Tuesday, June 2, 2015

இளையராஜா

மும்பை

புகழ் பெற்ற ஆர்.டி. பர்மன் அவர்களின் இசைக்கூடம். அவரது இசைக்கலைஞர்கள் தயாரா இருக்கிறார்கள். எல்லோரிடமும் தான் எழுதிய இசைக்குறிப்புகளை கொடுக்கிறார். நமுட்டு சிரிப்புடன் பெற்று கொள்கிறார்கள் எல்லோரும். அவரவர் தங்களது ஹெட்ஃபோனை மாட்டி கொள்கிறார்கள். என்ன வாசிக்க போகிறோம் என்பது அங்கே யாருக்கும் தெரியாது. அவர்களிடம் இருப்பதெல்லாம் எத்தனையாவது நொடியில் எந்த இசைக்கருவியில் என்ன சப்தம் எப்படி கொடுக்கவேண்டும் என்பது மட்டும் தான். ஒவ்வொருவரும் அதே போல அந்தந்த நொடியில் அந்தந்த இசை துணுக்கை மட்டும் வாசிக்கிறார்கள். ஒவ்வொருவர் செவியிலும் அவர்களது ஹெட்ஃபோன் வழி பிரவாகிக்கிறது இசை. முதல் பிரிலூடு முடிந்ததும் அனைவரும் சட்டென இசைப்பதை நிறுத்திவிட்டு எழுந்து நின்று பலமாக கைதட்டி, தலைதாழ்த்தி வணங்கி பின் மீண்டும் முதலிலிருந்து வாசிக்க தொடங்குகிறார்கள். அதே பிரிலூடு பிரவாகம் மீண்டும் முதலிலிருந்து தொடங்குகிறது. பிரிலூடு முடிந்த இடத்தில் நம் எஸ்.பி.பி தொடங்குகிறார் “சுந்தரி... கண்ணால் ஒரு சேதி...”

தளபதி படத்துக்கான இசை பதிவு அது. வருடம் 1990.

R.D Burman
இந்த சம்பவத்தை எஸ்.பி.பி சொன்னபோது எனக்குள் நானே யோசித்து பார்த்தேன். நான் அவரது அந்த குழுவில் ஒரு வயலின் கலைஞர் எனில் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நோட் என்பது “23 ஆம் நொடியில் நா..ண ண. நா...நா..” என்றிருந்தால் அதை மட்டும் தான் நான் வாசிப்பேன். அது போலவே தபேலா, டிரம்ஸ், கிட்டார், புல்லாங்குழல், டிரம்பட், சாக்ஸ் என எல்லா இசைக்கலைஞ்சர்களும் எந்த எந்த இடத்தில் தொடங்கி எப்படி எப்படி வாசித்து எப்போது நிறுத்தவேண்டும் என்பது மட்டும் தான் தெரியும். ஆனால் எல்லோரும் அதை வாசிக்கையில் செவி வழி வரும் பிராவகம் எப்படி இருந்திருக்கும்? மீண்டும் மீண்டும் பல பல முறை இந்த பாடலின் பிரிலூடு கேட்டு கேட்டு பார்த்து வியந்திருக்கிறேன். அத்தனை இசையையும் தன் மனதுக்குள்ளேயே இசைத்து பார்த்து அதற்கான ஒலி குறிப்பை எழுதி எடுத்து வந்து கொடுத்து இசை ஜாம்பவான் ஆர்.டி பர்மனின் இசைக்குழுவையே பிரமிக்க வைத்தார் எனில் எப்பேர்ப்பட்ட இசை ஞானம் அவருக்குள் இருந்திருக்கும் என வியக்காத நாளில்லை.

இளையராஜா

இந்த பெயர் என் பால்யங்களில் என்னோடு உடன் வந்து பழகி என்னை ஆற்றுப்படுத்தி கொண்டிருந்ததை நான் உணர்வதற்கு பல காலம் பிடித்தது. எனக்கு தெரிந்ததெல்லாம் பாடல் மட்டும் தான் அப்போது. பின்னர், இசை, இசைதொகுப்பு என்றெல்லாம் தெரிந்துக்கொண்ட போது மெல்ல உணர ஆரம்பித்து, வயலின் கற்க தொடங்கியபோது பிரமித்து வியந்து ஆச்சரியமடைந்த தருணத்தில் உணர்ந்திருக்கிறேன், இளையராஜாவின் பிரமாண்ட இசை ஞானம்.



பெரும்பாலான இசையமைப்பாளர்கள் ஹார்மோனிய பெட்டியிலோ வயலினிலோ அல்லது வாய்மொழியாகவோ வாசித்து காட்டி, இப்படி இருக்கவேண்டும் இசை என சொல்லுவதை, இளையராஜா மட்டுமே அனைத்து இசை கருவிகளுக்கும் இசை நோட்டாக கொடுக்க தொடங்கியவர். அத்தனை இசைக்கருவிகளையும் அதன் நுணுக்கங்களையும் கற்று தேர்ந்தவர் என்பதற்கு இதை விட என்ன அத்தாட்சி இருந்துவிடபோகிறது

திரை துறையில் அவர் செய்த சாதனைகள், அவரது பிரபலமான பாடல்கள், அதன் வசீகரம் எல்லாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதை பற்றி பிரஸ்தாபிக்கும் திறனோ தகுதியோ எனக்கு இல்லை. ஆனால் அவரது பாடல்கள் கேட்க நேர்கையிலெல்லாம் எனக்குள் ஏற்பட்ட ஆச்சரியங்களும் கேள்விகளும் அலாதியானவை

“பொத்தி வச்ச மல்லிகை மொட்டு”வில் பிற்சேர்க்கையாக அவர் சேர்த்த கைத்தாட்டலாகட்டும், “பருவமே புதிய பாடல் பாடு”வில் வைத்த ஓட்ட சத்தமாகட்டும், “பூமாலையே தோள் சேரவா”வில் முதல் நொடியிலிருந்து தொடங்கும் அதிவேக உச்சஸ்தானி வயலின் பெருமழையாகட்டும், “செனோ ரீட்டா” பாடலின் துவக்க இசையாகட்டும்.. இப்படி ஒவ்வொரு பாடலிலும் ஏதேனும் ஒரு சிறப்பை நாம் பிரமித்துக்கொண்டிருப்பதற்கு வைத்து விட்டு இருக்கிறார். அதை ஆராய்ந்து தேடி அனுபவித்து லயித்து பிரமித்து நெகிழ்வதற்கான காலம் போதாது தான்.

கர்நாடிக் முதல் கானா வரை, ஃபோக் முதல் ஃபியூஷன் வரை, ராப் முதல் ராக் வரை, மெலடி முதல் மெடாஃபார்ம் இசை வரை அவர் இசைக்காத ராகமில்லை. அதேபோல 35எம்‌எம் கருப்பு வெள்ளை படம் தொடங்கி இப்போதைய கியூப் டிஜிட்டல் வரை, மோனோ முதல் டால்பி அட்மோஸ் ரிக்கார்டிங் வரை, ரிக்கார்ட் தட்டு முதல் புளூ ரே பிளேயர் வரை அனைத்து டெக்னாலஜி படங்களிலும் இசை அமைத்திருக்கிறார் என்பது மற்றுமொரு சிறப்பு. இன்னுமொரு பெருமையாக ஒரு மனிதனின் எல்லா காலகட்டத்திற்கும், எல்லா உணர்வுக்கும், எல்லா சூழலுக்குமான பாடல்களை அவர் தந்திருக்கிறார் என்பது.

அவரை ஒரே ஒரு முறை தான் சந்தித்து இருக்கிறேன். ஆனால் பல முறை எதேச்சையாக எதிர்படுவது காண்பது என்று இருந்திருக்கிறேன்.

அவரது இசை மீதான தவம் வியக்கவைத்திருக்கிறது. ஒரு நேரடி இசை நிகழ்ச்சி. ஆர்கேஷ்டிராவில் ஒரு வயலின் மட்டும் பிசிறு தட்டுகிறது. உடனே பாடலை நிறுத்த சொல்லி குறிப்பிட்ட நபரை கைகாட்டி விளக்கம் கேட்கிறார். நாங்களெல்லாம் பார்வையாளராக உட்கார்ந்திருக்கிறோம். அத்தனை இசைக்கருவிகளில் வயலின் மட்டும், அத்தனை வயலின் கலைஞர்களில் அந்த இசை கலைஞர் மட்டும் பிழை செய்தார் என்பதை நொடிக்கும் குறைவான தருணத்தில் கண்டறிவது என்றால், எத்தனை உன்னிப்பான கவனமும், இசையில் சுருதியுடன் எத்தனை ஞானமும் இருந்திருக்கவேண்டும் என்று பிரமிக்காத நாளில்லை.

அதனால் தானோ என்னவோ கமலுக்கு கலைஞானி என பெயரிட்ட அதே முத்தமிழ் வித்தகர் இவருக்கு இசைஞானி என்று நிலைத்த பெரும் பட்டம் அளித்தார்.

எதையும் கற்றுக்கொள்வதில் அவருக்கிருந்த ஆர்வம், புதிய புதிய இசை நுணுக்கங்களை பரீட்சித்து பார்ப்பதில் இருந்த ஆசை ஆகியவை தான் அவரை அரை நூற்றாண்டு காலமாக உயிர்ப்போடு வைத்திருக்கவேண்டும். எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தார்கள், எத்தனையோ இசை உச்சங்களை தந்தார்கள், பின் சென்றார்கள், எனினும் இப்போதும் நிலையாய் இருப்பதும் புதிதாய் இருப்பதும் இளையராஜா ஒருவர் மட்டும் தான் எனபதே போதுமானதாக இருக்கிறது அவரது திறனுக்கு

சிற்சில பாடல்களில் அவர் நாம் எதிர்பார்க்காத தருணங்களில் கொண்டு சேர்த்திருக்கும் சில நகாசு வேலைகள், விசித்திரமான இசைகள் தான் நம்மை அத்தனை ஆர்வமாக அவரது அடுத்த பாடலை தேட வைக்கிறது. சில தபலா இசை துணுக்குகள், எம்.எஸ்.வி கம்போசிஷனை விட அருமையாக இருக்கும்.

வயலின் ஃபுளூட் இவைகளை வைத்து கொண்டு ஒவ்வொரு பாடலில் அவர் கொடுத்திருக்கும் உச்சங்கள் அலாதியானவை. பியானோவும் சில பாடல்களில் தன்னை நிரூபித்து இருக்கிறது.

அவரது ஞானத்துக்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரத்தை நாம் முறையாக வழங்கவில்லையோ என்றொரு குறை எனக்குள் இருக்கிறது. கலைமாமணி, பத்ம விபூஷன் தவிர நான்கு தேசிய விருதுகள் (மலையாளம் -1, தமிழ் -1, தெலுங்கு 2) நான்கு ஃபிலிம்பேர் விருதுகள் (தெலுங்கு -1, தமிழ் -1, மலையாளம் -2), கேரள அரசு விருதுகள் 3, தமிழக அரசு விருதுகள் 6 மட்டும் தான் அவருக்கான அங்கீகாரம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. கேரளாவும் ஆந்திராவும் கொண்டாடிய அளவுக்கு கூட தமிழகம் அவரை கொண்டாடவில்லை என்பது கூட ஓர் ஆச்சரியம் தான் எனக்கு.

1976 முதல் இன்றுவரை தொடரும் அவரது இசை பெரும் பயணத்தில் 1977, 1980, 1981, 1988, 1989, 2009 ஆகிய வருடங்களில் தான் அவருக்கு தமிழக அரசு விருது கிடைத்திருக்கிறது. அதிலும் 1989 க்கு பின் மிக நீண்ட இடைவெளி. இத்தனைக்கும் 1990 களில் அவர் உச்சகட்ட இசை பிரவாகங்களை கொடுத்தவர்.

அவரது பாடல்கள் ஒரு பிரமிப்பு என்றால் அவரது பின்னணி இசை தொகுப்பு மற்றும் இசை கலவை என்பது மற்றுமொரு பிரமிப்பு. முள்ளும் மலரும் போன்ற பல படங்களில் சில காட்சிகளின் வீரியத்தை அவரது இசையே நமக்கு உணர்த்தும் சக்தி கொண்டது. வசனங்களுக்கு எல்லாம் அங்கே வேலையே இல்லை.


கமல் ஒரு முறை சொன்னார், அவரது இசையில் மட்டும் அல்ல, தேவையான இடத்தில் அவர் வைக்கும் மௌனம் கூட பேரிசை தான் என்று. பல படங்களில் அதை கண்டுணர்ந்ததுண்டு. எங்கே இசைக்கவேண்டும் எங்கே அமைதி வேண்டும் என்பதை தெளிவாக உணர்ந்தவர் அவர். அதேபோல இசையில் எந்த இன்ஸ்ட்ருமெண்ட் எந்த அளவு ஒலி இருக்கவேண்டும் என்பதையும் தெளிவாக அறுதி இடக்கூடியவர். அது தான் நாம் செவிகளை உறுத்தாத பாடல்களாக நீடித்து நிற்க வழி செய்கிறது. வேறு சில இசையமைப்பாளர்களின்அதி அற்புதமான பாடல்கள் கூட இந்த இசை ஒலி அளவு வித்தியாசத்தாலேயே அடிபட்டு போனதுண்டு.

மிக சிறந்த ரசிகராக இருந்தாலோழிய மிக சிறந்த இசையமைப்பாளர் ஆக முடியாது என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.

எல்லா இரவுகளையும் நிறைத்து வைக்கும் அவரது இசையை போலவே அவரும் தமிழகத்தில் சாஸ்வதம்.

அவர் இசையில் எஸ்.பி.பாடிய இந்த வரிகள் தான் எத்தனை அர்த்தம் நிறைந்தது...

“எங்கிருந்தோ... இங்கு வந்தேன்...
இசையினிலே.. எனை மறந்தேன்...
இறைவன் சபையில் கலைஞன் நான்...”




No comments:

Post a Comment

Printfriendly