Showing posts with label Electricity. Show all posts
Showing posts with label Electricity. Show all posts

Tuesday, November 27, 2012

தமிழக சூரிய மின்சக்தி கொள்கை - அலசல்



மிழ்நாடு அரசு சமீபத்தில் தனது சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்டிருக்கிறது. இப்போது அந்த கொள்கையின் சிறப்புகள் பற்றியும், பெருமைகள் பற்றியும் மிக பிரபலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. எங்கே யாரை சந்தித்தாலும், வீட்டுக்கு சோலார் போட்டாச்சா என்கிற ஒரு கேள்வியும், அதன் அடி நாதமாக சோலார் போடலைன்னா உன் வாழ்க்கையே இருண்டு விடும் டைப் விசாரிப்புகளும் கேட்க தொடங்கிவிட்டன.
தமிழகத்தில் இப்போது நிலவி வரும் மிக மோசமான மின் வெட்டு பிரச்சனையை முதல்வரை தவிர தமிழகத்தின் அனைத்து குடிமக்களும் நன்கு அறிவீர்கள். எனவே அதை பற்றி மீண்டும் மீண்டும் விரிவாக விளக்கத்தேவையில்லை என கருதுகிறேன். இது பற்றி முழுமையாக விவரமாக அறிந்திராதவர்கள் (பணி நிமித்தமாகவோ வேறு காரணங்களாலோ பிற மாநிலங்கள் / நாடுகளில் வாழும் தமிழர்கள்) “இருண்ட தமிழகம்” எனும் எனது பதிவை படித்தால் ஓரளவு விஷயங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும்.
தமிழகத்தில் இப்போதைய மின் நிலைமை – தேவையும் உற்பத்தியும்:
தமிழக அரசு வெளியிட்டிருக்கும் கொள்கை குறிப்பின் படி, தமிழகத்தின்  மின் நிலையை மிக சுருக்கமாக சொல்லவேண்டுமானால்:
இது வரை தமிழகத்தில் ஒரு நாளில் பதிவான அதிக பட்ச மின் உபயோகம் என்பது கடந்த 19.07.2011 ல் 10859 மெ.வா தான். (மின் கொள்கை – பக்கம் 10) இதர நாட்களில் இதை விட குறைவு என்பது தானாகவே நாம் புரிந்துகொள்ளக்கூடியது தான்.
தமிழக அரசுக்கு சொந்தமான மின் நிலையங்கள், மற்றும் இதர வழிகள் மூலம் நீர், அனல், கரி, வாயு மூலமான மின்சார உற்பத்தி வழியாக (மரபு வழி மின் உற்பத்தி) ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யக்கூடிய மின் சக்தி – 10364.5 மெ.வா. (மின் கொள்கை – பக்கம் 13). அதாவது, எல்லா மின் நிலையங்களும் முறையாக இயங்கினால் நமக்குள்ள மின் தட்டுப்பாடு என்பது வெறும் 500 மெ.வா தான்.
இது தவிர மரபு சாரா எரிசக்தி மூலமான மின்சார உற்பத்தி, அதாவது காற்று, சூரிய ஒளி, சாண எரிவாயு, சிறிய நீர் மின் நிலையங்கள், கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழக அரசால் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தின் அளவு – 7,572.06 மெ.வா (மின் கொள்கை – பக்கம் 13)
ஆகமொத்தம் தமிழகத்தால் கிட்டத்தட்ட 17936.56 மெ.வா மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அதற்கான கட்டமைப்புக்கள் இருக்கின்றன. இதுவரையும் அப்படி தான் அவை செயல்பட்டும் வந்திருக்கின்றன.
இதில் உறுதியாக உற்பத்தி ஆகக்கூடிய (மரபு வழி மின்சார உற்பத்தி) 10,364.5 மெ.வா என்பதே தமிழகத்தின் மின் தேவைக்கு போதுமானது.
இதனால் தான் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் வரையிலும் அப்போதைய தமிழக அரசு சென்னையில் 2 மணிநேரமும் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் 4 மணிநேரமும் மின் வெட்டை அமல் செய்து சீரான மின்சாரத்தை எல்லோருக்கும் வழங்கியது. அதிலும் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால், எப்போதெல்லாம் மின் வெட்டு என்பது முறையாக அறிக்கையாக வெளியிடப்பட்டு அதன் படி முறையாக மின் வெட்டு அமல்செய்யப்பட்டது. இது மின் வெட்டு நேரத்தை கணக்கிட்டு நமது பணிகளை திட்டமிட்டுக்கொள்ள பெரும் உதவியாக இருந்தது.
ஏன் இந்த அளவுக்கு மின் வெட்டு?
நாம் முன்பே பார்த்ததை போல, இப்போதைய மின் தேவை என்பது கிட்டத்தட்ட 11000 மெ.வா என்கிற நிலையில் இருக்கிறது. அரசின் உற்பத்தி திறன் 10364 மெ. வா என்கிற அளவில் இருக்கிறது. ஆனால் உற்பத்தி ஆவதென்னவோ 7000 மெ.வா அளவு தான். இதன் காரணமாக 3000-4000 மெ.வா மின் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதை சரிக்கட்ட தான் மின் வெட்டு அமலில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த 3000-4000 மெ வா மின் தட்டுப்பாடை சமன் செய்ய சென்னையில் 2 மணிநேரமும் பிற மாவட்டங்களில் 4 மணிநேரமும் மின் வெட்டு செய்வது; உயர் அழுத்த மின் விநியோகத்தில் 40% குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. (மின் கொள்கை – பக்கம் 27) ஆனால் நிஜத்தில் நிலைமை இன்னமும் மோசம்.
இப்போதைய நிலைமை என்னவென்றால், தென் தமிழகத்தில் 16 மணிநேரம் வரையும், பிற மாவட்டங்களில் 12 மணிநேரம் வரையும், சென்னையில் 3 மணிநேரம் வரையும் மின்வெட்டு உள்ளது. மேலும் எந்த நேரத்தில் மின் தடை, எந்த நேரத்தில் மின் வசதி என்பதெல்லாம் தெளிவாக வரையறை செய்யப்படாமல், நினைத்த நேரத்தில் மின் வெட்டு அமலாகி மக்களின் வாழ்க்கையே மெல்ல மெல்ல நாசமாகி வருகிறது.
கடந்த ஆட்சியில் எந்த காரணம் கொண்டும் இரவில் மின் தடை இல்லாமல் பார்த்துக்கொள்ளப்பட்ட நிலை மாறி, இப்போது இரவில் ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை மின்வெட்டு அமலில் இருக்கிறது. இதனால் ஏற்பட்ட தூக்கமின்மை மற்றும் அதன் பாதிப்புகளான வாகன விபத்துக்கள், சமூக கட்டமைப்பு சீர்குலைவு என்பவை எல்லாம் பலரும் அனுபவிப்பதே!
மேலும் தட்டுப்பாட்டை போக்க தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கும் நடவடிக்கையிலும் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதெல்லாம் சரி, 10364 மெ.வா மின் உற்பத்தி செய்யும் திறன் உடைய தமிழக அரசு ஏன் 7000 சொச்சம் மெ.வா மட்டுமே உற்பத்தி செய்கிறது? ஏன் அது முழுமையான உற்பத்தி அளவை எட்டவில்லை? கடந்த ஆண்டு வரை முழு மின் உற்பத்தி ஆகி வந்த நிலையில் இப்போது ஏன் இந்த திடீர் உற்பத்தி குறைவு?
பல மின் நிலையங்கள் பழுதடைந்து கிடக்கின்றன. அவற்றை அரசு செப்பனிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது என மின்வாரிய நண்பர்கள் சொல்கிறார்கள்.
கடந்த ஆட்சி, எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு 4000 மெ.வா மின் உற்பத்திக்கான புதிய மின் திட்டங்களை அமைத்து வந்தது.
இன்றைய சூழலில், தமிழக மின் உற்பத்தி நிலையங்களை சீரமைத்து, புதிய மின் திட்டங்களை விரைவுபடுத்தினாலே, 14000 மெ.வா மின் உற்பத்தி கிடைகும் (மரபு சாரா மின் உற்பத்தியான 7000 மெ.வா தனி. அது இதில் சேர்க்கப்படவில்லை!)
ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது அரசு புதிதாக அறிவித்திருப்பது தான் தமிழக சூரிய மின் சக்தி கொள்கை 2012.
சூரிய மின் சக்தி கொள்கை என்ன சொல்கிறது?


சுருக்கமாக சொல்வதானால், வரும் 2015ம் ஆண்டுக்குள்ளாக 3000 மெ.வா மின்சாரத்தை சூரிய ஒளி மின் உற்பத்தி மூலம் எட்டுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அதை எட்டும் வகையில் தொழிற்சாலைகள், வீடுகள் உட்பட அனைத்து மின் உபயோகிப்பாளர்களும் 6% க்கு குறையாத மின் உற்பத்தியை தாங்களே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 2013 ம் ஆண்டு டிசம்பர் வரை இது 3% என்கிற அளவிலும் அதன் பின் ஜனவரி 2014 முதல் 6% என்கிற அளவிலும் இந்த குறைந்த பட்ச உற்பத்தி அளவு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது (தமிழக சூரிய ஒளி கொள்கை – பக்கம் 8 & 9)
இதை நிறுவுவதற்கான செலவில் 30% சதவிகிதம் வரை அரசு மானியம் கிடைக்கும் என்றும், இந்த திட்டத்தை நிறுவி கொடுப்பதற்கான முகவர்கள் எல்லா மாவட்டங்களுக்கும் அமர்த்தப்படுவார்கள் எனவும், அவர்களிடம் அரசு மானியத்தை கழித்து விட்டு மீதி தொகையை செலுத்தினால் போதும் எனவும் அரசு சொல்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு 300 நாட்களுக்கு குறையாமல் சூரிய ஒளி வசதி கிடைப்பதால், ஆண்டு முழுமைக்குமான மின் தேவையை அவரவர்களே அவரவர் இல்லங்களில் ஏற்படுத்திக்கொள்ளலாம். அரசை இனி எதிர்பார்க்க தேவையில்லை. எனவே இது ஒரு நல்ல அற்புதமான திட்டம் என பல தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்கள்.
ஒரு சாதாரண குடும்பத்தினரின் வீட்டுக்கு 1 கி.வா மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சூரிய மின் உற்பத்தி அமைப்பு என்பது கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் ஆகிறது. இதில் 30% மானியம் போக மீதமுள்ள தொகைக்கு வங்கி கடனும் கிடைக்க வழி இருக்கிறது. எனவே எல்லோரும் அவரவர் வீடுகளுக்கு சூரிய மின் சக்தியை அமைப்பதில் ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியமில்லை.
இந்த மானியத்தை மாநில அரசு வழங்குகிறதா, மத்திய அரசு வழங்குகிறதா என்பது பற்றி இன்னமும் தெளிவு இல்லை. மத்திய அரசு ‘ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய ஒளி திட்டம்’ (JNNSM-Jawaharlal Nehru National Solar Mission) மூலம் நாடு முழுவதும் ஏற்கனவே இப்படி ஒரு திட்டத்தை பல ஆண்டுகளாக அமல் செய்து வருகிறது. அதில் 30% சதவீத மானியத்தை அவர்கள் தருகிறார்கள்.
அந்த திட்டத்தை தான் தமிழக அரசு தனது திட்டம் போல அறிவித்து, மத்திய அரசிடமிருந்து மானியத்தை வாங்கி கொடுத்து தனது திட்டம் போல அறிவிக்கிறதா என்பது பற்றியும் தெளிவான விவரங்கள் இல்லை. தமிழ்க அரசு தனது கையில் இருந்து இந்த மானியத்தை வழங்க இருக்கிறதா என்பதும் புரியவில்லை. ஏனெனில் சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட திருத்த நிதி நிலை அறிக்கையில் இந்த மானியத்துக்கான ஒதுக்கீடு என எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
மத்திய அரசு நேரடியாக மக்களுக்கு வழங்கி வரும் மானியத்தை இடையில் நுழைந்து தமிழ்க அரசு வாங்கி மக்களுக்கு தன் பெயரில் தர இருப்பதாக சொல்லப்படும் செய்திகளில் எந்த அளவு உண்மை இருக்கிறது எனவும் தெரியவில்லை.
எனது பார்வை:
மக்களின் வரிப்பணத்தைக்கொண்டு மிகப்பெரும் மின் நிலையங்களை தமிழக அரசு அமைத்துள்ளது. அங்கே பணியாற்றுவோருக்கெல்லாம் மக்களின் வரிப்பணத்திலிருந்து தான் ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் மின் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டு இருக்கிறது. பழுதடைந்திருக்கும் மின் நிலையங்களை சீராக்கி முழு மின் உற்பத்தியை எட்டினாலே தமிழ்கத்துக்கு தேவையான மின் வசதி கிடைத்து விடும்.
இதையெல்லாம் விட்டுவிட்டு சூரிய மின் சக்தியை வீடுகளில் அமைப்பதை கட்டாயப்படுத்துவது சரியல்ல.
நாம் வரியும் கட்டி, அதில் மின் நிலையமும் அமைத்து அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தையெல்லாம் பெரும் தொழிற்சாலைகளுக்கு கொடுத்துவிட்டு, மின்வெட்டால் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருப்பதும், நமக்கு மின்சாரம் தேவையென்றால் நாமே செலவு செய்து வீட்டுக்கு மின் வசதி செய்துகொள்ளவேண்டும் என்பதும், சரியான அரசு நிர்வாகமாகவோ, சிறந்த முடிவாகவோ எனக்கு தோன்றவில்லை.
இத்தனை மின் நிலையங்கள் ஊழியர்கள் கருவிகள் எல்லாம் மக்கள் பணத்தில் அமைந்திருப்பதே அந்த மக்களுக்கு முறையான மின் வசதியை செய்து கொடுப்பதற்கு தானே? தொழிற்சாலைகளுக்கு அரசு மின்சாரம் தரும், மக்களுக்கு அவர்களே மின்சாரம் உற்பத்தி செய்துகொள்ளவேண்டும் என்கிற முடிவு நியாயமானதாக படவில்லை.


சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய விரும்புபவர்கள் தாமாக அதை செய்து கொள்வதில் மாற்றுக்கருத்து இல்லை. 2 லட்சம் ரூபாய் செலவு செய்து சூரிய மின் உற்பத்தி வசதியை அமைத்து, அதை 5 ஆண்டுக்கொருமுறை மின்கலம் மாற்றி பராமரிக்கும் திறனுள்ளவர்கள் அதை அமைத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.
ஆனால் அரசு, தனது மின் உற்பத்தியை மேம்படுத்த முயற்சிக்காமல், மக்கள் மின் உற்பத்தியை செய்யவேண்டும் என கட்டாயப்படுத்துவது நியாயமானதாகவும் தோன்றவில்லை.
நல்லவேளையாக தமிழகத்தில் மக்கள் நலன் கருதும் கட்சிகள் இல்லாததால், நாம் அரசின் முடிவுக்கு கட்டுப்படவேண்டியதாகிறது.
வாருங்கள். வீட்டுக்கூரையில் சோலார் பேனல்கள் அமைத்து நமக்கு நாமே மின் உற்பத்தி செய்து கொள்வோம். கூடுதல் இணைப்பாக சாலையோர சூரிய பேனல்களின் வெயில் கூச்சொளி மூலம் வாகன ஓட்டிகளை விபத்துக்குள்ளாக்கவும் செய்யலாம்!
 
ஆவணங்கள்:

Thursday, August 2, 2012

இருண்டது இந்தியா


காலப்பெருவெளிப்பயணத்தில் மனிதன் பெட்ரோல், பிளாஸ்டிக், தொலைபேசி, இணையம், மின்சாரம் ஆகியவற்றை சார்ந்து வாழுபவனாக மாறிவிட்டான். இவை இல்லாத நாட்கள் வெறுமையாக உணரப்படுகின்றன.

கடந்த ஜூலை 30ம் தேதிஅதிகாலை 2 மணியளவில் வட இந்தியா முழுமையும் சட்டென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல மணிநேரமாக மின்வசதி இல்லை. இதன் காரணமாக மருத்துவமனை, வீடு, அலுவலகம், ரயில்வசதி, என எல்லா அத்தியாவசிய வசதிகளும் முடங்கிவிட்டன. சில சுரங்கங்களில் ஊழியர்கள் சிக்கிக்கொண்ட பரிதாபமும் நிகழ்ந்தது. 

கிட்டத்தட்ட 14 மாநிலங்கள் மொத்தமாக மின்வசதியின்றி இருண்டன. சற்று நடவடிக்கை எடுத்து மின் வினியோகம் சீராக துவங்கிய பின் மறுநாள், அதாவது ஜூலை 31ம் தேதி மதியம் ஒரு மணியளவில் மீண்டும் மின்வசதி துண்டித்ததில் 20 மாநிலங்கள் அவஸ்தைக்குள்ளாகின.


(இந்தியாவில் மின் வசதி துண்டிக்கப்பட்ட மாநிலங்கள் - மெரூன் கலர்)

மொத்தமாக வட இந்தியா இருண்டதில் ஆடிப்போன அரசாங்கம் அவசரம் அவசரமாக பூட்டானில் இருந்து கொஞ்சம் மின்சாரத்தை பெற்று டெல்லியிலுள்ள முக்கிய பிரமுகர்கள் பகுதிக்கு மட்டும் மின்வசதி செய்துகொண்டனர்.

வல்லரசாக முயற்சிசெய்துகொண்டிருக்கும் இந்தியாவில் ஏன் இந்த நிலை! 

கொஞ்சம் டெக்னிக்கலான விஷயம் மட்டுமல்ல சுற்றுச்சூழல் சம்மந்தமான விஷயமும் தான் அது!

இந்தியாவில் மின் பகிர்மானம் 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு வகையிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின்சாரத்துக்கு ஆங்கிலத்தில் கரண்ட் என பெயர் வைத்ததில் இருந்தே அது நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வஸ்து என்பதை உணரலாம். மின்சாரத்தை மொத்தமாக சேமிக்க முடியாது தடுத்து நிறுத்த முடியாது. உற்பத்தியாகும் பகுதியில் இருந்து உபயோகமாகும் பகுதி வரைக்கும் அது பயணித்துக்கொண்டே தான் இருக்கும்.அப்படி உபயோகிக்கப்படாதபோது மாற்றுவழியை அதுவே தேடிக்கொள்ளும். இது தான் அதன் பண்பு.

இந்தியாவில் உற்பத்தியாகும் அனைத்து மின்சாரத்தையும் நாடு முழுதும் கொண்டு செல்வதற்காகவும், மாநிலங்களுக்கு உரிய பங்கை பகிர்ந்துகொடுப்பதற்காகவும் தேசிய அளவில் கிரிட் என சொல்லப்படும் மின் கடத்தும் வழித்தடம் நிறுவப்பட்டு இருக்கிறது. இதை தனியாக Power Grid Corporation of India எனும் அரசு நிறுவனம் நிர்வகித்து வருகிறது. 

இந்த கிரிட்டை வடக்கு, கிழக்கு, வடகிழக்கு, மேற்கு, தெற்கு என ஐந்து பகுதிகளாக பிரித்திருக்கிறார்கள். இதில் இன்னொரு விசேஷம், தெற்கு பகுதி தனியாகவும், இதர நான்கு பகுதிகளை தனியாகவும் இணைத்து இருக்கிறார்கள். இதற்கான காரணம் நாம் பெருமை கொள்ள தக்கது தான்!

தென்னிந்தியாவில் தான் அதிகமான மின் உற்பத்தி நிலையங்கள் இருக்கின்றன. அனல், புனல், அணு, காற்று, மாற்று என எல்லா வகையிலான மின் உற்பத்தியும் இங்கே செய்யப்படுகின்றது. மாநில அரசுகள் தங்களுக்கென்று தனியாக மின் உற்பத்தி நிலையங்களை வைத்திருப்பதால், மாநில அரசு மின் வாரியங்கள் சார்பாக தனியாக சிறப்பான மின் பகிர்மான வழித்தடம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது தவிர தனியாக தான் தேசிய கிரிட் தென் இந்தியாவில் இருக்கிறது. அதாவது, மாநில வழித்தடத்தில் உபயோகிக்கப்படும் மின்சாரத்தை தவிர சிறு பகுதி தேசிய கிரிட்டில் இணைக்கப்படுகிறது.

ஆனால் மற்ற பகுதிகளில் அப்படி அல்ல! தேசிய கிரிட் தான் வலிமையானது. மாநில மின் வழித்தடம் குறைவானது. இதனால் இதர நான்கு பகுதிகளும் தேசிய கிரிட்டை நம்பி இருக்கையில், தென்பகுதிமட்டும் அந்தந்த மாநில மின்வாரிய நெட்வொர்க்கை நம்பி இருக்கிறது. இது தான் மின் பகிர்மான அமைப்பு!

சுற்று சுழல் காரணிகள் 

புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதிப்பு, வன இழப்பு, நகரமயமாதல், வேதியியல் மாற்றங்கள், இயந்திரமயமாதல், வாகனபெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவிலும் உலக அளவிலும் பருவநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். இதன் காரணமாக எல்-நினோபோன்ற வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வழக்கமாக மழை பொழியும் இடங்களில் மாறுதல் ஏற்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றங்களால் சீனா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பெருமழையும் இந்தியா போன்ற நாடுகளில் கடும் வெப்பமும் வறட்சியும் இந்த ஆண்டு ஏற்பட்டு இருக்கிறது.

பொதுவாக குளிர்பிரதேசமாக கருதப்பட்ட வட இந்திய மாநிலங்களில் இந்த ஆண்டு அளவுக்கதிகமான வெப்பம் வாட்டி வறுத்து எடுத்ததன் காரணமாக, இயல்பான வெப்பநிலையை கொண்டுவருவதற்காக மிக அதிக அளவில் மின்சாரம் உபயோகிக்கப்பட்டது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப், பீஹார், டெல்லி போன்ற மாநிலங்கள் மிக மிக அதிக அளவில் மின்சாரத்தை உறிஞ்ச ஆரம்பித்ததில், தேசிய கிரிட்டின் மின் தொகுப்பு முழுமையாக வட இந்திய பகுதியை நோக்கி விரைவாக பயணிக்க தொடங்கியது.


நம் வீட்டில் திடீரென்று அதிக மின் அழுத்தம் வந்தால் என்ன ஆகும்? மீட்டர் பாக்ஸ் அருகில் இருக்கும் ஃப்யூஸ் பட்டெனெ டிரிப் ஆகி மின்சாரம் தானாகவே துண்டித்துவிடும். அதுபோலவே, வட இந்திய பகுதியில் அளவுக்கு அதிகமான மின் உறிஞ்சல் இருந்ததால், அந்த பகுதியை நோக்கி மொத்த மின்சாரமும் பயணித்ததால், பினாவில் இருந்து குவாலியர் செல்லும் மின் வழித்தடத்தில், ஆக்ராவுக்கும் பரேலிக்கும் இடையே கிரிட்டில் ட்ரிப் ஆனது. இதன் காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஏற்கனவே நாம் பார்த்தது போல, மின்சாரம் ஓடிக்கொண்டே இருக்கும் வஸ்து என்பதால், மின் துண்டிப்பு ஏற்பட்டவுடன் அது பின்நோக்கி பயணிக்கத்துவங்கி மின் உற்பத்தி நிலையங்களில் சிறு சிறு டிரிப்பாக மாறத்துவங்கியது. இதன் காரணமாக 38 மின் உற்பத்தி நிலையங்களில் உடனடியாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

மொத்தமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டதில் கிட்டத்தட்ட 20 மாநிலங்கள் இருளில் மூழ்கின. ரயில் சேவைகள் வட இந்தியா முழுதும் நிறுத்தப்பட்டன. மொத்தமாக இந்தியா ஸ்தம்பித்து விட்டது.

அவசரம் அவசரமாக ட்ரிப் ஆன இடங்கனை கண்டு பிடித்து சரி செய்து 14 மணிநேரங்களுக்குள் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டு விட்டது. ஆனால் அதற்கு அடுத்த நாளே, ஜூலை 31 மதியம் ஒரு மணி அளவில், ஆக்ராவில் தாஜ்மஹல் அருகில் ட்ரிப் ஆனதில் மீண்டும் வட இந்தியா முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

நடவடிக்கைகள் 

இப்போது நிலைமை சீராக்கப்பட்டு இருக்கிறது, மின்சாரத்தை சிக்கனமாக உபயோகிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது, அதிகமாக மின்சாரத்தை உறிஞ்சும் மாநிலங்களுக்கும் உரிய அறிவுரைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.


இப்படியான நிலை வரக்கூடும் என முன்பே அரசு எதிர்பார்த்து தான், வரும் 2017 ம் ஆண்டுக்குள் 76 கிகா வாட்ஸ் கூடுதல் மின் உற்பத்தி செய்யப்படவேண்டும் என திட்டமிட்டு அதற்காக 400 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் திட்டங்களை பிரதமர் அவர்கள் ஆரம்பித்து இருந்தார். எனினும், மிக பழமையான டெக்னாலஜி, அதிக நாட்களான கிரிட், மிக அதிக அளவிலான மின் உபயோகம், அதிகரிக்கப்படாத மின் உற்பத்தி ஆகிய காரணங்களால் இந்த பெரும் இருள் நம்மை சூழ்ந்துகொண்டது.

தென் பகுதியை பொறுத்தவரை, நாம் தேசிய கிரிட்டை நம்பி இல்லை. மாநில மின் விநியோக அமைப்பு சிறப்பாக இருப்பதால் நாம் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் இயல்பாக இருந்துகொண்டு இருக்கிறோம்.

எனினும், தமிழகத்தின் மின் தேவைக்கு தக்கபடியான மின் உற்பத்தி தற்போது இல்லாததால் நமக்கும் மின்வெட்டு இருந்துகொண்டு தான் இருக்கிறது. இது குறித்த தனியான ‘இருண்ட தமிழகம்’ எனும் பதிவை ஏற்கனவே நீங்கள் படித்திருக்க கூடும்.

பருவ நிலை மாற்றங்களின் பெரு விளைவுகள் பற்றி நாம் இன்னமும் அக்கறையோ கவலையோ கொள்ளவில்லை. சுற்றுசூழல் சிந்தனையே இல்லாமல் உலகை சீரழித்து வருகிறோம். இதை பற்றிய அக்கறை இனியேனும் நமக்கு வேண்டும் என தெளிவு படுத்தும் நிகழ்வாகவே நான் இதை காண்கிறேன்!

நாம் எதிர்கொண்டு நிற்கும் வறட்சி மிக சாதாரணமானது அல்ல, அதன் விளைவுகள் மிக பயங்கரமானவை, அந்த நிலைக்கு நீங்களும், நானும், நாம் எல்லாவரும் ஒரு காரணம் என்பது மட்டும் தான் நம்மை அறைகின்ற உண்மை!

Printfriendly