Showing posts with label Chennai. Show all posts
Showing posts with label Chennai. Show all posts

Saturday, December 5, 2015

புயல் மழையும் புரட்சி தலைவியும்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க.....

தமிழகத்தில் சமீபகாலமாக இது தான் அடிக்கடி காதில் விழும் வாக்கியம். தமிழகத்தின் இயங்கு சக்தியே அம்மா தான் என்பது இங்கு எழுதப்படாத விதி. மெத்த படித்த ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகளும், அமைச்சர்களும் கூட தினசரி என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிப்பவர் அம்மா தான் என்பதாக உள்ளது நிலைமை.  அரிசி ரேஷனில் இடுவதில் தொடங்கி அணை நிரம்பினால் திறந்துவிடுவது வரை அம்மா ஆணைக்கிணங்கவே இங்கு எதுவும் செயல்பாடு கொள்கிறது.

அதில் தவறொன்றும் இல்லை. முதல்வர் புரட்சி தலைவி முகத்துக்காக தான் கடந்த 2011 ஆம் ஆண்டும் அதற்கு முன்பும் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு விழுந்தது. அவர் ஆட்சி செய்வதற்காக யாரை எந்த பதவியில் அமர்த்தினாலும் அது ஒரு பெரிய பொருட்டல்ல, யாருக்கும். அம்மா முதல்வராக இருந்தாலே போதும், நிர்வாகம் சிறப்பாக இருக்கும். இரும்புக்கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதாகட்டும், தவறுகள் மீது தயவு தாட்சணியம் இன்றி நடவடிக்கை எடுப்பதாக இருக்கட்டும், மக்களுக்கு தாயுள்ளத்துடன் உதவி செய்வதாகட்டும், முற்போக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதாகட்டும், அதிகார வர்க்கத்தை கட்டுக்குள் வைத்து நலத்திட்டங்களை செயல்படுத்துவதாகட்டும்.. எல்லாவற்றிலும் மிளிர்ந்து ஒரு சிறந்த நிர்வாகி என பெயரெடுத்தவர் அம்மா. இவை தான் தமிழகத்தில் அம்மா குறித்தான பிம்பம்.

சமீபத்தில் பெய்த புயல் மழை அந்த பிம்பத்தை மொத்தமாக தகர்த்தெறிந்து புரட்சி தலைவியின் உண்மை முகத்தை உலகுக்கு காட்டிவிட்டது தான் தமிழகத்தில் இப்போது திடீரென தோன்றியிருக்கும் பெரும் அதிருப்திக்கான காரணம்.

தமிழகத்தின் மிக பெரும் வெள்ள சேதங்களில் ஒன்றாக சென்னையின் இப்பெருமழைக்காலம் சேர்ந்துகொண்டிருக்கிறது. சோகம் என்னவென்றால் அந்த சேதங்களை முன்கூட்டியே கணித்து நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் திராணியும் இருந்தும் நாம் வாளாவிருந்தது தான். கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம்.

மத்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம், தமிழகத்தில் கன மழை காணும் என போன மாதமே எச்சரிக்கை விடுத்திருந்தது. மத்திய அரசின் எச்சரிக்கை என்பதால் வழக்கம்போல நாம் அதை அதிகமாக கண்டுகொள்ளவில்லை. பெய்து தீர்த்த மழை தாண்டவமாடிக்கொண்டு இருக்கிறது.. இன்னமும்.

சென்னை மிக சிறந்த வடிகால் அமைப்புக்களை கொண்ட நகரங்களுள் ஒன்று. சுனாமி நேரத்தில் தொடர்ச்சியாக 10 நாட்கள் பெருமழை பெய்தபோதும், நீர் தேங்கி நிற்கவில்லை. அவ்வப்போது 1995, 1998, 2002, 2005, 2006, 2008, ஆகிய வருடங்களில் அபரிமிதமான மழைப்பொழிவு இருந்தபோதும், வெள்ள தேக்கம் என்பது மூன்று நாட்களுக்கு மேல் நீடித்ததில்லை. ஆனால் இப்போது மட்டும் என்ன வந்தது சென்னைக்கு?



இந்த முறை துல்லியமாக கணித்திருந்தும், பலத்த எச்சரிக்கை வந்திருந்தும், நாம் வாளாவிருந்துவிட்டோம். எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுவாக கனமழை எச்சரிக்கை வந்தால், தமிழக அரசு சென்னையை சுற்றி உள்ள எரிகளின் / அணைகளின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்கை காலி செய்து வைக்கும். அதாவது முன்கூட்டியே சிறுக சிறுக நீரை வெளியேற்றி முக்கால் வாசி ஏரியை/அணையை காலியாக வைத்திருக்கும். பொதுப்பணி துறையினர் இதற்காகவே இரு வாரங்களுக்கு ஒரு முறை வானிலை ஆய்வு மையத்திலிருந்து அறிக்கைகள் பெற்று அதன் அடிப்படையில் செயல்படுவார்கள். இப்படி காலி செய்து வைப்பதால், மழை பொழிவின் பொழுது எல்லா நீரும் அணையில்/ஏரியில் சேகரிக்கப்பட்டு மீண்டும் அது முழு கொள்ளளவை எட்டிவிடும். ஒரு வேளை எதிர்பார்த்ததை விட அதிகமாக மழைப்பொழிவு இருந்தால் அதற்கு தக்கபடி சிறுக சிறுக உபரி நீரை வெளியேற்றுவார்கள். இதன்மூலம் ஏரி/அணை நீர் அவற்றிலேயே தேக்கிவைக்கப்படும், உபரி நீர் மட்டுமே வெளியேறும். நகரத்தில் வெறும் மழை நீர் மட்டும் தான் இருக்கும். அது வடிவதற்கான தக்க வடிகால் வசதிகள் சென்னையில் ஏற்கனவே உள்ளது.

இந்த முறை, முன்கூட்டி எந்த ஏரியும் / அணையும் திறந்துவிடப்படவில்லை. மழை தொடங்கும்போது எரிகளும் அணைகளும் கிட்டத்தட்ட நிறைந்திருந்தன. மழை கொட்டி தீர்த்தபோது ஏரியை திறந்துவிட வேண்டியதாயிற்று. அப்படி திறந்துவிடாவிட்டால் ஏரிகள் உடைந்துவிடும் அபாயம். (அப்படியும் காலதாமதமாக சாவதானமாக திறந்து விட முடிவெடுத்து சோதப்பியதில் சில ஏரிகள் உடைத்துக்கொண்டன என்பது தனி கதை). ஏற்கனவே நகரில் தேங்கி இருந்த மழை நீரில் இப்படி திறந்துவிடப்பட்ட ஏரி / அணை நீரும் சேர்ந்துகொள்ள சென்னை வெள்ளக்காடானது. மேலும் ஒரு கொடுமையாக மழை நிற்காமல் பெய்துகொண்டே இருந்ததால் மேலிருந்து வரும் மழை நீரும் இவற்றுடன் சேர்ந்துகொண்டது. சரி.. அப்போ வடிகால்? அது என்ன ஆனது?

சென்னை மெட்ரோ ரயில் சுரங்க பணிகளுக்காக பெரும்பாலான வடிகால்கள் முன்பே தகர்க்கப்பட்டு விட்டன. சுரங்கம் தோண்டுகையில் அதனுள் வெள்ளம் வந்துவிடாமல் இருக்கும் பொருட்டு அது செய்யப்பட்டது. அதில் தவறில்லை. ஆனால் அரசு / மாநகராட்சி உடனே அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்திருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை.

ஒருபக்கம் அபரிமிதமான வெள்ளம், மறுபுறம் வடிகால் வசதி இல்லாமை. இரண்டும் சேர்ந்து வெள்ளத்தை கட்டவிழ்த்து விட்டு கண்டபடி எல்லா இடங்களுக்கும் பாய வைத்துவிட்டது. ஹைவேக்கள், குடியிருப்புக்கள் என எல்லா இடத்தும் வெள்ளம்.

இது தான் தமிழக அரசுக்கான முதல் அடி. முறையாக திட்டமிடாமை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமை. இரண்டும் சேர்ந்து சிறந்த நிர்வாகியான அம்மாவின் நிர்வாகத்திறமையை கேள்வி குறி ஆக்கிவிட்டது.

சரி.. வெள்ளம் வந்துவிட்டது... இனி என்ன செய்யவேண்டும்?

பொதுவாக அரசு வெள்ள பாதிப்பு நேர்ந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அவற்றை தற்காலிக தங்கும் இடமாக அறிவிப்பார்கள். அங்கே தகுவதற்கான ஏற்பாடுகளை செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை அங்கே கொண்டு செல்ல ஏற்பாடு செய்வார்கள். அவர்களுக்கான உணவு, உடைகள் விநியோகிக்கப்படும். மழைக்கால தொற்று நோய் பரவாமல் இருக்க அவர்களுக்கு மருந்துகள் மாத்திரைகள் கொடுக்கும். இதெல்லாம் தான் வழக்கமான நடைமுறை.

ஆனால் இந்த முறை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததோடு சரி. மற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட ஏழு நாட்களுக்கு பிறகு தான் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. பதினொரு நாட்களுக்கு பின் தான் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. உணவு, குடிநீர், மருந்துகள் இன்று வரை அரசால் விநியோகிக்கப்படவில்லை.


தீயணைப்பு & மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் முழுமையாக ஈடுபடத்தப்படவில்லை. அரக்கோணம் கடற்படை தளத்தில் 6 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் இருந்தும் அவற்றை இன்று வரை பயன்படுத்தி கொள்ளவில்லை. அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட அனுமதி கொடுக்கப்பட்டதா எனவும் தெரியவில்லை. வெள்ள பாதிப்பு நிவாரண ஒருங்கிணைப்புக்கான கட்டுப்பாட்டு அறை அரசால் ஏற்படுத்தப்படவில்லை. மாநகராட்சி மண்டல உதவி எண்கள் செயல்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை. ஏரியோ அணையோ திறந்துவிடுவதற்கு முன்பாக மனிதாபிமான அடிப்படையில் கூட ஒரு எச்சரிக்கையை மக்களுக்கு கொடுக்கவில்லை.  ஆனால் மத்திய அரசுக்கு நிவாரண நிதி கேட்டு கோரிக்கை கடிதம் மட்டும் உடனடியாக அனுப்பப்பட்டது.

ஆச்சரியகரமாக மக்களுக்காக மக்களே களம் கண்டனர்.

10 இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி, நிவாரண பணிகளை ஒருங்கிணைத்தனர்.

சமூக வலைத்தளங்களின் உதவியோடு, உதவி தேவைப்படுவோரையும், உதவி செய்வோரையும் ஒன்று சேர்த்து சரியான சமயத்தில் உதவிகள் சென்றடைய ஏற்பாடுகள் செய்தனர்.

தமிழகம் முழுவதிலுமிருந்து மக்கள் தங்களால் ஆன எல்லா பொருட்களையும், உணவுகளையும் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

ரேடியோ சிட்டி, ரேடியோ மிர்ச்சி, நியூஸ் 7 போன்ற பல மீடியாக்கள் தங்களில் ஒலி/ஒலிபரப்பு சக்தியால் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தினர்.

சென்னையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் நிவாரண பொருட்களை வீதி வீதியாக கொண்டு சென்று சேர்த்தனர். மேலும் ஒவ்வொரு வீட்டு முன்பும் நின்று அவர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என கேட்டு கேட்டு செய்து கொடுத்தனர். நியாயமாக இவற்றை செய்யவேண்டிய தீயணைப்பு & மீட்பு பணிக்குழுவினரை தெருக்களில் காணவில்லை.

சென்னையில் உள்ள மசூதிகள், சர்ச்கள், ஜெயின் கோவில்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் ஆகிய அனைத்தும் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக திறந்துவிடப்பட்டன. அரசு, பள்ளிக்கூடங்களை மக்கள் தங்க ஒதுக்கி தராதபோதும் இவை மக்களுக்கு ஓரளவு உதவின.

திமுக, காங், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சி அலுவலகத்தை பொதுமக்களுக்காக திறந்துவிட்டன. அறிவாலயத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு தினமும் உணவு வழங்கப்பட்டது. எந்த செயல்பாடும் இன்றி முடங்கி கிடக்கும் லாயிட்ஸ் ரோடு கட்சி தலைமை அலுவலகத்தை திறந்து விடவில்லை கருணை தாய்.



மதிமுக, திமுக, தேமுதிக, காங், கம்யூ, பாஜக, SDPI, TMMK, RSS, திராவிடர்கழகம், மே 17 இயக்கம் ஆகிய பல பல இயக்கங்கள் ஆங்காங்கே தங்களால் இயன்ற வரை உணவு அளித்துக்கொண்டிருந்தன. வழக்கமாக சாப்பாட்டு பொட்டலங்கள் போடும் அரசு இந்த முறை கைவிட்டாலும் இவை மக்களின் பசியை ஓரளவு நீக்கின. மழை தொடங்கி பதினோராம் நாள் இந்திய விமானப்படையும் உணவு பொட்டலங்களை மாடிகளில் தேங்கி கிடந்தவர்களுக்கு விநியோகித்தது.

மாநிலம் முழுதுமிருந்து குடிநீர், பிஸ்கட், பிரெட், போர்வை, பிரஷ், பேஸ்டு என பல பொருட்களும் பொதுமக்களால் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவை இங்குள்ள இளைஞர்களால் கூடுமானவரை விநியோகிக்கப்பட்டன. விற்காமல் தேங்கி கிடக்கும் ஆவின் பால் பவுடரை விநியோகித்து தீர்க்க உத்தரவிட்டது ஒன்று தான் நிவாரப்பணியாக அரசு செய்தது.

அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் என எதுவும் மக்களுக்கு உதவிகளாக வழங்கப்படாதபோதும் டாஸ்மாக்கை மட்டும் திறந்துவைத்து மக்கள் பணி செய்தது தாயுள்ளம் கொண்ட தமிழக அரசு.

மீனவர்களும் இஸ்லாம் அமைப்புக்களுமாக சேர்ந்து படகுகளை வரவழைத்து வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை மீட்டெடுத்தனர் இலவசமாக.

தனியார் நிறுவனங்கள் தங்கள் பேருந்துகளை மக்களுக்காக இலவசமாக இயக்கியது. சில ஆம்னி பேருந்துகள் திருச்சி வரையும், ஓசூர் வரையும் இலவசமாக மக்களை அனுப்பி வைத்தது. கால் டாக்சி நிறுவனங்கள் இலவசமாக மக்களை புறநகருக்கு அனுப்பி வைத்தன. சில கொரியர் நிறுவனங்கள் நிவாரண பொருட்களை இலவசமாக சுமந்து சென்று விநியோகித்தன. ஆனால் நான்காம் தேதி மாலை வரையும் தமிழக அரசு மாநகர பெருந்துகளில் கட்டணம் வசூலித்து கொண்டிருந்தது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மாண்புமிகு அம்மா அவர்கள் இலவசமாக மாநகர பேருந்தை இயக்க உத்தரவிட்டார்.


ஒரு கட்டத்தில் மக்கள் அரசின் மீது அதிருப்தி அடைவதையும், பொதுமக்களே பொதுமக்களுக்காக உதவி வருவதையும், அரசு வெட்டியாக இருப்பது வெட்ட வெளிச்சமானதையும் கவனித்த தமிழக அரசு அதிரடியாக மக்களுக்கு உதவ களம் இறங்கியது. அதாவது பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் சேகரித்து சென்னைக்கு அனுப்பும் அனைத்து பொருட்களிலும் மாண்புமிகு அம்மா புரட்சி தலைவி அவர்களின் புகைப்பட ஸ்டிக்கர்களை அச்சடித்து அம்மா அவர்கள் வழங்கிய உதவியாக பிரச்சாரம் செய்தனர். கடலூருக்கு கொண்டு செல்லப்பட்ட நிவாரண பொருட்களில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டால் மட்டுமே விநியோகிக்க அனுமதிக்கப்பட்டது. அப்படி ஸ்டிக்கர் ஓட்ட மறுத்தவர்கள் தாக்குதலுக்கு ஆளான கொடுமை எல்லாம் நடந்தேறியது.


1970 களின் அரசியல் முறையை மட்டுமே அறிந்த தலைவர்களுக்கு சமீபத்திய மீடியாவின் பலமும் வீச்சும் புரியாமல் போனது ஆச்சரியமில்லை. அனைத்து நாளிதழ்களிலும் அரசுக்கு எதிரான தகவல்கள் வராமல் பார்த்துக்கொள்ள முடிந்தாலும், சமூக வலைதளங்கள் மூலம் அரசின் அராஜக செயல்கள் அவ்வப்போது உடனுக்குடனே வெளியாக தொடங்கியது. எந்த செயல் மூலம் மக்களிடம் நல்ல பெயரும் செல்வாக்கும் வாங்கி விடலாம் என கருதியதோ அதே செயலால் மிக பெரும் விமர்சனத்துக்கு ஆளானது தமிழக ஆளும் கட்சியும் அதிகார வர்க்கமும். இந்த ஒரு விஷயத்தில் அதிகார வர்க்கம் கூட அதிமுக கட்சி உறுப்பினர்களை போல செயல்பட்டது தான் கொடுமை. 

அரசுக்கு அவப்பெயர் வருவதை அறிந்ததும், அப்படி "ஸ்டிக்கர்கள் ஒட்ட சொல்லி அதிமுக சொல்லவில்லை.. யாரோ அதீத ஆர்வக்கோளாரில் அப்படி செய்திருக்கலாம்.. அவ்வாறு வற்புறுத்தப்பட்டால் அதிமுக தலைமை நிலையத்துக்கு புகார் அளிக்கலாம்" என்று பல பிரமுகர்கள் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். அதிமுக கட்சி அப்படி அதிகாரப்பூர்வமாக எந்த மறுப்பையும், புகார் தெரிவிக்கும்படியும் சொல்லாவிட்டாலும், அதிமுகவுக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என பல முக்கிய பிரமுகர்களும் பத்திரிக்கையாளர்களும் பதறி அடித்து அதிமுக சார்பாக அப்படி ஒரு தகவலை தெரிவித்து அரசை காக்க முயன்றதாகவே எடுத்து கொள்ள வேண்டி இருக்கிறது. 

வெள்ளத்தில் சிக்கி தவித்த என் அதிமுக நண்பரொருவர் கட்சி மீது காட்டிய வெறுப்பும் அருவருப்பும் சொல்லி மாளாது. இது ஒவ்வொரு ரத்தத்தின் ரத்தங்களுக்கும் மனதில் ஏற்பட்ட கோபம். எம்ஜிஆரின் விசுவாசிகளுக்கு மக்களும் அவர்களது துயர் துடைப்பதும் தான் முதன்மை கடமை. ஆனால் இப்போது கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் தனது கட்சி நடந்துகொள்வதை அவரால் ஜீரணிக்க முடியவேயில்லை.

கேரளா, கர்நாடகா, பீகார், ஆந்திரா மாநிலங்களின் உதவிகளை மறுதலித்து மத்திய அரசை மட்டுமே எதிர்நோக்கி இருந்தாலும் அதுவும் போதுமான அளவு வந்து சேரவில்லை. அதையே காரணம் காட்டி நிவாரண பணிகளில் மெத்தனம் காட்டியது அரசு. அரசின் மீதான அதிருப்தி உச்ச கட்டத்தை அடைந்ததை அறிந்து நான்காம் தேதி மாலை அமைச்சர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பை நிகழ்த்தினர். ஒவ்வொரு அமைச்சரும் எந்த அளவுக்கு விஷய ஞானம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை பட்டவர்த்தனமாக காட்டியது அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு. பேட்டி பாதியிலேயே நிறுத்திக்கொள்ளப்பட்டது தான் அரசுக்கான அடுத்த தோல்வி.


இந்த புயல் மழை செய்த நல்ல விஷயங்களில் கூவத்தை சுத்தப்படுத்தியதை மட்டுமல்ல, புரட்சி தலைவியின் புனை முகத்தை தகர்த்தையும் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்.

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!!



Saturday, April 18, 2015

மதுரைக்கு WAP-7


பேப்பர்ல எதேச்சையா தான் அந்த செய்தியை பார்த்தேன். கூடிய விரைவில் மதுரைக்கு ஒரு WAP – 7 எஞ்சினை சதர்ன் ரயில்வே ஒதுக்கப்போகுதாம். அதுக்கான பயிற்சியை திருச்சியில் தந்துட்டு இருக்காங்களாம். இருங்க இருங்க.. திட்டாதீங்க... தெளிவாவே சொல்றேன்.
முதலில் WAP-7 னா என்னான்னு தெரிஞ்சுக்கணும்னா இந்தியன் ரயில்வே பத்தின சில அடிப்படை விஷயங்களை சுருக்கமா தெரிஞ்சுக்கணும். அதனால இந்த முன்கதை சுருக்கம்.


பெங்களூர் - புதுடெல்லி ராஜ்தானி - WAP7 எஞ்சினுடன் 
இந்தியன் ரயில்வேயில் மூணு வகையான வழித்தடம் இருக்கு. அகல ரயில்பாதை, மீட்டர் பாதை, குறுகிய பாதை. இதில் தமிழகத்தில் இருந்த மீட்டர் கேஜை எல்லாம் அகல ரயில்பாதையா மாத்திட்டு வருது தென்னக ரயில்வே. தமிழகத்தில் மட்டும் தான் அதிவேகமா அத்தனை பாதையையும் மாத்திட்டு வர்றாங்க. (இதை சொன்னா மாய உலகத்தில் இருக்கிறவங்க சண்டைக்கு வருவாங்க.)
இரண்டு வகையான ரயில் இன்ஜின் இருக்கு இந்தியாவில். டீசலால் இயங்கும் Diesel Locomotive & மின்சாரத்தால் இயங்கும் Electric Locomotive.
இந்த இன்ஜின்களில் நிறைய வகைகள் இருக்கு. சக்திக்கு ஏற்ற மாதிரி, அது இணைக்கப்படும் ரயில்களின் வகைக்கு ஏற்ற மாதிரி. உதாரணமா சரக்கு ரயில்களுக்கு சக்திவாய்ந்த என்ஜின் வேணும். பயணிகள் ரயிலுக்கு சக்தி குறைவா இருந்தா போதும். எக்ஸ்பிரஸ் இன்னும் கொஞ்சம் சக்தி கூடுதலா வேணும். அதி வேக ரயிலுக்கு இன்னும் கூடுதல் சக்தி உள்ள என்ஜின்.
இப்படியான எஞ்சினை குறியீடுகளால் வகை படுத்தி வெச்சிருக்காங்க. நீங்க எஞ்சின்ல முன்னாடி பார்க்கலாம். WDG2, WAP4, WDM3 னு எழுதிருப்பாங்க. நிறைய வகைகள் இருக்கு. இந்த குறியீடு பத்தி சுருக்கமா விளக்கிடுறேன்.
முதல் எழுத்து எந்த வகையான பாதைன்னு சொல்லும். அதன் படி W – அகல பாதை (Broad Guage), Y – மீட்டர் கேஜ் பாதை (Meter Guage), Z – குறுகிய பாதை (Narrow Guage), N – குறுகிய பாதையில் இயங்கும் பொம்மை ரயில் (Narrow Guage Toy Train)
ரெண்டாவது எழுத்து என்ன வகையான எஞ்சின்னு சொல்லும். அதன் படி D – டீசல் இன்ஜின், A – மின்சார என்ஜின் (இவை தான் இப்ப இந்தியாவில் இருக்கு) இதுக்கு முன்னால C – DC கரண்டில் இயங்கும் இன்ஜின், CA – இரண்டு வகையான மின்சாரத்திலும் (அதாவது AC, DC இரண்டு வகை மின்சாரத்திலும்) இயங்கும் இன்ஜின், B – பேட்டரியில் இயங்கும் இன்ஜின் எல்லாம் இருந்தது. இப்ப அவை அதிகமா இல்லை. நாம D & A மட்டும் வெச்சுக்கலாம்.
மூணாவது எழுத்து என்ன வகையான ரயிலுன்னு சொல்லும். அதன் படி G – சரக்கு ரயில், P – பயணிகள் ரயில், M – இரண்டு வகையான ரயிலுக்குமான என்ஜின், S – ஷண்டிங்க் செய்வதற்கு மட்டும் (உதாரணமா சென்னை சென்டிரல் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை பேசின் பிரிட்ஜ் யார்டுக்கு தள்ளிட்டு போக்குதுல்ல, அந்த என்ஜின்), U – மல்டிப்பில் யூனிட்டுக்கான என்ஜின்
நாலாவது எழுத்து அதன் சக்தியை குறிக்கும். அதன் படி 1 – 1000 HP சக்தி, 4 – 4000 HP சக்தி, 5 – 5000 HP சக்தி. சப்போஸ், 3A னு இருந்தா – 3 = 3000 HP, A = 100 HP. மொத்தம் 3,100 HP. இதான் லாஜிக்
இப்ப நீங்க எந்த எஞ்சினை பார்த்தாலும் அந்த குறியீட்டை வெச்சே கண்டுபிடிச்சிர முடியும் தானே? உதாரணம் பார்ப்போமா?
WDG4 – அகல ரயில்பாதையில், டீசலில் இயங்கும், சரக்கு ரயில், 4000 HP சக்தி உள்ள என்ஜின்
WAP5 – அகல ரயில்பாதையில், மின்சாரத்தில் இயங்கும், பயணிகள் ரயில், 5000 HP சக்தி உள்ள என்ஜின்
YDM2 – மீட்டர் கேஜ் பாதையில், டீசலில் இயங்கும், பயணிகள் / சரக்கு ரயில்களை இழுக்கும் 2000 HP சக்தி உள்ள என்ஜின்
புரிஞ்சுதுல்ல?
ஈரோடு பணிமனையின் WAP-4 என்ஜின்

தமிழகத்தை பொறுத்த வரைக்கும், பயணிகள் ரயிலுக்கு பொதுவா WAP4 (ஆரஞ்சு கலர் ஏரோ டைனமிக் ஸ்டைல் என்ஜின்) அல்லது WDP4 தான் உபயோகிப்பாங்க. அதிக வேகம் இல்லை. ஜஸ்ட் 100 கிமீ வேகம் தானே. ஆனா சில அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு WAP5 உபயோகிப்பாங்க.
இந்த WAPல குறைந்த சக்தி என்ஜின்கள் இருந்த காலத்தில் (WAP3) தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ரெண்டு என்ஜின் போட்டு இழுத்துட்டு போவாங்க. ஸ்பீடு கிடைக்க. கிராண்ட் டிரங்க், கேரளா எக்ஸ்பிரஸ் எல்லாம் கூட ரெண்டு இன்ஜின் வெச்சு இழுத்த ரயில்கள் தான்.
இப்ப WAP5 வந்தப்பறம் அது தான் பெஸ்டு இஞ்சினா இருந்துச்சு. ராஜ்தானி, ஷதாப்தி, துரந்தோ எல்லாம் WAP-5 இன்ஜின் வெச்சு தான் இழுத்துட்டிருக்கு.
இதை விட அதிக சக்திவாய்ந்த இன்ஜின் வேணும்னு தேவை இருப்பதால், மேற்கு வங்காளத்திலுள்ள சித்தரஞ்சன் ரயில் என்ஜின் தொழிற்சாலையில் 2010 இல் அதி வேக எஞ்சினான WAP-7 தயாரிச்சாங்க. (இதன் வேகம் கிட்டத்தட்ட மணிக்கு 210 கி.மீ வரை). இந்த WAP-7 தயாரிக்கறதுக்கு முன்னாடியே WAG-9 செஞ்சிருக்காங்க, சரக்கு ரயிலுக்காக. அது வெற்றிகரமா இயங்குனதால, அதன் பயணிகள் ரயில் வெர்ஷன் WAP-7 செஞ்சாங்க, சில மாற்றங்களுடன்.
முதல் இஞ்சினுக்கு ‘நவ்கிரண்’ னு பேர் வெச்சாங்க. என்ஜின் நம்பர் 30201. அடுத்தடுத்த என்ஜின்கள் ‘நவ் பாரதி’, ‘நவ் சேடக்’, ‘நவ் கட்டி’ன்னு பேர். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 60 எஞ்சினுக்கு மேல செஞ்சாச்சு சித்தரஞ்சன்ல.
மும்பை - புதுடெல்லி ராஜ்தானி WAP-7 - துரந்தோ நிறத்தில்
இந்த எஞ்சினுக்கு பொதுவா வெள்ளை நிறம் தான் கொடுக்கப்படுது (White Livery) ஒரு கிராண்ட் லுக் கிடைக்கும்ங்கறதுக்காக. (ஆனா மும்பை டெல்லி ராஜ்தானிக்கு மட்டும் துரந்தோவின் மல்டி கலர் நிறம்).
இந்த WAP-7 என்ஜின் மிக அதிக சக்தி மட்டுமல்ல. நிறைய நவீன தொழில்நுட்பங்களும் கொண்டது. ஸ்டேஷன்லருந்து எடுக்கும்போதும், ஸ்டேஷனுக்கு வந்து நிக்கும்போதும் அதன் ஸ்மூத் மூவ்மெண்ட்ட அனுபவிச்சு பார்த்தா தான் தெரியும். அந்த அனுபவுத்துக்காகவே நான் சில முறை WAP-7 பயன்படுத்தும் ரயில்கள தேடி தேடி பயணிச்ச காலம் இருக்கு. அதிவேகம், பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பம், சொகுசுன்னு பல வகைகளில் இந்த WAP-7 என்ஜின் பல பயணிகளின் தேர்வா ஆயிருச்சு. முதலில் ராஜ்தானி, ஷதாப்தி, துரந்தோ மாதிரியான ரயில்களுக்கு மட்டுமிருந்த இந்த என்ஜின் இப்ப எல்லா முக்கிய எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் இணைக்க ஆரம்பிச்சிருக்காங்க.
இந்த WAP-7 இன்ஜின்கள் சில குறிப்பிட்ட டெப்போக்களில் மட்டும் தான் இருக்கு. தென்னக ரயில்வேயில் சென்னை ராயபுரம் டெப்போவில் மட்டும் தான் இருக்கு. ராயபுரம் டெப்போவில் இருக்கும் என்ஜின்கள் பயன்படுத்தப்படும் ரயில்கள்:
சென்னை – கோவை இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ்
சென்னை – கோவை ஷதாப்தி எக்ஸ்பிரஸ்
சென்னை – கோவை கோவை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
சென்னை – மேட்டுபாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் (கோவை வரை)
சென்னை – திருவனந்தபுரம் சூப்பர் ஃபாஸ்ட் மெயில்
சென்னை – திருவனந்தபுரம் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
சென்னை – ஆலப்புழா எக்ஸ்பிரஸ்
சென்னை – பெங்களூரு ஷதாப்தி எக்ஸ்பிரஸ்
சென்னை – பெங்களூரு டபிள் டெக்கர் எக்ஸ்பிரஸ்
சென்னை – புதுடெல்லி கிராண்ட் டிராங்க் எக்ஸ்பிரஸ்
சென்னை – புதுடெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்
அவ்வளவு தான்.
சென்னையிலிருந்து முழுசா மின்மயமாக்கப்பட்ட அதிவேக ரயில் பாதையில் மட்டும் தான் இந்த இன்ஜின் இயக்கப்படுதுன்றது மேலே உள்ள விவரங்களை பார்த்தாலே தெரியும். மேலும் இந்த ரயிலை பராமரிக்க ராயபுரத்துக்கு வந்தாகணும். அதனால் சென்னையை அடிப்படையா வெச்சு இந்த இன்ஜின்கள் இயக்கப்படுது.
கவுதமி எக்ஸ்பிரஸ் - லல்லாகுடாவின் WAP-7 எஞ்சினுடன்

இப்ப சென்னை – திருச்சி – மதுரை – நெல்லை – திருவனந்தபுரம் பாதையும் முழுசா மின்மயமாக்கப்பட்டாச்சு. எந்த பரபரப்பும் விளம்பரமும் இல்லாம இயல்பா அந்த மின்பாதையை செயல்பாட்டுக்கும் கொண்டுவந்து அதில் மின்சார ரயிலை இயக்கிட்டு இருக்காங்க தென்னக ரயில்வே. அதனால் அந்த ரூட்டிலும் ஒரு என்ஜின் விடலாமேன்னு (யாருடைய கோரிக்கையும் இல்லாமலேயே!) யோசிச்ச தென்னக ரயில்வே முதல்கட்டமா ஒரு சோதனை முயற்சியா குருவாயூர் எக்ஸ்பிரஸ்சில் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி வரை இயக்கி பார்த்தாங்க. அது வெற்றிகரமா செயல்பட்டதால், முதல்கட்டமா ரெண்டு எஞ்சின்களை அந்த ரூட்டில் பயன்படுத்த போறாங்க. மதுரை டிவிஷனுக்கு ஒண்ணு, திருச்சி டிவிஷனுக்கு ஒண்ணுன்னு முடிவு பண்ணி, அந்த டிவிஷன்ல இருக்கும் திறமையான என்ஜின் டிரைவர்களை தேர்ந்தெடுத்து திருச்சி பொன்மலையில் (Golden Rock Loco Works) பயிற்சி கொடுத்துட்டு இருக்காங்க இப்ப. ஏன்னா WAP-7 ஏற்கனவே சொன்ன மாதிரி நவீன தொழில்நுட்பங்கள் நிறைஞ்ச இன்ஜின். அதை கையாள தனி திறமை வேணும்ல? அதனால தான் இந்த சிறப்பு பயிற்சி.
மதுரைக்கு ஒரு வழியா WAP-7 வருதுங்கறது ரொம்ப சந்தோஷமான விஷயம் எனக்கு. மதுரைக்கும் எனக்குமுள்ள பந்தம் அப்படி. அது தனி கதை.
இப்ப என் ஆர்வம் எல்லாம், எந்த ரயிலுக்கு அதை பயன்படுத்துவான்கன்றது தான். திருச்சி டிவிஷன்ல அந்த எஞ்சினை பயன்படுத்தக்கூடிய ரயில்னு எதுவும் இருக்கறதா தெரியலை. வேணும்னா, காரைக்குடி – சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ்சில் திருச்சி – சென்னை செக்ஷன்ல இணைக்கலாம்.
ஆனா மதுரைல அப்படி இல்லை. பாண்டியன், வைகை இரண்டுக்குமே அதை இணைக்க முடியும். மதுரை – டெல்லி சம்பர்க் கிரந்திக்கும் இணைக்கலாம். எந்த ரயிலுக்கு அதை இணைக்கப்போறாங்க எனும் ஆர்வம் இன்னும் அடங்கலை. அறிவிப்பு எப்ப வரும்னும் தெரியலை. அதே மாதிரி அந்த எஞ்சினுக்கு என்ன பேரு வெப்பாங்கான்னும் ஒரு ஆர்வ கேள்வி எழுது எனக்கு. இதுவரைக்கும் வந்த எல்லா எஞ்சினுக்கும் ஹிந்தி பேரு தான் இருந்துச்சு. அட்லீஸ்ட் மதுரை எஞ்சினுக்காவது மீனாட்சினு பேரு வெச்சா நல்லா இருக்கும்லனு ஒரு நப்பாசை. பார்ப்போம். 
மதுரைக்காரவிங்க அந்த ரயில் வந்ததும் ஒரு முறை அதில் பயணம் பண்ணி பாருங்க. நான் ஏன் இப்படி லூசு மாதிரி இந்த இஞ்சினுக்கு எல்லாம் எக்ஸைட்டிங் ஆகிறேன்னு உங்களுக்கே புரியும்.

***************

தொடர்புடைய பதிவுகள்

ரயில்வே - தமிழகத்தின் பார்வையில் – பாகம் 1
ரயில்வே - தமிழகத்தின் பார்வையில் – பாகம் 2
சேலம் கோட்ட ரயில்வே – தீரா பிரச்சனை
தமிழகமும் ரயில்வே துறையும்!
இனியேனும் திருந்துமா ரயில்வே?
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம்!

Monday, August 27, 2012

அண்ணா ஆர்ச் – நினைவுகள்




அவ்வளவு செண்டிமெண்ட் இல்லைதான். ஆனாலும் இன்னைக்கு அண்ணாஆர்ச்சை இடிக்கறாங்கன்றது மனசுக்குள் ஒருவிதமான சங்கடத்தை தர்றதை தவிர்க்க முடியலை.
 
நான் சென்னைக்கு வந்தப்போ வேலையும் வீடும் எல்லாமே அம்பத்தூரில் தான் அமைஞ்சுது. அதனால் தென்சென்னைக்கு வரணும்னா அண்ணா ஆர்ச்சை தவிர்க்கமுடியாது. அந்தவழியா வாரத்துக்கு 20 தடவையாவது பயணிச்சிருப்பேன். ஆனாலும் அந்த வளைவுகள் மேல அப்படியொன்னும் பெரிய ஈர்ப்பு இருந்ததேயில்லை. இன்னைக்கு அதை இடிக்கப்போறாங்கன்னபோது தான் அதத பத்தி அதிகமா நினைவுகள் வருது.

1985ல் பேரறிஞர் அண்ணாதுரையின் 75ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அண்ணாநகருக்குள் நுழையுற பகுதியில் (நடுவங்கரை) அந்த ரெண்டு ஆர்ச் அமைச்சாங்க. அப்போ தமிழ்நாடு வீட்டு வசது துறை தலைவரா இருந்த ஞான ஒளிங்கறவரோட ஐடியாவாம் அது. அவர் சென்னையின் பல இடங்களில் இந்த மாதிரி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினாராம். கே.கே.நகருக்கு அசோக் பில்லர், சி.ஐ..டி நகருக்கு நந்தி மாதிரி அண்ணாநகரில் இந்த அண்ணா நினைவு வளைவுகள் அமைச்சாராம்.

இது ஒண்ணும் பெரிய கட்டிட கலை அற்புதமோ, வரலாற்று சிறப்பு மிக்க வளைவோ இல்லை. ஆனாலும் அண்ணா நகர்ன்னு சொன்னாலே முதலில் அண்ணா ஆர்ச் தான் ஞாபகம் வரும். 1970களில் அண்ணா நகர் உருவாக்கப்பட்டபோது அமெரிக்க நகரங்களை மாதிரி திட்டமிட்டு தான் பக்காவா பிளான் பண்ணி அமைச்சாங்க. அப்படியான ஒரு சிறந்த கட்டமைப்புள்ள நகருக்குள் நுழைகிறொம்னு ஒவ்வொருதடவை அண்ணா ஆர்ச்சை கடக்கும்போதும் ஞாபகம் வரும்.

நான் அண்ணா அர்ச் பகுதிக்கு வர்றதே ரெண்டு விஷயத்துக்காக தான்.

எங்கப்பாவுக்கு சித்த மருந்துகள் தேவைன்னா அங்கே இருக்கிற அரசு சித்த மருத்துவ மனைக்கு தான் வருவாரு. கூடவே நான் அவர் கையை பிடிச்சிகிட்டே வருவேன். அந்த அரசு சித்த மருத்துவமனை ரொம்ப பெரியது. எல்லா நோய்களுக்கும் இலவசமா சிகிச்சை தருவாங்க. அந்த மருத்துவமனைக்கு எதிர்லயே, அரசு மூலிகை பண்ணை இருக்கு. மருத்துவத்துக்கு தேவையான மூலிகைகள் மட்டுமில்லாம, டாம்ப்கால் மாதிரியான அரசு தேங்காய் எண்ணெய், மூலிகை எண்ணெய் உற்பத்திக்கான மூலிகைகளையும் அரசு அங்கே தான் பயிரிட்டுட்டு இருக்காங்க. நினைச்சு பாருங்க! அந்த ஏரியாவே சும்மா கும்முன்னு மூலிகை வாசமா தூக்கும்.

இன்னொரு விஷயம் செல்ஃபோன், டிவிடி. ஒரு குட்டி ரிச்சி ஸ்ட்ரீட்டே அங்க இருக்கு. வரிசையா செல்ஃபோன், டிவிடி, சிடி, மொபைல் கடைங்களா இருக்கும். என் ஃபோன் சர்வீஸ் செய்யணும்னா கூட அங்க தான் போவேன். சீப் ரேட்டில் சூப்பரா சர்வீஸ் செஞ்சு தருவாங்க.

இந்த ரெண்டு விஷயம் தவிர, அண்ணா ஆர்ச்சுங்கறது, என்னுடைய தினசரி பயணவழியில் கவனத்தில் நிக்காம கடந்து போகிற ஒரு சாதாரண இடம் தான்.

சரி, அதை இப்போ எதுக்காக இடிக்கிறாங்க?





சென்னையில் பெருகி வர்ற போக்குவரத்து நெரிசல், அடுத்த 10 ஆண்டுகளில் வரக்கூடிய ஜன நெருக்கடி, அதனால் ஏற்படக்கூடிய போக்குவரத்து கட்டமைப்புகான திட்டங்கள் அடிப்படையில் சென்னையில் மெட்ரோ ரயில் அமைக்க கடந்த திமுக அரசு திட்டமிட்டு அதை தொடங்கியும் வெச்சாங்க. இப்போதைய அதிமுக அரசு பதவியேற்றதும், அந்த திட்டத்தை முடக்கி வெக்க முதலில் முடிவு செஞ்சு, பலத்த எதிர்ப்பின் காரணமா அந்த முடக்கி வைக்கிற முடிவை கைவிட்டு, திட்டத்தை நிறைவேற்ற ஆரம்பிச்சாங்க. அந்த திட்டத்தின் ஒரு பகுதியா தான் அந்த அண்ணா ஆர்ச் இடிக்கப்படுது.


அண்ணா ஆர்ச் கிட்டே ஒரு சிக்னலும், 100 மீட்டர் கடந்ததுமே பூந்தமல்லி நெடுஞ்சாலை -  நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பில் இன்னொரு சிக்னலுமா பக்கம் பக்கமா இருக்கிறதால் வர்ற போக்குவரத்து நெரிசல் ரொம்ப அதிகம். சென்னையின் ரத்த நாளம் மாதிரியான பூந்தமல்லி நெடுஞ்சாலை (வடசென்னை தென்சென்னைக்கான எல்லை கோடு?) எப்பவுமே வாகன நெரில் உள்ள பகுதி. அண்ணாநகர் பகுதியில் இருந்து தென்சென்னைக்கும், தென் சென்னை பகுதியிலிருந்து அண்ணாநகர் பகுதிக்கும்  பயணிக்கிற வாகனங்கள், இந்த ரெண்டு சிக்னலிலும் நின்னு போவதால் பெரிய அளவில் டிராபிக் ஜாம் ஆகுது.

அரசு எடுத்திருக்கும் கணக்குப்படி, ஒரு மணிநேரத்துக்கு 20,000 கார்கள் அந்த பகுதியை காலையிலும் மாலையிலும் பீக் ஹவரில் கடக்குதாம். அதனால், அந்த இடத்தில் L வடிவத்திலான ரெண்டு பாலங்கள் அமைக்க முடிவு பண்ணி இருக்காங்க. 


அண்ணா நகரிலிருந்து வர்ற வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையை தொட்டதும் ஒரு பாலம் தொடங்கி மேலேறி வலதுபுறமா திரும்பி நெல்சன் மாணிக்கம் ரோட்டில் இறங்கற மாதிரி ஒரு பாலம். நெல்சன் மாணிக்கம் ரோட்டிலிருந்து வர்ற வாகனங்கள் இடது புறம் திரும்பி பூந்தமல்லி நெடுஞ்சாலையை தொட்டதுமே ஒரு பாலம் தொடங்கி மேலேறி வலதுபுறமா திரும்பி அண்ணா நகருக்குள் நுழைஞ்சு கீழிறங்கற மாதிரி ஒரு பாலம். இந்த ரெண்டாவது பாலம் அண்ணாநகருக்குள் நுழையறதுக்கு தான் அண்ணா ஆர்ச் தடையா இருக்குங்கறதால் அது இன்னைக்கு இடிக்கப்படுது.

இந்த ரெண்டு பாலங்களும் அமைக்கப்பட்டதுன்னா, அந்த பகுதியில் இப்போ இருக்கும் ரெண்டு சிக்னல்களையும் நீக்கிரலாம். அண்ணா நகர் – நெல்சன்மாணிக்கம் ரோடு இடையில் தடையில்லாத போக்குவரத்து அமைஞ்சிடும். ஒரே ஒரு கஷ்டம் என்னன்னா, இப்போ நெல்சன் மாணிக்கம் ரோட்டில் இருந்து அமைந்தகரைக்கு நேரடியா திரும்பும் வசதி இருக்கு. அது ரத்து ஆகுது. அதுக்கு பதிலா, இந்த இரண்டாவது மேம்பாலத்தில் ஏறி, அண்ணா நகருக்குள் இறங்கற இடத்தில் இன்னொரு துணை பாலம் மூலமா என்.எஸ்.கே நகர் அருகில் பூந்தமல்லி சாலையில் ரவுண்ட் அடிச்சு அமைந்தகரை போகணும். தடையில்லாம போயிரலாம். எங்கேயும் நிக்கவேண்டாம்.


இந்த அமைந்தகரை போறதுக்கான துணைப்பாலம், இப்போ அரசு கொடுத்திருக்கும் மேப் படி பார்த்தா, நான் முதலில் சொன்ன அரசு மூலிகை பண்ணைல தான் இறங்குது. அப்போ மூலிகை பண்ணை கதி என்னன்னு தெரியலை. பாலத்துக்கு கீழே எப்பவும் போல செயல்படுமா? அல்லது பண்ணையை தூக்கிருவாங்களான்னு இன்னும் எனக்கு தெளிவா தெரியலை.

அண்ணா ஆர்ச்சை இடிக்கறதுக்காக முடிவு செஞ்சிருக்கிற சென்னை மாநகராட்சியும் கூட, அதை அண்ணாநகரிலேயே இன்னொரு இடத்தில் அமைக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கிறதாவும் ஒரு தகவல் வந்திருக்கு.
சென்னை மாநகர வளர்ச்சி, போக்குவரத்து நெரிசல் குறறப்புங்கற நோக்கத்தில் பார்த்தா இந்த அண்ணா ஆர்ச் இடிக்கபடுறதில் கவலைப்பட எதுவுமே இல்லை. இன்னும் சொல்லப்போனா, இதை எப்பவோ செஞ்சிருக்கணும். அந்த இடத்தில் பாலம் கட்டற திட்டம் ரொம்ப காலமாவே இழுத்துட்டு வருது. இப்போதான் நிறைவேறுது.

மனசுக்குள் ஒரு ஓரமா, ரொம்ப ரொம்ப மெல்லிசா ஒரு வருத்தம் இழையோடினாலும், இந்த வளர்ச்சி பணி எல்லாம் நமக்காக தானேன்னு நினைச்சு ஆறுதல் அடைஞ்சிக்க வேண்டியது தான்!

Printfriendly