Wednesday, May 4, 2016

பிரச்சாரத்தில் சொதப்பும் ஜெ; தேர்தலில் சரியும் அதிமுக

தேர்தல் களம் 2016 பல பல அதிசய திருப்புமுனைகளை கண்டு வருகிறது. 

தேர்தல் அறிவிக்கப்படும் நாளில் தமிழகத்தின் அசைக்கமுடியாத மாபெரும் இயக்கமாக அதிமுக தான் இருந்தது. ஆனால் இப்போது இந்த மூன்று வாரங்களில் அதிமுகவின் நிலை மிக மிக பரிதாபகரமானதாக மாறிவிட்டிருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் எனக்கு தெரிந்து இரண்டே பேர்தான். ஒன்று சரியாக திட்டமிடாத, சுதாரிப்பற்ற ஜெ. இரண்டு கள நிலவரமோ மக்கள் மனநிலையோ புரிந்துகொள்ளாமல் ஜெவுக்கு பிரச்சார உரை எழுதி தரும் அந்த புலவர் பிரகஸ்பதி.

ஜெயலலிதா தமிழக அரசியலில் முன்னிலைக்கு வந்ததே அவரது சாதுரியமான பேச்சாற்றலால் தான். அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக தமிழகம் முழுவதும் கிராமம் கிராமாக சென்று கொடியேற்றி உரை நிகழ்த்தி தான் தனது தனிப்பட்ட செல்வாக்கை மக்கள் மத்தியில் வளர்த்துக்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கையில் சிறந்த பார்லிமெண்டேரியன் என்று விருதுகள் வாங்கி தனது பேச்சாற்றலால் இந்திரா காந்தி மட்டுமல்லாமல் பல தேசிய தலைவர்களின் அபிமானத்தையும் பெற்றார்.

அப்படிபட்ட ஜெ. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் இந்த அளவுக்கு சொதப்புவார் என அவரது இயக்க ரத்தத்தின் ரத்தங்கள் கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள்.

தேர்தல் அறிவிக்கப்பட்டபொழுது எதை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது என்பதில் எந்த கட்சிக்கும் தெளிவான கண்ணோட்டம் இல்லை. ஆட்சி மீது அப்போதைய நிலையில் சொல்லிக்கொள்ளும் படியான பெரிய குற்றச்சாட்டு எதுவும் இல்லை. திமுகவை பொறுத்தவரை ஸ்டாலின் நடத்திய தமிழக சுற்றுப்பயணத்தில் தனக்கு மக்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தயாரித்து, தொகுதி வாரியாக உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைப்போம் என்கிற வாக்குறுதியை கொடுத்து தான் களம் இறங்கியது. அதிமுகவை பொறுத்தவரை தனது தனிப்பட்ட செல்வாக்கு, ஆட்சியின் மேன்மையை மட்டுமே நம்பி களம் இறங்கியது. ஆனால் சென்னையில் நடந்த முதல் பிரச்சார கூட்டத்திலேயே ஜெ. சொதப்பிய சொதப்பல் எதிர்க்கட்சிகளுக்கு மணி மணியாக பாயிண்ட்ஸ் எடுத்து கொடுத்து பிரச்சார களத்தை சூடு பிடிக்க வைத்தது.

சென்னை பிரச்சார கூட்டத்தில் தனது ஆட்சியின் சாதனையாக ஜெ. சொன்னது, சென்னை வெள்ள நிவாரணம், தொழில் முதலீடு, சென்னை மெட்ரோ ரயில் ஆகியவை தான். இதையே பிள்ளையார் சுழி ஆக்கி ஒவ்வொன்றாக பதிலளிக்க தொடங்கியது திமுக. வெள்ள நிவாரணம் பற்றி ஜெ பேசியதற்கு வெள்ள சேதம் எதனால் ஏற்பட்டது என்பதை பற்றி விலாவாரியாக விளக்க தொடங்கியது எதிர்கட்சி பிரச்சாரங்கள். தொழில் வளர்ச்சி பற்றி ஜெ. சொன்னதற்கு தொழில் துறையை முடக்கி வைத்ததை ஆதாரங்களுடனும் புள்ளி விவரங்களுடனும் புட்டு புட்டு வைக்கிறார்கள் மற்றவர்கள். சென்னை மெட்ரோ ரயில் தனது சாதனை என ஜெ. சொன்னதற்கு ஜெ. அந்த திட்டத்தை எப்படி எல்லாம் முடக்கி வைத்தார் அதன் பின் நீதிமன்றம் தலையிட்டு தான் அந்த திட்டத்தை செயல்படுத்தியது என்பதை செய்திகளோடு விளக்கியது எதிர்கட்சி முகாம்.

சென்னை பிரச்சாரம் சொதப்பியபோதே கொஞ்சம் சுதாரித்திருக்கலாம் ஜெ. ஆனால் அடுத்தடுத்து ஒவ்வொரு கூட்டத்திலும் கூடுதல் சொதப்பல்களை அள்ளி தெளித்ததன் பயனாக அதற்கான பதிலடிகளை ஆதாரபூர்வமாக அனைத்து எதிர்க்கட்சிகளும் மக்கள் மத்தியில் எடுத்து எடுத்து வைக்க வைக்க, அதிமுக மீதான பிரம்மாண்ட பிம்பம் மெல்ல மெல்ல மக்கள் மனதிலிருந்து சரிய தொடங்கியது.

ஜெ.வுக்கு பிரச்சாரம் எழுதி கொடுப்பவராவது மக்கள் மனநிலையை புரிந்து கொண்டிருக்கவேண்டும். குறைந்த பட்சம் ஜெ. பேசவிருக்கும் பகுதியின் உண்மையான பிரச்சனைகளை பற்றியாவது தெரிந்து வைத்திருக்கவேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்கள் எண்ணற்ற தகவல்களை தினசரி அறிந்து வருவதால் ‘அதிகமாக’ பொய்மொழிகள் இல்லாத வகையிலாவது ஜெ. பிரச்சார உரையை தயாரித்திருக்கவேண்டும். ஆனால் ஏதோ ஒரு கனவு லோகத்தில் இருக்கும் அதிமுகவினர் தமிழகம் பொற்காலமாக இருப்பது போன்ற ஒரு மாயையில் இருந்து இன்னமும் மீளாததால் யதார்த்தத்துக்கு சற்றும் சம்மந்தமில்லாத பிரச்சார உரையை எழுதி கொடுத்து, அதை ஜெ.வை படிக்க வைத்து, உள்ள கொஞ்ச நஞ்ச அபிமானத்தையும் மக்கள் மத்தியில் இருந்து நீக்கி கொண்டார்கள்.


இப்படித்தான் கோவை பொதுக்கூட்டமும் அமைந்தது. ஏற்கனவே சேலம் பிரச்சார கூட்டத்தில் சேலம் மாவட்ட மக்களுக்கு கோவை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த (!) ஜெ. மீண்டும் ஒரு முறை கோவை மாவட்ட மக்களுக்கு கோவை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். (குறைந்த பட்சம் எங்கே பேசுகிறோம், யாரை பற்றி பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம் என்கிற சிந்தனையாவது இருந்திருந்தால் இப்படியான சமந்தா சம்மந்தம் இல்லாத ஊர்களில் சம்மந்தமற்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசும் காமெடியை தவிர்த்திருக்கலாம்)

அதிமுக இதுவரை தேர்தல் அறிக்கை எதையும் வெளியிடவில்லை. திமுக, பாமக, ம.ந.கூ ஆகியவை தங்களது செயல் விளக்கங்களை தேர்தல் அறிக்கையாக வெளியீட்டு இருக்கிறார்கள். அதிமுகவோ மக்களின் குறைகள் என்ன? தமிழகத்துக்கு என்ன திட்டங்கள் தேவை என்பதை பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள கூட முயற்சிக்காததால் இன்று வரை தேர்தல் அறிக்கையோ செயல் திட்டங்களோ வெளியிடவில்லை. பொத்தாம் பொதுவாக, நான் உங்களுக்கு தேவையானதை செய்வேன், நீங்கள் கனவிலும் நினைக்காததையும் செய்வேன், நான் சொல்லாததையும் செய்வேன் என சொல்கிறாரே தவிர இன்னின்ன பிரச்சனைகளை இன்னின்ன வகையில் தீர்ப்பேன், இன்னின்ன திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்துவேன் என சொல்லவே இல்லை. நிறைவேற்றுகிறாரோ இல்லையோ, இதை இதை செய்வேன் என்கிற வாக்குறுதியாவது கொடுத்திருக்கலாம். ஆனால் அதை கூட அவரால் செய்ய முடியவில்லை. எனது அதிமுக நண்பர்களை கேட்டால் ரொம்ப வருத்தப்பட்டு சொல்கிறார்கள். அம்மாவுக்கு எங்கே என்ன பிரச்சனை இருக்கிறது, என்ன வாக்கு கொடுக்கவேண்டும் என்று கூட யாரும் எடுத்து சொல்வதில்லை என. இரண்டாம் கட்ட தலைவர்கள் என யாரையும் வளர்த்தாமல் இருப்பதன் பலனை இப்போது அனுபவிக்கிறது அதிமுக.

கோவை பொதுக்கூட்டத்திலும் அது தான் நடந்தது. தொழில் துறையில் மிகப்பெரிய சாதனைகள் நடத்தி இருப்பதாகவும், 4,509 புதிய தொழிற்சாலைகளை தொடங்கி இருப்பதாகவும்(!), தொழிலாளர்கள் எல்லோரும் தனது ஆட்சியில் எல்லா வளங்களும் பெற்று மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பெருமிதத்தோடு அவர் பேசியதை கேட்ட எனது அதிமுக நண்பர்களே ஆடித்தான் போய் விட்டார்களாம்.  அதில் பலரும் சொந்தமாக தொழிற்சாலைகள் வைத்து நடத்தி நசிந்து கொண்டு இருப்பவர்கள். தொழில் வளர்ச்சி முடங்கி போய் வேறு மாநிலங்களுக்கு செல்லலாமா என யோசித்து கொண்டிருப்பவரும் அதில் அடக்கம். இப்படியான நிலையை அறிந்து தான் கர்நாடக முதல்வர் கூட கோவையிலே கூட்டம் நடத்தி ‘ஏன் தமிழகத்தில் இருந்து இப்படி கஷ்டப்படுகிறீர்கள்? கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ் நகருக்கு வாருங்கள். உங்களுக்கு தொழில் நடத்த எல்லா வசதிகளையும் செய்து தருகிறேன்’ என பகிரங்கமாக வந்து அழைப்பு விடுத்து போனார். சில தொழிற்சாலைகளும் கோவையிலிருந்து கர்நாடகம் சென்று விட்டது. அப்படியான சூழல் தான் கோவையிலே நிலவி வருகிறது என்பதை கூட தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஜெ. அறிந்திருக்கவில்லை.

கோவை என்றாலே டெக்ஸ்டைல் சிட்டி, தொழில் நகரம் என்பதெல்லாம் பழங்கதை. ஒரு காலத்தில் ஓஹோவென ஓடிக்கொண்டிருந்த மில்களும், மோல்டிங் கம்பெனிகளும், மோட்டோர் கம்பெனிகளும், நெசவு தறி இயக்குவோரும், பம்பு செட், கிரைண்டர் உற்பத்தியாளர்களும் தொழில்கள் நசிந்து, இப்போது, கிடைத்த கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கும் ஒரு அவலமான நிலை தான் கோவையிலே இருக்கிறது. இந்த யதார்த்தத்தை கூட புரிந்து கொள்ளாமல் வெற்று பெருமித பேச்சுக்களை எழுதிக்கொடுத்து அதை அப்படியே பேசி சொந்த கட்சிக்காரர்களும் மக்களும் கேலி செய்யும் அளவுக்கு ஜெ.ஆளானது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான். ஜெ. அப்படி பட்ட ஆள் எல்லாம் இல்லை. பொய்யாகவாவது ‘நசிந்து கிடக்கும் மில்களை புனரமைத்து இயங்க செய்வேன், நெசவாளர்களுக்கு சலுகைகள் வழங்குவேன், பம்ப், மோட்டோர் தொழிற்பூங்கா அமைப்பேன்’ என பொய் வாக்குறுதியாவது கொடுத்து செல்வது தான் அவரது வழக்கம். இப்படி அப்பட்டமாக தனக்கு யதார்த்த நிலை எதுவுமே தெரியாது என மக்கள் உணரும் வகையில் அப்பட்டமாக பிரச்சாரம் செய்து சென்றிருக்கமாட்டார்.


கோவை மாவட்டம் அதிமுகவின் அசைக்கமுடியாத பெரும் கோட்டை என்பது எல்லாம் மே 1 ஆம் தேதி ஜெ பிரச்சாரம் செய்தது வரைக்கும் தான். இப்போது சொந்த கட்சிக்காரர்களும், மக்களும் (அவர்களிலும் தொழிலாளிகளும், கூலி வேலைகாரர்களும், சிறு/குறு தொழில் முனைவோரும் இருக்கிறார்களே?) எல்லோருமே அதிமுகவை விமர்சிக்க தொடங்கி இருப்பதை ஜெ சீரியசாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. இந்த தேர்தலில் கோவை பகுதி அதிமுகவுக்கு மிகப்பெரிய பதிலடியை கொடுக்கும் என்பதற்கான அறிகுறிகள் அங்குள்ளவர்களின் பேச்சில் தெரிகிறது.

மக்களால் நெருங்கமுடியாத ஜெ. இப்போது வேட்பாளர்களாலும் நெருங்கமுடியாதவராக மாறி போனதை அதிமுகவினரே ரசிக்கவில்லை. தனித்தனி மேடை அமைத்து அங்கே ஜெ உட்கார்ந்திருக்கிறார் என்கிற ‘உருவாக்கத்தை’ மட்டுமே மக்களுக்கு கொடுத்து, பிரச்சார உரையை வாசித்து செல்லும் வழக்கத்தை ஜெ கை கொண்டிருப்பது அவரை மக்களிடம் இருந்தும், தொண்டர்களிடம் இருந்தும், ஏன் வேட்பாளர்களிடம் இருந்துமே வெகு தூரம் விலக்கி வைத்திருக்கிறது.

‘மக்களுக்காக நான், மக்களால் நான்’ என ஒரு பஞ்ச் டயலாக்கை எல்லா பொதுக்கூட்டத்திலும் பேசும் ஜெ ஒருபோதும் ‘மக்களோடு நான்’ என சொல்லியதில்லை. அதனால் தானோ என்னவோ ‘மக்களுக்காக நான் (எதையும் செய்யமாட்டேன்); மக்களால் நான் (எல்லா வளங்களையும் அனுபவிப்பேன்)’ என்கிற ரீதியிலேயே அவரது அந்த பஞ்ச் டயலாக் பெரும்பாலான மக்களால் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது.

மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ரெய்டுகளில் அதிமுகவினரே அதிக அளவில் பணம் பதுக்கி வைத்திருப்பது வெளியாவதும், யதார்த்தம் சிறிதும் இல்லாத பிரச்சார உத்தியும், மக்கள் பிரச்சனைகளை பற்றிய எந்த உணர்வும் இல்லாத ஜெ. பேச்சும், அதிமுகவின் வெற்றி சதவிகிதத்தை குறைத்து வருவதை அவர் உணர்ந்து கொள்வது நல்லது.

முறையாக பிரச்சாரம் செய்து, பொய்யாகவேனும் மக்களின் பிரச்சனைகளை அறிந்துவைத்து அதை தீர்த்து வைப்பதாக பொய் வாக்குறுதியேனும் கொடுத்து இருந்தால் அதிமுக மீதான மக்களின் நம்பிக்கை அப்படியே இருந்திருக்கும். தனது பிரச்சார சொதப்பல்களால் தனது எதிர்காலத்தையும் கட்சியின் எதிர்காலத்தையும் ஒரு சேர கெடுத்துக்கொண்டு வருகிறார் மாண்புமிகு அம்மா. இது தமிழகத்துக்கு நல்லதா கெட்டதா என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.


Friday, April 15, 2016

தேஜாவூவும் சில கனவுகளும்

தேஜாவுங்கறதுக்கு தேஜாவுன்றதுதான் பேருன்றது எனக்கு பலகாலமா தெரியாது. அதை ஒரு காட்சிப்பிழை கண்ணோட்டத்தில் தான் புரிதலா வெச்சிருந்தேன்.

முதன் முதல் இப்படியான ஒரு நிகழ்வு கோவை பாப்பநாயக்கன் பாளயத்தில் நடந்தது. அப்போ நானும் என் நண்பனும் சைக்கிளில் போயிட்டிருக்கோம். நண்பன் சைக்கிளின் முன்புற பாரில் உட்கார்ந்திருந்தான். நான் வண்டி ஒட்டிட்டு இருந்தேன். வழியில் ஒரு ஐஸ்கார அண்ணன்ட்ட சேமியா ஐஸ் வாங்கி சாப்பிட்டுட்டே சைக்கிள் ஒட்டிட்டு இருந்தோம். எங்க வீட்டுக்கு பக்கத்தில் வந்ததும் எங்களுக்கு தெரிஞ்ச ஒரு அக்கா தண்ணி குடம் எடுத்துட்டு ரோட்டை கிராஸ் பண்ணினாங்க. அப்படி கிராஸ் பன்னும்போது கல் தடுக்கி ரோட்டிலேயே இடறி விழுந்தாங்க.. கையில் இருந்த சில்வர் குடம் ரோட்டில் உருள மொத்த தண்ணியும் ரோட்டை சேறாக்கிட்டு ஓடிச்சு.


இதை பார்த்து சிரிச்ச என் நண்பன், ‘டேய்.. சதீ.. இவங்களுக்கு இதே வேலை தாண்டா.. அன்னைக்கும் ஒரு நாள் இப்படித்தான் இதே மாதிரி இந்த இடத்துல தண்ணிக்கொடத்தோட விழுந்தாங்க... இந்தா திரும்பவும் இப்ப விழுறாங்க, அப்பவும் நாம இதே மாதிரி ஐஸ் சாப்பிட்டுட்டே தான் வந்தோம்.. ஞாபகமிருக்கா?’ன்னு கேட்டு சிரிச்சான்.

இதை கேட்ட அந்த அக்கா.. டென்ஷன் ஆயிட்டாங்க.. ‘அடேய்.. நான் இப்ப தான் முதல் முதல் இப்படி விழுறேன்.. சும்மா கதை கட்டாதே. கனவு கினவு கண்டிருப்பே’ன்னு அவனை கிண்டலா கலாய்ச்சிட்டு போயிட்டாங்க.  

நானும் என் பங்குக்கு, ‘டேய்.. நாம இப்ப தான் இப்படி சேமியா ஐஸ் சாப்பிட்டுட்டு இந்த ரோட்ல வரோம்.. இதுக்கு முன்னாடி இப்படி நாம வரலையேடான்னு’ குழப்பமா கேட்க.. பையன் ஒருமாதிரி கன்பீஸ் ஆயிடாப்டி.

ரெண்டு நாள் சரியாவே எங்ககூட விளையாட வரலை.

மூணாவது நாள் வந்தான். டேய் சாத்தியமா சொல்றேன்.. அவங்க அன்னைக்கு விழும்போது அவங்க ஏற்கனவே அதே மாதிரி விழுந்தது ஞாபகம் வந்துச்சு. அதை விட முக்கியம் அவங்க அப்படி விழப்போற சில செகண்டுக்கு முன்னாடி அவங்க அப்படி தான் விழப்போறாங்கன்னு எனக்கு தெரிஞ்சுது.. ஆனா சொல்ல முடியலை. அதுக்குள்ளே எல்லாம் நடந்துச்சு.. என்னை நம்புடா’ன்னு ஒரு மாதிரியா ஃபீல் ஆயி பேசுனான்.

சரி விடுறான்னு அவனை அப்படி இப்படி சமாதானம் பண்ணிட்டு போயிட்டேன்.

அதுக்கப்புறம் 1992 ஆம் வருஷம். பத்தாப்பு ரிசல்ட் வர்ற சமயம். ரிசல்டு பாக்க நானும் நண்பர்களும் கோவை தினத்தந்தி ஆபீஸ் முன்னாடி கூடி இருந்தோம். பத்து மணிக்கு தான் ரிசல்டு வரும்னு வாட்ச் மேன் சொன்னாரு. அப்படி அவர் சொல்லிட்டு இருக்கும்போதே.. எனக்கு அடுத்து அவர் “இப்ப மணி என்ன தம்பின்னு” கேப்பாரு நானும் சுவத்துல இருக்கிற கையை லைட்டா திருப்பி மணி பாத்து பத்தேகால் ஆச்சுனு சொல்லுவேன், அப்படி திரும்பும்போது பக்கத்துல ஒரு நண்பன் மேல லைட்டா இடிச்சுக்குவேன்னு எல்லாம் அடுத்தடுத்து நினைவுக்கு வந்துட்டே இருக்கு... ஆனா அதை எல்லாம் உள்வாங்கி என்னன்னு உணர்ந்து புரிஞ்சுக்கறதுக்குள்ளே அதெல்லாம் அப்படி அப்படியே நடந்துட்டு இருக்கு. என்ன நடக்க போகுதுன்றது.. நடக்கறதுக்கு ஒரு சில வினாடிகளுக்கு முன்னாடியே எனக்கு தெரிய வந்துச்சு.

இந்த நிகழ்வு நடந்தப்போ சில வருஷங்களுக்கு முன் (மேலே நான் சொன்ன) என் நண்பனின் நிகழ்வும், அப்போ அவனுக்கு இதே மாதிரி தான் இருந்திருக்கும்லன்ற நினைப்பும் வந்துச்சு.

*****

1993இல் சென்னை வந்தப்பறம், கன்னிமாரா லைப்ரரி போகும்போதெல்லாம் இதை பத்தின புக்ஸ் தேடி எடுத்து படிக்க ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்தில் நமக்கு ESP (Extra Sensory Power) வந்திருச்சு.  இனி நாம எதிர்காலத்தை துல்லியமா கணிச்சிரலாம்ன்ற அளவுக்கெல்லாம் நானே நம்ப ஆரம்பிச்சிட்டேன். அந்த அளவுக்கு பல பல புக்ஸை ரெஃபர் பண்ணி, கனவுகள், காட்சி பிழைகள், யூக கற்பனைகள், எதிர்கால கணிப்புகள்னு கண்டதெல்லாம் படிச்சு நானும் ஒரு மாதிரி குழம்பிட்டேன்.

ரொம்ப குழம்புனா சரிவராதேன்னு நானே என்னை சமாதானம் பண்ணிக்கறதுக்காக இது ஜஸ்ட் காட்சி பிழைதான்னு எனக்கு நானே ஒரு முடிவுக்கு வந்துட்டு, அப்படியே விட்டுட்டேன்.

ஆனால், அதற்கு பிறகும் பல ஆண்டுகளில் பல பல நிகழ்வுகளில் இதே மாதிரியான உணர்வுகள் வர ஆரம்பிச்சுது. பல சம்பவங்கள் நடந்த பொழுது அது குறித்த நினைவுகள் முன்கூட்டியே அறிய முடிஞ்சுது. சில அபூர்வ நிகழ்வுகளில் அப்படி முன்கூட்டியே அறிய முடிஞ்சு என்னை நான் சுதாரிச்சு தற்காத்துக்கொண்ட நிகழ்வுகளும் இருக்கு.


உதாரணமா ஒரு ஆக்ஸிடெண்டை சொல்லலாம்.

அம்பத்தூர் எஸ்டேட்ல வேலை செஞ்சிட்டு இருந்த சமையம். எனக்கு ஹோட்டல் சாப்பாடு அவ்வளவா ஒத்துக்காது. அதனால் மதியம் சாப்பிட எப்படியும் வீட்டுக்கு வந்துடுவேன். அப்படி ஒரு நாள் மதிய லஞ்சுக்கு வீட்டுக்கு வந்திட்டு இருக்கும்போது, கிராம்ப்டன் கிரிவ்ஸ் கம்பெனி பக்கத்து ரோட்ல வேகமா பைக்ல வந்துட்டு இருந்தேன். எதிர்ல ஒரு தண்ணி லாரி மெல்லமா, ரொம்ப ரொம்ப மெல்லமா ஊர்ந்து ஊர்ந்து வந்திட்டு இருக்கு. இன்னொரு பக்கம் என் ரோட்டுக்கு இடது பக்க ரோட்லருந்து ஒரு சின்ன பையன் சைக்கிள்ல வந்துட்டு இருந்தான். எனக்கு அந்த செகண்டே தெரிஞ்சுருச்சு. அவன் நெர்வஸ் ஆகி என் மேல இடிப்பான்.. நான் நிலை தடுமாறி லாரி மேல போயி நச்சுனு மோதுவேன்னு எல்லாமே தெரிஞ்சுது.. அப்படி தெரிஞ்சு புரிய தொடங்கிய அடுத்தடுத்த செகண்ட்ஸ்ல அதே மாதிரி எல்லாமே நடக்க தொடங்கிச்சு. ஆனா நான் லாரி மேல தான் மோதுவேன்னு ஏற்கனவே தெரிஞ்சதால (இத்தனைக்கும் லாரி எனக்கு இடது ஓரமா எதிர்ல வருது.. நான் ரோட்டோட வலது ஓரமா போறேன்.. ஆனாலும் லாரி மேல தான் மோதுவேன்னு தெரிஞ்சுது) கையை லாரிக்கு காட்டி நிறுத்த சொன்னேன்.. எதுக்கு நான் அப்படி சொல்றேன்னு லாரி காரனுக்கே தெரியலை.. கன்பீஸ் ஆயிட்டான்.. ஆனாலும் நிறுத்தீட்டான்.

நான் அப்படி கையை காட்டி நிறுத்த சொல்ல.. அடுத்த செகண்ட் சைக்கிள் என் மேல மோத.. நான் தடுமாறி துள்ள.. அதில் பேலன்ஸ் தவறிய பைக் வலதுபுறம் திரும்பி லாரியை நோக்கி போக.. கரெக்டா லாரியும் பிரேக் அடிச்சு நிறுத்திவிட.. நான் விழுந்து தரையில் தரைச்சபடி சறுக்கிட்டே போயி லாரி டயர் மேல மோதி நின்னேன். முதுகிலும், கையிலும் சிராய்ப்பு தவிர பெருசா ஒண்ணும் அடி இல்லை.

என்ன நடக்கவேண்டியதுன்னா நான் நேரா லாரியில் போயி மோதிருக்க வேண்டியது.. மோதி இருந்தா ரிவர்சில் தெறிச்சிருப்பேன்.. அப்படி தான் எனக்கு சம்பவம் நடக்க போறதா நினைவு வந்துச்சு (கவனிங்க இந்த நினைவு வரும்போது நான் பைக்கில் கேசுவலா வந்துட்டு இருக்கேன்.. அப்படி ஆக்ஸிடெண்ட் ஆகக்கூடிய சாத்தியமே இல்லாத நிமிஷம் அது) அந்த நினைவு வந்ததால் தான் லாரியை நிறுத்த சொல்லி.. நான் வாகா சாஞ்சு விழுந்து தரையோடு தரையா தரைச்சபடி போயி சேஃபா இடிச்சு நிக்க முடிஞ்சுது.

இந்த சம்பவம் என் குழப்பத்தை இன்னும் கூடுதல் ஆக்கிருச்சு. அப்போ.. என்ன நடக்கபோகுதுன்றதை தெரிஞ்சுக்க முடியறதோட என்னால் அதுக்கு தக்கபடி தற்காப்பு நடவடிக்கையும் எடுக்க முடியும். அடடே! நாம பெரிய தீர்க்கதரிசன ஸ்வாமிகள் ஆயிடுவோம் போலிருக்கேன்னு நினைச்சேன்.

அதன் பின்னும் பல பல நிகழ்வுகளில் இது மாதிரி முன்கூட்டிய தகவல்கள் நினைவுக்கு வந்து அப்படி இப்படி சமாளிச்சு இருக்கேன். ஏதோ எனக்குள்ளே ஒரு அமானுஷ்ய சக்தி வந்து உக்காந்திருக்கறதா நினைச்சுப்பேன்.



அப்படி இருக்க, ஒரு நாள் அதே கன்னிமாரா லைப்ரரியில் ஒரு புஸ்தகத்தில் தான் தேஜாவூ பத்தி படிச்சேன். சுவாரசியம் தாங்கலை. என் வாழ்வில் நடந்த பல விஷயங்களோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு படிச்சிட்டு வந்தேன். நிறைய விஷயங்கள் மெல்ல மெல்ல புரிய ஆரம்பிச்சுது.

இந்த சூழலில் தான் ஒரு முறை மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயிட்டு வரும்போது, ஒரு பழைய புத்தகக்கடையில் ஒரு சுவாரசியமான புத்தகம் பார்த்தேன். கனவுகள் பற்றிய புத்தகம் அது.

அந்த புத்தகத்தை படிச்சப்பறம், இந்த குழப்பம் இன்னொரு பரிணாமத்துக்கு போச்சு. அதாவது அந்த புக் என்ன சொல்ல வருதுன்னா.. நாம் பல்வேறு தருணங்களில் பார்த்த கனவுகள் நம் ஆழ் மன நினைவறைகளில் தங்கிரும். பல நாள், பல மாதங்கள் ஏன் பல வருஷங்களுக்கு அப்புறம் கூட அந்த நிகழ்வுகள் நடக்கும் போது சட்டுனு நம்ம நினைவறைகளிலிருந்து அந்த நிகழ்வுகள் நம் ஞாபகத்துக்கு வந்து நம்மை அலார்ட் ஆக்கும்.

இந்த புத்தகத்தில் இப்படி சொன்னதும் நான் செஞ்ச காரியத்தை சொன்னா சிரிக்கக்கூடாது.

அழகா ஒரு லாங் சைஸ் ரூல்டு நோட் புக் வாங்கி ஒவ்வொரு நாளும் நான் கண்ட கனவுகளை அதில் டேட் போட்டு குறிச்சிட்டே வந்தேன். ஏதாவது ஒரு சுவாரசியமான நிகழ்வு நடந்தா அதை பத்தி எப்பவாவது கனவுகள் கண்டிருக்கேனான்னு எடுத்து தேடி பாப்பேன். ம்ஹூம்.. அப்படி எதுவும் எந்த கனவோடும் டேலி ஆகவேயில்லை. ஒரு மூணு வருஷம் எழுதிருப்பேன்.. அப்பறம் நிறுத்திட்டேன்.. அதுக்குள்ளே அது 4 நோட் புக் ஆயிருந்தது. அந்த நோட்டெல்லாம் ஒரு சுபயோக சுபதினத்தில் பரணில் தூக்கி போடப்பட்டது.

இப்படி எழுதறதை நிறுத்தி சில வருஷம் கழிச்சு சில நிகழ்வுகள் நடந்தது. பின்னொரு தருணம் வீட்டுக்கு பொங்கலுக்கு வெள்ளை அடிக்கும்போது அந்த பழைய நோட்டுகள் தட்டுப்பட்டுச்சு. அதை பரண்லருந்து இறக்கி.. அந்த கனவுகளை (அதாவது கிட்டத்தட்ட 5 வருஷம் முன்பு பார்த்து எழுதி வெச்சா கனவுகளை) படிச்சு பார்த்தப்போ... அட இதெல்லாம் இப்ப போன வருஷம் நடந்துச்சே.. இது போன மாசம் நடந்துச்சே.. ன்னு ஆச்சரியமா சொல்லி சொல்லி சிலாகிச்சிட்டு இருந்தேன்.

அதன் விளைவா.. என் முடிவுகள் மீண்டும் மறு வரையறைக்குள்ளாச்சு.

அதாவது.. எப்போதோ நாம் கண்ட கனவுகள் பிறிதொரு நாளில் நிஜத்தில் நிகழ நேரும்போது நம் பழைய கனவுகள் நினைவுக்கு வந்து அடுத்து என்ன நடக்கப்போக்குதுன்றதை நமக்கு உணர்த்தும். ஆனாலும் நம்மால் அவற்றை தவிர்க்க முடியாது.

இன்னொரு வரையறை உருவாகும் வரை இது தான் என் இப்போதைய நிலைப்பாடு.

இதை எல்லாம் ஏன் நான் இப்ப சொல்ல வரேன்னா..  நேத்து ஒரு கனவு கண்டேன்.. ஒரு கெட்ட கனவு.. கொடூரமான கனவும் கூட.... அது ஒரு வேளை பலிச்சு தொலைச்சிருமோன்னு  பயந்து பயந்து வருது. அது எப்போ நடக்குமோ? அதுக்குள்ளே நான் செய்யவேண்டிய கடமைகளை எல்லாம் சரியா செஞ்சிட முடியுமா? ன்னு எல்லாம் படபடப்பா வருது.

யான் பெற்ற அச்சம் பெறுக இவ்வையகம்!


Wednesday, April 13, 2016

திமுக தேர்தல் அறிக்கை – 2016

தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடு பிடிக்க தொடங்கி இருக்கு. பாரம்பரியமான தேர்தல் முஸ்தீபுகள்னா, கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம்.. இப்படி தான் வரிசை. ஆனா இந்த தேர்தலில் பல கட்சிகள் இந்த மரபிலிருந்து மாறிடிச்சு. அதிமுக, நாம் தமிழர், மநகூ எல்லாம் பிரச்சாரத்தை தொடங்கியாச்சு. ஆனா அவங்க தேர்தல் அறிக்கை என்ன? என்னவெல்லாம் திட்டத்தை முன்னிறுத்தி இந்த தேர்தலை சந்திக்க போறாங்கன்னு எல்லாம் அந்தந்த கட்சி காரங்களுக்கே இன்னும் தெரியாது. தேர்தல் அறிக்கை வெளிவந்தால் தான் எதையும் சொல்ல முடியும். ஆனா அதுக்கு முன்னாடியே பிரச்சாரம் தொடங்கிட்டாங்க. காமெடியா இருக்குல்ல?

தேர்தல் மரபை மறக்காம அதே வரிசைக்கிரமமா இப்போதைக்கு செயல்பட்டுட்டு இருக்கிற கட்சின்னா அது திமுக தான். கூட்டணி முடிவு செஞ்சப்பறம், முக்கிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செஞ்சப்பறம், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டாச்சு. இனி ஏப்ரல் 23 முதல் பிரச்சாரம்.



இன்னைய தேதியில் திமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஹாட் டாபிக். அவ்வளவு சிறப்பான அறிக்கை அது. திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது பொதுவாகவே மாநில வளர்ச்சி திட்டங்கள், சமுதாய நலன், அனைத்து துறைகளிலுமுள்ள இடர்பாடுகள் களைதல் மாதிரியான விஷயங்களை முன்வைத்து தான் எப்போதுமே வெளிவரும். அதனால் தான் அதிமுக எந்த தேர்தலிலும் முன்னதாக தேர்தல் அறிக்கை வெளியிடாமல் திமுகவின் தேர்தல் அறிக்கை வந்தபின் அதன் அடிப்படையில் அதில் சிறு சிறு மாற்றங்கள் செய்து தனது தேர்தல் அறிக்கையாக அதிமுக வெளியிடும்.

அதிமுக முன்னதாக தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருந்தால், அம்மா உணவகத்தில் இந்த ஆண்டு முதல் ருமாலி ரொட்டியும் வழங்கப்படும்னு அறிவிச்சிருப்பாங்க. அந்த லெவல்ல தான் அவங்களால யோசிக்கமுடியும்.

தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் என்ன வேணும்ன்றத அதிமுகவால சுயமா யோசிச்சு முடிவெடுத்து அறிவிக்க முடியாது. அந்த அளவுக்கு சிந்திக்கக்கூடிய ஆட்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் காலத்தோடவே போயாச்சு. அதுக்கு அப்புறம் வந்தவங்களும் அப்படி ஒரு திறமை இருந்தாலும் கூட அதை வெளிப்படுத்த பயந்துகிட்டு கார் டயரையும் ஹெலிகாப்டர் பாட்டத்தையும் கும்பிட்டு கன்னத்தில் போட்டுக்கிட்டு போயிக்கிட்டே இருக்காங்க. சர்வைவல்னு வந்துட்டா நம்ம தெறமைகளை பெரிசா காட்டிக்கக்கூடாதுன்னு எல்லா அதிமுக தொண்டனுக்கும் தெரிஞ்சிருக்கு.

இதுவரைக்கும் ஜெ. அறிவித்த செயல்படுத்திய திட்டங்கள் பெரும்பாலானவை, மற்ற கட்சிகள் சொல்லியது, கோரிக்கையா வெச்சது, மற்ற கட்சிகளின் செயல்திட்டங்கள் / தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதுன்னு தான் இருக்கே தவிர, தானே சுயமா யோசிச்சு முடிவு செஞ்சு அறிவிச்ச திட்டம்னு அதிகமா கிடையாது.

ஆனா அதேசமயம் மற்ற கட்சிகளை ஒப்பிட்டா திமுகவின் செயல்திட்டங்களும் தேர்தல் அறிக்கைகளும் மக்கள் மீதான நிஜமான அக்கறைகளால் செயல்படுத்தப்பட்டதுன்னு புரியும்.

உதாரணத்துக்கு சொல்லனும்னா, கண்பார்வை அற்றவர்களுக்கு இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் கலைஞருக்கு விபத்தில் கண்ணில் அடிபட்டபோது அதன் வலியும் பார்வையற்ற நிலையின் அவஸ்தையும் தானே உணர்ந்து அதன் அடிப்படையில் அறிவிச்சது. கைரிக்ஷா ஒழிப்பு, எழும்பூர் வந்திறங்கியபோது தன்னை வைத்து இன்னொரு மனிதன் இழுப்பதன் கஷ்டம் உணர்ந்து அறிவிச்சது. ஏரி குளங்கள் தூர்வாரல் வெள்ளபெருக்கினால் மக்கள் பாதிக்கப்பட்டபோது அறிவிக்கப்பட்டது. மேம்பாலங்கள் சாலை மேம்பாட்டு திட்டங்கள் வெளிநாட்டு பயணம் சென்று கண்டு வந்ததும் நம்ம ஊர்லயும் அது மாதிரி எல்லாம் வேணும்னு தீர்மானிச்சு அறிவிச்சு செயல்படுத்தினது. இலவச திருமண உதவி திட்டம், கல்யாண செலவுக்கு காசு இல்லாததால் தற்கொலை செய்துகொண்ட ஒரு பெண்ணின் செய்தி படிச்சு அதன் கவலையில் அறிவிச்சது. இப்படி அது ஒரு நீ......ளமான லிஸ்டு. இதெல்லாம் யாரும் திட்டமிட்டு கொடுக்காமல், கோரிக்கை வைக்காமல், போராடாமல் தாமாகவே உணர்ந்து செயல்படுத்திய திட்டங்கள்.

சமத்துவபுரம், விவசாய கடன் தள்ளுபடி, கரும்பு நெல் ஆகியவற்றுக்கான ஆதார விலை நிர்ணயம், சென்னை மெட்ரோ, பெண்ணுக்கு சொத்துரிமை, கலப்பு திருமானத்துக்கான அங்கீகாரம் போன்ற முன் காலங்களில் செயல்படுத்தப்பட்ட திமுகவின் பல பல திட்டங்கள் அவர்களது தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவை தான். 

அதனால் திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது கிட்டத்தட்ட ஆக்ஷன் பிளான் தான். ஒன்றிரண்டு செயல்படுத்தப்படாமல் போகலாம். ஆனால் பெரும்பாலான திட்டங்கள் சாத்தியமுள்ளவையா என ஆராய்ந்து விவாதித்து அதன் பிறகு தான் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு திட்டம் வந்தால் அது நிச்சயம் செயல்பாட்டுக்கு வரும் என்கிற ஒரு நம்பிக்கை தமிழக மக்களிடம் காலம் காலமாக உள்ளது. அதனால் தான் திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு இவ்வளவு மரியாதை.

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கை மிக பிரமாதம் என திமுகவை விமர்சிக்கும் பத்திரிக்கைகள் கூட பாராட்டுகின்றன. மக்களை பொறுத்தவரை மிக சிறந்த தேர்தல் அறிக்கை என பெரும்பாலானவர்கள் ஏன் பாராட்டுகிறார்கள் என்பது அறிக்கையை வாசித்த அனைவருக்கும் சொல்லாமலே புரியும். அந்த அளவுக்கு நலத்திட்டங்களும் வளர்ச்சி பணிகளும் நிறைந்து கிடக்கிறது.

சமீபத்தில் திமுக பொருளாளர் திரு ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவது நடத்திய ‘நமக்கு நாமே’ பயண திட்டத்தில் சந்தித்த மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு அவற்றில் சாத்தியமானவற்றை எல்லாம் முடிந்த அளவுக்கு இந்த தேர்தல் அறிக்கையிலே இணைத்திருக்கிறார்கள். மேலும் முதல் முறையாக மாவட்ட வாரியான செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  75 பக்கங்கள் உடைய இந்த தேர்தல் அறிக்கையை எல்லோரும் படித்திருப்பீர்கள். அதனால் விரிவாக செல்லாமல் முக்கியமான விஷயங்களை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன்.

இந்த தேர்தல் அறிக்கையில் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்கள்ன்னா...

1.   விவசாயக்கடன் கல்விக்கடன் ஆகியவை ரத்து
2.   விசைத்தறிகளுக்கு முதல் 750 யூனிட் மின்சாரம் இலவசம்
3.   மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளில் தமிழகம் முழுவதும் இலவசப்பயணம்
4.   விவசாயத்துக்கு தனி பட்ஜெட்
5.   சென்னையை போலவே, கோவை மதுரை திருச்சிக்கும் மெட்ரோ ரயில்.
6.   காலியான அரசு பணிகள் உடனடியாக நிரப்புதல்
7.   சென்னை-ஹோசூர்; மதுரை-தூத்துக்குடி சாலைகளில் இண்டஸ்ட்ரியல் காரிடார்
8.   நீர் பாசனத்துறைக்கு தனி அமைச்சகம்
9.   நீர் மேலாண்மை மேம்பாடு, 200 புதிய தடுப்பணைகள்
10. தோட்டக்கலைக்கு தனி பல்கலைக்கழகம்
11. மின்சாரக்கட்டணம் மாதாமாதம் கட்ட அனுமதி

இதை பத்தி தனித்தனியா ஏன் பிடிக்குதுன்னு விவரிக்கறதா இருந்தா ஒவ்வொரு திட்டத்தின் பின்னணி, அதன் இப்போதைய நிலை, இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால் அதில் கிடைக்கக்கூடிய பலன்கள்னு அது ஒரு பெரிய கட்டுரையா மாறிடும்.

அதே சமயத்தில் இந்த தேர்தல் அறிக்கையில் இலவசங்களே இல்லைன்னு சிலர் புளகாங்கிதப்பட்டு சொல்லி இருக்காங்க. அது தவறு. இலவச பொருட்கள் குறித்த அறிவிப்புக்கள் இல்லையே தவிர மானியங்கள், சலுகைகள், இலவசங்கள், கடன் ரத்துக்கள், உதவி தொகைகள்னு எக்கச்சக்க சலுகைகள் இருக்கு. என்ன எல்லா சலுகைகளும் வளர்ச்சி நோக்கிய சலுகைகள் என்பது தான் மிக பெரிய ஆறுதல்.

செலவுகள் குறித்து நிறைய பேசி இருக்கும் இந்த தேர்தல் அறிக்கையில் வருவாய்க்கான திட்டங்கள் எதுவும் சொல்லப்படலை என்பது எனது தனிப்பட்ட ஆதங்கம். ஏற்கனவே ரூ. 4 லட்சம் கோடியாக இருக்கும் தமிழக அரசின் கடன் இப்படியான சலுகைகளால் மேலும் கூடும் என்கிற அச்சம் வந்து போகிறது. ஆனால் நிதி நிர்வாகத்தில் இதுவரையும் அமைந்த தமிழக அரசுகளில் திமுக அரசு மட்டுமே சிறப்பா செயல்பட்டது என்பதால், நிச்சயமாக நிதி மேலாண்மையை அதே சிறப்போடு செயல்படுத்துவார்கள் என நம்பலாம்.

கச்சத்தீவு மீட்பு, கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் ரத்து, மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் இணைப்பு ஆகிய அட்ராக்டிவ் அறிவிப்புக்களும் இருக்கு. எனக்கு இது போன்ற அறிவிப்புக்களில் உடன்பாடு கிடையாது என்றாலும் தமிழக அரசியல் களத்தில் வெறும் வளர்ச்சி திட்டங்களை மட்டுமே முன்வைத்து தேர்தலை சந்தித்து விட முடியாது. கொஞ்சம் கவர்ச்சி அறிவிப்புக்கள் தேவையாக தான் இருக்கு. என்ன செய்ய?

அதேசமயம் 2011 ஆம் ஆண்டு அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 14% திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன. மற்றவைகளின் கதி என்ன என இதுவரை தகவலில்லை.

உதாரணமா, 10 ஆடை அலங்கார பூங்காக்கள் அமைப்பது, அனைத்து காவல்நிலையங்களையும் மின் ஆளுமையில் இணைப்பது, திருப்பூர் சாயக்கழிவுக்கு விஞ்ஞான முறையிலான சுத்திகரிப்பு நிலையம், தென் தமிழகத்தில் ஏரோ பார்க் என பல பல அறிவிப்புக்கள் இன்னமும் முதல் கட்ட நடவடிக்கை கூட எடுக்கப்படாமல் அப்படியே முடங்கி கிடக்கிறது.

மேலும் நூற்றுக்கணக்கான அறிவிப்புக்களை விதி 110 இன் கீழ் அறிவித்த ஜெ. அதில் 20% கூட செயல்படுத்தவில்லை என்பதையும் கவனித்தால், திமுக தேர்தல் அறிக்கைக்கான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எளிதில் புரியும்.


திமுக தேர்தல் அறிக்கை வந்தபிறகு, அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடாத நிலையில் விருத்தாசலம் பிரச்சாரத்தில் பேசிய ஜெ. நான் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவேன். அவற்றை செயல்படுத்துவேன். சொல்லாததையும் செய்வேன் என ஒரு பொதுப்படையான அறிவிப்பை வெளியிட்டாரே தவிர, இன்னின்ன திட்டங்கள், இன்னின்ன வழிமுறைகளில் செய்ய போகிறேன் என தீர்க்கமான ஒரு கருத்தாக்கம் அவரிடம் இன்று வரை இல்லை என்பதை கவனிக்கலாம்.

சென்னை பிரச்சாரத்தில் பேசிய ஜெ. தனது சாதனை என சொன்னது, மெட்ரோ ரயில் துவக்கியது, மின் விநியோகம் சீராக்கியது, வெள்ள நிவாரண பணிகள் ஆகியவற்றை தான் முக்கியமான சாதனை என சொல்லி இருக்கிறார்.

சென்னைக்கு மெட்ரோ ரயில் வேண்டாம், மோனோ ரயில் தான் வேண்டும் என அடம் பிடிச்சு, திமுக தொடங்கி வைத்த திட்டம் என்பதாலேயே மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்காமல் முடக்கிவைத்து, கடைசியில் ஹைகோர்ட் போய் நீதிபதிகள் கண்டிச்சு உத்தரவு போட்டப்பரம் தான் மெட்ரோ பணிகள் தொடர்ந்து நடந்துச்சுன்றது சென்னையில் உள்ள எல்லாருக்குமே தெரியும். ஆனா அதை தன்னுடைய சாதனையா சொல்லி இருக்கும் ஜெ. நம்மை எந்தளவுக்கு முட்டாள் என முடிவு செய்திருக்கிறார் என்பதை தெரிஞ்சுக்கலாம்.

மின் விநியோகம் பற்றி கேட்கவே வேண்டாம். மின் விநியோகம் சீரானது, மின் மிகை எல்லாம் சொன்னாலும் நிஜ கதை என்னன்னு உங்களுக்கு தெரியாதா என்ன?

வெள்ள நிவாரண பணிகள் பற்றி நான் சொல்வதை விட இணையத்தில் உள்ள பலரும் கட்டுரை கட்டுரையாக எழுதி இருக்கிறார்கள். பலரும் நிவாரண பணிகளில் தங்களை அர்ப்பணித்து கொண்டவர்கள். அதிமுகவும் தமிழக அரசும் எப்படி எல்லாம் நிவாரண பணிகளை முடக்கி வைத்தார்கள் என்பதை நன்கு அறிந்தவர்கள். அவர்களிடம் நான் விவரிப்பது சரியல்ல. அவர்களே எல்லோரிடத்திலும் ஜெ. சொன்ன பொய்யின் பிரம்மாண்டத்தை புரியவைத்து விடுவார்கள் என நம்பலாம்.

ஆகமொத்தம், ஜெ. தன்னுடைய ஆட்சியின் சாதனைன்னு சொல்லிய எதுவுமே உண்மையில் சாதனையே அல்ல.

அப்படியாக, தமிழக தேர்தல் களத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை கொடுத்த பிரமாண்டமான உத்வேகம், கள நிலைமையை மொத்தமாக புரட்டிப்போட்டு, இது வரை அதிமுகவுக்கு சாதகமாக இருந்த தேர்தல் காற்றை திமுகவுக்கு சாதகமாக திருப்பி விட்டிருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் வெளிவரக்கூடிய அதிமுக தேர்தல் அறிக்கை இனி எதை முன்வைத்தாலும் அது பெரிய அளவில் பேசப்படாது என்பது உறுதி. ஏனெனில் நடைபெற்ற இரண்டு பிரச்சார கூட்டங்களிலும் எந்த திட்டத்தையும் சொல்லாத ஜெ. தேர்தல் அறிக்கையில் அறிவிப்புக்களை அழகாக அச்சடித்து கொடுத்தால் அது திமுக அறிக்கையின் நகல் / பாதிப்பு என தான் எடுத்துக்கொள்ளப்படுமே தவிர சொந்த முயற்சியாக எடுத்துக்கொள்ள முடியாது. மேலும் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் சொல்லப்பட்ட பலவும் செயல்பாட்டுக்கு வரலைன்ற உண்மையும் மக்களுக்கு தெரியும்.

2006 தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் நிஜமான ஹீரோ திமுகவின் தேர்தல் அறிக்கை தான்.


Saturday, April 9, 2016

ஜெ. வழக்கு – இப்போதைய ஆப்ஷன்ஸ் – பாகம் 4

சுப்ரீம் கோர்ட் மேல்முறையீட்டு வழக்கில் கிட்டத்தட்ட முக்கிய வாதங்கள் எல்லாம் முடிஞ்சுபோச்சு. இனி தீர்ப்பு தான் பாக்கி. இப்போதைய நிலைமையில் யூகிக்க எம்புட்டு விஷயம் இருக்கும்?? ஒண்ணொண்ணா பாக்கலாமா?

முதலில் முக்கியமான ரெண்டு விஷயத்தை சொல்லிடுறேன். அப்பாலிகா ஜாலியானா ஜிம்கானானு யூக கற்பனைகள் செய்யலாம்.

விஷயம் நெம்பர் 1.

ஜெ.வை சிறையிலிருந்து வெளிக்கொண்டு வர அவசரம் அவசரமா களம் இறக்கப்பட்டு வெற்றிகரமா அவரை வெளியேவும் கொண்டுவந்த புகழ் பெற்ற வழக்கறிஞர் திரு ஃபாலி நாரிமன் அவர்கள், இந்த மேல் முறையீட்டு மனு விசாரணையில் ஜெ. சார்பாக வாதாடுவார்னு எல்லோரும் எதிர்பார்த்திருக்க, அவர் இதில் ஜெ. சார்பா வாதாடாமல் ஒதுங்கி நின்னதே சுப்ரீம் கோர்ட் வட்டாரத்தில் பல விவாதங்களை கிளப்பி விட்டிருக்கு.

நாரிமனின் இந்த நிலைப்பாடே இந்த வழக்கின் தன்மைக்கான ஆக பெரும் சான்றுன்னு எல்லாரும் சொல்றாங்க. அப்படி நாரிமன் தன் நடவடிக்கையால் மறைமுகமா முடிவு செஞ்ச இந்த வழக்கில் ஜெ. சார்பா வாதாட வேறு யாரும் முன் வராததாலயோ என்னவோ நாகேஸ்வரராவ் வாதாடிட்டு இருக்கார்.

இன்னொரு பக்கம், நீதி நிலைநாட்டப்படனும், தவறான தீர்ப்பு திருத்தப்படணும்னு பல வக்கீல்களும் கருத்து சொல்லிட்டு இருக்க, மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கர்நாடகம் சார்பாகவும், அந்தி அர்ஜுனா திமுக சார்பாகவும் வாதாடுறாங்க.

இந்த விஷயமே இந்த வழக்கு குறித்த நிபுணர்களின் பார்வையை தெள்ள தெளிவா புரிய வெச்சிருக்கு.

விஷயம் நெம்பர் 2.

திமுக இந்த வழக்கில் தன்னை வாதாட அனுமதிக்கணும்னு கேட்டதுக்கு, அதெல்லாம் ஒண்ணும் வேணாம். சும்மா டைம் வேஸ்டு. வேணும்னா நீங்க சொல்ல வேண்டியதை மனுவா எழுதி கொடுத்துருங்க. நாங்க படிச்சிக்கறோனு நீதிபதிகள் சொன்னது, திமுகவுக்கு டோட்டல் டேமேஜ்.

ஒரு வகையில் இது நியாயமே கிடையாது. வழக்கை இவ்வளவு தீவிரமா நடத்துனதும், ஒரு கட்டத்தில் நீர்த்து போன வழக்கை உயிர்க்கொடுத்து இழுத்துட்டு வந்ததும் திமுக தான். ஆனா அவங்களுக்கு வாதாட வாய்ப்பு மறுக்க படுவது எதை எதையெல்லாமோ நினைக்க வைக்குது. அப்படி என்ன தான் அவசரம் நீதிமன்றத்துக்குனு தெரியலை.

டைம் வேஸ்டு தான் காரணம்னா எல்லாரையும் மனுவாவே எழுதி கொடுக்க சொல்லி இருக்கலாமே? வாதாடவே வேண்டாமே? மத்தவங்க எல்லாம் வாதாடலாம், பாயிண்ட்ஸ் சொல்லலாம், ஆனா திமுக சொல்ல கூடாதுன்னு சொல்றது சம் கைண்ட் ஆஃப் டிஸ்கிரிமினேஷன் யூ நோ?

திமுகவின் வாத உரிமையை மறுத்தது பல சந்தேகங்களை பலமா கெளப்புது.



இனி வாதங்கள் முடிவடஞ்ச இப்போதைய நிலையில் இந்த வழக்கு என்ன ஆகும்?

சுப்ரமணியம் சுவாமியின் ஒரே ஒரு நாள் வாதத்தில் வந்த விஷயங்களிலேயே வாயடைச்சு போன நீதிபதிகள், குற்ற தன்மையை உணர்ந்து குன்காவின் தீர்ப்பை உறுதி செய்யலாம்

துஷ்யந்த் தவே விவரிச்ச விஷயங்களில் குன்ஃகா விட்டுப்போன குற்றங்களையும் சேர்த்து வெச்சு கூடுதல் தண்டனையை கொடுக்கலாம்

நாகேஸ்வரராவ் சொன்ன மாதிரி வருமான வரி கட்டப்பட்ட தொகை எல்லாம் நியாயமானவைதான்னு முடிவு செஞ்சு குமாரசாமி தீர்ப்பை உறுதி செஞ்சு ஜெ. விடுதலையை நியாயப்படுத்தலாம்.

பல பல விஷயங்கள் இன்னும் தெளிவடையாம இருப்பதால் மீண்டும் முதலில் இருந்தே வழக்கை விசாரிக்க உத்தரவிடலாம்.

சுப்பிரமணியம் சுவாமி வாதாடுகையில் 1991-96 கால கட்டம் மட்டும் அல்லாம 2001-06, 2011-16 ஆகிய பீரியடுகளிலும் ஜெ.வின் சொத்து மதிப்பு அபரிமிதமா உயர்ந்ததை சுட்டி காட்டியதால் அதையும் சேர்த்து விசாரிக்க சொல்லலாம்.

திமுகவை ஒதுக்கி வெச்சதை வெச்சு பார்த்தா தேர்தலுக்கு முன் ஜெ.வை சட்டப்படியா விடுதலை செய்து எந்த பிரச்சனையும் இல்லாம தேர்தலை சந்திக்க நீதிமன்றம் உதவலாம்.

இப்படி பல பல பல யூகங்கள்.

ஆனா, எனக்கு புரியாத ஒரே விஷயம். இந்தியா முழுக்க ஒரே சட்டம்னா, கீழ் கோர்ட், High கோர்ட், சுப்ரீம் கோர்ட்ல எல்லாம் ஒரே வழக்கு ஒரே ஆதாரம் ஒரே வாதங்களுக்கு எப்படிய்யா டிசைன் டிசைனா மாறி மாறி தீர்ப்புகள் வருது?

கேட்டா.. இது இந்தியா.. இங்கே எல்லாமே சாத்தியம் தான்பீங்க.


எல்லா தீர்ப்புகளும் நீதியை பொறுத்தது அல்ல, நீதிபதிகளை பொறுத்ததே! (நோட் பண்ணிக்குங்கப்பா.. இது என் சொந்த தத்துவம் தான்!)

இந்த வழக்கையும் அந்த லிஸ்ட்ல தான் பார்க்க வேண்டி இருக்கு. அதனால் என்ன வேணும்னாலும் (அடிக்கோடிட்டு இன்னொரு தபா வாசிச்சுக்காங்க) என்ன வேணும்னாலும் நடக்கலாம். எதையும் யூகிக்கவே முடியலை.

அதனால இப்படி விதம் விதமா யூகிக்கறதை விட்டுட்டு போய் புள்ள குட்டிய பொழக்க வெக்கலாம்.


சம்மர் வெகேஷன் முடிஞ்சு எலக்சன் முடிஞ்சு தீர்ப்பு வரும் வரைக்கும் வெயிட் பண்ணுவோம். வாங்க.


*************


தொடர்புடைய பதிவுகள்:

1. ஜெ விடுதலை தீர்ப்பு - அலசல்

Saturday, March 26, 2016

தமிழக தேர்தல் களம் – 2016

ஒரு வழியா இப்போதைக்கு ஓரளவு தேர்தல் களம் தயாராயிருச்சு. இன்றைய தேதியில் இது தான் காட்சி

அதிமுக – கூட்டணியில் யாருமில்லை. தனித்து நிற்கிறது (சமக & 132 சிறு இயக்கங்களின் ஆதரவு உண்டு)

திமுக – காங்; மமகவுடன் கூட்டணி (58 சிறு இயக்கங்களின் ஆதரவு உண்டு)

தேமுதிக – மநகூ (விசி, மதிமுக, சிபிஎம், சிபிஐ) உடன் கூட்டு

பாமக – தனித்து போட்டி

பாஜக – தனித்து போட்டி

நாம் தமிழர் – தனித்து போட்டி

சிபிஐ (எம்.எல்) – தனித்து போட்டி

தமாகா – கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது. முடிவு தெரியவில்லை

கூட்டி கழிச்சு பார்த்தா அதிமுக ஈஸியா ஜெயிச்சிருவாங்க போல தான் தெரியுது. ஆனா அதில் சில ‘ifs and buts’ இருக்கு.

திமுக காங் ஓரளவு பிராண்டடான நம்பகமான கூட்டணியா இருந்தாலும் ‘அவங்களுக்கு எதுக்காக ஓட்டு போடணும்னு’ ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டா அதுக்கான தெளிவான பதில் இப்போதைக்கு இல்லை. ஆட்சி மாற்றம் என்கிற ஒற்றை விஷயத்தை தான் திரும்ப திரும்ப சொல்றாங்களே தவிர வேற ஒண்ணும் புதுசா இல்லை. ஆட்சி மாற்றம்னு வெச்சுக்கிட்டாலும் ஏன் திமுக காங் அணிக்கு போடணும்? ஏன் தேமுதிக அணிக்கு போடக்கூடாதுன்னு கேட்டா அதை அவங்களால் ஜஸ்டிபை பண்ண முடியலை. கேட்டா மநகூ கேலிக்கூத்தான கூட்டணினு காமெடி தான் பண்ணிட்டு இருக்காங்க. மத்தபடி “இதுதான் தமிழகத்தின் முக்கிய பிரச்சனை. அதனால் அதிமுக வேண்டாம். மிச்சம் இருப்பவர்களில் இன்னின்ன கட்சிகளிடம் இதெல்லாம் குறை. அதனால் திமுக காங் கூட்டணிக்கு வாக்கு அளியுங்கன்னு” இதுவரைக்கும் யாரும் உருப்படியா சொல்லலை. தேர்தல் அறிக்கை, அதை தொடர்ந்து அவங்க செய்யும் பிரச்சாரம் எல்லாம் எதை முன்னிறுத்தி அமையுதுன்றதுல தான் திமுக காங் அணிக்கான ஆதரவு இருக்கு. இத்தனை காலத்தை ஏன் இப்படி வீணடிச்சு தேமேன்னு இருந்தாங்கன்னு இன்னமும் எனக்கு தெரியலை. இத்தனைக்கும் மிகப்பெரிய இயக்கங்கள். தேர்தலில் நெளிவு சுளிவு அறிஞ்சவங்க வேறே.


தேமுதிகவை தேடி போய் மநகூவை அடகு வைக்குற கடைசி நிமிஷம் வரைக்கும் தமிழகத்தின் புதிய நம்பிக்கையா இருந்த கூட்டணி அது தான். பாலபாரதி எம்.எல்.ஏ சொல்லாமல் சொன்னமாதிரி மிக மிக அருமையான ஒரு வீணையை செஞ்சிட்டு அதை வாசிக்க தெரியாம, பயன்படுத்த துப்பில்லாம குப்பைல தூக்கி போட்ட மாதிரி இருக்கு இப்போதைய நிலைமை. தேமுதிகவை பொறுத்தவரைக்கும் முதல் அமைச்சர் ஆகணும்ன்ற ஒரே குறிக்கோள்தான் டார்கெட்டு. அதை யார் தந்தாலும் அங்கிட்டு சாஞ்சிருப்பாரு. பாமக சொல்லிருந்தா கூட அங்கே போயிருப்பாரு. மத்தபடி முதல்வர் ஆகுற அளவுக்கு என்ன வகையான செல்வாக்கு வளர்த்திருக்கோம். என்ன செயல்திட்டம் வெச்சிருக்கோம்னெல்லாம் அவங்களால சொல்லவே முடியலை. மநகூ எதுக்காக அம்புட்டு அவசரமா கேப்டனை தேடி போய் காலில் விழுந்தாங்கன்றது தேமுதிகவுக்கே தெரியாத புதிர். கிட்டத்தட்ட ஒரு மாற்று அரசியல் அணியா முகிழ்த்து நடுநிலை மக்களிடம் ஓரளவு செல்வாக்கும் வளர்த்துகிட்ட மநகூ திடீர்னு இப்படி சரண்டர் ஆகியிருக்க தேவையே இல்லை.


திருமா, தா.பா, வைகோ, ரங்கராஜன், நல்லகண்ணு, மல்லை சத்யான்னு ஒரு மிகப்பெரிய பிரச்சார பெரும் குழுவே உள்ள ஒரே அணி மநகூ. நான் கூட இவங்க ஒவ்வொரு திசையிலும் பின்னி பெடலெடுத்து பிரச்சாரம் பண்ணினா தனிப்பெரும் தகுதியோட ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்குனு நினைச்சிருக்கேன். மேலும் இந்த அணி தலைவர்கள் மேல எந்த குற்றச்சாட்டும் பெரிசா இல்லை. எந்த அதிருப்தியும் இல்லை. சில சின்ன சின்ன முரண்பாடுகள் இருந்தாலும் அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. அதனால் மிக பெரிய நம்பிக்கை இந்த அணி மேல எல்லோருக்கும் இருந்துச்சு.

ஆனா, திடீர்னு கேப்டன் காலில் விழுந்து அவருக்காக எல்லா கொள்கை முடிவுகளையும் மறு பரிசீலனை செஞ்சு பல முடிவுகளை மாத்தி அவருக்கு தகுந்த மாதிரி நெளிஞ்சு வளைஞ்சு குனிஞ்சு நிக்கிறது பார்க்க கஷ்டமா தான் இருக்கு. தமிழ்நாட்டோட அதிர்ஷ்டம் அம்புட்டு தான்னு நினைச்சுக்க வேண்டியது தான்.


தேமுதிகவை பொறுத்த வரைக்கும் மநகூவை சேர்த்துக்கிட்டாலும் மிக பெரிய பிரச்சனை என்னன்னா அது தனியா 124 தொகுதிகளிலும் ஜெயிச்சாகனும். அப்ப தான்  மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடியும். அதிமுக, திமுக பண / படை பலத்தை எதிர்த்து நின்னு போராட வேண்டி இருக்கும். மிக சிறப்பான பிரச்சார படை இருந்தாலும் கேப்டன் ஒருத்தரின் ஏடாகூடமான ஒரே ஒரு பிரச்சாரம் மொத்த இமேஜையும் கெடுத்திரும். அதனால தான் இப்பவே கேப்டன் பிரச்சாரம் செய்ய மாட்டார்னு தெளிவா சொல்லி இருக்காங்க. பிரச்சாரம் மட்டும் தான் இந்த அணியின் பலம். நம்பகத்தன்மை போனவாரமே போயிருச்சு. வைகோ தன் சுய நலத்துக்காக கூட்டணியை அடமானம் வெச்சது ஏற்கனவே தோழர்களை கடுப்பாக்கி இருக்கு. சிறுத்தைகளின் மௌன உறுமல்கள் இன்னொரு பக்கம். இந்த சூழல்ல சிந்தாம சிதறாம கூட்டணியை கட்டி காக்கவேண்டிய பெரிய பொறுப்பு வைகோவுக்கு இருக்கு. ரெண்டு நாளா பிரேமலதா வேறே வைகோவுக்கு மறைமுகமா கடுப்பை கொடுத்துட்டு வர்றதையும் கவனிக்கணும். ஒரு கட்டத்தில் அதை சகிக்க முடியாம போனா உணர்ச்சி வசப்பட்டு சட்டுனு கூட்டணியை விட்டு வெளிநடப்பு செய்ய கூட வைகோ தயங்க மாட்டாரு. அது மட்டும் நடந்தா வைகோ அதிமுக அணிக்கும் திருமா திமுக அணிக்கும் போய்விட கூட சான்ஸ் இருக்கு.


தமாகா ஓரளவு சில தொகுதிகளில் வாக்கு வங்கி வெச்சிருக்குன்னாலும் தனியா நின்னு ஒரு தொகுதியை வெற்றி கொள்ளும் அளவுக்கு எந்த தொகுதியிலும் பெரும்பான்மை வாக்குகள் அதுக்கு இல்லை. அதனால் கூட்டணி தான் பெஸ்டுன்னு புரிஞ்சு வெச்சிருக்காரு வாசன். அந்த மட்டும் சந்தோஷம். ஆனா கட்சியின் செல்வாக்கு லெவல் என்னன்னு தெரியாம 60 வேணும் 80 வேணும்னு கேக்குறது எல்லாம் சரியா படலை. அதிமுக ஓரளவுக்கு தாராளமா 25 தொகுதி வரை தர்றேன்னு சொல்றதே பெரிய விஷயம். ஆனா அதை வேண்டாம்னு முறுக்கிட்டு திமுக பக்கம் வந்தாலோ தேமுதிகவுடன் சேர்ந்தாலோ வாசனுக்கு நஷ்டம் தான்.

பாமக வடக்கு வடகிழக்கு மாவட்டங்களில் ஓட்டை பிரிக்கும். பாஜக 3 தொகுதிகளில் செல்வாக்கு உள்ள தேசிய கட்சி. அங்கே அவங்களும் ஓட்டை பிரிப்பாங்க. ஏற்கனவே அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் மூணா பிரிஞ்சு நிக்குது. அதனால் அதிமுகவுக்கு தான் லாபம்.

மார்ச் 29 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டுல தொடர்ந்து நடக்கப்போகும் விசாரணை அதன் தீர்ப்பு தேதி அந்த தீர்ப்பின் தாக்கம் ஒரு பக்கம், உட்கட்சி குழப்பங்களை எந்த அளவுக்கு அம்மாவால திறமையா கட்டுப்படுத்தி அடக்க முடியுதுன்றது இன்னொருபக்கம். இந்த ரெண்டில் ஏதாவது ஒண்ணு பாதகமா போனாலும் ஓட்டு ஸ்விங் ஆகி தேமுதிக பக்கம் சாயும். நடுநிலை வாக்காளர்களும் புதிய வாக்காளர்களும் தான் இந்த தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பவர்கள் என்பதால், பிரிந்து நிற்கும் ஓட்டுக்களும் சிதறிக்கிடக்கும் செல்வாக்குகளும் டீபால்ட்டா அதிமுகவை வெற்றி அடைய செய்யும். ஆனா நம்பகத்தன்மை போயிருச்சுன்னா நடுநிலை வாக்காளர்கள் அதிமுகவுக்கு மாற்றா தேமுதிகவை தான் முன்னிலைப்படுத்துவாங்காண்ணு நினைக்கிறேன்.

விஜயகாந்துக்கு அதிர்ஷ்டம் இருக்குனு தான் நினைக்கிறேன்.

அடுத்த பத்து நாளில் நடக்கப்போகிற நிகழ்வுகள் தான் தமிழக வரலாறை தீர்மானிக்க போகுது. பத்து நாள் கழிச்சு மீண்டும் பேசுவோம்.

Printfriendly