Tuesday, May 19, 2015

பிரதமரின் பயணங்கள்

ம்முடைய பாரத பிரதமர் சமீப காலமா அதிகமா வெளிநாட்டு பயணங்களில் நேரத்தை செலவழிப்பது குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மீடியா, சோசியல் மீடியா என பல இடங்களிலும் விவாத பொருளாக மாறிட்டு இருக்கு.

ஒரு பிரதமர் வெளிநாட்டு பயணம் போறது தப்பு இல்லை. அது மிக அத்தியாவசியமானதும் கூட. இந்தியா மாதிரியான அணி சேரா நாடுகள் அதிலும் வளரும் பொருளாதாரத்தை அடிப்படையா கொண்ட நாடுகள் பல பல நாடுகளுடன் சுமுக உறவு வெச்சிருந்தே ஆகணும். அதுக்கு உயர்மட்ட ரீதியிலான பயணங்கள், ஒப்பந்தங்கள் எல்லாம் தேவை. அதை யாரும் மறுக்கவே முடியாது.

ஆனா, அளவுக்கு அதிகமான வெளிநாட்டு பயணங்கள் கொஞ்சம் அதீத விவாதங்களை இந்தியாவில் கிளப்பி இருக்கு.

பிரதமர் அளவில் வெளிநாட்டு பயணம் என்பது இரு அரசுக்கிடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்துக்காக, கொள்கை முடிவுகள் அறிவிக்கும் பேச்சுவார்த்தைக்காக தான் இருக்கும். அப்படியாக பிரதமர் பயணிப்பதற்கு முன்பு சம்மந்தப்பட்ட துறை செயலாளர்கள் முதல் துறை அமைச்சர்கள் வரை முன்னர் போய் எல்லாத்தையும் விவாதிச்சிட்டு, கடைசியா தான் பிரதமர் அளவில் சந்திப்பு நடக்கறது வழக்கம்.

அப்படி பிரதமரே போவதுன்னா அது இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தமா தான் இருக்கும், பெரும்பாலும்.

இப்ப இதில் என்ன மாற்றம் வந்திருக்குன்னா...

இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்களை விட, இரு நாட்டு தொழிற்சாலைகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் தான் பெரும்பாலும் நடக்குது. அதுக்கு வர்த்தக அமைச்சரோ, தொழில்துறை அமைச்சரோ, வெளியுறவு அமைச்சரோ போதும். ஆனா இந்தியாவின் ஒரு தொழிலதிபர் வேறொரு நாட்டில் ஒப்பந்தம் போட போகும்போது கூடவே பிரதமரையும் மார்க்கெட்டிங் ஹெட் மாதிரி கூட்டிட்டு போறாங்க. உதாரணமா ஆஸ்திரேலியா பயணத்தின் மிக முக்கிய நோக்கம் அதானியின் சுரங்கங்களை புனரமைப்பது. இதுமாதிரியான தனியார் தொழில் வளர்ச்சி தொடர்பான ஒப்பந்தங்களுக்கு பிரதமர் செல்ல அவசியமே இல்லை.
ஆனாலும், சில பயணங்கள் ராஜீய ரீதியா முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாட்டு உறவுகள், வெளிநாட்டு கொள்கைகள் சம்மந்தப்பட்டது. உதாரணம், இலங்கை, கனடா, மங்கோலியா பயணங்கள்.

பிரதமர் நரேந்திர மோடி 

பிரதமர் மோடி பதவி ஏத்து ஒரு வருஷம் தான் முழுசா ஆகி இருக்கு. இதில் இருந்தே இந்த ராஜீய ரீதியான ஒப்பந்தங்கள் எல்லாம் முந்தைய காங்கிரஸ் அரசில் பேசப்பட்டு இறுதி கட்டத்தை எட்டி இருக்குன்றதை நாம ஈஸியா உணரலாம். அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகுற வைபவங்கள் தான் இப்ப நடந்துட்டு இருக்கு.

இதில் எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னன்னா, திறமையான ஒரு வெளியுறவு அமைச்சர் நமக்கு இருக்கார். திருமதி. சுஷ்மா சுவராஜ். ஆனா அவரை அரசின் டிராவல் ஹெல்ப் டெஸ்க் மாதிரி உபயோகப்படுத்திட்டு இருக்காங்க. அதாவது பிரதமர் பயணத்துக்கு முன்பு அவர் போயி தங்குமிடம், பயணத்திட்டம் எல்லாம் முடிவு பண்ணிட்டு வர்றதோட சரி. பிரதமருடன் கூட அவரை அழைத்து போறதில்லை.

நிறைய விமர்சனங்கள் வர்றது, பிரதமரின் பேச்சுக்கள் தொடர்பா தான். வெளிநாடுகளில் போய் நம்ம நாட்டை பத்தியும், நம் நாட்டு அரசியல் பத்தியும், எதிர்க்கட்சிகள் பத்தியும் விமர்சனம் செஞ்சிட்டு வர்றதை பாஜகவிலேயே பலர் விமரிசிச்சு எழுதிருக்காங்க. இந்தியா 2014 வரை கற்காலத்தில் இருந்த மாதிரியும், இப்ப இந்த ஒரு வருஷமா தான் மனுஷங்க வாழ தகுதி உடைய நிலமா மாறி இருக்கிற மாதிரியும் பிரதமர் காட்டும் பிம்பம், ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்படவேண்டிய ஒரு விஷயம். ஆனா இணைய வெளிகளில் பல பட்டதாரிகளும் அதை ஆஹ்லாதம் செய்து ஆர்ப்பரித்து வரவேற்று எழுதுறது அருவருப்பா இருக்கு.

நான் ரொம்ப மகிழ்ந்த பயணங்கள்னு சொல்லணும்னா, ஃபிரான்சில் விமானங்கள் ஒப்பந்தம் (அது முகேஷ் அம்பானியின் நிறுவனத்துக்காக, ஏற்கனவே இருந்த HAL ஒப்பந்தத்தை மீறி போட்டதா இருந்தாலும், இந்திய பாதுகாப்பு தொடர்பானதுன்றதால்), மங்கோலியாவுக்கு நிதி உதவி (பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கார் போன்ற பல பின்தங்கிய மாநிலங்களை எல்லாம் புறக்கணிச்சாலும், நாம பட்டினி கிடந்தபடி மத்தவங்களுக்கு பிச்சை போடுவோமே அந்த கவுரவத்துக்காக), கனடாவுடனான விசா திட்டங்கள் மறு வரையறை, இலங்கையில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்ட பகுதிகளில் நம் தமிழர்களின் மறுவாழ்வுக்கான நல திட்டங்களையும் வளர்ச்சி திட்டங்களையும் மேம்படுத்துவது ஆகிய சில விஷயங்கள் பாராட்ட வேண்டிய ஒண்ணு.

ஒரு விஷயத்தை நான் சொல்லியே ஆகணும். என்னதான் பொருளாதார புலி, இந்தியாவை கடும் நெருக்கடிக்காலத்திலும் செம்மையாய் வழிநடத்தி சென்றவர்னு, பல பெருமைகள் மன்மோஹனுக்கு இருந்தாலும், அவரை விட, எதையும் செய்யாமலேயே பல அருமையான பேச்சுக்களால் உலக தலைவர்களை எல்லாம் ஈர்த்து இந்திய பிரதமர் எனும் பதவிக்கு ஒரு கெத்தும் கவனமும் ஈர்ப்பும் தந்திருக்காரு மோடி.

வெளிநாடுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பங்காவது இந்தியாவுக்கும் அவர் கொடுத்து, மாநில வாரியா சுற்றுப்பயணம் செஞ்சு அதே டெலிபிராம்ப்டர் உதவியோடு அவரது எதிர்கால கனவுகள் பத்தியெல்லாம் பேசினா, இந்திய மக்களும் அவருக்கு ரசிகர்களாகிடுவாங்க. (ஒரு வேளை, அதை அவர் தேர்தல் நேரத்துல செய்வாரா இருக்கும்). அவர் சொன்னதை எல்லாம் செய்யுறாரோ இல்லையோ அவர் சொல்லும் விஷயங்கள் அருமையா இருக்கு. உதாரணம், நேத்து சியோலில் அவர் பேசிய “ஆசிய கனவு” பேச்சு. இது கிட்டத்தட்ட நம்ம புரட்சி தலைவி முன்பு பேசிய “விஷன் 2023” க்கு இணையான அற்புதமான பேச்சு. ஆனா அது நடக்குமா அல்லது ஜெ மாதிரி தூக்கி கிடப்புல போட்டுருவாங்களான்றது தெரியாது.

இந்த வெளிநாடு பயணங்களில் நான் கவனம் செலுத்தும் விஷயம் இன்னொன்னு இருக்கு. நான் அடிப்படையில் ஒரு யாத்ரீகன். அதனால் என் புத்தி அதில தான மேயும்?

அமெரிக்க அதிபருக்குன்னு பிரத்யேகமா “ஏர் ஃபோர்ஸ் ஒன்” எனும் விமானம் இருக்கு. அது அதிபரின் பறக்கும் அலுவலகம். அது மாதிரி இந்திய பிரதமருக்கும் பிரத்யேக விமானம் வேணும்னு “ஏர் இந்தியா ஒன்” கொண்டுவந்தாங்க. ஆனா, அது பிரத்யேக விமானமே அல்ல. ஏர் இந்தியா நிறுவனத்தில் இருக்கும் மூணு போயிங் 747-400 விமானத்துல ஒண்ணை பிரதமருக்கான பாதுகாப்பு அம்சங்களோடு மாத்துவாங்க. அவ்வளவு தான். அப்படி பிரதமர் பயணிக்கும் கால கட்டத்தில், அந்த விமானம் வழக்கமா பயணிக்கும் வழித்தடத்தில் சேவை ரத்து ஆகும். ஏற்கனவே கடுப்பில் இருக்கும் ஏர் இந்தியா பயணிகள், பிரதமர் பயண திட்டம் அறிவிச்சா கொலை வெறி ஆயிருவாங்க.

ஏர் இந்தியாட்ட இருக்கும் போயிங் 747-400 விமானங்கள், லண்டன், பாரிஸ், நியூ யார்க் நகரங்களுக்கு இயக்கப்படுது. மேலும் மூணு விமானங்களை லீசுக்கு வாங்கிருக்காங்க. அது ஃபிராங்க்பார்ட், டொரோண்டோ, நகரங்களுக்கு இயக்கப்படுது. இதில் பிரதமர் பயண திட்டம் முடிவானதும் ரெண்டு விமானங்களை பிரதமருக்கு ஒதுக்கிருவாங்க. (ஒண்ணு அதிகாரப்பூர்வ விமானம், மற்றொன்று மாற்று விமானம்). பிரதமர் பயணிக்கறதுக்கு சில நாட்கள் முன்னால இருந்தே விமானத்தை மாடிஃபை செஞ்சு, பயணம் முடிஞ்சபின் மீண்டும் பழைய படி மாற்றி பயணிகள் சேவைக்கு ரெகுலர் ரூட்டில் அனுப்புவாங்க.

இப்ப யோசிச்சு பாருங்க, பயணிகள் சிரமப்படக்கூடாதுன்னு முந்தைய பிரதமர்கள் பயணங்களை குறைச்சுக்கிட்டதுக்கும், எதை பத்தியும் கவலைப்படாம வாரக்கணக்கா தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்யும் இப்போதைய பிரதமருக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.

அப்படி ஒண்ணும் பிரமாதமான விமானம் அல்ல “ஏர் இந்தியா ஒன்”. ஒரு அலுவலக அறை அமைக்கறதை தவிர வேறு எதுவும் அதில் இல்லை. தானியங்கி ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் கூட கிடையாது. ஜஸ்ட் அது ஒரு சார்ட்டர்டு விமானம், அவ்வளவு தான்.

ஆனா சமீப காலமா உலகத்துல இருக்கிற சூழலை வெச்சு பார்க்கும்போது, இந்திய பிரதமருக்குன்னு சர்வ பாதுகாப்பு கருவிகளும் உள்ள ஒரு பிரத்யேக விமானம் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதை மறுக்க முடியாது. அதுவும் நம்ம பிரதமர் மாச கணக்கில் வெளிநாட்டு பயணம் செய்யறவரு. அவருக்காக பயணிகள் விமானத்தை திருப்பி விட்டு மக்களை அல்லாட வெக்கிறது எல்லாம் சரியா படலை.அதனால் தனியா ஒரு விமானம் தேவை தான்.


ஏர்-இந்தியா கஜுராஹோ (VT-ESO)

இப்ப மோடி சீனா, மங்கோலியா, கொரியா பயணத்துக்கு உபயோகிச்சிட்டிருக்கிற விமானம் VT-ESO. விமானத்தின் பேரு “கஜுராஹோ”. டிசம்பர் 1993 இல் வாங்கப்பட்டது. 22 வருஷ பழைய விமானம். (அந்த விமானத்தை தான் மேலே பார்க்கிறீங்க). இந்த விமானத்தில் எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை. இப்படியான ஒரு விமானத்தில் உலகின் முக்கியமான ஒரு தலைவர் பயணிக்கிறது அவ்வளவு அட்வைசபிள்  அல்ல. அதனால், பிரதமருக்கான போயிங் 747-400 ஐ மாத்திட்டு அதை விட பெட்டரான போயிங் 777 வாங்கலாம்னு ஒரு யோசனை இப்ப உயர்மட்டத்துல இருக்கு. நல்ல விஷயம் தான். ஆனா, அதை பயணிகள் விமானமா வாங்கி அப்பப்ப ஷெடியூல் விமானமா அனுப்பாம, பிரத்யேக பிரதமர் விமானமா சகல நவீன பாதுகாப்பு அம்ஸங்களுடனும் ஆயுதங்களுடனும் வாங்கினா தான் இந்தியாவுக்கு பெருமை.

எவ்வளவோ செலவு செய்யுறோம், இதை செய்யக்கூடாதா?



No comments:

Post a Comment

Printfriendly