Showing posts with label Government. Show all posts
Showing posts with label Government. Show all posts

Saturday, October 7, 2017

ஜி.எஸ்.டி – குழப்பத்திலிருந்து சிக்கலுக்கு!

நேற்றைய தினம் நடந்த 22ஆம் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. சிறு / குறு தொழில் செய்வோரும் ஏற்றுமதி வர்த்தகம் செய்வோரும் படும் இன்னல்களை என்னைப்போன்றோர் நாயாய் பேயாய் கத்திய பின், இப்போது தான் அது அரசின் செவிகளுக்கு எட்டி, அதன் அடிப்படையில் அவர்களுக்கெல்லாம் ஒரு நிவாரணம் வழங்கும் வகையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக சந்தோஷம் வந்தாலும், அதெல்லாம் அந்த முடிவுகளை அலசி ஆராய்கையில் வடிந்துபோனது.

உண்மையில் சிறு குறு வணிகர்களுக்கும் ஏற்றுமதி செய்வோருக்கும் நல்லது செய்வதாக சொல்லி, கிட்டத்தட்ட பெரிய இடியை தான் இறக்கி இருக்கிறது ஜி.எஸ்.டி கவுன்சில்.

அத்தகைய இடிகளில் இருந்து சில குறிப்பிடத்தக்க ஒன்றிரண்டை மட்டும் இங்கே பார்ப்போம்:

1. ரூ.1.50 கோடி வரை வர்த்தகம் செய்யும் வணிகர்கள் இனி மாதம் தோறும் வரி செலுத்த தேவை இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரி செலுத்தினால் போதும்:

இந்த அறிவிப்பு அவர்களுக்கான சலுகையாக பலராலும் பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டது. நானும் கூட முதலில் அப்படி தான் நினைத்தேன். ஆனால் அதில் உள்ள சிக்கல்களை பார்த்தபோது அவர்களை பற்றி பரிதாபப்படவே முடிந்தது.

தற்போது ரூ.20 லட்சம் வரை வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவோர் ரிவர்ஸ் சார்ஜ் (RCM) முறையில் வரியை அவர்கள் சார்பாக அடைக்கவேண்டும் என்கிற ஒரு நிபந்தனை இருப்பதால் பலரும் பதிவு செய்யப்படாத வணிகர்களை புறக்கணிக்க தொடங்கி அவர்களது தொழில் தேய்பிறையாகி வருவது நீங்கள் அறிந்ததே.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 4 கோடி பேர் இருக்கலாம். இது குறைவாக இருக்கிறதே என அரசு சங்கடப்பட்டதோ என்னவோ, நேற்றைய தினம் புதிதாக மற்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.அது தான் ரூ.1.50 கோடி வரை வர்த்தகம் செய்வோருக்கு காலாண்டு வரி தாக்கல் முறை. இதில் என்ன பிரச்சனை?

ஜி.எஸ்.டியில் நாம் வாங்கும் பொருட்களுக்கான வரியை நாம் செலுத்தவேண்டிய வரிக்கு கழித்துக்கொள்ளலாம் (Set off). இது முன்பு போல மெனுவல் எண்டிரி ஆக அல்லாமல், ஆட்டோமாடிக் எண்டிரி ஆக ஜி.எஸ்.டியில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அதாவது நமக்கு பொருட்களை விற்பவர் அந்த விவரங்களை (Outward Supplies) GSTR-1 ரிட்டர்னில் தாக்கல் செய்தால் தான் அது நமது GSTR-2 (Inward Supplies) ரிட்டர்னில் ஆடோமாடிக்காக வரும். அந்த வரியை நாம் எடுத்து உபயோகித்துக்கொள்ளலாம்.

நேற்று அரசு அறிவித்த புதிய விதியின் கீழ், நாம் பொருட்களை வாங்கிய வர்த்தகர் பதிவு பெற்றவராக இருந்தாலும், அவர் இப்போது போல மாதாமாதம் வரி தாக்கல் செய்ய தேவை இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரி தாக்கல் செய்தால் போதும்.

இதில் சிக்கல் என்னவென்றால், நாம் அப்படி பட்ட வணிகர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி இருந்தால், அவர்கள் வரி தாக்கல் செய்யும் வரை நமக்கு ITC கிடைக்காது. இது போன்ற வணிகர்களிடம் இருந்து வாங்கும் பொருட்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து, அதன் வரி வருவாய் கூடுதலாக இருந்தால், அதை நாம் உபயோகப்படுத்த 4 மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை நமது வரியை நாம் பணம் கட்டி தான் செலுத்த வேண்டி இருக்கும்.

இதன் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பது உங்களால் ஊகிக்கக்கூடியதே! அதே தான்!  இது போன்ற வணிகர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதை நாம் மெல்ல மெல்ல குறைத்துக்கொண்டு மிகப்பெரிய நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே பொருட்களை வாங்க தொடங்குவோம். அப்படியாக 20 லட்சம் முதல் 1.50 கோடி வரை வர்த்தகம் செய்யும் வணிகர்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இப்போ எண்ணிக்கை கணிசமாக உயருமில்லையா? அரசு அதை தான் எதிர்ப்பார்க்கிறதோ என்னவோ?

4 மாதங்கள் காத்திருப்பதற்கு பதிலாக நாமே ஏன் மாதாமாதம் GSTR-2 ரிட்டர்னில் மெனுவலாக எண்டிரி செய்து ITC எடுத்துக்கொள்ள கூடாது என நீங்கள் கேட்கலாம்.  அப்படி செய்தாலும் ஓகே தான். ஆனால் 4 மாதம் கழித்து அது ஆட்டோமேடிக்காக வரும்போது அதில் இருந்து நாம் வரியை எடுத்த பில்களை எல்லாம் தேடி தேடி நீக்கவேண்டி இருக்கும். இது பெரிய நொச்சு பிடிச்ச வேலை. அதற்கு நீங்கள் தயார் எனில், உங்களிடம் இது போன்ற வர்த்தகர்கள் குறைவு எனில் இந்த முறையை பின்பற்றலாம். பொதுவாக அதிக வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு இது தலைவலியாக முடியும். எனவே சிறு குறு வணிகர்களின் நிலை கஷ்டம் தான்.
******
2. எக்ஸ்போர்ட் ரீஃபண்ட் உடனடியாக வழங்க நடவடிக்கை. ஈ-வாலட் மூலம் கொடுக்கப்படும்.

போன பதிவில் எக்ஸ்போர்ட் செய்வோர் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், அவர்களது முதலீடெல்லாம் முடங்கி கிடப்பதையும் படித்திருப்பீர்கள். இப்போது அப்படி முடங்கி கிடக்கும் முதலீட்டை அவர்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக நேற்றைய கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 



ஆனால் இதிலும் சந்தோஷத்துக்கு பதிலாக சங்கடமே வந்து தொலைக்கிறது.

அதாவது ஜூலை மாத எக்ஸ்போர்ட் ரீபண்டுக்கு ஏற்கனவே விண்ணப்பித்து காத்துக்கிடப்பவர்களுக்கு ரீபண்டு உடனே கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சொல்கிறது. ஆனால் ரீபண்டு அப்ளை செய்வதற்கான வசதியே இன்று வரை ஜி‌.எஸ்.டி போர்டலில் கொண்டுவரவில்லை. இப்படி இருக்க, யாருமே அப்ளை செய்திருக்க முடியாத ஒரு விஷயத்தை அரசு தருவதாக சொல்வது இடிக்கிறது என்பது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், அப்படி கொடுக்கப்படும் ரீபண்ட் முன்பெல்லாம் செக்காக தருவது மாறி இப்போது ஈ-வாலட் முறையில் தான் வழங்கப்படும் என்றும் அதை ஜி.எஸ்.டி வரி செலுத்த பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் சொல்லி இருப்பது மற்றொரு இடி.

ஜி.எஸ்.டி வரி செலுத்தும் நிலையே வராதவர்கள் தான் தங்களிடம் இருக்கும் ITC ஐ காசாக்கும் வகையில் ரீபண்டுக்கு அப்ளை செய்வார்கள். வரி செலுத்தும் நிலை இருந்தால் அதை வைத்து வரியை செலுத்திவிட்டு போய்ட்டே இருப்பார்கள்.

தங்களிடம் மிச்சமிருக்கும் ITC ஐ, எக்ஸ்போர்ட்டுக்கு கட்டிவிட்டு அதை ரீபண்டாக்க காசாக வாங்கிக்கொண்டால் தான் முதலீடு கைக்கு வரும். ஆனால் அரசு அதை வாலட்டில் வரவு வைக்குமாம் அதை வைத்து நாம் வரி கட்டிக்கொள்ளலாமாம் என்றால் எந்த வரியை கட்டுவது?

சுருக்கமாக சொல்வதானால் ITC லெட்ஜரில் இருந்து Cash லெட்ஜருக்கு அந்த தொகை மாறும். இதை தவிர தம்படி பிரயோஜனம் கிடையாது நமக்கு. மொத்தத்தில் முடக்கப்பட்ட ITC முடக்கப்பட்டதாகவே இருக்கும்.

இந்த முடிவு நமக்கு மறைமுகமாக சொல்லும் ஒரு கொசுறு செய்தி என்னவென்றால், அரசிடம் ரீபண்ட் வழங்க பணம் இல்லையாமே என்கிற ஊகத்தை உண்மை என நிறுவி இருக்கிறது அரசு!
******
3. ரூ. 50,000 க்கு மேல் நகை வாங்கினால், அப்படி வாங்குபவரின் பான் & ஆதார் எண்ணை கொடுக்கவேண்டியதில்லை.

ஊழல் & கருப்பு பணத்துக்கு எதிரான போராக தனது நிதி சீர்திருத்தங்களை வர்ணித்துக்கொண்டிருக்கும் அரசு தான் இந்த முடிவை அறிவித்து இருக்கிறது. ஆச்சரியமாயில்லை?

இனி யார் வேண்டுமானாலும் தன்னிடம் இருக்கும் கணக்கில் வராத பணத்தை தங்கமாக மாற்றி கொள்ளலாம். பணமாக வாங்கப்படும் லஞ்சம் இனி தங்கமாக வாங்கிக்கொள்ள எந்த தடையும் இல்லை. யாரிடம் வேண்டுமானாலும் பணத்தை கொடுத்து தங்கம் வாங்கிக்கொள்ளலாம். யாரும் எந்த கேள்வியும் கேட்கமாட்டார்கள். வாங்குவோர் தம்மை பற்றிய எந்த குறிப்பையும் கொடுக்கவும் தேவை இல்லை. ஏற்கனவே நகைக்கடைகள் பில் இல்லாமலும் வரி கட்டாமலும் தான் பெரும்பாலான வணிகத்தையே செய்துவருகிறார்கள் என்பதால், அவர்களுக்கும் சிக்கல் இல்லை.

எனவே, கருப்புப்பணத்தை நிலமாக பொருளாக முதலீடு செய்து வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மற்றும் ஒரு வாய்ப்பாக தங்கமும் செய்து தந்திருக்கிறது அரசு.  இதனாலும் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் இருக்கப்போவதில்லை. தங்கத்தின் விலை மேலும் ஏறும், ஊழல் கருப்புப்பணம் இனி பயமின்றி நடமாடும், அதிகாரிகள் இனி தைரியமாக லஞ்சம் கேட்பார்கள் (என்ன, அதை பணமாக அல்லாமல் தங்கமாக கொடுக்க வேண்டி இருக்கும். அவ்வளவு தான்)
******
சரி, நேற்றைய கூட்டத்தில் நல்ல முடிவுகளே எடுக்கப்படலையா என்கிற கேள்வியும் இருக்கிறது. எடுத்து இருக்கிறார்கள். சில விஷயங்கள் அருமையான நடவடிக்கை. சிறிய அளவில் இருந்தாலும், அது ஒரு குறிப்பிட்டவர்களுக்கு உதவி செய்யக்கூடியவை. அவை சுருக்கமாக:

1.   பிரிண்டிங் பணிகளுக்கான வரி 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. (விரைவில் எதிர்வரும் தேர்தல் காலங்களில் இது அரசியல் கட்சிகளுக்கு உதவியாக இருக்கும். நிறைய போஸ்டர் பேனர் அடிக்கவேண்டி இருக்கும் நிலையில் 7% வரி குறைப்பு என்பது மிகப்பெரிய வரம்)

2.   ரிவர்ஸ் சார்ஜ் முறையில் ஒரு பகுதிக்கு, அதாவது செக்ஷன் 9(4) க்கு மட்டும், விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பெரும் தலைவலியின் ஒரு பகுதி தீர்ந்தது.

3.   அரசு பணிகளுக்கான வர்க்ஸ் காண்டிராக்ட் (Works Contract) முறைக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இது அரசுக்கு செய்யப்படும் பணிகளுக்கு மட்டும் தான். மற்ற நிறுவனங்களுக்கு கிடையாது. ஆனாலும் இது நல்ல விஷயம் தான். இதன் மூலம் அரசின் கட்டுமான திட்டங்களுக்கான செலவு குறையும்

4.   சிறு வணிகர்கள், அதாவது ரூ. 1.50 கோடி வரை வர்த்தகம் செய்வோர், தாங்கள் வாங்கும் அட்வான்ஸ் தொகைக்கு இனிமேல் வரி கட்ட தேவை இல்லை. இது அவர்களது வர்க்கிங் கேப்பிட்டலை தக்கவைத்துக்கொள்ள உதவும்.

5.   ஈ-வே பில் எனப்படும் ரோடு பெர்மிட் முறை 2018 ஏப்ரல் மாதம் வரை ஒத்தி வைக்கப்படுகிறது.

6.   Advance Authorisation லைசன்ஸ் இருந்தால் அவர்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு IGST வரி கட்ட தேவை இல்லை.

7.   மெர்சண்ட் எக்ஸ்போர்ட்டுக்கு பொருட்கள் வாங்கும்போது இப்போது HSN படி உள்ள வரி கட்டவேண்டும் என்று இருப்பதற்கு பதிலாக வெறும் 0.1% வரி கட்டினால் போதும் என்பது உண்மையிலேயே ஒரு போனான்சா தான்.

இப்படி சில.

ஆனால் நான் எதிர்பார்த்த பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்பது தான் பெரிய வருத்தம்.

பார்ப்போம், அவை அடுத்த கூட்டத்திலாவது விவாதிக்கப்படுகிறதா என.

மொத்தத்தில் இதுவரை ஜி.எஸ்.டி என்பது குழப்பம் என்கிற நிலைமையில் இருந்தது.. இப்போது குழப்பம் ஓரளவுக்கு தீர்ந்துவிட்டது. ஆனால் நடைமுறை படுத்துவதிலும், தொழிலை முன்னெடுத்து செல்வதிலும் பெரும் சிக்கல் இருக்கும் வகையில் சில ரூல்ஸ் இருப்பது தான் ஆபத்து.

இதையும் அரசு கவனத்தில் எடுத்து, விதிமுறைகளை எளிமைப்படுத்தும் என நம்புகிறேன்.


நம்பிக்கை... அதுதானே எல்லாம்?

******
Reference:

1.  Press realease on 22nd GST Council Meeting dated 06.10.2017
2.  Press note export packages.
3.  GST rates approved by GST council on 06/10/2017

Tuesday, February 16, 2016

அத்திக்கடவு அவிநாசி குடிநீர் திட்டம் – வரலாறு

சமீபகாலமாக மீடியாவில் வந்துகொண்டிருக்கும் செய்தி திருப்பூரில் அத்திக்கடவு அவிநாசி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி நடைபெற்று வரும் உண்ணாவிரதம், கலெக்டர் அலுவலகம் முற்றுகை போன்றவை தான்.

பல்வேறு கட்சிகளும் இந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என கோரிக்கை விடுப்பதும், தமிழக அரசு இன்றைய இடைக்கால நிதி நிலை அறிக்கையில் கூட இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்து இருப்பதும், இந்த திட்டத்தின் தேர்தல் கால முக்கியத்துவத்தை நமக்கு சொல்கின்றன. 

அது என்ன திட்டம்?

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி நதி மேட்டுப்பாளையம் அன்னூர் வழியாக பவானியை அடைந்து காவிரியில் கலக்கிறது. நீலகிரி மலைவாசஸ்தலம் ஆகையால் நல்ல நீர் வளம். ஆண்டில் பல மாதங்கள் பவானியில் நீர் இருக்கும்.

மேல் பவானி அணையிலிருந்து இறங்கி வரும் பவானி நதி அத்திக்கடவு கடந்து பில்லூர் டேமுக்கு வருகிறது. அங்கிருந்து மேட்டுப்பாளையம் சிறுமுகை வழியாக பயணித்து சத்தியமங்கலம் அருகில் உள்ள பவானி சாகர் அணைக்கு வருகிறது. அங்கிருந்து கோபிச்செட்டிபாளயம் வழியாக பவானி நகரில் காவிரியுடன் கலக்கிறது. இது தான் பவானியின் பயண குறிப்பு.

இன்னொரு புறம், கோவை கிழக்கு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் வறண்ட பகுதிகளாக இருக்கின்றன. கோவை நகருக்கு கேரளாவிலிருந்து சிறுவாணி நதி மூலம் குடிநீர் சப்ளை இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. எனவே கோவைக்கு கூடுதலாக ஒரு குடிநீர் திட்டம் தேவையாக இருந்தது.

திருப்பூரை பொறுத்தவரை நொய்யல் நதி இருந்தாலும் அது நம்ம கூவம் போல பாழ்பட்டு கிடக்கிறது (உபயம் சாய பட்டறைகளின் கழிவுகள்). இது இப்போதைய நிலை. ஆனாலும் நொய்யல் முன்பிருந்தே குடிநீர் ஆதாரத்துக்கான நதியாக இருக்கவில்லை. ஆக, திருப்பூர் பகுதிக்கும் நீர் ஆதாரத்தை அதிகரிப்பதற்காக ஒரு நீர் திட்டம் தேவையாக இருந்தது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு 1957 ஆம் ஆண்டில் ஒரு திட்டத்தை உருவாக்கியது. அதாவது நான் முன்பே சொன்ன பவானி நதியில் இருந்து ஒரு கால்வாய் வெட்டி அதை திருப்பூர் நோக்கி கொண்டு வருவது.

தெளிவாக சொல்வதானால், பில்லூர் அணையில் இருந்து பவானி சாகர் செல்லும் வழியில் தனியாக ஒரு கால்வாயை வெட்டி நீரை திருப்பி விட்டு நேராக அன்னூர் கொண்டு வருவது. அங்கிருந்து அந்த கால்வாயை ரெண்டாக பிரித்து ஒன்றை கருமத்தம்பட்டி, அவிநாசி வழியாக  திருப்பூருக்கும் இன்னொன்றை புளியம்பட்டி, நம்பியூர் வழியாக பெருந்துறைக்கும் கொண்டு போவது.

Thanks: The HINDU


இதன் பலன்கள்??

133.4 கி.மீ பயணிக்கும் இந்த கால்வாய் நீரால் அந்த பகுதியிலுள்ள நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

48 ஏரிகள், 213 குளங்களை இந்த கால்வாய் வழியாக வரும் பவானி நீர் நிறைக்கும்.

இதன் மூலம் 25000 ஏக்கர் பாசன நிலம் பயன்பெறும்.

நன்றாக கவனிக்கவும்..

இந்த நீரை அப்படியே குடிநீருக்காக அனுப்ப போவது இல்லை. திட்டப்படி 20 நாட்களுக்கு தினசரி 750 கன அடி நீர் இந்த வழியாக அனுப்பப்படும். மொத்தம் 12 டி.எம்.சி தண்ணீர். இந்த நீர் அந்த வழியே பயணிப்பதாலும் சிறு குளங்களை நிரப்புவதாலும் அந்த பகுதியிலுள்ள ‘நிலத்தடி நீர் மட்டம் உயரச்செய்து’ அதன் மூலம் கிணற்று நீர் பாசனத்தை அதிகாரிக்கும். அதனால் தான் இந்த திட்டத்தை Athikadavu-Avinashi Ground Water Recharging Scheme என பெயரிட்டனர்.

1957 முதல் 1967 வரை அவினாசி சட்டமன்ற உறுபினராக இருந்த திரு.மாரப்பகவுண்டர் அவர்கள் தான், அன்றைய முதல்வர் திரு. காமராஜரிடம் அவினாசி திட்டத்தை வலியுறுத்தி எற்றுக்கொள்ள வைத்தவர். 1957 இல் வந்த ஐடியா மெல்ல மெல்ல விரிவாகி அதன் முதற்கட்ட பணிகள் எல்லாம் முடிவடைந்ததும் 1972 இல் அப்போதைய திமுக அரசால் கொள்கை ரீதியாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன் பின் எமெர்ஜென்சி அது இது என முன்னெடுக்க முடியாமல் முடங்கியது. பின்னர் 1977 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஒன்றும் நகரவேயில்லை.

1989 இல் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் விட்ட இடத்திலிருந்து தொடங்க முயற்சித்தனர். ஆனால் 1991 இல் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் அதிமுக ஆட்சி ஜெ. தலைமையில் வந்து, ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் முடங்கியது.

பின்னர், 1996-2001 திமுக ஆட்சியில் இந்த திட்டத்தின் முதல் காரணியான கோவைக்கு குடிநீர் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக செயல்பாட்டுக்கு வந்தது. பவானி அத்திக்கடவு திட்டம் என்கிற அந்த திட்டம் தான் இன்றும் கோவைக்கான குடிநீர் ஆதாரம். மூன்று வாரங்களுக்கு ஒருமுறை என்றிருந்த கோவை குடிநீர் சப்ளை இப்போது வாரா வாரம் என ஆனதற்கு இந்த அத்திக்கடவு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததே காரணம்.

2001-2006 அதிமுக ஆட்சியில் மீண்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.

திரும்ப 2006-2011 திமுக ஆட்சியில் இந்த திட்டத்திற்கான அனுமதி கோரி மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய சுற்று சூழல் துறையின் அனுமதியும், நீர் வள ஆதார அமைச்சகத்தின் அனுமதியும் கேட்கப்பட்டது. திட்டத்தின் அனைத்து நடவடிக்கையும் அந்த அனுமதிக்காக காத்திருக்க தொடங்கியது.

அதே வேளையில் இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக கோவையின் கூடுதல் குடிநீர் தேவையை ஈடுகட்டும் திட்டத்துக்கு என அத்திக்கடவு பேஸ் II திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பணி முழுமையாக முடிவடைந்து சரவணம்பட்டி அருகில் பிரதான சென்டிரல் வாட்டர் டேங்க்  கட்டப்பட்டு, கோவை நகர் முழுமையும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு திட்டம் முழு செயல்பாட்டுக்கு வரும் வேளையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2011 இல் அதிமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது.

கோவை மக்களுக்கு குடிநீருக்கு இருந்த கஷ்டத்தை உணர்ந்த கோவைக்காரரான அப்போதைய அமைச்சர் திரு எஸ்.பி.வேலுமணி “ஏற்கனவே அத்திக்கடவு திட்டத்தின் இரண்டாம் கட்டம் முடிவடைந்துவிட்டதால் விரைவில் திறக்கப்படும்” என கேஷுவலாக பேட்டி கொடுத்து வைக்க, என்ன காரணத்தாலோ இரண்டொரு நாளில் அவரது பதவி பறி போனது. 


மேலும், கோவை நகரின் பல பகுதிகளுக்கு ஏற்கனவே இருந்த அத்திக்கடவு குடிநீர் விநியோகம் முடக்கி வைக்கப்பட்டது. அதை எதிர்த்து ஆங்காங்கே பொதுமக்கள் ரோட்டில் இறங்கி அதிமுக அரசுக்கு எதிராக போராட தொடங்கினார்கள். 

அதோடு இந்த திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. 

இனி வரும் தேர்தலில் திமுக வென்றால் தான் அத்திக்கடவு திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயல்பாட்டுக்கு வந்து கோவைக்கு தினசரி குடிநீர் விநியோகம் கிடைக்கும் என்கிற நிலை தான் இப்போது. கடந்த ஐந்து ஆண்டுகாலமாக மக்கள் பணத்தில் கட்டப்பட்ட அந்த திட்டம் மொத்தமாக முடங்கி வீணாக கிடக்கிறது.

இதற்கிடையில், மத்திய அரசுக்கு அனுப்பப்பட கருத்துருவில் சில திருத்தங்கள் விளக்கங்கள் கேட்டு 2012 இல் தமிழக அரசுக்கு கடிதம் வந்திருந்தது. அதற்கான திருத்திய கருத்துருவை இன்று வரை மாண்புமிகு அம்மா தலைமையிலான தமிழக அரசு அனுப்பாததால் திட்டம் கிடப்பில் கிடக்கிறது.

உலக வங்கி, நபார்டு, ஜப்பான் வங்கி ஆகியவை இந்த திட்டத்துக்காக நிதி உதவி அளிக்க தயாராக இருப்பதாக 2006-2011 திமுக ஆட்சியிலேயே அறிவித்திருப்பதால், ரூ. 1862 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதில் எந்த சிக்கலும் இல்லை.

சுமார் 1400 ஏக்கர் நிலமும், 20 ஏக்கர் வனப்பகுதியும் கையகப்படுத்தவேண்டி இருந்தாலும், அதற்கான எந்த முயற்சியையும் இப்போதைய தமிழக அரசு மேற்கொண்டதாக தெரியவில்லை.

கடந்த 2015 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்த திரு. ஆர். ஒத்திசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு போட்டு, திருத்திய கருத்துருவை தமிழக அரசு அனுப்ப வேண்டும் எனவும், திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கில், நீதிபதிகள் திரு எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோரை கொண்ட பெஞ்ச், தமிழக பொதுப்பணி துறைக்கு கடந்த மார்ச் 22 ஆம் தேதி போட்ட உத்தரவில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் கேட்டு இருந்தார்கள். அதிலும் எந்த முன்னேற்றமும் இன்று வரை இல்லை.

இந்த நிலையில் தான் திட்டத்தின் மூல கருவான அவிநாசிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை தொடங்க வேண்டும் என திருப்பூரில் போராட்டம் தொடங்கி இருக்கிறது. (எப்படியும் திமுக வந்து கோவைக்கு குடிநீர் தர திட்டத்தை தொடங்குவார்கள், அதோடு இதையும் கேட்டு பெறலாம் என நினைத்தார்களோ என்னவோ, தேர்தல் சமயமாக பார்த்து போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்)

போராட்டத்தின் தீவிரத்தை அறிந்த தமிழக அரசு, இன்றைய தினம், திட்டம் தொடங்க ஆவன செய்யப்படும் என்றொரு ஒற்றை வரி வாக்குறுதியை தந்ததுமே, அவர்கள் இந்த திட்டத்தை முடக்கியதை எல்லாம் மறந்து, அம்மா புகழ் பாடி பாராட்டி கொண்டாடும் இணைய மனிதர்கள் தான் ஆச்சரிய ‘படுத்துகிறார்கள்’.

இது வழக்கமானது தானே?

Reference:




Saturday, December 5, 2015

புயல் மழையும் புரட்சி தலைவியும்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க.....

தமிழகத்தில் சமீபகாலமாக இது தான் அடிக்கடி காதில் விழும் வாக்கியம். தமிழகத்தின் இயங்கு சக்தியே அம்மா தான் என்பது இங்கு எழுதப்படாத விதி. மெத்த படித்த ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகளும், அமைச்சர்களும் கூட தினசரி என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிப்பவர் அம்மா தான் என்பதாக உள்ளது நிலைமை.  அரிசி ரேஷனில் இடுவதில் தொடங்கி அணை நிரம்பினால் திறந்துவிடுவது வரை அம்மா ஆணைக்கிணங்கவே இங்கு எதுவும் செயல்பாடு கொள்கிறது.

அதில் தவறொன்றும் இல்லை. முதல்வர் புரட்சி தலைவி முகத்துக்காக தான் கடந்த 2011 ஆம் ஆண்டும் அதற்கு முன்பும் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு விழுந்தது. அவர் ஆட்சி செய்வதற்காக யாரை எந்த பதவியில் அமர்த்தினாலும் அது ஒரு பெரிய பொருட்டல்ல, யாருக்கும். அம்மா முதல்வராக இருந்தாலே போதும், நிர்வாகம் சிறப்பாக இருக்கும். இரும்புக்கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதாகட்டும், தவறுகள் மீது தயவு தாட்சணியம் இன்றி நடவடிக்கை எடுப்பதாக இருக்கட்டும், மக்களுக்கு தாயுள்ளத்துடன் உதவி செய்வதாகட்டும், முற்போக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதாகட்டும், அதிகார வர்க்கத்தை கட்டுக்குள் வைத்து நலத்திட்டங்களை செயல்படுத்துவதாகட்டும்.. எல்லாவற்றிலும் மிளிர்ந்து ஒரு சிறந்த நிர்வாகி என பெயரெடுத்தவர் அம்மா. இவை தான் தமிழகத்தில் அம்மா குறித்தான பிம்பம்.

சமீபத்தில் பெய்த புயல் மழை அந்த பிம்பத்தை மொத்தமாக தகர்த்தெறிந்து புரட்சி தலைவியின் உண்மை முகத்தை உலகுக்கு காட்டிவிட்டது தான் தமிழகத்தில் இப்போது திடீரென தோன்றியிருக்கும் பெரும் அதிருப்திக்கான காரணம்.

தமிழகத்தின் மிக பெரும் வெள்ள சேதங்களில் ஒன்றாக சென்னையின் இப்பெருமழைக்காலம் சேர்ந்துகொண்டிருக்கிறது. சோகம் என்னவென்றால் அந்த சேதங்களை முன்கூட்டியே கணித்து நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் திராணியும் இருந்தும் நாம் வாளாவிருந்தது தான். கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம்.

மத்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம், தமிழகத்தில் கன மழை காணும் என போன மாதமே எச்சரிக்கை விடுத்திருந்தது. மத்திய அரசின் எச்சரிக்கை என்பதால் வழக்கம்போல நாம் அதை அதிகமாக கண்டுகொள்ளவில்லை. பெய்து தீர்த்த மழை தாண்டவமாடிக்கொண்டு இருக்கிறது.. இன்னமும்.

சென்னை மிக சிறந்த வடிகால் அமைப்புக்களை கொண்ட நகரங்களுள் ஒன்று. சுனாமி நேரத்தில் தொடர்ச்சியாக 10 நாட்கள் பெருமழை பெய்தபோதும், நீர் தேங்கி நிற்கவில்லை. அவ்வப்போது 1995, 1998, 2002, 2005, 2006, 2008, ஆகிய வருடங்களில் அபரிமிதமான மழைப்பொழிவு இருந்தபோதும், வெள்ள தேக்கம் என்பது மூன்று நாட்களுக்கு மேல் நீடித்ததில்லை. ஆனால் இப்போது மட்டும் என்ன வந்தது சென்னைக்கு?



இந்த முறை துல்லியமாக கணித்திருந்தும், பலத்த எச்சரிக்கை வந்திருந்தும், நாம் வாளாவிருந்துவிட்டோம். எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுவாக கனமழை எச்சரிக்கை வந்தால், தமிழக அரசு சென்னையை சுற்றி உள்ள எரிகளின் / அணைகளின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்கை காலி செய்து வைக்கும். அதாவது முன்கூட்டியே சிறுக சிறுக நீரை வெளியேற்றி முக்கால் வாசி ஏரியை/அணையை காலியாக வைத்திருக்கும். பொதுப்பணி துறையினர் இதற்காகவே இரு வாரங்களுக்கு ஒரு முறை வானிலை ஆய்வு மையத்திலிருந்து அறிக்கைகள் பெற்று அதன் அடிப்படையில் செயல்படுவார்கள். இப்படி காலி செய்து வைப்பதால், மழை பொழிவின் பொழுது எல்லா நீரும் அணையில்/ஏரியில் சேகரிக்கப்பட்டு மீண்டும் அது முழு கொள்ளளவை எட்டிவிடும். ஒரு வேளை எதிர்பார்த்ததை விட அதிகமாக மழைப்பொழிவு இருந்தால் அதற்கு தக்கபடி சிறுக சிறுக உபரி நீரை வெளியேற்றுவார்கள். இதன்மூலம் ஏரி/அணை நீர் அவற்றிலேயே தேக்கிவைக்கப்படும், உபரி நீர் மட்டுமே வெளியேறும். நகரத்தில் வெறும் மழை நீர் மட்டும் தான் இருக்கும். அது வடிவதற்கான தக்க வடிகால் வசதிகள் சென்னையில் ஏற்கனவே உள்ளது.

இந்த முறை, முன்கூட்டி எந்த ஏரியும் / அணையும் திறந்துவிடப்படவில்லை. மழை தொடங்கும்போது எரிகளும் அணைகளும் கிட்டத்தட்ட நிறைந்திருந்தன. மழை கொட்டி தீர்த்தபோது ஏரியை திறந்துவிட வேண்டியதாயிற்று. அப்படி திறந்துவிடாவிட்டால் ஏரிகள் உடைந்துவிடும் அபாயம். (அப்படியும் காலதாமதமாக சாவதானமாக திறந்து விட முடிவெடுத்து சோதப்பியதில் சில ஏரிகள் உடைத்துக்கொண்டன என்பது தனி கதை). ஏற்கனவே நகரில் தேங்கி இருந்த மழை நீரில் இப்படி திறந்துவிடப்பட்ட ஏரி / அணை நீரும் சேர்ந்துகொள்ள சென்னை வெள்ளக்காடானது. மேலும் ஒரு கொடுமையாக மழை நிற்காமல் பெய்துகொண்டே இருந்ததால் மேலிருந்து வரும் மழை நீரும் இவற்றுடன் சேர்ந்துகொண்டது. சரி.. அப்போ வடிகால்? அது என்ன ஆனது?

சென்னை மெட்ரோ ரயில் சுரங்க பணிகளுக்காக பெரும்பாலான வடிகால்கள் முன்பே தகர்க்கப்பட்டு விட்டன. சுரங்கம் தோண்டுகையில் அதனுள் வெள்ளம் வந்துவிடாமல் இருக்கும் பொருட்டு அது செய்யப்பட்டது. அதில் தவறில்லை. ஆனால் அரசு / மாநகராட்சி உடனே அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்திருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை.

ஒருபக்கம் அபரிமிதமான வெள்ளம், மறுபுறம் வடிகால் வசதி இல்லாமை. இரண்டும் சேர்ந்து வெள்ளத்தை கட்டவிழ்த்து விட்டு கண்டபடி எல்லா இடங்களுக்கும் பாய வைத்துவிட்டது. ஹைவேக்கள், குடியிருப்புக்கள் என எல்லா இடத்தும் வெள்ளம்.

இது தான் தமிழக அரசுக்கான முதல் அடி. முறையாக திட்டமிடாமை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமை. இரண்டும் சேர்ந்து சிறந்த நிர்வாகியான அம்மாவின் நிர்வாகத்திறமையை கேள்வி குறி ஆக்கிவிட்டது.

சரி.. வெள்ளம் வந்துவிட்டது... இனி என்ன செய்யவேண்டும்?

பொதுவாக அரசு வெள்ள பாதிப்பு நேர்ந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அவற்றை தற்காலிக தங்கும் இடமாக அறிவிப்பார்கள். அங்கே தகுவதற்கான ஏற்பாடுகளை செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை அங்கே கொண்டு செல்ல ஏற்பாடு செய்வார்கள். அவர்களுக்கான உணவு, உடைகள் விநியோகிக்கப்படும். மழைக்கால தொற்று நோய் பரவாமல் இருக்க அவர்களுக்கு மருந்துகள் மாத்திரைகள் கொடுக்கும். இதெல்லாம் தான் வழக்கமான நடைமுறை.

ஆனால் இந்த முறை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததோடு சரி. மற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட ஏழு நாட்களுக்கு பிறகு தான் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. பதினொரு நாட்களுக்கு பின் தான் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. உணவு, குடிநீர், மருந்துகள் இன்று வரை அரசால் விநியோகிக்கப்படவில்லை.


தீயணைப்பு & மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் முழுமையாக ஈடுபடத்தப்படவில்லை. அரக்கோணம் கடற்படை தளத்தில் 6 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் இருந்தும் அவற்றை இன்று வரை பயன்படுத்தி கொள்ளவில்லை. அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட அனுமதி கொடுக்கப்பட்டதா எனவும் தெரியவில்லை. வெள்ள பாதிப்பு நிவாரண ஒருங்கிணைப்புக்கான கட்டுப்பாட்டு அறை அரசால் ஏற்படுத்தப்படவில்லை. மாநகராட்சி மண்டல உதவி எண்கள் செயல்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை. ஏரியோ அணையோ திறந்துவிடுவதற்கு முன்பாக மனிதாபிமான அடிப்படையில் கூட ஒரு எச்சரிக்கையை மக்களுக்கு கொடுக்கவில்லை.  ஆனால் மத்திய அரசுக்கு நிவாரண நிதி கேட்டு கோரிக்கை கடிதம் மட்டும் உடனடியாக அனுப்பப்பட்டது.

ஆச்சரியகரமாக மக்களுக்காக மக்களே களம் கண்டனர்.

10 இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி, நிவாரண பணிகளை ஒருங்கிணைத்தனர்.

சமூக வலைத்தளங்களின் உதவியோடு, உதவி தேவைப்படுவோரையும், உதவி செய்வோரையும் ஒன்று சேர்த்து சரியான சமயத்தில் உதவிகள் சென்றடைய ஏற்பாடுகள் செய்தனர்.

தமிழகம் முழுவதிலுமிருந்து மக்கள் தங்களால் ஆன எல்லா பொருட்களையும், உணவுகளையும் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

ரேடியோ சிட்டி, ரேடியோ மிர்ச்சி, நியூஸ் 7 போன்ற பல மீடியாக்கள் தங்களில் ஒலி/ஒலிபரப்பு சக்தியால் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தினர்.

சென்னையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் நிவாரண பொருட்களை வீதி வீதியாக கொண்டு சென்று சேர்த்தனர். மேலும் ஒவ்வொரு வீட்டு முன்பும் நின்று அவர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என கேட்டு கேட்டு செய்து கொடுத்தனர். நியாயமாக இவற்றை செய்யவேண்டிய தீயணைப்பு & மீட்பு பணிக்குழுவினரை தெருக்களில் காணவில்லை.

சென்னையில் உள்ள மசூதிகள், சர்ச்கள், ஜெயின் கோவில்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் ஆகிய அனைத்தும் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக திறந்துவிடப்பட்டன. அரசு, பள்ளிக்கூடங்களை மக்கள் தங்க ஒதுக்கி தராதபோதும் இவை மக்களுக்கு ஓரளவு உதவின.

திமுக, காங், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சி அலுவலகத்தை பொதுமக்களுக்காக திறந்துவிட்டன. அறிவாலயத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு தினமும் உணவு வழங்கப்பட்டது. எந்த செயல்பாடும் இன்றி முடங்கி கிடக்கும் லாயிட்ஸ் ரோடு கட்சி தலைமை அலுவலகத்தை திறந்து விடவில்லை கருணை தாய்.



மதிமுக, திமுக, தேமுதிக, காங், கம்யூ, பாஜக, SDPI, TMMK, RSS, திராவிடர்கழகம், மே 17 இயக்கம் ஆகிய பல பல இயக்கங்கள் ஆங்காங்கே தங்களால் இயன்ற வரை உணவு அளித்துக்கொண்டிருந்தன. வழக்கமாக சாப்பாட்டு பொட்டலங்கள் போடும் அரசு இந்த முறை கைவிட்டாலும் இவை மக்களின் பசியை ஓரளவு நீக்கின. மழை தொடங்கி பதினோராம் நாள் இந்திய விமானப்படையும் உணவு பொட்டலங்களை மாடிகளில் தேங்கி கிடந்தவர்களுக்கு விநியோகித்தது.

மாநிலம் முழுதுமிருந்து குடிநீர், பிஸ்கட், பிரெட், போர்வை, பிரஷ், பேஸ்டு என பல பொருட்களும் பொதுமக்களால் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவை இங்குள்ள இளைஞர்களால் கூடுமானவரை விநியோகிக்கப்பட்டன. விற்காமல் தேங்கி கிடக்கும் ஆவின் பால் பவுடரை விநியோகித்து தீர்க்க உத்தரவிட்டது ஒன்று தான் நிவாரப்பணியாக அரசு செய்தது.

அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் என எதுவும் மக்களுக்கு உதவிகளாக வழங்கப்படாதபோதும் டாஸ்மாக்கை மட்டும் திறந்துவைத்து மக்கள் பணி செய்தது தாயுள்ளம் கொண்ட தமிழக அரசு.

மீனவர்களும் இஸ்லாம் அமைப்புக்களுமாக சேர்ந்து படகுகளை வரவழைத்து வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை மீட்டெடுத்தனர் இலவசமாக.

தனியார் நிறுவனங்கள் தங்கள் பேருந்துகளை மக்களுக்காக இலவசமாக இயக்கியது. சில ஆம்னி பேருந்துகள் திருச்சி வரையும், ஓசூர் வரையும் இலவசமாக மக்களை அனுப்பி வைத்தது. கால் டாக்சி நிறுவனங்கள் இலவசமாக மக்களை புறநகருக்கு அனுப்பி வைத்தன. சில கொரியர் நிறுவனங்கள் நிவாரண பொருட்களை இலவசமாக சுமந்து சென்று விநியோகித்தன. ஆனால் நான்காம் தேதி மாலை வரையும் தமிழக அரசு மாநகர பெருந்துகளில் கட்டணம் வசூலித்து கொண்டிருந்தது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மாண்புமிகு அம்மா அவர்கள் இலவசமாக மாநகர பேருந்தை இயக்க உத்தரவிட்டார்.


ஒரு கட்டத்தில் மக்கள் அரசின் மீது அதிருப்தி அடைவதையும், பொதுமக்களே பொதுமக்களுக்காக உதவி வருவதையும், அரசு வெட்டியாக இருப்பது வெட்ட வெளிச்சமானதையும் கவனித்த தமிழக அரசு அதிரடியாக மக்களுக்கு உதவ களம் இறங்கியது. அதாவது பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் சேகரித்து சென்னைக்கு அனுப்பும் அனைத்து பொருட்களிலும் மாண்புமிகு அம்மா புரட்சி தலைவி அவர்களின் புகைப்பட ஸ்டிக்கர்களை அச்சடித்து அம்மா அவர்கள் வழங்கிய உதவியாக பிரச்சாரம் செய்தனர். கடலூருக்கு கொண்டு செல்லப்பட்ட நிவாரண பொருட்களில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டால் மட்டுமே விநியோகிக்க அனுமதிக்கப்பட்டது. அப்படி ஸ்டிக்கர் ஓட்ட மறுத்தவர்கள் தாக்குதலுக்கு ஆளான கொடுமை எல்லாம் நடந்தேறியது.


1970 களின் அரசியல் முறையை மட்டுமே அறிந்த தலைவர்களுக்கு சமீபத்திய மீடியாவின் பலமும் வீச்சும் புரியாமல் போனது ஆச்சரியமில்லை. அனைத்து நாளிதழ்களிலும் அரசுக்கு எதிரான தகவல்கள் வராமல் பார்த்துக்கொள்ள முடிந்தாலும், சமூக வலைதளங்கள் மூலம் அரசின் அராஜக செயல்கள் அவ்வப்போது உடனுக்குடனே வெளியாக தொடங்கியது. எந்த செயல் மூலம் மக்களிடம் நல்ல பெயரும் செல்வாக்கும் வாங்கி விடலாம் என கருதியதோ அதே செயலால் மிக பெரும் விமர்சனத்துக்கு ஆளானது தமிழக ஆளும் கட்சியும் அதிகார வர்க்கமும். இந்த ஒரு விஷயத்தில் அதிகார வர்க்கம் கூட அதிமுக கட்சி உறுப்பினர்களை போல செயல்பட்டது தான் கொடுமை. 

அரசுக்கு அவப்பெயர் வருவதை அறிந்ததும், அப்படி "ஸ்டிக்கர்கள் ஒட்ட சொல்லி அதிமுக சொல்லவில்லை.. யாரோ அதீத ஆர்வக்கோளாரில் அப்படி செய்திருக்கலாம்.. அவ்வாறு வற்புறுத்தப்பட்டால் அதிமுக தலைமை நிலையத்துக்கு புகார் அளிக்கலாம்" என்று பல பிரமுகர்கள் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். அதிமுக கட்சி அப்படி அதிகாரப்பூர்வமாக எந்த மறுப்பையும், புகார் தெரிவிக்கும்படியும் சொல்லாவிட்டாலும், அதிமுகவுக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என பல முக்கிய பிரமுகர்களும் பத்திரிக்கையாளர்களும் பதறி அடித்து அதிமுக சார்பாக அப்படி ஒரு தகவலை தெரிவித்து அரசை காக்க முயன்றதாகவே எடுத்து கொள்ள வேண்டி இருக்கிறது. 

வெள்ளத்தில் சிக்கி தவித்த என் அதிமுக நண்பரொருவர் கட்சி மீது காட்டிய வெறுப்பும் அருவருப்பும் சொல்லி மாளாது. இது ஒவ்வொரு ரத்தத்தின் ரத்தங்களுக்கும் மனதில் ஏற்பட்ட கோபம். எம்ஜிஆரின் விசுவாசிகளுக்கு மக்களும் அவர்களது துயர் துடைப்பதும் தான் முதன்மை கடமை. ஆனால் இப்போது கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் தனது கட்சி நடந்துகொள்வதை அவரால் ஜீரணிக்க முடியவேயில்லை.

கேரளா, கர்நாடகா, பீகார், ஆந்திரா மாநிலங்களின் உதவிகளை மறுதலித்து மத்திய அரசை மட்டுமே எதிர்நோக்கி இருந்தாலும் அதுவும் போதுமான அளவு வந்து சேரவில்லை. அதையே காரணம் காட்டி நிவாரண பணிகளில் மெத்தனம் காட்டியது அரசு. அரசின் மீதான அதிருப்தி உச்ச கட்டத்தை அடைந்ததை அறிந்து நான்காம் தேதி மாலை அமைச்சர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பை நிகழ்த்தினர். ஒவ்வொரு அமைச்சரும் எந்த அளவுக்கு விஷய ஞானம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை பட்டவர்த்தனமாக காட்டியது அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு. பேட்டி பாதியிலேயே நிறுத்திக்கொள்ளப்பட்டது தான் அரசுக்கான அடுத்த தோல்வி.


இந்த புயல் மழை செய்த நல்ல விஷயங்களில் கூவத்தை சுத்தப்படுத்தியதை மட்டுமல்ல, புரட்சி தலைவியின் புனை முகத்தை தகர்த்தையும் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்.

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!!



Thursday, November 26, 2015

அண்டர்ஸ்டாண்டிங் அமீர்கான்

இந்த வாரம் எல்லோருடைய கையிலும் சிக்கின ஆடு அமீர் கான் தான். “இப்போ இந்தியாவுல நடக்குற விஷயங்களை எல்லாம் பார்க்கும்போது இந்தியாவை விட்டு போயிடலாமான்னு என் மனைவி கூட என்கிட்டே கேட்டாங்க”ன்னு அவர் பேசுனது தான் பரபரப்புக்கு காரணம். அமீர் கான் நாட்டை விட்டு போகணும்னு பலரும் கொடி புடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் சிலர் ‘இங்கே தானே சம்பாதிச்சாரு? அப்பல்லாம் இந்த நாடு நல்ல நாடுன்னு தெரிஞ்சுச்சா அவருக்கு’ன்னு குதர்க்கமா கேள்வி கேட்டுட்டு இருக்காங்க.

அமீர் கான் என்ன பேசினார், என்பதை தெளிவா தெரிஞ்சவங்க எல்லாரும் அவரை ஆதரிக்க ஆரம்பிச்சிருக்காங்க. சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மானும் அதை ஆமோதிச்சிருக்கார். அப்படி என்ன தான் பேசினாரு அமீர்? ஏன் இந்த மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்?


பத்திரிக்கை துறையில் சிறந்த சேவை செய்தவர்களுக்கான ‘ராம்நாத் கோயங்கா’ விருது வழங்கும் விழா நடந்துச்சு. அதில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் கலந்துந்துகிட்டு இருந்தார். அங்கே அவர் முன்னிலையில் தான் அமீர் பேசினார். அமீரின் துணிவும், தேச பக்தியும் எல்லோரும் அறிந்ததே. ஒரு சாதாரண இந்தியனா அவர் தனது உணர்வுகளை அங்கே வெளிப்படுத்தினார்.

“ஒரு சாதாரண மனிதனா, இந்தியா குடிமகனா, இப்போது இந்தியாவில் நடைபெறும் சில சம்பவங்களின் செய்திகளை படிக்கும்போது ரொம்ப கவலையா இருக்கு. ஒன்று இரண்டல்ல நாடு முழுவதும் நிறைய சம்பவங்கள் அது மாதிரி நடப்பது அதிர்ச்சி அளிக்க கூடியதா இருக்கு.

வீட்டில் மனைவிக்கிட்டே பேசிட்டிருக்கும்போது அவரும் கூட இந்த சம்பவங்களின் கவலையை வெளிப்படுத்தினாரு. குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி நாம இந்தியாவை விட்டு போயிடலாமான்னு கூட அவர் என் கிட்டே கேட்டிருக்காரு.

சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிச்சிட்டே வருவது ஏன் நமக்கு கவலையை தருதுன்றது ஒவ்வொரு இந்திய குடிமகனின் உள்ளத்துக்கும் நல்லாவே தெரியும். தினசரி செய்தித்தாள்களை திறக்கவே பயமா இருக்கிற ஒரு சூழல் உருவாகிட்டு இருக்கு.

மக்கள் அரசை தேர்ந்தெடுப்பது தங்களை பாதுகாப்பாக வாழவைப்பார்கள் என்கிற நம்பிக்கையில் தான். அது மாநில அரசோ மத்திய அரசோ, அடுத்த அஞ்சு வருசத்துக்கு நம்மை அந்த அரசு காப்பாற்றும்ன்ற அந்த நம்பிக்கையை மக்கள் அரசின் மீது வெச்சிருக்காங்க. அதை அரசு உணர்ந்து நடந்து, தக்க நடவடிக்கை எடுத்து, சம்பவத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்கினால் தான் அந்த பாதுகாப்பு உணர்வு மக்களுக்கு கிடைக்கும்”

இதான் அவர் பேசியதின் சாராம்சம். இதில் எந்த தவறும் இருப்பதா எனக்கு தெரியலை. 

இத்தனை வருஷமும் இப்படி ஒரு சம்பவம் நடக்கலையா? 2008 ஜிகாதி தாக்குதல், 2002 குஜராத் வன்முறை, 1992 பாப்ரீ மசூதி சம்பவம்னு பலதும் நடந்த போது அமீர் என்ன செஞ்சிட்டு இருந்தாருன்னெல்லாம் ரொம்ப புத்திசாலி தனமா கேள்விகள் கேட்டுட்டு இருக்காங்க சிலர். 

இதில் எனது பார்வையை நான் இப்படி வைக்க விரும்புறேன்:

ஒரு ஜனநாயக அரசு என்று ஒன்று இருந்தால் அது அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது. எல்லோரையும் காக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கு.

எல்லா காலகட்டத்திலும் எல்லா அரசிலும் இப்படியான சகிப்புத்தன்மையற்ற சம்பவங்கள் நடந்துட்டு தான் இருக்கு. ஆனா அப்போதெல்லாம் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, கண்டிப்பது, எச்சரித்து அறிக்கை விடுவது ஆகியன இருக்கும்.

தமிழகத்திலேயே கூட அதிமுகவினர் ஒரு வன்முறையில் ஈடுபட்டாலோ, தகாத முறையில் பேசினாலோ உடனே ஜெயலலிதா அதை கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்னு ஒரு அறிக்கை விடுவார். சில சம்பவங்களில் அப்படி சொந்த கட்சியினர் மீதே நடவடிக்கை எடுத்து கைதும் செய்திருக்கிறார். சொந்த கட்சி காரங்க என்பதற்காக அவர்களை கண்டுகொள்ளாமல் விட்ட சம்பவங்கள் மிக மிக குறைவு. இப்படியான நடவடிக்கைகள் பெயரளவுக்கு இருந்தாலும் கூட போதும். அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ‘அரசு நமக்கு துணையாக இருக்கிறது. தப்பு செஞ்சவனுக்கு தண்டனை கிடைக்கும். நம்மை பாதுகாக்க அரசு இருக்கு’னு ஒரு நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் கிடைக்கும். அப்பாலிக்கா கட்சி காரங்களை விடுதலை செஞ்சுருவாங்கன்றது வேற விஷயம். ஆனாலும் மக்களுக்கு அரசின் மீது ஒரு நம்பிக்கை வரும்.

ஆனா சமீபத்திய நிகழ்வுகளில் நாடு முழுதும் பல பல சம்பவங்கள் நடந்த போதும், மத்திய அரசோ பிரதமரோ அதை கண்டிக்கவோ, எச்சரிக்கவோ இல்லை, எந்த நடவடிக்கைக்கும் உத்தரவிடவில்லை. அதை விட கொடுமை அத்தகைய விஷயங்களை மறைமுகமாக ஆதரிக்கவும் செய்தது தான். இது தான் இங்கே வித்தியாசம். இதுவரை இருந்த அரசுகள் எல்லா சம்பவங்களிலும் நடவடிக்கை எடுத்தது. கண்டித்தது. இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அவற்றை ஊக்குவிக்க தொடங்கி இருக்கிறது. இதை கவனிக்கும் மக்கள் அரசின் மறைமுக உதவியோடு தான் இப்படியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன என நினைக்க கூடும். அது தான் இப்போது இந்தியாவில் நிலவும் ‘பாதுகாப்பின்மை’க்கான முக்கிய காரணம்.

இந்திய பத்திரிக்கைகள் எல்லாம் இப்போது நெருக்கடி நிலை காலகட்டம் மாதிரி கட்டுப்படுத்தப்பட்டு நாட்டில் நிலவும் பல செய்திகளை வெளியிட முடியாமல் ஒடுக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. நாடு முழுதும் நடைபெற்ற பல பல தாக்குதல்களில் பெரிய அளவில் நடைபெற்ற ஒன்றிரண்டு தவிர வேறு எதையும் பத்திரிக்கைகள் வெளியிடவில்லை. ஆனால் அவற்றில் பல சம்பவங்களை மனிதாபிமான உணர்வுள்ள சில  வெளிநாட்டு பத்திரிக்கைகள் தொகுத்து வெளியிட்டிருக்கின்றன. அதை படித்தால் இந்தியாவில் இப்போது நிஜத்தில் எவ்வளவு பயங்கரமான செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பது புரியும்.

இந்த அரசில் இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவமும் நடந்துகொண்டிருப்பதை கவனித்து இருப்பீர்கள். இதுவரை சிறுபான்மை மதத்தினரான முஸ்லீம்கள் கிறித்துவர்கள் ஆகியோர் மீது நடந்து வந்த தாக்குதல்களுக்கு இணையாக இப்போது இந்த அரசில் ஹிந்து மதத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தினர் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. நம்முடைய பெருமதிப்பிற்குரிய தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை போல, ஆதிக்க வர்க்க இந்துக்கள் பிற இந்துக்களை ஒடுக்கி தங்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டிய ஒரு சூழலை மெல்ல மெல்ல இந்த நாட்டில் உருவாக்கி வருவதை நாம் இப்போது காண முடிகிறது. எந்த பாவமும் அறியாத பிஞ்சு குழந்தைகள் இருவரை அவர்கள் தலித்துக்கள் என்கிற காரணத்துக்காகவே எரித்து கொன்றது அதில் ஒரு சாம்பிள் தான்.

இந்தியா உயர் வகுப்பு இந்துக்களின் நாடாக மாற்றபட்டு வருவதும், அதற்கான நடவடிக்கைகளில் சில அமைப்புக்கள் ஈடுபட்டு வருவதும், அந்த அமைப்புக்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும், மக்களிடம் இதுவரை இருந்து வரும் சமத்துவத்தை குலைக்கும் செயலாகவே காண வேண்டி இருக்கிறது. அதை ஒரு அரசே ஆதரிப்பது தான் மிகப்பெரிய கொடுமை. இந்த விசித்திர நிலைமை தான் மக்களுக்கு அமீர்கான் சொல்லும் அந்த ‘பாதுகாப்பின்மை’யை கொண்டு வந்திருக்கிறது.

பல கலைஞர்கள் அறிஞர்கள் அரசின் மீதான தங்களது அதிருப்தியை தெரிவிக்க தங்களின் விருதுகளை திருப்பி கொடுத்து இருக்கிறார்கள். அப்படியான எதிர்ப்பு மனநிலைக்கு காரணம் என்ன என கண்டறிந்து அவர்களை அழைத்து சமாதானம் செய்து அவர்களது உணர்வுகளை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து அவர்களது கவுரவத்தை காக்க வேண்டிய அரசு அதை எதையும் செய்யாமல், அவர்களது செயலுக்கு உள்ளர்த்தமும் அரசியல் சாயமும் பூசி கேலி செய்து கொண்டிருக்கிறது. இது பொறுப்பாகவும் தெரியவில்லை முதிர்ச்சியான நிர்வாகமாகவும் தெரியவில்லை.

இந்திய அரசு இந்திய மக்களுக்கான அரசு எனில் இந்நேரம் யோகி ஆதித்யநாத் எம்பி, ஹிந்து மகாசபை, சிவசேனா எம்பி வீச்சாரே, பாஜக எம்பி சாத்வி பிராச்சி, உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் போன்ற பலரையும் இந்நேரம் எச்சரித்து இருக்கவேண்டும். இந்திய மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க யாரையும் அனுமதிக்கமுடியாது என உறுதியாக அறிவித்து இருக்கவேண்டும். இந்திய அரசு இந்திய மக்களுக்கான அரசா, உயர் வர்க்க இந்துக்களுக்கான அரசா என்பதே இப்போது குழப்பமாக இருக்கிறது. இந்த நிலை தான் நாட்டில் பலருக்கும் இந்தியா பாதுகாப்பான நாடு தானா என்கிற எண்ணம் தோன்ற காரணம்.

சகிப்புத்தன்மை என்பது ஒரு மெல்லிய கோடு. இந்தியாவை நேசிப்பவர்கள் அதன் இந்தப்பக்கம். மதத்தை நேசிப்பவர்கள் அந்த பக்கம். அமீர்கான் இந்தப்பக்கம். நான் இந்தப்பக்கம். 

நீங்கள்??




Wednesday, November 11, 2015

இந்திய பொருளாதாரம் – தேறுமா?

செக்யூலரிசம், மாட்டுக்கறி, சோட்டாராஜன், சிறுபான்மையினர் நசுக்கல், கருத்து சுதந்திரம், சாகித்ய அகாடமி, பீஹார் தேர்தல் போன்ற பிற பிற செய்திகளால் நம்ம கவனம் சிதறி சிக்குண்டு கிடந்ததில் கவனத்தில் இருந்து கழன்று போன ஒரு விஷயம் இந்திய பொருளாதாரம்.

இந்திய பொருளாதாரத்துக்கு என்ன? நல்லாத்தானே இருந்தது? உலகம் முழுதும் பொருளாதார நெருக்கடி நிலவிய நேரத்தில் கூட இந்திய பொருளாதாரம் தெளிவாகவும் உறுதியாகவும் வளர்ச்சியான நிலையிலும் தானே இருந்தது? இப்போதோ, உலக பொருளாதாரத்தில் எந்த சிக்கலும் இல்லை. மந்த நிலை கூட இல்லை. அப்படி இருக்க என்ன பிரச்சனை என கேட்பவர்களுக்கான ஒரே பதில், அப்போது இந்திய பொருளாதாரம் இருந்தது பொருளாதாரத்தில் சிறந்த மன்மோஹன் & சிதம்பரம் ஆகிய மேதைகளின் கைகளில் என்பது தான். இப்போதைய நிலைமை வேறு.

பாஜக அரசு பதவி ஏற்று இந்த 16 மாதங்களில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளோ, பொருளாதார கொள்கைகளோ, அவ்வளவு ஏன், பொருளாதாரத்துக்கான அமைச்சரவையை கூட்டுவதோ அப்படி கூட்டி பொருளாதார நிலையை ஆய்வு செய்து முடிவெடுப்பதோ எதுவுமே நடைபெறவில்லை. இதன் பலன்…

  • தொடர்ந்து பத்தாவது மாதமாக ஏற்றுமதி குறைந்திருக்கிறது
  • ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதத்தை விட சராசரியாக 20% ஏற்றுமதி குறைவு
  • உள்நாட்டு சில்லறை பணவீக்கம் அபரிமிதமாக உயர்ந்திருக்கிறது.
  • மூடீஸ், ரிசர்வ் வங்கி, போன்றவை பொருளாதார அபாயத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டு இருப்பதாக எச்சரித்தும் அது பற்றிய தீவிரமான விவாதமோ தடுப்பு நடவடிக்கையோ எதுவும் இல்லை.
  • அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் போய்விட்டது
  • சேவை வரி, பெட்ரோலுக்கான உற்பத்தி வரி ஆகியவை கடுமையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அனைத்து உப பொருட்களின் விலையும் கூடி இருக்கிறது.
  • உள்கட்டமைப்பு திட்டங்கள் முதலீடுகள் எதுவும் இல்லை.
  • புதிய தொழில் வளர்ச்சி ஊக்குவிப்பு திட்டங்கள் இல்லை.
  • நீண்டகால நிலுவையில் இருக்கும் ஜி.எஸ்.டி குறித்த இறுதி வரைவு அறிக்கை கூட இதுவரை இல்லை.
  • வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்ப பெற்று கொண்டு வருவதை தடுக்கும் வழிமுறைகள் காணப்படவில்லை
  • தொழில் செய்வதற்கான பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய முன்வரவில்லை.
  • வங்கிகளின் வராக்கடன் வசூலுக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
  • ஏற்கனவே வங்க்கிகளை ஏமாற்றிய கடந்தாரர்களுக்கு மீண்டும் கடன் கொடுக்கும் நடவடிக்கை தடுக்கப்படவில்லை.


இவற்றால் என்னவாகும்?



சுருக்கமாக சொன்னால்

அரசு மக்களிடம் இருந்து அபரிமிதமாக வரியை வசூலிக்கிறது
அந்த பணத்தை முதலீட்டு திட்டங்களுக்கு, சமூக நல திட்டங்களுக்கு  பயன்படுத்தாமல் செலவு திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது.
தொழிலதிபர்களுக்கு சலுகைகளும் கடன் தள்ளுபடிகளும் மேலும் கடன்களும் தருகிறது.
பிற நாடுகளுக்கு நீண்டகால அடிப்படையில் கடன் தருகிறது.
அதாவது நம்மிடம் அதிகமாக வசூலித்து தொழிலதிபர்களையும் பிற நாடுகளையும் வாழவைக்கிறது. நமக்கான திட்டங்கள் எதுவும் இல்லை.

அப்படியும் பணம் போதாததால், பொதுமக்களிடம் இருந்து தங்கத்தை பெற்று அதை விற்று காசாக்கி அதையும் தொழிலதிபர்களுக்கு கொடுப்பதற்கான ‘கோல்டு மானிடைசிங் ஸ்கீம்’ அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த தங்கத்துக்கான விலையை சில ஆண்டுகள் கழித்து நமக்கு கொடுப்பார்களாம். அதாவது ஆசை ஆசையாக நீங்கள் வாங்கிய நகைகளை அரசிடம் ஒப்படைத்தால் அதை வைத்து அவர்கள் திட்டங்களை செயல்படுத்தி கொள்வார்களாம்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை பொருளாதார மந்த நிலை வந்தபோதும், மக்களிடமிருந்து வசூலித்து பொருளாதாரத்தை சமாளிப்பது என்கிற அளவுக்கு கீழ்த்தரமாக இறங்கவேயில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். இப்போதோ நிர்வாக திறமையும் பொருளாதார அறிவும் இல்லாத ஒரு அமைச்சரவை நிதி நிர்வாக சிக்கலை சமாளிக்க பொதுமக்களின் சொந்த தங்கத்தை கேட்கிறது.

இந்த நிலைமை நம் தொழில்வளர்ச்சி, விவசாயம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு ஆகியவற்றை சீர்குலைத்துப்போட்டதுடன், வேலையின்மையையும் அதிகரித்துவிட்டது. இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டுக்குள் இந்தியா பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் என்பது தான் பலரது அச்சம்.

ஏன் இதை கணிக்கவோ தடுக்கவோ அரசு முன்வரவில்லை என்று கேட்டால், அவர்களுக்கு அது பற்றி தெரியாது அதனால் அக்கறை கொள்ளவில்லை என்று சொல்லலாம். அமைச்சருக்கும் பிரதமருக்கும் பொருளாதாரம் புரியவில்லை என்று வைத்துக்கொண்டாலும் கூட இப்படியான ஒரு அபாயகரமான சூழல் இருப்பதாக பொருளாதார மேதைகள் சொல்லும்போது அதை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட துறை வல்லுனர்களை கூட்டி விவாதித்து ஒரு முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆனால் பொருளாதார மேதைகள் சொல்லுவதை காதில் போட்டு கொல்லாததுடன், அவர்கள் எதிர்க்கட்சிகள் அதனால் அப்படி சொல்லுகிறார்கள் என்று கேலி செய்து கொண்டிருக்கிறது அரசு.

இப்போது சிறிய குறியீடுகள் மட்டும் தெரிகின்றன. ஆனால் அடுத்த சில மாதங்க்களில் சீர் செய்யமுடியாத அளவுக்கு மிக பெரிய பொருளாதார சரிவு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.

நாம் செய்யக்கூடியது என்பது, பணத்தை சிக்கனமாக செலவு செய்வது, வேலையை எப்பாடுபட்டாவது தக்கவைத்துக்கொள்ளுவது  என்பது மட்டும் தான்.


தயாராகிக்கொள்ளுங்கள் தோழர்களே!

Printfriendly