Showing posts with label Karunanidhi. Show all posts
Showing posts with label Karunanidhi. Show all posts

Wednesday, April 13, 2016

திமுக தேர்தல் அறிக்கை – 2016

தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடு பிடிக்க தொடங்கி இருக்கு. பாரம்பரியமான தேர்தல் முஸ்தீபுகள்னா, கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம்.. இப்படி தான் வரிசை. ஆனா இந்த தேர்தலில் பல கட்சிகள் இந்த மரபிலிருந்து மாறிடிச்சு. அதிமுக, நாம் தமிழர், மநகூ எல்லாம் பிரச்சாரத்தை தொடங்கியாச்சு. ஆனா அவங்க தேர்தல் அறிக்கை என்ன? என்னவெல்லாம் திட்டத்தை முன்னிறுத்தி இந்த தேர்தலை சந்திக்க போறாங்கன்னு எல்லாம் அந்தந்த கட்சி காரங்களுக்கே இன்னும் தெரியாது. தேர்தல் அறிக்கை வெளிவந்தால் தான் எதையும் சொல்ல முடியும். ஆனா அதுக்கு முன்னாடியே பிரச்சாரம் தொடங்கிட்டாங்க. காமெடியா இருக்குல்ல?

தேர்தல் மரபை மறக்காம அதே வரிசைக்கிரமமா இப்போதைக்கு செயல்பட்டுட்டு இருக்கிற கட்சின்னா அது திமுக தான். கூட்டணி முடிவு செஞ்சப்பறம், முக்கிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செஞ்சப்பறம், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டாச்சு. இனி ஏப்ரல் 23 முதல் பிரச்சாரம்.



இன்னைய தேதியில் திமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஹாட் டாபிக். அவ்வளவு சிறப்பான அறிக்கை அது. திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது பொதுவாகவே மாநில வளர்ச்சி திட்டங்கள், சமுதாய நலன், அனைத்து துறைகளிலுமுள்ள இடர்பாடுகள் களைதல் மாதிரியான விஷயங்களை முன்வைத்து தான் எப்போதுமே வெளிவரும். அதனால் தான் அதிமுக எந்த தேர்தலிலும் முன்னதாக தேர்தல் அறிக்கை வெளியிடாமல் திமுகவின் தேர்தல் அறிக்கை வந்தபின் அதன் அடிப்படையில் அதில் சிறு சிறு மாற்றங்கள் செய்து தனது தேர்தல் அறிக்கையாக அதிமுக வெளியிடும்.

அதிமுக முன்னதாக தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருந்தால், அம்மா உணவகத்தில் இந்த ஆண்டு முதல் ருமாலி ரொட்டியும் வழங்கப்படும்னு அறிவிச்சிருப்பாங்க. அந்த லெவல்ல தான் அவங்களால யோசிக்கமுடியும்.

தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் என்ன வேணும்ன்றத அதிமுகவால சுயமா யோசிச்சு முடிவெடுத்து அறிவிக்க முடியாது. அந்த அளவுக்கு சிந்திக்கக்கூடிய ஆட்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் காலத்தோடவே போயாச்சு. அதுக்கு அப்புறம் வந்தவங்களும் அப்படி ஒரு திறமை இருந்தாலும் கூட அதை வெளிப்படுத்த பயந்துகிட்டு கார் டயரையும் ஹெலிகாப்டர் பாட்டத்தையும் கும்பிட்டு கன்னத்தில் போட்டுக்கிட்டு போயிக்கிட்டே இருக்காங்க. சர்வைவல்னு வந்துட்டா நம்ம தெறமைகளை பெரிசா காட்டிக்கக்கூடாதுன்னு எல்லா அதிமுக தொண்டனுக்கும் தெரிஞ்சிருக்கு.

இதுவரைக்கும் ஜெ. அறிவித்த செயல்படுத்திய திட்டங்கள் பெரும்பாலானவை, மற்ற கட்சிகள் சொல்லியது, கோரிக்கையா வெச்சது, மற்ற கட்சிகளின் செயல்திட்டங்கள் / தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதுன்னு தான் இருக்கே தவிர, தானே சுயமா யோசிச்சு முடிவு செஞ்சு அறிவிச்ச திட்டம்னு அதிகமா கிடையாது.

ஆனா அதேசமயம் மற்ற கட்சிகளை ஒப்பிட்டா திமுகவின் செயல்திட்டங்களும் தேர்தல் அறிக்கைகளும் மக்கள் மீதான நிஜமான அக்கறைகளால் செயல்படுத்தப்பட்டதுன்னு புரியும்.

உதாரணத்துக்கு சொல்லனும்னா, கண்பார்வை அற்றவர்களுக்கு இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் கலைஞருக்கு விபத்தில் கண்ணில் அடிபட்டபோது அதன் வலியும் பார்வையற்ற நிலையின் அவஸ்தையும் தானே உணர்ந்து அதன் அடிப்படையில் அறிவிச்சது. கைரிக்ஷா ஒழிப்பு, எழும்பூர் வந்திறங்கியபோது தன்னை வைத்து இன்னொரு மனிதன் இழுப்பதன் கஷ்டம் உணர்ந்து அறிவிச்சது. ஏரி குளங்கள் தூர்வாரல் வெள்ளபெருக்கினால் மக்கள் பாதிக்கப்பட்டபோது அறிவிக்கப்பட்டது. மேம்பாலங்கள் சாலை மேம்பாட்டு திட்டங்கள் வெளிநாட்டு பயணம் சென்று கண்டு வந்ததும் நம்ம ஊர்லயும் அது மாதிரி எல்லாம் வேணும்னு தீர்மானிச்சு அறிவிச்சு செயல்படுத்தினது. இலவச திருமண உதவி திட்டம், கல்யாண செலவுக்கு காசு இல்லாததால் தற்கொலை செய்துகொண்ட ஒரு பெண்ணின் செய்தி படிச்சு அதன் கவலையில் அறிவிச்சது. இப்படி அது ஒரு நீ......ளமான லிஸ்டு. இதெல்லாம் யாரும் திட்டமிட்டு கொடுக்காமல், கோரிக்கை வைக்காமல், போராடாமல் தாமாகவே உணர்ந்து செயல்படுத்திய திட்டங்கள்.

சமத்துவபுரம், விவசாய கடன் தள்ளுபடி, கரும்பு நெல் ஆகியவற்றுக்கான ஆதார விலை நிர்ணயம், சென்னை மெட்ரோ, பெண்ணுக்கு சொத்துரிமை, கலப்பு திருமானத்துக்கான அங்கீகாரம் போன்ற முன் காலங்களில் செயல்படுத்தப்பட்ட திமுகவின் பல பல திட்டங்கள் அவர்களது தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவை தான். 

அதனால் திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது கிட்டத்தட்ட ஆக்ஷன் பிளான் தான். ஒன்றிரண்டு செயல்படுத்தப்படாமல் போகலாம். ஆனால் பெரும்பாலான திட்டங்கள் சாத்தியமுள்ளவையா என ஆராய்ந்து விவாதித்து அதன் பிறகு தான் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு திட்டம் வந்தால் அது நிச்சயம் செயல்பாட்டுக்கு வரும் என்கிற ஒரு நம்பிக்கை தமிழக மக்களிடம் காலம் காலமாக உள்ளது. அதனால் தான் திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு இவ்வளவு மரியாதை.

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கை மிக பிரமாதம் என திமுகவை விமர்சிக்கும் பத்திரிக்கைகள் கூட பாராட்டுகின்றன. மக்களை பொறுத்தவரை மிக சிறந்த தேர்தல் அறிக்கை என பெரும்பாலானவர்கள் ஏன் பாராட்டுகிறார்கள் என்பது அறிக்கையை வாசித்த அனைவருக்கும் சொல்லாமலே புரியும். அந்த அளவுக்கு நலத்திட்டங்களும் வளர்ச்சி பணிகளும் நிறைந்து கிடக்கிறது.

சமீபத்தில் திமுக பொருளாளர் திரு ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவது நடத்திய நமக்கு நாமே பயண திட்டத்தில் சந்தித்த மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு அவற்றில் சாத்தியமானவற்றை எல்லாம் முடிந்த அளவுக்கு இந்த தேர்தல் அறிக்கையிலே இணைத்திருக்கிறார்கள். மேலும் முதல் முறையாக மாவட்ட வாரியான செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  75 பக்கங்கள் உடைய இந்த தேர்தல் அறிக்கையை எல்லோரும் படித்திருப்பீர்கள். அதனால் விரிவாக செல்லாமல் முக்கியமான விஷயங்களை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன்.

இந்த தேர்தல் அறிக்கையில் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்கள்ன்னா...

1.   விவசாயக்கடன் கல்விக்கடன் ஆகியவை ரத்து
2.   விசைத்தறிகளுக்கு முதல் 750 யூனிட் மின்சாரம் இலவசம்
3.   மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளில் தமிழகம் முழுவதும் இலவசப்பயணம்
4.   விவசாயத்துக்கு தனி பட்ஜெட்
5.   சென்னையை போலவே, கோவை மதுரை திருச்சிக்கும் மெட்ரோ ரயில்.
6.   காலியான அரசு பணிகள் உடனடியாக நிரப்புதல்
7.   சென்னை-ஹோசூர்; மதுரை-தூத்துக்குடி சாலைகளில் இண்டஸ்ட்ரியல் காரிடார்
8.   நீர் பாசனத்துறைக்கு தனி அமைச்சகம்
9.   நீர் மேலாண்மை மேம்பாடு, 200 புதிய தடுப்பணைகள்
10. தோட்டக்கலைக்கு தனி பல்கலைக்கழகம்
11. மின்சாரக்கட்டணம் மாதாமாதம் கட்ட அனுமதி

இதை பத்தி தனித்தனியா ஏன் பிடிக்குதுன்னு விவரிக்கறதா இருந்தா ஒவ்வொரு திட்டத்தின் பின்னணி, அதன் இப்போதைய நிலை, இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால் அதில் கிடைக்கக்கூடிய பலன்கள்னு அது ஒரு பெரிய கட்டுரையா மாறிடும்.

அதே சமயத்தில் இந்த தேர்தல் அறிக்கையில் இலவசங்களே இல்லைன்னு சிலர் புளகாங்கிதப்பட்டு சொல்லி இருக்காங்க. அது தவறு. இலவச பொருட்கள் குறித்த அறிவிப்புக்கள் இல்லையே தவிர மானியங்கள், சலுகைகள், இலவசங்கள், கடன் ரத்துக்கள், உதவி தொகைகள்னு எக்கச்சக்க சலுகைகள் இருக்கு. என்ன எல்லா சலுகைகளும் வளர்ச்சி நோக்கிய சலுகைகள் என்பது தான் மிக பெரிய ஆறுதல்.

செலவுகள் குறித்து நிறைய பேசி இருக்கும் இந்த தேர்தல் அறிக்கையில் வருவாய்க்கான திட்டங்கள் எதுவும் சொல்லப்படலை என்பது எனது தனிப்பட்ட ஆதங்கம். ஏற்கனவே ரூ. 4 லட்சம் கோடியாக இருக்கும் தமிழக அரசின் கடன் இப்படியான சலுகைகளால் மேலும் கூடும் என்கிற அச்சம் வந்து போகிறது. ஆனால் நிதி நிர்வாகத்தில் இதுவரையும் அமைந்த தமிழக அரசுகளில் திமுக அரசு மட்டுமே சிறப்பா செயல்பட்டது என்பதால், நிச்சயமாக நிதி மேலாண்மையை அதே சிறப்போடு செயல்படுத்துவார்கள் என நம்பலாம்.

கச்சத்தீவு மீட்பு, கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் ரத்து, மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் இணைப்பு ஆகிய அட்ராக்டிவ் அறிவிப்புக்களும் இருக்கு. எனக்கு இது போன்ற அறிவிப்புக்களில் உடன்பாடு கிடையாது என்றாலும் தமிழக அரசியல் களத்தில் வெறும் வளர்ச்சி திட்டங்களை மட்டுமே முன்வைத்து தேர்தலை சந்தித்து விட முடியாது. கொஞ்சம் கவர்ச்சி அறிவிப்புக்கள் தேவையாக தான் இருக்கு. என்ன செய்ய?

அதேசமயம் 2011 ஆம் ஆண்டு அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 14% திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன. மற்றவைகளின் கதி என்ன என இதுவரை தகவலில்லை.

உதாரணமா, 10 ஆடை அலங்கார பூங்காக்கள் அமைப்பது, அனைத்து காவல்நிலையங்களையும் மின் ஆளுமையில் இணைப்பது, திருப்பூர் சாயக்கழிவுக்கு விஞ்ஞான முறையிலான சுத்திகரிப்பு நிலையம், தென் தமிழகத்தில் ஏரோ பார்க் என பல பல அறிவிப்புக்கள் இன்னமும் முதல் கட்ட நடவடிக்கை கூட எடுக்கப்படாமல் அப்படியே முடங்கி கிடக்கிறது.

மேலும் நூற்றுக்கணக்கான அறிவிப்புக்களை விதி 110 இன் கீழ் அறிவித்த ஜெ. அதில் 20% கூட செயல்படுத்தவில்லை என்பதையும் கவனித்தால், திமுக தேர்தல் அறிக்கைக்கான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எளிதில் புரியும்.


திமுக தேர்தல் அறிக்கை வந்தபிறகு, அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடாத நிலையில் விருத்தாசலம் பிரச்சாரத்தில் பேசிய ஜெ. நான் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவேன். அவற்றை செயல்படுத்துவேன். சொல்லாததையும் செய்வேன் என ஒரு பொதுப்படையான அறிவிப்பை வெளியிட்டாரே தவிர, இன்னின்ன திட்டங்கள், இன்னின்ன வழிமுறைகளில் செய்ய போகிறேன் என தீர்க்கமான ஒரு கருத்தாக்கம் அவரிடம் இன்று வரை இல்லை என்பதை கவனிக்கலாம்.

சென்னை பிரச்சாரத்தில் பேசிய ஜெ. தனது சாதனை என சொன்னது, மெட்ரோ ரயில் துவக்கியது, மின் விநியோகம் சீராக்கியது, வெள்ள நிவாரண பணிகள் ஆகியவற்றை தான் முக்கியமான சாதனை என சொல்லி இருக்கிறார்.

சென்னைக்கு மெட்ரோ ரயில் வேண்டாம், மோனோ ரயில் தான் வேண்டும் என அடம் பிடிச்சு, திமுக தொடங்கி வைத்த திட்டம் என்பதாலேயே மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்காமல் முடக்கிவைத்து, கடைசியில் ஹைகோர்ட் போய் நீதிபதிகள் கண்டிச்சு உத்தரவு போட்டப்பரம் தான் மெட்ரோ பணிகள் தொடர்ந்து நடந்துச்சுன்றது சென்னையில் உள்ள எல்லாருக்குமே தெரியும். ஆனா அதை தன்னுடைய சாதனையா சொல்லி இருக்கும் ஜெ. நம்மை எந்தளவுக்கு முட்டாள் என முடிவு செய்திருக்கிறார் என்பதை தெரிஞ்சுக்கலாம்.

மின் விநியோகம் பற்றி கேட்கவே வேண்டாம். மின் விநியோகம் சீரானது, மின் மிகை எல்லாம் சொன்னாலும் நிஜ கதை என்னன்னு உங்களுக்கு தெரியாதா என்ன?

வெள்ள நிவாரண பணிகள் பற்றி நான் சொல்வதை விட இணையத்தில் உள்ள பலரும் கட்டுரை கட்டுரையாக எழுதி இருக்கிறார்கள். பலரும் நிவாரண பணிகளில் தங்களை அர்ப்பணித்து கொண்டவர்கள். அதிமுகவும் தமிழக அரசும் எப்படி எல்லாம் நிவாரண பணிகளை முடக்கி வைத்தார்கள் என்பதை நன்கு அறிந்தவர்கள். அவர்களிடம் நான் விவரிப்பது சரியல்ல. அவர்களே எல்லோரிடத்திலும் ஜெ. சொன்ன பொய்யின் பிரம்மாண்டத்தை புரியவைத்து விடுவார்கள் என நம்பலாம்.

ஆகமொத்தம், ஜெ. தன்னுடைய ஆட்சியின் சாதனைன்னு சொல்லிய எதுவுமே உண்மையில் சாதனையே அல்ல.

அப்படியாக, தமிழக தேர்தல் களத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை கொடுத்த பிரமாண்டமான உத்வேகம், கள நிலைமையை மொத்தமாக புரட்டிப்போட்டு, இது வரை அதிமுகவுக்கு சாதகமாக இருந்த தேர்தல் காற்றை திமுகவுக்கு சாதகமாக திருப்பி விட்டிருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் வெளிவரக்கூடிய அதிமுக தேர்தல் அறிக்கை இனி எதை முன்வைத்தாலும் அது பெரிய அளவில் பேசப்படாது என்பது உறுதி. ஏனெனில் நடைபெற்ற இரண்டு பிரச்சார கூட்டங்களிலும் எந்த திட்டத்தையும் சொல்லாத ஜெ. தேர்தல் அறிக்கையில் அறிவிப்புக்களை அழகாக அச்சடித்து கொடுத்தால் அது திமுக அறிக்கையின் நகல் / பாதிப்பு என தான் எடுத்துக்கொள்ளப்படுமே தவிர சொந்த முயற்சியாக எடுத்துக்கொள்ள முடியாது. மேலும் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் சொல்லப்பட்ட பலவும் செயல்பாட்டுக்கு வரலைன்ற உண்மையும் மக்களுக்கு தெரியும்.

2006 தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் நிஜமான ஹீரோ திமுகவின் தேர்தல் அறிக்கை தான்.


Thursday, February 11, 2016

ஸ்டாலின் குறித்த ஜெ. பேச்சு – அருஞ்சொற்பொருள்

நேத்து சென்னையில் அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமண விழாவை ஜெ. நடத்தி வெச்சு பேசிருக்கார்.. (அட நேர்ல தாங்க.. இதையெல்லாமா வீடியோ கான்பரன்ஸ்ல செய்வாங்க?)

அந்த பேச்சு தான் பல டிவிஸ்டுகளை சுமந்துட்டு இருக்கு.

ஒரு PhD ஆய்வு கட்டுரை எழுதுற அளவுக்கு அந்த பேச்சு இருக்கு. பேச்சை எழுதி கொடுத்த பிரகஸ்பதி நிறைய மறைமுக குத்துக்களை வெச்சு எழுதிருக்கார். (அவருக்கு யார் மேல என்ன கோபமோ?) அந்த பேச்சில் ரெண்டு குட்டி கதைகள் இருக்கு. அதில் ஒன்று தான் அப்பா மகன் பத்தின கதை. அது தமிழக அரசியலை லைட்டா ஷேக் பண்ற அளவுக்கு சக்தி வாய்ந்ததுன்னு நினைக்கிறேன்.

கதை இங்கே இந்த லிங்க்கில் இருக்கு.. படிச்சிட்டு வாங்க... தொடர்ந்து பேசுவோம்.



"நீங்கள் யாரையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல" என ஜெ. கடைசியில் சொல்லி இருந்தாலும், இந்த கதை டைரக்டா திமுகவையும் கலைஞர், ஸ்டாலின், நெஞ்சுக்கு நீதி புத்தகத்தையும் தான் குறிக்குதுன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்குமே.

இப்போ அந்த கதையில் உள்ள சில முக்கியமான விஷயங்களை கவனிக்கலாமா?

1.   இந்த கதையின் மிக முக்கிய வரியாக நான் நினைப்பது “அரசியல் பணி என்பது ஆபத்தானது. இதில் தந்தை, தனையன் என்றெல்லாம் உறவுகளுக்கு இடமில்லை. வலிமை உள்ளவரே வெல்ல முடியும். எனவே உனது அரசியல் பாடத்தை நீயேதான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்” தான்.

சொந்த மகனே ஆனாலும் தன் முயற்சியில் தானே தான் வளரணும்னு தான் அந்த அப்பா நினைச்சிருக்கார். தன்னுடைய மகன்றதுக்காக எந்த சலுகையும் காட்டலை, உதவியும் செயலை என்பதை தெள்ள தெளிவா புரிய வெச்சிருக்காங்க ஜெ.

இதன் மூலம் திமுகவில் குடும்ப அரசியல்னு பேசிட்டு இருக்கிறவங்க மூக்கையெல்லாம் பலமா உடைச்சதொட, திமுக ஒரு சிறந்த ஜனநாயக கட்சி என்பதையும் எல்லோருக்கும் உறைக்கிற மாதிரி உணர்த்தி இருக்கார் ஜெ.

2.   ஸ்டாலின் போதிய அளவுக்கு பதவி உயர்வு அடையலையே என்கிற ஆதங்கம் ஜெ.வுக்கு இவ்வளவு ஆழமா இருந்திருக்கும்னு ஸ்டாலினே கூட நினைச்சு பார்த்திருக்கமாட்டார்னு  தோணுது.

3.   அதிமுகவில் அடுத்த தலைமைக்கு டி.டி.வி தினகரனை முன்னிலைப்படுத்த முயற்சி நடப்பதா செய்தி வரும்போது ஜெ.வின் இந்த பேச்சு இன்னும் முக்கியத்துவம் அடையுது. அந்த கட்சியை பார்.. சொந்த மகனுக்கே சலுகை காட்டலை.. புரிஞ்சு நடந்துக்கிடுங்கன்னு இண்டைரக்டா சுட்டி காட்டி இருப்பதா நாம நினைக்கலாம்.

4.   நெஞ்சை திறந்து எழுதிய புத்தகமான நெஞ்சுக்கு நீதியை எல்லோரும் படிச்சு புரிஞ்சுக்கணும்னு ஜெ. சொல்வது புரிகிறது. ஆனால் அப்படி எல்லோரும் அதை படிச்சால் அதிமுகவுக்கு தான் சிக்கல். அந்த புத்தகத்தின் ஐந்து பாகங்களையும் முழுசா படிச்ச எந்த தமிழனும் தான் இருக்கிற கட்சியில் இருந்து விலகி திமுகவில இணைஞ்சிரலாமான்னு தான் முதலில் யோசிப்பான். அந்த அளவுக்கு தமிழகத்தின் வரலாறு, அரசியல், சமூக அமைப்பு, அந்த தளைகளில் இருந்து மக்களை எப்படி மீட்டெடுத்தோம், என்னென்ன திட்டங்கள் என்னென்ன காரணங்கங்களுக்காக தொடங்கப்பட்டன, அப்போதைய தமிழக மக்களின் நிலை என்ன, அதை இப்போதிருக்கும் நிலைக்கு எப்படி படிப்படியாக முன்னேற்றினோம் என்பதை எல்லாம் விரிவாக எழுதி இருக்கிறார். அந்த சமையத்தில் ஏற்பட்ட பல அரசியல் சதுரங்க நிகழ்வுகளையும் அதன் பின்னணிகளையும் சுவையாகவும் சுவாரசியமாகவும் சொல்லி இருக்கிறார்.

புத்தகத்தில் ஜெ. சொன்ன மாதிரி கலைஞரின் தில்லுமுல்லுக்களை தேடினா ஏமாற்றம் தான் மிஞ்சும். (தன் தவறுகளை தானே எப்படி எழுதுவார்?)

எப்படியோ நெஞ்சுக்கு நீதி இன்னொரு ரெண்டு எடிசன் பதிப்பிக்கப்பட்டு இந்த வருஷம் சென்னை புத்தக கண்காட்சியிலேயே சக்க போடு போடும் என்பதும் அதை வாங்கும் பெரும்பாலானோர் அதிமுகவினர் என்பதும், அவர்கள் முகவின் தில்லுமுல்லுகளை தேடி தேடி கடைசியில் முகவின் அபிமானியாகவே மாற வாய்ப்பு இருக்கிறது என்பதும் எனது இதர அவதானிப்புக்கள்.

5.   மக்கள் நல கூட்டணி, தேமுதிக, பாமக என பலரும் அதிமுகவை கடுமையாக எதிர்ப்பதாக காட்டிக்கொண்டாலும், ஜெ. அவர்களை எல்லாம் சீரியஸா எடுத்துக்கவில்லை என்பது புரிகிறது.  தமிழக மக்களால் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு ஒதுங்கி கிடக்கும் ஒரு கட்சியான, அதிலும் அதிகார பூர்வ எதிர்கட்சி கூட அல்லாமல் ஜஸ்ட் ஒரு மூன்றாம் இடத்தில் இருக்கும் ஒரு சாதாரண அரசியல் கட்சியான திமுகவை கண்டு தான் அவர் ஆடி போயிருக்கிறார் என்பது பட்டவர்த்தனமாக புரிகிறது.

“எனக்கு நண்பனா இருக்க எந்த தகுதியும் தேவை இல்லை. ஆனா எதிரியா இருக்க தகுதி வேணும்” என்கிற சினிமா வசனத்தை தான் ஜெ. இதர கட்சிகளுக்கு மறைமுக செய்தியா சொல்லி இருக்கிறார்னு நான் நினைக்கிறேன்.

6.   தமிழகம் முழுவதும் நடந்த “நமக்கு நாமே” பயணம் திமுகவில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கோ இல்லையோ, தமிழக மக்கள் மனநிலையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கு என்பதை ஜெ. நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்கார். அதனால் தான் “ஐயோ பாவம் அந்த ஆடு இப்படி நனையுதே”ன்னு பரிதாபப்பட்டு பேசி இருக்கார். இப்போதைக்கு மகன் தந்தைக்காற்றும் உதவி என்பது, ஜெ. விரித்த வலையில் வீழாமல் கட்சியின் கட்டுப்பாட்டை காப்பது மட்டும் தான் என்பது ஸ்டாலினுக்கு தெரியாததா என்ன?

இனி இதை திமுக எப்படி கையாள போகுது என்பதில் இருக்கிறது, தமிழக அரசியலின் அடுத்த கட்டம்.

இந்த தேர்தல் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே என்பதை நேற்றைய பேச்சின் மூலம் தெளிவாக சொல்லி விட்டார். அதிலும், கலைஞர் அல்லாமல் ஸ்டாலின் தலைமையில் இந்த தேர்தல் இருக்கவேண்டும் என்பதையும் மறைமுகமாக சொல்லி விட்டார். அவர் அவருக்கு வசதியான வியூகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதை புரிந்து கொள்ளும் திறன் திமுகவுக்கு உள்ளது. தக்கன தக்கபடி தக்கசமையத்தில் திமுக கைக்கொள்ளும் என்பது புரிந்தாலும், அது என்ன மாதிரியான நடவடிக்கை என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்குது.



Saturday, February 9, 2013

மீண்டும் பழைய பாதைக்கு போகிறதா திமுக?



திமுக தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன் சாரம்சம் மிக எளிமையானது. திமுக பேச்சாளரும் நடிகையுமான திருமதி. குஷ்பூ அவர்களையும் அவரது வீட்டையும் தாக்கிய திமுகவினரை கண்டித்து வெளியாகி இருக்கிறது அந்த அறிக்கை.

சமீபத்தில் கலைஞர் அவர்கள் சூசகமாக தனக்கு பின் திமுக தலைமை பதவிக்கு ஸ்டாலின் தான் வரக்கூடும் என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அழகிரி, ஸ்டாலின் குரூப்புகளுக்கிடையே நீண்டகாலமாக பனிப்போர் நடந்துகொண்டு தான் இருக்கு. அழகிரி அவர்கள் தனது எதிர்ப்பை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

திமுகவின் முக்கிய தலைவர்கள் அனைவருமே ஸ்டாலினுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். ஸ்டாலின் மீது பொதுவாகவே எல்லோருக்கும் நல்ல அபிப்பிராயம் உண்டு. மென்மையானவர், மனிதாபிமானம் மிக்கவர், தொலைநோக்கு பார்வை கொண்டவர், அடிமட்ட தொண்டன் வரை மிக எளிமையாக பழகக்கூடியவர், எல்லோரையும் அனுசரித்து செல்லக்கூடியவர், 40 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து, கட்சியின் போராட்டங்களில் கலந்து சிறை சென்றவர்ன்னு அவரது ஆதரவு பட்டியல் மிக நீளமானது. அவர் திமுகவின் தலைவராக ஆவதில் பெரும்பாலான கட்சியினருக்கும், மிகப்பெரும்பாலான பொதுமக்களுக்கும் எந்த அதிருப்தியும் இல்லை என்பது தமிழகம் அறிந்த உண்மை. அதன் அடிப்படையிலே தான் கலைஞரும்  தனக்குப்பின் ஸ்டாலின் தான் திமுகவின் தலைவராகவும், திமுகவின் மக்கள் பணிகளை முன்னெடுத்து செல்லும் தளபதியாகவும் விளங்குவார் என மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

ஆனால் இதை இன்னொரு கோணத்திலிருந்தும் நாம் பார்க்கவேண்டும்.

இன்றைக்கு தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளிலேயே உட்கட்சி ஜனநாயகம் மிக மிக சிறப்பாக இருக்கும் ஒரு கட்சி என்றால் அது திமுக மட்டும் தான். உட்கட்சி தேர்தல்களை ஒழுங்காக நடத்தி, எல்லோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளைக்கொண்டு இயங்கும் இயக்கம், பொதுக்குழு/செயற்குழு போன்ற கூட்டங்களில் வெளிப்படையாக கட்சியையும் கட்சியின் முடிவுகளையும் விமர்சனம் செய்ய அனுமதிக்கும் இயக்கம் என திமுகவின் பெருமை பலமானது. அப்படியிருக்கும் ஒரு கட்சியில் திமுகவின் அடுத்த தலைவர் இவர் தான் என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட நியமன முறைக்கு வருவது எனக்கு ஆரம்பத்தில் மிகுந்த அதிருப்தியாக தான் இருந்தது. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படவேண்டிய தலைவரை, நியமனம் செய்வது என்பது எனக்கு ஒப்புமையான விஷயம் அல்ல. அதிலும், இன்றைய தேதியில் தமிழகத்துக்கு என இருக்கும் ஒரே ஆறுதல் இயக்கமான திமுகவில் இப்படியான உட்கட்சி குழப்பங்கள் வருவது தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் நன்மை தருவதாகாது.

இந்த அடிப்படையிலான இதே கருத்தை தான் சில வாரங்களுக்கு முன்பு திருமதி. குஷ்பு அவர்களும் சொல்லியிருந்தார். ஸ்டாலின் தான் தலைவர் என்பதை தேர்தல் தான் முடிவு செய்யவேண்டும் என்கிற ரீதியில் அவர் தெரிவித்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத ஸ்டாலின் ஆதரவாளர்கள் திருமதி. குஷ்பூ மீது தாக்குதல் நடத்துவது, அவரது வீட்டை தாக்குவது, அவரது குழந்தைகளிடம் கொலைமிரட்டல் விடுவது என இறங்கி திமிலோகப்பட்டது அனைவரும் அறிந்ததே!

இந்த சம்பவத்தை கண்டித்து தான் கலைஞர் அவர்கள் மிக மிக தாமதமாகவும், மென்மையாகவும் தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். அந்த அறிக்கையை படித்தாலே, அது பேரளவில் வெளியிடப்பட்ட அறிக்கை என்பது விளங்கிவிடும். ஒரு பேரியக்கத்தின் தலைவர், தனது இயக்கத்தின் மீதான மதிப்பு மக்கள் மத்தியில் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக வெளியிட்ட அறிக்கையாக தான் அது இருக்கிறது.

திருமதி. குஷ்பூ அவர்களை பொறுத்தவரை தனக்கு மனதில் பட்டதை வெளிப்படையாக யாருக்கும் அஞ்சாமல் தெளிவாக எடுத்து சொல்லக்கூடியவர். அதே போல தான், ஸ்டாலின் விஷயத்திலும் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். கருத்து தவறு எனில் விளக்கம் கேட்டிருக்கலாம், மறுப்பு தெரிவித்து இருக்கலாம். இப்படி பல வழிகள் இருக்க அவரையும் அவரது வீட்டையும் தாக்கி இருப்பது கட்சிக்கு கட்சியினரே ஏற்படுத்திக்கொள்ளும் கெட்டபெயர் எனபதை இந்த சம்பவத்தை கண்டிக்க முன்வராத மூத்த தலைவர்களும் உணர்ந்ததாக தெரியவில்லை.

ஆனால் எனது ஆச்சரியமே வேறு!

மிக மிக நடுநிலையானவர், கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பவர் என்றெல்லாம் போற்றப்படும் திரு ஸ்டாலின் அவர்க்ள், இந்த தாக்குதலுக்கு எந்த கண்டனத்தையும் தெரிவிக்காதிருப்பது தான் ஆச்சரியம்! அடுத்த தலைவராக முடிசூடவிருக்கும் வேளையில் தன் மீதான எந்த விமர்சனமும் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கும் ஸ்டாலின் அவர்கள் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த, தனக்கு மக்களிடமிருக்கும் மதிப்பையே குலைக்கக்கூடிய ஒரு நிகழ்வுக்கு எந்த கருத்தும் சொல்லாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை.

தமிழக அரசியலில் வன்முறை, விமர்சனத்துக்கான தாக்குதல் போன்றவை புதிதல்ல. 1960களிலேயே தொடங்கிய விஷயம் தான் அது. காங்கிரஸ் & கம்யூனிஸ்ட் மோதல், காங்கிரஸ் & திமுக மோதல், திமுக & அதிமுக மோதல், பாமக & வி.சி மோதல் போன்றவை மிக பிரபலம்.

தன்னை விமர்சித்தவர்களை தாக்குதலுக்காளாக்கும் வழக்கத்தை முதன் முதலில் தொடங்கிவைத்த திமுக பின்னாளில் கொஞ்சம் பக்குவமடைந்து கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க தொடங்கியது. திமுகவை விமர்சித்து தாக்குதலுக்குள்ளானவர்களின் பட்டியல் மிக மிக நீளம். அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் முதல் பத்திரிக்கையாளர் சோ வரை என சமூகத்தின் எல்லா நிலையிலிருந்தவர்களும் விமர்சித்ததற்காக தாக்கப்பட்டவர்களில் அடக்கம்.

திமுக பக்குவமடைந்த போது, அதிமுக விமர்சகர்களை தாக்கும் கலாச்சாரத்தை கையிலெடுத்துக்கொண்டது. பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என அதிமுகவும் பாரபட்சமின்றி விமர்சகர்களை தாக்குதலுக்குள்ளாக்கி இருக்கிறது.

ஆனால், அதிமுகவில் உட்கட்சி விமர்சனமும் இல்லை, அதனால் அதனடிப்படையிலான தாக்குதலும் இல்லை என்பது ஒரு ஆறுதல். திமுகவின் நிலை அப்படியல்ல. கருத்து சுதந்திரத்துக்காக போராடும் முகத்தை கொண்டுள்ள அதே திமுகவில் தான் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் முகங்களும் உள்ளது. அதன் மிக சமீபத்திய உதாரணம் தான் திருமதி. குஷ்பூ மீதான தாக்குதலும், அதை கண்டிக்க மனமின்றி கண்டித்திருக்கும் இன்றைய அறிக்கையும்.

திமுக மீது இப்போது மக்களுக்குள்ள மரியாதையை காப்பாற்றிக்கொள்ள திமுக முன்வரவேண்டும். கருத்து சுதந்திரத்தை அனுமதிப்பது, அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது, கழகத்தில் அடிநாதமான கடமை கண்ணியம் கட்டுப்பாடு மிக்க தொண்டர்களை பக்குவப்படுத்துவது, போன்ற செயல்களின் மூலம் தான் அது முடியும். அப்படியல்லாமல், இது போன்ற விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளமல் விமர்சித்தவர்களை தாக்குவதும், சம்மந்தப்பட்ட தலைவர்கள் அதை பார்த்து மௌனமாக இருப்பதும், சில நாட்கள் கழித்து பெயரளவில் ஒரு அறிக்கை வெளியிடுவதும், திமுக தனது வன்முறை தன்மையை எப்போதுமே மாற்றிக்கொள்ளாதோ என்கிற அச்சத்தை தான் தமிழக மக்கள் மனதில் விதைக்கும். இது திமுகவுக்கும், தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் நல்லதல்ல என்பதை தற்போதைய தலைவர் கலைஞரும், வருங்கால தலைவராக எதிர்பார்க்கப்படும் ஸ்டாலினும் உணர்ந்தால் பரவாயில்லை!

உணர்வார்களா?

Monday, August 13, 2012

டெசோ மாநாடு - எனது பார்வையில்


ரு வழியாக நேற்று டெசோ மாநாடு திட்டமிட்டபடியே நடந்து முடிந்துவிட்டது. (டெசோ மாநாடு எதற்காக என்கிற ஒரு பதிவையும்; டெசோ மாநாட்டை முடக்க நடந்த செயல்களை பற்றிய பதிவையும் ஏற்கனவே படித்திருப்பீர்கள் என்பதால், நான் நேரடியாக விஷயத்துக்கே வந்துவிடுகிறேன்!)  

உயர்நீதி மன்றம் வெள்ளிக்கிழமை சென்னை கமிஷனரிடம் பொறுப்பை ஒப்படைத்தபின் அவர் நள்ளிரவு இரண்டு மணிக்கு அனுமதி மறுக்க, அவசர வழக்காக சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஞாயிறு மதியம் விசாரணைக்கு பட்டியலிட, மாலை 4 மணி கூட்டத்துக்கு அனுமதியா இல்லையா என்கிற வழக்கே மதியம் 12 மணிக்கு தான் எடுத்துக்கொள்ளப்படும் என்கிற நிலையில், மாற்று ஏற்பாடாக அண்ணா அறிவாலையத்தில் மாநாடு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் உயர்நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்ததால், திட்டமிட்டபடியே ஒய்.எம்.சி.ஏ மைதானத்திலேயே மாநாடு நடைபெற்றது.

தமிழக காவல்துறை உரிய பாதுகாப்பு தராத போதும், திமுக இளைஞரணி தொண்டர்படையினர், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் எந்த சிரமமுமின்றி மாநாட்டை நடத்தி கொடுத்தது உண்மையில் பலராலும் கவனிக்கப்படாமலேயே போய்விட்டது!

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக ஒரு தனி தனி பதிவே எழுதலாம்! அந்த அளவுக்கு விஷயமுள்ள பயனுள்ள தொலைநோக்குடைய தீர்மானங்கள் அவை. காலையில் தி.நகர் அக்கர்டு ஹோட்டலில் நடைபெற்ற கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட விஷயங்களின் அடிப்படையிலும், கலந்துகொண்ட பிரதிநிதிகளின் கருத்துக்களின் அடிப்படையிலும் அந்த தீர்மானங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன!





தனி ஈழம் வேண்டும் என  நேரடியாக கேட்காமல், சட்ட சிக்கல்களை  கருத்தில் கொண்டு, மறைமுகமாக, ஈழ மக்களின் விருப்பத்தை தெரிந்துகொள்ளும் வகையில் ஐ.நா சபை கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என  ஒரு தீர்மானம் வலியுறுத்தியிருக்கிறது.


கச்சத்தீவு மீட்பு, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுப்பது, போன்றவற்றுடன், மண்டபம் / தனுஷ்கோடியில் இந்தியாவின் கப்பற்படை தளம் அமைக்கவேண்டும் என்கிற தீர்மானம் ஈழ தமிழர் பாதுகாப்பு, தமிழக மீனவர்கள் பாதுகாப்பு என்பதையும் தாண்டி, இலங்கையில் தற்போது அதிகரித்துவரும் சீன அதிகாரத்துக்கு செக் வைக்கும் முயற்சியாகவும், இந்தியாவின் கிழக்கு கரை பாதுகாப்பை பலப்படுத்தும் தொலைநோக்கிலும் இதை நான் காண்கிறேன்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் பார்த்தாலே அவை எந்த அளவுக்கு வலிமையானவை என்பது விளங்கும். (கடைசி 2 தீர்மானங்கள் அவசியமற்றது என்பது எனது கருத்து)

இப்போது நாம் சில விவாதங்களுக்கு வருவோம். இவை இன்று ஒரு நாளில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில. அவற்றுக்கு எனக்கு தெரிந்த பதில்களை விளக்க முயன்றிருக்கிறேன்.

மு.க முதல்வராக இருந்தபோதே ஏன் இப்படி ஒரு மாநாட்டை நடத்தவில்லை?

இந்த கேள்வியை இன்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். இந்திய அரசியல் சாசனப்படியான பதவியில் இருந்துகொண்டு இந்திய இறையாண்மைக்கும், இந்தியாவுடன் ராஜீய உறவுள்ள ஒரு நாட்டின் இறையாண்மைக்கும் எதிராக செயல்பட முடியாது என்கிற அடிப்படை கூட தெரியாத பலரும் இருப்பது உண்மையில் வியப்பு தான்! அதே காரணத்துக்காக தான் அதிமுகவும் இப்போது அதை செய்ய முன்வரவில்லை. 

ஆனால், அதே நண்பர், எந்தவிதமான அரசியல் சாசன நிர்பந்தமும் இல்லாத வைகோ, நெடுமாறன், சீமான், திருமா போன்றவர்கள் ஏன் இப்படி ஒரு முயற்சியை இதுவரையும் எடுக்கவில்லை என்கிற கேள்விக்கு பதிலின்றி தவித்ததும் பரிதாபகரமானது தான். 

எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது, இப்படி ஒரு மாநாட்டை கூட்டுவதற்கான உத்வேகமும், உறுதியும், திறனும், செல்வாக்கும் திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது என்பது. ஆனாலும், கலைஞரை விமர்சித்தாகவேண்டிய கட்டாயத்தாலோ  என்னென்னவோ கேள்விகளெல்லாம் கேட்கப்படுகின்றன.

போர்முடிந்துவிட்டதாக இலங்கை சொன்னதை நம்பி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டது ஏன்?

இந்த கேள்விக்கு நேற்றுகாலை கருத்தரங்கில் பதில் சொல்லியிருக்கிறார் கலைஞர். போர் முடித்துக்கொள்ளப்பட்டதாக / நிறுத்திக்கொள்ளப்பட்டதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் பேரில் இந்திய அரசும் அந்த தகவலை தன்னிடம் தெரிவித்ததால் தான் நான் முடித்துக்கொண்டேன். இலங்கை பொய் சொல்லியிருக்கிறது என்பது அப்போது எனக்கு தெரியாதுஎன சொல்லியிருக்கிறார்.

அந்த இடத்தில் யார் இருந்திருந்தாலும் அதை தான் செய்திருப்பார்கள். காரணம் ஒரு நாட்டின் அரசு அதிகாரப்பூர்வமாக தருகின்ற தகவலை நம்பாமல் இருக்கமுடியாது. இலங்கை அரசின் உறுதிமொழியை நம்பி தான் இந்திய அரசும் தகவலை தெரிவித்திருக்கிறது. இதில் குற்றம்சாட்டப்படவேண்டியது கலைஞரை அல்ல. 

இதை இன்னொரு கோணத்திலும் நீங்கள் பார்க்கவேண்டும்.

யாரோ எங்கேயோ உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என  இலங்கை உதாசீனப்படுத்தியிருக்கலாமே? அதைவிட்டுவிட்டு, தன்னுடைய இறையாண்மையை மீறி, சட்டத்துக்கு புறம்பாக, பொய்யான ஒரு அறிவிப்பை இந்தியாவிடம் அவசரம் அவசரமாக வழங்கியிருப்பதில் இருந்தே, கலைஞரின் உண்ணாவிரத போராட்டமும் அதன் விளைவுகளையும் கண்டு, இலங்கை அரசு எந்த அளவுக்கு பயந்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். 

கலைஞர் எடுக்கின்ற முடிவுகள் என்பது, வைகோ, சீமான், திருமா போன்றவர்கள் எடுக்கும் முடிவுகள் போல அல்ல, அதற்கு வலிமையும், வீச்சும், மக்கள் ஆதரவும் அதிகம் என்பதை நம் தமிழகம் உணர்கிறதோ இல்லையோ, இலங்கை நன்றாக உணர்ந்திருக்கிறது! அதனால் தான் அப்படி ஒரு பொய் தகவலை தந்து அந்த போராட்டத்தை தடுத்திருக்கிறது இலங்கை!

இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது எதற்காக இப்படி ஒரு மாநாடு?

2009 ல் இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்து ஆயுத போராட்டம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட பின், தமிழர்களுக்கு உரிமையுள்ள பகுதிகளில், உரிய அமைதிபணிகளை செய்து, அவர்கள் நல்லபடியாக வாழ்வதற்கான முயற்சிகள் நடைபெறும் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கையில், அங்கிருந்து வருகின்ற செய்திகளெல்லாம், அங்கே தமிழர்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து வழிபாட்டிடங்களை பண்பாட்டிடங்களை தகர்த்து தமிழர்கள் வாழமுடியாத ஒரு சூழலை வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக்கொண்டிருப்பதாக சொல்கிறது. 

அதனால் தான், இனி ஐ.நா மற்றும் உலக நாடுகளின் கண்காணிப்பை வலியுறுத்து, அதன் அடிப்படையில் அங்கே நல்லதொரு வாழ்வை நம் தமிழர்கள் வாழவேண்டும் என்பதற்காக ஈழ தமிழர் வாழ்வுரிமை மாநாடு இப்போது நடைபெறுகிறது, காலம் தாழ்த்தாமல்.

ஏன் உலகநாடுகளை கெஞ்சவேண்டும்?

ராம்விலாஸ் பஸ்வான் இந்த டெசோ மாநாட்டில் பேசும்போது மிக அழகாகவும் தெளிவாகவும் ஒரு பேருண்மையை சொன்னார். 


அதன் சாராம்சம் என்னவென்றால், ஈழ தமிழர் விவகாரம் என்பது, தமிழக எல்லையோடு முடிந்துவிட்டது. மற்ற மாநிலங்களில் அதன் வீரியம் புரியவில்லை. நமக்கு அசாம் மக்களின் நிலை, காஷ்மீர் மக்களின் நிலை எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனால், தமிழர்களின் நிலை பற்றி நாம் தமிழகத்துக்கு வெளியே அந்த விவகாரத்தை கொண்டு செல்லவேயில்லை. 

உலக நாடுகளின் ஆதரவில்லாத எந்த போராட்டமும் வெற்றிபெற்றதேயில்லை. ஆனால் நாமோ தமிழகத்திலேயே மூன்று வெவ்வேறு குழுக்களாக பிரிந்து நின்று போராடிக்கொண்டிருக்கிறோம். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறோம். யாருக்கு நற்பெயர் கிடைக்கும் என்கிற போராட்டம் தான் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறதே தவிர, ஈழ தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்று இதுவரை யாரும் உருப்படியாக சிந்திக்காமலேயே இருந்துவிட்டோம். 

அதனால் தான், இந்த விஷயத்தை முதல் கட்டமாக இந்திய அளவிலேயும் பின்னர் உலக அளவிலேயும் கொண்டு சென்று அவர்களுடைய ஆதரவையெல்லாம் பெறவேண்டும் என இந்த மாநாட்டில் சொல்லப்பட்டு இருக்கிறது.

இந்திய அரசை தமிழகம் மட்டுமே நிர்ப்பந்தப்படுத்தி எதையும் சாதித்துவிடமுடியவில்லை என்பதால் தான், இந்தியாவின் முக்கிய பிற கட்சிகளின் ஆதரவையும் இதில் கோரியிருக்கிறோம். பல கட்சிகளின் ஆதரவு இருந்தால் தான், நாளைக்கு பாராளுமன்றத்தில் ஒரு தனி தீர்மானத்தை கொண்டுவந்து வெற்றிபெற வைக்க முடியும் என்பது தானே அடிப்படை?

அதேபோல, ஐ.நாவில் ஒரு தீர்மானம் கொண்டு வருவதற்கோ, ஐ.நாவின் குழுவின் கண்காணிப்பில் தமிழர்கள் அமைதி வாழ்வு வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கோ, பல்வேறு நாடுகளின் ஆதரவும் தேவை என்பதால் தான், உலகநாடுகளில், ஒத்தகருத்துடைய பிரதிநிதிகளையெல்லாம் அழைத்து இந்த மாநாட்டில் அவர்களது மேலான கருத்துக்களையெல்லாம் அறிந்து அதன் படி தீர்மானம் வடிக்கப்பட்டிருக்கிறது.

தனி ஈழம் தாருங்கள் என  தீர்மானம் போட்டால் அது கிடைக்க நியாயமில்லை. அதை விட, தமிழர்கள் அங்கே அமைதியாக வாழுவதற்கு வழிசெய்யுங்கள் என்று உலக நாடுகளை வற்புறுத்துவதில் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இது தான் சரியான உறுதியான செயல்வடிவம் பெறத்தக்கதான வழியாக இருக்கமுடியும். 

தமிழகத்துக்குள்ளேயே ஒரு மூலையில் மேடையிட்டு, ஈழ விவகாரத்தில் எதிரணியினர் எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதை விட, ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு தான் உரிய பலன் தருகின்ற ஒன்றாக இருக்கமுடியும்.

*******

இந்த மாநாட்டில் 1956ல் சிதம்பரம் நகரில் தான் முன்மொழிந்த தனி ஈழ தீர்மான விஷயத்தில் தொடங்கி ஈழ விஷயத்தில் நடந்தவைகளையெல்லாம் மிக சுருக்கமாக விவரித்த கலைஞர், அதில் நெடுமாறன் அவர்களையும், வைகோ அவர்களையும் குறிப்பிட தவறவில்லை. இன பிரச்சனையில் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டு செயல்படவேண்டும் எனபதற்கான எடுத்துக்காட்டு அது.

திருமாவளவனின் பேச்சு அவரது அறியாமையையும், ஈழ விவகாரத்தில் அவருக்கு முழுமையான விவரங்கள் தெரியாது என்பதையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. மற்றவர்களெல்லாம் ஈழ தமிழர்களை பற்றி, ஈழ விவகாரத்தைபற்றி உணர்ச்சிகரமாக பேசிக்கொண்டிருக்கையில், திருமா மட்டுமே பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா போல தேவையற்ற புகழ்ச்சியுரைகளால் நேரத்தை நிரப்பிக்கொண்டிருந்தது நெருடலாக இருந்தது.
 
மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், மத்திய அரசை பகைத்துக்கொண்டாலும் பரவாயில்லை என  மிக கடுமையான தீர்மானங்களை வலியுறுத்தியிருப்பதன் மூலம், மத்திய அரசின் எந்த நிர்பந்தத்துக்கும் நாம் பணியப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் கலைஞர். 

நான் கூட, இந்த மாநாட்டில் மேலோட்டமாக சில தீர்மானங்கள், அதுவும், இந்திய அரசை கெஞ்சுவதுபோல தீர்மானங்கள் வெளியாகும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், இந்திய அரசின் மீது நம்பிக்கையில்லை, உலக நாடுகளே நீங்கள் எங்களுக்காக குரல்கொடுங்கள் என்கிற தொனியிலான தீர்மானங்கள் வெளியாகியிருப்பதில் இருந்தே, நமக்கு நம் இனம் தான் முக்கியம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது மாநாடு!

விமர்சிப்பவர்கள் விமர்சனம் இருப்பதால் விமர்சிப்பதில்லை. கலைஞரை விமர்சிக்கவேண்டுமே என்று விமர்சிக்கிறார்கள். விமர்சனங்களை ஏற்றுக்கொள்பவர் கலைஞர் என்பதால் தான் அவரை விமர்சிக்கிறார்கள். அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்ததேவையில்லை.

தமிழகத்தில் ஈழவிவகாரத்தை வைத்து விளம்பர அரசியல் செய்துகொண்டிருக்கும் சில அரசியல்கட்சிகளை மக்கள் எப்போதோ புறக்கணித்துவிட்டனர். உணர்ச்சிகரமாக பேசுவதாலும், மற்றவர்களை குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதாலும் கைதட்டல்களை மட்டுமே வாங்கிக்கொள்ள முடியும். அது எந்த விதத்திலும், ஈழ தமிழர்களுக்கு பயனளிக்காது. 

1950களிலிருந்து ஈழவிவகாரத்தில் முழுமையாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கலைஞரை தவிர இன்றைய தேதியில் ஈழதமிழர்களின் எதிர்காலத்தை பற்றி வேறு யாரும் உருப்படியாக சிந்திக்கமுடியாது என்பதை தான் நேற்றைய தீர்மானங்கள் தெளிவுபடுத்துகின்றன. இனியும், விளம்பர அரசியல்வாதிகள் ஈழ விஷயத்தை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல், ஒரு குடையின் கீழ் ஒன்று திரண்டு, உச்சஸ்தானியில் ஈழ மக்களுக்காக குரல்கொடுக்கவேண்டும் என்பது தான் பலரது ஆசை. 

அது பேராசையுமல்ல, நப்பாசையுமல்ல என்பதை காலம் தான் உறுதிசெய்யவேண்டும்!


Printfriendly