Saturday, April 18, 2015

மதுரைக்கு WAP-7


பேப்பர்ல எதேச்சையா தான் அந்த செய்தியை பார்த்தேன். கூடிய விரைவில் மதுரைக்கு ஒரு WAP – 7 எஞ்சினை சதர்ன் ரயில்வே ஒதுக்கப்போகுதாம். அதுக்கான பயிற்சியை திருச்சியில் தந்துட்டு இருக்காங்களாம். இருங்க இருங்க.. திட்டாதீங்க... தெளிவாவே சொல்றேன்.
முதலில் WAP-7 னா என்னான்னு தெரிஞ்சுக்கணும்னா இந்தியன் ரயில்வே பத்தின சில அடிப்படை விஷயங்களை சுருக்கமா தெரிஞ்சுக்கணும். அதனால இந்த முன்கதை சுருக்கம்.


பெங்களூர் - புதுடெல்லி ராஜ்தானி - WAP7 எஞ்சினுடன் 
இந்தியன் ரயில்வேயில் மூணு வகையான வழித்தடம் இருக்கு. அகல ரயில்பாதை, மீட்டர் பாதை, குறுகிய பாதை. இதில் தமிழகத்தில் இருந்த மீட்டர் கேஜை எல்லாம் அகல ரயில்பாதையா மாத்திட்டு வருது தென்னக ரயில்வே. தமிழகத்தில் மட்டும் தான் அதிவேகமா அத்தனை பாதையையும் மாத்திட்டு வர்றாங்க. (இதை சொன்னா மாய உலகத்தில் இருக்கிறவங்க சண்டைக்கு வருவாங்க.)
இரண்டு வகையான ரயில் இன்ஜின் இருக்கு இந்தியாவில். டீசலால் இயங்கும் Diesel Locomotive & மின்சாரத்தால் இயங்கும் Electric Locomotive.
இந்த இன்ஜின்களில் நிறைய வகைகள் இருக்கு. சக்திக்கு ஏற்ற மாதிரி, அது இணைக்கப்படும் ரயில்களின் வகைக்கு ஏற்ற மாதிரி. உதாரணமா சரக்கு ரயில்களுக்கு சக்திவாய்ந்த என்ஜின் வேணும். பயணிகள் ரயிலுக்கு சக்தி குறைவா இருந்தா போதும். எக்ஸ்பிரஸ் இன்னும் கொஞ்சம் சக்தி கூடுதலா வேணும். அதி வேக ரயிலுக்கு இன்னும் கூடுதல் சக்தி உள்ள என்ஜின்.
இப்படியான எஞ்சினை குறியீடுகளால் வகை படுத்தி வெச்சிருக்காங்க. நீங்க எஞ்சின்ல முன்னாடி பார்க்கலாம். WDG2, WAP4, WDM3 னு எழுதிருப்பாங்க. நிறைய வகைகள் இருக்கு. இந்த குறியீடு பத்தி சுருக்கமா விளக்கிடுறேன்.
முதல் எழுத்து எந்த வகையான பாதைன்னு சொல்லும். அதன் படி W – அகல பாதை (Broad Guage), Y – மீட்டர் கேஜ் பாதை (Meter Guage), Z – குறுகிய பாதை (Narrow Guage), N – குறுகிய பாதையில் இயங்கும் பொம்மை ரயில் (Narrow Guage Toy Train)
ரெண்டாவது எழுத்து என்ன வகையான எஞ்சின்னு சொல்லும். அதன் படி D – டீசல் இன்ஜின், A – மின்சார என்ஜின் (இவை தான் இப்ப இந்தியாவில் இருக்கு) இதுக்கு முன்னால CDC கரண்டில் இயங்கும் இன்ஜின், CA – இரண்டு வகையான மின்சாரத்திலும் (அதாவது AC, DC இரண்டு வகை மின்சாரத்திலும்) இயங்கும் இன்ஜின், B – பேட்டரியில் இயங்கும் இன்ஜின் எல்லாம் இருந்தது. இப்ப அவை அதிகமா இல்லை. நாம D & A மட்டும் வெச்சுக்கலாம்.
மூணாவது எழுத்து என்ன வகையான ரயிலுன்னு சொல்லும். அதன் படி G – சரக்கு ரயில், P – பயணிகள் ரயில், M – இரண்டு வகையான ரயிலுக்குமான என்ஜின், S – ஷண்டிங்க் செய்வதற்கு மட்டும் (உதாரணமா சென்னை சென்டிரல் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை பேசின் பிரிட்ஜ் யார்டுக்கு தள்ளிட்டு போக்குதுல்ல, அந்த என்ஜின்), U – மல்டிப்பில் யூனிட்டுக்கான என்ஜின்
நாலாவது எழுத்து அதன் சக்தியை குறிக்கும். அதன் படி 1 – 1000 HP சக்தி, 4 – 4000 HP சக்தி, 5 – 5000 HP சக்தி. சப்போஸ், 3A னு இருந்தா – 3 = 3000 HP, A = 100 HP. மொத்தம் 3,100 HP. இதான் லாஜிக்
இப்ப நீங்க எந்த எஞ்சினை பார்த்தாலும் அந்த குறியீட்டை வெச்சே கண்டுபிடிச்சிர முடியும் தானே? உதாரணம் பார்ப்போமா?
WDG4 – அகல ரயில்பாதையில், டீசலில் இயங்கும், சரக்கு ரயில், 4000 HP சக்தி உள்ள என்ஜின்
WAP5 – அகல ரயில்பாதையில், மின்சாரத்தில் இயங்கும், பயணிகள் ரயில், 5000 HP சக்தி உள்ள என்ஜின்
YDM2 – மீட்டர் கேஜ் பாதையில், டீசலில் இயங்கும், பயணிகள் / சரக்கு ரயில்களை இழுக்கும் 2000 HP சக்தி உள்ள என்ஜின்
புரிஞ்சுதுல்ல?
ஈரோடு பணிமனையின் WAP-4 என்ஜின்

தமிழகத்தை பொறுத்த வரைக்கும், பயணிகள் ரயிலுக்கு பொதுவா WAP4 (ஆரஞ்சு கலர் ஏரோ டைனமிக் ஸ்டைல் என்ஜின்) அல்லது WDP4 தான் உபயோகிப்பாங்க. அதிக வேகம் இல்லை. ஜஸ்ட் 100 கிமீ வேகம் தானே. ஆனா சில அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு WAP5 உபயோகிப்பாங்க.
இந்த WAPல குறைந்த சக்தி என்ஜின்கள் இருந்த காலத்தில் (WAP3) தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ரெண்டு என்ஜின் போட்டு இழுத்துட்டு போவாங்க. ஸ்பீடு கிடைக்க. கிராண்ட் டிரங்க், கேரளா எக்ஸ்பிரஸ் எல்லாம் கூட ரெண்டு இன்ஜின் வெச்சு இழுத்த ரயில்கள் தான்.
இப்ப WAP5 வந்தப்பறம் அது தான் பெஸ்டு இஞ்சினா இருந்துச்சு. ராஜ்தானி, ஷதாப்தி, துரந்தோ எல்லாம் WAP-5 இன்ஜின் வெச்சு தான் இழுத்துட்டிருக்கு.
இதை விட அதிக சக்திவாய்ந்த இன்ஜின் வேணும்னு தேவை இருப்பதால், மேற்கு வங்காளத்திலுள்ள சித்தரஞ்சன் ரயில் என்ஜின் தொழிற்சாலையில் 2010 இல் அதி வேக எஞ்சினான WAP-7 தயாரிச்சாங்க. (இதன் வேகம் கிட்டத்தட்ட மணிக்கு 210 கி.மீ வரை). இந்த WAP-7 தயாரிக்கறதுக்கு முன்னாடியே WAG-9 செஞ்சிருக்காங்க, சரக்கு ரயிலுக்காக. அது வெற்றிகரமா இயங்குனதால, அதன் பயணிகள் ரயில் வெர்ஷன் WAP-7 செஞ்சாங்க, சில மாற்றங்களுடன்.
முதல் இஞ்சினுக்கு நவ்கிரண் னு பேர் வெச்சாங்க. என்ஜின் நம்பர் 30201. அடுத்தடுத்த என்ஜின்கள் நவ் பாரதி’, நவ் சேடக்’, நவ் கட்டின்னு பேர். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 60 எஞ்சினுக்கு மேல செஞ்சாச்சு சித்தரஞ்சன்ல.
மும்பை - புதுடெல்லி ராஜ்தானி WAP-7 - துரந்தோ நிறத்தில்
இந்த எஞ்சினுக்கு பொதுவா வெள்ளை நிறம் தான் கொடுக்கப்படுது (White Livery) ஒரு கிராண்ட் லுக் கிடைக்கும்ங்கறதுக்காக. (ஆனா மும்பை டெல்லி ராஜ்தானிக்கு மட்டும் துரந்தோவின் மல்டி கலர் நிறம்).
இந்த WAP-7 என்ஜின் மிக அதிக சக்தி மட்டுமல்ல. நிறைய நவீன தொழில்நுட்பங்களும் கொண்டது. ஸ்டேஷன்லருந்து எடுக்கும்போதும், ஸ்டேஷனுக்கு வந்து நிக்கும்போதும் அதன் ஸ்மூத் மூவ்மெண்ட்ட அனுபவிச்சு பார்த்தா தான் தெரியும். அந்த அனுபவுத்துக்காகவே நான் சில முறை WAP-7 பயன்படுத்தும் ரயில்கள தேடி தேடி பயணிச்ச காலம் இருக்கு. அதிவேகம், பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பம், சொகுசுன்னு பல வகைகளில் இந்த WAP-7 என்ஜின் பல பயணிகளின் தேர்வா ஆயிருச்சு. முதலில் ராஜ்தானி, ஷதாப்தி, துரந்தோ மாதிரியான ரயில்களுக்கு மட்டுமிருந்த இந்த என்ஜின் இப்ப எல்லா முக்கிய எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் இணைக்க ஆரம்பிச்சிருக்காங்க.
இந்த WAP-7 இன்ஜின்கள் சில குறிப்பிட்ட டெப்போக்களில் மட்டும் தான் இருக்கு. தென்னக ரயில்வேயில் சென்னை ராயபுரம் டெப்போவில் மட்டும் தான் இருக்கு. ராயபுரம் டெப்போவில் இருக்கும் என்ஜின்கள் பயன்படுத்தப்படும் ரயில்கள்:
சென்னை – கோவை இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ்
சென்னை – கோவை ஷதாப்தி எக்ஸ்பிரஸ்
சென்னை – கோவை கோவை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
சென்னை – மேட்டுபாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் (கோவை வரை)
சென்னை – திருவனந்தபுரம் சூப்பர் ஃபாஸ்ட் மெயில்
சென்னை – திருவனந்தபுரம் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
சென்னை – ஆலப்புழா எக்ஸ்பிரஸ்
சென்னை – பெங்களூரு ஷதாப்தி எக்ஸ்பிரஸ்
சென்னை – பெங்களூரு டபிள் டெக்கர் எக்ஸ்பிரஸ்
சென்னை – புதுடெல்லி கிராண்ட் டிராங்க் எக்ஸ்பிரஸ்
சென்னை – புதுடெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்
அவ்வளவு தான்.
சென்னையிலிருந்து முழுசா மின்மயமாக்கப்பட்ட அதிவேக ரயில் பாதையில் மட்டும் தான் இந்த இன்ஜின் இயக்கப்படுதுன்றது மேலே உள்ள விவரங்களை பார்த்தாலே தெரியும். மேலும் இந்த ரயிலை பராமரிக்க ராயபுரத்துக்கு வந்தாகணும். அதனால் சென்னையை அடிப்படையா வெச்சு இந்த இன்ஜின்கள் இயக்கப்படுது.
கவுதமி எக்ஸ்பிரஸ் - லல்லாகுடாவின் WAP-7 எஞ்சினுடன்

இப்ப சென்னை – திருச்சி – மதுரை – நெல்லை – திருவனந்தபுரம் பாதையும் முழுசா மின்மயமாக்கப்பட்டாச்சு. எந்த பரபரப்பும் விளம்பரமும் இல்லாம இயல்பா அந்த மின்பாதையை செயல்பாட்டுக்கும் கொண்டுவந்து அதில் மின்சார ரயிலை இயக்கிட்டு இருக்காங்க தென்னக ரயில்வே. அதனால் அந்த ரூட்டிலும் ஒரு என்ஜின் விடலாமேன்னு (யாருடைய கோரிக்கையும் இல்லாமலேயே!) யோசிச்ச தென்னக ரயில்வே முதல்கட்டமா ஒரு சோதனை முயற்சியா குருவாயூர் எக்ஸ்பிரஸ்சில் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி வரை இயக்கி பார்த்தாங்க. அது வெற்றிகரமா செயல்பட்டதால், முதல்கட்டமா ரெண்டு எஞ்சின்களை அந்த ரூட்டில் பயன்படுத்த போறாங்க. மதுரை டிவிஷனுக்கு ஒண்ணு, திருச்சி டிவிஷனுக்கு ஒண்ணுன்னு முடிவு பண்ணி, அந்த டிவிஷன்ல இருக்கும் திறமையான என்ஜின் டிரைவர்களை தேர்ந்தெடுத்து திருச்சி பொன்மலையில் (Golden Rock Loco Works) பயிற்சி கொடுத்துட்டு இருக்காங்க இப்ப. ஏன்னா WAP-7 ஏற்கனவே சொன்ன மாதிரி நவீன தொழில்நுட்பங்கள் நிறைஞ்ச இன்ஜின். அதை கையாள தனி திறமை வேணும்ல? அதனால தான் இந்த சிறப்பு பயிற்சி.
மதுரைக்கு ஒரு வழியா WAP-7 வருதுங்கறது ரொம்ப சந்தோஷமான விஷயம் எனக்கு. மதுரைக்கும் எனக்குமுள்ள பந்தம் அப்படி. அது தனி கதை.
இப்ப என் ஆர்வம் எல்லாம், எந்த ரயிலுக்கு அதை பயன்படுத்துவான்கன்றது தான். திருச்சி டிவிஷன்ல அந்த எஞ்சினை பயன்படுத்தக்கூடிய ரயில்னு எதுவும் இருக்கறதா தெரியலை. வேணும்னா, காரைக்குடி – சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ்சில் திருச்சி – சென்னை செக்ஷன்ல இணைக்கலாம்.
ஆனா மதுரைல அப்படி இல்லை. பாண்டியன், வைகை இரண்டுக்குமே அதை இணைக்க முடியும். மதுரை – டெல்லி சம்பர்க் கிரந்திக்கும் இணைக்கலாம். எந்த ரயிலுக்கு அதை இணைக்கப்போறாங்க எனும் ஆர்வம் இன்னும் அடங்கலை. அறிவிப்பு எப்ப வரும்னும் தெரியலை. அதே மாதிரி அந்த எஞ்சினுக்கு என்ன பேரு வெப்பாங்கான்னும் ஒரு ஆர்வ கேள்வி எழுது எனக்கு. இதுவரைக்கும் வந்த எல்லா எஞ்சினுக்கும் ஹிந்தி பேரு தான் இருந்துச்சு. அட்லீஸ்ட் மதுரை எஞ்சினுக்காவது மீனாட்சினு பேரு வெச்சா நல்லா இருக்கும்லனு ஒரு நப்பாசை. பார்ப்போம். 
மதுரைக்காரவிங்க அந்த ரயில் வந்ததும் ஒரு முறை அதில் பயணம் பண்ணி பாருங்க. நான் ஏன் இப்படி லூசு மாதிரி இந்த இஞ்சினுக்கு எல்லாம் எக்ஸைட்டிங் ஆகிறேன்னு உங்களுக்கே புரியும்.

***************

தொடர்புடைய பதிவுகள்

ரயில்வே - தமிழகத்தின் பார்வையில் – பாகம் 1
ரயில்வே - தமிழகத்தின் பார்வையில் – பாகம் 2
சேலம் கோட்ட ரயில்வே – தீரா பிரச்சனை
தமிழகமும் ரயில்வே துறையும்!
இனியேனும் திருந்துமா ரயில்வே?
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம்!

Tuesday, April 14, 2015

நீதிபதி மஞ்சுநாத் விவகாரம்

ழக்கம் போல இன்னைக்கு காலைல எழுந்தபோதும் ஒரு செய்தி என் மொபைல் மெசேஜ் பாக்ஸில் உக்காந்து சிரிச்சிட்டிருந்தது. அதை பார்த்ததும் எனக்கும் சிரிப்பு தான் வந்துச்சு.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியா இருக்கும் வகெலாவை ஓடிஷா நீதி மன்றத்துக்கு தலைமை நீதிபதியா மாத்திருக்காங்களாம். அவருக்கு பதிலா கர்நாடக தலைமை நீதிபதியா திரு மஞ்சுநாத்தை நியமிச்சிருக்காங்களாம்.

Justice Waghela
இதில் சிரிக்க என்ன இருக்குனு கேக்குறீங்களா? சுருக்கமா நான் சில விஷயங்களை மட்டும் இலைமறை காயா சொல்றேன். நீங்களே புரிஞ்சுக்கிட்டா உங்களுக்குள்ளே சிரிச்சுக்கோங்க.

நீதிபதிகளை நியமிக்கற அதிகாரம் இதுவரைக்கும் நீதித்துறை குழுமத்துகிட்டே (கோலாஜியம்) தான் இருந்துச்சு. அதில் சில பிரச்சனைகள் இருப்பதால், மத்திய அரசு நீதிபதிகள் நியமன சட்டம் கொண்டு வந்துச்சு. இதுக்கு நீதித்துறையில் இருந்தே பலத்த எதிர்ப்பு. இது தொடர்பான வழக்கு வரும் ஏப். 15 ஆம் தேதி வெளியாகுது. ஆனா அதுக்கு முன்னாடி நேத்தே (ஏப். 13) மத்திய அரசு இந்த சட்டத்தை அமல் செஞ்சு அரசிதழில் வெளியிட்டிருச்சு. ஆனா அதை விட உஷாரா அதுக்கு சற்று முன்பாக தலைமை நீதிபதி அதிரடியா 22 நீதிபதிகளை மாற்றியும் சில கூடுதல் நீதிபதிகளை நியமிச்சும், சில கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளா பதவி உயர்த்தியும் உத்தரவு போட்டுட்டாரு. மத்திய அரசுக்கும் நீதித்துறைக்குமான பனிப்போர் இப்ப வெளிப்படையா வெடிச்சிருக்கு. அதன் விஸ்வரூபங்களை அடுத்தடுத்த நாட்களில் நாம கண்டு களிக்கலாம். அது ரொம்ப பெரிய விஷயம். நான் சுருக்கமா ஒரு அவுட் லைன் தான் கொடுத்திருக்கேன். நாம இப்ப மஞ்சுநாத் விஷயத்துக்கு வருவோம்.

தலைமை நீதிபதி நேத்து அறிவிச்ச திடீர் உத்தரவில் தான் வகெலாவை ஓடிஷாவுக்கு அனுப்பிட்டு அந்த இடத்தில் மஞ்சுநாத்தை நியமிச்சிருக்கார்.

மஞ்சுநாத் நியமிக்கப்பட்டதில் எனக்கும் நிறைய ஆச்சர்யம் தான். ஏன்னா அவர் மேல நில அபகரிப்பு, ஊழல், வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்துனதுன்னு நிறைய புகார்கள் இருக்கு. கடந்த 2014 ஆம் வருஷம் அவருக்கு தலைமை நீதிபதியா பதவி உயர்வு கொடுத்து பஞ்சாப் ஹரியானா மாநிலத்துக்கு மாற்ற முடிவு எடுத்தப்ப, மத்திய அரசும் சட்ட அமைச்சகமும் அதை கடுமையா எதிர்த்தாங்க. அவர் மேல விசாரணை நடத்தணும்னு கோரிக்கை இருக்கிறப்ப அவருக்கு பதவி உயர்வு கொடுக்கக்கூடாதுன்றது மத்திய அரசின் வாதம். ஆனா அப்போ இருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா, மஞ்சுனாத்துக்கு பதவி உயர்வு கொடுத்தே ஆகணும்னு பிடிவாதமா இருந்தாரு.

ஆம் ஆத்மி கட்சியினர் மஞ்சுநாத் மீது இம்பீச்மெண்ட் கொண்டுவர கூட முயற்சி செஞ்சாங்க. ஆனா அது நடக்கலை.

ஆமா அவர் அப்படி என்ன முறைகேடு செஞ்சார்ங்கறீங்களா? சாம்பிள் சொல்லட்டா?

2004 ஆம் வருஷம் தன் மகள் சைத்ரா பேரில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கினார். அப்ப மார்க்கெட் விலை ச.அடி 1000 ரூபாயா இருந்தாலும் இவருக்கு மட்டும் 125 ரூபாய்னு போட்டு கொடுத்தாங்க. அதுவே தவறுன்னு எல்லாரும் குதிச்சிட்டிருந்தப்ப, அந்த ஹவுசிங்க் சொசைட்டி சம்மந்தப்பட்ட மூன்று வழக்குகளில் 2005, 2007, 2010 ஆம் வருஷங்களில் இவர் அவங்களுக்கு சாதகமா தீர்ப்பு சொல்லி இருக்கார். தன் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கையில் அதன் உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட வழக்கை அவர் விசாரிக்காம இருந்திருக்கணும்ங்கறது எல்லோருடைய எதிர்பார்ப்பு. அந்த தீர்ப்புகள் வந்தபிறகு தான், ஒருவேளை அந்த ஹவுசிங்க் சொஸைட்டிக்கு சாதகமா செயல்படுவதற்காக அவர்கள் விலையை குறைத்து வீட்டை கொடுத்தாங்களோன்னு ஒரு கேள்வி உருவாச்சு. இது வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்த ரீதியிலும், ஊழல் / லஞ்சம் ரீதியிலும் கணக்கிட்டு எதிர்க்கட்சிகள் நீதிபதி மஞ்சுனாத்துக்கு எதிரா போராட தொடங்கினாங்க. இது போல இன்னும் சில புகார்கள் அவர் மேலே நிலுவையில் இருந்ததால், போன வருஷம் பஞ்சாப் ஹரியானாவுக்கு அவரை புரமோஷன்ல அனுப்பற ஐடியா டிராப் ஆயிருச்சு.
Justice K L Manjunath

வர்ற ஏப் 20 ஆம் தேதி அவர் ஓய்வு பெற போறார். இந்த நேரத்துலதான் மத்திய அரசின் பலத்த எதிர்ப்பையும் மீறி இந்த அஞ்சே அஞ்சு நாளுக்காக அவரை தலைமை நீதிபதியா புரமோஷன் கொடுத்து அதே கர்நாடக உயர்நீதிமன்றத்துல தலைமை நீதிபதியா நியமிச்சிருக்கு உச்ச நீதிமன்றம். அதுக்கு ஏதுவா ஏற்கனவே தலைமை நீதிபதியா இருக்கும் வகெலாவை ஒடிஷாவுக்கு மாத்திருக்காங்க.

மஞ்சுநாத்துக்காக மிக பெரிய அளவில் லாபி நடந்திருக்கிறது இப்ப உங்களுக்கு ஓரளவுக்கு புரியுதுல்ல? இப்ப அடுத்த விஷயத்துக்கு வர்றேன்.

ஜெ. மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வரும் ஏப். 16 / 17 ஆம் தேதி நீதிபதி குமாரசாமி அவர்கள் தீர்ப்பு சொல்வார் என எதிர்பார்க்கப்படுது. அந்த தீர்ப்பு ஜெ.வுக்கு சாதகமா வரும்னு பலத்த யூகம் இருக்கு. ஒருவேளை அப்படி சாதகமா வந்தா அதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தான் முறையீடு செய்யணும். அப்ப வகெலா மாதிரி கடுமையான நீதிபதி இருப்பதை விட மஞ்சுநாத் இருப்பது அந்த மேல் முறையீட்டு மனுவை அனுமதிக்காமல் இருக்க உதவக்கூடும். ஏற்கனவே ஜெ. மீதான வழக்கில் விதிமுறைகளை மீறி பவானி சிங்கை அரசு வழக்கறிஞரா நியமிச்சது இதே மஞ்சுநாத் தான். அப்படி பவானிசிங்கை நியமிச்சது தவறு, உரிய வரைமுறைகளை மஞ்சுநாத் பின்பற்றலைன்னு நீதிபதி வகேலா கண்டிச்சதொட, பவானிசிங்கின் நியமனத்தையும் ரத்து செஞ்சாரு. ஆனா ஜெ உச்சநீதிமன்றத்தில் வகெலாவுக்கு எதிரா முறையிட்டு தனக்கு சாதகமான தீர்ப்பை வாங்கிக்கிட்டாரு.

ஏற்கனவே முன்பொருமுறை பதவிக்காலம் முடியுற நேரத்தில் தமிழக ஆளுநராக இருந்த திருமதி ஃபாத்திமா பீவி அவர்கள் பலத்த எதிர்ப்பையும் மீறி ஜெ.வுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்துவிட்டு ஊருக்கு போயி செட்டில் ஆனது போல, தனது ஓய்வுக்கு நாலு நாள் முன்னாடி தலைமை நீதிபதியா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பதவிக்கு வந்திருக்கும் மஞ்சுநாத் பற்றியும் நிறைய செய்திகள் அலை அடிக்குது.

ஓய்வு பெறுவதற்கு முன்பாக அவருக்கு தலைமை நீதிபதி அந்தஸ்து தரணும்னு உச்ச நீதிமன்றம் நினைச்சிருக்கலாம். அதனால் தான் பலத்த எதிர்ப்பையும் மீறி அவருக்கு புரமோஷன் கொடுத்திருக்கு. ஆனா அவரை கர்நாடக நீதிமன்றத்தில நியமிச்சது தான் ஆச்சரியம். ஓடிஷாவுக்கு அவரையே நியமிச்சிருக்கலாம். ஆனா, வகெலாவை அங்கே அனுப்பி, இந்த முக்கியமான அஞ்சு நாளில் இவரை இங்கே அப்பாயிண்ட் பண்ணி, ஒரு தடங்கல் இல்லாத சூழலை உருவாக்கி கொடுத்திருக்கு உச்ச நீதிமன்றம்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்தா அவர்கள், சமீபத்தில் ஜெ.வுக்கு விதிகளை மீறி, ஜாமீன் கொடுத்ததே பலத்த விமர்சனத்துக்கு ஆளாச்சு. எந்தவித உத்தரவாதமும் எழுத்துப்பூர்வமாக வாங்காமல் பாலி நாரிமானின் வாய் மொழி உத்தரவாதத்தை மட்டும் வைத்து விடுதலை செய்தது தவறுன்னு நிறைய ஆர்ட்டிக்கல்ஸ் பறந்திட்டு இருக்கு. அதுவும் ஜெ. விசாரணை கைதி அல்ல. தண்டனை கைதி. அப்படியான சூழலில் ஜஸ்ட் லைக் தட் ஜாமீன் கொடுத்திருக்கக்கூடாது. ஜாமீன் கொடுத்ததுக்கு சொல்லி இருக்கிற காரணங்கள் செம்ம காமடியா இருக்குனு மூத்த வழக்கறிஞர்கள் கூட கருத்து சொல்லி இருக்காங்க. ஜெ.வுக்கு ஏன் அந்த அளவுக்கு வளைஞ்சு கொடுக்கணும்னு எல்லாரும் கேட்டுட்டு இருக்கும்போது தான் பலத்த எதிர்ப்பையும் மீறி, மஞ்சுநாத்தை அஞ்சே அஞ்சு நாளுக்காக தலைமை நீதிபதியா பதவி உயர்த்தி கொடுத்திருக்காரு தத்தா.

இப்போதைக்கு நாம செய்யக்கூடியது வேடிக்கை பார்ப்பதும், விரைவில் விடுதலை பெற்று வந்து முதல்வராக பதவி ஏற்கவிருக்கும், தமிழகத்தின் நிரந்தர முதல்வர், பொன்மனசெல்வி, காவிரி தந்த கலைச்செல்வி, இதய தெய்வம், புரட்சி தலைவி அவர்களுக்கு பாராட்டு பத்திரமோ ப்ளெக்ஸ் பேனரோ போஸ்டரோ கவிதையோ எழுதுவதா தான் இருக்கும்.

சத்யமேவ ஜெயதே. ஜெய்ஹிந்த்

******************************

தொடர்புடைய பதிவுகள்:




தொடர்புடைய செய்திகள்:





Saturday, April 11, 2015

ஜெ. வழக்கு – இப்போதைய ஆப்ஷன்ஸ்

ருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த செப்டெம்பர் மாதம் 27 ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அவர்கள் கொடுத்த தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடும் தள்ளுபடி ஆனதால், உச்சநீதிமன்றத்து கதவுகளை தட்டிய ஜெவுக்கு சிறிய ஆறுதலாக மறு மேல் முறையீட்டுக்கு அனுமதியளித்தும் அதுவரை அவருக்கு ஜாமீனை வழங்கியும் சந்தோஷம் கொடுத்தது உச்சநீதிமன்றம்.

எனினும், மூன்று மாதங்களுக்குள் வழக்கை நடத்தி முடிக்க ஒத்துழைப்பு தரவேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் விதித்திருந்தது உச்ச நீதிமன்றம்.

உச்சநீதிமன்றம் சொன்னபடி கர்நாடகத்தில் சிறப்பு நீதிபதி திரு குமாரசாமி அவர்கள் முன்னிலையில் மிக வேகமாக நடைபெற்ற மேல்முறையீட்டு விசாரணை, கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் ஜாமீன், வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வரையே உள்ளதால், அதற்கு முன்பாக குமாரசாமி அவர்கள் தீர்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு என்பது ஜெ.வின் வாழ்க்கையை மட்டுமல்லாமல் தமிழகத்தின் எதிர்காலத்தையும் இந்திய அரசியல் களத்தையும் தீர்மானிக்கப்போகின்ற தீர்ப்பு ஆகையால் மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருப்பதை மறுக்க முடியாது.


மறு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை பல பல சுவாரசியமான நிகழ்வுகளை கொண்டதாக இருந்தது. முன்பு மிக கறாராகவும் ஊழலை ஆதரிக்க முடியாது என்கிற ரீதியிலும் சென்று கொண்டிருந்த விசாரணை மெல்ல தன் கடுமையை குறைத்து, இது பொய் வழக்காக கூட இருக்கலாம் என்கிற சந்தேகத்தை விதைக்கும் வகையிலான கருத்துக்களை கொண்டதாக மாறியது. உதாரணமாக டைல்ஸ் விலை ரூ. 100- 150 தான் இருக்குமென எனக்கே தெரியும். ரூ. 1800 என சொல்லி இருப்பதை நம்ப முடியவில்லை என நீதிபதியே கருத்து சொன்னது மிகப்பெரிய அதிர்ச்சி. ஜெ. தனது வீட்டுக்கு பயன்படுத்தியது டைல்சா மார்பிள்ஸா என்பதை கூட ஆராயாமல், ஜஸ்ட் லைக் தட் காமன் சென்ஸ் இல்லாமல் வழக்கு போடுவதா?’ என நீதிபதி சாடியது எல்லோருக்குமே ஆச்சரியம் தான். அதை தொடர்ந்து சொத்துக்களை மறு மதிப்பீடு செய்யவும் அவர் உத்தரவிட்டார். மொத்த வழக்கையும் சுருக்கமாக ரீவைண்ட் செய்தும் பார்த்தார்.

நல்லம்ம நாயுடு அவர்கள் நியமிக்கப்பட்டது தவறு என ஜெ. தரப்பு வாதாடியபோது, அந்த நியமனம் சரியானது எனவும் கருத்து சொல்லி இருக்கிறார் நீதிபதி. நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கையின் சந்தா தொகையின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அன்பழகன் தரப்பு வழக்கறிஞர்களை அனுமதிக்காதது போலவே, சுப்பிரமணியம் சாமியையும் வழக்கில் வாதாட அனுமதிக்காததும் எல்லோருக்கும் பல யூகங்களை உருவாக்கி விட்டது. வழக்கு நீர்த்து போய்விடும் என்கிற உணர்வு எல்லோருக்குமே தோன்றியதாலோ என்னவோ தமிழக அரசியல் களம் சட்டென மாறியது. ஒருவேளை ஜெ. விடுவிக்கப்பட்டால் முன்கூட்டியே தேர்தலை நடத்தக்கூடும் என யூகித்து அதற்கு தங்களை தயார்ப்படுத்தும் முயற்சியில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது தவறு என அன்பழகன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் செய்த மேல் முறையீடும் ஒரு புறம் நடந்துகொண்டிருந்தது. அவர்கள் அப்படி கேட்க காரணம், அரசு தரப்பு வழக்கறிஞர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றவாளி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டது தான். இதை கர்நாடக உயர்நீதிமன்றமே கூட கண்டித்து இருக்கிறது. எனவே, தண்டனை நிரூபிக்கப்பட்ட ஒரு வழக்கின் மேல் முறையீட்டில் குற்றவாளிகளுக்கு சாதகமான அரசு வக்கீல் இருந்தால் நீதி கிடைக்காது என்பது அன்பழகன் தரப்பினரின் வாதம். இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துவிட்டது. இந்த உச்ச நீதிமன்ற வழக்கிலே கூட, ஜெ. தரப்பு பவானி சிங் தான் இந்த வழக்கில் வாதாடவேண்டும் என ஒரு அபிடவிட்டை தேவையில்லாமல் தாக்கல் செய்திருக்கிறது. இதுவே அன்பழகன் தரப்பினரின் குற்ற சாட்டை உறுதி செய்வதாகவும் அமைந்திருக்கிறது.

அங்கே தான் ஒரு சுவாரஸ்யம்.

கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி இந்த வழக்கில் வாதாடிய அன்பழகன் தரப்பு வக்கீல், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரையில் கர்நாடக உயர்நீதிமன்ற மேல் முறையீட்டில் தீர்ப்பு வழங்க தடை கோரியபோது அப்படி எல்லாம் தரமுடியாது என மறுத்த உச்ச நீதிமன்றம், இந்த முறை சற்று தன் நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறது.

தீர்ப்பை ஒத்திவைத்து விட்டு மதிய உணவுக்கு சென்ற நீதிபதிகள், பின் திரும்பி வந்து அவசரம் அவசரமாக அன்பழகன் தரப்பு வக்கீல்களை அழைத்து, ஜெ.வின் ஜாமீன் எது வரை உள்ளது என கேட்டு இருக்கிறார்கள். ஏப். 18 வரை என்றதும், தங்களது தீர்ப்பை ஏப் 15 ஆம் தேதி தருவதாகவும், அதுவரை மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

இதில் தெரியவரும் / புரியவரும் விஷயங்கள் பல பல.. எனினும் சில விஷயங்களை மட்டும் இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.வின் ஜாமீனை ஏப்ரல் 18க்கு மேல் நீடித்து உத்தரவிடாதது ஒரு முக்கியமான விஷயம். ஏப்ரல் 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு ஏப்ரல் 18 வரை 3 நாட்களில் எந்த நாளில் வேண்டுமானாலும் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கக்கூடும்.

கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு இப்போது இருக்கும் ஆப்ஷன்ஸ் என கருதப்படுபவை:

1.   ஜெ. தரப்பு கோரியது போல இது வெறும் பொய் வழக்கு என தீர்மானித்து அவரை விடுதலை செய்யலாம்

2.   வழக்கின் இறுதி நாளில் சுப்ரமணியம் சுவாமி கொடுத்த அபிடவிட்டை கருத்தில் கொண்டு கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து, ஜாமீனை ரத்து செய்யலாம்

3.   அரசியல் சாசன சிக்கல் இருப்பதால் தீர்ப்பு எதுவும் வழங்காமல் உயர் பெஞ்சுக்கு வழக்கை பரிந்துரை செய்யலாம்

4.   பவானிசிங் நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானால், புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்க செய்து வழக்கை மீண்டும் முதலிலிருந்து விசாரிக்க உத்தரவிடலாம்

இதில் நான்காவது ஆப்ஷன் செயல்பட்டால், ஜெ.வுக்கு அது மிக மிக சாதகமாக அமையும். அதாவது அப்படி புதிய வழக்கறிஞர் நியமித்து மீண்டும் விசாரணை தொடரும் பட்சத்தில் ஜெ. தன் சார்பாக ஒரு மனு செய்தால் போதும். தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அவர்தான்.

அதாவது, “உச்சநீதிமன்றம் சொல்லியபடி நான் வழக்குக்கு உரிய முறையில் ஒத்துழைப்பு கொடுத்து கெடுவுக்கு முன்பே முடித்து கொடுத்துவிட்டேன். ஆனால் வழக்கறிஞர் நியமன விஷயத்தில் கர்நாடக அரசு செய்த தவறால் நான் பாதிக்கப்படக்கூடாது. எனவே எனது ஜாமீனை நீட்டித்தும் தண்டனையை ரத்து செய்தும் உத்தரவிடுங்கள்” என கோரினால் அந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அதை அனுமதித்தால், அவர் முதல்வராக பதவி ஏற்க எந்த தடையும் இல்லை.

கையோடு சட்டமன்ற தேர்தலை நடத்தி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சியை தக்கவைத்து கொண்டால், யாராலும் அவரை எதுவும் செய்ய முடியாது. காரணம், ஜெ.வுக்கு சாதகமாக ஒரு தீர்ப்பு (விடுதலை) வந்தால், அதை எதிர்த்து மேல் முறையீடு செய்யவேண்டியது வழக்கு தொடர்ந்த தமிழக அரசு தானே. அப்படி முறையீடு செய்யாமல் விட்டாலே போதும். வழக்கு முற்றிலுமாக முடிந்துவிடும். அதோடு இந்த பதினெட்டு ஆண்டு கால நீதிக்கான போராட்டம் முடிவுக்கு வந்துவிடும். இது சாத்தியம் தான். ஜெ தான் தமிழக முதல்வர் எனில் ஜெ.வுக்கு எதிரான வழக்கில் ஜெ. தலைமையிலான அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது எல்லோராலும் யூகிக்கக்கூடியதே.

ஆனால், ஒருவேளை உச்சநீதிமன்றம் பவானி சிங் நியமனம் செல்லும் என சொன்னாலோ, அல்லது நியமனம் செல்லாது ஆனாலும் வழக்கு முடிந்துவிட்டதால் கர்நாடக அரசு முன் தேதியிட்டு அவருக்கு நியமன ஆணை கொடுத்தால் போதும் என சொன்னாலோ நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றதாக மாறிவிடும்.

ஏற்கனவே மார்ச் 11 ஆம் தேதியே வழக்கை முடித்துவிட்டு தீர்ப்பு தயாரிப்பில் இருக்கும் குமாரசாமி அவர்கள் இந்நேரம் தீர்ப்பை வடிவமைத்திருப்பார். ஏனெனில் ஏப் 13 க்குள் தீர்ப்பு சொல்லவேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. இப்போது ஐந்து நாள் நீட்டித்து ஏப் 18 வரை கால அளவு கிடைத்திருக்கிறது. அவர் காத்திருக்கவேண்டியது பவானி சிங் வாதாடியது செல்லுமா செல்லாதா என்கிற ஒரு விஷயத்துக்கு தான்.

விசாரணையின் போது நீதிபதி குமாரசாமி சொல்லிய சில கருத்துக்கள் முக்கியமானவை.

1.   டைல்ஸின் விலை கற்பனையாக உயர்த்தி காட்டப்பட்டிருக்கிறது. எனக்கு தெரிந்தே அப்போது ரூ. 100-150 வரை தான் விலை இருக்கும். ஆனால் வழக்கில் ரூ. 1800 என காட்டப்பட்டு இருக்கிறது.

2.   நமது எம்.ஜி.ஆர் நாளிதழுக்கு சந்தா கிடைத்ததை எல்லாம் சந்தேகப்பட முடியாது. ஒரு பத்திரிக்கைக்கு சந்தாதாரர் இருப்பது இயல்பு. அந்த சந்தாக்களுக்கு ரசீதும் உள்ளது.

3.   திமுக இந்த வழக்கில் ஆர்வம் காட்டுவது ஏன். அவர்களது அதீத ஆர்வம் இந்த வழக்கின் நோக்கத்தை சந்தேகத்துக்குள்ளாக்குகிறது.

4.   ஜெ. முதல்வர் ஆவதற்கு முன்பே அவருக்கு வருமானம் இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் முன்பே வருமான வரி கட்டி வந்திருக்கிறார் என்பதை வழக்கு விசாரணை அதிகாரி கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என தோன்றுகிறது.

5.   புடவைகள், ஆபரணங்கள், செருப்புகள் போன்றவை முதல்வர் பதவிக்காலத்தில் தான் வாங்கப்பட்டன என்பதை நிரூபிக்கவில்லை.

6.   சுதாகரன் திருமண செலவை கட்சியினர் தான் ஏற்று கொண்டதாக சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் அந்த செலவை ஜெ.வின் செலவாக காட்ட முடியாது.

7.   சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஜெ.வீட்டில் வாசித்ததாலேயே அவர்கள் கூட்டு சதியில் ஈடுபட்டார்கள் என சொல்லமுடியாது. அதை நிரூபிக்கும் ஆவணங்கள் எதுவும் இல்லை.

என பல பல சாதகமான கருத்துக்களை சொல்லி இருக்கிறார் நீதிபதி. இதிலிருந்து தான் அவர் ஜெ.வுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லக்கூடும் என்கிற யூகம் உருவாகி இருக்கக்கூடும்.

ஆனால் அவர் ஜெ.வுக்கு எதிரான கருத்துக்களையும் சொல்லி இருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். அதில் முக்கியமானவை

1.   நீதிபதி குன்ஹா 150 முடிச்சுகளை தனது தீர்ப்பில் இட்டிருக்கிறார். அவற்றை ஒவ்வொன்றாக ஆதாரபூர்வமாக அவிழ்க்காமல் என்னால் எதுவும் செய்ய முடியாது.

2.   நீங்கள் (ஜெ. தரப்பு) எல்லா செலவுகளுக்கும் கணக்கும் ஆவணங்களும் இருக்கிறது என வாய்மொழியாக சொல்கிறீர்களே தவிர இதுவரையும் ஒரு ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை. ஆவணங்கள் இல்லாவிட்டால் அவற்றை கணக்கில் வராத செலவாகவே கருதமுடியும்.

3.   கடந்த 18 ஆண்டுகாலமாக இந்த வழக்கில் வருமானத்துக்கான எந்த ஆதாரத்தையும் நீங்கள் தாக்கல் செய்யவில்லை.

4.   இந்த மேல் முறையீடு வழக்கு என்பது நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பு சரியா தவறா என்பதை தீர்மானிப்பதற்கு தானே தவிர வழக்கை மறு விசாரணை செய்வதல்ல.

5.   நல்லம்மநாயுடு நியமனம் செய்யப்பட்டது தவறல்ல. காவல்துறையின் எந்த அதிகாரியும் அதை விசாரிக்கலாம்.

சிற்சில நேரங்களில் ஜெ.வுக்கு எதிரான கருத்துக்களை சொன்னாலும், பொதுவாக வழக்கு விசாரணை நடந்த நாட்களில் சொல்லப்பட்ட கருத்துக்கள் இது ஒரு ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்கிற தோற்றத்தையே தந்ததாலோ என்னவோ ஜெ. விரைவில் விடுதலை ஆகிவிடுவார் என்றே பலரும் எதிர்பார்க்கிறார்கள்.


ஆனால் வழக்கு விசாரணையின் கடைசி நாளில் திரு. சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் தாக்கல் செய்த 14 பக்க பிரமாணம் அதை மாற்றி விட்டது. இந்த வழக்கின் துவக்கம், தன்மை, எப்படி எல்லாம் ஜெ. முறைகேடு செய்திருக்கிறார் என்பதை எல்லாம் தெளிவாக விவரித்து இருக்கும் அந்த அபிடவிட்டை நீதிமன்றமும் ஏற்று கொண்டிருக்கிறது. அந்த அபிடவிட்டை புறக்கணித்துவிட்டு தீர்ப்பை எழுத முடியாது என்பது தான் நிலை.

எனவே இந்த வழக்கை பொறுத்தவரை கணிப்புக்களுக்கும் யூகங்களுக்கும் சிக்காமல் மிகுந்த சஸ்பென்சாக இருக்கிறது முடிவு. 90% விடுதலைக்கும் 5% கைதுக்கும் 5% டிவிசன் பெஞ்ச் போவதற்குமே வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்.

பார்ப்போம் என்ன தான் நடக்கிறது என்று. இன்னும் ஒரு வாரம் தானே?



Printfriendly