Showing posts with label Kerala. Show all posts
Showing posts with label Kerala. Show all posts

Wednesday, September 7, 2016

சிறுவாணி

சூப்பர் ஸ்டார் நடிச்ச அதிசய பிறவி படத்துல வரும் தானந்தன கும்மி கொட்டி பாட்டுல ஒரு வரி வரும்.. “சிறுவாணி கெண்டைய போல சொக்குது கண் ராசி”ன்னு.. ஆனா இப்ப சமீபகாலமா சிறுவாணி கெண்டையை விட சிறுவாணி சண்டை தான் ஃபேமசு ஆயிருச்சு.  இது இன்னைக்கு நேத்து சண்டை இல்லை.. கால காலமான சண்டை..

வீட்டுல கொசுவர்த்தி சுருள் இருந்தா எடுத்து உங்க முகத்துக்கு முன்னாடி பிடிச்சுக்கோங்க.. நாம இப்ப சிறுவாணியின் ஃபிளாஷ் பேக் கதைக்கு போறோம்.

ஃபிளாஷ் பேக்

அது 1889 ஆம் ஆண்டு. கோவையை சேர்ந்த திரு S.Pசிம்முலு நாய்டு ஒரு காங்கிரஸ்காரர். பத்திரிகையாளரும் கூட. அவர் அடிக்கடி வெள்ளியங்கிரி மலைக்கு அங்கிருக்கும் கோவிலுக்கு போகும் வழக்கம் உடையவர். யானை, சிறுத்தை, அட்டைப்பூச்சி என பல பல இம்சைகள் இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாம ரெகுலரா மலைக்கு போய் வரும் வழக்கம் உடையவர். அந்த வெள்ளியங்கிரி மலை மேல நின்னு பார்க்கும்போதெல்லாம் தூரத்தில் தெரியும் முத்திக்குளம் அருவியை பார்த்துட்டே இருப்பது அவரது வழக்கம். வருஷம் பூரா எல்லா சீசனிலேயும் ஆர்ப்பரித்து கொட்டும் அந்த அருவி அவருக்கு ஆச்சரியமா இருந்தது. அந்த தண்ணியை மட்டும் கோவைக்கு கொண்டு வர முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு அவர் பல தடவை நினைச்சிருக்காரு. அப்படி எல்லா சீசனிலேயும் தண்ணீர் வருதான்னு தெரிஞ்சுக்கறதுக்காகவே வருஷத்தில் பல முறை அவர் வெள்ளியங்கிரி மலைக்கு போயிட்டு வந்தாராம் .
 
Mukthi Falls (Thanks: The Hindu)
1889 ஆம் வருஷம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முக்திக்குளம் அருவியிலிருந்து கோவைக்கு நீர் கொண்டு வருவதை பற்றி ஒரு கருத்தரங்கம் நடத்தி அவர் ஐடியாவை விளக்கினாரு. அந்த முக்திக்குளம் அருவி நீருடன், பாம்பாறு, பாட்டியாறு ஆகிய நதிகளின் நீரும் சேர்ந்து தான் சிறுவாணி நதியா அங்கே ஒடிட்டு இருந்தது. அந்த நதியில் இருந்து நீரை எப்படியாவது மலைகளை குடைஞ்சு இங்கிட்டு கொண்டு வந்து நொய்யல் நதியோட சேர்த்து விடணும்ன்றது தான் ஐடியா.

ஆனா நிதி பற்றாக்குறை காரணமா அந்த திட்டம் அப்போது தொடங்கப்படலை.  திட்டம் பெண்டிங்.

1913 ஆம் வருஷம்.

கோவையின் மாநகராட்சி கவுன்சிலராகவும் பின்னர் சேர்மேனாகவும் இருந்த திரு C.S ரத்தின சபாபதி முதலியார் (இவர் பெயரில் தான் இப்போது R S புரம் பகுதிக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது – ரத்தின சபாபதி புரம்) சிறுவாணி திட்டத்தை தன் கையில் எடுத்தாரு. அந்த தண்ணீரை கோவைக்கு கொண்டு வருவதற்காக ‘The South Indian Railway Company’ எனும் நிறுவனத்துக்கிட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனா அவங்க என்ன காரணத்தாலோ அந்த திட்டத்தை கைவிட்டு, நீலகிரி மாவட்டத்துல இப்போதிருக்கும் குந்தா பைக்காரா நீர் மின் திட்டங்களை செயல்படுத்த போயிட்டாங்க. மீண்டும் திட்டம் பெண்டிங்.

ஆனா ரத்தின சபாபதி முதலியாரின் இடை விடா முயற்சியால், 1929 ஆம் வருஷம் ஏப்ரல் 26 ஆம் தேதி சிறுவாணி நீர் கோவைக்கு குடிநீரா சப்ளை செய்யப்பட்டது. மொத்தம் 110 குடிநீர் குழாய்கள் தான் அப்போது இருந்தது.

1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்கு பின் 1956 ஆம் வருஷம் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அதுவரை ஒருங்கிணைந்த சென்னை மாகாணமா இருந்த பகுதி, தமிழகம் கேரளம் ஆந்திரம் கருநாடகம் என பிரிந்ததில், சிறுவாணி நதி முழுமையாக கேரளத்திடம் சேர்ந்துவிட்டது. அதோடு கோவைக்கான நீர் ஆதாரம் பணால்.

1973 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வரா இருந்த கலைஞர் அவர்கள் கோவையின் இந்த நிலைமையை கருத்தில் கொண்டு மீண்டும் சிறுவாணி நீரை கோவைக்கு கொண்டுவரவேண்டும் என முயற்சி செய்து அப்போதைய கேரள முதல்வருடன் பேசி சிறுவாணியில் ஒரு சின்ன செக் டேம் கட்டுவது எனவும் அதன் மூலம் நீரை கோவைக்கு கொண்டு வருவது எனவும் முடிவானது.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம், சட்டப்படியும் புவியியல் படியும் சிறுவாணி நதி முழுக்க முழுக்க கேரளாவுக்கு சொந்தமானது. ஆனால் அப்போதைய தமிழக கேரள அரசின் சுமூகமான உறவின் அடிப்படையில் அவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தர சம்மதித்ததோடு, அதற்கு வசதியாக சிறுவாணியில் புதியதாக ஒரு அணையையும் கட்டி நீர் தேக்கி அதன் மூலம் கோவைக்கு தண்ணீர் வசதி கொடுத்தார்கள்.
 
Siruvani Check Dam
திமுக அரசின் இந்த முயற்சிக்கு அதன் பின்னர் வந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அரசும் தொடர்ந்து ஆதரவு அளித்து 1984 ஆம் வருஷம் சிறுவாணி அணை திறக்கப்பட்டது. இந்த அணையை கட்டியது கேரள பொதுப்பணி துறை. அணையை நிர்வகித்து வருவதும் அவர்களே. கேரளாவில் உற்பத்தியாகி, கேரளாவிலேயே ஓடி, கேரளாவில் முடியும் சிறுவாணி நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர் கொடுக்கவேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக தான் இந்த அணை கட்டப்பட்டது. இது ரொம்ப முக்கியமான விஷயம்.. பின்னர் நாம் விவாதிக்க இருக்கும் விஷயங்களுக்கு எல்லாம் இதை மனதில் வைத்து வாசிக்க வேண்டி இருக்கும்.

இப்போதைய பிரச்சனை:

சரி.. இப்போ என்ன திடீர் பிரச்சனைன்னு தானே அடுத்த கேள்வி? அதையும் பார்க்கலாம்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடகம் 218 tmc நீரை திறந்துவிட்டு அதன் மூலம் தமிழகத்துக்கு 205 tmc நீரும், புதுவை மாநிலத்துக்கு 7 tmc நீரும் கேரள மாநிலத்துக்கு 6 tmc நீரும் கொடுக்கணும். அந்த தீர்ப்பை கர்நாடகம் மதிக்கலைன்னு தமிழகம் புதுவை மாநிலங்கள் பல காலமா  போராடிட்டு வருது என்பது நமக்கு தெரியும். அதன் ஒரு பகுதியா தான் கேரளா இந்த அணை கட்டுது. என்ன கொழப்பமா இருக்கா?

தமிழகம் கர்நாடகாவில் இருந்து கிடைக்கும் நீரில் இதுவரை கேரளாவுக்கு உரிய பங்கை கொடுக்கலை. இது தொடர்பா கேரளம் எழுதிய பல கடிதங்களுக்கு தமிழகத்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதனால், கேரளாவின் 6 tmc நீரை தமிழகத்திடமிருந்து எடுத்துக்கலாம்னு நடுவர் மன்றம் மூலமா அனுமதி வாங்கிட்டாங்க. அதாவது காவிரியின் நீர் வரத்தில் பவானியின் பங்கும் உள்ளது. அதே மாதிரி பவானியின் நீர் வரத்தில் கேரளாவின் பங்கும் உள்ளது. அதனால் மேல் பவானி நீர்ப்பிடிப்பு பகுதியின் அருகிலுள்ள சோலையூர் & அகழி பகுதிகளில் சிறுவாணிக்கு குறுக்கே ஒரு சின்ன செக் டேமை கட்டி 6 tmc நீரை எடுத்துக்கறது தான் கேரளாவின் திட்டம். இதன் மூலம் கேரளாவின் அட்டப்பாடி அகழி சோலையூர் மன்னார்க்காடு பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும். (இப்போ அந்த பகுதிகள் வறட்சியான பகுதிகளா இருக்கு. அதிலும் அட்டப்பாடி மக்களின் வாழ்க்கை நிலை. கொடுமையிலும் பெரும் கொடுமை..! அதெல்லாம் தனியா இன்னொரு பதிவு எழுத வேண்டிய அளவுக்கு விஷயம் உள்ள கட்டுரை).

இந்த சின்ன செக் டேம் மூலம் பவானிக்கு போகும் நீரில் 6 tmc தடுக்க முடியும், அதாவது பவானி மூலம் காவிரிக்கு போகும் 6 tmc. அப்படியாக காவிரியிலிருந்து கேரளாவிற்கு சட்டப்படியா கிடைக்க வேண்டிய நீர் கிடைச்சிரும். இது தான் ஐடியாவின் சுருக்கம். இது சட்டப்படியும், நியாயப்படியும், காவிரி நடுவர் மன்றத்தின் படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும் சரி தான். இதை எதிர்க்க எந்த நியாயமும் இல்லை.

கேரளா அணை கட்டுவதா சொல்லப்படும் இடம் என்பது கேரள பகுதிக்குள்ளேயே தான், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்திடம் அணை கட்ட அனுமதி கேட்கனும்ன்றது கட்டாயமில்லை. (இருமாநிலத்துக்கு இடையிலான நதியான பவானியில் நாம் சில அணைகள் கட்டி இருக்கிறோம், எதற்கும் கேரளாவின் அனுமதி கேட்கவில்லை என்பதை ஒரு ஓரமா நினைவில் வெச்சுக்கோங்க). 

என்றாலும் கூட, அணை கட்டும் பகுதி தமிழக எல்லையில் இருந்து 5 கி.மீ சுற்றளவுக்குள் இருப்பதால், தார்மீக அடிப்படையில் தானாக முன்வந்து தமிழகத்துக்கு கடிதம் எழுதி நாங்க இப்படி அணை கட்ட போறோம். இதில் உங்களுக்கு எதுனா ஆட்சேபனை இருக்கான்னு கேட்டுச்சு கேரளா.

உங்களுக்கே தெரியுமே? தமிழகத்தில் அரசு செம்ம தூக்கத்தில் இருப்பதால் அதற்கு பதில் எதுவும் கொடுக்கலை. பல நினைவூட்டல் கடிதங்கள் (அதாங்க ரிமைண்டர்) அனுப்பியும்  எந்த பதிலும் வரலை. இந்த விஷயத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு போச்சு கேரளா. மத்திய அரசும் பல கடிதங்கள் அனுப்பிச்சுச்சு. அதுக்கும் பதில் இல்லை.

கடைசியா, கடந்த மே மாசம் 4 ஆம் தேதி கேரள கூடுதல் முதன்மை செயலாளர் தமிழகத்துக்கு கடிதம் எழுதி, ஜூலை மாசத்துக்குள் பதில் வேணும்னு கேட்டாரு. ம்ஹூம்.. நாம எந்த பதிலையும் கொடுக்கலையே.

ஆகஸ்ட் 11, 12 தேதிகளில் மத்திய நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர் மின் திட்டங்களுக்கான நிபுணர் குழு கூட்டம் கூடிச்சு. சிறுவாணி விவகாரத்தில் உள்ள தற்போதைய நிலைமைய ஆராய்ந்து, தமிழகம் இத்தனை நாளா பதில் அனுப்பலைன்னா அவங்களுக்கு அங்கே அணை கட்டுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லைன்னு அர்த்தம்னு சொல்லி (யெஸ்... தட் மௌனம் சம்மதம் மொமெண்ட்) கேரளா அங்கே அணை கட்டிக்கலாம்னு அனுமதி கொடுத்துச்சு.

அப்பவும் தமிழக அரசு சைலன்ட் மோடில் தான் இருந்துச்சு.

விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் விஷயத்தை கையில் எடுத்து போராட தொடங்கினப்பத்தான் (அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் வருவதும் சட்டுனு ஞாபகத்துக்கு வந்து?) தமிழக அரசு மத்திய அரசுக்கு திடீர்னு ஒரு கடிதம் அனுப்பி இருக்கு. அணை கட்ட கொடுத்த அனுமதியை ரத்து செய்யுங்கன்னு.


நமக்கு ஆட்சேபனை இருக்குனு ஒரு கடிதத்தை ஜூன் மாசமே அனுப்பி இருந்தால் அணை கட்ட மத்திய அரசு அனுமதியே கொடுத்திருக்க மாட்டாங்களேன்னு லாஜிக்கா சிந்திக்கிற திறன் நமக்கு இல்லாததால், எல்லோரையும் போல மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் அதிரடி கடிதத்தை ஆராதிச்சபடி ஒவ்வொரு நாளையும் கழிச்சுட்டு இருக்க வேண்டியது தான். நான் அப்படி தான் இருக்கிறேன். நீங்க?

Reference:




Saturday, June 20, 2015

விழிஞ்சம் துறைமுகம்

மீபத்தில் மீடியாவில் அதிகம் அடிபட்ட பெயர் விழிஞ்சம்

மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்காரி அவர்கள் கேரள அரசுக்கு விடுத்த ஒரு எச்சரிக்கை தான் அந்த பரபரப்புக்கு காரணம். அதாவது விழிஞ்சம் துறைமுக திட்ட பணிகளை உடனே துவக்காவிட்டால் அந்த துறைமுக திட்டத்தையே ரத்து செய்துவிட்டு அதை தமிழகத்துக்கு மாற்றி விடுவோம் என அவர் சொல்லி இருந்தார். அதனை தொடர்ந்து, கேரள அரசு மறுநாளே அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி விவாதித்து, திட்டத்தை துவக்க அனுமதியும் கொடுத்தது. அதனால் அந்த திட்டம் தமிழகத்துக்கு வராமல் விழிஞ்சத்திலேயே நிறைவேற்றப்படும் என்பது உறுதியாகிறது.

மத்திய அரசு ஏன் இந்த அளவுக்கு இந்த திட்டத்தில் உறுதியாக இருக்கிறது என்பதற்கு இரண்டு விதமான காரணங்கள் இருக்கிறது.

முதலாவது, இந்த திட்டத்தை செயல்படுத்தப்போவது அதானி குழுமம். அதனால் அவர்கள் நஷ்டமடைய கூடாது என்பதற்காக இந்த திட்டத்தில் மத்திய அரசு ஆர்வம் காட்டுவதாக சொல்கிறார்கள். அது ஒரு வகையில் உண்மையாக கூட இருக்கலாம். மிக பெரிய திட்டத்தில் முதலீடு செய்திருக்கும் எந்த ஒரு தொழில் நிறுவனமும் நஷ்டமடைவது இந்திய பொருளாதாரத்துக்கு நல்லதல்லவே.

இரண்டாவது காரணம் தான் யதார்த்தமானது. விழிஞ்சம் திட்டம் செயல்பட்டால் தான் இந்தியாவுக்கான கடல் முக்கியத்துவம் பெருகும். இந்திய பொருளாதார மேம்பாட்டுக்கும் இது அவசியம். இந்த திட்டம் இப்போதைய பாஜக கொண்டு வந்தது அல்ல. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிக்கான தொலை நோக்கு சிந்தனையில் கொண்டுவரப்பட்ட பலபல திட்டங்களில் இதுவும் ஒன்று.
 
விழிஞ்சம் துறைமுகம் - கட்டி முடிக்கப்பட்ட பின் (திட்டம்)
கேரள அரசு ஏன் தயங்குகிறது?  காரணம் இந்த திட்டம் அவர்களுக்கு மாநில அளவில் பல வகைகளில் சிக்கல். அதனால் இதை முன்னெடுப்பதில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

அதென்ன சிக்கல்?

இந்த திட்டம் தனியார் அரசு கூட்டு முயற்சியில் உருவாகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த துறைமுகம் பற்றிய முதல் திட்ட அறிக்கை கொடுத்தபோது, அது PPP (Private Public Partnership) மாடலில் தான் செயல்படுத்த உத்தேசித்தனர். இப்போது அது மாறி BOT (Build Own Transfer) மாடலில் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, அதானி நிறுவனத்துக்கு 30 வருடங்களுக்கு இந்த துறைமுகத்தில் உரிமை இருக்கும். திட்ட செலவான 6,595 கோடியில் 80% தொகையை அரசும் 20% தொகையை அதானி நிறுவனமும் செலவிடும்.


இந்த 80% தொகை என்பது நிலம் கையகப்படுத்துதல், நிலம் சமநிலைப்படுத்துதல், அகழ்தல் (துறைமுகம் 18 மீட்டர் ஆழத்துக்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது), கட்டுமானத்துக்கு ஏற்ற வகையில் அந்த பகுதியை உறுதி படுத்துதல், இந்த திட்டம் காரணமாக இடம் மாறும் கிராமங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்தல், வாழ்வாதாரம் பாதிக்கும் மீனவர்களுக்கான மாற்று தொழில் ஏற்பாடுகள், நஷ்ட ஈடுகள் என பல செலவுகள் அரசுக்கு. அதானி செலவிடும் 20% தொகை என்பது துறைமுக கட்டுமானம், பராமரிப்பு ஆகியவைகளுக்கான செலவுகள்.

ஆனால், வருவாய் வருமானத்தில் 90% அதானிக்கு 10% அரசுக்கு. அதாவது 21,346 கோடி அதானிக்கும் 2,181 கோடி அரசுக்கும் வருவாய் பங்கு தொகையாக கணக்கிடப்பட்டு உள்ளது. சுருக்கமாக பார்த்தால் 5,276 கோடி செலவிடும் அரசுக்கு 30 ஆண்டுகளில் 2,181 கோடியும், 1,319 கோடி செலவிடும் அதானிக்கு அதே 30 ஆண்டுகளில் 21,346 கோடியும் வருவாயாக கிடைக்கும்.

விழிஞ்சம் துறைமுக திட்ட வரைபடம் 

இந்த பொருளாதார நஷ்டம் தவிர, வாழ்வாதாரம் பாதிக்கும் எளிய மீனவர்களின் வெறுப்பையும் கேரளா அரசு சம்பாதிக்கவேண்டும். துறைமுகம் அமைய இருக்கும் பகுதி மீனவர்களின் கிராமங்கள் அடங்கிய பகுதிகளாக்கும். திருவனந்தபுரத்திலிருந்து 12 கிமீ தூரம் தான். இந்த துறைமுகம் வருவதால், அடிமலத்துறை, சொவ்வாரா, சபத்து, அழிமலா, புளியங்குடி, முல்லூர், நெல்லிக்குன்னு, தோட்டம், கரிம்பள்ளிக்கரா, கொட்டாப்புரம் ஆகிய கிராமங்கள் காலி செய்யப்படும். அவர்களுக்கான மாற்று வாழ்வாதாரமும் அரசின் பொறுப்பு. அதனால் தான் அவர்கள் இதுவரை தயங்கினார்கள்.

அப்படி என்ன இந்த துறைமுகம் அவ்வளவு அவசியம்?

தீபகற்ப இந்தியாவில் இருக்கும் இரண்டு முக்கிய துறைமுகங்கள் சென்னை & கொச்சி. இரண்டும் இருவேறு கரைகளில் இருப்பதால் தாய் கப்பல்கள் அதிகம் இந்த துறைமுகங்களுக்கு வருவதில்லை. இப்போதைக்கு உலகின் எல்லா முக்கிய தாய் கப்பல்களும் இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்துக்கு தான் வந்து செல்கிறது. அங்கிருந்து, சிறிய துணைக்கலங்கள் மூலம் கொச்சி, தூத்துக்குடி, சென்னை துறைமுகங்களுக்கு சரக்குகள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் நேர விரையம், செலவும் கூடுதல்.

கொச்சின் துறைமுக வரைபடம் 

இந்தியாவுக்கு என ஒரு சர்வதேச துறைமுகம் வேண்டும் என்பது ஒரு நீண்ட கால ஆசை நமக்கு. ஆனால் அதற்கான பொருத்தமான இடம் எது என்பதில் நிறைய கருத்து வேறுபாடுகள். கொச்சி துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்றும் எண்ணம் முன்வைக்கப்பட்டபோது பலத்த வரவேற்பு கிடைத்தது. ஆனால் கிழக்கிலிருந்து வரும் கப்பல்கள் அங்கே வருவதற்காக இந்திய தீபகற்பத்தை சுற்றி வரவேண்டி இருந்ததால் பல தாய் கப்பல்கள் அங்கே வர விரும்பவில்லை. மேலும் கொச்சி துறைமுகம் ஒரு சிக்கலான அமைப்புக்குள் இருக்கிறது. சுற்றி சிறு சிறு தீவுகள் அடங்கிய பகுதிக்குள் இருப்பதால் பல பெரிய கப்பல்கள் அங்கே வருவதில்லை. இப்போதைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜெபெல் அலி துறைமுகத்திலிருந்து ஒரே ஒரு நேரடி சேவை மட்டும் தான் கொச்சி துறைமுகத்துக்கு உள்ளது. மற்றவை எல்லாம் கொச்சி – மும்பை; கொச்சி – கொழும்பு தான். இதில் கொழும்புக்கு தான் அனைத்து சரக்குகளும் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து அவை தாய்க்காலங்களுக்கு மாற்றி உலகின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

தூத்துக்குடி துறைமுகம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சிக்கி இருக்கும் பால்க் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா ஆகியவற்றின் நீரிணையில் இருப்பதால் இங்கேயும் தாய்க்கலங்கள் அதிகம் வருவதில்லை. தூத்துக்குடி துறைமுகம் வெறும் 12.80 மீட்டர் ஆழம் தான். சேது சமுத்திர திட்டம் செயல்பட்டிருந்தால் ஒருவேளை தாய்க்கலங்கள் வந்து போக வசதி இருந்திருக்கும். ஆனால் இப்போதைய தமிழக அரசு தமிழகத்துக்கு சேது சமுத்திர திட்டம் தேவை இல்லை என உச்ச நீதிமன்றத்திலேயே தெரிவித்திருப்பதால், அந்த திட்டம் என்ன ஆகும் என்பது தெரியவில்லை. இப்போதைக்கு தூத்துக்குடி – கொழும்பு துணைக்கப்பல்கள் மட்டுமே இயங்குகிறது. OOCL & Maersk நிறுவனங்கள் சிறிய ரக தாய்க்கப்பல்களை சில காலம் இயக்கி பார்த்தனர். ஆனால் அதற்கு அதிக வரவேற்பு இல்லாததால் அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. தூத்துக்குடி துறைமுகமும் கிழக்கு கரையில் இருப்பதால் மேற்கிலிருந்து வரும் கப்பல்கள் தீபகற்பத்தை சுற்றி வர வேண்டி இருக்கிறது. அதை விட அவர்களுக்கு கொழும்பு எளிதானது என்பதால் அங்கேயே எல்லா சரக்குகளையும் கையாள்கிறார்கள்

அடுத்தபடியாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் துறைமுகம் அமைக்கும் யோசனை கொண்டுவரப்பட்டது. இங்கு 12.5 முதல் 13.7 மீட்டர் ஆழம் வரை தோண்ட முடியும். ஆனாலும் விழிஞ்சம் 18 மீட்டர் ஆழம் என்பதால் அது தான் மிக சரியான இடமாக இருக்கும். குளச்சலும் விழிஞ்சமும் தீபகற்ப முனையின் அருகில் இருப்பதால் மேற்கு-கிழக்கு வழி செல்லும் கப்பல்கள் வந்து செல்வதில் எந்த சிரமமும் இருக்காது. ஆனால் குளச்சல் துறைமுக திட்டத்துக்கு தமிழகத்திலேயே நிறைய எதிர்ப்பு வந்ததால் அது தீவிரமாக முன்னெடுத்து செல்லப்படவில்லை. அதனால் அங்கே சிறு மீன்பிடி துறைமுகம் மட்டும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இப்படி தான் விழிஞ்சம் துறைமுக திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. திட்ட பணிகள் துவக்கப்படும் என உறுதியானவுடன் திடீரென்று தமிழகத்தில் ஒரு மெல்லிய எதிர்ப்பு குரல் எழும்பி இருக்கிறது. நாம் தான் எதையாவது எதற்காவது எதிர்த்துக்கொண்டே இருப்போமே. அந்த மாதிரி. ஏன் கேரளாவுக்கு துறைமுகம்? தூத்துக்குடியை டெவலப் செய்யலாமே என்றெல்லாம் கேள்விகள்.

தூத்துக்குடி ஏற்கனவே சொல்லப்பட்டது போல நீரிணையின் இடையில் சிக்கிக்கொண்டதாலும், நாகை & சென்னை துறைமுகங்கள் கிழக்கு கரையில் அமைந்ததாலும் அங்கே அத்தனை செலவு செய்து துறைமுகம் அமைத்தாலும் அது சர்வதேச கடல் பயணங்களுக்கு உதவாது. அப்போதும் கொழும்பு தான் வசதியான துறைமுகமாக இருக்கும்.

விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து வழி தடங்கள் 

இப்போது விழிஞ்சம் துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்தால் கொழும்பு செல்லும் தாய் கப்பல்களை விழிஞ்சத்துக்கு ஈர்க்க முடியும். சென்னை, தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்களிலிருந்து இப்போது கொழும்பு வழியாக செல்லும் நமது சரக்குகள் விழிஞ்சம் வழியாக செல்ல முடியும். அது இந்திய பொருளாதாரத்தை அதிவேகமாக உயர்த்தும். கிழக்கு-மேற்கு கடல் வழி தடத்தில் பயணிக்கும் கப்பல்களுக்கான முக்கிய நிருத்தமாக விழிஞ்சம் உருவாகும். மேலும் விழிஞ்சத்தில் இருந்து ஜெபெல் அலி வழியாக மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளுக்கும் அதன் நீட்சியாக ஐரோப்பிய நாடுகளுக்கும் புதிய விரைவான கடல் வழித்தடம் உருவாகும்.

இன்னொருபுறம், உள்நாட்டில் விழிஞ்சம் நோக்கிய போக்குவரத்து அதிகரிப்பதால், தமிழகம் கேரளம் ஆகிய இறுமாநிலங்களிலும் உள்கட்டமைப்பும் சாலைகளும் மேம்படும். அதை சார்ந்து பெரும் தொழில் வளர்ச்சிக்கும் வாய்ப்பு உள்ளது.

இப்படி பல நன்மைகள் இந்த திட்டத்தில் இருக்கிறது.


அந்த ஒரு காரணத்துக்காகவே இந்த திட்டத்தை நான் மிகவும் எதிர்பார்க்க தொடங்கி இருக்கிறேன்.

Printfriendly