Wednesday, May 27, 2015

ராஜாவும் ராயல்டி பிரச்சனையும்

முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திடுறேன். 1976 இல் பிறந்ததால் நானும் ஒரு ராஜா ரசிகனே. ஒவ்வொரு மனுஷனும் தன் பால்யத்தில் விரும்பியவை தான் கடைசிவரை ஆதர்சம் என நினைப்பான். அதில் நானும் விதிவிலக்கு அல்ல. எல்லோர் இசையையும் ரசிக்கும் பக்குவம் இருந்தாலும், இளையராஜா எப்போதுமே கொஞ்சம் ஸ்பெஷல் தான் எனக்கும். அவரது இசை என்பது வேறு, அவரது தனிப்பட்ட விஷயங்கள் என்பது வேறு. அதில் நான் தெளிவா இருக்கேன்.

இனி

இப்ப சில காலமா மீண்டும் அவருடைய ராயல்டி பிரச்சனை வெடிச்சிருக்கு. ஏற்கனவே 2010 ஆம் வருஷம் வெடிச்சு சில காரணங்களால் அடங்கி இருந்துச்சு. இப்ப மீண்டும். இந்த தடவை டார்கெட், ரேடியோ மிர்ச்சி. அதில் வரும் பிரபலமான “நீங்க நான் ராஜா சார் நிகழ்ச்சியை நிறுத்தணும்னு அறிக்கை வெளியிட்டிருக்கார்.

அதை தொடர்ந்து இணைய நண்பர்கள் ஆளுக்கொரு விளக்கம், பொழுதொரு சப்பைக்கட்டு என என் டைம்லைனை நிரப்பிட்டு இருந்தாங்க. அதில் எதேச்சையா நானும் குதிச்சு இப்ப வெளி வர முடியாம தத்தளிச்சிட்டு இருக்கேன். விவாதங்களை புரிஞ்சு ஏத்துக்கற பக்குவம் பொதுவாவே எல்லோருக்கும் கம்மியாயிட்டதால, 140 லெட்டர்ஸ்ல விளக்கம் கொடுக்கறதை விட என்னுடைய கருத்தை என் வலைப்பூவிலேயே சொல்லிடலாமேன்னு நிறைய நண்பர்கள் கொடுத்த உருப்படியான அட்வைஸ் தான் இந்த பதிவுக்கான வித்து


இசையமைப்பாளர் தான் மொத்த இசைக்கும் சொந்தக்காரர். அவர்ட்ட இருக்கும் எண்ணற்ற திறமையான இசைக்கலைஞர்களை வழிநடத்தி அவர் மனசுல செதுக்கின இசையை ஒலியில் கொண்டு வந்து பதிவு செய்வது அத்தனை சுலபமானது அல்ல. அது மக்களையும் சென்று சேரனும். ஹிட்டும் ஆகணும். இதை எல்லா இசையமைப்பாளர்களும் செய்யுறாங்க.

ஒரு டைரக்டர் மனசுல இருப்பதை நடிகரிடம் சொல்லி அவரை அதற்கு தகுந்த மாதிரி பெர்ஃபார்மன்ஸ் பண்ண வெச்சாலும் நடிகருக்கு தான் அப்ளாஸ். ஆனா அதே இசையமைப்பாளர் மனசுல இருப்பதை இசைக்கலைஞரிடம் சொல்லி அவரை அதற்கு தகுந்த மாதிரி பெர்ஃபார்மன்ஸ் பண்ண வெச்சா அதன் பலன் இசையமைப்பாளருக்கு தான். என்ன? லாஜிக் இடிக்குதா? அதை பைபாஸ்ல விட்டுட்டு நாம விஷயத்துக்கு வருவோம்.


ஆரம்ப கால திரைப்பாடல்களை தயாரிப்பாளர் உரிமை எடுத்துக்கிட்டு இருந்தார். அதாவது இசைக்கலைஞர் வாசிச்சதுக்கு சம்பளம் கொடுத்ததும் அது இசையமைப்பாளரின் உரிமை ஆயிடுற மாதிரி, இசையமைப்பாளரின் இசைக்கு சம்பளம் கொடுத்ததும் அது தயாரிப்பாளரின் உரிமை ஆயிருந்தது. அதுக்கப்புறம் நிறைய சட்டங்கள் வந்து அந்த முறையை மாத்திருச்சு. அறிவுசார் சொத்து உரிமை சட்டம் (Intellectual Property Act) இந்தியாவில் ஏற்படுத்திய மிக பெரிய மாற்றத்துக்கு பின், நிறைய சச்சரவுகள், அந்த சட்டம் குறித்த சரியான புரிதல் இல்லாததால்.


முன்னேல்லாம் ராஜா போட்ட ஒப்பந்தங்களில் நிறைய சொதப்பல் இருந்ததால் அவரது அபூர்வமான அருமையான பழைய பாடல்களின் உரிமை அவரிடமே கூட இல்லாமல் சில நிறுவனங்களிடம் போயிருச்சு. பிறகு தனது மனைவி மூலமா சில உரிமைகள் கொடுத்தார் (இப்ப அப்படி மனைவி மூலமா கொடுத்தது செல்லாதுன்னு சொல்லி இருக்கார்!). அது தவிர இவரே சில நிறுவனங்களுக்கு உரிமை கொடுத்திருக்கார். இவை அல்லாமல் சில பாடல்களின் உரிமை பட தயாரிப்பாளர்களிடம் இருக்கு. இப்படியாக அவருடைய பாடல்களின் உரிமைகள் பலரிடம் சிதறிக்கிடக்குது.


90 களின் துவக்கம் வரை ஆல் இந்தியா ரேடியோவும் தூர்தர்சனும் தான் கதி என்பதால், எந்த பிரச்சனையும் இல்லை. அவங்க முறையா எல்லார்கிட்டேயும் உரிமம் வாங்கி ஒளி/ஒலிபரப்பிட்டு இருந்தாங்க. புதிய பொருளாதார கொள்கையின் பலனா, நிறைய பண்பலை வானொலிகளும், டிவி நிறுவனங்களும் வந்ததும், அவங்க யார் யார் கிட்டே எந்த எந்த பாடல் உரிமை இருக்கோ அவங்க கிட்டே எல்லாம் தனி தனியா ஒப்பந்தம் போட்டு பாடல்களை வாங்கி ஒலிபரப்பு ஒளிபரப்பு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. இதை கண்காணிக்கறதும் கட்டுப்படுத்தறதும் ரொம்ப கஷ்டமான விஷயம். ஏன்னா அவ்வளவு சேனல்கள், அவ்வளவு ரேடியோக்கள் 24 மணிநேர நிகழ்ச்சிகள்.


ரேடியோக்களை பொறுத்தவரை அவை செய்வது சேவை. இதை பலரும் ஒத்துக்கிட மாட்டாங்க. பத்திரிக்கையின் வாசகனா நாம அந்த பத்திரிக்கைக்கு காசு கொடுத்து வாங்கி ஒரு கட்டுரையை படிக்கிறோம். அது வணிக நோக்கிலான கட்டுரை. அதாவது யாருக்காக சொல்லப்படுதோ அவரிடமிருந்து நேரடியா காசு வாங்கப்படுது. ஆனா என்னுடைய இந்த பிளாக் (வலைப்பூ) வணிக நோக்கத்திலானது அல்ல. ஏன்னா இதை படிக்கும் நீங்க எனக்கு நேரடியா எந்த காசும் கொடுக்கறதில்லை. இந்த கட்டுரை எனது படைப்பு. ஆனா அதை நீங்க படிச்சாலும் அதுக்காக எனக்கு நீங்க எந்த வருவாயும் தருவதில்லை. ஒருவேளை பிளாக் மூலமான விளம்பர வருவாய் இருந்தாலும் (எனது பிளாகுக்கு அப்படி எதுவும் இல்லை) அது நீங்க கொடுக்கிற காசு அல்ல. எனவே கம்ப்லீட்டா ஒரு பிளாக் என்பது சேவை தான். வணிகம் அல்ல. அதே லாஜிக் தான் ரேடியோவுக்கும். 


ரேடியோ நமக்கு ஒலிபரப்பும் பாடல்களை நாம கேட்கிறோம். ஆனா அதுக்காக நாம எந்த காசும் ரேடியோ நிறுவனத்துக்கு  கொடுப்பதில்லை. நாம கேட்க விரும்பும் பாடல்களை அவர்கள் இலவசமா ஒலிபரப்புராங்க. அதே சமயம் விளம்பரதாரர்கள் தரும் விளம்பரங்களை கட்டணம் வசூலிச்சு அதை ஒலிபரப்புராங்க. இந்த விளம்பர வருமானம் மட்டும் தான் அவர்களது ஒரே வருவாய். பாடல்களை பொருத்தவரைக்கும் ஒலிபரப்பு உரிமைக்காக கட்டணம் செலுத்தி உரிமம் வாங்கி நமக்கு இலவசமா ஒலிபரப்புராங்க. சிம்பிளா சொல்லனும்னா, விளம்பர ஒலிபரப்புக்கு விளம்பரதாரர்கள் பணம் கொடுக்கிறாங்க. பாடல் ஒலிபரப்புக்கு பாடல் இசையமைப்பாளரோ, தயாரிப்பாளரோ, நேயர்களோ பணம் கொடுப்பதில்லை. மாறா ரேடியோ நிறுவனம் தான் உரிமத்துக்காக பணம் கொடுக்குது. அதனால் இது சேவை கேட்டகரியில் தான் வருமே தவிர வணிக ரீதியான ஒலிபரப்புன்னு சட்டப்படி வரையறை செய்ய முடியாது. ஒருவேளை, இந்த பாடலை கேட்க விரும்புவோர் இத்தனை கட்டணம் செலுத்தினால் அவங்களுக்கு மட்டும் ஒலிபரப்பப்படும்னு சொன்னா (மொபைல் போன் நிறுவனங்கள் இது மாதிரி வியாபாரங்கள் செய்கிறது) அப்ப தான் அது “வணிக ரீதியிலான ஒலிபரப்பு” பட்டியலில் வரும். இப்போதைக்கு எந்த எஃப் எம் நிறுவனமும் அப்படி “வணிக ரீதியிலான ஒலிபரப்பை” எந்த இசையமைப்பாளரின் பாடலுக்கும் செய்வதில்லைன்றது இப்ப ஓரளவுக்கு உங்களுக்கு தெளிவா புரிஞ்சிருக்கும்.


இங்கே இன்னொரு விஷயம் சொன்னா இந்த வணிக ரீதியான பயன்பாடு எளிதில் புரியும். இளையராஜாவே தன்னுடைய பாடல்களில் சில பாரதியார் பாடல்கள், கீர்த்தனைகள், மந்திரங்கள், திருப்பாவை வரிகள் எல்லாம் உபயோகிச்சிருக்கார். அதுக்கெல்லாம் அவர் முறையா அனுமதியோ உரிமையோ வாங்கி இருக்காரான்னு யாருக்கும் தெரியாது. ஆனா அவற்றை பயன்படுத்தி படைக்கப்பட்ட பாடல்கள் அவரது உரிமை என்றாயிருச்சு. இது ஒருவகையில் முறையான உரிமை இல்லாமல் வணிக ரீதியான படைப்புக்காக” பயன்படுத்தப்பட்டதுனு தான் சட்டம் சொல்லும்.

இப்ப அவர் கொடுத்திருக்கும் ஒரு பேட்டியில், தனக்கு கிடைக்கும் ராயல்டியை இசை கலைஞர்கள், பாடலாசிரியர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு கொடுக்கப்போறதா சொல்லி இருக்கார். ராயல்டி சட்டப்படி அதுக்கு அவசியமில்லை. இசைக்கலைஞர்கள் பாடலாசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்ததுமே அந்த இசையின் உரிமை இசையமைப்பாளருக்கு சொந்தமாயிருது. இசையமைப்பாளருக்கு சம்பளம் கொடுத்ததும் அது தயாரிப்பாளரின் சொந்தமாயிருது. மேலும் முன்னேல்லாம் பாடலாசிரியரை தீர்மானிக்கிறது இசையமைப்பாளர். ஆனா இப்ப இயக்குனரோ தயாரிப்பாளரோ ஏன் ஹீரோக்களோ தான் பாடலாசிரியரை தீர்மானிக்கிறாங்க. உதாரணமா கவுதம் மேனன் படங்களில் கவிஞர் தாமரை தான் வேணும்னு அவர் சொல்வதுண்டு. யார் இசையமைச்சாலும் இந்த முன்னுரிமை அப்படியே இருக்கும். அதுபோல ரஜினி தனது படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதணும்னு சொல்வதுண்டு. சில படங்களில் வைரமுத்துவை ஏற்றுக்கொள்ளும் இசையமைப்பாளர் போதும். இசை யார் வேணும்னாலும் செய்யலாம், ஆனா அதுக்கு தகுந்த வார்த்தைகளை அவர் தான் தரமுடியும்னு சொன்ன நிகழ்வெல்லாம் இருக்கு. அப்படி அவரும் தேவா, ரஹ்மான்னு மாறி மாறி வந்தாலும் பாடலாசிரியரை மாத்தாம பாத்துக்குவாரு.  ஆக, பாடலாசிரியர்களுக்கு ராயல்டி என்பது எந்த ரூட்டில் இசையமைப்பாளர் மூலமா வருதுன்னு எனக்கு தெளிவா புரியவேயில்லை இன்னும்.

அடுத்ததா இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு வருவோம்.

Mirchi Senthil

மார்ச் 2011 இல் ரேடியோ மிர்ச்சி நிறுவனம் “நீங்க நான் ராஜா சார்” நிகழ்ச்சியை நடத்த ஆரம்பிச்சுது. மிர்ச்சி செந்தில் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து நடத்திட்டு வர்றவர். அருமையான பாடல்கள், அந்த பாடல்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள், பின்னணி செய்திகள், பாடல் பிறந்த கதை, அது தொடர்பான நிகழ்வுகள்னு நிறைய விஷயங்களை நம்முடன் பகிர்ந்துக்குவார். இரவு 9 – 11 ரெண்டு மணிநேரம் ராஜ இசை நிரம்பி வழியும். இந்த நிகழ்ச்சியை துவக்கி வெச்சவர் சாக்ஷாத் இளையராஜாவே தான். பின் 2013 ஆம் வருஷம் உலக இசை நாளை முன்னிட்டு ஜூன் 21 ஆம் தேதி இந்த நிகழ்ச்சி சார்பா நடத்தப்பட்ட ஒரு ரசிகர் சந்திப்பிலும் அவர் கலந்துகொண்டிருக்கார். அங்க தன்னுடைய பிறந்த நாள் நிகழ்ச்சியை கேக் வெட்டி ரசிகர்களோட கொண்டாடி இருக்கார். எல்லோருக்கும் தன் கையெழுத்திட்ட ஆடியோ சிடியை இலவசமா கொடுத்திருக்கார். இதிலிருந்து, “நீங்க நான் ராஜா சார்”ன்ற ஒரு நிகழ்ச்சியை ரேடியோ மிர்ச்சி நிறுவனம் கடந்த 4 வருஷமா நடத்திட்டு வருதுன்றது அவருக்கு நல்லா தெரிஞ்சிருக்கும்.

ஆனா இப்போ
, அந்த நிகழ்ச்சி பத்தி தனக்கு எதுவும் தெரியாதுன்னும், அந்தக் நிகழ்ச்சிக்கு தன்னுடைய அனுமதி இல்லைன்னும், டைட்டிலில் “ராஜா” எனும் பெயரை பயன்படுத்தியதுக்கு ராயல்டி தரலைன்னும் சொல்லியிருப்பதுடன் நிகழ்ச்சியை நிறுத்த சொல்லி ரேடியோ மிர்ச்சிக்கு விரிவா ஒரு நோட்டீஸ் சில மாதங்களுக்கு முன்பு அனுப்பி இருந்தார். அதற்கு பிறகும் அவர்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திட்டு இருந்ததால் இப்ப மீண்டும் வெளிப்படையா ஒரு அறிக்கை விட்டு நிகழ்ச்சியை நிறுத்தணும்னு வலியுறுத்தியிருக்கார்.  ஏற்கனவே 2010 ஆம் வருஷம் நீதியரசர் தமிழ்வாணனும் நீதியரசர் சுப்பையாவும் வெவ்வேறு தீர்ப்பில் சொல்லியபடி, இளையராஜாவிடம் உரிமை உள்ள பாடல்களை அவரது அனுமதி இல்லாமல் எந்த ரேடியோ நிறுவனமும் ஒலிபரப்ப முடியாது. அதை தவிர தயாரிப்பாளர்கள் மற்றும் சில நிறுவனங்களிடம் உரிமை இருக்கும் பாடல்களை மட்டும் அவர்களிடமிருந்து உரிமம் வாங்கி இதுவரையும் ஒலிபரப்பிட்டு இருக்காங்க. ரேடியோ மிர்ச்சியும் மற்றும் சில ரேடியோக்களும் அப்படியான உரிமைகளை வாங்கி தான் பாடல்களை ஒலிபரப்பிட்டு வர்ரதா சொல்றாங்க.

இளையராஜாவின் அறிக்கை 
இப்ப வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், சில ஆடியோ நிறுவனங்கள் அவரது அனுமதி இல்லாமல் தமிழகம் முழுவதும் ஆடியோ வீடியோ சிடிக்கள் விற்பதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாவும், போலீசார் அப்படியான விற்பனையை தடுக்கணும்னும் கோரிக்கை விடுத்திருக்கார். தொடர்ந்து அந்த அறிக்கையில் அவர் “தன்னுடைய பெயரையோ, படத்தையோ தன்னுடைய எழுத்து பூர்வ அனுமதி இல்லாமல் வணிகரீதியா பயன்படுத்த கூடாது” ன்னு சொல்றார். 

இங்கே தான் சிக்கல்.
ரேடியோ மிர்ச்சி நடத்திட்டு வரும் நிகழ்ச்சியான "நீங்க நான் ராஜா சார்" என்பதில் ராஜா என்பதை தான் அவர் குறிப்பிடுறார்னு ஓரளவு புரியுது. அப்படியெனில் ராஜா என்பது அவரை குறிக்கிறதான்னு ஒரு கேள்வி வருது. இசைஞானி, ராகதேவன், மேஸ்டிரோ, டேனியல், ராஜா, ராசையா, இளையராஜான்னு பல பெயர்கள் அவரை குறிப்பிடும் என்றாலும், எந்த பெயரை உபயோகிக்கக்கூடாதுன்னு அவர் இந்த அறிக்கையிலோ, இதற்கு முந்தைய நோட்டீசிலோ, நீதிமன்றத்தில் கொடுத்திருக்கும் மனுக்களிலோ எங்கேயும் தெளிவா குறிப்பிட்டு சொல்லவே இல்லை. ராஜா என்கிற பெயர் அவரை மட்டும் தான் குறிப்பிடுதுன்னு சட்டப்பூர்வமா நிரூபிக்கவும் முடியாது. அதெல்லாம் ஒருபக்கம். அதே ராஜா எனும் பெயரை உபயோகிச்சு ரேடியோ சிட்டியில் “ராஜா ராஜாதான்” என்கிற ஒரு நிகழ்ச்சியும், மற்றொரு வானொலியில் "ராஜாங்கம்" என்கிற ஒரு நிகழ்ச்சியும், வேறொரு வானொலியில் "என்றென்றும் ராஜா" என்கிற ஒரு நிகழ்ச்சியும் ஒலிபரப்பாகிட்டு வருதே அவைகளை நிறுத்த சொல்லி அவர் எந்த அறிக்கையும் விடலைங்கறது இன்னொரு பக்கம். ஆக பிரச்சனை “ராஜா” என்கிற பெயர் அல்ல.

அவரது பாடல்கள் இன்னை வரை எல்லா ரேடியோவிலும் ஒலிபரப்பாகிட்டு தான் வருது. “எல்லா ரேடியோவும் அவரது பாட்டை நிறுத்திட்டாங்க”னு ஏதோ ஒரு ஆபீஸ் கியூபிக்கிளிலிருந்து அறிக்கை அனுப்பி உறுதி செய்யும் பல நண்பர்கள் தங்கள் டேபிளிலிருக்கும் மொபைல் போனை எடுத்து அதில் உள்ள எஃப்‌எம்ஐ ஒரு நிமிஷம் ஆன் செய்து கேட்டிருந்தாலே அப்படியொரு சிறுபிள்ளைத்தனமான அறிக்கையை வெளியிட்டிருக்கமாட்டார்கள், அவரது வழி தோன்றல்களும் அந்த அறிக்கை சரியா தவறா என உறுதி செய்து பார்க்காமல் அமாமாம் எல்லா ரேடியோவும் அவர் பாட்டை நிறுத்திருச்சாம்னு பரப்பிட்டு இருக்க மாட்டார்கள். நிதர்சனம் என்ன என்றால், தொடர்ந்து அவரது பாடல்கள் வானொலிகளில் ஒலிபரப்பாகிட்டு தான் இருக்கு. ஆக பாடல்களும் பிரச்சனை இல்லை.

வேறு என்ன தான் உண்மையிலேயே ரேடியோ மிர்ச்சியுடன் அவருக்கு பிரச்சனை? அதை சொல்ல வேண்டியது இளைய ராஜா மட்டும் தான்.அகி மியூசிக், எக்கோ ரிக்கார்டிங், யூனிசிஸ் இன்ஃபோ, கிரி டிரேடிங் ஆகிய நிறுவனங்களுக்கு கொடுத்திருக்கும் உரிமை 2012 இலேயே முடிஞ்சு போச்சுன்னு இப்போ இளையராஜா சொல்லி இருக்கார். அதனால் அவங்க கிட்டே வாங்கி ஒலிபரப்பும் ரேடியோ நிறுவனங்கள் அதை நிறுத்தணும்னு சொல்லி இருக்கார். (இந்த ஆகி மியூசிக்குக்கு உரிமம் கொடுத்து பின் ரிவர்ஸ் அடிச்சது ஒரு பெரிய கதை. அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவா அலசுவோம்) இனி மேற்பட்டு தனது எல்லா பாடல்களின் உரிமையும் தன்னிடம் தான் இருக்குன்னும், அதை தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி அதன் தலைவர் கலைப்புலி எஸ். தாணு அவர்களிடம் பணம் கட்டி உரிமம் வாங்கி ஒலிபரப்பிக்கலாம்னும் சொல்லி இருக்கார். 


இதெல்லாம் ஒரு புறம் இருக்க, எதையுமே சென்சேஷநாக மட்டுமே பார்க்கும் என் நண்பர்களில் சிலரால் "ரஜினி தனது பெயரை பயன்படுத்தக்கூடாதுன்னு சொல்லலையா? அது மட்டும் சரியா?" என்றொரு புத்திசாலித்தனமான கேள்வி ஒன்றும் முன்வைக்கப்படுகிறது.

ரஜினி ரெண்டே ரெண்டு தருணங்களில் தான் அதை சொல்லி இருக்கார். மெயின் ஹூன் ரஜினிகாந்த் எனும் ஒரு ஹிந்தி படத்தில் அவரை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டிருந்ததாக தெரிந்ததால் அந்த படத்துக்கு அந்த பெயர் வைக்க கூடாதுன்னு சொன்னார். அதே மாதிரி தனது பெயரை சில அரசியல் கட்சிகள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியபோது அப்படி பயன்படுத்தக்கூடாது என தடை விதித்தார். அதாவது அவரது அரசியல் நிலைப்பாட்டை அவர்களாக தீர்மானித்து அவரது பெயருக்கு “களங்கம்” ஏற்படுத்தியதால்.  மற்றபடி, அவரது “படைப்பு” சம்மந்தமாக எந்த தடையும் அவர் விதிச்சதில்லை.

ரேடியோவில் பாடல் ஒலிபரப்பு செய்யப்படுவது ஒரு வகையில் அந்த பாடலுக்கான விளம்பரம் தான். அதனால் தான் இப்போதெல்லாம் எல்லா இசையமைப்பாளர்களும் தங்கள் புது பட பாடல் ஆல்பத்திலிருந்து ஒரு பாடலை மட்டும் சிங்கிள் டீசரா வெளியிடுறாங்க. ஒரே ஒரு பாடல் “வெளியிடுவது” என்பதே அதை எல்லோரும் டவுன்லோடு செய்து கேட்டு பிரபலப்படுத்தவேண்டும்
, ரேடியோவில் அது ஒலிபரப்பாகி பிரபலமாக வேண்டும் என்பதற்காக தான். அதற்கெல்லாம் யாரும் உரிமை தந்தால் தான் ஒளிபரப்பவேண்டும் என சொன்னதில்லை. சமீபத்தில் வெளியான “வை ராஜா வை” படத்தில் இதே இளையராஜா பாடிய “மூவ் யுவர் பாடி” பாடல் கூட அப்படி வெளியிடப்பட்டு பிரபலப்படுத்தப்பட்ட பாடல் தான். வெளியான சில நிமிடங்களிலேயே ரேடியோவில் ஒலிபரப்பு செய்யப்பட்டு சட்டென பிரபலமானது. நிச்சயமாக உரிமை எழுதி வாங்கி ஒலிபரப்பியது அல்ல. அப்படி எல்லாம் இல்லாமல் உடனடியாக எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக தான் “சிங்கிள் டிராக்” பாடல்கள் மிக ஆர்ப்பாட்டமான விளம்பரத்தோடு “வெளியிடப்படுகிறது”. அதை எல்லா ரேடியோ நிறுவனங்களுக்கும் அனுப்பி வைப்பதின் நோக்கமும் அதன் விளம்பரம் தான். ஆக ரேடியோ என்பது ஒரு மீடியம். அவ்வளவு தான்.



இதை பற்றியெல்லாம் சரியான புரிதல் இல்லாமல், நம் ஆதர்ச படைப்பாளி என்பதற்காக அவர் செய்வதை எல்லாம் நியாயமென கற்பிதம் செய்யும் என் நண்பர்கள் நிச்சயமாக ரேடியோ மிர்ச்சிக்கும் ராஜாவுக்கும் உண்மையிலேயே “இப்போது” என்ன பிரச்சனை என்பதை அறிந்திருக்கமாட்டார்கள்.நாம் வழக்கம் போல அவருக்கு ரசிகராக இருப்போம், பாடல்களை ரசிப்போம், அனுபவிப்போம், சிலாகிப்போம், இசையின் நுணுக்கங்கள் பற்றி விவாதிப்போம். அவரது தனிப்பட்ட வியாபார அரசியல் பற்றி எல்லாம் விவாதித்து ஏன் நம்மை நாமே கடுப்பாக்கிக்கொள்ளணும்??


1 comment:

  1. Excellent Write up sir. This clarifies many issues. Good one!

    ReplyDelete

Printfriendly