Showing posts with label High Court. Show all posts
Showing posts with label High Court. Show all posts

Wednesday, May 13, 2015

ஜெ விடுதலை தீர்ப்பு - அலசல்

ரு வழியா நீதிபதி குமாரசாமி தன் கடமையை முடிச்சிட்டாரேன்னு நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா தீர்ப்பு வந்தப்பறம் தான் ரொம்ப பிசியா இருக்க வேண்டியதாச்சு. அந்த அளவுக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை கொடுத்திருக்காரு.

தீர்ப்பை பத்தி நிறைய அரசியல் நோக்கர்கள், சட்ட வல்லுனர்கள் எல்லாம் விரிவா அக்கு வேறு ஆணிவேறுனு அலசி ஆராய்ஞ்சு எழுதிட்டதால் நான் எழுத அவசியம் இல்லைன்னு நினைச்சிட்டிருக்கும்போது என் நண்பர் ஒருவர், நிறைய தகவல்கள் படிச்சேன்.. ரொம்ப கொழப்பமா இருக்கு. எல்லாத்தையும் தொகுத்து சிம்பிளா ரெண்டே பாராவில் சொல்லுங்கஜின்னு கோரிக்கை மனு கொடுத்தாரு. ரெண்டு பாராவிலா? பார்ப்போம்



ஒட்டுமொத்தமாக எல்லா குற்றச்சாட்டிலிருந்தும் விடுதலை – இதை நோக்கி தான் இந்த தீர்ப்பு (download here) கட்டமைக்கப்பட்டு இருக்கு. அதை நியாயப்படுத்த நிறைய சிக்கல்களை நீதிபதி குமாரசாமி அவர்கள் கடக்க வேண்டி இருக்கு. அது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல.


நீதிபதி குன்ஹா தன்னுடைய தீர்ப்பை விரிவா 1136 பக்கத்துல சொல்லிட்டாதால அதை வரிக்கு வரி உடைச்சிட்டிருக்கிறது வீண் வேலைன்னு குமாரசாமி அவர்களுக்கு தெரியாதா என்ன? அதனால் சுருக்கமா ஒரு வழி செஞ்சாரு. அதாவது மறு மதிப்பீடு.

மறு மதிப்பீட்டுக்காக 4 ஆடிட்டர்களை வெச்சுக்கிட்டாரு. (அந்த ஆடிட்டர்களை யாரு ஏற்பாடு செஞ்சு கொடுத்தாங்க? யார் அந்த ஆடிட்டர்கள்? சட்டப்படி அரசின் கம்ட்றோளர் & ஆடிட்டர் ஜெனரல் ஆபீஸ்லருந்து தான ஆடிட்டர்களை ஏற்பாடு செய்யணும்? மறு மதிப்பீட்டுக்கு எஞ்சினியர்கள் தேவையில்லையா?னுல்லாம் குதர்க்கமா கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணாம மேல படிங்க!)

அந்த ஆடிட்டர்களின் மறு மதிப்பீட்டில் ஆச்சரியமான ரிசல்ட் வந்துச்சு. அதாவது எல்லா சொத்து மதிப்பும் குறைஞ்சுது. எல்லா வருமானமும் அதிகரிச்சுது. அப்படியாக சொத்துக்கும் வருமானத்துக்கும் இடையிலான வித்தியாசம் 8.12% ஆச்சு. அதனால் ஒட்டுமொத்த விடுதலை. குன்ஹா சொன்ன மத்த எல்லா விஷயங்களையும் தூக்கி அக்கடான்னு எறிஞ்சிட்டு இந்த ஒரே பாயிண்டில் விடுதலை செஞ்சுட்டாரேன்னு எனக்கு கூட சந்தோஷமா இருந்துச்சு.

மறுநாளே மொத்த மீடியாவும் தீர்ப்பை கிழி கிழின்னு கிழிக்குது. கூட்டுனது தப்புன்னு.

முதலில் எப்படி இந்த வித்தியாசம் குறைஞ்சுது?

சொத்துக்களின் மதிப்பை குறைச்சதுக்கு அவர் சொன்ன காரணம், பொதுப்பணி துறை மதிப்பீடு தவறு. எஞ்சினியர்களின் வேலுவேஷனை எடுத்துக்க முடியாது. முறைகேடு பணத்திலிருந்து தான் ரினோவேஷன் பண்ணினாங்கன்னு சொன்னாலும் எந்த முறைகேட்டில் எவ்வளவு பணத்தை எடுத்து எந்த கட்டிடத்தில் எந்த போர்ஷனை ரினாவேட் பண்ணினாங்கன்னு தெளிவா நிரூபிக்கலை அது இதுன்னு பட்டாசு கிளப்பிருக்காரு. எப்படியோ சொத்து மதிப்பை ஒரு வழியா 37 கோடிக்கு கொண்டு வந்துட்டாரு. இப்ப பிரச்சனை வருமானத்தை அந்த அளவுக்கு ஏத்தணும். அட்லீஸ்ட் 37 கோடியில் 10% போனா 33.30 கோடியாவது வருமானம் காட்டினா தான் விடுவிக்க முடியும். இருப்பதோ 9 கோடி வருமானம். நான் என்ன செய்வேன்னெல்லாம் மலைச்சு நிக்காம விறுவிறுன்னு கணக்கு போட்டிருக்காரு.

ஜெ. வாங்கிய கடனை எல்லாம் வருமானமா காட்டி இருக்கார். கடன் எந்த அக்கவுண்டிங் ஸ்டாண்டார்டு படியும் வருமானமா வராது. ஏன்னா அது திருப்பி தரவேண்டிய ஒன்று. ஜெ. வாங்கிய கடன்கள் பல வகை. வங்கிகள், தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து கடன்கள் வாங்கி இருக்கார். அவற்றை எல்லாம் பக்கம் 851 இல் பட்டியலிட்டுட்டு அதிலிருந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து வாங்கிய கடனை மட்டும் வருமானமாக கணக்கில் எடுத்திருக்கார். அதன் படி அந்த கடன்களை எல்லாம் பக்கம் 852 இல் பட்டியலிட்டு அதன் கூட்டுத்தொகை என 24,17,31,274 ரூபாய்னு சொல்லிருக்கார். அதில் செலுத்திய கடன் போக நிலுவை தொகையான 18,17,46,000 வருமான கணக்கில் எடுத்துக்கிட்டார். இதனுடன் திராட்சை தோட்டம் ரூ.46,71,600, அன்பளிப்பு (!) ரூ. 1.5 கோடி,  சசி எண்டர்பிரைசஸ் வருமானம் 25 லட்சம், நமது எம்ஜிஆர் வருமானம் 4 கோடி, சூப்பர் டூப்பர் டிவி வருமானம் 1 கோடி, வாடகை வருமானம் 3,22,000, இதர வருமானங்கள் 9,34,26,054 எல்லாம் சேர்த்து மொத்த வருமானம் 34,76,65,654 ன்னு ஒரு வழியா கொண்டு வந்து சேர்த்துட்டாரு.


ஆக சொத்துக்கும் வருமானத்துக்கும் இடையிலான வித்தியாசம் (37,59,02,466 – 34,76,65,654) ரூ 2,82,36,812 ன்னு சொல்லி இது ரொம்ப கம்மிதானேன்னு நியாயஞ்சொல்லி விடுதலை செஞ்சிட்டாரு.

அதுவும் எப்படி?

1977 ஆம் வருஷம் கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி & மத்திய பிரதேச அரசு இடையிலான வழக்கில் ஒரு தீர்ப்பு. அதன்படி, வருமானத்துக்கு அதிகமான சொத்து என்பது மொத்த வருமானத்தில் 10% க்குள் இருந்தால் அது குற்றமில்லை. அதாவது எனக்கு வருசத்துக்கு 5 லட்சம் சம்பளம்னா, நான் 50 ஆயிரம் வரை முறைகேடா சொத்து சேர்த்துக்கலாம்!

ஆனா 1988 ஆம் வருஷம் மத்திய அரசு பினாமி பரிவரத்தனைகள் தடை சட்டம் 1988, ஊழல் எதிர்ப்பு & தடை சட்டம் 1988 னு ரெண்டு சட்டங்களை போட்டு ஊழல் வழக்குகளை மிக கடுமை ஆக்கிட்டாங்க. அந்த சட்டங்கள் அடிப்படையில் 1990-2014 வரை நிறைய தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தந்திருக்கு. அதன்படி, அரசு ஊழியர் ஒருவர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினா கூட கைது தான். நீங்க கூட நிறைய செய்திகள் பார்த்திருப்பீங்க. லஞ்சம் வாங்கிய மின் வாரிய என்ஜீனியர் கைதுன்னு நேத்து கூட செய்தி இருந்துது.


ஆனா இந்த லேட்டஸ்ட் உத்தரவுகள் எதையும் கண்டுக்காம, 1977 ஆம் வருஷ தீர்ப்பை அடிப்படையா வெச்சு 10% க்குள் தான் முறைகேடு இருக்குனு விடுதலை செஞ்சிருக்காரு. 

இப்ப அதில் தான் சிக்கலே. அவர் கொடுத்திருக்கும் வங்கி கணக்கு பட்டியலை கூட்டினால் மொத்தம் 10,67,31,274 தான் வருது. அதாவது குமாரசாமி சொல்லி இருக்கும் 24,17,31,274 க்கு பதிலா 10,67,31,274 தான் சரியான கடன் தொகை. கரெக்டா மிச்ச சொச்சம் இல்லாம சுகுர்ரா 13.50 கோடி வித்தியாசம். அதாவது இந்தியன் வங்கியிலிருந்து ஜெயா பப்ளிகேஷனுக்கு வாங்கின 1.5 கோ ியை 15 கோடின்னு கணக்கு செஞ்சிருக்கணும். அதான் சிக்கல்.


இப்ப திருத்திய மதிப்பீடு படி மொத்த வருமானம் 21,26,65,654 தான். இதன் படி சொத்து மதிப்புக்கும் வருமானத்துக்குமிடையிலான வித்தியாசம் (37,59,02,466 – 21,26,65,654) ரூ 16,32,36,812. இது வருமானத்தில் 76.76%. ஆக விடுதலை தவறு.

இதை திருத்தனும்னா, கடன் 1.5 கோடி தான்னு சொன்னா விடுதலை தீர்ப்பு தவறாகிடும். மாறா 15 கோடி கடன்னு காட்டினா அதுக்கான வங்கி ஆவணங்களை கொடுக்கணும். ரெண்டுமே நடக்காத காரியம். இப்போதைக்கு தீர்ப்பை திருத்தறது தான் ஒரே வழி.

இதான் எல்லோரும் சொல்லுவது.

ஆனா சில நண்பர்கள் பக்கம் 851 இல் சொல்லி இருக்கும் கடன்களையும் சேர்த்தினால் 26 கோடி வருது. அதில் நீதிபதி 24 கோடி தான் கணக்கில் எடுத்திருக்காருன்னு வாதாடுறாங்க. ஆனா நீதிபதி தெளிவாவே 851 ஆம் பக்கத்தில் உள்ள கடன்களை நான் கணக்கில் எடுக்கலைன்னு சொல்லிருக்காரு. மேலும் அந்த கடன்கள் பற்றி சொல்லும்போதுThe following are loans availed from Accused and firms and companies” னு தான் சொல்லிருக்காரு. அதாவது குற்றவாளிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்கள். குற்றவாளிகள் வாங்கிய கடன் அல்ல. loans availed by Accused அல்ல. அதனால் அதை எல்லாம் அவர் கணக்கில் எடுத்துக்கலை.


திராட்சை தோட்ட வருமானம், நமது எம்ஜிஆர் வருமானம் எல்லாத்தையும் கணக்கிலெடுத்த நீதிபதி, அன்பளிப்பையும் வருமானம்னு கணக்கிலெடுத்திருக்கார். அரசு உயர் பதவியில் இருக்கும்போது ரூ. 5000 க்கு அதிகமா வரும் அன்பளிப்புக்களை சட்டப்படி அரசு கருவூலத்தில் கொடுத்திருக்கணும். ஆனா அதை செய்யாத குற்றத்தையும் மன்னிச்சு, அதை வருமானமாகவும் கணக்கில் எடுத்து அமவுண்டை டேலி செஞ்சிருக்காரு. விடுங்க, கடனையே வருமானம்னு சொல்லிட்டாராமா.. இது என்ன பிரமாதம்?


நமது எம்ஜிஆர் சந்தா வருமானமான 14 கோடி 1995-2000 கால கட்டத்தில் வசூலானதுன்னு நீதிபதியே தீர்ப்பில் சொல்லி இருக்காரு. ஆனா அதை 1991-1996 கால செலவுக்கு / சொத்து வாங்கலுக்கு அட்ஜஸ்ட் செய்திருக்காரு. இது எப்படி இருக்குன்னா, 14 வயசுல எனக்கு படிக்க முடியலை. குடும்ப கஷ்டம். வறுமை. ஸ்கூல் போக வழி இல்லை. அதனால் 21 வயசில் நான் வேலைக்கு போயி சம்பாதிச்சு அந்த பணத்தை வெச்சு தான் 14 வயசுல படிச்சேன்னு சொல்ற மாதிரி இருக்கு. அதாவது 1995-2000 கால கட்டத்தில் சந்தா தொகை வசூலிச்சு அதில் கிடைச்ச 4 கோடி லாபத்தை வெச்சு 1991-1996 ளில் சொத்து வாங்கிருக்காங்க. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமாப்பா.. இப்ப நீதித்துறையிலும்.

கூட்டு சதி எதுவும் இல்லைன்னு சொல்ற நீதிபதி அவருடைய தீர்ப்பில் பல இடங்களில் கூட்டு சதி நடந்ததை பத்தி மறைமுகமா சொல்றாரு. உதாரணத்துக்கு ஒண்ணே ஒண்ணு, சிம்பிளா.  

பரணி பீச் ரிசார்ட்டுக்கு A1 (ஜெ) ரூ. 41,35,000 கடன் கொடுக்கிறாங்க. பரணி பீச் ரிசார்ட்டில் A2 (சசிகலா) ஒரு பங்கு தாரர். பரணி பீச் ரிசார்ட் பின்னர் A3 (இளவரசி) & A4 (சுதாகரன்) ஆகியோருக்கு தலா 22 லட்சம் கடன் தர்றாங்க. அந்த 44 லட்சத்தை வெச்சு ஊட்டியில் கொடநாடு எஸ்டேட்டை இளவரசியும் சுதாகரனும் வாங்குறாங்க. கொடநாடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கொடநாடு எஸ்டேட் ஜெ.வுக்கு சொந்தமானதுன்னு ஏற்கனவே சொல்லிருக்காங்க. அதாவது, இந்த காட்சியை சுருக்கமா இப்படி ஜெ பணத்தை சசிகலாவிடம் கொடுத்து அதை இளவரசி & சுதாகரன் ஆகியோரிடம் கொடுத்து ஜெ பெயரில் சொத்து வாங்கி இருக்காங்க. ஆனா இவர்களுக்குள் கூட்டு சதி இல்லைன்னும், இண்டர் கம்பெனி பண பரிமாற்றங்கள் நிரூபிக்கப்படலைன்னும் நீதிபதி சொல்லி இருக்காரு.


அல்லறை சில்லறை ஓட்டைகளை எல்லாம் டிஸ்கவுண்டில் விட்டாலும், வங்கி கடன் தொகை அடிப்படையில் தான் விடுதலையே செஞ்சிருக்கார் என்பதால் அந்த தொகையே தவறுன்னு ஆயிட்டதால் விடுதலையே செல்லாது.


சரி, இப்ப என்ன ஆகும்?

குமாரசாமி நேர்மையானவர்னு பெயர் எடுத்தவர். வரும் ஆகஸ்டில் ரிடயார்டு ஆகப்போறவர். தன்னுடைய பெயரை கெடுத்துக்காம அவரே தானா முன்வந்து தீர்ப்பை திருத்தலாம்

கர்நாடக உயர்நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ, நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கையை நிலை நிறுத்த தன்னிச்சையா இந்த வழக்கை எடுத்து விடுதலையை ரத்து செய்யலாம்

இது எதுவும் நடக்கலைன்னா கர்நாடக அரசு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 362 படி மறு சீராய்வு மனு தாக்கல் செய்து தீர்ப்பை திருத்தலாம். அல்லது உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம்



கர்நாடக அரசு எந்த முயற்சியும் எடுக்காத பட்சத்தில் புகார் தாரரான சுப்பிரமணியம் சுவாமியோ அவரும் முயற்சி எடுக்காத நிலையில் திமுக / தேமுதிக அப்பீல் செய்ய முடியும். எதுவானாலும் ஜூலை 15 க்குள் செய்யணும். அவ்வளவு தான்.


ஆனால் இது ஒரு கிளியர் வின்னிங் கேஸ். அதனால் கர்நாடக அரசு அப்பீல் செய்யணும்னு ஆச்சார்யா சொல்லிருக்கார். 

ஆனா காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி ஐடியால இருக்கோ அல்லது அதிமுக இந்த அப்பீலை முடக்க காங்கிரசுடன் கூட்டணி வைக்க போகுதோ எதுவும் தெரியாது. பாஜக அதிமுக கூட்டணி ஜஸ்ட் யூகம் தான். பாஜகவை நம்பி அதிமுக இல்லை. ஆனா அதிமுகவை நம்பி பாஜக இருக்கு. அதனால் பாஜகவை புறக்கணிச்சிட்டு காங்கிரசுடன் கூட்டணி வைக்க அதிமுகவுக்கு எந்த சங்கடமும் இருக்காது. அதனால் அப்பீல் முடிவு இந்த கூட்டணி முடிவை அடிப்படையா வெச்சு தான் இருக்கும். ஆனா EVKS இளங்கோவன் கூட்டணி கிடையாதுன்றதுலயும் அப்பீல் செய்து தண்டனை கொடுத்தே ஆகணும்னு சொல்வதிலும் உறுதியா இருக்காரு. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.

நாடு முழுக்க பரபரப்பா பேசப்படும் ஒரு தீர்ப்பா ஆயிருச்சு இது. அடிப்படையிலேயே தவறான விவரங்களை வெச்சு விடுதலைன்றது பட்டவர்த்தனமா வெளிச்சத்துக்கு வந்திருக்கு. எல்லா மீடியாவிலயும் நீதித்துறையை கிழிச்சு எடுக்கிறாங்க. நீதித்துறை மீதான மரியாதையையும் மாண்பையும் காக்கும் கடமை உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கு. அதனால் அவர்களே முன்வந்து உரிய நடவடிக்கை எடுத்தால் ஒழிய நீதித்துறை மீதான நம்பிக்கையை நிலை நிறுத்த முடியாது.

இனி என்ன தான் அதிமுக தெம்பா இருந்தாலும், மக்களுக்கு அவர் எப்படி வெளியே வந்தார் எனும் முழு விவரமும் தெரிஞ்சுட்டதால் எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றி வரும் தேர்தலில் இருக்காதுனு நம்பலாம்.

******

தொடர்புடைய பதிவுகள்: 

Monday, September 10, 2012

சட்டத்தின் வலிமை?


ந்திய அரசியலமைப்பு, ஜனநாயகம், சட்டம் போன்றவற்றின் மீது எனக்கு எப்போதுமே மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு!


நான் சென்னை உயர்நீதி மன்றத்துக்கு முதன் முதலில் சென்றது, ஒரு தகவலை சரிபார்ப்பதற்காக தான்! எனது நண்பர் ஒருவர், சென்னையின் முதல் கலங்கரை விளக்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் இருக்கிறது. மத்திய கோபுரத்தின் உச்சியில் செயல்பட்டு வந்த அந்த கலங்கரை விளக்கம் தான் சென்னை துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கான வழிகாட்டி. இப்போதும் அது செயல்படும் நிலையில் தான் இருக்கிறது. எனினும், தனியாக மெரினாவில் ஒரு பிரத்யேக கலங்கரை நிறுவப்பட்டபின், உயர்நீதிமன்ற கலங்கரை விளக்கம் செயல்படுவதில்லை என்று எனக்கு ஒரு புதிய தகவலை சொல்லி இருந்தார். அதை சரிபார்க்கவும், அந்த கலங்கரை விளக்கத்தை காணவும் தான் நான் முதன் முதலில் சென்னை உயர்நீதிமன்றம் சென்றேன்.

சென்னை உயர்நீதிமன்றம் மிக பழமையானது. நீண்ட வரலாற்று சிறப்புமிக்கது. மிக அற்புதமான தீர்ப்புக்கள், கருத்துக்கள், சட்ட முன்வடிவாக்கல்கள் போன்றவற்றை வெளியிட்டிருக்கிறது என்பன போன்ற விஷயங்கள் எல்லாம் நீங்கள் எல்லோரும் நன்கு அறிந்தது தான்.
சமீப காலங்களில் என்னை மிகவும் கவர்ந்த இரண்டு நீதிபதிகள், கற்பகவிநாயகம் மற்றும் சந்துரு ஆகியோர். சட்டம் என்பதையும் தாண்டி, மனிதாபிமான அடிப்படையிலான தீர்ப்புகள்,சமூக மாற்றத்துக்கான தீர்ப்புகள், மக்கள் நலன் சார்ந்த தீர்ப்புக்கள் பலவற்றை சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்திருக்கிறது.

முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த திரு. ப. ரங்கநாதன் (இப்போது திமுக) அவர்களுக்கு மிக விசித்திர தண்டனையாக, மதுரை காந்தி மியூசியத்தில் 15 நாட்கள் சேவை செய்யவேண்டும் எனவும், மகாத்மாகாந்தி எழுதிய சத்திய சோதனை நூலை படித்து பதிலளிக்கவேண்டும் என தண்டனை கொடுத்தவர், நீதியரசர் கற்பக விநாயகம் அவர்கள் தான். தனது மேலங்கியில் எப்போதுமே ஒரு சிவப்பு ரோஜாமலர் குத்தியிருப்பார்.
சமூக மேம்பாடு, மக்கள் நலன், அரசு நிர்வாகம் போன்ற பல விஷயங்களில் நீதிபதி சந்துரு கொடுத்திருக்கும் தீர்ப்புக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இவை தவிர, இதே சென்னை உயர்நீதிமன்றத்தில் பல பல வினோதமான, சட்டப்படியும், மனசாட்சிப்படியும் ஏற்றுக்கொள்ளவியலாத சில நியாயமற்ற தீர்ப்புக்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை பற்றியெல்லாம் பிறிதொரு சந்தர்ப்பத்தில், விரிவாக விவாதிக்கலாம்.

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 150ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதில் இந்திய குடியரசு தலைவர் கலந்துகொண்டார். மேலும், முக்கிய விருந்தினராக தமிழக முதலமைச்சர், மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களும் கலந்துகொண்டார்.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்கான அழைப்பை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே நேரடியாக முதல்வரை சந்தித்து, முறைப்படி வழங்கி விழாவுக்கு அழைத்திருக்கிறார். முதல்வரும் விழாவில் கலந்துகொண்டு, வழக்கறிஞர்களுக்கான பல பல சலுகைகளை அறிவித்து பாராட்டு பெற்றிருக்கிறார்.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, எனக்கு இந்த செய்திகளையெல்லம் படித்ததும் மனதுள் தோன்றிய முதல் கேள்வி, சட்டத்தை விட வலிமையானதா ஜனநாயகம் என்பது தான்!

முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அறிந்தவர்களுக்கு, அவர் எப்போதுமே சட்டத்தை மதித்ததில்லை எனப்தும், நீதிமன்றங்களை தனக்கு வசதியான தீர்ப்புக்களுக்காக மட்டுமே அணுகியிருப்பதும் தெரிந்திருக்கும்.
டான்சி நில வழக்கில் உச்சநீதிமன்றம், இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, விசித்திரமானதொரு தீர்ப்பை ஜெயலலிதாவுக்கு வழங்கி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது சுவாரஸ்யமானது. அந்த தீர்ப்பை முழுமையாக தரவிறக்கி படித்துப்பார்த்தபின் எனக்கு நானே கேட்டதுண்டு..முறைகேடாக சட்டத்துக்கு புறம்பாக, அதிகார துஷ்பிரயோகம் மூலம் அபகரித்த டான்சி நிலத்தை ஜெயலலிதா, மீண்டும் அரசுக்கே திருப்பி கொடுத்துவிட்டார் என்றாலும், அவரது செயல் அரசியல் சட்டத்தை மீறிய ஒன்று, அவர் ஆட்சி செய்ய தகுதியற்றவராகிறார். எனினும் அவருக்கான தண்டனையை அவரே தனது மனசாட்சிப்படி தீர்மானித்துக்கொள்ளலாம்(!) என்பது போல உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் இந்த தீர்ப்பின் அடிப்படையில், கொள்ளையர்கள், பிக்பாக்கெட் அடிப்பவர்கள் போன்றோரிடமும், அவர்களது குற்றச்செயல்கள் மூலம் திருடிய பொருட்களை மீட்டுக்கொடுத்துவிட்டு, அவர்கள மன்சாட்சிப்படி ஏன் அவர்களை விடுதலை செய்துவிடக்கூடாது என்று! சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்று எனக்கு அப்போதெல்லம் ஒரு பலத்த நம்பிக்கை இருந்தது!

வெளிநாட்டில் இருந்து 3 கோடி அமெரிக்க டாலர்கள் பிறந்தநாள் பரிசாக கிடைத்தது தொடர்பான வழக்கை 10 ஆண்டுகாலத்துக்கும் மேலாக விசாரித்து வருவதை கருத்தில் கொண்டு, அந்த வழக்கையே ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியானபோது, இதே அடிப்படையில் 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக நீண்டு கொண்டிருக்கும் எல்லா வழக்குகளையும் ரத்து செய்துவிடலாகாதா என்று ஏங்கியதும் உண்டு!

ஒரு வேட்பாளர் 2 தொகுதிக்கு மேல் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது என்கிற சட்டம் தெளிவாக இருந்தும், 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து, (ஒவ்வொரு வேட்பு மனுவிலும் நான் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்கிற டிக்ளரேஷனிலும் கையெழுத்து இட்டுவிட்டு) அதன் காரணமாக தொடரப்பட்ட வழக்கை பழிவாங்கும் போக்கு என்று நீதிமன்றத்தை விமர்சனம் செய்த ஜெயலலிதாவின் துணிச்சலை நான் வியந்ததுண்டு!

உயர்நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் வானத்தில் இருந்து குதித்தவர்களா என்ற அவரது கேள்வி இன்னமும் எதிரொலித்துக்கொண்டே தான் இருக்கிறது!

சட்டத்தை எந்த வகையிலும் மதிக்காமல், வாய்தா மீது வாய்தா வாங்கி, தமிழ், ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் எல்லா ஆவணங்களையும் மொழி பெயர்க்கவைத்து, தனது சொத்து குவிப்பு வழக்கை நீண்ட நெடிய பயணமாக்கிக்கொண்டு வரும் ஜெயலலிதாவின் சாதுரியம் யாருக்கும் வாய்க்குமா என தெரியவில்லை.

திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, காவல்துறையினரை பார்த்து சட்டரீதியாக நியாயமான கேள்விகள் கேட்ட நீதிபதி அசோக் குமார் அவர்களின் மருமகன் சில நாட்களிலேயே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டதன் பின்னணி காரணங்களில் அரசியல் எதுவும் இல்லை என்று நானும் சிலநாட்கள் நம்பிக்கொண்டு தான் இருந்தேன்!

இப்படி எத்தனை எத்தனையோ உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம், ஜெயல்லிதா சட்டத்தையும், நீதியையும், எந்த அளவுக்கு மதிக்கிறார் என்பதை எடுத்துணர்த்த. நீதித்துறையும்,சில வழக்குகளை நியாயத்தை மீறி அவர் விருப்பப்படி அவருக்கு சாதகமாக செயல்பட்டதுண்டு!

பல வழக்குகளை தன் மீது வைத்து வழக்குகளில் ஆஜராகிக்கொண்டிருக்கும், ஜாமீனில் இருக்கும், ஒருவர், ஜனநாயக ரீதியாக முதலமைச்சர் ஆகிவிட்டதாலேயே, நீதிமன்றத்தால் மரியாதை செய்யப்பட்டு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அழைப்பட்டதன் விசித்திரம் எனக்கு இன்னமும் புரிபடவேயில்லை.

சட்டம் வலிமையானது என்கிற எனது நம்பிக்கை பல முறை பொய்த்துப்போயிருந்தாலும், பட்டவர்த்தனமாக இப்போது நடைபெற்ற சம்பவங்கள், நீதித்துறையின் மாண்பையும், சட்டத்தின் நேர்மையையும் கொஞ்சம் கீழிறக்கி வைத்ததோடு மட்டுமல்லாமல், பெரும்பான்மை ஜனநாயகம் கைகாட்டும் ஒருவருக்கு சட்டமும் நீதித்துறையும் வளைந்துகொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதையும் எனக்கு உணர்த்துகிறது!

இந்திய சட்டங்கள் பற்றி நான் தெரிந்துகொள்ள இன்னமும் நிறைய விஷயங்கள் இருப்பதாக உணர்கிறேன்!

Printfriendly