தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை
தடை செய்து மத்திய அரசு 2011 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அரசாணை வெளியிட்டதில் தொடங்கியது
இந்த அரசியல் விளையாட்டு.
2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் அரசாணையை
அங்கீகரித்து தீர்ப்பு சொன்னது.
அதன் பின் இத்தனை நாள் மெத்தனமாக இருந்துவிட்டு
இப்போது ஜல்லிக்கட்டை நடத்தியே ஆகணும்னு எல்லாரும் ஒத்தை காலில் நிக்க ஆரம்பிச்சிருக்கிறதுக்கு
தேர்தல் மட்டுமே காரணம் என நான் சொல்லமாட்டேன்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின்
ஒட்டும் உறவுமான ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்தவேண்டும் என்கிற ஆவலும் வேட்கையும் ஒவ்வொரு
தமிழனுக்குள்ளும் எப்போதும் இருப்பது தான். ஆனால் நீதிமன்ற தடையை விலக்குவதற்கான எந்த
நடவடிக்கையையும் அரசும் மக்களும் எடுக்காமல், மத்திய
அரசின் மூலமாக ஒரு அரசாணையை பெறுவதற்காக மட்டுமே போராடியதன் வெற்றி தான் கடந்த ஜனவரி
7 ஆம் தேதி மத்திய அரசு ஜல்லிக்கட்டை அனுமதித்து வெளியிட்ட அரசாணை.
அந்த அரசாணை வெளியிட்டது சரியா? அது சட்டப்படி செல்லுமா? உச்சநீதிமன்ற தடையை
மத்திய அரசின் அரசாணையால் தகர்க்கமுடியுமா என்கிற தர்க்கரீதியான ஆய்வுகள் எதையும் செய்யாமல், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை போற்றி புகழ்வதிலும்
கொண்டாடுவதிலுமே நாம் காலத்தை கடத்திக்கொண்டிருந்ததால், அந்த
மத்திய அரசின் அரசாணைக்கு எதிராக PETA உச்சநீதிமன்றம் சென்று
இன்று தடையானை வாங்கிவிட்டது.
ஜல்லிக்கட்டை முன்பு தடை செய்து உத்தரவிட்ட
மதுரை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திருமதி பானுமதி அவர்கள் தான் இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில்
இந்த வழக்கை விசாரிப்பதாக இருந்தது. நல்லவேளையாக அவரே தானாக முன்வந்து இந்த வழக்கில்
இருந்து விலகிக்கொண்டதால் நீதிபதிகள் தீபக் மிஸ்ராவும் என்.வி. ராமனாவும் வழக்கை விசாரித்திருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு என்பது ‘மனித விழாவில் மிருக விளையாட்டு’ என்பதால்
அதை விலங்குகளின் வழக்கத்துக்கு மாறான கொடூரம் என குறிப்பிட்டு, தடையை நீடித்திருக்கிறார்கள். அதாவது புதிதாக தடை விதிக்கவில்லை. ஏற்கனவே
2011 ஆம் ஆண்டு மத்திய அரசு விதித்த தடையையும், அதை உறுதி செய்த
உச்ச நீதிமன்றத்தின் 2014 ஆண்டின் உத்தரவையும் மீண்டும் தொடர செய்திருக்கிறார்கள்.
இன்னொரு வகையில் சொல்வதானால், 2011 ஆம் ஆண்டின் அரசாணையையும், 2014 ஆம் ஆண்டின் தீர்ப்பையும் மீறி இப்போது ஜனவரி 7 ல் மத்திய அரசு வெளியிட்ட
அரசாணை செல்லாது என்று சொல்லி இருக்கிறார்கள். சட்ட ரீதியில் இது சரியே!
ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும்
என்பது எனது நிலைப்பாடாக இருந்தாலும் அதை சட்ட ரீதியில் போராடி, நீதிமன்றத்தில் வழக்காடி, இந்த விளையாட்டின்
தாத்பரியங்களை விளக்கி, பாரம்பரியமிக்க இந்த விளையாட்டை சட்டப்பூர்வமாக
நடத்த அனுமதி பெற்று நடத்தி இருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். மாறாக சட்ட ரீதியான
முயற்சிகள் எதுவும் செய்யாமல் குறுக்கு வழியில் அரசாணை வெளியிடவைத்து சிறுமைப்பட்டிருக்கவேண்டாம்
என்கிற வருத்தமும் இருக்கிறது.
தடையாணை கேட்டு PETA உச்ச நீதிமன்றத்துக்கு ஓடிய வேகத்தில் பாதியாவது கடந்த ஒரு
வருஷத்தில் நமக்கு இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. இருந்திருந்தால் சட்ட
ரீதியாக உச்சநீதிமன்றத்தில் வாதாடி முறையான அனுமதி பெற்றிருக்க முடியும். அதை விட்டுவிட்டு
அவரையும் இவரையும் கெஞ்சி ஒரு அரசாணை வாங்கி நீதிமன்றத்தால் அது செல்லாது என பட்டவர்த்தனமாக
வாங்கி கட்டி கொண்டிருக்கவேண்டாம் நாம்.
அரசுக்கு பதில் மனு தாக்கல் செய்ய இன்னும்
நிறைய அவகாசம் இருந்தாலும், பொங்கல் நெருங்கும்
இந்த நேரத்தின் அவசரம் கருதி இப்போதேனும் சுதாரித்து உச்ச நீதிமன்றத்தை அவசரமாக அணுகி, தகுந்த வழக்கறிஞ்சரை வைத்து விளக்கி வாதாடி இந்த பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு
நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்பதே எனது ஆவல். அதற்கு தக்கதாக உத்வேகத்தை நமது அரசுக்கு
எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக!
நல்ல கட்டுரை.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.