Friday, May 29, 2015

மும்பை பயண குறிப்புகள் – பாகம் 2

முதல் பாகம் இங்கே இருக்கு.
***** 
பார்ட்மெண்ட் விட்டு கிளம்பும்போதே மணி ஆறுக்கு மேல ஆயிருச்சு. மெல்ல ரோட்டோரமா நடந்து 'பேலா நிவாஸ்' ஸ்டாப்புக்கு வந்தேன். வந்ததுமே பஸ் வந்திருச்சு. ரூட் நெம்பர் 415. அகர்க்கர் சவுக் – அந்தெரி ஈஸ்ட். அதிலும் எனக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம் அது மாடி பஸ் என்பது. சென்னையிலும் திருவனந்தபுரத்திலும் மாடி பஸ்ஸில் போயிருந்தாலும், மும்பை மாடி பஸ்களுக்குன்னு ஒரு தனி இடம் இருக்கு. நல்லா அகலமான பின்புற வாசல், வசதியான இருக்கைகள். பஸ்ஸில் அதிக கூட்டமில்லை. உள்ளே நுழைஞ்சதும் இடம் கிடைச்சது. கொஞ்ச நேரம் உட்கார்ந்தேன். திடீர்னு எனக்குள்ளிருந்த குழந்தைத்தனம் முழிச்சுக்கிச்சு. படியேறி மேல் மாடிக்கு போயி முன்புற கண்ணாடிக்கிட்டே ஒரு சீட்டை பிடிச்சு அதில் உட்கார்ந்து டாப் ஆங்கிளில் வேடிக்கை பார்க்க தொடங்கினேன். சில சமயங்களில் அறிவை கழட்டி வெச்சிட்டு குழந்தையா மாறிடுறது நல்லது தானே.


அந்தெரி வந்தப்ப மணி ஏழு தாண்டி இருந்தது. மக்கள் மக்கள் மக்கள். எங்கெங்கும் மக்கள் கூட்டம். மெல்ல நடந்து அந்தெரி ரயில் நிலையம் போனேன். அது ஏதோ ஷாப்பிங் மால் ரேஞ்சில் இருந்தது. நிறைய நடக்கவேண்டி இருந்தது ஸ்டேஷனின் மெயின் எரியாவை அடைய. 


அப்போ மணி ஏழு தான் ஆயிருந்தது. ஆனாலும் அந்தெரி பஸ் டிபோவில் நிறைய பஸ்கள் அன்றைய ஓட்டத்தை முடிச்சிட்டு செட்டில் ஆயிருந்தது. இது ஒரு ஆச்சரியம் எனக்கு. நம்மூர்ல பதினொரு மணி வரைக்கும் முழு சர்வீசும் ஓட்டி காசு பார்த்துட்டு தான் ஓய்வாங்க.



முதல் டார்கெட் கேட் வே ஆஃப் இந்தியா. அது மட்டும் தான் பார்க்க டைம் இருக்கும். அந்தெரியில் இருந்து ரொம்ப தூரம். கேட்வே ஆஃப் இந்தியா போகணும்னா அங்கே அதுக்கு பக்கத்துல ரெண்டு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. சர்ச் கேட், விடி (VT -விக்டோரியா டெர்மினஸ் என்பதன் சுருக்கம்). அந்த பெயரை இப்போ மாத்தி மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல் (Chatrapati Shivaji Terminal) ஆக்கிட்டாங்க. சுருக்கமா CST. ஆனா எல்லாரும் இன்னமும் விடின்னு சொல்றதே வழக்கமா இருக்கு. நாம சென்னையை இன்னமும் மெட்ராஸ்னு சொல்ற மாதிரி. (மெட்ராஸ்னு சொல்றதில் ஒரு தனி கிக்கு இருக்குல்ல?)
அந்தெரி ஸ்டேஷன் நடை மேடை 
மும்பை ரயில் பயணத்தை புரிஞ்சுக்கணும்னா அதுக்கு லேசா மும்பை ரயில் அமைப்பை முதலில் புரிஞ்சுக்கணும். தென்னிந்தியாவில் எப்படி தென்னக ரயில்வே இருக்கோ அது மாதிரி மும்பைக்கு சேவை செய்யுறது மத்திய ரயில்வே & மேற்கு ரயில்வே. இரண்டு ரயில்வேயும் தனித்தனியா ரயில்கள் இயக்குறாங்க. இதை வெஸ்டர்ன் லைன் சென்ட்ரல் லைன்னு சொல்லுவாங்க. இது தவிர ஹார்பர் லைன் (பனுவேல்/அந்தெரி – CST) தனியா இருக்கு. கேட்வே ஆஃப் இந்தியா போறதுக்கு சர்ச் கேட் போறதும் விடி போறதும் தூரம்னு பார்த்தா ஒண்ணு தான். ஆனா சர்ச் கேட்டுக்கு அந்தெரில இருந்து அதிக ரயில்கள் இருக்கு (வெஸ்டர்ன் லைன்). அதனால் அந்த லைன்லயே போனேன்.

பிளாட்ஃபார்ம் போனதுமே ரயில் வந்திருச்சு. ஒண்ணும் பிரமாதமில்லே. நம்ம சென்னையில் ஓடும் அதே மின்சார ரயில் தான். நிறம் மட்டும் தான் மாற்றம். கூட்டமே இல்லை. ஆனா சென்னை ரயில்களை விட மும்பை மின்சார ரயில்கள் செம வேகம். அடுத்தடுத்து ரயில்கள். பக்கத்து பக்கத்து லைன்களில் ஒரே நேரத்தில் நாலு அஞ்சு ரயில்கள் பயணிக்கிறதை எல்லாம் அதிசயமா பார்த்துட்டே பயணிச்சேன். சென்னையில் அதிகபட்சம் ரெண்டு ரயில்கள் தான் பக்கம் பக்கமா ஒரே திசையில் போகும். அதுவும் அபூர்வமா எப்பாயாச்சும்.

எட்டு மணி சுமாருக்கு சர்ச் கேட் வந்தது ரயில். ஸ்டேஷன்லருந்து வெளியே வந்து டாக்சி தேடினேன். கேட்வே ஆஃப் இந்தியா எரியால ஆட்டோக்களுக்கு அனுமதியே இல்லை. ஒன்லி டாக்சி. ஸ்டேஷன் பக்கத்திலேயே வரிசையா நின்னிட்டிருந்தது டாக்சிகள். சாண்டிரோ, ஆல்டோ, வேகன் ஆர், ஆம்னி, அம்பின்னு நிறைய கார் இருந்தாலும் ஒரே ஒரு கார் என்னை ரொம்ப ஈர்த்தது. நான் முதல் முதல் கார் வாங்கணும்னு ஆசைப்பட்ட என் பால்யத்தில் எனது டிரீம் கார் அது தான். “பிரீமியர் பத்மினி”. அது ஃபியட் காரா இருந்தப்பவே அது மேல ஒரு கிரேஸ். அதிலும் நம்ம சூப்பர் ஸ்டார் அதே கார் வெச்சிருந்ததை பார்த்ததிலிருந்து அந்த கார் மேல ஒரு மரியாதை. அதன் மெல்லிசான பெரிய ஸ்டியரிங் எனக்கு ரொம்ப பிடிக்கும்.


நேரா அந்த காரில் போய் ஏறிகிட்டேன். சர்ச் கேட்லருந்து கேட்வே ஆஃப் இந்தியா சுமார் மூணு கிமீ இருக்கும். ஆனா டாக்சி சார்ஜ் வெறும் 30 ரூபா தான். எனக்கு இது ஆச்சரியமா இருந்துச்சு. சென்னைல எப்படியும் 80-100 வாங்கிருப்பாங்க. பொறுமையா லாவகமா காரை ஒட்டிட்டு போனார் டிரைவர். லேசா கொஞ்சநேரம் பேச்சு கொடுத்தேன். எப்படி கட்டுபடியாகுதான்னு கேட்டா சந்தோஷமா சிரிக்கிறாரு. ரேட் குறைவு தான் ஆனா ஓட்டம் அதிகம். அதனால் பிரச்சனையில்லைன்னாரு. பத்து நிமிஷம் கூட ஆகலை. கேட்வே ஆஃப் இந்தியா வந்திருச்சு.


பல வரலாறுகளை சுமந்த படி நின்னிட்டிருந்தது கேட் வே ஆஃப் இந்தியா. மெல்லிய பிங்க் நிற ஒளியில் பார்க்கவே ரம்மியமா இருந்துச்சு. ஒரு ஓரமா விவேகானந்தர் கையை கட்டிட்டு சிலையா வர்ற போற மக்களை கவனிச்சிட்டிருந்தாரு. ஒரு சுத்து கேட்வே ஆஃப் இந்தியாவை சுத்தி வந்து நல்லா ரசிச்சு பார்த்து ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். கடல் காத்தும், கடலில் நிறுத்தப்பட்டிருந்த லாஞ்ச்சுகளும் சில போலீஸ் ரோந்து படகுகளுமா அந்த இடம் ஒரு தினுசான உணர்வை தந்தது. அங்கே வரும் பயணிகள் உட்கார்ந்து ரசிக்க நல்ல இருக்கைகள் திண்ணைகள் அமைச்சிருந்தாங்க. கொஞ்ச நேரம் இருந்து அணு அணுவா அந்த கட்டிட கன்ஷ்டிரக்ஷனை ரசிச்சு பார்த்துட்டு கிளம்பினேன். கேட்வேக்குள்ளே ஒரு பெட்டகம் இருந்தது. அது என்னான்னு இனி வரைக்கும் தெரியலை.


1911 இல் கட்ட தொடங்கி 1924 இல் திறக்கப்பட்டாலும், அதென்னவோ ரொம்ப பழைய கட்டிடம் மாதிரியான ஒரு உணர்வு வந்துடுது. நூறு வருஷம் கூட ஆகலைன்றதை நம்பவே முடியலை. ரோமன் கட்டிட கலையை அடிப்படையா வெச்சு கட்டிருக்காங்க. லைட்டா ஆங்காங்கே முகலாய சாயலும் இருக்கு. உட்புற கூரைகள் தான் பிரமிக்க வெச்சுது. அற்புதமான மெல்லிய வேலைப்பாடுகள். பெரும்பாலும் கருங்கற்கள்.


ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும் ராணியும் வந்ததை முன்னிட்டு இது கட்டப்பட்டாலும் அப்படி ஒண்ணும் பிரமாதமான கட்டிடக்கலையா அது எனக்கு படலை. பிரமாண்டமான கட்டிடம், இரண்டு கூடம் அவ்வளவு தான். தமிழக கோவில்களை பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ ரொம்ப சிறப்பான வேலைப்பாடுன்னு எல்லாம் என்னால் சொல்ல முடியலை. ஆனா சில நுணுக்கமான மெல்லிய அலங்கார வேலைப்பாடுகள் சுவற்றில் ஆங்காங்கே இருந்துச்சு. அது இந்து மத ஸ்கிரிப்ட் ரீதியில் இருந்ததா ஞாபகம்.  அப்படியாக ரோமன், மோகலாய, இந்துமத விஷயங்கள் கலந்த ஒரு கலவையா அது எனக்கு தெரிஞ்சுது.

தூரத்தில் நரிமன் பில்டிங்கும் எதிரில் தாஜ் ஹோட்டலும் இருந்துச்சு. ஆனா நேரம் ஜாஸ்தி ஆயிட்டதால் உடனே கிளம்பினேன். மீண்டும் டாக்சி. ஆனா இந்த முறை சர்ச் கேட்டுக்கு பதிலா விடி.



விடி ஸ்டேஷன் சும்மா சொல்லக்கூடாது. சும்மா தக தகன்னு தங்கமா மின்னுது. அவ்வளவு லைட் செட்டிங். ஸ்டேஷன் முன்புறம் நிறைய பேர் படுத்து தூங்கிட்டு இருந்தாங்க. காலை ரயிலுக்கான பயணிகளா இருக்கலாம். வீடற்ற மும்பைவாசிகளாவும் இருக்கலாம். பரபரப்பா இருந்த ரயில் நிலையத்தை மெல்ல சுத்தி பார்த்தேன்.

மும்பை தாக்குதல் நடந்தப்பறம் தீவீர பாதுகாப்பு ஏற்பாடுகள், நிறைய கெடுபிடிகள். ஆனாலும் ஸ்டேஷனை சுத்தி பார்ப்பதற்கு எந்த தடையும் இல்லை. மிக பிரமாண்டமான ரயில் நிலையம். விக்டோரியா மகாராணியின் பொன்விழாவுக்காக 1887 இல் கட்டப்பட்ட ரயில் நிலையம் இது. அதனால் தான் பாம்பே விக்டோரியா டெர்மினஸ் என பேரு. 1996 இல் தான் இந்த ஸ்டேஷனுக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் என பேரு மாத்தூனாங்க.  உலக பாரம்பரிய கட்டிடமா இது தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் நிறைய சுகாதார பணியாளர்கள் முழு நேரமும் சுத்தப்படுத்திக்கிட்டே இருக்காங்க. பிரமாதமான மெயிண்டெனன்ஸ்.


இந்த ரயில் நிலையத்தில் 18 பிளாட்ஃபார்ம் இருக்கு. அதில் 7 பிளாட்ஃபார்ம் உள்ளூர் மின்சார ரயிலுக்கு. நேரே அங்கே போனேன். இப்ப நான் போக வேண்டிய இடம், குர்லா.

என் பழைய கம்பெனியின் மேனேஜர் இப்போ இங்கே இருக்கார். அவரை பார்க்க தான் இந்த திடீர் பயணம். போன் பண்ணி எப்படி வரணும்னு கேட்டேன். குர்லா இறங்கி ஆட்டோ பிடிச்சு கோகினூர் ஹாஸ்பிடல் வந்திருன்னாரு.

ஆட்டோ பிடிச்சு ஹாஸ்பிடல் போயி அவர் வீடு அடைஞ்சு கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சிட்டு டின்னரும் முடிஞ்சப்பறம் மீண்டும் அந்தெரி நோக்கி பயணம். இரவு 11:30 ஆயிருச்சு. ஏற்கனவே ரயில் பயணம் தந்த அலுப்பு வேறு. தூக்கம் தள்ளிட்டு வந்தது. சாயங்காலமே அபார்ட்மெண்ட் கெஸ்ட் ஹவுசுக்கு போன் பண்ணி நைட் வார லேட்டாகும்னு சொல்லி இருந்தேன். ஆனாலும் நமக்காக அவங்க வெயிட் பண்ணிட்டு இருப்பாங்களேன்னு ஒரு கில்ட்டிநெஸ். குர்லாவிலிருந்து அந்தெரிக்கு டிரெயின் இருக்கு. பஸ்ஸும் இருக்கு. ஆனாலும் அர்ஜென்சிய மனசில் வெச்சு ஆட்டோ பிடிச்சேன்.

ஆச்சரியமான விஷயம் என்னன்னா, வரமாட்டேன்னு சொல்றது, பேரம் பேசுறது எல்லாம் அங்கே இல்லை. ஜஸ்ட் கூப்பிட்டதும் வந்துட்டாங்க, 100 ரூபான்னு சொன்னாங்க. நியாயமா பட்டதும் போலாம்னேன். 25 நிமிஷத்தில் ஏதேதோ சந்து பொந்துக்குள்ளே எல்லாம் புகுந்து வெளியேறி ஷார்ட் கட்டில் கொண்டுவந்து அபார்ட்மெண்டில் விட்டுட்டாரு.

மறுநாள் காலை, மும்பையில் இருக்கும் எங்க ஹெட் ஆஃபிசுக்கு போகணும். அங்கிருந்து தான் கான்பரன்ஸ் நடக்கும் ஹோட்டலுக்கு எல்லோரும் பயணம்.

இந்த கெஸ்ட் ஹவுஸில் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த சில கொலீக்ஸும் தங்கி இருந்தாங்க. அவங்களோடு சின்னதா ஒரு அறிமுக படலம், அரட்டை, நள்ளிரவு டீ எல்லாம் முடிஞ்சு உறங்க போயிட்டேன்.

அந்த இரவு பிணம் போல ஒரு உறக்கம்.

பிப் 26 இனிதே விடிஞ்சது அந்தெரியில்

காலை நேரமே எழுந்ததால் நண்பர்களையும் எழுப்பி விட்டுட்டு "வாங்க ஒரு வாக்கிங் போகலாம்"னு கிளம்பிட்டேன். எங்கே போறதுன்னு தெரியலை. பட் ஒருமணி நேரம் அந்தெரி ஏரியா முழுக்க ரவுண்டடிச்சோம். பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் நிறைஞ்ச இடம். பக்கா கமர்ஷியல் ஏரியா. ரவுண்டப் முடிஞ்சு ரூமுக்கு வந்து ஃபிரெஷ் ஆகி ஹெட் ஆபீஸ் போயி ரிஜிஸ்டிரேஷன் முடிச்சு பயணத்துக்கு தயாரானபோது நாங்க மொத்தம் 30 பேருக்கு மேல் இருந்தோம். யாரையும் இதுவரை நான் சந்திச்சதேயில்லை. எல்லோரோடும் ஒரு அறிமுக படலம் அண்ட் அரட்டை அங்கேயும்.

கான்பரன்ஸ் நடப்பது லோனாவாலாவில் இருக்கும் பரியாஸ் ரிசார்ட்டில். சுமார் 80 கிமீ தூரம். ஆனாலும் 2 மணிநேரத்துக்கு மேல் பயணம். மலைப்பகுதி. நாங்க எல்லாவரும் பயணிக்க பஸ் ஏற்பாடாகி இருந்தது. மும்பை புறநகரின் அழகை எல்லாம் ரசிச்சபடி ஹெட் ஆபீஸில் இருந்து லோனாவாலா நோக்கிய பயணம் பத்து மணிக்கு தொடங்கியது.

கோவாண்டி ஏரியா எக்ஸாக்டா நம்ம பூந்தமல்லி நாசரேத் பேட்டையை ஞாபகப்படுத்திச்சு. பாந்திரா சீ லிங்க் வழியா மெயின்லேண்ட் அடைஞ்சு புனே எக்ஸ்பிரஸ்வேயில் பறக்க தொடங்கிச்சு.


மெயின் லேண்டுக்கும் மும்பைக்கும் இடைப்பட்ட கடல்பகுதி வழியா மின்சார கம்பிகள் வருது. அதுக்காக கடலில் மின் டவர்கள் நிர்மாணிச்சிருக்காங்க. அது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. எப்படி கடலுக்குள் பில்லர் போட்டிருப்பாங்க அதுவும் 30, 40 வருசத்துக்கு முன்னேன்னு யோசிச்சிட்டே பயணிச்சேன்.

மலைகள் குகைகள் என கலவையான பாதையில் பயணிச்ச பஸ் பன்னெண்டு மணி சுமாருக்கு ரிசார்ட்டை அடைஞ்சுது.

லோனாவாலா, பரபரப்பிலிருந்து ஒதுங்கிய ஒரு சிறிய மலை கிராமம். கோடை வாசஸ்தலம்னெல்லாம் சொல்ல முடியாது, ஆனா அழகிய சிற்றூர். மும்பையில் இருக்கும் பெரிய தொழிலதிபர்கள், திரை துறை பிரபலங்கள் பலரும் இங்கே ஓய்வுக்காக வருவார்கள். சிலர் சொந்தமாக வீடும் கட்டி வைத்திருக்கிறார்கள். அப்படியான ஒரு அழகிய பகுதியில், மலை சரிவில் கட்டப்பட்டிருந்தது, பரியாஸ் ரிசார்ட்.

வந்து இறங்கியதும் அற்புதமான லஞ்ச். முடிஞ்சதும் நேரே ரூம், ஒரு மணிநேரம் ரெஸ்டு அறிவிச்சாங்க. தூக்கமெல்லாம் வரலை. பால்கனியிலிருந்து அந்த ஊரின் அழகை ரசிச்சிட்டிருந்ததிலேயே நேரம் போயிருச்சு.

இனி தான் முறைப்படி கான்பரன்ஸ் ஆரம்பம்.  அது அடுத்த பகுதியில்

No comments:

Post a Comment

Printfriendly