Showing posts with label Madurai. Show all posts
Showing posts with label Madurai. Show all posts

Tuesday, January 12, 2016

ஜல்லிக்கட்டு – இருக்கா இல்லையா?

மிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்து மத்திய அரசு 2011 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அரசாணை வெளியிட்டதில் தொடங்கியது இந்த அரசியல் விளையாட்டு.

2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் அரசாணையை அங்கீகரித்து தீர்ப்பு சொன்னது.

அதன் பின் இத்தனை நாள் மெத்தனமாக இருந்துவிட்டு இப்போது ஜல்லிக்கட்டை நடத்தியே ஆகணும்னு எல்லாரும் ஒத்தை காலில் நிக்க ஆரம்பிச்சிருக்கிறதுக்கு தேர்தல் மட்டுமே காரணம் என நான் சொல்லமாட்டேன்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் ஒட்டும் உறவுமான ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்தவேண்டும் என்கிற ஆவலும் வேட்கையும் ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் எப்போதும் இருப்பது தான். ஆனால் நீதிமன்ற தடையை விலக்குவதற்கான எந்த நடவடிக்கையையும் அரசும் மக்களும் எடுக்காமல், மத்திய அரசின் மூலமாக ஒரு அரசாணையை பெறுவதற்காக மட்டுமே போராடியதன் வெற்றி தான் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி மத்திய அரசு ஜல்லிக்கட்டை அனுமதித்து வெளியிட்ட அரசாணை.

அந்த அரசாணை வெளியிட்டது சரியா? அது சட்டப்படி செல்லுமா? உச்சநீதிமன்ற தடையை மத்திய அரசின் அரசாணையால் தகர்க்கமுடியுமா என்கிற தர்க்கரீதியான ஆய்வுகள் எதையும் செய்யாமல், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை போற்றி புகழ்வதிலும் கொண்டாடுவதிலுமே நாம் காலத்தை கடத்திக்கொண்டிருந்ததால், அந்த மத்திய அரசின் அரசாணைக்கு எதிராக PETA உச்சநீதிமன்றம் சென்று இன்று தடையானை வாங்கிவிட்டது.


ஜல்லிக்கட்டை முன்பு தடை செய்து உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திருமதி பானுமதி அவர்கள் தான் இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிப்பதாக இருந்தது. நல்லவேளையாக அவரே தானாக முன்வந்து இந்த வழக்கில் இருந்து விலகிக்கொண்டதால் நீதிபதிகள் தீபக் மிஸ்ராவும் என்.வி. ராமனாவும் வழக்கை விசாரித்திருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு என்பது மனித விழாவில் மிருக விளையாட்டு என்பதால் அதை விலங்குகளின் வழக்கத்துக்கு மாறான கொடூரம் என குறிப்பிட்டு, தடையை நீடித்திருக்கிறார்கள். அதாவது புதிதாக தடை விதிக்கவில்லை. ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு விதித்த தடையையும், அதை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் 2014 ஆண்டின் உத்தரவையும் மீண்டும் தொடர செய்திருக்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதானால், 2011 ஆம் ஆண்டின் அரசாணையையும், 2014 ஆம் ஆண்டின் தீர்ப்பையும் மீறி இப்போது ஜனவரி 7 ல் மத்திய அரசு வெளியிட்ட அரசாணை செல்லாது என்று சொல்லி இருக்கிறார்கள். சட்ட ரீதியில் இது சரியே!

ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது எனது நிலைப்பாடாக இருந்தாலும் அதை சட்ட ரீதியில் போராடி, நீதிமன்றத்தில் வழக்காடி, இந்த விளையாட்டின் தாத்பரியங்களை விளக்கி, பாரம்பரியமிக்க இந்த விளையாட்டை சட்டப்பூர்வமாக நடத்த அனுமதி பெற்று நடத்தி இருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். மாறாக சட்ட ரீதியான முயற்சிகள் எதுவும் செய்யாமல் குறுக்கு வழியில் அரசாணை வெளியிடவைத்து சிறுமைப்பட்டிருக்கவேண்டாம் என்கிற வருத்தமும் இருக்கிறது.

தடையாணை கேட்டு PETA உச்ச நீதிமன்றத்துக்கு ஓடிய வேகத்தில் பாதியாவது கடந்த ஒரு வருஷத்தில் நமக்கு இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. இருந்திருந்தால் சட்ட ரீதியாக உச்சநீதிமன்றத்தில் வாதாடி முறையான அனுமதி பெற்றிருக்க முடியும். அதை விட்டுவிட்டு அவரையும் இவரையும் கெஞ்சி ஒரு அரசாணை வாங்கி நீதிமன்றத்தால் அது செல்லாது என பட்டவர்த்தனமாக வாங்கி கட்டி கொண்டிருக்கவேண்டாம் நாம்.

அரசுக்கு பதில் மனு தாக்கல் செய்ய இன்னும் நிறைய அவகாசம் இருந்தாலும், பொங்கல் நெருங்கும் இந்த நேரத்தின் அவசரம் கருதி இப்போதேனும் சுதாரித்து உச்ச நீதிமன்றத்தை அவசரமாக அணுகி, தகுந்த வழக்கறிஞ்சரை வைத்து விளக்கி வாதாடி இந்த பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்பதே எனது ஆவல். அதற்கு தக்கதாக உத்வேகத்தை நமது அரசுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக!



Saturday, April 18, 2015

மதுரைக்கு WAP-7


பேப்பர்ல எதேச்சையா தான் அந்த செய்தியை பார்த்தேன். கூடிய விரைவில் மதுரைக்கு ஒரு WAP – 7 எஞ்சினை சதர்ன் ரயில்வே ஒதுக்கப்போகுதாம். அதுக்கான பயிற்சியை திருச்சியில் தந்துட்டு இருக்காங்களாம். இருங்க இருங்க.. திட்டாதீங்க... தெளிவாவே சொல்றேன்.
முதலில் WAP-7 னா என்னான்னு தெரிஞ்சுக்கணும்னா இந்தியன் ரயில்வே பத்தின சில அடிப்படை விஷயங்களை சுருக்கமா தெரிஞ்சுக்கணும். அதனால இந்த முன்கதை சுருக்கம்.


பெங்களூர் - புதுடெல்லி ராஜ்தானி - WAP7 எஞ்சினுடன் 
இந்தியன் ரயில்வேயில் மூணு வகையான வழித்தடம் இருக்கு. அகல ரயில்பாதை, மீட்டர் பாதை, குறுகிய பாதை. இதில் தமிழகத்தில் இருந்த மீட்டர் கேஜை எல்லாம் அகல ரயில்பாதையா மாத்திட்டு வருது தென்னக ரயில்வே. தமிழகத்தில் மட்டும் தான் அதிவேகமா அத்தனை பாதையையும் மாத்திட்டு வர்றாங்க. (இதை சொன்னா மாய உலகத்தில் இருக்கிறவங்க சண்டைக்கு வருவாங்க.)
இரண்டு வகையான ரயில் இன்ஜின் இருக்கு இந்தியாவில். டீசலால் இயங்கும் Diesel Locomotive & மின்சாரத்தால் இயங்கும் Electric Locomotive.
இந்த இன்ஜின்களில் நிறைய வகைகள் இருக்கு. சக்திக்கு ஏற்ற மாதிரி, அது இணைக்கப்படும் ரயில்களின் வகைக்கு ஏற்ற மாதிரி. உதாரணமா சரக்கு ரயில்களுக்கு சக்திவாய்ந்த என்ஜின் வேணும். பயணிகள் ரயிலுக்கு சக்தி குறைவா இருந்தா போதும். எக்ஸ்பிரஸ் இன்னும் கொஞ்சம் சக்தி கூடுதலா வேணும். அதி வேக ரயிலுக்கு இன்னும் கூடுதல் சக்தி உள்ள என்ஜின்.
இப்படியான எஞ்சினை குறியீடுகளால் வகை படுத்தி வெச்சிருக்காங்க. நீங்க எஞ்சின்ல முன்னாடி பார்க்கலாம். WDG2, WAP4, WDM3 னு எழுதிருப்பாங்க. நிறைய வகைகள் இருக்கு. இந்த குறியீடு பத்தி சுருக்கமா விளக்கிடுறேன்.
முதல் எழுத்து எந்த வகையான பாதைன்னு சொல்லும். அதன் படி W – அகல பாதை (Broad Guage), Y – மீட்டர் கேஜ் பாதை (Meter Guage), Z – குறுகிய பாதை (Narrow Guage), N – குறுகிய பாதையில் இயங்கும் பொம்மை ரயில் (Narrow Guage Toy Train)
ரெண்டாவது எழுத்து என்ன வகையான எஞ்சின்னு சொல்லும். அதன் படி D – டீசல் இன்ஜின், A – மின்சார என்ஜின் (இவை தான் இப்ப இந்தியாவில் இருக்கு) இதுக்கு முன்னால CDC கரண்டில் இயங்கும் இன்ஜின், CA – இரண்டு வகையான மின்சாரத்திலும் (அதாவது AC, DC இரண்டு வகை மின்சாரத்திலும்) இயங்கும் இன்ஜின், B – பேட்டரியில் இயங்கும் இன்ஜின் எல்லாம் இருந்தது. இப்ப அவை அதிகமா இல்லை. நாம D & A மட்டும் வெச்சுக்கலாம்.
மூணாவது எழுத்து என்ன வகையான ரயிலுன்னு சொல்லும். அதன் படி G – சரக்கு ரயில், P – பயணிகள் ரயில், M – இரண்டு வகையான ரயிலுக்குமான என்ஜின், S – ஷண்டிங்க் செய்வதற்கு மட்டும் (உதாரணமா சென்னை சென்டிரல் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை பேசின் பிரிட்ஜ் யார்டுக்கு தள்ளிட்டு போக்குதுல்ல, அந்த என்ஜின்), U – மல்டிப்பில் யூனிட்டுக்கான என்ஜின்
நாலாவது எழுத்து அதன் சக்தியை குறிக்கும். அதன் படி 1 – 1000 HP சக்தி, 4 – 4000 HP சக்தி, 5 – 5000 HP சக்தி. சப்போஸ், 3A னு இருந்தா – 3 = 3000 HP, A = 100 HP. மொத்தம் 3,100 HP. இதான் லாஜிக்
இப்ப நீங்க எந்த எஞ்சினை பார்த்தாலும் அந்த குறியீட்டை வெச்சே கண்டுபிடிச்சிர முடியும் தானே? உதாரணம் பார்ப்போமா?
WDG4 – அகல ரயில்பாதையில், டீசலில் இயங்கும், சரக்கு ரயில், 4000 HP சக்தி உள்ள என்ஜின்
WAP5 – அகல ரயில்பாதையில், மின்சாரத்தில் இயங்கும், பயணிகள் ரயில், 5000 HP சக்தி உள்ள என்ஜின்
YDM2 – மீட்டர் கேஜ் பாதையில், டீசலில் இயங்கும், பயணிகள் / சரக்கு ரயில்களை இழுக்கும் 2000 HP சக்தி உள்ள என்ஜின்
புரிஞ்சுதுல்ல?
ஈரோடு பணிமனையின் WAP-4 என்ஜின்

தமிழகத்தை பொறுத்த வரைக்கும், பயணிகள் ரயிலுக்கு பொதுவா WAP4 (ஆரஞ்சு கலர் ஏரோ டைனமிக் ஸ்டைல் என்ஜின்) அல்லது WDP4 தான் உபயோகிப்பாங்க. அதிக வேகம் இல்லை. ஜஸ்ட் 100 கிமீ வேகம் தானே. ஆனா சில அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு WAP5 உபயோகிப்பாங்க.
இந்த WAPல குறைந்த சக்தி என்ஜின்கள் இருந்த காலத்தில் (WAP3) தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ரெண்டு என்ஜின் போட்டு இழுத்துட்டு போவாங்க. ஸ்பீடு கிடைக்க. கிராண்ட் டிரங்க், கேரளா எக்ஸ்பிரஸ் எல்லாம் கூட ரெண்டு இன்ஜின் வெச்சு இழுத்த ரயில்கள் தான்.
இப்ப WAP5 வந்தப்பறம் அது தான் பெஸ்டு இஞ்சினா இருந்துச்சு. ராஜ்தானி, ஷதாப்தி, துரந்தோ எல்லாம் WAP-5 இன்ஜின் வெச்சு தான் இழுத்துட்டிருக்கு.
இதை விட அதிக சக்திவாய்ந்த இன்ஜின் வேணும்னு தேவை இருப்பதால், மேற்கு வங்காளத்திலுள்ள சித்தரஞ்சன் ரயில் என்ஜின் தொழிற்சாலையில் 2010 இல் அதி வேக எஞ்சினான WAP-7 தயாரிச்சாங்க. (இதன் வேகம் கிட்டத்தட்ட மணிக்கு 210 கி.மீ வரை). இந்த WAP-7 தயாரிக்கறதுக்கு முன்னாடியே WAG-9 செஞ்சிருக்காங்க, சரக்கு ரயிலுக்காக. அது வெற்றிகரமா இயங்குனதால, அதன் பயணிகள் ரயில் வெர்ஷன் WAP-7 செஞ்சாங்க, சில மாற்றங்களுடன்.
முதல் இஞ்சினுக்கு நவ்கிரண் னு பேர் வெச்சாங்க. என்ஜின் நம்பர் 30201. அடுத்தடுத்த என்ஜின்கள் நவ் பாரதி’, நவ் சேடக்’, நவ் கட்டின்னு பேர். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 60 எஞ்சினுக்கு மேல செஞ்சாச்சு சித்தரஞ்சன்ல.
மும்பை - புதுடெல்லி ராஜ்தானி WAP-7 - துரந்தோ நிறத்தில்
இந்த எஞ்சினுக்கு பொதுவா வெள்ளை நிறம் தான் கொடுக்கப்படுது (White Livery) ஒரு கிராண்ட் லுக் கிடைக்கும்ங்கறதுக்காக. (ஆனா மும்பை டெல்லி ராஜ்தானிக்கு மட்டும் துரந்தோவின் மல்டி கலர் நிறம்).
இந்த WAP-7 என்ஜின் மிக அதிக சக்தி மட்டுமல்ல. நிறைய நவீன தொழில்நுட்பங்களும் கொண்டது. ஸ்டேஷன்லருந்து எடுக்கும்போதும், ஸ்டேஷனுக்கு வந்து நிக்கும்போதும் அதன் ஸ்மூத் மூவ்மெண்ட்ட அனுபவிச்சு பார்த்தா தான் தெரியும். அந்த அனுபவுத்துக்காகவே நான் சில முறை WAP-7 பயன்படுத்தும் ரயில்கள தேடி தேடி பயணிச்ச காலம் இருக்கு. அதிவேகம், பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பம், சொகுசுன்னு பல வகைகளில் இந்த WAP-7 என்ஜின் பல பயணிகளின் தேர்வா ஆயிருச்சு. முதலில் ராஜ்தானி, ஷதாப்தி, துரந்தோ மாதிரியான ரயில்களுக்கு மட்டுமிருந்த இந்த என்ஜின் இப்ப எல்லா முக்கிய எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் இணைக்க ஆரம்பிச்சிருக்காங்க.
இந்த WAP-7 இன்ஜின்கள் சில குறிப்பிட்ட டெப்போக்களில் மட்டும் தான் இருக்கு. தென்னக ரயில்வேயில் சென்னை ராயபுரம் டெப்போவில் மட்டும் தான் இருக்கு. ராயபுரம் டெப்போவில் இருக்கும் என்ஜின்கள் பயன்படுத்தப்படும் ரயில்கள்:
சென்னை – கோவை இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ்
சென்னை – கோவை ஷதாப்தி எக்ஸ்பிரஸ்
சென்னை – கோவை கோவை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
சென்னை – மேட்டுபாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் (கோவை வரை)
சென்னை – திருவனந்தபுரம் சூப்பர் ஃபாஸ்ட் மெயில்
சென்னை – திருவனந்தபுரம் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
சென்னை – ஆலப்புழா எக்ஸ்பிரஸ்
சென்னை – பெங்களூரு ஷதாப்தி எக்ஸ்பிரஸ்
சென்னை – பெங்களூரு டபிள் டெக்கர் எக்ஸ்பிரஸ்
சென்னை – புதுடெல்லி கிராண்ட் டிராங்க் எக்ஸ்பிரஸ்
சென்னை – புதுடெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்
அவ்வளவு தான்.
சென்னையிலிருந்து முழுசா மின்மயமாக்கப்பட்ட அதிவேக ரயில் பாதையில் மட்டும் தான் இந்த இன்ஜின் இயக்கப்படுதுன்றது மேலே உள்ள விவரங்களை பார்த்தாலே தெரியும். மேலும் இந்த ரயிலை பராமரிக்க ராயபுரத்துக்கு வந்தாகணும். அதனால் சென்னையை அடிப்படையா வெச்சு இந்த இன்ஜின்கள் இயக்கப்படுது.
கவுதமி எக்ஸ்பிரஸ் - லல்லாகுடாவின் WAP-7 எஞ்சினுடன்

இப்ப சென்னை – திருச்சி – மதுரை – நெல்லை – திருவனந்தபுரம் பாதையும் முழுசா மின்மயமாக்கப்பட்டாச்சு. எந்த பரபரப்பும் விளம்பரமும் இல்லாம இயல்பா அந்த மின்பாதையை செயல்பாட்டுக்கும் கொண்டுவந்து அதில் மின்சார ரயிலை இயக்கிட்டு இருக்காங்க தென்னக ரயில்வே. அதனால் அந்த ரூட்டிலும் ஒரு என்ஜின் விடலாமேன்னு (யாருடைய கோரிக்கையும் இல்லாமலேயே!) யோசிச்ச தென்னக ரயில்வே முதல்கட்டமா ஒரு சோதனை முயற்சியா குருவாயூர் எக்ஸ்பிரஸ்சில் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி வரை இயக்கி பார்த்தாங்க. அது வெற்றிகரமா செயல்பட்டதால், முதல்கட்டமா ரெண்டு எஞ்சின்களை அந்த ரூட்டில் பயன்படுத்த போறாங்க. மதுரை டிவிஷனுக்கு ஒண்ணு, திருச்சி டிவிஷனுக்கு ஒண்ணுன்னு முடிவு பண்ணி, அந்த டிவிஷன்ல இருக்கும் திறமையான என்ஜின் டிரைவர்களை தேர்ந்தெடுத்து திருச்சி பொன்மலையில் (Golden Rock Loco Works) பயிற்சி கொடுத்துட்டு இருக்காங்க இப்ப. ஏன்னா WAP-7 ஏற்கனவே சொன்ன மாதிரி நவீன தொழில்நுட்பங்கள் நிறைஞ்ச இன்ஜின். அதை கையாள தனி திறமை வேணும்ல? அதனால தான் இந்த சிறப்பு பயிற்சி.
மதுரைக்கு ஒரு வழியா WAP-7 வருதுங்கறது ரொம்ப சந்தோஷமான விஷயம் எனக்கு. மதுரைக்கும் எனக்குமுள்ள பந்தம் அப்படி. அது தனி கதை.
இப்ப என் ஆர்வம் எல்லாம், எந்த ரயிலுக்கு அதை பயன்படுத்துவான்கன்றது தான். திருச்சி டிவிஷன்ல அந்த எஞ்சினை பயன்படுத்தக்கூடிய ரயில்னு எதுவும் இருக்கறதா தெரியலை. வேணும்னா, காரைக்குடி – சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ்சில் திருச்சி – சென்னை செக்ஷன்ல இணைக்கலாம்.
ஆனா மதுரைல அப்படி இல்லை. பாண்டியன், வைகை இரண்டுக்குமே அதை இணைக்க முடியும். மதுரை – டெல்லி சம்பர்க் கிரந்திக்கும் இணைக்கலாம். எந்த ரயிலுக்கு அதை இணைக்கப்போறாங்க எனும் ஆர்வம் இன்னும் அடங்கலை. அறிவிப்பு எப்ப வரும்னும் தெரியலை. அதே மாதிரி அந்த எஞ்சினுக்கு என்ன பேரு வெப்பாங்கான்னும் ஒரு ஆர்வ கேள்வி எழுது எனக்கு. இதுவரைக்கும் வந்த எல்லா எஞ்சினுக்கும் ஹிந்தி பேரு தான் இருந்துச்சு. அட்லீஸ்ட் மதுரை எஞ்சினுக்காவது மீனாட்சினு பேரு வெச்சா நல்லா இருக்கும்லனு ஒரு நப்பாசை. பார்ப்போம். 
மதுரைக்காரவிங்க அந்த ரயில் வந்ததும் ஒரு முறை அதில் பயணம் பண்ணி பாருங்க. நான் ஏன் இப்படி லூசு மாதிரி இந்த இஞ்சினுக்கு எல்லாம் எக்ஸைட்டிங் ஆகிறேன்னு உங்களுக்கே புரியும்.

***************

தொடர்புடைய பதிவுகள்

ரயில்வே - தமிழகத்தின் பார்வையில் – பாகம் 1
ரயில்வே - தமிழகத்தின் பார்வையில் – பாகம் 2
சேலம் கோட்ட ரயில்வே – தீரா பிரச்சனை
தமிழகமும் ரயில்வே துறையும்!
இனியேனும் திருந்துமா ரயில்வே?
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம்!

Printfriendly