கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம்
நாள் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெ.வை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தபின் பல பல
சம்பவங்கள் நடந்தேறி விட்டன.
கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில்
அப்பீல் செய்தது. உச்சநீதிமன்றம் இரு நீதிபதிகளை கொண்ட பெஞ்சை நியமித்தது. நவம்பர்
23 ஆம் தேதி நடந்த விசாரணையில் ஜெ. விடுதலைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
மேலும் விசாரணையை மீண்டும் விரிவாக நடத்த முடிவு செய்து வழக்கை ஜனவரி 8 ஆம்
தேதிக்கு ஒத்தி வைத்தது. டிசம்பர் 2 ஆம் தேதி தலைமை நீதிபதி தாத்து ஓய்வு பெற்று
புதிய தலைமை நீதிபதியாக திரு தாக்கூர் பதவி ஏற்று கொண்டிருக்கிறார். விசாரணை நடக்க
இருந்த ஜனவரி 8 ஆம் தேதிக்கு முந்தைய நாள் அதாவது ஜனவரி 7 ஆம் தேதி, என்ன காரணத்தாலோ ஜெ. வழக்கு விசாரணை நீதிபதிகளில் ஒருவரை
அதிரடியாக மாற்றம் செய்தது.
ஜனவரி 8 ஆம் தேதி விசாரணை நடக்குமா
நடக்காதா என்கிற சந்தேகம் கடைசி நிமிடம் வரை நீடித்தாலும், குறிப்பிட்டபடி கோர்ட் ஹால் 11 இல் விசாரணை நடந்தது. அதில்
வழக்கை பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன்,
அன்றிலிருந்து தொடர்ந்து தினசரி விசாரணை நடைபெறும் என்றும், அதற்குள்ளாக
அனைத்து தரப்பினரும் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அதன் அடிப்படையில் கர்நாடக அரசு, ஜெயலலிதா, திமுக என அனைவரும் ஆஃபிடவிட் தாக்கல் செய்துவிட்டனர்.
விடுதலை தீர்ப்பு பிழையானது என
கர்நாடக அரசும், தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என ஜெயலலிதாவும், தீர்ப்பில் முக்கியமான 25 அம்சங்களை கருத்தில் கொள்ளவில்லை என திமுகவும்
பதில் மனுவில் சொல்லி இருக்கிறார்கள்.
இனி நாம ஜாலியாக யூகிக்கலாமா?
ஜெயலலிதா தாக்கல் செய்திருக்கும்
பதிலில் ‘தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை’ என்பதை சொல்லி இருப்பதோடு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லி
இருக்கிறார். அதாவது ‘கர்நாடக அரசுக்கோ, திமுகவுக்கோ இந்த வழக்கில் அப்பீல் செய்ய எந்த அதிகாரமும் இல்லை’ என்பது தான் அது. ஒரு வகையில் இது தான் உண்மையும் கூட.
ஜெயலலிதா மீது புகார் கொடுத்தவர்
சுப்ரமணியம் சுவாமி. அதன் அடிப்படையில் வழக்கு
தொடுத்தது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார். வழக்கு நேர்மையாக நடக்காததால், உச்சநீதிமன்றம் தலையிட்டு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றியது. கர்நாடகம்
பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கை நடத்தியது. கர்நாடகம் வழக்கை நடத்தினாலும் அது
தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தான் நடத்தியது என்பதை கவனிக்கவும்.
கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியவுடன் இந்த வழக்கு முடிஞ்சு போச்சு. அந்த தீர்ப்பை ஏற்று கொள்வதா எதிர்த்து
அப்பீல் செய்யணுமா என்பதை முடிவு செய்யவேண்டியது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தான்.
அவர்கள் அப்பீல் செய்ய எந்த முடிவும் எடுக்காத நிலையில், கர்நாடக அரசு தானாக முன்வந்து அப்பீல் செய்திருக்கிறது. இது
தான் இங்கே பிரச்சனை.
உதாரணமாக நீங்கள் ஒரு வழக்கை
தொடுக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். நீங்கள் தொடுத்த வழக்கில் நீங்கள்
தோற்றுவிட்டீர்கள். மேற்கொண்டு அதை வளர்க்க நீங்கள் விரும்பவில்லை. ஆனால் உங்கள்
வக்கீல் உங்களை கேட்காமல் வழக்கை நடத்த தொடங்கினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
இது தான் இப்போதைய நிலை.
ஜெயலலிதா சொல்ல வருவது என்னவென்றால், அப்பீல் செய்யவேண்டியது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தான்.
அவர்களை தவிர வேறு யார் அப்பீல் செய்தாலும் அதை ஏற்று கொள்ள கூடாது என்பது தான்.
உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் கர்நாடகத்தின் பணி முடிஞ்சிருச்சு. புகார்
கொடுத்த சுவாமியின் புகாரை விசாரித்து தமிழக போலீஸ் வழக்கு நடத்த ஆரம்பித்தவுடன்
சுவாமியின் அப்பீல் அதிகாரமும் முடிஞ்சுபோச்சு. திமுக ஜஸ்ட் துணை புகார்தாரர்
தான். அதனால் அவர்களுக்கு எந்த வித தார்மீக அதிகாரமும் இல்லை. இப்போதைக்கு
ஜெயலலிதா விடுதலையால் பாதிக்கப்பட்டது யார் என பார்த்தால் தமிழக லஞ்ச ஒழிப்பு
போலீஸ் மட்டும் தான். ஏனென்றால் அவர்களால் நடத்தப்பட்ட வழக்கு தான் தோற்று
போயிருக்கு. அதை அப்படியே ஏற்று கொள்வதா அல்லது எதிர்த்து போராடுவதா என்பதை தமிழக
போலீஸ் மட்டும் தான் முடிவு செய்ய முடியும். எனவே ஜெயலலிதா சொல்லி இருக்கும் இந்த
பாயிண்ட் கொஞ்சம் சக்தி வாய்ந்ததாக நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.
ஒருவேளை பிப்ரவரி 2 ஆம் தேதி
தொடங்கும் விசாரணையின் அடிநாதமாக இந்த பிரச்சனை இருக்குமானால், உச்ச நீதிமன்றம், அப்பீல் செய்ய தகுதி
உடையவர்கள் யார் என விசாரிப்பதிலும், கர்நாடக அரசுக்கு
அப்பீல் செய்ய தகுதி உள்ளதா என ஆராய்வதிலுமே காலத்தை கடத்தி கொண்டிருக்கும்.
சொத்து குவித்த விவரம், ஆவணங்கள்,
குன்ஃகா & குமாரசாமி ஆகியோரின் தீர்புகள் குறித்த
ஆய்வுகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அப்படி ஒரு சூழலை நோக்கி விசாரணை
நகருமானால் இந்த அப்பீல் நிற்காது. ஜஸ்ட்
லைக் தட் “அப்பீல் விசாரணைக்கு உகந்ததல்ல” என சொல்லி தள்ளுபடி ஆகிவிடக்கூடும். தமிழக போலீஸ் தான் அடுத்து அப்பீல் செய்ய
முடியும். அப்படி அப்பீல் செய்ய முதல்வர் என்கிற முறையில் ஜெயலலிதாவின் ஒப்புதல்
வேண்டும். ஜெயலலிதாவை சிறைக்கு தள்ள ஜெயலலிதாவே எப்படி ஒப்புதல் கொடுப்பார்?
இன்னொரு ஆங்கிள் இருக்கு.
தாக்கூர் மிக நேர்மையானவர் என
சொல்லப்படுபவர். சமீபத்தில் கூட அவர் ஊழலை மிக கடுமையாக விமர்சித்து பேசி
இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக
தண்டனை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். இந்த ஜெ.சொத்து குவிப்பு
வழக்கில் கூட நீதிபதி ஒருவரை அதிரடியாக மாற்றி இருக்கிறார். மாற்றப்பட்ட அகர்வால்
தான் நவ 23 ஆம் தேதி விசாரணையில்,
ஜெ.வுக்கு ஆதரவாக கருத்து சொல்லி விடுதலைக்கு தடை விதிக்க மறுத்தவர். அவரை நீக்கி
இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், அப்பீலுக்கான தகுதி என்பதை கருத்தில் கொள்ளாமல் வழக்கின்
தன்மை என்பதை கவனித்து பார்க்குமேயானால் என்ன நடக்கும்?
வழக்கை நடத்த நியமிக்கப்படும் அமைப்பு
அந்த வழக்கின் இறுதி முடிவு வரை தொடரலாம்னு ஒரு தீர்ப்பு இருக்கிறது. அதன்
அடிப்படையில் கர்நாடக அரசு ஜெ. சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு வரை
தொடர்ந்து வாதாடலாம்னு உச்ச நீதிமன்றம் முடிவு செய்யக்கூடும். அந்த அடிப்படையில்
கர்நாடகத்தின் அப்பீலை ஏற்று விசாரிக்கலாம்.
குமாரசாமி கொடுத்திருக்கும் தீர்ப்பு
அப்பட்டமான பிழை என்பதால், நேரடியாக
அதை ரத்து செய்யலாம். அப்படி அந்த தீர்ப்பு ரத்தானால் ரத்தான நொடியில் இருந்து ஜெ.
முதல்வராக தொடர முடியாது. மீண்டும் சிறை. (ஆனால் ஒரு வசதி. கர்நாடக சிறையில்
இருக்க வேண்டியதில்லை. தமிழக போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக சிறைகளில்
இருக்கலாம்.)
ஜெ.வின் குற்றம் உறுதி செய்யப்பட்டால்
சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம். குன்ஃகா விதித்த அபராத தொகை 100 கோடியும்
செலுத்தவேண்டும்.
ஒருவேளை தற்போதைய சந்தர்ப்ப
சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஜெ. மீது மென்மையான நடவடிக்கை எடுத்தால் போதுமென உச்ச
நீதிமன்றம் முடிவெடுத்தால், அதே
நேரம் சட்டத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையும் ஏற்பட கூடாது என உச்ச
நீதிமன்றம் முடிவெடுத்தால்...
தினசரி விசாரணையை உச்ச நீதிமன்றமே
நடத்தி தீர்ப்பு வழங்கலாம் அல்லது மீண்டும்,
கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கே வழக்கை திருப்பி அனுப்பி ஒரு தனி பெஞ்ச் அமைத்து
விசாரிக்க சொல்லலாம்.
உச்சநீதிமன்றமே விரிவாக விசாரித்து
குறைந்த பட்ச தண்டனை விதிக்கலாம். (இரண்டு வருஷத்துக்கு கூடுதலாக தண்டனை கிடைத்தால்
தான் தேர்தலில் நிற்க முடியாது. 18 மாத தண்டனை கொடுத்தால் போதும். ஜெ.வுக்கும்
பிரச்சனை இல்லை. உச்சநீதிமன்றம் சட்டப்படி செயல்பட்டதாகவும் சொல்லி கொள்ளலாம்.
இரண்டு வருசத்துக்கு குறைவான தண்டனை என்றால் சிறைக்கும் செல்ல வேண்டியதில்லை.
ஜாமீனிலேயே காலம் கழிக்கலாம். முதல்வராகவும் தொடரலாம்)
கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு
மீண்டும் வழக்கு மாற்றப்பட்டால், மீண்டும்
முதலிலிருந்து விசாரணை தொடங்கும். அந்த வழக்கு முடிய ஒரு வருடத்துக்கு மேல் ஆக
கூடும். அப்படியானாலும் வரும் மே மாத தேர்தலில் ஜெ. போட்டியிடவோ முதல்வராக தொடராவோ
எந்த தடையும் இல்லை.
இப்போதைக்கு உச்ச நீதிமன்றம் என்ன
முடிவெடுக்கும் என்பது அண்ணன் ஓ.பி.எஸ்ஸின் ஜாதகத்தை பொறுத்து இருக்கிறது.
*************
தொடர்புடைய பதிவுகள்:
விரிவான அலசல்.
ReplyDelete