Tuesday, April 14, 2015

நீதிபதி மஞ்சுநாத் விவகாரம்

ழக்கம் போல இன்னைக்கு காலைல எழுந்தபோதும் ஒரு செய்தி என் மொபைல் மெசேஜ் பாக்ஸில் உக்காந்து சிரிச்சிட்டிருந்தது. அதை பார்த்ததும் எனக்கும் சிரிப்பு தான் வந்துச்சு.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியா இருக்கும் வகெலாவை ஓடிஷா நீதி மன்றத்துக்கு தலைமை நீதிபதியா மாத்திருக்காங்களாம். அவருக்கு பதிலா கர்நாடக தலைமை நீதிபதியா திரு மஞ்சுநாத்தை நியமிச்சிருக்காங்களாம்.

Justice Waghela
இதில் சிரிக்க என்ன இருக்குனு கேக்குறீங்களா? சுருக்கமா நான் சில விஷயங்களை மட்டும் இலைமறை காயா சொல்றேன். நீங்களே புரிஞ்சுக்கிட்டா உங்களுக்குள்ளே சிரிச்சுக்கோங்க.

நீதிபதிகளை நியமிக்கற அதிகாரம் இதுவரைக்கும் நீதித்துறை குழுமத்துகிட்டே (கோலாஜியம்) தான் இருந்துச்சு. அதில் சில பிரச்சனைகள் இருப்பதால், மத்திய அரசு நீதிபதிகள் நியமன சட்டம் கொண்டு வந்துச்சு. இதுக்கு நீதித்துறையில் இருந்தே பலத்த எதிர்ப்பு. இது தொடர்பான வழக்கு வரும் ஏப். 15 ஆம் தேதி வெளியாகுது. ஆனா அதுக்கு முன்னாடி நேத்தே (ஏப். 13) மத்திய அரசு இந்த சட்டத்தை அமல் செஞ்சு அரசிதழில் வெளியிட்டிருச்சு. ஆனா அதை விட உஷாரா அதுக்கு சற்று முன்பாக தலைமை நீதிபதி அதிரடியா 22 நீதிபதிகளை மாற்றியும் சில கூடுதல் நீதிபதிகளை நியமிச்சும், சில கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளா பதவி உயர்த்தியும் உத்தரவு போட்டுட்டாரு. மத்திய அரசுக்கும் நீதித்துறைக்குமான பனிப்போர் இப்ப வெளிப்படையா வெடிச்சிருக்கு. அதன் விஸ்வரூபங்களை அடுத்தடுத்த நாட்களில் நாம கண்டு களிக்கலாம். அது ரொம்ப பெரிய விஷயம். நான் சுருக்கமா ஒரு அவுட் லைன் தான் கொடுத்திருக்கேன். நாம இப்ப மஞ்சுநாத் விஷயத்துக்கு வருவோம்.

தலைமை நீதிபதி நேத்து அறிவிச்ச திடீர் உத்தரவில் தான் வகெலாவை ஓடிஷாவுக்கு அனுப்பிட்டு அந்த இடத்தில் மஞ்சுநாத்தை நியமிச்சிருக்கார்.

மஞ்சுநாத் நியமிக்கப்பட்டதில் எனக்கும் நிறைய ஆச்சர்யம் தான். ஏன்னா அவர் மேல நில அபகரிப்பு, ஊழல், வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்துனதுன்னு நிறைய புகார்கள் இருக்கு. கடந்த 2014 ஆம் வருஷம் அவருக்கு தலைமை நீதிபதியா பதவி உயர்வு கொடுத்து பஞ்சாப் ஹரியானா மாநிலத்துக்கு மாற்ற முடிவு எடுத்தப்ப, மத்திய அரசும் சட்ட அமைச்சகமும் அதை கடுமையா எதிர்த்தாங்க. அவர் மேல விசாரணை நடத்தணும்னு கோரிக்கை இருக்கிறப்ப அவருக்கு பதவி உயர்வு கொடுக்கக்கூடாதுன்றது மத்திய அரசின் வாதம். ஆனா அப்போ இருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா, மஞ்சுனாத்துக்கு பதவி உயர்வு கொடுத்தே ஆகணும்னு பிடிவாதமா இருந்தாரு.

ஆம் ஆத்மி கட்சியினர் மஞ்சுநாத் மீது இம்பீச்மெண்ட் கொண்டுவர கூட முயற்சி செஞ்சாங்க. ஆனா அது நடக்கலை.

ஆமா அவர் அப்படி என்ன முறைகேடு செஞ்சார்ங்கறீங்களா? சாம்பிள் சொல்லட்டா?

2004 ஆம் வருஷம் தன் மகள் சைத்ரா பேரில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கினார். அப்ப மார்க்கெட் விலை ச.அடி 1000 ரூபாயா இருந்தாலும் இவருக்கு மட்டும் 125 ரூபாய்னு போட்டு கொடுத்தாங்க. அதுவே தவறுன்னு எல்லாரும் குதிச்சிட்டிருந்தப்ப, அந்த ஹவுசிங்க் சொசைட்டி சம்மந்தப்பட்ட மூன்று வழக்குகளில் 2005, 2007, 2010 ஆம் வருஷங்களில் இவர் அவங்களுக்கு சாதகமா தீர்ப்பு சொல்லி இருக்கார். தன் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கையில் அதன் உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட வழக்கை அவர் விசாரிக்காம இருந்திருக்கணும்ங்கறது எல்லோருடைய எதிர்பார்ப்பு. அந்த தீர்ப்புகள் வந்தபிறகு தான், ஒருவேளை அந்த ஹவுசிங்க் சொஸைட்டிக்கு சாதகமா செயல்படுவதற்காக அவர்கள் விலையை குறைத்து வீட்டை கொடுத்தாங்களோன்னு ஒரு கேள்வி உருவாச்சு. இது வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்த ரீதியிலும், ஊழல் / லஞ்சம் ரீதியிலும் கணக்கிட்டு எதிர்க்கட்சிகள் நீதிபதி மஞ்சுனாத்துக்கு எதிரா போராட தொடங்கினாங்க. இது போல இன்னும் சில புகார்கள் அவர் மேலே நிலுவையில் இருந்ததால், போன வருஷம் பஞ்சாப் ஹரியானாவுக்கு அவரை புரமோஷன்ல அனுப்பற ஐடியா டிராப் ஆயிருச்சு.
Justice K L Manjunath

வர்ற ஏப் 20 ஆம் தேதி அவர் ஓய்வு பெற போறார். இந்த நேரத்துலதான் மத்திய அரசின் பலத்த எதிர்ப்பையும் மீறி இந்த அஞ்சே அஞ்சு நாளுக்காக அவரை தலைமை நீதிபதியா புரமோஷன் கொடுத்து அதே கர்நாடக உயர்நீதிமன்றத்துல தலைமை நீதிபதியா நியமிச்சிருக்கு உச்ச நீதிமன்றம். அதுக்கு ஏதுவா ஏற்கனவே தலைமை நீதிபதியா இருக்கும் வகெலாவை ஒடிஷாவுக்கு மாத்திருக்காங்க.

மஞ்சுநாத்துக்காக மிக பெரிய அளவில் லாபி நடந்திருக்கிறது இப்ப உங்களுக்கு ஓரளவுக்கு புரியுதுல்ல? இப்ப அடுத்த விஷயத்துக்கு வர்றேன்.

ஜெ. மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வரும் ஏப். 16 / 17 ஆம் தேதி நீதிபதி குமாரசாமி அவர்கள் தீர்ப்பு சொல்வார் என எதிர்பார்க்கப்படுது. அந்த தீர்ப்பு ஜெ.வுக்கு சாதகமா வரும்னு பலத்த யூகம் இருக்கு. ஒருவேளை அப்படி சாதகமா வந்தா அதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தான் முறையீடு செய்யணும். அப்ப வகெலா மாதிரி கடுமையான நீதிபதி இருப்பதை விட மஞ்சுநாத் இருப்பது அந்த மேல் முறையீட்டு மனுவை அனுமதிக்காமல் இருக்க உதவக்கூடும். ஏற்கனவே ஜெ. மீதான வழக்கில் விதிமுறைகளை மீறி பவானி சிங்கை அரசு வழக்கறிஞரா நியமிச்சது இதே மஞ்சுநாத் தான். அப்படி பவானிசிங்கை நியமிச்சது தவறு, உரிய வரைமுறைகளை மஞ்சுநாத் பின்பற்றலைன்னு நீதிபதி வகேலா கண்டிச்சதொட, பவானிசிங்கின் நியமனத்தையும் ரத்து செஞ்சாரு. ஆனா ஜெ உச்சநீதிமன்றத்தில் வகெலாவுக்கு எதிரா முறையிட்டு தனக்கு சாதகமான தீர்ப்பை வாங்கிக்கிட்டாரு.

ஏற்கனவே முன்பொருமுறை பதவிக்காலம் முடியுற நேரத்தில் தமிழக ஆளுநராக இருந்த திருமதி ஃபாத்திமா பீவி அவர்கள் பலத்த எதிர்ப்பையும் மீறி ஜெ.வுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்துவிட்டு ஊருக்கு போயி செட்டில் ஆனது போல, தனது ஓய்வுக்கு நாலு நாள் முன்னாடி தலைமை நீதிபதியா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பதவிக்கு வந்திருக்கும் மஞ்சுநாத் பற்றியும் நிறைய செய்திகள் அலை அடிக்குது.

ஓய்வு பெறுவதற்கு முன்பாக அவருக்கு தலைமை நீதிபதி அந்தஸ்து தரணும்னு உச்ச நீதிமன்றம் நினைச்சிருக்கலாம். அதனால் தான் பலத்த எதிர்ப்பையும் மீறி அவருக்கு புரமோஷன் கொடுத்திருக்கு. ஆனா அவரை கர்நாடக நீதிமன்றத்தில நியமிச்சது தான் ஆச்சரியம். ஓடிஷாவுக்கு அவரையே நியமிச்சிருக்கலாம். ஆனா, வகெலாவை அங்கே அனுப்பி, இந்த முக்கியமான அஞ்சு நாளில் இவரை இங்கே அப்பாயிண்ட் பண்ணி, ஒரு தடங்கல் இல்லாத சூழலை உருவாக்கி கொடுத்திருக்கு உச்ச நீதிமன்றம்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்தா அவர்கள், சமீபத்தில் ஜெ.வுக்கு விதிகளை மீறி, ஜாமீன் கொடுத்ததே பலத்த விமர்சனத்துக்கு ஆளாச்சு. எந்தவித உத்தரவாதமும் எழுத்துப்பூர்வமாக வாங்காமல் பாலி நாரிமானின் வாய் மொழி உத்தரவாதத்தை மட்டும் வைத்து விடுதலை செய்தது தவறுன்னு நிறைய ஆர்ட்டிக்கல்ஸ் பறந்திட்டு இருக்கு. அதுவும் ஜெ. விசாரணை கைதி அல்ல. தண்டனை கைதி. அப்படியான சூழலில் ஜஸ்ட் லைக் தட் ஜாமீன் கொடுத்திருக்கக்கூடாது. ஜாமீன் கொடுத்ததுக்கு சொல்லி இருக்கிற காரணங்கள் செம்ம காமடியா இருக்குனு மூத்த வழக்கறிஞர்கள் கூட கருத்து சொல்லி இருக்காங்க. ஜெ.வுக்கு ஏன் அந்த அளவுக்கு வளைஞ்சு கொடுக்கணும்னு எல்லாரும் கேட்டுட்டு இருக்கும்போது தான் பலத்த எதிர்ப்பையும் மீறி, மஞ்சுநாத்தை அஞ்சே அஞ்சு நாளுக்காக தலைமை நீதிபதியா பதவி உயர்த்தி கொடுத்திருக்காரு தத்தா.

இப்போதைக்கு நாம செய்யக்கூடியது வேடிக்கை பார்ப்பதும், விரைவில் விடுதலை பெற்று வந்து முதல்வராக பதவி ஏற்கவிருக்கும், தமிழகத்தின் நிரந்தர முதல்வர், பொன்மனசெல்வி, காவிரி தந்த கலைச்செல்வி, இதய தெய்வம், புரட்சி தலைவி அவர்களுக்கு பாராட்டு பத்திரமோ ப்ளெக்ஸ் பேனரோ போஸ்டரோ கவிதையோ எழுதுவதா தான் இருக்கும்.

சத்யமேவ ஜெயதே. ஜெய்ஹிந்த்

******************************

தொடர்புடைய பதிவுகள்:




தொடர்புடைய செய்திகள்:





Saturday, April 11, 2015

ஜெ. வழக்கு – இப்போதைய ஆப்ஷன்ஸ்

ருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த செப்டெம்பர் மாதம் 27 ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அவர்கள் கொடுத்த தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடும் தள்ளுபடி ஆனதால், உச்சநீதிமன்றத்து கதவுகளை தட்டிய ஜெவுக்கு சிறிய ஆறுதலாக மறு மேல் முறையீட்டுக்கு அனுமதியளித்தும் அதுவரை அவருக்கு ஜாமீனை வழங்கியும் சந்தோஷம் கொடுத்தது உச்சநீதிமன்றம்.

எனினும், மூன்று மாதங்களுக்குள் வழக்கை நடத்தி முடிக்க ஒத்துழைப்பு தரவேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் விதித்திருந்தது உச்ச நீதிமன்றம்.

உச்சநீதிமன்றம் சொன்னபடி கர்நாடகத்தில் சிறப்பு நீதிபதி திரு குமாரசாமி அவர்கள் முன்னிலையில் மிக வேகமாக நடைபெற்ற மேல்முறையீட்டு விசாரணை, கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் ஜாமீன், வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வரையே உள்ளதால், அதற்கு முன்பாக குமாரசாமி அவர்கள் தீர்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு என்பது ஜெ.வின் வாழ்க்கையை மட்டுமல்லாமல் தமிழகத்தின் எதிர்காலத்தையும் இந்திய அரசியல் களத்தையும் தீர்மானிக்கப்போகின்ற தீர்ப்பு ஆகையால் மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருப்பதை மறுக்க முடியாது.


மறு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை பல பல சுவாரசியமான நிகழ்வுகளை கொண்டதாக இருந்தது. முன்பு மிக கறாராகவும் ஊழலை ஆதரிக்க முடியாது என்கிற ரீதியிலும் சென்று கொண்டிருந்த விசாரணை மெல்ல தன் கடுமையை குறைத்து, இது பொய் வழக்காக கூட இருக்கலாம் என்கிற சந்தேகத்தை விதைக்கும் வகையிலான கருத்துக்களை கொண்டதாக மாறியது. உதாரணமாக டைல்ஸ் விலை ரூ. 100- 150 தான் இருக்குமென எனக்கே தெரியும். ரூ. 1800 என சொல்லி இருப்பதை நம்ப முடியவில்லை என நீதிபதியே கருத்து சொன்னது மிகப்பெரிய அதிர்ச்சி. ஜெ. தனது வீட்டுக்கு பயன்படுத்தியது டைல்சா மார்பிள்ஸா என்பதை கூட ஆராயாமல், ஜஸ்ட் லைக் தட் காமன் சென்ஸ் இல்லாமல் வழக்கு போடுவதா?’ என நீதிபதி சாடியது எல்லோருக்குமே ஆச்சரியம் தான். அதை தொடர்ந்து சொத்துக்களை மறு மதிப்பீடு செய்யவும் அவர் உத்தரவிட்டார். மொத்த வழக்கையும் சுருக்கமாக ரீவைண்ட் செய்தும் பார்த்தார்.

நல்லம்ம நாயுடு அவர்கள் நியமிக்கப்பட்டது தவறு என ஜெ. தரப்பு வாதாடியபோது, அந்த நியமனம் சரியானது எனவும் கருத்து சொல்லி இருக்கிறார் நீதிபதி. நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கையின் சந்தா தொகையின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அன்பழகன் தரப்பு வழக்கறிஞர்களை அனுமதிக்காதது போலவே, சுப்பிரமணியம் சாமியையும் வழக்கில் வாதாட அனுமதிக்காததும் எல்லோருக்கும் பல யூகங்களை உருவாக்கி விட்டது. வழக்கு நீர்த்து போய்விடும் என்கிற உணர்வு எல்லோருக்குமே தோன்றியதாலோ என்னவோ தமிழக அரசியல் களம் சட்டென மாறியது. ஒருவேளை ஜெ. விடுவிக்கப்பட்டால் முன்கூட்டியே தேர்தலை நடத்தக்கூடும் என யூகித்து அதற்கு தங்களை தயார்ப்படுத்தும் முயற்சியில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது தவறு என அன்பழகன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் செய்த மேல் முறையீடும் ஒரு புறம் நடந்துகொண்டிருந்தது. அவர்கள் அப்படி கேட்க காரணம், அரசு தரப்பு வழக்கறிஞர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றவாளி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டது தான். இதை கர்நாடக உயர்நீதிமன்றமே கூட கண்டித்து இருக்கிறது. எனவே, தண்டனை நிரூபிக்கப்பட்ட ஒரு வழக்கின் மேல் முறையீட்டில் குற்றவாளிகளுக்கு சாதகமான அரசு வக்கீல் இருந்தால் நீதி கிடைக்காது என்பது அன்பழகன் தரப்பினரின் வாதம். இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துவிட்டது. இந்த உச்ச நீதிமன்ற வழக்கிலே கூட, ஜெ. தரப்பு பவானி சிங் தான் இந்த வழக்கில் வாதாடவேண்டும் என ஒரு அபிடவிட்டை தேவையில்லாமல் தாக்கல் செய்திருக்கிறது. இதுவே அன்பழகன் தரப்பினரின் குற்ற சாட்டை உறுதி செய்வதாகவும் அமைந்திருக்கிறது.

அங்கே தான் ஒரு சுவாரஸ்யம்.

கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி இந்த வழக்கில் வாதாடிய அன்பழகன் தரப்பு வக்கீல், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரையில் கர்நாடக உயர்நீதிமன்ற மேல் முறையீட்டில் தீர்ப்பு வழங்க தடை கோரியபோது அப்படி எல்லாம் தரமுடியாது என மறுத்த உச்ச நீதிமன்றம், இந்த முறை சற்று தன் நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறது.

தீர்ப்பை ஒத்திவைத்து விட்டு மதிய உணவுக்கு சென்ற நீதிபதிகள், பின் திரும்பி வந்து அவசரம் அவசரமாக அன்பழகன் தரப்பு வக்கீல்களை அழைத்து, ஜெ.வின் ஜாமீன் எது வரை உள்ளது என கேட்டு இருக்கிறார்கள். ஏப். 18 வரை என்றதும், தங்களது தீர்ப்பை ஏப் 15 ஆம் தேதி தருவதாகவும், அதுவரை மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

இதில் தெரியவரும் / புரியவரும் விஷயங்கள் பல பல.. எனினும் சில விஷயங்களை மட்டும் இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.வின் ஜாமீனை ஏப்ரல் 18க்கு மேல் நீடித்து உத்தரவிடாதது ஒரு முக்கியமான விஷயம். ஏப்ரல் 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு ஏப்ரல் 18 வரை 3 நாட்களில் எந்த நாளில் வேண்டுமானாலும் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கக்கூடும்.

கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு இப்போது இருக்கும் ஆப்ஷன்ஸ் என கருதப்படுபவை:

1.   ஜெ. தரப்பு கோரியது போல இது வெறும் பொய் வழக்கு என தீர்மானித்து அவரை விடுதலை செய்யலாம்

2.   வழக்கின் இறுதி நாளில் சுப்ரமணியம் சுவாமி கொடுத்த அபிடவிட்டை கருத்தில் கொண்டு கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து, ஜாமீனை ரத்து செய்யலாம்

3.   அரசியல் சாசன சிக்கல் இருப்பதால் தீர்ப்பு எதுவும் வழங்காமல் உயர் பெஞ்சுக்கு வழக்கை பரிந்துரை செய்யலாம்

4.   பவானிசிங் நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானால், புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்க செய்து வழக்கை மீண்டும் முதலிலிருந்து விசாரிக்க உத்தரவிடலாம்

இதில் நான்காவது ஆப்ஷன் செயல்பட்டால், ஜெ.வுக்கு அது மிக மிக சாதகமாக அமையும். அதாவது அப்படி புதிய வழக்கறிஞர் நியமித்து மீண்டும் விசாரணை தொடரும் பட்சத்தில் ஜெ. தன் சார்பாக ஒரு மனு செய்தால் போதும். தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அவர்தான்.

அதாவது, “உச்சநீதிமன்றம் சொல்லியபடி நான் வழக்குக்கு உரிய முறையில் ஒத்துழைப்பு கொடுத்து கெடுவுக்கு முன்பே முடித்து கொடுத்துவிட்டேன். ஆனால் வழக்கறிஞர் நியமன விஷயத்தில் கர்நாடக அரசு செய்த தவறால் நான் பாதிக்கப்படக்கூடாது. எனவே எனது ஜாமீனை நீட்டித்தும் தண்டனையை ரத்து செய்தும் உத்தரவிடுங்கள்” என கோரினால் அந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அதை அனுமதித்தால், அவர் முதல்வராக பதவி ஏற்க எந்த தடையும் இல்லை.

கையோடு சட்டமன்ற தேர்தலை நடத்தி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சியை தக்கவைத்து கொண்டால், யாராலும் அவரை எதுவும் செய்ய முடியாது. காரணம், ஜெ.வுக்கு சாதகமாக ஒரு தீர்ப்பு (விடுதலை) வந்தால், அதை எதிர்த்து மேல் முறையீடு செய்யவேண்டியது வழக்கு தொடர்ந்த தமிழக அரசு தானே. அப்படி முறையீடு செய்யாமல் விட்டாலே போதும். வழக்கு முற்றிலுமாக முடிந்துவிடும். அதோடு இந்த பதினெட்டு ஆண்டு கால நீதிக்கான போராட்டம் முடிவுக்கு வந்துவிடும். இது சாத்தியம் தான். ஜெ தான் தமிழக முதல்வர் எனில் ஜெ.வுக்கு எதிரான வழக்கில் ஜெ. தலைமையிலான அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது எல்லோராலும் யூகிக்கக்கூடியதே.

ஆனால், ஒருவேளை உச்சநீதிமன்றம் பவானி சிங் நியமனம் செல்லும் என சொன்னாலோ, அல்லது நியமனம் செல்லாது ஆனாலும் வழக்கு முடிந்துவிட்டதால் கர்நாடக அரசு முன் தேதியிட்டு அவருக்கு நியமன ஆணை கொடுத்தால் போதும் என சொன்னாலோ நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றதாக மாறிவிடும்.

ஏற்கனவே மார்ச் 11 ஆம் தேதியே வழக்கை முடித்துவிட்டு தீர்ப்பு தயாரிப்பில் இருக்கும் குமாரசாமி அவர்கள் இந்நேரம் தீர்ப்பை வடிவமைத்திருப்பார். ஏனெனில் ஏப் 13 க்குள் தீர்ப்பு சொல்லவேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. இப்போது ஐந்து நாள் நீட்டித்து ஏப் 18 வரை கால அளவு கிடைத்திருக்கிறது. அவர் காத்திருக்கவேண்டியது பவானி சிங் வாதாடியது செல்லுமா செல்லாதா என்கிற ஒரு விஷயத்துக்கு தான்.

விசாரணையின் போது நீதிபதி குமாரசாமி சொல்லிய சில கருத்துக்கள் முக்கியமானவை.

1.   டைல்ஸின் விலை கற்பனையாக உயர்த்தி காட்டப்பட்டிருக்கிறது. எனக்கு தெரிந்தே அப்போது ரூ. 100-150 வரை தான் விலை இருக்கும். ஆனால் வழக்கில் ரூ. 1800 என காட்டப்பட்டு இருக்கிறது.

2.   நமது எம்.ஜி.ஆர் நாளிதழுக்கு சந்தா கிடைத்ததை எல்லாம் சந்தேகப்பட முடியாது. ஒரு பத்திரிக்கைக்கு சந்தாதாரர் இருப்பது இயல்பு. அந்த சந்தாக்களுக்கு ரசீதும் உள்ளது.

3.   திமுக இந்த வழக்கில் ஆர்வம் காட்டுவது ஏன். அவர்களது அதீத ஆர்வம் இந்த வழக்கின் நோக்கத்தை சந்தேகத்துக்குள்ளாக்குகிறது.

4.   ஜெ. முதல்வர் ஆவதற்கு முன்பே அவருக்கு வருமானம் இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் முன்பே வருமான வரி கட்டி வந்திருக்கிறார் என்பதை வழக்கு விசாரணை அதிகாரி கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என தோன்றுகிறது.

5.   புடவைகள், ஆபரணங்கள், செருப்புகள் போன்றவை முதல்வர் பதவிக்காலத்தில் தான் வாங்கப்பட்டன என்பதை நிரூபிக்கவில்லை.

6.   சுதாகரன் திருமண செலவை கட்சியினர் தான் ஏற்று கொண்டதாக சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் அந்த செலவை ஜெ.வின் செலவாக காட்ட முடியாது.

7.   சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஜெ.வீட்டில் வாசித்ததாலேயே அவர்கள் கூட்டு சதியில் ஈடுபட்டார்கள் என சொல்லமுடியாது. அதை நிரூபிக்கும் ஆவணங்கள் எதுவும் இல்லை.

என பல பல சாதகமான கருத்துக்களை சொல்லி இருக்கிறார் நீதிபதி. இதிலிருந்து தான் அவர் ஜெ.வுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லக்கூடும் என்கிற யூகம் உருவாகி இருக்கக்கூடும்.

ஆனால் அவர் ஜெ.வுக்கு எதிரான கருத்துக்களையும் சொல்லி இருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். அதில் முக்கியமானவை

1.   நீதிபதி குன்ஹா 150 முடிச்சுகளை தனது தீர்ப்பில் இட்டிருக்கிறார். அவற்றை ஒவ்வொன்றாக ஆதாரபூர்வமாக அவிழ்க்காமல் என்னால் எதுவும் செய்ய முடியாது.

2.   நீங்கள் (ஜெ. தரப்பு) எல்லா செலவுகளுக்கும் கணக்கும் ஆவணங்களும் இருக்கிறது என வாய்மொழியாக சொல்கிறீர்களே தவிர இதுவரையும் ஒரு ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை. ஆவணங்கள் இல்லாவிட்டால் அவற்றை கணக்கில் வராத செலவாகவே கருதமுடியும்.

3.   கடந்த 18 ஆண்டுகாலமாக இந்த வழக்கில் வருமானத்துக்கான எந்த ஆதாரத்தையும் நீங்கள் தாக்கல் செய்யவில்லை.

4.   இந்த மேல் முறையீடு வழக்கு என்பது நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பு சரியா தவறா என்பதை தீர்மானிப்பதற்கு தானே தவிர வழக்கை மறு விசாரணை செய்வதல்ல.

5.   நல்லம்மநாயுடு நியமனம் செய்யப்பட்டது தவறல்ல. காவல்துறையின் எந்த அதிகாரியும் அதை விசாரிக்கலாம்.

சிற்சில நேரங்களில் ஜெ.வுக்கு எதிரான கருத்துக்களை சொன்னாலும், பொதுவாக வழக்கு விசாரணை நடந்த நாட்களில் சொல்லப்பட்ட கருத்துக்கள் இது ஒரு ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்கிற தோற்றத்தையே தந்ததாலோ என்னவோ ஜெ. விரைவில் விடுதலை ஆகிவிடுவார் என்றே பலரும் எதிர்பார்க்கிறார்கள்.


ஆனால் வழக்கு விசாரணையின் கடைசி நாளில் திரு. சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் தாக்கல் செய்த 14 பக்க பிரமாணம் அதை மாற்றி விட்டது. இந்த வழக்கின் துவக்கம், தன்மை, எப்படி எல்லாம் ஜெ. முறைகேடு செய்திருக்கிறார் என்பதை எல்லாம் தெளிவாக விவரித்து இருக்கும் அந்த அபிடவிட்டை நீதிமன்றமும் ஏற்று கொண்டிருக்கிறது. அந்த அபிடவிட்டை புறக்கணித்துவிட்டு தீர்ப்பை எழுத முடியாது என்பது தான் நிலை.

எனவே இந்த வழக்கை பொறுத்தவரை கணிப்புக்களுக்கும் யூகங்களுக்கும் சிக்காமல் மிகுந்த சஸ்பென்சாக இருக்கிறது முடிவு. 90% விடுதலைக்கும் 5% கைதுக்கும் 5% டிவிசன் பெஞ்ச் போவதற்குமே வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்.

பார்ப்போம் என்ன தான் நடக்கிறது என்று. இன்னும் ஒரு வாரம் தானே?



Tuesday, March 31, 2015

மேகதாது (எ) மேகேதாத்து அணை


கொஞ்ச நாளாவே எல்லா மீடியாலயும் தவறாம இடம் பெறும் ஒரு வார்த்தை மேகதாது.

அது மேகதாதுவா மேகேதாத்துவான்னு (Mekedatu) ஒரு குழப்பம் இன்னும் எனக்கு இருக்கு. அதை விடுங்க. நாம விஷயத்துக்கு வருவோம்

குடகு மலையில் உற்பத்தி ஆகும் காவிரி தமிழகம் நோக்கி ஓடி வரும்போது மைசூர் பக்கத்துல கிருஷ்ணராஜசாகர்னு ஒரு பெரிய டேம் (அதாங்க நம்ம பிருந்தாவனம் கார்டென்ஸ்) கட்டி நீரை தேக்கி வெச்சிருக்காங்க கர்நாடகம். அந்த தண்ணியை மைசூர் நகர குடிநீர் தேவைக்கும், விவசாயத்துக்கும், மின்சாரத்துக்கும் பயன்படுத்திக்கறாங்க. அந்த டேம் நிறைஞ்சு மீதமாகுற நீர் தமிழ்நாட்டை நோக்கி ஓடி வருது.

இன்னொருபக்கம், மேற்கு தொடர்ச்சி மலையில் கேரளா கர்நாடக எல்லையில் மானந்தவாடி பக்கத்துல இருந்து கபினி நதி உற்பத்தி ஆகி அதுவும் தமிழ்நாடு நோக்கி வருது. அப்படி வர்ற கபினியில் பேகூர் கிட்டே கபினி டேம் கட்டி இருக்காங்க. அந்த தண்ணியை வெச்சு தெற்கு கர்நாடகத்தின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்திக்கறாங்க. அந்த டேம் நிறைஞ்சு மீதமாகுற நீர் தமிழ்நாட்டை நோக்கி ஓடி வருது.

இப்படி தமிழகத்தை நோக்கி ஓடி வர்ற ரெண்டு நதிகளும் திருமாகடலு நரசிபுராங்கற இடத்துல ஒண்ணா சேர்ந்து தமிழகத்தை நோக்கி வருது. ஷிவனசமுத்ரா தாண்டுனதும் இந்த நதியில் ஷிம்ஷா நதியும் வந்து சேர்ந்துக்குது. எல்லாமுமா தமிழ்நாட்டை நோக்கி வரும்போது முக்குரு காட்டுக்கிட்டே ஆர்காவதி நதியும் வந்து சேர்ந்துக்குது.

இப்ப இதில் கிருஷ்ணராஜசாகர் டேமின் மிச்சம், கபினி டேமின் மிச்சம், ஷின்ஷா நதி, ஆர்காவதி நதின்னு எல்லாம் சேர்ந்து தமிழ்நாட்டுக்கு வருது. ரைட்டா?

தமிழகத்துக்கு நுழையறதுக்கு முன்னாடி பில்லிகுண்டலங்கற இடத்தில் தான் ஜீரோ பாயிண்ட். அங்கேயிருந்து தமிழ்நாட்டுக்குள் நுழையுற தண்ணீரின் அளவு கணக்கிடப்படுது. இந்த தண்ணி தான் ஹோகனேக்கல் கடந்து மேட்டூர் வந்து தேக்கி வைக்கப்படுது. அதுக்கப்புறம் அது என்ன ஆகுதுன்றது பத்தி ஏற்கனவே நான் ஒரு தனி பதிவு எழுதிருக்கேன். அது நமக்கு இப்ப இந்த பதிவுக்கு தேவை இல்லாதது.

இப்ப கர்நாடகம் என்ன செய்யுதுன்னா, பில்லிகுண்டல வர்றதுக்கு முன்னாடியே மேகேதாத்துங்கற (Mekedatu) எடத்துல ஒரு டேமை கட்டப்போறாங்க. அந்த டேமும் நிறைஞ்சு மிச்சம் மீதி இருந்தா தான் இனி பில்லிகுண்டலவுக்கே வரும். அப்புறம் தான் தமிழ்நாட்டுக்கு. பிளான் புரிஞ்சுதா?



(மேகேதாத்து - லோக்கேஷன் - ஜூம் செய்து பார்க்கவும்)

இதுக்கு கர்நாடகம் சொல்ற காரணம் நாமெல்லாம் யோசிக்கவேண்டிய விஷயம்.

உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்துக்கு கர்நாடகம் கொடுக்கவேண்டிய நீரின் அளவு 192 டி.எம்.சி. தமிழகம் கர்நாடகத்துக்கிட்டே கேட்பது 205 டி.எம்.சி. ஆனா போன வருஷம் வரை சராசரியா தமிழ்நாடு 35 டி.எம்.சி தண்ணீரை வீணா கடலுக்கு அனுப்பிருக்குன்னு கர்நாடகம் சொல்லுது. அப்படி வீணடிக்கிறதுக்கு எதுக்கு தண்ணி கொடுக்கணும்? அதை நாமளே தேக்கி சேமிச்சு வெச்சா நல்லது தானேன்னு கர்நாடகம் யோசிக்குது.

கர்நாடக சட்டமன்றத்துல சமீபத்தில் பேசின அமைச்சர் கூட தமிழகத்துக்கு தரவேண்டிய 192 டி.எம்.சியை எந்த சிக்கலும் இல்லாம கொடுத்துடறோம். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா அதையும் விட அதிகமா நம்மால தேக்கி வெச்சு உபயோகப்படுத்தப்படாத நீர் கிட்டத்தட்ட 35 டி.எம்.சி தண்ணீரையும் நாம தமிழ்நாட்டுக்கு அனுப்பறோம். அதை அவங்களும் உபயோகிக்கறதில்லை. அதனால அதை நாமளே உபயோகிப்போம்ன்ற ரீதியில் பேசி இருக்காரு.

சரி இதில் என்ன பிரச்சனை?

இப்ப கர்நாடகம் இப்படி சொன்னாலும் இது பின்னாளில் தமிழகத்தை பாலைவனமா மாற்றிவிடும் திட்டம் தான். தமிழகத்துக்குன்னு சொந்தமா ஜீவ நதி இல்லை. ஆந்திரா கர்நாடகா கேரளா ஆகிய மாநிலங்களை நம்பி தான் நாம இருக்கோம். இதில் வர்ற தண்ணியையும் முடக்கிட்டா மொத்தமா வறண்டு போயிரும்னு தான் தமிழகம் பயப்படுது.

இந்த பிரச்சனையை எதிர்க்கவேண்டிய தமிழக அரசு அமைதியா இருந்ததாலயும், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான தேமுதிகவும் அமைதியா இருந்ததாலயும், டெல்டா மாவட்ட விவசாயிகளே ஒண்ணு கூடி போராட்டம் முழு அடைப்பு எல்லாம் பண்ணி இருக்காங்க. வழக்கம் போல அதுக்கு ஆதரவு அவ்வளவா இல்லை.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டுனு சுதாரிச்சு தமிழகத்தில் இருந்து அனைத்து கட்சி எம்.பிக்கள் குழுவை பிரதமரை சந்திக்க அனுப்பி மேகேதாத்து அணையை தடுத்து நிறுத்த சொல்லி கோரிக்கை கொடுத்திருக்காரு. அதிசயமா திமுக அதிமுக இரண்டும் ஒண்ணா இணைஞ்சு பிரதமரை சந்திச்சு தமிழகத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்தி இருக்காங்க.

மத்தபடி பொதுமக்களும், ஈழ விஷயம்னா மட்டும் கொதிச்செழும் மாணவர்களும், ஊழல் செஞ்சதுக்கெல்லாம் தண்டனையான்னு வெகுண்டெழுந்த திரை உலகும் இந்த பிரச்சனையை அவ்வளவு சீரியஸா எடுத்துகிட்ட மாதிரி தெரியலை.

இது தமிழக வாழ்வாதார பிரச்சனைன்ற லெவல்ல இல்லாம டெல்டா மாவட்ட விவசாயிகளோட சொந்த பிரச்சனைங்கற ரீதியிலதான் எல்லோருமே இப்ப பார்க்கிறாங்க.

எந்த எதிர்ப்பையும் சட்டப்பூர்வமா சந்திச்சு இந்த அணையை கட்டியே தீருவோம்னு கர்நாடகம் தீவிரமா இருக்கு. வரப்போற பிரச்சனையின் முழு பாதிப்பையும் உணர்ந்து விவசாயிகள் மட்டும் போராடிட்டு இருக்காங்க. மத்த தமிழக தமிழர்கள் எல்லாம் இதை பத்தி கண்டுக்காம இருக்காங்க.

பார்ப்போம்... என்ன நடக்குதுன்னு.

Thursday, March 19, 2015

குஜராத் பயண குறிப்புகள் – பாகம் 2

ஏற்கனவே இந்த தொடரின் முதல் பகுதியை இங்கே படிச்சவங்களுக்கு நான் இப்போ எங்கே போகப்போறேன்னு நல்லாவே தெரியும். யெஸ். ராஜ்கோட்டிலிருக்கும் மகாத்மா காந்தியின் வீட்டுக்கு.

தங்கி இருந்த நாட்களின் இடையில் ஒரு சண்டே வந்துச்சு. அன்னைக்கு ஆஃபிஷியல் வேலை எதுவும் இல்லாததால் ஊர் சுத்த பிளான் போட்டேன். வாங்கனேர் ரயில்வே ஸ்டேஷன்லருந்து காலை டிரெயின் பிடிச்சு நேரா ராஜ்கோட். ரயில்வே ஸ்டேஷன்ல சில பல ஃபோட்டோ எடுத்துட்டு ஜெனெரல் கம்பார்ட்மெண்ட் கோச்சில் ஃபுட்போர்ட் பயணம்.


ராஜ்கோட் வந்து இறங்கியதும் லைட்டா ஒரு டீயை சாப்ட்டுட்டு, ஆட்டோ பிடிச்சு காந்தி வீட்டுக்கு போக சொன்னா, திரு திருன்னு முழிக்கிறாங்க. யாருக்குமே தெரியலை. எனக்கே கொஞ்சம் டவுட் ஆயிருச்சு. ராஜ்கோட்ல தானே வீடு, இல்லை போர்பந்தர்லையான்னு. போர்பந்தர்ல பிறந்தாரு ஆனா வளர்ந்தது, கல்யாணம் பண்ணி குழந்தை குட்டிகளோட வாழ்ந்ததெல்லாம் ராஜ்கோட்ல தான்னு என் சிற்றறிவு கண்பார்ம் பண்ணினதால், என் ஃபோன்ல இருக்கும் ஹியர் மேப்பை கேட்டேன். அந்த வீட்டுக்கு பேரு கபா காந்தி நோ டேலோ’. அது கடைவீதில ஒரு குறுகலான சந்துக்குள்ளே இருக்குனு மேப் சொல்லி அங்கே போறதுக்கான ரூட்டையும் சொல்லிச்சு. ஆட்டோ அண்ணன்ட்ட லெஃப்ட் போங்க ரைட்டு போங்கன்னு இன்ஸ்டிரக்ஷன் கொடுத்து கொடுத்து ஒரு வழியா வீட்டுக்கிட்டே போயிட்டேன். காந்தி வீடு இருக்கிற சந்துக்குள்ளே ஆட்டோ போக முடியாது. அதனால கார்னர்ல இறங்கி கொஞ்ச தூரம் நடந்தேன்.


வீட்டை பார்த்ததும் கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு. ஒரு நாலடி அகல வீதியில் இருக்கு அந்த வீடு. வீட்டுக்கு பக்கத்துலேயே ரொம்ப கேவலமான ஒரு பொது கழிப்பிடம். துர்நாற்றம் தூக்கலா இருந்துச்சு. சுத்தி சின்ன சின்ன கடைங்க. எங்கே பார்த்தாலும் வெற்றிலை பீடா துப்பல்கள். ஜனங்க பரபரப்பா போயிட்டும் வந்திட்டும் இருக்காங்க. ஆனா அந்த வீடு வெறிச்சோடி கிடந்தது. வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும் ஒரு பழைய காலத்து தண்ணீர் பம்ப். விசாலமான முற்றம். நேர்த்தியாக பராமரிக்கப்பட்ட எளிமையான வீடு. ரொம்ப நீட்டா மெயிண்டேயின் பண்ணி வெச்சிருக்காங்க. 






ஒரே ஒரு கைடு இருக்கார். ரொம்ப வயசானவர். காந்தி பத்தி சொல்லும்போது அவ்வளவு பெருமிதம் அவருக்கு. ஒவ்வொரு அறையா பொறுமையா கூட்டிட்டு போனார். ஒவ்வொரு அறை, ஃபோட்டோ, கருவிகள் பத்தியெல்லாம் நிறைய சுவாரஸ்யமான வரலாறுகளை சொன்னார். கேக்க கேக்க ரொம்ப சிலிர்ப்பா இருந்துச்சு. காந்தியின் அறைக்குள் நுழைஞ்சப்ப, இந்த இடத்துல தானே மகாத்மா நடந்தாரு, இங்கே தானே உக்காந்திருப்பாரு, இங்கே தானே படிப்பாருன்னெல்லாம் நினைக்க நினைக்க உடம்பெல்லாம் ஒரு விதமான சிலிர்ப்பு. அதை அங்கே போயி அனுபவிச்சா தான் தெரியும். வார்த்தைகளில் எல்லாம் வடிக்க தெரியலை எனக்கு. அவரது புத்தக அலமாரியை அப்படியே வெச்சிருக்காங்க. அவர் படிச்ச புத்தகங்கள் இருக்கு. அவர் பயன்படுத்தின கை ராட்டை இருக்கு. நிறைய அபூர்வமான புகைபடங்கள் இருந்துச்சு. அதை எல்லாம் பார்த்து முடிச்சு வெளி வரும் பொது அங்கே நம்ம கருத்துக்களை சொல்ல ஒரு ரிஜிஸ்டர் வெச்சிருந்தாங்க. சும்மாவே நாம கருத்து சொல்றதுல கில்லி. கருத்து சொல்லுங்கன்னு கேட்டா சும்மா இருப்போமா என்ன? கருத்தை பதிவு செஞ்சிட்டு சில ஃபோட்டோ எல்லாம் எடுத்துட்டு கிளம்பினேன்.


குஜராத்துல இல்லாம வேறே ஏதாவது மாநிலத்துல இருந்திருந்தா அந்த வீடும் இடமும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பிரமாதமா பராமரிச்சிருப்பாங்கன்னு ஏக்கமா இருந்துந்துச்சு. ஏன்னே தெரியலை, குஜராத்காரங்களுக்கு காந்தின்னாலே ஒரு கடுப்பு மாதிரி தோணுது. நான் சந்திச்சு காந்தி பத்தி காந்தி வீடு பத்தி விசாரிச்ச யாருமே அதில் அவ்வளவா சுவாரஸ்யம் காட்டலை. அந்த வீட்டில் இருந்த கைடு கூட சொன்னாரு, யாரும் இங்கே அதிகமா வர்றதில்லைன்னு. அந்த அளவுக்கு அவர் ஏன் அங்கே இருட்டடிப்பு செய்யப்படுறார்ன்னே தெரியலை.


வெளியே வந்து பஜார்ல ஒரு ரவுண்ட் அடிச்சேன். எல்லா கடையிலேயும் இப்ப ரொம்ப பரபரப்பா விற்பனை ஆகிட்டு இருக்கிறது மோடி கோட் தான். விதம் விதமா கோட்டுகள் தொங்கிட்டு இருக்கு, ஒவ்வொரு கடைலயும். பொதுவா நம்ம ஊர்ல கிடைக்கிற துணிகளை எதுக்கு அங்கே போயி வாங்கணும், அங்க மட்டுமே கிடைக்கிற துணிகளா வாங்கலாம்னு முடிவு பண்ணி பஜாரை அலச ஆரம்பிச்சேன். கடைசியில் மகளுக்கு சில சோளிகளையும், குழந்தைகளுக்கான குஜராத் பாரம்பரிய கலாச்சார உடைகளையும் வாங்கிட்டு கிளம்பினேன்.







மதிய சாப்பாட்டுக்கு வழக்கம் போல ரோட்டோர கையேந்தி பவனில் ரொட்டியும் கறியும் சாப்பிட்டுட்டு ராஜ்கோட்லருந்து வாங்கனேருக்கு மீண்டும் ஒரு ரயில் பயணம். அதே வறண்ட பூமி, காய்ந்த பருத்தி வயல்கள், தரிசு நிலம் வழியா அதே பயணம்.

இரண்டொரு நாளில் ஏன் வேலை முடிஞ்சிருச்சு. இனி கிளம்ப வேண்டியதுதான்னு முடிவு பண்ணினது 23 ஆம் தேதி சாயந்தாரம் ஏழு மணி. 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ்க்கு வீட்டுக்கு போயிரணும்னு பிளான். டிக்கெட்ஸ் பார்த்தா ராஜ்கோட் – சென்னை செம ரேட்டு. எல்லாமே ஹாலிடே சீசன் புக்கிங் போல. வேற ஆல்டெர்நேட்டிவ் ஆப்ஷன்ஸ் பார்த்தேன். அகமதாபாத்லருந்து பெங்களூருக்கு 24 ஆம் தேதி காலைல 8:55 க்கு ஒரு இண்டிகோ இருந்துச்சு. இதுவரைக்கும் நான் இண்டிகோல போனதில்லை. ரேட்டும் ரொம்ப நியாயமா இருந்துது (Rs.10,450). அதனால் புக் பண்ணிட்டேன். இப்ப நேரம் ராத்திரி எட்டு மணி. காலைல 7 மணிக்கு நான் அகமதாபாத் ஏர்போர்ட்ல இருக்கணும். எப்படி போறது? இது தான் அடுத்த கேள்வி.


ரூமை செக் அவுட் பண்ணிட்டு ஒரு ஆட்டோ பிடிச்சு நேரா வாங்கனர் ரயில்வே ஸ்டேஷன் போனேன். நடு ராத்திரி 12:18 க்கு சோம்நாத் எக்ஸ்பிரஸ் இருக்கு. அது ஒரு நாலு மணி சுமாருக்கு அகமதாபாத் போயிரும். அதை தவிர வேறு வழி இல்லை. ஸ்டேஷன்லயே டேரா போட்டு உக்காந்தேன். செம குளிரு. பத்து மணிக்கு அப்புறம் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சு. கால் மணி நேரத்துக்கு ஒரு தரம் டீ சாப்பிட்டு சாப்பிட்டு உடம்பை மேனேஜ் பண்ணி வெச்சிருந்தேன். ரயில் கரெக்டா 12:25க்கு வந்துச்சு. இந்த டிரெயின் சோம்நாத் கோவிலிலிருந்து வர்றதால பக்த மகா ஜனங்கள் செம கூட்டம். கால் வெக்க கூட இடமில்லை. அடிக்கிற குளிருக்கு ஃபுட் போர்டு கூட அடிக்க முடியாது. அப்படி இப்படி சமாளிச்சு கிடைச்ச கேப்ல தரைல பேப்பர் விரிச்சு உக்காந்து பயணிச்சேன். மூனரை மணி நேர பயணம். நாலு மணிக்கெல்லாம் அகமதாபாத் வந்துச்சு. பரபரப்பான சிட்டி அகமதாபாத். அங்கே நிறைய பார்க்க வேண்டி இருந்தாலும் எனக்கு டைம் இல்லை. ஒரு ஆட்டோ பிடிச்சு ஏர்போர்ட் போனேன். முன்னூறு ரூபா ஆச்சு. ஜாஸ்தியா தெரியலை. அவ்வளவு தூரம் இருந்துச்சு ரயில்வே ஸ்டேஷனுக்கும் ஏர்போர்ட்டுக்கும். ரொம்ப அருமையான சாலைகள். ரெண்டு பக்கமும் கார்டன்ஸ். அழகான நகரம் அகமதாபாத். ஏர்போர்ட்டுக்கு உள்ளே போனா ஆட்டோவுக்கு பார்க்கிங் டோக்கன் போடணும்னு வெளிலயே இறக்கி விட்டுட்டாரு. பிரமாண்டமான அந்த ஏர்போர்ட்டை ரசிச்சபடி நடந்தே ஏர்போர்ட் நோக்கி போனேன்.


அன்னேரத்துலயும் பரபரப்பா இருந்துச்சு ஏர்போர்ட். நிறைய டிபார்ச்சர்ஸ். எனக்கு 8:55 க்கு தான் பிளைட்டு. மணி அஞ்சு தான் ஆவுது. இன்னும் நிறைய நேரம் இருக்கு. அதனால் ஏர்போர்ட்டை முழுசா ஒரு ரவுண்ட் அடிச்சேன். பிரமாதமா கட்டி இருக்காங்க. எங்கே பார்த்தாலும் அதானி அதானி அதானிதான். அதானியின் பெர்சனல் ஜெட்டும், மஹிந்திராவின் பெர்சனல் ஜெட்டும் அங்கே தயாரா இருந்துச்சு. எங்கேயோ கிளம்பறாங்க போல.


ஏழு மணிக்கெல்லாம் பசிக்க ஆரம்பிச்சிருச்சு. உள்ளேயே ஒரு ரெஸ்டாரண்ட். இண்டிகோவில் எப்படியும் டிபன் தரமாட்டான். அதனால இங்கேயே சாப்பிட்டிரலாம்னு உள்ளே நுழைஞ்சேன். லைட்டா சாப்பிட்டு ஹெவியா பே பண்ணிட்டு வெளியே வந்தேன். மணி 8:40 ஆச்சு ஆனா இன்னும் என் பிளைட் வர்ற அறியோ குறியோ காணோம். மனசு திக்கு திக்குன்னு ஆயிருச்சு. ஸ்பைஸ் ஜெட் மாதிரி இவனும் கேன்சல் பண்ணிருவானோ? அப்படி எதுனா பண்ணான்... நான் முடிஞ்சேன். அடுத்த டிக்கெட் புக் பண்ண கைல காசு கிடையாது. வேணும்னா டிரெயின்ல தான் போகணும். டிரெயின் 34 மணிநேர பயணம்.

9:00 மணி ஆகியும் பிளைட் வரலை. அதுக்குள்ளே இண்டிகோ கவுண்டர் முன்னாடி கூட்டம் சேர்ந்தாச்சு. நானும் கூட்டத்தோடு கூட்டமா போயி நின்னு விசாரிச்சேன். அரை மணி நேரத்துல வந்திடும்னாங்க. வெயிட்டிங் ஹாலில் போயி உக்காந்து என் ஃபோன்ல பிளைட் ராடார் வெப் சைட் ஓப்பன் பண்ணி என் பிளைட் (6E-531) 531) எங்கே வந்துட்டு இருக்குனு பார்த்தேன். அகமதாபாதுக்கு கொஞ்சம் தூரத்துல வந்துட்டு இருந்ததை பார்த்தப்பறம் தான் நிம்மதியாச்சு. ஆசுவாசப்படுத்திக்க (!) ஒரு டீ சாப்பிட்டேன். அதில ஒரு 60 ரூபா காலி.


சரியா 9:25 க்கு பிளைட் வந்துச்சு. போர்டிங்க் செக்மெண்ட் செக்மென்ட்டா அனுப்பினாங்க. 9:40 க்கு கிளம்பி பெங்களூர் வந்து இறங்கினப்ப மணி 11:45. ஆக்சுவலா 11:05க்கு வந்திருக்கணும்.


இந்த பிளைட் A320 வகையில் லேட்டஸ்ட்டா வெளியாகி இருக்கும் ஷார்க்லெட்ஸ் மாடல். இந்தியாவிலேயே ஷார்க்லெட்ஸ் விமானங்களை முதல் முதலா இண்டிகோ தான் வாங்க்கிச்சு. புத்தம் புது பிளைட். அருமையா இருந்துச்சு பயணம். வழக்கமா ஏர்பஸ்ஸில் இருக்கும் வைபிரேஷன் சுத்தமா இல்லை. கேப்டன் நாங்க போற ரூட்டை சொல்லிட்டே வந்தாரு. கொஞ்சம் ஜாலியான பேர்வழி போல. சுவாரசியமா இருந்துச்சு அவருடைய அறிவிப்புகள்.


பெங்களூர் வந்திறங்கி அங்கிருந்து KaSRTC மூலமா ஷாந்திநகர் வந்து நம்ம SETC மூலமா வீடு வந்து சேர்ந்ததெல்லாம் இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாத செய்திகள்.

குஜராத்.

நான் நினைச்ச மாதிரி, கற்பனை செஞ்சு வெச்ச மாதிரி, எனக்கு சொல்லப்பட்ட மாதிரி ஒரு வளர்ந்த மாநிலம் கிடையாது. ரொம்ப பின் தங்கிய மாநிலம் தான்னு புரிஞ்சுது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் இருப்பவர்களுக்கு குஜராத் எந்த ஆச்சரியத்தையும் தராது. ஆனா பீகார், ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட், சட்டீஸ்கார் போன்ற மாநிலத்திலிருந்து வந்து பார்க்கிறவங்களுக்கு குஜராத் சொர்க்கலோகம் மாதிரி தெரிஞ்சிருக்கலாம். குஜராத்தை ஆண்டவர்களும் அதிகமா தென் மாநிலங்களில் பயணம் செஞ்சதில்லைன்னு நினைக்கிறேன். அதனால் தான் இன்னமும் குஜராத் ரொம்ப பிரமாதமான மாநிலம்னு பிரச்சாரம் பண்ணிட்டு இருக்காங்க.

மிக பெரிய தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்கிற மாநிலம். சுகாதாரம், கல்வி ரெண்டையும் மேம்படுத்தினா மாநிலம் உயரத்துக்கு போக வாய்ப்பு 

Full Photos

Printfriendly