உங்க விசாக
நட்சத்திரத்துக்கு இனிமேல் அமோகமான காலம் தான். ஆனா பாருங்க எல்லாமே கைக்கிட்டே
வரும். ஆனா கைக்கு வராது. ஏதோ ஒரு மறைமுக தடை இருந்துட்டே இருக்கும். அந்த தடையை
யார் வெச்சிருக்கா தெரியுமா? சாட்சாத் சனிபகவானே தான்.
அதுக்காக பயப்பட எல்லாம் தேவை இல்லை. எல்லாத்துக்கும் ஒரு பரிகாரம் இருக்குல்ல.
நீங்க யாருக்காவது பாவம் செஞ்சிருந்தாலோ, நம்பிக்கை துரோகம் பண்ணி
இருந்தாலோ அந்த சாபம் எல்லாம் தான் உங்களை சுத்துது. அது தவிர முன்னொருக்கான
வழிபாடு செய்யாம விட்டது, அறிந்தும் அறியாமலும் உயிர்களை கொன்னது
மாதிரியான நிறைய பாவங்கள் அப்பப்போ சேர்ந்திருக்கும். அதான் இம்புட்டு கஷ்டம்.
நேரே குச்சனூர் போய் தலை முழுகிட்டு, தோஷம் நீங்க சனீஸ்வரனை தொழுதுட்டு
வாங்க. எல்லா தடையும் நீங்கி நீங்க நல்லா இருப்பீங்க
இப்படி தான்
யாரோ ஒரு ஜோசிய சிகாமணி நம்ம குடும்பத்துல கொளுத்தி போட்டு இருக்காங்க. அவர் அந்த ஊர்
காரரா இருப்பார் போல. இப்பல்லாம், கோவில்களுக்கு ஜோசியர்கள் தானே மார்க்கெட்டிங்
மேனேஜர். இல்லைனா திருநள்ளாரை சொல்லாம குச்சனூரை சொல்லுவாரா? விடுங்க. அவர் சொன்னது கிட்டத்தட்ட விதி 110
இன் கீழ் சொல்லப்பட்ட விஷயத்துக்கு சமமானது என்பதால் எந்த விவாதமும் எதிர்ப்பும்
இன்றி ஏகமனதாக தீர்மானம் நிறைவேறி பயணிக்க முடிவாயிருச்சு குடும்பம். ஏன் பேரை சொல்லி
ஒரு இன்ப சுற்றுலா.
குச்சனூர்
போகணும்னா கூடை மேல கூடை வேணும்னு வைரமுத்துவே சொல்லிருக்காரே என நான் சொன்னதை
யாரும் காதில் போட்டுக்கலை. கூடை எதுவும் எடுக்காமலேயே தான் கிளம்பினோம்.
முதலில்
தாராபுரம், ஒட்டன்சத்திரம், செம்பட்டி, பெரியகுளம், தேனி வழியா குச்சனூர் பயண திட்டம் வகுத்தோம்.
விடிகாலையில் அங்கே போய் சேருற மாதிரி டைமிங் செலக்ட் பண்ணிட்டு கிளம்பினோம். ஏன்னா
குச்சனூர்ல தங்கறதுக்கெல்லாம் சொல்லிக்கற மாதிரி எந்த ஹோட்டலும் இல்லை. லாட்ஜ் கூட
ரொம்ப சுமார் தான். தங்கறதா இருந்தா தேனியில் தங்கணும். ஆனா அந்த கோவிலுக்கு குளிக்காம
போயி அங்கே தான் குளிக்கணுமாமே? அதனால் தங்கற ஐடியா சுத்தமா இல்லை.
விடிகாலை சேர்ந்தா போதும். குளிச்சிட்டு தரிசனம் முடிச்சிட்டு கிளம்பிராலாம்னு, அதிக ஹால்ட் இல்லாத மோடி சுற்று பயணம் மாதிரி பிளான் பண்ணினோம்.
குச்சனூருக்கு
சில வழிபாட்டு முறைகள் இருக்கு. அந்த கோவில் எதிரில் ஒரு நதி ஓடுது. அந்த நதியில்
தான் குளிக்கணும். நதின்னா... ஒரு நாலடி அகலம் ரெண்டடி ஆழம், அவ்வளவு தான். (அதை வாய்க்கால்னெல்லாம் சொல்லி
கொச்சை படுத்த கூடாது!) அந்த நதியில் குளிக்கும்போது நாம அணிஞ்சிருந்த அத்தனை
உடைகளையும், அண்டர்லைன் “அத்தனை” உடைகளையும், ஆத்தோட அனுப்பிடணும். அதாவது, நம்மை அதுவரை பீடிச்சிட்டிருந்த தீயவைகளையும் சாப
தோஷங்களையும் நதியில் விட்டு விடுவதன் சிம்பாலிக்கான குறியீடு அது. அதன்பின், புது துணி போட்டுட்டு திதி கொடுக்கணும். இது
யாருக்காகன்னா, நம்ம முன்னோர்கள்
மூதாதையர்களுக்கு ஒருவேளை நாம முறையா திதி கொடுக்காம விட்டிருந்தா, மறந்திருந்தா எல்லாத்துக்கும் ஒரே தவணையில் இங்கே
கொடுத்துக்கலாம். (அதே தான், இன்கம்
டேக்ஸின் சமாதான் ஸ்கீம் மாதிரி தான்.) அங்கேயே சோறு, எள், நெய் எல்லாம் போட்டு ஒரு பேப்பர் தட்டில் தருவாங்க. நதியோரம் ஒரு விநாயகர் சிலை இருக்கு. அங்கே நாம
நம் முன்னோர்களை நினைச்சு, நாம செய்த துரோகங்கள் பாவங்கள்
எல்லாத்தையும் நினைச்சு (சுருக்கமா தான், எல்லாத்தையும் லிஸ்ட் போட்டுட்டு இருக்கக்கூடாது!) பிண்டம் உருட்டி படையல் வெக்கணும். பின்னர் விநாயகரை
தொழுது வலம் வரணும்.
அடுத்ததா, காக வடிவில் ஓட்டில் செய்த சிற்பம் தருவாங்க. அதை
நம்ம தலையை இடம் வலமா மூணு முறை சுத்தி அங்கே இருக்கும் காக பீடத்தில் வைச்சு
உடைச்சிரணும். அதோட நம்ம பிடிச்ச சனி ஒழிஞ்சிருமாம். அதுக்கடுத்து, எள் முடிச்சிட்ட எண்ணெய் தீபம். அதை அங்கே ஏற்றி
வெக்க ஒரு டேபிள் போட்டிருக்காங்க. அங்கே அதை ஏற்றியதும் நம் வாழ்க்கை பிரகாசிக்க
தொடங்குமாம். இதை எல்லாம் முடிச்சிட்டு தான் சனீஸ்வர வழிபாடு. அது வழக்கமான
வழிபாடு தான். அர்ச்சனை, தேங்கா பழம் உடைத்தல், தீபாராதனை. முடிஞ்சுது நாம வெளியே வந்திரலாம்.
அதுவரை தடைபட்ட காரியங்கள் கிரீன் சிக்னல் பார்த்த கார்கள் போல நம்மை தேடி ஓடி
வந்திரும். அதை லட்சியமா கொண்டு தான் இந்த திடீர் பயணம்.
என்னதான்
பக்காவா பிளான் பண்ணி புறப்பட்டாலும் ஒட்டன்சத்திரம் தாண்டும்போதே மணி 5:30
ஆயிருச்சு. அங்கிருந்து செம்பட்டி போற ரோடு, செம நாஸ்த்தி. குண்டும் குழியுமா 50 கிமீக்கு மேல காரை ஒட்டவே முடியலை. ஏன்
மதுரை போற பஸ்செல்லாம் திண்டுக்கல்லை சுத்தி போகுதுன்னு அப்ப தான் புரிஞ்சுது. ஆனா
செம்பட்டி ரோடு அழகானது. வலது புறம் கோடைக்கானல் மலை கூடவே வந்துச்சு. ரோட்டுக்கு
ரெண்டு புறமும் வயல்கள்.. விவசாயம். பூக்கள் அதிகமா சாகுபடி பண்ணி இருக்காங்க. அது
தவிர வாழை, கீரை, காய்கறிகள் அதிகம் பார்த்தேன். பாரம்பரியமான நெல் விவசாயத்தை நம்பி நஷ்டம்
அடையாம பணப்பயிர்களா சாகுபடி பணம் சம்பாதிக்கும் அந்த புத்திசாலித்தனம் சந்தோஷம்
தந்தது.
செம்பட்டி ஜங்க்ஷன்லருந்து
ரைட் டேர்ன். அருமையான ஹைவே. இந்த ஹைவே திண்டுக்கல் – குமுளி – கோட்டையம் வரை
போகுது. (அந்த ரூட்டில் கம்பம் – குமுளி – தொடுபுழா வரை பகல் நேரத்தில் பைக்கில்
போகணும்னு ஒரு நீண்ட நாள் ஆசை பெண்டிங்க்லயே இருக்கு. நல்ல நண்பர் கிடைச்சா டிரிப்
போட்டிரணும்).
ரம்மியமான
விடியல் காலை, அமைதியான சாலை, மெல்லிய குளிர். பத்தலகுண்டு தாண்டினதும் ஒரு ரோட்டோர டீக்கடையில் நிறுத்தி டீ குடிச்சிட்டு
கிளம்பினோம். அப்பவே மணி 7 ஆயிருச்சு. லேட் ஆகுதேன்னு எல்லோரும் பதறுனாங்க. அட அது
ரொம்ப சின்ன கோவில்மா, அதிகம் யாரும் வரமாட்டாங்க, நீங்க தான் இந்த கோவிலுக்கு வரணும்னு அடம்
பிடிக்கிறீங்க. போயிட்டு சீக்கிரமா திரும்பிடலாம். கூட்டமெல்லாம் இருக்காதுன்னு
எல்லோரையும் சமாதானம் செஞ்சிட்டு வண்டியை எடுத்தேன்.
பெரியகுளம்
வரைக்கும் ரோடு சூப்பரா இருந்துச்சு. அதுக்கு அப்புறம் ரோடு ரோடாவே இல்லை.
குண்டும் குழியுமா ரொம்ப கேவலமா இருந்துச்சு. இத்தனைக்கும் இது விவிஐபி தொகுதி.
முன்னாள் / எதிர்கால முதல்வர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களது தொகுதி. தேனி வரைக்குமே
அப்படி தான் இருந்துச்சு ரோடு. தேனி தாண்டினப்பறம் தான் ஓரளவுக்கு சுமாரான ரோடு
தென்பட்டுச்சு. பெரியகுளம் – தேனி போற வழியில் கடக்கிற ஊரை பத்தியெல்லாம்
பிரஸ்தாபிச்சிட்டே போனேன். (வடுகப்படி – வைரமுத்து ஊரு, அல்லி நகரம் – பாரதிராஜா ஊரு). பல ஊர்களும் பாடல் பெற்ற திருத்தலங்கள். உபயம்
எரியாக்காரரான வைரமுத்து. உசிலம்பட்டி, குச்சனூரு, கூடலூரு, பள்ளப்பட்டின்னு கிட்டத்தட்ட
எல்லா ஊரையும் அவரது பாடல்களில் எங்கேயாவது நுழைச்சு வெச்சிருக்காரு. அதைஎல்லாம்
சொல்லிட்டே தேனி கடந்து குச்சனூர் ரோட்டில் திரும்பினேன். தேனி தாண்டி சின்னமனூர் போற
ரோடில் வரும் முதல் மிகப்பெரிய ரைட் டர்ன் மூணாறு போவது. அதில் தவறுதலா திரும்பிரக்கூடாது.
இன்னும் 2 கிமீ தூரம் போனா இன்னொரு ரைட் வரும். அது தான் குச்சனூர் போறதுக்கான ரூட்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலய துறை சார்பா கோவிலுக்கு போகும் வழின்னு ஒரு பெரிய போர்டு
வெச்சிருக்காங்க. அந்த ரூட்டில் திரும்பினா மிக அருமையான மாநில நெடுஞ்சாலை. அங்கிருந்து
13 கிமீ கோவில். அழகான சுற்றுப்புறம். கிராமங்களினூடேயான பயணம். நல்லா
இருந்துச்சு.
குச்சனூர் கோவில் லைன் |
குச்சனூரை
நெருங்கினதுமே பக்குன்னு ஆயிருச்சு. ஊருக்கு முன்னாலேயே வண்டியை தடுத்து ரூ.50
டோக்கன் போட்டு வாங்கினாங்க. அதுலருந்து ஒரு பத்தடி போயிருப்போம், காரை நிறுத்திட்டு நடந்து போக சொன்னாங்க. கார்
நிறுத்த ஒரு பார்க்கிங் ஏரியா நல்லா சேறும் சகதியுமா இருந்துச்சு. அதுல காரை
நிறுத்திட்டு அங்கே இருந்த போலீஸ்காரர் கிட்டே, கோவில் எவ்வளவு தூரம் சார், எப்படி போகணும்னு கேட்டேன்.
கோவில் ரொம்ப தூரம். இங்கே இருந்து ஆட்டோ பிடிச்சு போங்க. ரூ.30 தான்னாரு. ஆட்டோ
அசோசியேஷனுக்கு மார்க்கெட்டிங் ரெப்பா இருப்பார் போல. ஏன் சொந்த காரை அங்கே
நிறுத்திட்டு ஆட்டோ பிடிச்சு கோவிலுக்கு போனேன். கூட்டம்னா கூட்டம் சும்மா
அள்ளுது. திக்கி திணறி நடந்து ஊர்ந்து நகர்ந்து எப்படி எல்லாம் கோவிலுக்கு போகமுடியுமோ
அப்படி எல்லாம் போனோம்.
முதலில்
ஆற்று குளியல். ஆற்றில் குளிச்சிட்டு வரும் பெண்கள் உடை மாற்ற ஆங்காங்கே நல்ல ரூம்கள்
கட்டி வெச்சிருக்காங்க. (நாம அப்படியே மரத்தடியில் மாத்திக்க வேண்டியது தான்!).
ஆற்றுக்கு அந்தப்பக்கம் பச்சை பசேல்னு
வயல்வெளி. நாத்து நட்டுக்கிட்டு இருந்தாங்க. ஆடி பட்டமாச்சே.
கும்பலோடு
கும்பலா அவசரம் அவசரமா குளிச்சிட்டு, மத்த சாங்கியங்களை எல்லாம்
முடிச்சிட்டு தரிசன லைனில் நின்னோம். அங்கே இருந்த கோவில்காரர்ட்ட லேசா பேச்சு
கொடுத்தேன். “வழக்கமா கூட்டமே இருக்காது சார். சனிக்கிழமை மட்டும் தான் கூட்டம்.
இது ஆடிமாசம் வேறையா? அஞ்சு சனிக்கிழமையும் கூட்டம்
ஜாஸ்த்தியா இருக்கும். நாளைக்கு வந்தீங்கன்னா கூட்டம் இருக்காது. இந்த கோவிலை
வெச்சு தான் நிறைய பிஸினஸ் இங்கே. அதனால தான் 2 கிமீ முன்னாடியே வண்டிய நிறுத்தி
உள்ளூர் ஆட்டோவுக்கு சவாரி கொடுக்கிறோம். இன்னொரு வகையில் இங்கே வாகன நெரிசலையும்
அது தடுக்குமுல்லே”ன்னு ரொம்ப லாஜிக்கா பேசுனாரு.
ஆற்றில் குளியல் படித்துறை |
மாவட்ட
நிர்வாகம் எல்லா ஏற்பாடையும் சூப்பரா பண்ணி இருந்தாங்க. நிறைய போலீஸ், தடுப்பு தட்டிகள், புறக்காவல் நிலையம், சுகாதார துறை மூலமா மருத்துவ குழு, பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாமே அட்டகாசமா இருந்துச்சு.
கோவில் ரொம்ப சின்ன கோவில் தான். ஆனா கீர்த்தி பெரிசாச்சே.
சிறப்பு
தரிசனமெல்லாம் போகாம இலவச தரிசன லைன்லயே நின்னோம். லைன் வேக வேகமா போச்சு. தரிசனம்
முடிஞ்சு அரை மணிநேரத்துலயே வெளியே வந்துட்டோம்.
அப்புறம்
அப்படியே ஒரு நகர்வலம். நிறைய கடைகள். கிராமத்து ஸ்பெஷல் உணவுகள். பண்ட
பாத்திரங்கள், விளையாட்டு பொருட்கள்னு நிறைய
கடைகள். பரவாயில்லை, இந்த திருவிழா கூட ஒரு வகையில்
நம்ம சிட்டியில் போடும் ஷாப்பிங் மேளா மாதிரி தான். ஒரே நாள், ஓஹோன்னு வியாபாரம்.
மீண்டும்
ஆட்டோ பிடிச்சு கார்பார்க்கிங் வந்து காரை எடுத்து கிளம்பினோம்.
கார் பார்க்கிங் (!) |
ஏற்கனவே
டிவிட்டர்ல தேனியில் நல்ல ஹோட்டல் எதுன்னு கேட்டதுக்கு வந்த ரிபரன்ஸை மனசில் வெச்சிட்டே
தேனி நோக்கி பயணிச்சோம். பசி வேற வயித்தை கிள்ளுது. பின்னே? மணி 11 ஆயிருச்சுல்ல?
தேனி – மதுரை
ரூட்டில் அகிலா ஜூவெல்லரி அருகில் மாருதி ரெஸ்டாரண்ட். அது தான் டார்கெட். ஆனா மதுரை
நோக்கி போகும்போது ரோட்டுக்கு வலதுபுறம் இருக்கு ரெஸ்டாரண்ட். யூ டர்ன் போடுறதுக்கு
சோம்பேறித்தனம். அதனால் லெப்ட்ல ஒதுக்கு வண்டிய நிறுத்திட்டு ரோடை கிராஸ் பண்ணி தான்
ஹோட்டலுக்கு போனோம். பரவாயில்லை, நல்ல அருமையான ஹோட்டல், சுவையான டிபன். நியாயமான விலை.
மீண்டும் ரிடர்ன்
ஜர்னி. அதே யூ டர்ன் போட சோம்பேறித்தனப்பட்டுட்டு கொஞ்ச தூரம் மதுரை ரோட்டிலேயே பயணிச்சு
பெரியகுளத்துக்கு திரும்பும் லெப்ட் ரோடில் திருப்பி பெரியகுளம் போனோம். மீண்டும் அதே
ரூட், செம்பட்டி, ஒட்டன்சத்திரம், தாராபுரம்.
இந்த பயணத்தால்
தோஷம் நீங்குதோ இல்லையோ சந்தோஷம் நிறைஞ்சிருச்சு. முழுக்க முழுக்க கிராமிய பகுதி வழியா
ஒரு நாள் முழுக்க பயணம் பண்ற சுகமும் புத்துணர்ச்சியும் வார்த்தைகளில் சொல்லி மாளாது.
சனீஸ்வரனுக்காக இல்லைன்னாலும், ஜஸ்ட் அந்த இயற்கை அழகை ரசிக்கவாவது
ஒரு ட்ரிப் அடிங்க. பக்கத்துலே நிறைய அருவிகள் வேற இருக்கு. நாங்க அதுக்கெல்லாம் போகலை.
எங்களுக்கு நேரமில்லை. உங்களுக்கு நேரமிருந்தா ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வாங்க. என்ஜாய்.
No comments:
Post a Comment