Friday, August 5, 2016

ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் - 2

ரு வழியாக ஜி.எஸ்.டி மசோதா ராஜ்ய சபையில் பாசாகி இருக்கிறது.

ஜி.எஸ்.டி குறித்த எனது முந்தைய பதிவை இங்கே [Click Here] படித்து விட்டவர்களுக்கு தொடர்ந்து நான் சொல்ல போகும் விஷயங்கள் எளிதில் விளங்கும்.

லோக் சபாவில் பாசான ஜி.எஸ்.டி ராஜ்ய சபாவில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்தது. அதிமுக எதிர்க்கும் என்பதால் அதிமுக அல்லாத இதர மாநில கட்சிகளையும் காங்கிரசையும் சரிக்கட்டும் வேலையில் இறங்கிய பாஜக அதில் மிக அபாரமான வெற்றியும் பெற்றிருக்கிறது. நிதி அமைச்சர் ஜெட்லியும் பிரதமர் மோடியும் எந்தவித ஈகோவும் இல்லாமல் பாராளுமன்ற மைய மண்டபத்திலேயே காங்கிரஸ் மற்றும் இதர கட்சி தலைவர்களை கேஷுவலாக சந்தித்து பேசி ஒப்புதல் பெற்று விட்டார்கள். மிக ஆரோக்கியமான பாராட்டத்தக்க விஷயம் இது. ஆனால் இதனால் எல்லாம் நான் மகிழ்ச்சி அடைந்துவிடுவதில்லை. உனமையான சவால்கள் இனி தான் இருக்கிறது. ஒவ்வொன்றாக பார்ப்போமா?



நிர்வாக ரீதியான சவால்கள் தான் மிக மிக கடினமானது.

இந்த சட்டத்தை 2017 ஏப்ரல் 1 முதல் அமல் செய்யவேண்டும் என மத்திய அரசு சொன்னாலும், அது அவ்வளவு எளிதல்ல. அதனால் மத்திய அரசு மேலும் இரண்டு ஆப்ஷன்ஸ் கைவசம் வைத்திருக்கிறது. ஒன்று 2017 அக்டோபர் 1 முதல் அமல் செய்வது. ஆனால் பல கார்போரேட் நிறுவனங்கள் இந்த திட்டத்தை எதிர்க்கின்றன. நிதி ஆண்டில் இடையில் இருந்து வரி விதிப்பு முறை மாற்றம் என்றால் அது கம்பெனிகளின் வரவு செலவுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு நடை முறை சிக்கல்களும் அதிகம். அடுத்த ஆப்ஷன், 2018 ஜனவரி 1 முதல் அமல் செய்வது. ஏற்கனவே நிதி ஆண்டை இப்போதிருக்கும் ஏப்ரல் – மார்ச் என்பதில் இருந்து ஜனவரி – டிசம்பர் என மாற்றுவதற்கான சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால், அதை நிறைவேற்றி அதனோடு சேர்ந்து 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி அமல் செய்ய முடியும் என அரசு நினைக்கிறது. எனக்கென்னவோ இது தான் கடைசியில் சாத்தியமாகும் என தோணுது.

ஏன் 2017 ஏப்ரல் 1 முதல் அமல் செய்ய முடியாது? சுருக்கமாக பார்ப்போமா?

லோக்சபாவில் பாசான ஜி.எஸ்.டி மசோதா இப்போது ராஜ்ய சபையிலும் பாஸ் ஆகி இருக்கிறது. மீண்டும் லோக் சபாவில் அப்ரூவ் செய்யப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவர் சைன் செய்ததும் அது சட்டமாகிவிடும்.

இது ஒரு அரசியல் சாசன சட்ட திருத்தம் என்பதால் 50% மாநிலங்களின் ஒப்புதல் வேண்டும். அதாவது அடுத்த 30 நாட்களுக்குள் 17 மாநிலங்கள் தங்கள் சட்டசபையில் இந்த மசோதாவுக்கு ஆதரவு பெற வேண்டும். அவையும் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற வேண்டும்.

பாராளுமன்றம் இனி தனித்தனியாக சில சட்டங்களை உருவாக்க வேண்டும். அதாவது மாநிலங்களுக்குள்ளேயான SGST, மாநிலங்களுக்கு இடையிலான IGST, உற்பத்தி துறைக்கான CGST ஆகியவற்றுக்கான தனி தனி சட்டங்கள் வகுத்து அவற்றையும் பாராளுமன்றங்களில் தாக்கல் செய்து பாஸ் ஆக்கி குடியரசு தலைவர் ஒப்புதல் பெற வேண்டும்.

அதேபோல, மாநிலங்களும் தங்கள் மாநில நிறுவனங்களின் உற்பத்தி/வியாபாரம் தொடர்பான SGST சட்டங்கள் இயற்றி அதை சட்டசபைகளில் பாஸ் ஆக்கி அதற்கு ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் ஒப்புதல்களை பெற்று சட்டம் ஆக்க வேண்டும்.

அடுத்தபடியாக ஜி.எஸ்.டி கவுன்சில் அமைக்கவேண்டும். இதில் மத்திய நிதி அமைச்சகம், மாநில நிதி அமைச்சர்கள் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.  இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூடி விவாதித்து தான் ஒவ்வொரு பொருளுக்குமான வரி நிர்ணயம் செய்யவேண்டும். இதில் பல சிக்கல்கள் உள்ளன. நான் ஏற்கனவே எனது முதல் பதிவில் சொன்னது போல ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் தங்கள் மாநில சிறப்பு பொருட்களுக்கு வரி கட்டமைப்பில் சலுகை கேட்கக்கூடும். அந்த பிரச்சனைகளை எல்லாம் விவாதித்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வரி நிர்ணயம், விதி முறைகள் (Acts & Rules), வழிகாட்டு நெறிமுறைகள் (Procedures) ஆகியவை இறுதி செய்யப்பட்டு அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். 

நிர்வாக ரீதியான அமைப்புக்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஏற்படுத்த வேண்டும். மாநிலங்களுக்கிடையிலான வரி பிரச்சனைகள், நிதி பகிர்மான வழி முறைகள், பிரச்சனைகளை விவாதிப்பதற்கான தீர்ப்பாயங்கள் போன்ற பல அமைப்புகள் சட்ட ரீதியாக அமைக்கப்பட்டு அதற்கு தகுந்த உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.

இவை எல்லாம் பிசிகல் அமைப்புகள்.

விர்ச்சுவல் அமைப்புக்கள் என எடுத்துக்கொண்டால் GSTN என சொல்லப்படக்கூடிய ஜி.எஸ்.டி நெட்வர்க் இணைய தள அடிப்படையில் அமைக்கவேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியாக SGST நெட்வர்க் அமைக்கப்பட்டு அது GSTN வலைப்பின்னலில் இணைக்கவேண்டும். இப்போதிருக்கும் VAT, Excise, Service Tax கட்டமைப்புக்களுக்கு மாற்றாக இந்த புதிய GSTN நெட்வர்க் வருவதால் VAT, Excise, Service Tax ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒற்றை சாளரமாக இந்த புதிய நெட்வர்க் அமைக்க வேண்டும்.

அதன் பின், அதில் பணி புரிய உள்ள அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், ஒவ்வொரு வணிக வரி அலுவலக ஊழியர்களுக்கும், செக்போஸ்ட் ஆய்வாளர்களுக்கும் இந்த முறையை அறிமுகம் செய்து அவர்களுக்கு GSTN பயன்படுத்தும் முறை பற்றி பயிற்சி அளிக்க வேண்டும். அதேபோல நாடு முழுதும் உள்ள 39 கோடி நிறுவனங்களின் மறைமுக வரி ஊழியர்களுக்கும் (Indirect Tax officials) இந்த புதிய இணைய தளம் மற்றும் அதில் வரி விதிப்பு முறைகள் பதிவேற்றுவது குறித்த பயிற்சிகள் கொடுக்க வேண்டும்.  அனைத்து நிறுவனங்களுக்கும் 15 இலக்க புதிய அடையாள எண் ஒதுக்கப்படவேண்டும். இவை PAN அடிப்படையில் இருக்கும். GST முழுக்க முழுக்க இணைய வழி வரி கட்டமைப்பு என்பதால் அனைத்து நிறுவனங்களும் (சிறு, குறு நிறுவனங்கள் உட்பட) தங்கள் அலுவலகத்தில் இணைய வசதியுடன் கூடிய கணினி அமைத்து அதில் வரி செலுத்துவதற்கான முறையை பயின்று கொள்ள வேண்டும்.

இதில் மற்றொரு பெரிய சிக்கல் என்னவென்றால், சென்ட்ரல் எக்ஸைஸ் & சர்வீஸ் டாக்ஸ் ஒழிக்கப்பட்டு ஒருங்கிணைந்த GST கொண்டுவரப்படுவதால் அவற்றில் பணி புரிந்து வரும் 17 லட்சம் ஊழியர்களுக்கு அவர்களது தற்போதைய பணி நிலை குறையாத அளவில் GST வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும். அதில் என்னென்ன எதிர்ப்புக்களை ஊழியர் சங்கங்கள் கொண்டு வரும் என தெரியவில்லை. ஏற்கனவே இதே போன்ற ஒரு சிக்கலை இந்தியன் ஏர்லைன்ஸ் ஏர் இந்தியா இணைப்பின் பொது நாம் சந்தித்தது நினைவிருக்கலாம். (அது குறித்த எனது பதிவை இங்கே [Click Here] படிக்கலாம்)

இவை எல்லாம் செய்து முடித்தால் தான் முழுமையாக GST அமல்ப்படுத்த முடியும் என்பதால் 2017 ஏப்ரல் 1 என்பது சந்தேகம் தான்.

நிர்வாக ரீதியான சிக்கல்கள் தவிர அரசியல் ரீதியான சிக்கல்களும் உள்ளன:

ஏற்கனவே தமிழகம் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. இந்த சட்டம் வந்தால் தமிழகம் வெகுவாக பாதிக்கப்படும் என்பது தான் நமது அச்சம். அது நியாயமானதும் கூட. ஒரு வகையில் பார்த்தால் தமிழகம் இப்போது காட்டும் இந்த உறுதியான எதிர்ப்பு தொடருமானால் தமிழகத்தில் இந்த சட்டம் அமல்ப்படுத்தப்படாமலேயே போக வாய்ப்புள்ளது. அப்படியான பட்சத்தில் GST அமைப்பு செயல்படவே முடியாது.

தமிழகத்தை தொடர்ந்து, இப்போது கேரளா மேற்கு வங்காளம் ஆகியவையும் இந்த ஜி‌எஸ்‌டி சட்டத்துக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றன.  இவற்றை எல்லாம் மத்திய அரசு எப்படி சமாளிக்க போகிறது என தெரியவில்லை.

இந்தியா போன்ற ஒரு மாநிலங்களின் கூட்டமைப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று கொண்டே இருப்பது வாடிக்கை. அப்படி புதிய அரசு வந்து அதன் நிதி அமைச்சர் GST கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு அவர்களது கட்சி கொள்கை படியான மாறுபாடான நிலைப்பாடை எடுக்க நேர்ந்தால் அதுவும் GST கவுன்சிலுக்கு சிக்கல் தான்.

இது தவிர, இப்போது ஒரு சில அட்ஜஸ்ட்மெண்டுகளை மட்டுமே மத்திய அரசு செய்திருக்கிறதே அல்லாமல் முக்கியமான திருத்தங்களை முழுமையாக இன்னமும் செய்யவில்லை. அதெல்லாம் செய்யப்பட்டால் தான் காங்கிரசும் இதர கட்சிகளும் GST அமலாக ஒத்துழைக்கும் என்பது அடுத்த சிக்கல்.

காங்கிரஸ் வைத்த முக்கியமான ஐந்து கோரிக்கைகளில் சிலவற்றை மத்திய அரசு ஏற்றதால் தான் இந்த சட்டத்துக்கு காங்கிரஸ் ஒப்புதல் அளிக்க சம்மதித்து இருக்கிறது. அதாவது மாநிலங்களுக்கு இடையிலான பரிமாற்றங்களுக்கு 1% கூடுதல் வரிவிதிப்பை ரத்து செய்யவேண்டும் என காங்கிரஸ் கேட்டது. அப்படி கூடுதல் வரி விதித்தால் அது சீரான வரி விதிப்பை தகர்த்துவிடும் என்பது அவர்களது அச்சம். அதை முதலில் பிடிவாதமாக மறுத்த அரசு, பின்னர் உண்மை அறிந்து இறங்கி வந்து ரத்து செய்திருக்கிறது.

மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடை கொடுப்பதற்கு ஒரு வழிமுறையை உருவாக்கவேண்டும் என்பது மற்றொரு கோரிக்கை. இது மாநிலங்களின் பொருளாதார நலன் சார்ந்த கோரிக்கை. பாஜக முதல் ஐந்து வருடங்களுக்கு மட்டும் இழப்பீடு தரும் என முதலில் சொல்லி இருந்தது. ஆனால் இப்போது காங்கிரஸின் கோரிக்கையில் உள்ள நியாயம் அறிந்து இழப்பீடு குறித்து முடிவெடுக்க ஒரு அமைப்பை ஏற்படுத்த ஒப்புதல் அளித்து இருக்கிறது.

வரி குறித்த வழக்குகள் சச்சரவுகளை விவாதித்து முடிவெடுக்க தனியாக ஒரு தீர்வாயத்தை காங்கிரஸ் கேட்டது. முதல் முதலில் ஜி.எஸ்.டி சட்டத்தை காங்கிரஸ் அறிமுகம் செய்தபோது அதில் இந்த சரத்து இருந்தது. ஆனால் பின்னர் வந்த பாஜக அந்த விதியை ரத்து செய்து இருந்தது. இப்போது காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று அதை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது.

வரி விதிப்பு 18% க்குள் இருக்கவேண்டும் என்பது காங்கிரஸின் நிலைப்பாடு. அது தான் இந்திய பொருளாதாரத்துக்கு நல்லது என்பது அவர்கள் நிலை. ஆனால் மத்திய அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. வரி விதிப்பு பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது என ஜெட்லி சொல்லி விட்டார். “வரி தொடர்பான சட்டத்தில் வரி சதவீதம் சொல்லப்படவில்லை என்றால் அது வரி சட்டமே அல்ல” என சிதம்பரம் தெரிவித்து இருக்கிறார். வரி சதவீதம் என்ன என்பதையே சொல்லாமல் மொட்டையாக சட்டத்தை நிறைவேற்றி இருப்பது தவறு என்பது காங்கிரஸின் நிலைப்பாடு. இப்போதுள்ள சூழலில் 18% வரி விதிப்பது போதாது, கூடுதல் வரிவிதிப்பு இருக்கக்கூடும் என்பதை சூசகமாக சொல்லி இருக்கும் நிதி அமைச்சர், ஆனால் அது 27% க்கு குறைவாக இருக்கும் என கோடிட்டு காட்டி இருக்கிறார். எனவே எனது கணிப்பு படி 22 – 24% வரை வரி இருக்கக்கூடும் என நினைக்கிறேன். அப்படி ஆனால் ஒட்டுமொத்த சிறு தொழிலும் நசிந்து விடக்கூடும். பெரிய நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் பிழைக்க முடியும் என்கிற நிலை வரும். ஆனால் அப்படி உயர் வரி விகிதம் விதிக்கப்பட்டால் அதை காங்கிரஸ் அனுமதிக்காது என தெளிவாக சிதம்பரம் சொல்லி இருக்கிறார். அது நமக்கெல்லாம் ஒரு சின்ன ஆறுதல்.

ஆக நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இத்தனை சிக்கலைகளையும் கடந்து ஜிஎஸ்டி எப்போது செயலாக்கத்துக்கு வரும் என தெரியவில்லை. அப்படி செயல்பாட்டுக்கு வரும்பொழுது அது எந்த மாதிரி இருக்கும்? என்னென்ன நடைமுறைகள் மாறும்? வரி தாக்கல் செய்வோருக்கு உள்ள சாதகங்கள் பாதகங்கள் என்னென்ன? என்பதை எல்லாம் அடுத்த பதிவில் விரிவாக பேசலாம் நண்பர்களே!



3 comments:

Printfriendly