடு வாங்கினா, பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணினா, ஷேர் டிரேடிங் பண்ணினா..ன்னு கிட்டத்தட்ட எல்லாவிதமான பண பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு அவசியமா இருக்கு. இதை வெச்சு, ஒரு பான் கார்டு வெச்சிருக்கிற ஆள், என்ன எல்லாம் பண பரிவர்த்தனைகள் செஞ்சிருக்கான்னு ஈசியா டிரேஸ் பண்ண முடியும். அதை வருமான வரி ரிட்டர்னுடன் ஒப்பிட்டு பார்த்தாலே, கணக்கில் வராத முக்கியமான சொத்துக்களை அடையாளம் கண்டு பிடிச்சிரலாம். அப்படியான சொத்துக்களை வாங்குறதுக்காக எப்படி எந்த வழியில் பணம் வந்ததுன்னு அவனை ரெயிடு விட்டு தெரிஞ்சுக்கலாம். அந்த் கறுப்புபணத்தை சீஸ் பண்றதோ, அல்லது அந்த கறுப்புப்பணம் மூலமா வாங்கின சொத்துக்களை சீஸ் பண்றதோ, அரசின் முடிவு! கூடுதலா ஜெயில் தண்டனை, அபராதம், வரி, ஜப்தின்னு என்ன வேணும்னாலும் அரசு செய்யலாம்.(நீங்க பேங்க் மூலமா செக், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு செய்யுற பரிவர்த்தனைகளளயும், பான் கார்டு காட்டி செய்யுற பரிவர்த்தனை விவரங்களையும் தவறாம உங்க வருமான வரி ரிட்டர்னில் காட்டிட்டீங்கன்னா தப்பிச்சுக்கலாம்!)
இத்தனை சட்ட வழிகள் இருந்தும் கறுப்புப்பணத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியலை! காரணம், இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஒவ்வொருத்தரையும் அவங்க சொத்து கணக்கை காட்ட சொல்லி கட்டாயப்படுத்தமுடியாது. அதனால் தான் வரி தாக்கல் கூட நாம சுயமா முடிவெடுத்து, நாமளா ஒரு கணக்கு போட்டு அதுக்கான வரியை மட்டும் தான் தாக்கல் செஞ்சிட்டு இருக்கோம்.

கறுப்புப்பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வெச்சிருக்காங்கன்னும், அதன் மதிப்பு கிட்டத்தட்ட 13லட்சம் கோடின்னும் (அதான் கணக்கிலேயே காட்டாத பணமாச்சே? இவங்க எப்படி அதை கணக்கு போட்டாங்கன்னு எனக்கு ரொம்ப நாளா கன்பீசன் இருக்கு!) அதை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவந்தா, நிறைய நல்ல திட்டங்களை நிறைவேற்றலாம்னும் அரசு முடிவு பண்ணி இப்போ கிட்டத்தட்ட 32 நாடுகள் கிட்டே கறுப்புப்பண விவரங்களை கேட்டு ஒப்பந்தம் போட்டு அதை மீட்கவும், அதில் சம்மந்தப்பட்டவங்க மேல நடவடிக்கை எடுக்கவும், அவங்க சொத்துக்களை பறிமுதல் பண்ணவும் முயற்சிகள் நடந்துட்டு இருக்கு. ஆனா அதில் பல செல்வாக்கான நபர்கள் பாதிக்கப்படுவாங்க(!)ன்றதால நடவடிக்கை மந்தமா போயிட்டு இருக்கு. 

ஏதோ சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு போட்டதால் நடவடிக்கை எடுத்துட்டு இருக்கிறாங்களே தவிர, ஆக்கப்பூர்வமாவோ ஆர்வமாவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுறதா தெரியலை!

சரி, இந்த கறுப்பு பண பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்தவே முடியாதா?

ஏன் முடியாது? ரொம்ப ரொம்ப சிம்பிளா கட்டுப்படுத்தலாம்! 

  1. எல்லாருக்கும் (ஒவ்வொரு தனிநபருக்கும்) ஜீரோ பேலன்சில் ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி, டெபிட் கார்டு கொடுங்க
  2. பண பரிவர்த்தனைக்கான வரம்பை ரூ.10,000/- குறைங்க
  3. கூடுமான வரைக்கும் எல்லா பரிவர்த்தனைக்கும் டெபிட் கார்டு, செக் மூலமாவே பண்ண சொல்லுங்க! (டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணத்தை ரத்து பண்றதும் முக்கியம்)
இதெல்லாம் செஞ்சாலே கிட்டத்தட்ட, கறுப்புப்பணத்தை 90% கட்டுப்படுத்திரலாம். அதாவது எல்லா பண பரிவர்த்தனையும் வங்கி மூலமா மட்டும் தான் நடக்கும். பணமா 10,000 க்கு மேல் பரிவர்த்தனை செய்ய முடியாதுன்ற பட்சத்தில் எல்லாமே கணக்கில் வந்திடும்.

இப்போ தான் அரசு இதுக்கான நடவடிக்கை எடுத்து, எந்தெந்தெந்த பரிவரத்தனைகளையெல்லாம் வங்கிமூலம் செய்யமுடியுமோ (கரண்ட் பில், முத்திரை தாள், வருமான வரி, விற்பனை வரி, டிக்கெட் புக்கிங். ) அதையெல்லாம் ஆன்லைனுக்கு மாற்றிட்டு இருக்காங்க. இன்னும் ஒரு 4 வருஷத்துக்குள், கிட்டத்தட்ட எல்லா பரிவர்த்தனைகளும் எலக்டிரானிக் மயமாக்கப்பட்டிருச்சுன்னா, கறுப்புப்பணம் கட்டுக்குள்ள வந்திரும். எல்லா மாநில அரசும் தன் துறைகளை நவீனமயமாக்கணும்!

இதையெல்லாம் முறையா செஞ்சா கறுப்புப்பணத்தை கட்டுப்படுத்தறது ஒண்ணும் பெரிய விஷ்யம் இல்லை!

Printfriendly