Tuesday, September 26, 2017

ஜெ.மரணம் - எங்கே நேர்ந்த தவறு?


திண்டுக்கல் சீனிவாசன்

இந்த பெயர் தான் சில நாட்களாக மிக பிரபலம்


முதல்வராக இருந்த ஜெ. உடல்நிலை குன்றி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபின் நடந்த அத்தனை நாடகங்களும் நாம் அறிந்ததே. இப்போது சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாகவே சில விஷயங்களை சொல்லி இருக்கிறார்.

அதாவது, ஜெ. அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு இருந்த கால கட்டத்தில் அவரை நாங்கள் யாரும் பார்க்கவே இல்லை. அவர் இட்லி சாப்பிட்டார் என்று நாங்கள் சொன்னது எல்லாமே மக்களை பதட்டப்படாமல் வைத்திருப்பதற்காக சொல்லப்பட்ட பொய். என பட்டென்று போட்டு உடைத்திருக்கிறார்.

இதன் மூலம் இப்போது மீண்டும் பல பல கேள்விகள் முளைத்து எழுகின்றன.

வெறும் காய்ச்சல் & நீர்ச்சத்து குறைபாடு என சேர்க்கப்பட்ட ஜெ.வுக்கு உண்மையில் என்ன தான் பிரச்சனை?

அப்பல்லோவில் கடைசி வரை கூடவே இருந்து கவனித்து கொண்டது யார். (தினகரன் இப்போது திடீரென்று அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சசிகலாவை கூட அனுமதிக்கவில்லை என சொல்வதை பார்த்தால் தனியாக கவனிப்பார் யாருமின்றி தான் சிகிச்சை பெற்றாரா?)

உடல் நலம் பெற்று ஓய்வில் இருப்பதாகவும், காவிரி வழக்கு விஷயமாக அப்பல்லோவிலேயே அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியதாகவும், வழக்கறிஞர்களுக்கே வழிகாட்டியதாகவும் செய்தி வெளியிடவேண்டிய நோக்கம் என்ன?

வெறும் மூன்று நாள் தான் சுயநினைவோடு இருந்தார் என தீபக் இப்போது சொல்வது உண்மையானால், இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வை ஜெ.தான் செய்தார் எனவும், தேர்தல் ஆணயத்துக்கான பிரமாண பத்திரத்தில் ஜெ. தான் கைரேகை பதித்தார் எனவும் அதற்கு அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி சாட்சி எனவும் ஒரு தகவல் வெளியிடப்பட்டது எதற்காக?

ஆளுநர், அமைச்சர்கள் ஏன் அவரது மெய்க்காப்பாளர்கள் கூட பார்க்க அனுமதிக்க மறுக்கும் அளவுக்கு அவருக்கு என்ன நிலைமை?

இன்னும் இது போன்ற பல விவகாரமான கேள்விகள் எல்லாம் வராமல் இல்லை.

அப்போதே பலரும் இது பற்றிய சந்தேகங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர். திமுக தலைவர் கலைஞர் இன்னும் ஒரு படி மேலே போய், அரசு அதிகாரிகள் நியாயமாக வெளியிட்டிருக்கவேண்டிய அறிக்கைகள், புகைபடங்கள் கூட வெளியிடாமல் மவுனம் காப்பது ஏன் என்றே கூட கேள்வி எழுப்பி இருந்தார்.

***

ஜெ. குறித்த சின்ன சின்ன செய்திகள் வந்தப்பவே அதைப் பற்றி விசாரிக்கறதை விட்டுட்டு அப்படி தகவல் தருவோர் மீது நடவடிக்கைன்னு போலீஸ் அறிவிச்சதை விட முட்டாள்த்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

போலீஸ், அரசின் கீழ் வந்தாலும் அவர்களுக்கு என்று சில கடமைகள் இருக்கு. சட்டத்தையும் அரசியல் சாசனத்தையும் காப்பாற்றும் பொறுப்பும் உண்டு.

தனது துறை அமைச்சரே தவறு செய்தாலும் அதை உளவுத்துறை மூலம் கண்காணித்து விசாரித்து நடவடிக்கை எடுத்து சட்டத்தை காக்கும் பொறுப்பு போலீசினுடையது.


ஆனால் ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனே, ஏன் எதனால் என்றெல்லாம் விசாரித்து எங்கேனும் தவறு நடக்கிறதா என கண்காணித்திருக்கவேண்டிய போலீஸ், வாளாவிருந்தது மட்டுமல்ல, அவர் பற்றிய தகவல்களை கூட மறைத்துவிட்டது.

அரசுகள் மாறலாம். ஆனால் அரசு அதிகாரிகள் நிரந்தரம். அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமலும் கூட அரசு அதிகாரிகள் செயல்படமுடியும். அதனால் தான் அவர்கள் மாநில ஆட்சிப்பணியின் கீழ் அல்லாமல் மத்திய ஆட்சிப்பணியின் கீழ் வருகிறார்கள்.

அவர்களாவது ஜெ. குறித்து விசாரித்து தேவையான நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். தலைமைச்செயலாளர் தான் அதற்கான பொறுப்பாளர்.

கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அதிகாரிகளும் போலீஸ் துறையும் தத்தம் கடமைகளில் இருந்து தவறியதாலேயே நம் முக்கியமான தலைவரை நாம் இழந்திருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்போதேனும் சட்டரீதியான நடவடிக்கைகளை கடமைகளை உடனடியாக எடுத்து நடந்த உண்மைகளை மக்களுக்கு தெரிவிப்பதுடன், யாரேனும் இதற்கு காரணமாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும்.

அதுதான் அவர்கள் வாங்கும் சம்பளத்துக்கும் இந்திய சட்டம் அவர்களுக்கு வழங்கிய அதிகாரத்துக்கும் அழகு!

***

இப்போது தமிழக அரசு நீதியரசர் ஆறுமுகசாமி அவர்களை விசாரணை நீதிபதியாக அறிவித்து இருக்கிறது.

ஜெ.வுக்கு என்ன நடந்தது, ஏன் எல்லோரும் அனுமதி மறுக்கப்பட்டனர், அத்தனை நாளும் நடந்த விஷயங்கள் யார் கட்டுப்பாட்டில் நடந்தது, அரசு அதிகாரிகளும் போலீசும் ஏன் இப்படி மொத்தமாக கடமை தவறி அடங்கி இருந்தார்கள் என்பன போன்ற கேள்விகளுடன், எயிம்ஸ், லண்டன் டாக்டர், அப்பல்லோ கொடுத்த சிகிச்சை விவரங்களையும் நீதிபதி வெளிக்கொணர்ந்து ஆராய வேண்டும்.

ஜெ. தமிழகத்தின் மிகப்பெரிய தலைவர். பெரும்பாலான மக்களால் நேசிக்கப்பட்டவர். அவரது இழப்பில் உள்ள மர்மங்களையும், அதற்கான சதிகள் ஏதும் இருந்தால் அதையும் வெளிக்கொண்டு வருவதோடு, கடமை தவறிய அரசு அதிகாரிகள், உண்மை தெரிந்தும் மறைத்த மற்ற பெரும் தலைவர்கள் என எல்லோர் மீதும் தண்டனைக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆசை.

நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் இது தான் நடந்தது.. இவர்கள் தான் காரண கர்த்தாக்கள்.. இவர்கள் எல்லோரும் அதற்கு உடந்தை.. இவர்களுக்கு எல்லாம் இது தான் தண்டனை என்கிற பரிந்துரையேனும் குறைந்தபட்சம் தமிழக மக்கள் எதிர்பார்ப்பதில் எந்த தவறுமில்லை.

நீதிபதி ஆறுமுகசாமி அவர்கள் அதை தக்க விதத்தில் சட்டத்திற்குட்பட்டு  பரிந்துரைப்பார் என்கிற நம்பிக்கையுடன் காத்திருப்போம்!


Tuesday, September 12, 2017

நவோதயா பள்ளியும் தமிழகமும்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை சமீபத்தில் அளித்த தீர்ப்புக்குப் பின் சட்டென தமிழகத்தில் ரெண்டு நாளா ஒரு பரபரப்பு நவோதயா பள்ளிகள் பற்றி!

நீதி அரசர்கள் சசிதரன் அவர்களும் சுவாமிநாதன் அவர்களும் வழங்கிய தீர்ப்பில், "மத்திய அரசு தமிழை ஒரு கட்டாய பாடமாக கற்பிக்க முடிவு எடுத்திருப்பதால் இனியும் இழுத்தடிக்காமல் தமிழகத்தில் நவோதையா பள்ளிகளுக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும்" என தமிழக அரசுக்கு உத்தரவு இட்டிருக்கிறார்கள்.

அதென்ன நவோதயா பள்ளிகள்?

1986 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இந்த ஜவஹர்லால் நவோதயா பள்ளிகள்’. பின் தங்கிய மாவட்டத்தில் கல்வி வசதி கிடைக்கப்பெறாத குந்தைகளுக்கு கல்வி வழங்கும் நோக்குடன் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பள்ளி வீதம் தொடங்கப்பட்டு அவர்களுக்கான உண்டு உறைவிட பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது இந்த திட்டம்.

ஆனால் இப்போது நன்கு படிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை மேலும் மெருகேற்றும் நோக்கத்தோடு செயல்படும் ஒரு கோச்சிங் சென்டர் போல பல இடங்களிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

மாநில அரசு 30 ஏக்கர் நிலம் கொடுத்தால் (?) அதில் மத்திய அரசு இந்த நவோதையா பள்ளிகளை அமைத்து, அந்தந்த மாவட்டத்தில் உள்ள நல்ல மாணவர்களை தேர்ந்தெடுத்து ஹாஸ்டலில் தங்கவைத்து படிக்கவைத்து பாசாக்குவது தான் இந்த நவோதையா முறை.

அதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்ன என்றால், இங்கே 6 ஆம் வகுப்பில் இருந்து தான் மாணவர் சேர்க்கையே ஆரம்பிக்கிறது. அதாவது 5 ஆம் வகுப்பு வரை மாநில கல்வியில் படித்து, அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே ஆறாம் வகுப்பில் நவோதையா பள்ளிகளில் சேர முடியும். இதற்கென தனியாக தகுதி தேர்வும் உள்ளது. அதில் நல்ல மதிப்பெண் எடுப்பவர்கள் மட்டுமே இந்த பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

உதாரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டில் தகுதி தேர்வு எழுதிய 18.78 லட்சம் பேரில் தேர்வு பெற்றவர்கள் வெறும் 41 ஆயிரம் பேர் தான். அதாவது தேர்ச்சி விகிதம் வெறும் 2%. அப்படி எனில் அந்த பாட திட்டத்தின் கடுமை புரியும்.

அதாவது மாநில கல்வி திட்டத்தில் நல்ல மதிப்பெண் வாங்குவோரை மட்டுமே தேர்ந்தெடுத்து அவர்களுக்காகவே நடத்தப்படும் ஒரு மத்திய அரசு பள்ளி... அவ்வளவு தான் நவோதையா!

1985-86 கல்வி ஆண்டில் 2 பள்ளிகளுடன் தொடங்கிய இந்த திட்டம் இப்போது 598 பள்ளிகளை கொண்ட பெரும் அமைப்பாக வளர்ந்திருக்கிறது. (660 பள்ளிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.. அதில் 586 தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது).


தமிழகம் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் இந்த பள்ளிகள் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் அனுமதி கொடுக்காமல் இருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் சமீபத்தில் அனுமதி வழங்க சொல்லி தீர்ப்பு கொடுத்திருக்கிறது மதுரை நீதிமன்றம்.

தமிழகம் ஏன் இதை எதிர்க்கிறது?

முதலில் சொல்லப்பட்ட விஷயம், இந்த பள்ளிகள் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது. அதாவது ஆங்கிலம் & ஹிந்தி மட்டும் தான் பயிற்று மொழி. மாநில மொழிக்கு இடமில்லை என்பது. ஆனால் இப்போது மத்திய அரசு, "மாநில மொழி பயிற்றுவிக்க தயாராக இருப்பதாகவும் 6-10 ஆம் வகுப்பு வரை தமிழை கட்டாயம் ஆக்குவதாகவும், 11,12 ஆம் வகுப்புக்கு தமிழை விருப்ப பாடமாக அனுமதிப்பதாகவும்" சொல்லி இருக்கிறது.

ஆனால், எப்படியும் ஹிந்தியும் ஆங்கிலமும் தான் முக்கிய பயிற்று மொழி என்பதை மறுப்பதற்கில்லை. அலுவல் மொழியான ஹிந்தியை வளர்ப்பதற்கும் அதை மானவர்களிடத்தில் பரப்புவதற்கும் என தனியாக ஒரு குழுவே இந்த நவோதயா பள்ளிகளில் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இது மட்டுமே காரணமாக இருக்க முடியாது.

ஹிந்தி மட்டும் தான் காரணம் எனில் திமுக ஆட்சி செய்த 1989-1991; 1996-2001; 2006-2011 ஆகிய காலகட்டத்தில் அனுமதி கொடுக்காமல் இருந்ததற்காக அதை காரணம் காட்டிக்கொள்ளலாம்.

ஆனால் 1986 என்பது எம்.ஜி.ஆர் ஆட்சி. அதன்பின் 1991-1996; 2001-2006; 2011-2017 என ஜெயலலிதா ஆட்சி செய்த காலத்திலும் கூட நவோதயா பள்ளிகளுக்கு தமிழகம் அனுமதி கொடுக்கவில்லை.

இதை புரிந்துகொள்ள வேண்டும் எனில் தமிழகம் திராவிட இயக்கங்களான அதிமுக திமுக ஆகியோரின் ஆட்சி காலத்தில் எத்தகைய சமூக வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்பதை உணரவேண்டியது அவசியம்.

மற்ற மாநிலங்களை போலல்லாமல் தமிழகம், மாநிலம் முழுமையும் ஒட்டுமொத்த ஒருமித்த வளர்ச்சியை கண்து என்பதை மாநிலம் முழுக்க பயணித்தவர்களால் உணர முடியும்.

தமிழகத்தில் அனைத்து குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்பதில் எல்லா ஆட்சியாளர்களுமே கவனமாக இருந்தார்கள்.

மதிய சாப்பாட்டுக்கு வழியில்லையா – அரசு கொடுக்கும்
உடை வாங்க வசதி இல்லையா – அரசு கொடுக்கும்
புத்தகங்கள் வாங்க சிரமமா – அரசு கொடுக்கும்
பயணிக்க தூரமாக இருக்கிறதா – இலவசமா பஸ் பயணம் அரசு தரும்
பஸ் வசதி இல்லாத பகுதியா – இலவசமாக சைக்கிள் தரும்
பயிற்சி செய்ய கணினி இல்லையா – அரசு லேப்டாப் தரும்

இப்படி மாணவர்கள் படிப்பதற்கு என்னென்ன சிரமங்கள் உள்ளதோ அத்தனையையும் அரசு ஏற்றுக்கொள்கிறது. எதற்காக. மாணவர்கள் படித்தால் மட்டும் போதும். அது அவர்களது எதிர்காலத்துக்கு பேருதவியாக இருக்கும் என்கிற நல்ல எண்ணத்தில் தான்.

இப்படி மாணவர்களுக்கு வசதிகள் செய்துகொடுத்து அவர்களை படிக்க வைக்கும் எந்த அரசாவது இந்தியாவில் இருக்கிறதா?

இந்த காரணங்களால், தமிழகத்தில் குக்கிராமங்களில் கூட, மலைப்பகுதிகளில் கூட அடிப்படை கல்வியும் உயர்கல்வியும் படித்த இளைஞர்களை சாதாரணமாக காண முடிகிறது.

ஆனால் ஜார்க்கண்டு, ஓடிஷா, சட்டீஸ்கார் போன்ற மாநிலங்களில் நிலைமை வேறு. அங்கே குழந்தைகள் படிக்க ஆசைப்பட்டாலும் அதற்கான வாய்ப்புக்கள் இல்லை. போதிய பள்ளிக்கூடங்கள் மாநில அரசுகள் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. போக்குவரது வசதி இல்லை. குடும்பங்களில் பொருளாதார வசதி இல்லை. எனவே பல குழந்தைகள் படிப்பதே இல்லை.

அவர்களை போன்றோர் இது போன்ற உண்டு உறைவிட பள்ளிகளில் சேர்ந்து அங்கேயே தங்கி படித்து முன்னேறுவது இயல்பு.

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அப்படி ஒரு துர்ப்பாக்கிய நிலை இல்லை. 5 கி.மீக்குள் எப்படியும் ஒரு உயர்நிலை பள்ளி இருக்கும். 10 கி.மீக்குள் எப்படியும் ஒரு மேல்நிலை பள்ளி இருக்கும். போக வர பஸ் அல்லது சைக்கிள் இருக்க, குடும்பத்தை விட்டு விட்டு ஹாஸ்டலில் தங்கி படிக்க தேவையே இல்லை.

அதை விட நான் முன்பே சொன்னது போல, 5 ஆம் வகுப்பு வரை படித்து அதில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களால் மட்டுமே நவோதயா பள்ளிக்களில் 6 ஆம் வகுப்பில் சேர முடியும். அதாவது ஓரளவு நடுத்தர வர்க்க அல்லது மேல்நிலை வர்க்க மாணவர்கள் என வைத்துக்கொள்ளலாம். அபூர்வமாக குக்கிராம பகுதிகளில் இருந்து வரும் அசாத்திய திறமை கொண்டவர்களையும் இதில் சேர்த்து கொள்ளலாம். அப்படியானவர்கள் மட்டுமே படிக்க வசதி உள்ள ஒரு மத்திய அரசு பள்ளியை மாவட்டத்துக்கு ஒன்று என கொண்டு வர அனுமதிப்பதால் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு எந்த பயனும் இல்லை.

அதை விட மாநில பள்ளி கல்வி துறையின் பள்ளிகளிலேயே நல்ல முறையில் கல்வி கற்றுக்கொடுப்பதுடன், அனைத்து கிராமங்களிலும் பள்ளிகள் அமைக்கப்பட்டு இருப்பதாலும், அரசே கல்விக்கான பெரும்பாலான செலவை ஏற்றுக்கொள்வதாலும், நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் இல்லாதிருப்பதால் எந்த நஷ்டமும் இல்லை. நவோதயா வருவதால் எந்தவித லாபமும் இல்லை.

இதை தமிழகத்தை இதுகாறும் ஆண்டுவந்த அனைத்து ஆட்சியாளர்களும் தெளிவாக உணர்ந்திருந்ததால் தான் இன்று வரை நவோதையா பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

இனி தமிழக அரசு செய்யவேண்டியது என்ன?

புரட்சி தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் அரசு என மாண்புமிகு தமிழக முதல்வர் சொல்லிக்கொள்வது உண்மையானால், மதுரை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து, மாநில உரிமையை நிலைநாட்ட முன் முயற்சி செய்யவேண்டியது அவசியம்.

தற்பொழுது தமிழகத்தில் உள்ள கல்விக்கூடங்களை மேம்படுத்தவும், கல்வி தரத்தை உயர்த்தவும் ஆவன செய்யவேண்டியதும் அவசியம்.

செய்வார்களா?

Wednesday, July 5, 2017

ஜி.எஸ்.டி – எனது பார்வையில் – 8

டந்த பதிவை முடிக்கும் பொழுது அரசு இதை அவசரம் அவசரமாக அமல்ப்படுத்துகிறது என சொல்லி இருந்ததையே பிறிதொரு நிகழ்வில் என் சமூக வலை தள விவாதத்திலும் வைத்திருந்தேன்.

அவ்வளவு தான்..

பலரும் வெகுண்டு எழுந்து விட்டார்கள்.

அதெப்படி இதை அவசரம் என சொல்லலாம்? கடந்த 20 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இந்தியாவில் இல்லை, இனியும் எத்தனை காலம் தான் காத்திருக்கவேண்டும்? என்றெல்லாம் செம காட்டு காட்டிவிட்டார்கள்.

நான் சொல்ல வந்த அவசரம் என்பது அதை அல்ல. தகுந்த முன்னேற்பாடுகளை செய்யும் முன்பாகவே அமல்படுத்தப்படும் அந்த முந்திரிக்கொட்டைத்தன அவசரம் என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதற்குள்...

ஜி.எஸ்.டி அமல்ப்படுத்தப்பட வேண்டும் என்பது வாஜ்பாயி காலத்திலேயே முடிவு செய்யப்பட ஒன்று. பின்னர் வந்த சிதம்பரம் அதை இறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கையையும் 2010 ல் எடுத்தபோது அதை கடுமையாக எதிர்த்து தடுத்து இந்தியாவின் வளர்ச்சியை 7 ஆண்டுகளுக்கு முடக்கி போட்டது யார் என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.

இன்று திடீர் ஞானோதையம் வந்து அவர்களே ஜி.எஸ்.டி தான் நாட்டுக்கு நல்லது என சொல்லி அமல்ப்படுத்த முனைந்தபோது எல்லோரையும் போலவே நானும் மகிழ்ந்தேன்.  ஆனால் அதில் அவர்களது தனிப்பட்ட கொள்கை சார்ந்த திருத்தங்களையும், இந்தியாவின் புவியியல் / கலாச்சார / வளர்ச்சி சார்ந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் பல்வேறு திருத்தங்களை செய்து ஜி.எஸ்.டியை ஜி.எஸ்.டியாக அல்லாமல் குழப்பி வைத்ததில் தான் எல்லோருமே நொந்து போனோம்.

சரி அப்படி குழப்பிய சட்டத்தையாவது ஒழுங்காக அமல்ப்படுத்தினார்களா என்றால் அதுவும் இல்லை.



கடந்த டிசம்பர் மாதத்திலேயே அறிவித்து விட்டார்கள், 2017 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி கட்டாயம் அமல் ஆகும் என்று. ஆனால் சில காரணங்களால் அது மூன்று மாதம் தள்ளி போய் ஜூலை 1 என அமல் ஆக தீர்மானிக்கப்பட்டது. அதாவது எதிர்பாராமல் கூடுதலாக 3 மாத அவகாசம் அரசுக்கு கிடைத்திருக்கிறது. அப்படி என்றால் ஜூலை 1 ஆம் தேதி 100% பக்காவாக இந்த சட்டம் அமல் ஆக்கப்பட்டிருக்கவேண்டும் தானே? ஏனெனில் ஏப்ரலுக்காக திட்டமிட்டு எல்லாவற்றையும் செய்ததாக சொல்லும் அரசு ஜூலை எனில் முழுமையாக எந்த குறையும் இல்லாமல் எல்லா வகையிலும் தயார் ஆகியிருக்கவேண்டும் தானே?

ஆனால் யதார்த்தம் வேறாக இருக்கிறது.

ஜூலை 1 ஆம் தேதி ஜி.எஸ்.டி அமல் படுத்தப்படும் பொழுது, ஜி.எஸ்.டிக்கு தேவையான அடிப்படை இணையதள கட்டமைப்பான GSTN (GST Network) நெட்வர்க்கே கூட முழுமை அடையவில்லை. இன்றைக்கும் அது முழுமை அடையவில்லை. மேலும் 2 மாதம் தேவைப்படும் என்பதால் செப்டம்பர் வரை தற்காலிக ரிட்டர்ன் தான் தாக்கல் செய்யவேண்டும் என அரசு சொல்லி இருக்கிறது. மீண்டும் செப்டம்பர் மாதம் GSTN செயலுக்கு வந்தபிறகும் ஜூலை ஆகஸ்ட் மாத ரிட்டர்னை மீண்டும் ஒரு முறை விரிவாக பதிவேற்ற வேண்டுமாம்.

கிட்டத்தட்ட 7 மாதங்களாக GSTN நெட்வர்க்கை தயார்செய்யாமல் 'டிஜிட்டல் இந்தியா' அரசு (!) தேமே என உட்கார்ந்திருந்தது எவ்வளவு பெரிய சிக்கலுக்குள் எல்லோரையும் தள்ளி இருக்கிறது என்பது தனி கதை.

GSTN இல்லாததால், E-WayBill எனப்படும் சரக்குகளை அனுப்பும் படிவமும் தயாராகவில்லை. அதற்குள்ளாக மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளை எல்லாம் வேறு மூடிவிட்டார்கள். எனவே முன்பு பதுங்கி பதுங்கி சென்ற வரி ஏய்ப்பாளர்கள் இப்போது தைரியமாக சரக்குகளை கொண்டு சென்று வந்து கொண்டிருக்கிறார்கள்.

GSTN இல்லாததால், அது எப்படி இருக்கும் என்பது தெரியாததால் எந்த மாதிரியான ரிட்டர்ன் தாக்கல் செய்யவேண்டி இருக்கும், அதற்கு தக்க மாதிரி எப்படி ரிப்போர்ட் தயாரிக்க வேண்டும் என்கிற எதையும் வணிகர்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை.  இத்தனைக்கும் ஜூலை மாத வர்த்தக விவரங்களை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் ரிட்டர்ன் மாடல் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

வணிகர்களின் கவலை எல்லாம், GSTN தயார் ஆகி, அதில் கேட்கப்படும் வடிவத்தில் வியாபார விவரங்களை ஸ்டேட்மெண்ட் ஆக தயாரித்து எடுக்கும் விதத்தில் தங்களிடம் உள்ள ERP மென்பொருளை மாறுவடிவமைத்து, அதில் இருந்து ரிப்போர்ட் எடுத்து, அதை ASP கேட்கும் வகையில் கொடுத்தால் தான் அவர்கள் அதை வைத்து GSTN வழியாக வரி தாக்கல் செய்ய முடியும்.

இப்போது வரை எந்த விவரமும் யாருக்கும் தெரியாது.. ஆனால் 20 நாளுக்குள் எல்லாம் நடைபெற வேண்டும் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்? இத்தனை மாதங்களாக என்ன தான் செய்து கொண்டிருந்தது அரசு?

ஏப்ரல் மாதம் முழுக்க எந்த GST Council கூட்டமும் நடத்தாமல் Vacation அனுபவித்து விட்டு மே 18,19 தொடங்கி ஜூன் 18 வரை தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி பல பல திருத்தங்களை கடைசி நேரம் வரையில் திருத்திக்கொண்டே இருந்த அரசின் அறிவிப்புக்களை அடிப்படையாக வைத்து 12 நாளில் எப்படி எல்லா மென்பொருளையும் மறுவடிவைக்கமுடியும்?

இதனால் தான் பல வணிக அமைப்புக்களும், தொழில் கூட்டமைப்புக்களும், சமூக நலன் சார்ந்த அரசியல் இயக்கங்களும் ஜி.எஸ்.டி அமலாவதை செப்டம்பர் வரை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

நன்றாக கவனியுங்கள். அவர்கள் ஜி.எஸ்.டி வேண்டாம் என சொல்லவில்லை. ஜூன் 18 GST கவுன்சில் இறுதி கூட்டத்தில் செய்யப்பட திருத்தங்கள் வரையிலான எல்லா திருத்தங்களையும் ஆராய்ந்து படித்து பார்த்து அதற்கு தக்கபடி ERP சிஸ்டத்தை மறுவடிவமைப்பு செய்து, அதை அனைத்து வணிகர்களுக்கும் நிறுவி, அவர்களுக்கு பயிற்சியும் அளித்து, அவர்களது வியாபார அடிப்படையிலான வர்த்தக விவரங்களை ரிட்டர்ன் தாக்கலுக்கு தக்கபடி ஸ்டேட்மெண்டாக மாற்ற தனியாக இன்னொரு மென்பொருளை வடிவமைத்து, அதை ASP க்களுக்கு எளிதாக பரிமாற்றம் செய்யவேண்டிய வகையில் ஒரு FTP தயாரித்து தான் வரி தாக்கல் செய்யவே தயாராக முடியும் என்கிற நிலையில் இதற்கெல்லாம் வெறும் 12 நாள் போதாது என்பதை கருத்தில் கொண்டு தான் அந்த கால அவகாசம் கேட்கப்பட்டது.

ஆனால் அரசு அதை மறுத்து விட்டு ஜூலை 1 முதல் ஒரே தேசம் ஒரே வரி என முழக்கமிட்டது. (உண்மையில் அது 6 வரி, 3 வகை வரிவிதிப்பு என்பதெல்லாம் மற்றுமொரு தனிக்கதை)

சரி ஜூலை முதல் அமலாக்குவது என முடிவு செய்தாயிற்று அல்லவா?  அப்படியானால் ஒவ்வொரு விவகாரத்துக்கும் (ஏற்றுமதி, ஜாப் வர்க் போன்றவற்றுக்கான அனுமதி, ஏற்றுமதிக்கான காப்பு பத்திரம் ஆகியவை) உரிய அதிகாரிகள் யார் யார் என்பதையாவது அறிவித்திருக்க வேண்டாமா? அதற்கான படிவங்கள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவையாவது சொல்லி இருக்கவேண்டாமா? இதையெல்லாம் 2 மாதத்துக்கு முன்பே தயார்ப்படுத்தி இருக்கலாம்.

ஆனால் இந்த நிமிடம் வரை இவற்றில் பல படிவங்கள் இறுதி செய்யப்படாமலேயே இருக்கிறது. இது போன்ற அனுமதிகள் பெற்று தான் ஜாப் வார்க்குக்கு பொருட்களை அனுப்பவேண்டும் என்று ஒரு விதியை வகுத்துவிட்டு, யாரிடம் அந்த அனுமதியை பெறவேண்டும் என்பதையும் சொல்லாமல் விட்டால், நேர்மையாக வணிகம் செய்ய விரும்பும் ஒருவன் என்ன செய்வான்? அரசு அறிவிக்கும் வரை எந்த வர்த்தகமும் செய்யாமல் காத்திருக்க வேண்டுமா?

சில சேவைகளுக்கு எதிர்மறை வரி (Reverse Charge Mechanism - RCM) விதிக்கப்பட்டு இருக்கிறது.  அதை முழுமையாக படித்து புரிந்துகொள்வதற்குள்ளாகவே ஜி‌எஸ்‌டி அமலாக்கும் தேதி வந்துவிட்டது. உதாரணமாக சரக்கு போக்குவரத்து (Freight - Goods Transport Agency - GTA) இது போன்ற எதிர் மறை வரி விதிப்பில் வரும். இது வணிகர்களுக்கு கூடுதல் சுமையாகும். இப்போதிருக்கும் 4.5% வரி இனி 5% வரியாக கூடுவதோடு மட்டுமல்லாமல் எதிர்மறை வரிக்கான கட்டுப்பாடுகளும் ஆவணங்களும் அதிகம். அதை எல்லாம் அவர் பராமரிக்க வேண்டும். இதை சமாளிக்க பொருட்களை யாரிடம் இருந்து வாங்குகிறோமோ (supplier) அவர்களையே சரக்குக்காக போக்குவரத்து கட்டணங்களை (freight Charges) செலுத்த சொல்ல வேண்டும். அதற்காக ஏற்கனவே இருக்கும் இருதரப்பு வியாபார வர்த்தக ஆவணங்களை மாற்ற வேண்டும்.

ஏற்கனவே கையில் இருக்கும் ஆர்டர்களை GST வரிக்கு தக்கபடி மாற்றி அமைக்க வேண்டும். அதில் இப்போது வரிக்கழிவும் (Input Tax Credit) கிடைப்பதால் விலை குறைவுக்கும் வாய்ப்பு உள்ளது. இதை இரு தரப்பு வணிகர்களும் விவாதித்து ஒரு விலைப்புள்ளிக்கு உடன்படிக்கை செய்து அதற்க்கு தக்கபடி ஆவணங்களை தயாராக்க வேண்டும்.

ஜாப் வர்க் போன்றவை இது வரை வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இனி அதுவும் வரி விதிப்பில் வரும். அதற்கு தக்கபடி முறையாக GST பதிவு பெற்ற ஜாப் வர்கர்களை தேடி அவர்களிடம் ஆர்டர் கொடுக்க வேண்டி இருக்கும். பதிவு செய்யப்படாத ஜாப் வார்கர்கள் எனில் கூடுதல் ஆவணங்களை பராமரிக்க வேண்டி இருக்கும். மேலும் எதிர்மறை வரியையும் வணிகர்களே செலுத்த வேண்டி இருக்கும்.

இது போன்ற பல பல நடைமுறை வழக்கங்களை செயல்படுத்தி ஒரு வணிகர் முழுமையாக GST முறைக்கு மாறுவதற்கான நியாயமான கால அவகாசம் வழங்கப்படவே இல்லை. அதை தான் செப்டம்பர் வரை தரவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

சுருக்கமாக ஜூலை தான் அமல் படுத்தப்படும் என்பதில் அரசு உறுதியாக இருந்திருந்தால் ஏப்ரல் இறுதியில் எல்லா விதிகளும் இறுதி செய்யப்பட்டு இருக்கவேண்டும். ஜூன் 18 தான் இறுதி செய்யப்பட்டது என்கையில் செப்டம்பர் முதல் தான் அமல்ப்படுத்தி இருக்கவேண்டும்.

வணிகர்கள் தாங்கள் அதை படித்து புரிந்துகொள்ளவும், தங்களது கட்டமைப்பை திருத்தி அமைக்கவும், தங்களது வணிக முறையை மாற்றி அமைக்கவும் அந்த கால அவகாசம் தேவை படும்.

அதை தான் அவசரம் அவசரமாக அரசு அமல்ப்படுத்துகிறது என எல்லோரும் வருத்தப்பட்டு சொன்னார்கள்.

இவை மட்டுமல்ல, பல்வேறு விதிகளையும் இன்னமும் அரசு இறுதி செய்யவில்லை. பல சூழ்நிலைகளுக்கான விளக்கங்களையும் அரசு இன்னும் தெளிவு படுத்தவில்லை. உதாரணமாக ஜூன் இறுதியில் உத்தர்பிரதேசத்தில் இருந்து அனுப்பப்பட பொருட்கள், ஜூலை மத்தியில் திருநெல்வேலியில் இருக்கும் ஒரு தொழிற்சாலைக்கு வருகிறது என வைத்துக்கொள்வோம், அவர்கள் எப்படி C Form கொடுக்க முடியும் என்கிற கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை?

எல்லா பொருட்களுக்கும் சேவைகளுக்கும் 180 நாட்களுக்குள் பணம் வழங்கினால் தான் உள்ளீடு வரியை எடுத்துக்கொள்ள முடியும் என்கிற விதி இருக்கிறது. அப்படியானால் பண பரிமாற்றங்களை பதிவு செய்ய வேண்டியிருக்குமா என்கிற கேள்விக்கும் பதில் இல்லை.

ஏற்றுமதி வகையில் எந்த ஒரு தெளிவையுமே அரசு கொடுக்கவில்லை. அது Letter of Undertaking / Bond போன்ற ஆவணங்கள் ஆகட்டும், ஏற்றுமதி செயல்முறை ஆகட்டும் எதிலும் ஒரு தெளிவில்லை.

அதனால் தானோ என்னவோ கஸ்டம்ஸ் சர்குலர் (Circular Number 26 of 2017) ஒன்றை வெளியிட்டு ஏற்றுமதி தொடர்பான மாற்றங்கள் எல்லாம் செப்டம்பர் 1 முதல் தான் அமலாகும் எனவும் அதுவரை பழைய முறையே தொடரும் என அறிவித்து இருக்கிறது. 

அவர்கள் புரிந்து கொண்ட அளவுக்கு கூட GST புரிந்து கொள்வில்லை என்பது தான் ஆதங்கம்.


ஏற்றுமதி தொடர்பான புதிய விதிமுறைகள், ஜாப் வர்க் தொடர்பான புதிய சிக்கல்கள் என பிற நடைமுறை விஷயங்கள் அடுத்த பதிவில் 

Saturday, July 1, 2017

ஜி.எஸ்.டி – எனது பார்வையில் – 7

ன்று மீண்டும் ஒரு புதியதொரு இந்தியா பிறந்திருப்பதாக குதூகலித்து கொண்டிருக்கிறது தேசம்.

ஜி. எஸ். டி வரி சீர்திருத்த நடவடிக்கை நேற்றிரவு முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டாயிற்று. அதற்கான பிரத்யேகமான விழா நேற்று நள்ளிரவு பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றதை நாடே விழித்திருந்து கண்டது.



சரி.. உண்மையில் இந்த ஜி.எஸ்.டி என்ன தான் தரப்போகிறது நமக்கு என்றால் எனக்கு சட்டென நினைவுக்கு வருவது நாலே நாலு விஷயங்கள் தான்.

அதை பற்றி சொல்வதற்கு முன், முதலில் ஏற்கனவே பலமுறை இணையதளங்களில் நான் சொல்லி இருப்பதை போல, நான் ஜி.எஸ்.டி என்கிற வரி சீர்திருத்தத்துக்கோ எல்லோரது வருவாய்ம் கணக்கில் காட்டப்படவேண்டும் என்பதற்கோ எதிரானவன் அல்ல. மாறாக இந்த வரி சீர்திருத்தத்தின் தாத்பரியம் புரியாமல் அரைகுறையாக விதிகளை வரையறை செய்து, சரியான உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் அமல்ப்படுத்தும் விதத்தை தான் எதிர்க்கிறேன்.

இனி அந்த நாலு விஷயம். கொஞ்சம் விரிவாகவே...

விஷயம் 1. சிறு குறு வணிகங்கள் பாதிக்கப்படும்... ஏன் பலரும் தொழிலைவிட்டே கூட போய்விட வேண்டி இருக்கும்.

CGST விதி 9(3) & 9(4) ஆகியவை சொல்வது என்னவென்றால், நீங்கள் ஏதாவது ஒரு பதிவு செய்யப்படாத நிறுவனத்திடம் (Unregistered Vendor) இருந்து பொருளை வாங்கினாலோ சேவைகளை பெற்று கொண்டாலோ அவர்களுக்கு பதிலாக நீங்கள் வரி கட்ட வேண்டும். (Reverse Charge Mechanism - RCM)

இதன் பலன்?

இப்போது நாம் சிறு குறு வணிகர்களிடம் (MSME Vendors) இருந்து பெற்று கொள்ளும் பொருட்கள் சேவைகளுக்கு வரி (Service Tax) இல்லை. இனி அதற்கும் வரி உண்டு. ஆனால் பொருட்களை விற்போருக்கு 75 லட்சம் ரூபாய் வரை ஆண்டு மொத்த வருவாய் (Annual Turn Over) இருந்தால் அவர்கள் முழு வரி செலுத்தும் கட்டாயம் இல்லை. அதேபோல சேவைகளை செய்வோருக்கு 20 லட்சம் ரூபாய் வரை ஆண்டு மொத்த வருவாய் இருந்தால் அவர்களுக்கும் முழு வரி செலுத்தும் கட்டாயம் இல்லை. அவர்கள் 20 லட்சம் ரூபாய் வரை தான் ஆண்டு மொத்த வருவாய் ஈட்டுகிறார்கள் எனில் அவர்கள் பதிவு செய்யவே தேவை இல்லை என்று அரசே அறிவித்து இருக்கிறது.

அவர்கள் பதிவு செய்ய விதி விலக்கு இருப்பதாலேயே அவர்களை வரி எய்ப்பாளர்கள் என சொல்ல முடியாது. அவர்கள் நேர்மையான வியாபாரம் செய்யக்கூடியவர்கள் தான். ஆனால் மொத்த வருவாய் மிக குறைவாக இருப்பதால் வரி கட்டமைப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், அதே நேரம் அவர்களிடம் இருந்து நீங்கள் பொருளோ சேவையோ பெற்றால் அவர்களுக்கு பதிலாக நீங்கள் வரி செலுத்தவேண்டும். அப்படி செலுத்திய வரியை நீங்கள் சில தருணங்களில் திரும்ப பெற்று கொள்ளவும் (ITC Adjustments) முடியும். ஆனால் அதற்காக நீங்கள் பராமரித்து வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் என சில உள்ளன.

பதிவு பெறாத வணிகர்கள் கொள்முதல் செய்யும் பொது செலுத்திய வரியை (Tax paid on Purchases) கழித்துக்கொள்ளும் வசதி (ITC Credit) இல்லாததால் அவர்களிடம் மட்டும் பொருட்களின் விலை கூடுதலாக இருக்கும். அதானாலும் கூட நீங்கள் அவர்களை தவிர்க்கவேண்டிய நிலை ஏற்படும்.

இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

எதற்கு வம்பு என பதிவு செய்த வணிகர்களிடம் மட்டுமே இனி வாங்க தொடங்குவீர்கள் இல்லையா? அது தானே எளிமை? அவர்கள் பில் போட்டு அதில் வரியும் போட்டு கொடுத்து விடுவார்கள். நீங்கள் பணம் செலுத்தினால் போதும். அந்த பில்லில் உள்ள வரி உங்களுக்கு வரிக்கழிவாக திரும்ப கிடைத்து விடும்.

சரி இதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன என தெரிகிறதா?

நாளாவட்டத்தில் சிறு குறு வணிகர்களின் வியாபாரம் தேய்ந்து தேய்ந்து ஒரு நிலையில் வணிகத்தை இழுத்து மூட வைத்து விடும்.

இப்படியான நிலையில் இருப்பவர்கள் யார் என பார்த்தால், சிறு ஹார்டுவர் கடைகள், மெக்கானிக்குகள், பிளம்பர்கள், லேத் வர்ஷாப்புகள்,  பிரிண்டிங் பிரஸ் வைத்திருப்போர், சின்ன சின்ன ஸ்டேஷனரி கடைகள் என பல ரகம். 

இப்போது நமக்கு தெரிந்தவர்கள், அல்லது மிக கஷ்டப்படுபவர்கள் என்பதற்காக நாம் அவர்களிடம் பொருட்களை வாங்கி அந்த வகையில் அவர்களுக்கு ஒரு உதவியாக இருக்க முடிகிறது. ஆனால் இனி ஜி.எஸ்.டியில் அப்படி இருந்தால் நமது தொழில் பாதிக்கப்படும் என்பதால் வலியோடு அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டி இருக்கிறது. இப்படி எல்லோரும் புறக்கணித்தால்???

இப்படியான வணிகர்கள் மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 27 கோடி பேர்.


விஷயம் 2 – விலைவாசி உயர்வு

சரக்கு சேவை வரி என எந்த நேரத்தில் மொழிபெயர்த்தார்களோ தெரியவில்லை, சரக்குகள் கையாளும் போக்குவரத்து வணிகங்களுக்கான வரியை (Tax on Freight) கூடுதலாக்கி விட்டிருக்கிறார்கள். லாரி வாடகை ஏறினால் அதன் மூலமாக கொண்டு செல்லப்படும் பொருட்களின் விலையும் கூடிவிடும் என்பது நிதர்சனம்.

தற்பொழுது லாரி வாடகைக்கு 4.5% வரி (15% tax on 30% Freight value) என்றிருப்பது இனி 5% வரியாக (5% tax on 100% Freight value) உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே சுங்க சாவடி கட்டண உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு போன்றவற்றுடன் இந்த வரியும் சேர்ந்து கொண்டால் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் பொருட்களின் சேரிட வரி கூடத்தானே செய்யும்?

மற்றுமொரு சுமையாக சேவை வரி இப்போதிருக்கும் 15% என்பதில் இருந்து ஜி.எஸ்.டியில் 18% என உயர்வதால் இதர சேவைகளும், கட்டணங்களும் தானாகவே 3% விலை உயர்வை நேரடியாக ஏற்கவேண்டி இருக்கும்.

ஆக மொத்தத்தில் லாரி மூலம் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கான விலை கூடுவதால், உணவுபொருட்கள் முதல் தொழிற்சாலை உதிரிபாகம் வரை எல்லா பொருட்களும் இப்போதிருக்கும் விலையிலிருந்து குறைந்தது 4.2% உயர்வு அடைய சாத்தியம் இருக்கிறது.

இதன் பிற்சேர்க்கை பலாபலனை எல்லாம் பொருட்களின் இறுதி உபயோகிப்பாளர் (End User) தான் தன் தலையில் சுமக்க வேண்டி இருக்கும் என்பதால் விலைவாசி உயர்வையும் அதன் தொடர்பான நிதிப்பற்றாக்குறையையும் ஒரு வருடத்துக்காவது சகித்து தான் ஆகவேண்டும்.

விஷயம் 3 – வேலையின்மை

தற்போது வெளி மாநிலங்களில் இருந்து ஒரு பொருளை வாங்கினால் அதற்காக நாம் செலுத்தும் வரியை வரிக்கழிவாக கழித்துக்கொள்ள முடியாது.

அதனால் பல நிறுவனங்களும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மத்திய சேமிப்பு கிடங்கை (Central Ware House) நிர்வகித்து அந்த கிடங்கிற்கு தங்களது உற்பத்தி பொருட்களை வரியின்றி அனுப்பி வைத்து (Stock Transfer), அந்தந்த மாநிலங்களில் விற்பனை செய்து வருகிறார்கள்.

இது போன்ற வேர் ஹவுசிங் துறைகளில் மட்டும் சுமார் 2 கோடி பேர் பணியாற்றி வருகிறார்கள்.

இனி அப்படியான வேர் ஹவுஸ்கள் தேவைப்படாது.

காரணம் ஜி.எஸ்.டி முறையில் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கும் பொருட்களுக்கும் கொள்முதல் வரிக்கழிவு (ITC - Input Tax Credit) உள்ளதால் நேரடியாக தொழில் நிறுவனங்களே கடைநிலை உபயோகிப்பாளருக்கு விற்பனை செய்துவிட முடியும்.  இதனால் வேர் ஹவுசிங் துறையில் மட்டும் 1 கோடி வேலை இழப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

முழுமையாக கணினி வழி பரிமாற்றங்களை உள்ளடக்கிய ஜி.எஸ்.டி பல வகைகளில் உதவிகரமாக இருந்தாலும், ஒவ்வொரு நிறுவனத்திலும் இருக்கும் பணியாளர் எண்ணிக்கைகளை குறைக்கின்ற காரணியாகவும் அது இனி இருக்கக்கூடும்.

சென்னைக்கு அருகிலுள்ள ஒரு பெரும் பன்னாட்டு நிறுவனத்தின் கொள்முதல் & விற்பனை துறையில் (SCM) தற்போது இருக்கும் 46 பணியாளர்களுக்கு பதில் இனி 17 பேர் போதும் என நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக அதில் பணியாற்றும் என் நண்பர் மகிழ்ச்சியாக சொன்னபோது, அந்த ஒரு நிறுவனத்திலேயே 29 பேர் வேலை இழக்கிறார்கள் என்றால் இந்தியா முழுதும் எத்தனை பேர் வேலை இழப்பார்கள் என்கிற மணக்கணக்கில் நான் வருத்தத்தோடு அமிழ்ந்து போனேன்.

விஷயம் 4 – தனி நபர் பொருளாதாரம் சரிவு

ஒரு பக்கம் ஏற்கனவே சொன்னது போல விலைவாசி உயர்வு, சேவை வரி உயர்வு, கட்டண உயர்வு போன்றவை.

மறுபுறம் தொழிற்சாலைகளில் வேலை இழப்பு, ஆட்குறைப்பு ஆகியவை

இன்னொரு புறம் கஷ்டப்பட்டு கடன் வாங்கி மிகுந்த சிரமத்துக்கிடையில் சொந்தமாக தொழில் செய்யும் சிறு குறு வணிகர்களின் தொழிலில் இனி ஏற்படப்போகும் நிலையின்மை

இவை எல்லாம் சேர்கையில் தனி நபர் வருமானம் என்பது மிக வேகமாக சரிய தொடங்குவதையும், கடன்கள் கூடுவதையும், கடன்களை அடைக்க வழியின்றி குடும்பங்கள் தவிக்க போவதையும், வங்கிகளின் கட்டண உயர்வால் சிக்குண்டு தவிக்கும் சிறு குறு வணிகர்களையும், பெரும் தொழில் நிறுவனங்களால் கைவிடப்படும் தனி நபர் தொழில் முனைவோர்களையும், பெரு நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சும் ஒரு வணிக தளத்தில் நிற்கவும் இயலாமல் இழுத்து மூடப்படும் சுயதொழில்களையும் மனக்கண்ணால் பார்க்கமுடிக்கிறது.

இது தனி நபர் பொருளாதாரம் சார்ந்த சரிவு என மட்டும் கொள்ளாமல், ட்டு மொத்த சமூகம் சார்ந்த பெரும் பாதிப்பாக பார்த்தோமானால், வேலை இழந்த மக்கள் தங்கள் வாழ்வாதாராத்துக்காக என்ன என்ன செய்ய போகிறார்கள் என்பதை எல்லாம் நினைத்தால் வருத்தமாகவும் கொஞ்சம் அச்சமாகவும் இருக்கிறது.

நான் மேலே சொன்னவை எனக்கு தோன்றிய அதீத அச்சத்தின் காரணமான ஒரு பெரும் எதிர்பிம்பமாக கூட இருக்கலாம். ஆனால் அவை எதுவும் சாத்தியமற்றவை என ஒதுக்கித்தள்ள முடியாதவை என்பதையும் நீங்கள் மெல்ல மெல்ல ஒப்புக்கொள்வீர்கள்.

முதல் பத்தியில் போகிற போக்கில் நான் 'அரசு அரை குறையாக இதை அமல்ப்படுத்துகிறது.. யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் நடந்து கொள்கிறது' என்றெல்லாம் சொன்னேன் அல்லவா? அதை பற்றி அடுத்த பதிவில்..

Printfriendly