Showing posts with label GST. Show all posts
Showing posts with label GST. Show all posts

Saturday, October 7, 2017

ஜி.எஸ்.டி – குழப்பத்திலிருந்து சிக்கலுக்கு!

நேற்றைய தினம் நடந்த 22ஆம் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. சிறு / குறு தொழில் செய்வோரும் ஏற்றுமதி வர்த்தகம் செய்வோரும் படும் இன்னல்களை என்னைப்போன்றோர் நாயாய் பேயாய் கத்திய பின், இப்போது தான் அது அரசின் செவிகளுக்கு எட்டி, அதன் அடிப்படையில் அவர்களுக்கெல்லாம் ஒரு நிவாரணம் வழங்கும் வகையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக சந்தோஷம் வந்தாலும், அதெல்லாம் அந்த முடிவுகளை அலசி ஆராய்கையில் வடிந்துபோனது.

உண்மையில் சிறு குறு வணிகர்களுக்கும் ஏற்றுமதி செய்வோருக்கும் நல்லது செய்வதாக சொல்லி, கிட்டத்தட்ட பெரிய இடியை தான் இறக்கி இருக்கிறது ஜி.எஸ்.டி கவுன்சில்.

அத்தகைய இடிகளில் இருந்து சில குறிப்பிடத்தக்க ஒன்றிரண்டை மட்டும் இங்கே பார்ப்போம்:

1. ரூ.1.50 கோடி வரை வர்த்தகம் செய்யும் வணிகர்கள் இனி மாதம் தோறும் வரி செலுத்த தேவை இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரி செலுத்தினால் போதும்:

இந்த அறிவிப்பு அவர்களுக்கான சலுகையாக பலராலும் பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டது. நானும் கூட முதலில் அப்படி தான் நினைத்தேன். ஆனால் அதில் உள்ள சிக்கல்களை பார்த்தபோது அவர்களை பற்றி பரிதாபப்படவே முடிந்தது.

தற்போது ரூ.20 லட்சம் வரை வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவோர் ரிவர்ஸ் சார்ஜ் (RCM) முறையில் வரியை அவர்கள் சார்பாக அடைக்கவேண்டும் என்கிற ஒரு நிபந்தனை இருப்பதால் பலரும் பதிவு செய்யப்படாத வணிகர்களை புறக்கணிக்க தொடங்கி அவர்களது தொழில் தேய்பிறையாகி வருவது நீங்கள் அறிந்ததே.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 4 கோடி பேர் இருக்கலாம். இது குறைவாக இருக்கிறதே என அரசு சங்கடப்பட்டதோ என்னவோ, நேற்றைய தினம் புதிதாக மற்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.அது தான் ரூ.1.50 கோடி வரை வர்த்தகம் செய்வோருக்கு காலாண்டு வரி தாக்கல் முறை. இதில் என்ன பிரச்சனை?

ஜி.எஸ்.டியில் நாம் வாங்கும் பொருட்களுக்கான வரியை நாம் செலுத்தவேண்டிய வரிக்கு கழித்துக்கொள்ளலாம் (Set off). இது முன்பு போல மெனுவல் எண்டிரி ஆக அல்லாமல், ஆட்டோமாடிக் எண்டிரி ஆக ஜி.எஸ்.டியில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அதாவது நமக்கு பொருட்களை விற்பவர் அந்த விவரங்களை (Outward Supplies) GSTR-1 ரிட்டர்னில் தாக்கல் செய்தால் தான் அது நமது GSTR-2 (Inward Supplies) ரிட்டர்னில் ஆடோமாடிக்காக வரும். அந்த வரியை நாம் எடுத்து உபயோகித்துக்கொள்ளலாம்.

நேற்று அரசு அறிவித்த புதிய விதியின் கீழ், நாம் பொருட்களை வாங்கிய வர்த்தகர் பதிவு பெற்றவராக இருந்தாலும், அவர் இப்போது போல மாதாமாதம் வரி தாக்கல் செய்ய தேவை இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரி தாக்கல் செய்தால் போதும்.

இதில் சிக்கல் என்னவென்றால், நாம் அப்படி பட்ட வணிகர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி இருந்தால், அவர்கள் வரி தாக்கல் செய்யும் வரை நமக்கு ITC கிடைக்காது. இது போன்ற வணிகர்களிடம் இருந்து வாங்கும் பொருட்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து, அதன் வரி வருவாய் கூடுதலாக இருந்தால், அதை நாம் உபயோகப்படுத்த 4 மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை நமது வரியை நாம் பணம் கட்டி தான் செலுத்த வேண்டி இருக்கும்.

இதன் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பது உங்களால் ஊகிக்கக்கூடியதே! அதே தான்!  இது போன்ற வணிகர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதை நாம் மெல்ல மெல்ல குறைத்துக்கொண்டு மிகப்பெரிய நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே பொருட்களை வாங்க தொடங்குவோம். அப்படியாக 20 லட்சம் முதல் 1.50 கோடி வரை வர்த்தகம் செய்யும் வணிகர்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இப்போ எண்ணிக்கை கணிசமாக உயருமில்லையா? அரசு அதை தான் எதிர்ப்பார்க்கிறதோ என்னவோ?

4 மாதங்கள் காத்திருப்பதற்கு பதிலாக நாமே ஏன் மாதாமாதம் GSTR-2 ரிட்டர்னில் மெனுவலாக எண்டிரி செய்து ITC எடுத்துக்கொள்ள கூடாது என நீங்கள் கேட்கலாம்.  அப்படி செய்தாலும் ஓகே தான். ஆனால் 4 மாதம் கழித்து அது ஆட்டோமேடிக்காக வரும்போது அதில் இருந்து நாம் வரியை எடுத்த பில்களை எல்லாம் தேடி தேடி நீக்கவேண்டி இருக்கும். இது பெரிய நொச்சு பிடிச்ச வேலை. அதற்கு நீங்கள் தயார் எனில், உங்களிடம் இது போன்ற வர்த்தகர்கள் குறைவு எனில் இந்த முறையை பின்பற்றலாம். பொதுவாக அதிக வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு இது தலைவலியாக முடியும். எனவே சிறு குறு வணிகர்களின் நிலை கஷ்டம் தான்.
******
2. எக்ஸ்போர்ட் ரீஃபண்ட் உடனடியாக வழங்க நடவடிக்கை. ஈ-வாலட் மூலம் கொடுக்கப்படும்.

போன பதிவில் எக்ஸ்போர்ட் செய்வோர் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், அவர்களது முதலீடெல்லாம் முடங்கி கிடப்பதையும் படித்திருப்பீர்கள். இப்போது அப்படி முடங்கி கிடக்கும் முதலீட்டை அவர்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக நேற்றைய கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 



ஆனால் இதிலும் சந்தோஷத்துக்கு பதிலாக சங்கடமே வந்து தொலைக்கிறது.

அதாவது ஜூலை மாத எக்ஸ்போர்ட் ரீபண்டுக்கு ஏற்கனவே விண்ணப்பித்து காத்துக்கிடப்பவர்களுக்கு ரீபண்டு உடனே கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சொல்கிறது. ஆனால் ரீபண்டு அப்ளை செய்வதற்கான வசதியே இன்று வரை ஜி‌.எஸ்.டி போர்டலில் கொண்டுவரவில்லை. இப்படி இருக்க, யாருமே அப்ளை செய்திருக்க முடியாத ஒரு விஷயத்தை அரசு தருவதாக சொல்வது இடிக்கிறது என்பது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், அப்படி கொடுக்கப்படும் ரீபண்ட் முன்பெல்லாம் செக்காக தருவது மாறி இப்போது ஈ-வாலட் முறையில் தான் வழங்கப்படும் என்றும் அதை ஜி.எஸ்.டி வரி செலுத்த பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் சொல்லி இருப்பது மற்றொரு இடி.

ஜி.எஸ்.டி வரி செலுத்தும் நிலையே வராதவர்கள் தான் தங்களிடம் இருக்கும் ITC ஐ காசாக்கும் வகையில் ரீபண்டுக்கு அப்ளை செய்வார்கள். வரி செலுத்தும் நிலை இருந்தால் அதை வைத்து வரியை செலுத்திவிட்டு போய்ட்டே இருப்பார்கள்.

தங்களிடம் மிச்சமிருக்கும் ITC, எக்ஸ்போர்ட்டுக்கு கட்டிவிட்டு அதை ரீபண்டாக்க காசாக வாங்கிக்கொண்டால் தான் முதலீடு கைக்கு வரும். ஆனால் அரசு அதை வாலட்டில் வரவு வைக்குமாம் அதை வைத்து நாம் வரி கட்டிக்கொள்ளலாமாம் என்றால் எந்த வரியை கட்டுவது?

சுருக்கமாக சொல்வதானால் ITC லெட்ஜரில் இருந்து Cash லெட்ஜருக்கு அந்த தொகை மாறும். இதை தவிர தம்படி பிரயோஜனம் கிடையாது நமக்கு. மொத்தத்தில் முடக்கப்பட்ட ITC முடக்கப்பட்டதாகவே இருக்கும்.

இந்த முடிவு நமக்கு மறைமுகமாக சொல்லும் ஒரு கொசுறு செய்தி என்னவென்றால், அரசிடம் ரீபண்ட் வழங்க பணம் இல்லையாமே என்கிற ஊகத்தை உண்மை என நிறுவி இருக்கிறது அரசு!
******
3. ரூ. 50,000 க்கு மேல் நகை வாங்கினால், அப்படி வாங்குபவரின் பான் & ஆதார் எண்ணை கொடுக்கவேண்டியதில்லை.

ஊழல் & கருப்பு பணத்துக்கு எதிரான போராக தனது நிதி சீர்திருத்தங்களை வர்ணித்துக்கொண்டிருக்கும் அரசு தான் இந்த முடிவை அறிவித்து இருக்கிறது. ஆச்சரியமாயில்லை?

இனி யார் வேண்டுமானாலும் தன்னிடம் இருக்கும் கணக்கில் வராத பணத்தை தங்கமாக மாற்றி கொள்ளலாம். பணமாக வாங்கப்படும் லஞ்சம் இனி தங்கமாக வாங்கிக்கொள்ள எந்த தடையும் இல்லை. யாரிடம் வேண்டுமானாலும் பணத்தை கொடுத்து தங்கம் வாங்கிக்கொள்ளலாம். யாரும் எந்த கேள்வியும் கேட்கமாட்டார்கள். வாங்குவோர் தம்மை பற்றிய எந்த குறிப்பையும் கொடுக்கவும் தேவை இல்லை. ஏற்கனவே நகைக்கடைகள் பில் இல்லாமலும் வரி கட்டாமலும் தான் பெரும்பாலான வணிகத்தையே செய்துவருகிறார்கள் என்பதால், அவர்களுக்கும் சிக்கல் இல்லை.

எனவே, கருப்புப்பணத்தை நிலமாக பொருளாக முதலீடு செய்து வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மற்றும் ஒரு வாய்ப்பாக தங்கமும் செய்து தந்திருக்கிறது அரசு.  இதனாலும் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் இருக்கப்போவதில்லை. தங்கத்தின் விலை மேலும் ஏறும், ஊழல் கருப்புப்பணம் இனி பயமின்றி நடமாடும், அதிகாரிகள் இனி தைரியமாக லஞ்சம் கேட்பார்கள் (என்ன, அதை பணமாக அல்லாமல் தங்கமாக கொடுக்க வேண்டி இருக்கும். அவ்வளவு தான்)
******
சரி, நேற்றைய கூட்டத்தில் நல்ல முடிவுகளே எடுக்கப்படலையா என்கிற கேள்வியும் இருக்கிறது. எடுத்து இருக்கிறார்கள். சில விஷயங்கள் அருமையான நடவடிக்கை. சிறிய அளவில் இருந்தாலும், அது ஒரு குறிப்பிட்டவர்களுக்கு உதவி செய்யக்கூடியவை. அவை சுருக்கமாக:

1.   பிரிண்டிங் பணிகளுக்கான வரி 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. (விரைவில் எதிர்வரும் தேர்தல் காலங்களில் இது அரசியல் கட்சிகளுக்கு உதவியாக இருக்கும். நிறைய போஸ்டர் பேனர் அடிக்கவேண்டி இருக்கும் நிலையில் 7% வரி குறைப்பு என்பது மிகப்பெரிய வரம்)

2.   ரிவர்ஸ் சார்ஜ் முறையில் ஒரு பகுதிக்கு, அதாவது செக்ஷன் 9(4) க்கு மட்டும், விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பெரும் தலைவலியின் ஒரு பகுதி தீர்ந்தது.

3.   அரசு பணிகளுக்கான வர்க்ஸ் காண்டிராக்ட் (Works Contract) முறைக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இது அரசுக்கு செய்யப்படும் பணிகளுக்கு மட்டும் தான். மற்ற நிறுவனங்களுக்கு கிடையாது. ஆனாலும் இது நல்ல விஷயம் தான். இதன் மூலம் அரசின் கட்டுமான திட்டங்களுக்கான செலவு குறையும்

4.   சிறு வணிகர்கள், அதாவது ரூ. 1.50 கோடி வரை வர்த்தகம் செய்வோர், தாங்கள் வாங்கும் அட்வான்ஸ் தொகைக்கு இனிமேல் வரி கட்ட தேவை இல்லை. இது அவர்களது வர்க்கிங் கேப்பிட்டலை தக்கவைத்துக்கொள்ள உதவும்.

5.   ஈ-வே பில் எனப்படும் ரோடு பெர்மிட் முறை 2018 ஏப்ரல் மாதம் வரை ஒத்தி வைக்கப்படுகிறது.

6.   Advance Authorisation லைசன்ஸ் இருந்தால் அவர்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு IGST வரி கட்ட தேவை இல்லை.

7.   மெர்சண்ட் எக்ஸ்போர்ட்டுக்கு பொருட்கள் வாங்கும்போது இப்போது HSN படி உள்ள வரி கட்டவேண்டும் என்று இருப்பதற்கு பதிலாக வெறும் 0.1% வரி கட்டினால் போதும் என்பது உண்மையிலேயே ஒரு போனான்சா தான்.

இப்படி சில.

ஆனால் நான் எதிர்பார்த்த பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்பது தான் பெரிய வருத்தம்.

பார்ப்போம், அவை அடுத்த கூட்டத்திலாவது விவாதிக்கப்படுகிறதா என.

மொத்தத்தில் இதுவரை ஜி.எஸ்.டி என்பது குழப்பம் என்கிற நிலைமையில் இருந்தது.. இப்போது குழப்பம் ஓரளவுக்கு தீர்ந்துவிட்டது. ஆனால் நடைமுறை படுத்துவதிலும், தொழிலை முன்னெடுத்து செல்வதிலும் பெரும் சிக்கல் இருக்கும் வகையில் சில ரூல்ஸ் இருப்பது தான் ஆபத்து.

இதையும் அரசு கவனத்தில் எடுத்து, விதிமுறைகளை எளிமைப்படுத்தும் என நம்புகிறேன்.


நம்பிக்கை... அதுதானே எல்லாம்?

******
Reference:

1.  Press realease on 22nd GST Council Meeting dated 06.10.2017
2.  Press note export packages.
3.  GST rates approved by GST council on 06/10/2017

Wednesday, September 27, 2017

பொருளாதார சீரழிவின் துவக்கம்

ரு பொருளாதார சிக்கலை நோக்கி இந்தியா இப்போது வெகு வேகமாக நகர்ந்துகொண்டிருப்பதற்கு ஜி.எஸ்.டியின் பல பல தவறான விதிமுறைகள் காரணம் என்பதை பலரும் சொல்ல கேட்டிருப்பீர்கள்.

சமீபத்தில் அதில் ஒரு காரணியை பற்றி மிக விரிவாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை உங்களுக்கும் சொல்லலைன்னா எனக்கு தலையே வெடிச்சிரும் என்பதால்....

கடந்த ஜூலை மாத ஜி.எஸ்.டி ரிடர்ன் படி கிட்டத்தட்ட 94000 கோடி ரூபாய் வரியாக வசூலித்திருப்பதாக மார்தட்டிக்கொண்ட நிதி அமைச்சகத்துக்கு அடுத்த சில நாட்களிலேயே அதில் கிட்டத்தட்ட 65000 கோடி ரூபாய் ரீஃபண்ட் ஆக திரும்ப கொடுக்க வேண்டிய தொகை எனவும் அதை எப்போ தருவீர்கள் என வணிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்ததும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. அதனால் அந்த 65000 கோடி ரூபாய்க்கான கணக்குகளை விரிவாக தணிக்கை செய்ய சொல்லி துறை ரீதியான உத்தரவுகள் பறந்து அதன் அடிப்படையில் எல்லா வணிகர்களிடமும் ஆவண பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், வரி வருவாயை அதிகரிக்கும் என சொல்ல பட்ட ஜி.எஸ்.டி மூலம், அரசுக்கான வரி வருவாய் வெறும் 29000 கோடி தான் வந்திருக்கிறது என்பது (94000 – 65000). இது முந்தைய வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு தான். இதிலேயே ஜி.எஸ்.டியின் நோக்கம் அடிபட்டு போய்விட்டது.

அடுத்த அடி, நிதி அமைச்சகம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு அறிவிப்பில் இருக்கிறது. அதாவது ஜி.எஸ்.டியில் முறையாக பதிவு செய்த 68 லட்சம் வணிகர்களில் ஆகஸ்டு மாதம் ரிடர்ன் தாக்கல் செய்திருப்பவர்கள் வெறும் 33 லட்சம் பேர் தான் என சொல்லி இருப்பது கவனிக்க தக்கது. இதன் படி பார்த்தால் வரி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. ஜி.எஸ்.டிக்கு முன்பாக எக்ஸைஸ், செர்வீஸ் டாக்ஸ், வாட் ஆகிய அனைத்தும் உட்பட 1.20 கோடி வணிகர்கள் இருந்த நிலையில் இப்போது வெறும் 68 லட்சம் வணிகர்கள் தான் இருக்கிறார்கள் என அரசே சொல்கிறது. அந்த 68 லட்சத்திலும் 33 லட்சம் பேர் தான் வரி செலுத்தி இருப்பதாகவும் அரசு சொல்கிறது.

வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் என்றும், வரி ஏய்ப்புக்களை முற்றிலுமாக ஒழிக்கும் என்றும் அரசு சொல்லி வந்த நிலையில் நிதி அமைச்சகத்தின் அறிவிப்புக்கள் அதற்கு எதிரான காட்சிகளை தான் நமக்கு ஆதாரமாக தருகிறது. 

ஆக, ஜி.எஸ்.டி அதன் நோக்கத்தை சரியாக சென்றடையவில்லை என்பது தெளிவு.

சரி, அதென்ன அது 65000 கோடி ரீஃபண்ட்? ஏன் அரசு அதை தரணும்? இதுக்கு முன்னாடி எப்படி இருந்தது? இப்படி எல்லாம் உங்களுக்குள் கேள்வி வருதுல்ல? வாங்க அதை கொஞ்சம் ஜாலியா விவாதிக்கலாம்.

எக்ஸ்போர்ட் செய்வது என்பது வெறும் கம்பெனிகள் மட்டுமே செய்வது அல்ல. தனி நபர்களும் சிறு வணிகர்களும் தான் அதிகமாக எக்ஸ்போர்ட் செய்கிறார்கள். கணக்குப்படி மொத்த எக்ஸ்போர்ட்டில் 43% தான் கம்பெனிகள் செய்கின்றன. பாக்கி எல்லாம் தனி நபர்கள் அல்லது சிறு வணிகர்கள்.



அவர்கள் அப்படி என்ன தான் எக்ஸ்போர்ட் செய்கிறார்கள்? கம்பெனிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை எக்ஸ்போர்ட் செய்வார்கள். ஆனால் தனிநபர்கள் மற்வர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி அதை எக்ஸ்போர்ட் செய்வார்கள். உதாரணமாக காய்கறிகள், பழங்கள், தேங்காய், பூக்கள், துணிகள், ஸ்நாக்ஸ் போன்ற ஐட்டம்கள். வெளிநாடுகளில் இவற்றுக்கு நிறைய கிராக்கி இருப்பதால் தினம் தோறும் டன் கணக்கில் ஏற்றுமதி ஆகின்றன. ஐரோப்பாவில் பூக்களுக்கும், அரபு நாடுகளின் நம் உணவு பொருட்களுக்கும் நிறைய கிராக்கி.

இப்படி எக்ஸ்போர்ட் செய்யும் தனி நபர்கள் / சிறு வணிகர்கள் மெர்செண்ட் எக்ஸ்போர்ட்டர் (Merchant Exporter) என்கிற கேட்டகரியில் வருவார்கள். அதாவது அவர்கள் வெறும் வாங்கி விற்கும் வணிகர்கள் அவ்வளவே. இதற்கு முதலீடு குறைவு ஆனால் பெரிய லாபம்.

உதாரணமாக நான் இந்த தொழில் செய்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். நான் இங்கே பக்கத்தில் உள்ள திருவள்ளூரிலோ  ஊத்துக்கோட்டையிலோ எனக்கு தெரிந்த தோட்டங்களில் இருந்து விவசாயிகளிடம் இருந்து சுமார் 1,00,000 ரூபாய் மதிப்புள்ள காய்கறிகளை 25 நாள் கடனுக்கு வாங்கி அதை ஏற்றுமதி செய்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். அந்த பொருட்களை அங்கிருந்து ஏர்போர்ட்டுக்கு கொண்டு வரும் வண்டி வாடகை, டாகுமெண்ட் செலவு, ஏர்போர்டில் கஸ்டம்ஸ் ஏஜெண்ட் செலவு என சுமார் 30,000 ரூபாய் முடக்கினால் போதும். எனது கஸ்ட்மருக்கு நான் நிர்ணயிக்கும் விலை 1,50,000 எனில், அந்த பொருட்கள் கிடைத்த 15 நாளுக்குள் கஸ்டமர்  எனக்கு பணம் அனுப்புகிறார் என வைத்துக்கொண்டால் அந்த பணத்தை வைத்து காய்கறிகள் வாங்கியோருக்கு 1,00,000 கொடுத்துவிட்டால் போக்குவரத்து செலவு 30,000 போக எனக்கு நிகர லாபம் 20,000.

இது ஒரு தொடர் நிகழ்வு என்பதால் மாதத்துக்கு 4 அல்லது 5 முறை இத்தகைய வர்த்தகம் நடைபெறும்.. சுமார் 1,00,000 வரை கையில் லாபம் நிற்கும். யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை.



காய்கறிகள் மட்டும் அல்லாமல், பல வகையான பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி ஆகின்றது. அவற்றில் சிலவற்றுக்கு வரி இருந்தாலும் Merchant Export என்பதால் வரி விலக்கு இருந்தது. எனவே எந்த இழப்பும் இல்லாமல் இந்த ஏற்றுமதி ஜோராக நடந்து கொண்டிருந்தது.

இப்போது புதிய ஜி.எஸ்.டி விதிகள் படி, Merchant Export முறை இல்லை. நாம் வாங்கும் பொருட்களுக்கு வரி செலுத்தவேண்டும். அதை ஏற்றுமதி செய்துவிட்டு, அப்படி ஏற்றுமதி செய்ததற்கான ஆதாரங்களை அரசிடம் காண்பித்து, நாம் செலுத்திய வரியை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். எப்படியும் அரசுக்கு நயாபைசா வருமானம் இல்லை. நாம் வாங்கும் போது செலுத்திய வரியை பின்னர் அரசிடம் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். (முன்பு வரி செலுத்தவும் தேவையில்லை, திரும்ப பெறும் நடைமுறையும் இல்லை).

இது ஈஸி தானே என பலரும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அரசு இந்த நிமிஷம் வரை ரீஃபண்ட் ஆப்சனை செயல்படுத்தவே இல்லை. இதன் விளைவு?

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வாங்கிய பொருட்களுக்கான வரியை ஏற்கனவே கட்டியாச்சு. ஆனா அதை ரீஃபண்ட் வாங்கும் வசதி இன்னும் தொடங்கவே இல்லை. அதனால் அந்த தொகை எல்லாம் அங்கே முடங்கி கிடக்கு. எனக்கு கிடைக்கும் லாபம் ல்லாம் இப்போ அரசிடம். அது எப்போ வரும்னு எந்த அறிகுறியும் இல்லை. ஆனா கண்டிப்பா ஒரு நாள் வரும். அதில் சந்தேகம் இல்லை.

வெறும் 30,000 முதலீடு வெச்சு ரோட்டெஷன் செஞ்சு சம்பாதிச்சது மாறி இப்போ வரியே மாசம் 4 x 28,000 கட்டி கட்டி மொத்தமா 2,24,000 அரசுகிட்டே முடங்கிக் கிடந்தா எப்படி தொடர்ந்து தொழில் செய்ய முடியும்?


இப்படி எல்லோரும் பைசா வந்தபின்னால் பார்த்துக்கலாம்னு முடிவு செஞ்சு எக்ஸ்போர்ட் பிசினசை நிறுத்தினால் அன்னியசெலாவணி பிரச்சனை புதுசா முளைக்கும். அதாவது நமது ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரிச்சா அதனால் ஏற்படும் Current Account Deficit (CAD). அது ஒரு தனி பெரும் கதை. இது டாலர் மதிப்பை உயர்த்தி ரூபாய் மதிப்பை குறைத்து மொத்தமா ஒரு நம்மை நசுக்கிடும். மேலும் சில காலம் இங்கிருந்து எக்ஸ்போர்ட் இல்லைன்னா நம்ம கஸ்டமர் நமக்காக காத்திருக்காம மற்ற நாடுகளில் இருந்து வாங்க ஆரம்பிச்சிருவான்.

இது ஒரு புறம்.

அரசு முன்பே சொன்னது மாதிரி ஜி.எஸ்.டி மூலம் வரி வருவாயாக 94000 கோடி வந்திருக்குன்னு சொல்லி வாயை மூடறதுக்குள்ளே அதுல இப்படி திரும்ப கிடைக்கவேண்டிய ரீஃபண்ட் தொகை 65000 கோடின்ற கணக்கு வந்ததும் ரெண்டு அதிர்ச்சி.

ஒண்ணு, 65000 கோடி திரும்ப கொடுக்கற அளவுக்கு இப்போ பணம் இல்லையாம்.
ரெண்டு. 94000 கோடியில் 65000 கோடி ரீபண்டுன்னா மொத்தமா வந்த வரியே வெறும் 30000 கோடி தான். இது முந்தைய வரி வசூலை விட ரொம்ப குறைவு. ஆக மொத்தம் ஜி.எஸ்.டி எல்லா எதிர்பார்ப்புக்களையும் நம்பிக்கைகளையும் தவிடு பொடி ஆக்கிருச்சு.

இப்போ அரசு நிதி பற்றாக்குறையை நோக்கி போயிட்டிருக்கு. அது பொருளாதார மந்த நிலையா மாறி பொருளாதார சீர்கெடா மாறுவதற்கு அதிக காலம் ஆகாது. ஏன்னா ஏற்கனவே எல்லா தொழில்களும் மெல்ல மெல்ல முடங்கிட்டு இருக்கு. எக்ஸ்போர்ட் துறையும் தேங்கிருச்சுன்னா வேலை வாய்ப்பு குறையும், அந்நிய செலாவணி பிரச்சனை, ரீபண்டுக்கான தொகை இல்லாமை, வரி வருவாய் குறைவு, வரி ஏய்ப்பு மூலம் எதிர்பாராத நஷ்டம். எல்லாமா சேர்ந்து அரசின் கஜானாவுக்கு தான் பிரச்சனை.

அதனால் தான் கடந்த சில நாட்களாக டெல்லியில் பல முக்கிய அவசர கூட்டங்கள் நடந்திட்டு இருக்கு.

காத்திருப்போம்.. அரசு ஒரு நல்ல முடிவு எடுத்து இதற்கெல்லாம் விரைவில் ஒரு தீர்வு காணும் என்று!




Wednesday, July 5, 2017

ஜி.எஸ்.டி – எனது பார்வையில் – 8

டந்த பதிவை முடிக்கும் பொழுது அரசு இதை அவசரம் அவசரமாக அமல்ப்படுத்துகிறது என சொல்லி இருந்ததையே பிறிதொரு நிகழ்வில் என் சமூக வலை தள விவாதத்திலும் வைத்திருந்தேன்.

அவ்வளவு தான்..

பலரும் வெகுண்டு எழுந்து விட்டார்கள்.

அதெப்படி இதை அவசரம் என சொல்லலாம்? கடந்த 20 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இந்தியாவில் இல்லை, இனியும் எத்தனை காலம் தான் காத்திருக்கவேண்டும்? என்றெல்லாம் செம காட்டு காட்டிவிட்டார்கள்.

நான் சொல்ல வந்த அவசரம் என்பது அதை அல்ல. தகுந்த முன்னேற்பாடுகளை செய்யும் முன்பாகவே அமல்படுத்தப்படும் அந்த முந்திரிக்கொட்டைத்தன அவசரம் என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதற்குள்...

ஜி.எஸ்.டி அமல்ப்படுத்தப்பட வேண்டும் என்பது வாஜ்பாயி காலத்திலேயே முடிவு செய்யப்பட ஒன்று. பின்னர் வந்த சிதம்பரம் அதை இறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கையையும் 2010 ல் எடுத்தபோது அதை கடுமையாக எதிர்த்து தடுத்து இந்தியாவின் வளர்ச்சியை 7 ஆண்டுகளுக்கு முடக்கி போட்டது யார் என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.

இன்று திடீர் ஞானோதையம் வந்து அவர்களே ஜி.எஸ்.டி தான் நாட்டுக்கு நல்லது என சொல்லி அமல்ப்படுத்த முனைந்தபோது எல்லோரையும் போலவே நானும் மகிழ்ந்தேன்.  ஆனால் அதில் அவர்களது தனிப்பட்ட கொள்கை சார்ந்த திருத்தங்களையும், இந்தியாவின் புவியியல் / கலாச்சார / வளர்ச்சி சார்ந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் பல்வேறு திருத்தங்களை செய்து ஜி.எஸ்.டியை ஜி.எஸ்.டியாக அல்லாமல் குழப்பி வைத்ததில் தான் எல்லோருமே நொந்து போனோம்.

சரி அப்படி குழப்பிய சட்டத்தையாவது ஒழுங்காக அமல்ப்படுத்தினார்களா என்றால் அதுவும் இல்லை.



கடந்த டிசம்பர் மாதத்திலேயே அறிவித்து விட்டார்கள், 2017 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி கட்டாயம் அமல் ஆகும் என்று. ஆனால் சில காரணங்களால் அது மூன்று மாதம் தள்ளி போய் ஜூலை 1 என அமல் ஆக தீர்மானிக்கப்பட்டது. அதாவது எதிர்பாராமல் கூடுதலாக 3 மாத அவகாசம் அரசுக்கு கிடைத்திருக்கிறது. அப்படி என்றால் ஜூலை 1 ஆம் தேதி 100% பக்காவாக இந்த சட்டம் அமல் ஆக்கப்பட்டிருக்கவேண்டும் தானே? ஏனெனில் ஏப்ரலுக்காக திட்டமிட்டு எல்லாவற்றையும் செய்ததாக சொல்லும் அரசு ஜூலை எனில் முழுமையாக எந்த குறையும் இல்லாமல் எல்லா வகையிலும் தயார் ஆகியிருக்கவேண்டும் தானே?

ஆனால் யதார்த்தம் வேறாக இருக்கிறது.

ஜூலை 1 ஆம் தேதி ஜி.எஸ்.டி அமல் படுத்தப்படும் பொழுது, ஜி.எஸ்.டிக்கு தேவையான அடிப்படை இணையதள கட்டமைப்பான GSTN (GST Network) நெட்வர்க்கே கூட முழுமை அடையவில்லை. இன்றைக்கும் அது முழுமை அடையவில்லை. மேலும் 2 மாதம் தேவைப்படும் என்பதால் செப்டம்பர் வரை தற்காலிக ரிட்டர்ன் தான் தாக்கல் செய்யவேண்டும் என அரசு சொல்லி இருக்கிறது. மீண்டும் செப்டம்பர் மாதம் GSTN செயலுக்கு வந்தபிறகும் ஜூலை ஆகஸ்ட் மாத ரிட்டர்னை மீண்டும் ஒரு முறை விரிவாக பதிவேற்ற வேண்டுமாம்.

கிட்டத்தட்ட 7 மாதங்களாக GSTN நெட்வர்க்கை தயார்செய்யாமல் 'டிஜிட்டல் இந்தியா' அரசு (!) தேமே என உட்கார்ந்திருந்தது எவ்வளவு பெரிய சிக்கலுக்குள் எல்லோரையும் தள்ளி இருக்கிறது என்பது தனி கதை.

GSTN இல்லாததால், E-WayBill எனப்படும் சரக்குகளை அனுப்பும் படிவமும் தயாராகவில்லை. அதற்குள்ளாக மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளை எல்லாம் வேறு மூடிவிட்டார்கள். எனவே முன்பு பதுங்கி பதுங்கி சென்ற வரி ஏய்ப்பாளர்கள் இப்போது தைரியமாக சரக்குகளை கொண்டு சென்று வந்து கொண்டிருக்கிறார்கள்.

GSTN இல்லாததால், அது எப்படி இருக்கும் என்பது தெரியாததால் எந்த மாதிரியான ரிட்டர்ன் தாக்கல் செய்யவேண்டி இருக்கும், அதற்கு தக்க மாதிரி எப்படி ரிப்போர்ட் தயாரிக்க வேண்டும் என்கிற எதையும் வணிகர்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை.  இத்தனைக்கும் ஜூலை மாத வர்த்தக விவரங்களை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் ரிட்டர்ன் மாடல் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

வணிகர்களின் கவலை எல்லாம், GSTN தயார் ஆகி, அதில் கேட்கப்படும் வடிவத்தில் வியாபார விவரங்களை ஸ்டேட்மெண்ட் ஆக தயாரித்து எடுக்கும் விதத்தில் தங்களிடம் உள்ள ERP மென்பொருளை மாறுவடிவமைத்து, அதில் இருந்து ரிப்போர்ட் எடுத்து, அதை ASP கேட்கும் வகையில் கொடுத்தால் தான் அவர்கள் அதை வைத்து GSTN வழியாக வரி தாக்கல் செய்ய முடியும்.

இப்போது வரை எந்த விவரமும் யாருக்கும் தெரியாது.. ஆனால் 20 நாளுக்குள் எல்லாம் நடைபெற வேண்டும் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்? இத்தனை மாதங்களாக என்ன தான் செய்து கொண்டிருந்தது அரசு?

ஏப்ரல் மாதம் முழுக்க எந்த GST Council கூட்டமும் நடத்தாமல் Vacation அனுபவித்து விட்டு மே 18,19 தொடங்கி ஜூன் 18 வரை தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி பல பல திருத்தங்களை கடைசி நேரம் வரையில் திருத்திக்கொண்டே இருந்த அரசின் அறிவிப்புக்களை அடிப்படையாக வைத்து 12 நாளில் எப்படி எல்லா மென்பொருளையும் மறுவடிவைக்கமுடியும்?

இதனால் தான் பல வணிக அமைப்புக்களும், தொழில் கூட்டமைப்புக்களும், சமூக நலன் சார்ந்த அரசியல் இயக்கங்களும் ஜி.எஸ்.டி அமலாவதை செப்டம்பர் வரை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

நன்றாக கவனியுங்கள். அவர்கள் ஜி.எஸ்.டி வேண்டாம் என சொல்லவில்லை. ஜூன் 18 GST கவுன்சில் இறுதி கூட்டத்தில் செய்யப்பட திருத்தங்கள் வரையிலான எல்லா திருத்தங்களையும் ஆராய்ந்து படித்து பார்த்து அதற்கு தக்கபடி ERP சிஸ்டத்தை மறுவடிவமைப்பு செய்து, அதை அனைத்து வணிகர்களுக்கும் நிறுவி, அவர்களுக்கு பயிற்சியும் அளித்து, அவர்களது வியாபார அடிப்படையிலான வர்த்தக விவரங்களை ரிட்டர்ன் தாக்கலுக்கு தக்கபடி ஸ்டேட்மெண்டாக மாற்ற தனியாக இன்னொரு மென்பொருளை வடிவமைத்து, அதை ASP க்களுக்கு எளிதாக பரிமாற்றம் செய்யவேண்டிய வகையில் ஒரு FTP தயாரித்து தான் வரி தாக்கல் செய்யவே தயாராக முடியும் என்கிற நிலையில் இதற்கெல்லாம் வெறும் 12 நாள் போதாது என்பதை கருத்தில் கொண்டு தான் அந்த கால அவகாசம் கேட்கப்பட்டது.

ஆனால் அரசு அதை மறுத்து விட்டு ஜூலை 1 முதல் ஒரே தேசம் ஒரே வரி என முழக்கமிட்டது. (உண்மையில் அது 6 வரி, 3 வகை வரிவிதிப்பு என்பதெல்லாம் மற்றுமொரு தனிக்கதை)

சரி ஜூலை முதல் அமலாக்குவது என முடிவு செய்தாயிற்று அல்லவா?  அப்படியானால் ஒவ்வொரு விவகாரத்துக்கும் (ஏற்றுமதி, ஜாப் வர்க் போன்றவற்றுக்கான அனுமதி, ஏற்றுமதிக்கான காப்பு பத்திரம் ஆகியவை) உரிய அதிகாரிகள் யார் யார் என்பதையாவது அறிவித்திருக்க வேண்டாமா? அதற்கான படிவங்கள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவையாவது சொல்லி இருக்கவேண்டாமா? இதையெல்லாம் 2 மாதத்துக்கு முன்பே தயார்ப்படுத்தி இருக்கலாம்.

ஆனால் இந்த நிமிடம் வரை இவற்றில் பல படிவங்கள் இறுதி செய்யப்படாமலேயே இருக்கிறது. இது போன்ற அனுமதிகள் பெற்று தான் ஜாப் வார்க்குக்கு பொருட்களை அனுப்பவேண்டும் என்று ஒரு விதியை வகுத்துவிட்டு, யாரிடம் அந்த அனுமதியை பெறவேண்டும் என்பதையும் சொல்லாமல் விட்டால், நேர்மையாக வணிகம் செய்ய விரும்பும் ஒருவன் என்ன செய்வான்? அரசு அறிவிக்கும் வரை எந்த வர்த்தகமும் செய்யாமல் காத்திருக்க வேண்டுமா?

சில சேவைகளுக்கு எதிர்மறை வரி (Reverse Charge Mechanism - RCM) விதிக்கப்பட்டு இருக்கிறது.  அதை முழுமையாக படித்து புரிந்துகொள்வதற்குள்ளாகவே ஜி‌எஸ்‌டி அமலாக்கும் தேதி வந்துவிட்டது. உதாரணமாக சரக்கு போக்குவரத்து (Freight - Goods Transport Agency - GTA) இது போன்ற எதிர் மறை வரி விதிப்பில் வரும். இது வணிகர்களுக்கு கூடுதல் சுமையாகும். இப்போதிருக்கும் 4.5% வரி இனி 5% வரியாக கூடுவதோடு மட்டுமல்லாமல் எதிர்மறை வரிக்கான கட்டுப்பாடுகளும் ஆவணங்களும் அதிகம். அதை எல்லாம் அவர் பராமரிக்க வேண்டும். இதை சமாளிக்க பொருட்களை யாரிடம் இருந்து வாங்குகிறோமோ (supplier) அவர்களையே சரக்குக்காக போக்குவரத்து கட்டணங்களை (freight Charges) செலுத்த சொல்ல வேண்டும். அதற்காக ஏற்கனவே இருக்கும் இருதரப்பு வியாபார வர்த்தக ஆவணங்களை மாற்ற வேண்டும்.

ஏற்கனவே கையில் இருக்கும் ஆர்டர்களை GST வரிக்கு தக்கபடி மாற்றி அமைக்க வேண்டும். அதில் இப்போது வரிக்கழிவும் (Input Tax Credit) கிடைப்பதால் விலை குறைவுக்கும் வாய்ப்பு உள்ளது. இதை இரு தரப்பு வணிகர்களும் விவாதித்து ஒரு விலைப்புள்ளிக்கு உடன்படிக்கை செய்து அதற்க்கு தக்கபடி ஆவணங்களை தயாராக்க வேண்டும்.

ஜாப் வர்க் போன்றவை இது வரை வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இனி அதுவும் வரி விதிப்பில் வரும். அதற்கு தக்கபடி முறையாக GST பதிவு பெற்ற ஜாப் வர்கர்களை தேடி அவர்களிடம் ஆர்டர் கொடுக்க வேண்டி இருக்கும். பதிவு செய்யப்படாத ஜாப் வார்கர்கள் எனில் கூடுதல் ஆவணங்களை பராமரிக்க வேண்டி இருக்கும். மேலும் எதிர்மறை வரியையும் வணிகர்களே செலுத்த வேண்டி இருக்கும்.

இது போன்ற பல பல நடைமுறை வழக்கங்களை செயல்படுத்தி ஒரு வணிகர் முழுமையாக GST முறைக்கு மாறுவதற்கான நியாயமான கால அவகாசம் வழங்கப்படவே இல்லை. அதை தான் செப்டம்பர் வரை தரவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

சுருக்கமாக ஜூலை தான் அமல் படுத்தப்படும் என்பதில் அரசு உறுதியாக இருந்திருந்தால் ஏப்ரல் இறுதியில் எல்லா விதிகளும் இறுதி செய்யப்பட்டு இருக்கவேண்டும். ஜூன் 18 தான் இறுதி செய்யப்பட்டது என்கையில் செப்டம்பர் முதல் தான் அமல்ப்படுத்தி இருக்கவேண்டும்.

வணிகர்கள் தாங்கள் அதை படித்து புரிந்துகொள்ளவும், தங்களது கட்டமைப்பை திருத்தி அமைக்கவும், தங்களது வணிக முறையை மாற்றி அமைக்கவும் அந்த கால அவகாசம் தேவை படும்.

அதை தான் அவசரம் அவசரமாக அரசு அமல்ப்படுத்துகிறது என எல்லோரும் வருத்தப்பட்டு சொன்னார்கள்.

இவை மட்டுமல்ல, பல்வேறு விதிகளையும் இன்னமும் அரசு இறுதி செய்யவில்லை. பல சூழ்நிலைகளுக்கான விளக்கங்களையும் அரசு இன்னும் தெளிவு படுத்தவில்லை. உதாரணமாக ஜூன் இறுதியில் உத்தர்பிரதேசத்தில் இருந்து அனுப்பப்பட பொருட்கள், ஜூலை மத்தியில் திருநெல்வேலியில் இருக்கும் ஒரு தொழிற்சாலைக்கு வருகிறது என வைத்துக்கொள்வோம், அவர்கள் எப்படி C Form கொடுக்க முடியும் என்கிற கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை?

எல்லா பொருட்களுக்கும் சேவைகளுக்கும் 180 நாட்களுக்குள் பணம் வழங்கினால் தான் உள்ளீடு வரியை எடுத்துக்கொள்ள முடியும் என்கிற விதி இருக்கிறது. அப்படியானால் பண பரிமாற்றங்களை பதிவு செய்ய வேண்டியிருக்குமா என்கிற கேள்விக்கும் பதில் இல்லை.

ஏற்றுமதி வகையில் எந்த ஒரு தெளிவையுமே அரசு கொடுக்கவில்லை. அது Letter of Undertaking / Bond போன்ற ஆவணங்கள் ஆகட்டும், ஏற்றுமதி செயல்முறை ஆகட்டும் எதிலும் ஒரு தெளிவில்லை.

அதனால் தானோ என்னவோ கஸ்டம்ஸ் சர்குலர் (Circular Number 26 of 2017) ஒன்றை வெளியிட்டு ஏற்றுமதி தொடர்பான மாற்றங்கள் எல்லாம் செப்டம்பர் 1 முதல் தான் அமலாகும் எனவும் அதுவரை பழைய முறையே தொடரும் என அறிவித்து இருக்கிறது. 

அவர்கள் புரிந்து கொண்ட அளவுக்கு கூட GST புரிந்து கொள்வில்லை என்பது தான் ஆதங்கம்.


ஏற்றுமதி தொடர்பான புதிய விதிமுறைகள், ஜாப் வர்க் தொடர்பான புதிய சிக்கல்கள் என பிற நடைமுறை விஷயங்கள் அடுத்த பதிவில் 

Saturday, July 1, 2017

ஜி.எஸ்.டி – எனது பார்வையில் – 7

ன்று மீண்டும் ஒரு புதியதொரு இந்தியா பிறந்திருப்பதாக குதூகலித்து கொண்டிருக்கிறது தேசம்.

ஜி. எஸ். டி வரி சீர்திருத்த நடவடிக்கை நேற்றிரவு முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டாயிற்று. அதற்கான பிரத்யேகமான விழா நேற்று நள்ளிரவு பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றதை நாடே விழித்திருந்து கண்டது.



சரி.. உண்மையில் இந்த ஜி.எஸ்.டி என்ன தான் தரப்போகிறது நமக்கு என்றால் எனக்கு சட்டென நினைவுக்கு வருவது நாலே நாலு விஷயங்கள் தான்.

அதை பற்றி சொல்வதற்கு முன், முதலில் ஏற்கனவே பலமுறை இணையதளங்களில் நான் சொல்லி இருப்பதை போல, நான் ஜி.எஸ்.டி என்கிற வரி சீர்திருத்தத்துக்கோ எல்லோரது வருவாய்ம் கணக்கில் காட்டப்படவேண்டும் என்பதற்கோ எதிரானவன் அல்ல. மாறாக இந்த வரி சீர்திருத்தத்தின் தாத்பரியம் புரியாமல் அரைகுறையாக விதிகளை வரையறை செய்து, சரியான உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் அமல்ப்படுத்தும் விதத்தை தான் எதிர்க்கிறேன்.

இனி அந்த நாலு விஷயம். கொஞ்சம் விரிவாகவே...

விஷயம் 1. சிறு குறு வணிகங்கள் பாதிக்கப்படும்... ஏன் பலரும் தொழிலைவிட்டே கூட போய்விட வேண்டி இருக்கும்.

CGST விதி 9(3) & 9(4) ஆகியவை சொல்வது என்னவென்றால், நீங்கள் ஏதாவது ஒரு பதிவு செய்யப்படாத நிறுவனத்திடம் (Unregistered Vendor) இருந்து பொருளை வாங்கினாலோ சேவைகளை பெற்று கொண்டாலோ அவர்களுக்கு பதிலாக நீங்கள் வரி கட்ட வேண்டும். (Reverse Charge Mechanism - RCM)

இதன் பலன்?

இப்போது நாம் சிறு குறு வணிகர்களிடம் (MSME Vendors) இருந்து பெற்று கொள்ளும் பொருட்கள் சேவைகளுக்கு வரி (Service Tax) இல்லை. இனி அதற்கும் வரி உண்டு. ஆனால் பொருட்களை விற்போருக்கு 75 லட்சம் ரூபாய் வரை ஆண்டு மொத்த வருவாய் (Annual Turn Over) இருந்தால் அவர்கள் முழு வரி செலுத்தும் கட்டாயம் இல்லை. அதேபோல சேவைகளை செய்வோருக்கு 20 லட்சம் ரூபாய் வரை ஆண்டு மொத்த வருவாய் இருந்தால் அவர்களுக்கும் முழு வரி செலுத்தும் கட்டாயம் இல்லை. அவர்கள் 20 லட்சம் ரூபாய் வரை தான் ஆண்டு மொத்த வருவாய் ஈட்டுகிறார்கள் எனில் அவர்கள் பதிவு செய்யவே தேவை இல்லை என்று அரசே அறிவித்து இருக்கிறது.

அவர்கள் பதிவு செய்ய விதி விலக்கு இருப்பதாலேயே அவர்களை வரி எய்ப்பாளர்கள் என சொல்ல முடியாது. அவர்கள் நேர்மையான வியாபாரம் செய்யக்கூடியவர்கள் தான். ஆனால் மொத்த வருவாய் மிக குறைவாக இருப்பதால் வரி கட்டமைப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், அதே நேரம் அவர்களிடம் இருந்து நீங்கள் பொருளோ சேவையோ பெற்றால் அவர்களுக்கு பதிலாக நீங்கள் வரி செலுத்தவேண்டும். அப்படி செலுத்திய வரியை நீங்கள் சில தருணங்களில் திரும்ப பெற்று கொள்ளவும் (ITC Adjustments) முடியும். ஆனால் அதற்காக நீங்கள் பராமரித்து வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் என சில உள்ளன.

பதிவு பெறாத வணிகர்கள் கொள்முதல் செய்யும் பொது செலுத்திய வரியை (Tax paid on Purchases) கழித்துக்கொள்ளும் வசதி (ITC Credit) இல்லாததால் அவர்களிடம் மட்டும் பொருட்களின் விலை கூடுதலாக இருக்கும். அதானாலும் கூட நீங்கள் அவர்களை தவிர்க்கவேண்டிய நிலை ஏற்படும்.

இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

எதற்கு வம்பு என பதிவு செய்த வணிகர்களிடம் மட்டுமே இனி வாங்க தொடங்குவீர்கள் இல்லையா? அது தானே எளிமை? அவர்கள் பில் போட்டு அதில் வரியும் போட்டு கொடுத்து விடுவார்கள். நீங்கள் பணம் செலுத்தினால் போதும். அந்த பில்லில் உள்ள வரி உங்களுக்கு வரிக்கழிவாக திரும்ப கிடைத்து விடும்.

சரி இதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன என தெரிகிறதா?

நாளாவட்டத்தில் சிறு குறு வணிகர்களின் வியாபாரம் தேய்ந்து தேய்ந்து ஒரு நிலையில் வணிகத்தை இழுத்து மூட வைத்து விடும்.

இப்படியான நிலையில் இருப்பவர்கள் யார் என பார்த்தால், சிறு ஹார்டுவர் கடைகள், மெக்கானிக்குகள், பிளம்பர்கள், லேத் வர்ஷாப்புகள்,  பிரிண்டிங் பிரஸ் வைத்திருப்போர், சின்ன சின்ன ஸ்டேஷனரி கடைகள் என பல ரகம். 

இப்போது நமக்கு தெரிந்தவர்கள், அல்லது மிக கஷ்டப்படுபவர்கள் என்பதற்காக நாம் அவர்களிடம் பொருட்களை வாங்கி அந்த வகையில் அவர்களுக்கு ஒரு உதவியாக இருக்க முடிகிறது. ஆனால் இனி ஜி.எஸ்.டியில் அப்படி இருந்தால் நமது தொழில் பாதிக்கப்படும் என்பதால் வலியோடு அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டி இருக்கிறது. இப்படி எல்லோரும் புறக்கணித்தால்???

இப்படியான வணிகர்கள் மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 27 கோடி பேர்.


விஷயம் 2 – விலைவாசி உயர்வு

சரக்கு சேவை வரி என எந்த நேரத்தில் மொழிபெயர்த்தார்களோ தெரியவில்லை, சரக்குகள் கையாளும் போக்குவரத்து வணிகங்களுக்கான வரியை (Tax on Freight) கூடுதலாக்கி விட்டிருக்கிறார்கள். லாரி வாடகை ஏறினால் அதன் மூலமாக கொண்டு செல்லப்படும் பொருட்களின் விலையும் கூடிவிடும் என்பது நிதர்சனம்.

தற்பொழுது லாரி வாடகைக்கு 4.5% வரி (15% tax on 30% Freight value) என்றிருப்பது இனி 5% வரியாக (5% tax on 100% Freight value) உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே சுங்க சாவடி கட்டண உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு போன்றவற்றுடன் இந்த வரியும் சேர்ந்து கொண்டால் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் பொருட்களின் சேரிட வரி கூடத்தானே செய்யும்?

மற்றுமொரு சுமையாக சேவை வரி இப்போதிருக்கும் 15% என்பதில் இருந்து ஜி.எஸ்.டியில் 18% என உயர்வதால் இதர சேவைகளும், கட்டணங்களும் தானாகவே 3% விலை உயர்வை நேரடியாக ஏற்கவேண்டி இருக்கும்.

ஆக மொத்தத்தில் லாரி மூலம் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கான விலை கூடுவதால், உணவுபொருட்கள் முதல் தொழிற்சாலை உதிரிபாகம் வரை எல்லா பொருட்களும் இப்போதிருக்கும் விலையிலிருந்து குறைந்தது 4.2% உயர்வு அடைய சாத்தியம் இருக்கிறது.

இதன் பிற்சேர்க்கை பலாபலனை எல்லாம் பொருட்களின் இறுதி உபயோகிப்பாளர் (End User) தான் தன் தலையில் சுமக்க வேண்டி இருக்கும் என்பதால் விலைவாசி உயர்வையும் அதன் தொடர்பான நிதிப்பற்றாக்குறையையும் ஒரு வருடத்துக்காவது சகித்து தான் ஆகவேண்டும்.

விஷயம் 3 – வேலையின்மை

தற்போது வெளி மாநிலங்களில் இருந்து ஒரு பொருளை வாங்கினால் அதற்காக நாம் செலுத்தும் வரியை வரிக்கழிவாக கழித்துக்கொள்ள முடியாது.

அதனால் பல நிறுவனங்களும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மத்திய சேமிப்பு கிடங்கை (Central Ware House) நிர்வகித்து அந்த கிடங்கிற்கு தங்களது உற்பத்தி பொருட்களை வரியின்றி அனுப்பி வைத்து (Stock Transfer), அந்தந்த மாநிலங்களில் விற்பனை செய்து வருகிறார்கள்.

இது போன்ற வேர் ஹவுசிங் துறைகளில் மட்டும் சுமார் 2 கோடி பேர் பணியாற்றி வருகிறார்கள்.

இனி அப்படியான வேர் ஹவுஸ்கள் தேவைப்படாது.

காரணம் ஜி.எஸ்.டி முறையில் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கும் பொருட்களுக்கும் கொள்முதல் வரிக்கழிவு (ITC - Input Tax Credit) உள்ளதால் நேரடியாக தொழில் நிறுவனங்களே கடைநிலை உபயோகிப்பாளருக்கு விற்பனை செய்துவிட முடியும்.  இதனால் வேர் ஹவுசிங் துறையில் மட்டும் 1 கோடி வேலை இழப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

முழுமையாக கணினி வழி பரிமாற்றங்களை உள்ளடக்கிய ஜி.எஸ்.டி பல வகைகளில் உதவிகரமாக இருந்தாலும், ஒவ்வொரு நிறுவனத்திலும் இருக்கும் பணியாளர் எண்ணிக்கைகளை குறைக்கின்ற காரணியாகவும் அது இனி இருக்கக்கூடும்.

சென்னைக்கு அருகிலுள்ள ஒரு பெரும் பன்னாட்டு நிறுவனத்தின் கொள்முதல் & விற்பனை துறையில் (SCM) தற்போது இருக்கும் 46 பணியாளர்களுக்கு பதில் இனி 17 பேர் போதும் என நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக அதில் பணியாற்றும் என் நண்பர் மகிழ்ச்சியாக சொன்னபோது, அந்த ஒரு நிறுவனத்திலேயே 29 பேர் வேலை இழக்கிறார்கள் என்றால் இந்தியா முழுதும் எத்தனை பேர் வேலை இழப்பார்கள் என்கிற மணக்கணக்கில் நான் வருத்தத்தோடு அமிழ்ந்து போனேன்.

விஷயம் 4 – தனி நபர் பொருளாதாரம் சரிவு

ஒரு பக்கம் ஏற்கனவே சொன்னது போல விலைவாசி உயர்வு, சேவை வரி உயர்வு, கட்டண உயர்வு போன்றவை.

மறுபுறம் தொழிற்சாலைகளில் வேலை இழப்பு, ஆட்குறைப்பு ஆகியவை

இன்னொரு புறம் கஷ்டப்பட்டு கடன் வாங்கி மிகுந்த சிரமத்துக்கிடையில் சொந்தமாக தொழில் செய்யும் சிறு குறு வணிகர்களின் தொழிலில் இனி ஏற்படப்போகும் நிலையின்மை

இவை எல்லாம் சேர்கையில் தனி நபர் வருமானம் என்பது மிக வேகமாக சரிய தொடங்குவதையும், கடன்கள் கூடுவதையும், கடன்களை அடைக்க வழியின்றி குடும்பங்கள் தவிக்க போவதையும், வங்கிகளின் கட்டண உயர்வால் சிக்குண்டு தவிக்கும் சிறு குறு வணிகர்களையும், பெரும் தொழில் நிறுவனங்களால் கைவிடப்படும் தனி நபர் தொழில் முனைவோர்களையும், பெரு நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சும் ஒரு வணிக தளத்தில் நிற்கவும் இயலாமல் இழுத்து மூடப்படும் சுயதொழில்களையும் மனக்கண்ணால் பார்க்கமுடிக்கிறது.

இது தனி நபர் பொருளாதாரம் சார்ந்த சரிவு என மட்டும் கொள்ளாமல், ட்டு மொத்த சமூகம் சார்ந்த பெரும் பாதிப்பாக பார்த்தோமானால், வேலை இழந்த மக்கள் தங்கள் வாழ்வாதாராத்துக்காக என்ன என்ன செய்ய போகிறார்கள் என்பதை எல்லாம் நினைத்தால் வருத்தமாகவும் கொஞ்சம் அச்சமாகவும் இருக்கிறது.

நான் மேலே சொன்னவை எனக்கு தோன்றிய அதீத அச்சத்தின் காரணமான ஒரு பெரும் எதிர்பிம்பமாக கூட இருக்கலாம். ஆனால் அவை எதுவும் சாத்தியமற்றவை என ஒதுக்கித்தள்ள முடியாதவை என்பதையும் நீங்கள் மெல்ல மெல்ல ஒப்புக்கொள்வீர்கள்.

முதல் பத்தியில் போகிற போக்கில் நான் 'அரசு அரை குறையாக இதை அமல்ப்படுத்துகிறது.. யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் நடந்து கொள்கிறது' என்றெல்லாம் சொன்னேன் அல்லவா? அதை பற்றி அடுத்த பதிவில்..

Wednesday, April 5, 2017

ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் – 5


டந்த மார்ச் 31 ஆம் தேதி நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மிக மிக முக்கியமானது. ஏனெனில் இந்திய தொழில் வளர்ச்சியை பாதிக்கும்/தீர்மானிக்கும் முடிவுகளை அன்று அவர்கள் எடுத்திருந்தார்கள். அது என்ன அவ்வளவு முக்கியமான முடிவுகள்? ஒண்ணொண்ணா பார்ப்போமா?

முதலாவதாக, ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த 5 விதிகளை (Invoice Rules; Payment Rules; Refund Rules; Registration Rules; Return Rules) சிறு சிறு மாற்றங்களுடன் இறுதி செய்திருக்கிறார்கள்.

அடுத்ததாக மீதமுள்ள 4 விதிகளை (Input Tax Credit Rules; Transitional Provision Rules; Valuation of Supply Rules; Composition Scheme Rules) கொள்கை அளவில் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்த கவுன்சில் கூட்டம் நடக்கும் பொழுது, இந்த 4 விதிகளும் விரிவாக விவாதிக்கப்பட்டு, ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால் அவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதி செய்யப்படும்.

மூன்றாவது முடிவு தான் மிக முக்கியமானது. அதாவது அடுத்த கூட்டம் மே மாதம் 18, 19 ஆகிய தேதிகளில் ஸ்ரீநகரில் நடக்கும் என்பது. அதில் என்ன அவ்வளவு முக்கியத்துவம் என்கிறீர்களா?

பிரதமர் மோடியும் அவரது கட்சியினரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டியை அமல்ப்படுத்தியே ஆகவேண்டும் என முழங்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் கவுன்சிலோ ஏப்ரல் மாதத்தில் கூடுவதாக இல்லை. அடுத்த கூட்டம் மே 18,19 தான். அதில் விவாதிக்கப்படும் திருத்தங்கள் இறுதி செய்யப்பட்டு அனேகமாக மே 25க்குள் பாராளுமன்றத்தில் தாக்கல்செய்யப்படும் என நினைக்கிறேன். அது விவாதிக்கப்பட்டு வெற்றிபெற அனேகமாக மே 30 ஆகலாம்.

அதன் பின்னர் இறுதி செய்யப்பட்ட அந்த விதிகளின் அடிப்படையில் 32 மாநிலங்களும் புதிதாக சட்டங்கள் இயற்றி தங்கள் சட்டசபைகளில் சட்டத்தை தாக்கல் செய்து வெற்றி பெறச்செய்து, குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றால் தான் சட்டம் முழுமை பெறும். இது முடிய எப்படியும் ஜூன் 25 ஆகலாம்.

இப்படி இருக்க ஜூலை 1 ல் அமல்ப்படுத்துவது என்பது நடக்காத காரியம். அரசுக்கே அப்படி ஒரு எண்ணம் இல்லை. இருந்திருந்தால் ஏப்ரல் மாதம் முழுக்க சும்மா இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

தொழில் வர்த்தக நிறுவனங்களை பொறுத்தவரை, இப்போதைக்கு குருடர்கள் தடவிப்பார்த்த யானை போல தான் இருக்கிறது ஜி.எஸ்.டி. முழுமையாக எந்த விவரமும் இறுதி செய்யப்படவில்லை. அப்படி ஏதேனும் இறுதி என சொல்லப்பட்டு அதன் அடிப்படையில் தங்கள் வியாபாரத்தை கணக்கிட்டு ஒரு முடிவுக்கு வரும் முன்னர் அந்தஇறுதிசெய்யப்பட்ட சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்து மீண்டும் குழப்பி விடுகிறார்கள்.

சரி, அரசு பல வகையான பிரச்சனைகளையும் விரிவாக ஆராய்ந்து வருவதால் பல பல திருத்தங்களை தேவைக்கு ஏற்ப செய்துகொண்டே வருகிறது. அதில் தவறு இல்லை. இதில் தொழில் நிறுவனங்களுக்கு என்ன பிரச்சனை?

தொழில் நிறுவனங்களுக்கு இப்போதைக்கு ஜி.எஸ்.டி தங்கள் தொழிலை எப்படி பாதிக்கும் என்பதே புரியவில்லை. எல்லா சட்டங்களும் இறுதி செய்யப்பட்டால் தான் ஒரு தெளிவான பிக்சர் கிடைக்கும். அதன் பின் அது தங்கள் தொழிலுக்கு சாதகமா பாதகமா என ஆராய்ந்து அதற்கு தகுந்த படி தங்களின் வியாபார திட்டங்களை வகுக்க வேண்டும்.

இது தவிர, தங்களின் கணக்குகளை இரு வகையாக பிரிக்கவேண்டும். ஜி.எஸ்.டிக்கு முன், ஜி.எஸ்.டிக்கு பின். இரு வகையாக பிரித்தால் தான் தெளிவான வரி தாக்கல் செய்யமுடியும். ஏதேனும் சிறு பிழை இருந்தாலும் ஜி.எஸ்.டி சட்டப்படிகைதுநடவடிக்கையே எடுக்க முடியும்.

எனவே தொழில் நிறுவனங்கள், எல்லா சட்ட விதிகளையும் அறிந்து அதன் அடிப்படையில் தான் தங்களது கணக்கு வழக்குகளை நிர்வகிக்க முடியும். அரசே ஜூன் மத்தியில் தான் எல்லாவற்றையும் இறுதி செய்யும் எனில், அதன்பின் தங்களது கணக்கியல் மென்பொருளை (Billing/Accounting Software) மேம்படுத்தி அது தொடர்பாக தங்களது பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து முழுமையாக தயாராக எப்படியும் குறைந்தது மூன்று மாதங்களேனும் தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர். எனவே செப்டம்பர் 1 ஆம் தேதி தான் அமலாக வாய்ப்பு உள்ளது. ஆனாலும் அரசு ஏனோ ஜூலை 1 முதல் அமல்ப்படுத்த கட்டாயப்படுத்தி வருகிறது.

இப்போதைய வரி முறையில் இருந்து ஜி.எஸ்.டி வரிமுறைக்கு மாறுகையில் தற்போது கையிலிருக்கும் ஸ்டாக் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டி இருக்கும். ஜூலையா செப்டம்பரா என தெரியாத நிலையில் கொள்முதல் திட்டமிடுதலை கூட முறையாக செய்யமுடியாத அவல நிலைக்கு எல்லாவரையும் தள்ளி இருக்கிறது முன்னேற்பாடு இல்லாத இவ்வரசு.

இப்போது நாமே நமது வரியை தாக்கல் செய்ய முடியும். ஆனால் ஜி.எஸ்.டி முறையில் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட வரி ஆளுனர்கள் (GSP - GST Service Providers) தான் நம் சார்பாக வரி செலுத்த வேண்டி வரும். அவர்களிடம் நாம் நமது கணக்கு விவரங்களை கொடுத்தால் போதும். மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இதற்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனித்தனி கட்டணம் இருக்கும். இந்த கூடுதல் செலவை சமாளிக்க தங்களிடம் இருக்கும் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்கவேண்டிய நிலையில் தொழிற்சாலைகள் இருக்கின்றன. மேலும் அதிக பணியாளர்கள் ஜி.எஸ்.டிக்கு தேவை இல்லை. கணிப்பொறி மென்பொருள் (ERP) பக்காவாக இருந்தால் அதிலிருந்து ரிப்போர்ட் எடுத்து ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்யும் நிறுவனத்துக்கு கொடுக்க என ஒன்றிரண்டு பேர் இருந்தாலே போதும். எனவே வணிகவியல் பட்டதாரிகளின் வேலை இழப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

இது தவிர சிறு குறு வியாபாரிகளின் நிலைமை தான் மிக மோசம். ஜி.எஸ்.டியினால் அதிகம் பாதிக்கப்படப்போவது அவர்கள் தான். அதாவது, சாதாரண வியாபாரிகள் தங்கள் பொருட்களை வாங்கிய போது செலுத்திய வரியினை கழித்து (Set-Off) விற்பனை செய்வதால் விலை குறைவாக இருக்கும். ஆனால் ரூ 50 லட்சத்துக்கும் கீழ் டர்ன் ஓவர் இருக்கும் சிறு வியாபாரிகள்கம்போசைட்முறையில் வரி செலுத்துவோர் என கொள்வதால், அவர்களால் செலுத்திய வரியை கழித்துக்கொள்ளும் வசதி இல்லை. மேலும் 1% வரி விதித்து விற்பனை செய்யவேண்டும். எனவே விலைவாசி அபரிமிதமாக ஏறும். அல்லது தொழிற் நிறுவனங்கள், சிறு குறு வியாபாரிகளிடம் இருந்து பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டி வரும். ஏனெனில் பெரும் வியாபாரிகளிடமிருந்து வாங்கும் பொருட்களை விட சிறு வியாபாரிகளிடம் இருந்து வாங்கும் பொருட்களுக்கு 18% கொள்முதல் வரியும் 1% விற்பனை வரியும் சேர்த்து அதிக விலை கொடுக்க வேண்டி வரும். மேலும் அப்படி விலை கொடுத்து வாங்கினாலும் அந்த வரியை கழித்துக்கொள்ளும் வசதி (ITC Set Off) இல்லாததால் யாரும் சிறு குறு வியாபாரிகளிடம் வாங்க மாட்டார்கள். இது நாளாவட்டத்தில் சிறு குறு வியாபாரிகளை முற்றிலுமாக ஒழித்து விடக்கூடும்.

இப்போது வெளி மாநில உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கும் பொருட்களுக்கு வரிக்கழிவு வசதி இல்லாததால், அவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் வேர் ஹவுஸ்/குடோன் வைத்து அதற்கு தங்கள் பொருட்களை ஸ்டாக் டிரான்ஸ்ஃபர் முறையில் வரியின்றி மாற்றி அங்கிருந்து உள்ளூர் வரி செலுத்தி விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் பல பல நிறுவனங்களின் வேர்ஹவுஸ் / குடோன்கள் மூலம் பல லட்சக்கணக்கான பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

ஜி.எஸ்.டி சட்டம் வெளிமாநில பொருட்களுக்கும் வரிக்கழிவு தருவதால் இனி இப்படியான வேர் ஹவுஸ் தேவை இல்லை. தொழிற்சாலைகளே நேரடியாக இந்தியா முழுதும் விற்றுக்கொள்ள முடியும். இதனால் ஏற்படக்கூடிய வேலை இழப்பு எவ்வளவு என்பதை கணக்கிட்டு பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. சிறு குறு தொழில் மற்றும் இது போன்ற துணை தொழில்களின் அழிவு ஆகியவை, அடுத்த இரண்டொரு வருடங்களில் மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மை இந்தியாவை பெரும் சிக்கலுக்குள்ளாக்கினாலும் ஆச்சர்யம் இல்லை.

தொழில் நிறுவனங்களுக்கு எளிமையான முறையாக இருக்கும் ஜி.எஸ்.டி சமூக பொருளாதார நோக்கில் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

உற்பத்தி மாநிலங்களுக்கு குறைந்த வரி வருவாயும் உபயோகிப்பாளர் மாநிலத்துக்கு அதிக வரி வருவாயும் கிடைப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி வரி முறை நம்மை போல வளர்ச்சியை நோக்கிய மாநிலங்களுக்கான பெருத்த தண்டனையாக வந்திருக்கிறது. அதை தான் மாண்புமிகு தமிழக முதல்வராக இருந்த புரட்சித்தலைவி ஜெயல்லிதா அவர்கள் தெளிவாக குறிப்பிட்டு ஜி.எஸ்.டி வரி விதிப்பை முழுமையாக எதிர்த்தார். மேலும் இந்தியா முழுதும் அமலானாலும் தமிழகம் அமல்ப்படுத்தாது என சொல்லியதற்கும் நியாயமான காரணங்கள் உள்ளன. அவர் மறைந்துவிட்ட நிலையில் இப்போதிருக்கும் அரசு ஜி.எஸ்.டி வரிவிதிப்பை ஆர்வத்தோடு அமல்ப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது.





Printfriendly