நேத்து சென்னையில் அதிமுக நிர்வாகிகள்
இல்ல திருமண விழாவை ஜெ. நடத்தி வெச்சு பேசிருக்கார்.. (அட நேர்ல தாங்க.. இதையெல்லாமா
வீடியோ கான்பரன்ஸ்ல செய்வாங்க?)
அந்த பேச்சு தான் பல டிவிஸ்டுகளை சுமந்துட்டு
இருக்கு.
ஒரு PhD
ஆய்வு கட்டுரை எழுதுற அளவுக்கு அந்த பேச்சு இருக்கு. பேச்சை எழுதி கொடுத்த பிரகஸ்பதி
நிறைய மறைமுக குத்துக்களை வெச்சு எழுதிருக்கார். (அவருக்கு யார் மேல என்ன கோபமோ?) அந்த பேச்சில் ரெண்டு குட்டி கதைகள் இருக்கு. அதில் ஒன்று தான் அப்பா மகன்
பத்தின கதை. அது தமிழக அரசியலை லைட்டா ஷேக் பண்ற அளவுக்கு சக்தி வாய்ந்ததுன்னு நினைக்கிறேன்.
கதை இங்கே இந்த லிங்க்கில் இருக்கு.. படிச்சிட்டு வாங்க...
தொடர்ந்து பேசுவோம்.
"நீங்கள் யாரையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான்
பொறுப்பல்ல" என ஜெ. கடைசியில் சொல்லி இருந்தாலும், இந்த கதை டைரக்டா திமுகவையும் கலைஞர், ஸ்டாலின், நெஞ்சுக்கு நீதி புத்தகத்தையும் தான் குறிக்குதுன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்குமே.
இப்போ அந்த கதையில் உள்ள சில முக்கியமான
விஷயங்களை கவனிக்கலாமா?
1. இந்த கதையின் மிக முக்கிய வரியாக நான் நினைப்பது “அரசியல் பணி என்பது ஆபத்தானது. இதில் தந்தை, தனையன் என்றெல்லாம் உறவுகளுக்கு இடமில்லை.
வலிமை உள்ளவரே வெல்ல முடியும். எனவே உனது அரசியல் பாடத்தை நீயேதான் கற்றுக் கொள்ள
வேண்டும் என்றார்” தான்.
சொந்த மகனே ஆனாலும்
தன் முயற்சியில் தானே தான் வளரணும்னு தான் அந்த அப்பா நினைச்சிருக்கார். தன்னுடைய மகன்றதுக்காக
எந்த சலுகையும் காட்டலை, உதவியும் செயலை என்பதை
தெள்ள தெளிவா புரிய வெச்சிருக்காங்க ஜெ.
இதன் மூலம் திமுகவில் குடும்ப
அரசியல்னு பேசிட்டு இருக்கிறவங்க மூக்கையெல்லாம் பலமா உடைச்சதொட, திமுக ஒரு சிறந்த ஜனநாயக கட்சி என்பதையும் எல்லோருக்கும் உறைக்கிற
மாதிரி உணர்த்தி இருக்கார் ஜெ.
2. ஸ்டாலின் போதிய அளவுக்கு பதவி உயர்வு அடையலையே என்கிற ஆதங்கம்
ஜெ.வுக்கு இவ்வளவு ஆழமா இருந்திருக்கும்னு ஸ்டாலினே கூட நினைச்சு பார்த்திருக்கமாட்டார்னு
தோணுது.
3. அதிமுகவில் அடுத்த தலைமைக்கு டி.டி.வி தினகரனை முன்னிலைப்படுத்த
முயற்சி நடப்பதா செய்தி வரும்போது ஜெ.வின் இந்த பேச்சு இன்னும் முக்கியத்துவம் அடையுது.
‘அந்த கட்சியை பார்.. சொந்த மகனுக்கே சலுகை காட்டலை..
புரிஞ்சு நடந்துக்கிடுங்க’ன்னு இண்டைரக்டா சுட்டி காட்டி இருப்பதா
நாம நினைக்கலாம்.
4. நெஞ்சை திறந்து எழுதிய புத்தகமான ‘நெஞ்சுக்கு நீதியை’ எல்லோரும் படிச்சு புரிஞ்சுக்கணும்னு
ஜெ. சொல்வது புரிகிறது. ஆனால் அப்படி எல்லோரும் அதை படிச்சால் அதிமுகவுக்கு தான் சிக்கல்.
அந்த புத்தகத்தின் ஐந்து பாகங்களையும் முழுசா படிச்ச எந்த தமிழனும் தான் இருக்கிற கட்சியில்
இருந்து விலகி திமுகவில இணைஞ்சிரலாமான்னு தான் முதலில் யோசிப்பான். அந்த அளவுக்கு தமிழகத்தின்
வரலாறு, அரசியல், சமூக அமைப்பு, அந்த தளைகளில் இருந்து மக்களை எப்படி மீட்டெடுத்தோம், என்னென்ன திட்டங்கள் என்னென்ன காரணங்கங்களுக்காக தொடங்கப்பட்டன, அப்போதைய தமிழக மக்களின் நிலை என்ன, அதை இப்போதிருக்கும்
நிலைக்கு எப்படி படிப்படியாக முன்னேற்றினோம் என்பதை எல்லாம் விரிவாக எழுதி இருக்கிறார்.
அந்த சமையத்தில் ஏற்பட்ட பல அரசியல் சதுரங்க நிகழ்வுகளையும் அதன் பின்னணிகளையும் சுவையாகவும்
சுவாரசியமாகவும் சொல்லி இருக்கிறார்.
புத்தகத்தில் ஜெ. சொன்ன
மாதிரி கலைஞரின் தில்லுமுல்லுக்களை தேடினா ஏமாற்றம் தான் மிஞ்சும். (தன் தவறுகளை தானே
எப்படி எழுதுவார்?)
எப்படியோ நெஞ்சுக்கு
நீதி இன்னொரு ரெண்டு எடிசன் பதிப்பிக்கப்பட்டு இந்த வருஷம் சென்னை புத்தக கண்காட்சியிலேயே
சக்க போடு போடும் என்பதும் அதை வாங்கும் பெரும்பாலானோர் அதிமுகவினர் என்பதும், அவர்கள் முகவின் தில்லுமுல்லுகளை தேடி தேடி கடைசியில் முகவின்
அபிமானியாகவே மாற வாய்ப்பு இருக்கிறது என்பதும் எனது இதர அவதானிப்புக்கள்.
5. மக்கள் நல கூட்டணி, தேமுதிக, பாமக என பலரும் அதிமுகவை கடுமையாக எதிர்ப்பதாக காட்டிக்கொண்டாலும், ஜெ. அவர்களை எல்லாம் சீரியஸா எடுத்துக்கவில்லை என்பது புரிகிறது. தமிழக மக்களால் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு
ஒதுங்கி கிடக்கும் ஒரு கட்சியான, அதிலும் அதிகார பூர்வ எதிர்கட்சி
கூட அல்லாமல் ஜஸ்ட் ஒரு மூன்றாம் இடத்தில் இருக்கும் ஒரு சாதாரண அரசியல் கட்சியான திமுகவை
கண்டு தான் அவர் ஆடி போயிருக்கிறார் என்பது பட்டவர்த்தனமாக புரிகிறது.
“எனக்கு நண்பனா இருக்க எந்த
தகுதியும் தேவை இல்லை. ஆனா எதிரியா இருக்க தகுதி வேணும்” என்கிற சினிமா வசனத்தை தான்
ஜெ. இதர கட்சிகளுக்கு மறைமுக செய்தியா சொல்லி இருக்கிறார்னு நான் நினைக்கிறேன்.
6. தமிழகம் முழுவதும் நடந்த “நமக்கு நாமே” பயணம் திமுகவில் மாற்றத்தை
கொண்டு வந்திருக்கோ இல்லையோ, தமிழக மக்கள்
மனநிலையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கு என்பதை ஜெ. நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்கார்.
அதனால் தான் “ஐயோ பாவம் அந்த ஆடு இப்படி நனையுதே”ன்னு பரிதாபப்பட்டு பேசி இருக்கார்.
இப்போதைக்கு மகன் தந்தைக்காற்றும் உதவி என்பது, ஜெ. விரித்த வலையில்
வீழாமல் கட்சியின் கட்டுப்பாட்டை காப்பது மட்டும் தான் என்பது ஸ்டாலினுக்கு தெரியாததா
என்ன?
இனி இதை திமுக எப்படி கையாள போகுது என்பதில்
இருக்கிறது, தமிழக அரசியலின் அடுத்த கட்டம்.
இந்த தேர்தல் திமுகவுக்கும் அதிமுகவுக்கும்
இடையே என்பதை நேற்றைய பேச்சின் மூலம் தெளிவாக சொல்லி விட்டார். அதிலும், கலைஞர் அல்லாமல் ஸ்டாலின் தலைமையில் இந்த தேர்தல் இருக்கவேண்டும்
என்பதையும் மறைமுகமாக சொல்லி விட்டார். அவர் அவருக்கு வசதியான வியூகத்தை வெளிப்படுத்தி
இருக்கிறார். அதை புரிந்து கொள்ளும் திறன் திமுகவுக்கு உள்ளது. தக்கன தக்கபடி தக்கசமையத்தில்
திமுக கைக்கொள்ளும் என்பது புரிந்தாலும், அது என்ன மாதிரியான
நடவடிக்கை என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்குது.
நீ ஏமாத்து... இல்லைன்னா நான் ஏமாத்துறேன்... நம்மளை விட்டுட்டு ஒரு மூணாவது பய உள்ள வரக்கூடாது அப்படின்னு சொல்லியிருப்பார்....
ReplyDeleteதமிழன் இவனுககிட்ட இன்னும் சுத்தமா அழிஞ்சாத்தான் விடுவானுங்க...