Showing posts with label Kalaignar. Show all posts
Showing posts with label Kalaignar. Show all posts

Sunday, May 29, 2016

தமிழக தேர்தல் – 2016

ரு வழியா தமிழக தேர்தல் திருவிழா பரபரப்பா நடந்து முடிஞ்சிருச்சு. எதிர்பார்த்தமாதிரியே அதிமுக மீண்டும் ஆட்சி கட்டிலை பிடிச்சிருச்சு. அதென்ன எதிர்பார்த்த மாதிரியே?? எல்லா மீடியாவும் திமுக தான் ஆட்சியை பிடிக்கும்னு அடிச்சு சொல்லிச்சே? நேரு இண்டோர் ஸ்டேடியத்தை கூட பதவி ஏற்பு விழாவுக்கு ரெடிபண்ணினாங்களேன்னு எல்லாம் அடுக்கடுக்கா கேள்வி கேட்கப்படாது.  சுருக்கமா ஒரு ரிவைண்ட் பார்த்திரலாம்.

Thanks: www.india.com

மீடியா சொன்னதெல்லாம் சரிதான். திமுக தான் ஆட்சியை பிடிக்கும்ன்ற நிலைமை. ஆனா அதே சமயத்தில் வேறொரு ஆங்கிள்ல சில கணக்குகளையும் சிலர் சொன்னாங்க. பொதுவா தமிழக மக்கள் திமுக அதிமுக ரெண்டு கட்சியையுமே வெறுத்திட்டாங்க. ஒரு மாற்றம் வரணும்னு நினைக்கிறாங்க. அதனால் மூணாவது அணிக்கு(!) கணிசமான வாக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு. ஒருவேளை அந்த கணிசம்’, போதுமான அளவுக்கான கணிசமா இல்லைனா கணிசமான வாக்குகள் அதிமுகவுக்கு எதிரா விழுந்தாலும் அது ரெண்டா பிரிஞ்சு திமுக, மூணாவது அணின்னு ஸ்பிலிட் ஆகி அதிமுகவே ஜெயிச்சிரும்னு வித்தியாசமா சிந்திக்கிற சில புத்திசாலிகள் சொன்னாங்க. அதிலும் இன்னும் ஒரு படி மேலே போய், புதிய வாக்காளர்கள் இந்த முறை அதிகம். அவங்களுக்கு திமுக அதிமுகவை விட மூணாவது அணிக்கு தான் ஆதரவு கொடுக்கணும்னு நினைக்கிறாங்க. சொல்றதுக்கில்லை. விஜயகாந்தே கூட முதலமைச்சரா ஆனாலும் ஆயிடுவாருன்னு கூட நம்பிக்கையா சொன்னாங்க.

ஆனா மே 14 ஆம் தேதி காட்சி மாறிடிச்சு. 14 – சனி, 15 – ஞாயிறு, 16 – திங்கள் (ஓட்டு பதிவு லீவு) இப்படி தொடர்ந்து மூணு நாள் லீவு கிடைச்சதும், தமிழகத்தை நல்லாக்குற இணைய போராட்டத்தையெல்லாம் தற்காலிகமா மூட்டை கட்டிட்டு கர்நாடகா நோக்கி சாரி சாரியா டூர் கிளம்பிட்டாங்க, தட் சோ கால்டு புதிய வாக்காளர்கள் அலையாஸ் தமிழகத்தை மாற்றத்துக்கு இட்டு செல்லும் புரட்சியாளர்கள்.

சீன் இப்ப கிளியர்.

www.facebook.com/satheeshkumarm
சிட்டி பேஸ்டு புதிய வாக்காளர்கள் இல்லாததால் மூணாவது அணிக்கான வாய்ப்பு பணால். ரூரல் வாக்காளர்கள் திமுக (அ) அதிமுகவுக்கு தான் ஓட்டு போடுவாங்க. மேற்கு தெற்கு தமிழகம் அதிமுகவின் சொத்து. என்னதான் அட்டகாசமான தேர்தல் அறிக்கை கொடுத்து இருந்தாலும் திமுகவுக்கு ஓட்டு போடணுமா வேண்டாமான்றதை தேர்தல் அன்னைக்கு ஓட்டு பெட்டி முன்னாடி நின்னு யோசிக்கும்போது என்ன தோணுமோ அதை தான் மக்கள் செய்வாங்கன்றது தமிழகத்தின் பண்பாடு. அதிமுக கட்சிக்காரங்க உசுரே போனாலும் அதிமுகவுக்கு மட்டும் தான் ஓட்டு போடுவாங்க. மத்த கட்சிங்க (திமுக உட்பட) எந்த கட்சிக்கு வேணும்னாலும் ஓட்டு போடுவாங்க. தமிழகத்தில் அதிக உறுப்பினர் உள்ள கட்சி அதிமுக. என்னதான் அதிருப்தி இருந்தாலும் ஜெ. நம்ம மக்களை பொருத்தவரைக்கும் கொஞ்சம் பாசம் ஜாஸ்த்தி. எப்படி கூட்டி கழிச்சு பார்த்தாலும் லைட்டா லீடிங்க்ல அதிமுக தான் மீண்டும் வரும் அதுக்கு காரணமா முன் திட்டமிட்ட தேர்தல் தேதியான மே-16 ன்ற மந்திர நாள் அமையும்னு எல்லோருக்கும் தெளிவாயிருச்சு.

தேர்தல் முடிவு வந்தப்புரம் தான் தமிழகத்தில் பரபரப்பு.

திமுகவுடன் இணைஞ்சு பணியாற்ற விரும்புவதா ஜெ. சொல்வதும், அவர் எனது மூத்த சகோதரின்னு ஸ்டாலின் சொல்றதும் பொது இடங்களில் ஒருத்தொருக்கொருத்தர் வணக்கம் சொல்லிக்கறதும்.. அப்பப்பா.. ஜெ. மாறிட்டாங்களான்னு உலகமே உச்சு கொட்டி ஆச்சரியமா பாத்துது. ஆனா இதெல்லாம் வழக்கமானது தான்றதும், ஏற்கனவே திமுகவை அப்பப்போ அவமானப்படுத்திட்டு அசால்டா அசராம அறிக்கைவிட்டு சமாளிக்கறதும் மாண்புமிகு அம்மாவின் வழக்கம்ன்றது தமிழக அரசியலை தெரிஞ்சவங்க புரிஞ்சுருப்பாங்க.  ஆனா இந்த திடீர் பாசத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கு.

ஜூன் 11 ஆம் தேதி ராஜ்யசபா எலக்சன். தமிழகத்துல 6 சீட் காலியாவுது. நியாயமா பார்த்தா இப்போதைய எம்.எல்.ஏ கவுண்ட் பிரகாரம் அதிமுகவுக்கு 3 சீட், திமுகவுக்கு 2 சீட் எந்த சிக்கலும் இல்லாம கிடைச்சிரும். பாக்கி ஒரு சீட்டுக்கு அதிமுகக்கிட்டே சில எம்.எல்.ஏக்களும் திமுகக்கிட்டே சில எம்.எல்.ஏக்களும் மிச்சம் இருக்காங்க. இவங்க ஒண்ணா சேந்து ஓட்டளிச்சா தான் ஒரு எம்.பி கிடைக்கும். மிச்சம் இருக்கும் எம்.எல்.ஏக்களில் அதிமுகவை விட திமுகவுக்கு தான் அதிகம். சோ, லாஜிக்கா பார்த்தா திமுக 3 வதா ஒரு வேட்பாளரை அறிவிக்கணும் அதிமுக அதை ஆதரிக்கணும். ஆக அதிமுக 3, திமுக 3 எம்பிக்களை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பும். ஆனா அதிமுக 4 பேரையும் திமுக 2 பேரையும் வேட்பாளரா அறிவிச்சிருக்காங்க. அதான் ஆச்சரியம்.!!

அதிமுக 4 வது வேட்பாளரை அறிவிச்சது வழக்கமான வீம்புக்காகன்னு  தான் நினைச்சேன். ஆனா திமுக 3 வேட்பாளரை அறிவிக்கிறதுக்கு பதிலா 2 வேட்பாளரை அறிவிச்சப்ப தான் அந்த பாசமழைக்கான அர்த்தம் லைட்டா புரிய ஆரம்பிச்சது. ஒருமித்த மனதோடு அதிமுக வேட்பாளருக்கு திமுக ஆதரவு தெரிவிச்சிருப்பதும், அது ட்டா மாறி அதிமுகவின் 4 வது வேட்பாளர் எம்.பி ஆகி டெல்லி போயி பதவி ஏத்துக்க வரைக்கும் திமுகவை தாஜா பண்ணியே ஆகவேண்டிய இக்கட்டில் அதிமுக இருப்பதும்..... ஆனானப்பட்ட ஜெ.வையே இறங்கி வரவெச்சிருக்கு.

இன்னொரு பிரச்சனை தமிழக அசம்பிளி.

மூனுல ரெண்டு பங்கு பலம் இருந்தா தான் ஜெ. தான் விரும்புன படி அசெம்பிளியை நடத்த முடியும். எதிர்கட்சி எல்லாரையும் பத்தி விட்டுட்டு, அதிமுக எம்.எல்.ஏக்களை எல்லாம் வெச்சுக்கிட்டு விதி 110 இன் கீழ்  எதை வேணும்னாலும் வாசிச்சிட்டு போகலாம். யாரும் எதுவும் கேக்க முடியாது. போன தடவை 151 எம்.எல்.ஏ தான் அதிமுகவுக்கு இருந்துச்சு. மூனுல ரெண்டு பங்குன்னா.. (234/3 x 2) 156 எம்.எல்.ஏ வேணும். அதனால் தேமுதிகவை உடைச்சு எட்டு பேரை இழுத்து அந்த மெஜாரிட்டியை செயற்கையா ஏற்படுத்திக்கிட்டாங்க. ஆனா இப்ப சிச்சுவேஷனே வேறே.

அதிமுக 132 தான். அதாவது பெரும்பான்மைக்கான 118 சீட்டை விட ஜஸ்ட் 14 எம்.எல்.ஏ தான் அதிகம். அதே சமயம் திமுக 89 + காங் 8. அதனால் முன்ன மாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு சபையை நடத்த முடியாது. எந்த ஒரு பில் பாஸ் ஆகணும்னாலும் போராடவேண்டி இருக்கும். அது மட்டும் இல்லாம தன்னுடைய எம்.எல்.ஏக்களை தக்கவெச்சுக்கவும் வேணும்.  இப்படி மல்டி பாயிண்டில் ஜெ.வுக்கு சங்கடங்களும் சிக்கல்களுமா அமைஞ்சிருக்கு தேர்தல் முடிவு.

ஒரு நண்பர் பேஸ்புக்குல சொன்னமாதிரி, இப்போதைக்கு ஆட்சி ஜெயலலிதாவினுடையது தான். ஆனால் அதை நடத்தப்போவது ஸ்டாலின் தான். அவரது அனுமதி இன்றி இனி எதுவும் தமிழகத்தில் அசையாது. எஜ்ஜாட்லி அது தான் சூழ்நிலை இப்போ.

இனியாவது சட்டசபை சத்தசபையா இல்லாம, மேஜை தட்டல்கள் இல்லாம, கவுரவமா ஆக்கப்பூர்வமா மாநில வளர்ச்சிக்கு உரியதா இருக்கும்னு எதிர்பார்க்கலாம்.

எந்த கட்சி உடைஞ்சாலும் திமுக தான் உடைச்சுது திமுகதான் உடைச்சுதுன்னு சில கத்துக்குட்டிகள் கதறும்போது சிரிப்பா வரும். ஆனா அது உண்மையா இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு இப்ப எனக்கு தோணுது. அப்படி ஒரு பழக்கம் திமுகவுக்கு இருந்திருந்தா.. ஆகப்பெரும் நடவடிக்கையா அதிமுகவிலிருந்து 25 பேரை இழுக்கறது தான் முதல் வேலையா இருந்திருக்கும். ஆட்சியே கவிழ்ந்து திமுக அரியணை ஏறவும் சான்ஸ் இருக்கு. நல்லவேளையா கட்சியை உடைக்கறது, பதவிக்கு அலையறதுனு எல்லாம் இன்னும் திமுக இறங்கலை. அப்படி உடைக்கறதுன்னு இறங்கினா பைசா பெறாத கட்சிகளை உடைக்கமாட்டாங்க, இது மாதிரி ஆதாயம் தர்ற மாதிரியான உடைப்புல தான் லாஜிக்கலா ஈடுபடுவாங்கன்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாம பலரும் விவாதிக்கறதை பார்க்கும் பொது தான், நம்முடைய கல்வி தரம் எந்த அளவுக்கு சிந்திக்கும் திறனை மழுங்கடிச்சிருக்குன்றதே புரியுது.

இந்த தேர்தல் நமக்கு கொடுத்திருக்கும் பாடங்களில் முக்கியமானதுன்னா இவை தான்.

தமிழகம், திமுக & அதிமுக தவிர வேறு கட்சிகளுக்கானது அல்ல.

காங்கிரசுக்குன்னு எந்த செல்வாக்கும் இல்லை. ஜெயிக்கக்கூடிய வாய்புள்ள கூட்டணியில் இருந்தும்கூட காங்கிரஸ் மட்டும் செமையா தோத்திருக்கு.

சென்னை மக்கள் வெள்ள பாதிப்பை மறக்கலை. அதிமுகவுக்கு சென்னைல பலத்த அடி விழுந்திருக்கு.

மதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக, கம்யூனிஸ்டுகள் என யாரையும் தனியாக தமிழக மக்கள் ஆதரிக்க தயாரா இல்லை. அவர்களுக்கான ஆதரவு என்பது அவர்கள் திமுக / அதிமுக யார் கூட இணைஞ்சு இருக்காங்கன்றதை பொறுத்ததுனு புரிய வெச்சிருக்காங்க.

தமிழகம் தழைக்குமா? மீண்டும் ஜெ. தன் சுய ரூபத்தை காட்டுவாரா? மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பதெல்லாம் ஒரு ஆறு மாசம் கழிஞ்சப்பறம் தான் தெரியும்.




Wednesday, July 17, 2013

நானும் கடவுளும்!

டவுள் குறித்த எனது கருத்துக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது சொல்லிவந்தாலும், அது குறித்த விரிவான கட்டுரை எழுதுவேன் என்றெல்லாம் இன்றுவரை நான் எண்ணியதில்லை. எனினும் அப்படியான ஒரு சூழல் வந்து சேர்ந்ததை எந்த கணக்கில் வைப்பது?

எல்லா குழந்தைகளையும் போல எனக்கும் இறை நம்பிக்கை ஊட்டப்பட்டபடி தான் வாழ்க்கை தொடங்கியது. எனது அப்பா, முன்னாள் தீவிரமான திமுக காரர். எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியேறியபோது அவருடன் வெளியேறி அதிமுகவில் கடைசி வரை இருந்து வந்தவர். அதனால் அவர் எனக்கு பகுத்தறிவு சிந்தனைகளையும், பக்தி மார்க்கத்தையும் சரிவிகிதத்தில் சொல்லி தந்திருந்தார்.

சிறுவயதில் இருந்தே எனது இஷ்ட தெய்வம் முருகன் தான். எப்போதுமே கொஞ்சம் உரிமை எடுத்துக்கொள்வது முருகனிடம் தான். தமிழகத்திலுள்ள ஆறு படைவீடுகளுக்கும் சென்று தரிசித்திருக்கிறேன். என் அப்பா, எல்லா வருஷமும் ராணி முத்து காலண்டர் வாங்குவதே அந்த முருகனின் அழகுக்கு தான். எனினும் எல்லா தெய்வங்களிடமும் எனக்கு பிரியம் இருக்கிறது. இஸ்லாமிய, கிருத்தவ நண்பர்கள் அறிமுகத்தால் அவர்களது வழிபாட்டு தலங்களுக்கும் நிறைய சென்றிருக்கிறேன். வருடத்துக்கொருமுறையேனும் வேளாங்கண்ணி சென்று வருவது ஒரு வழக்கம். சென்னையில் சமயம் கிடைக்கும்போதெல்லாம் பெசண்ட் நகர் சர்ச்சிலோ, லஸ் சர்ச்சிலோ நான் இருப்பேன். தெய்வங்களில் நான் பாகுபாடு பார்ப்பது கிடையாது. தெய்வம் தெய்வம் தான். தெய்வம் இருக்கிறதா எனக்கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால், தெய்வசெயல்கள் பலவற்றை நான் நிறைய என் வாழ்வில் உணர்ந்திருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயம்.

கடவுள் விஷயத்தில் நான் ஒரு வகையில் கலைஞர் கட்சி. கடவுளை மறுக்கவில்லை. ஆனால் இது தான் கடவுள், இப்படி தான் வழிபடவேண்டும், இவர்களுக்கு மட்டும் தான் உரிமை, இன்னின்ன சடங்குகள் செய்யவேண்டும் போன்ற ஆதிக்கதன்மையை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். பக்தி என்பது வேறு, மூட நம்பிக்கை என்பது வேறு. எந்த கடவுளும், எந்த விதமான சாங்கியத்தையும் செய்ய சொல்லியதாக வரலாறில்லை. நாமாக ஒவ்வொரு காலகட்டத்தில் ஏற்படுத்திக்கொண்ட வழக்கங்கள் தான் அவை என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு.

பத்தாம் வகுப்பில் ஒரு செய்யுள் வரும்.

“அல்லா என்பார் சிலபேர்கள்; அரன் அரி என்பார் சிலபேர்கள்

வல்லான் அவன்பர மண்டலத்தே வாழும் தெய்வம் என்பார்கள்

சொல்லால் விளங்கா நிர்வாணம் என்றும் சிலபேர் சொல்வார்கள்

எல்லாம் இப்படி பலபேசும் ஏதோ ஒரு பொருள் இருக்கின்றதே”

இந்த செய்யுள் தான் எனது நிலைப்பாட்டை ஓரளவுக்கு விளக்கக்கூடியது என நினைக்கிறேன்.

தூய பக்தி, அன்பு, உள்ளார்ந்த வேண்டுதல், பிரார்த்தனை ஆகியவை மிக அற்புதங்களை நிகழ்த்தி காட்டியதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அதனால் கடவுள் இல்லை என ஒருபோதும் சொல்லமாட்டேன். ஆனால், அது தொடர்பான மூட பழக்க வழக்கங்களை, சடங்குகளை, சம்பிரதாயங்களை, கட்டுப்பாடுகளை, ஆதிக்க அடக்குமுறைகளை, வருணாசிரம வேறுபாடுகளை, வேதம் சொன்னதாக சொல்லி சொல்லி செய்யப்படும் புனை கற்பனை கதைகளை நான் ஏற்பதில்லை. புராணங்களை கூட அதன் கதை சொல்லும் திறனுக்காக தான் வாசித்தேன். ஆனால் அதை நான் ஒருபோதும் நம்பியதில்லை.

ராமாயணத்தை நம்பவேண்டும் என்றால், பேசும் கழுகு, பறக்கும் புஷ்பகவிமானம், தாவும் குரங்கு கூட்டம், மாய மான் என பலவற்றை நான் நம்பவேண்டி இருக்கும். அது இயலாத காரியம். கலைஞர் அவர்கள் 1970களில் காரைக்குடி கம்பன் கழகத்தில் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் ராமாயண சொற்பொழிவு நடத்தியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவர் கம்பனின் தமிழை வியந்தோதினார். இந்த ஒப்பீட்டுக்காக அனைத்து வடிவ, அனைத்து மொழி ராமாயணங்களையும் முழுமையாக கற்றவர். இன்றைய தேதியில் எல்லா வித ராமாயணத்தையும் அறிந்த ஒருவர் அவராக தான் இருக்க முடியும். புராணத்தை புராணம் என படிப்பதோடு சரி. அதை நம்பி செயல்படுவதில்லை. அதே கொள்கை தான் கிட்டத்தட்ட எனக்கும்.

என் அப்பா சொல்வார். “வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனிதர்களின் தகவல்களினால் பிரித்தாளப்பட்டாலும், கிருஷ்ணர், இயேசு, நபிகள் நாயகம் ஆகியோரின் வாழ்க்கையில் பல ஒற்றுமை இருக்க காணலாம். மூவருமே ஒருவராக இருக்க வாய்ப்புண்டு. அதை ஒவ்வொருவர் ஒவ்வொரு பெயரிட்டு ஒவ்வொரு விதமாக சொல்லியிருக்கவும் வாய்ப்புண்டு” என்பார். மூவரின் வரலாறையும் படித்த பின், ஓரளவுக்கு அவர் சொன்னது சரியாக இருக்கக்கூடும் என்றே நான் நினைக்கிறேன். மூவரையும் ஒரு மன்னர் கொல்ல துரத்துகிறார், மூவரது சொற்பொழிவின் சாராம்சமும் ஒன்றே, மூவருக்கும் சீடர்கள், ஒருவர் மாட்டு தொழுவத்திலும், ஒருவர் ஆட்டிடையிலும், ஒருவர் ஒட்டக பட்டியிலும் பிறந்ததாக சொல்லப்படுகிறது. எல்லாம் ஒருமாதிரி கிட்டத்தட்ட ஒத்து வருவது போல நானே கற்பனை செய்துகொள்வேன். எம்.ஜி.ஆரை சிலர் காங்கிரஸ் காரர் என்றும், சிலர் திமுக காரர் என்றும், சிலர் அதிமுக காரர் என்றும் வெவ்வேறு கால கட்டத்தை ஆதாரம் காட்டி சொல்வதில்லையா? அது போல என நானே நினைத்துக்கொள்வேன்.

கர்த்தர் தன்னை கடவுள் என சொல்லிக்கொள்வதில்லை. ஜெஹோவா தான் கடவுள், அவர் உருவமற்றவர், நான் அவரது தூதன் மட்டுமே என்கிறார். இதையே தான் நபிகள் நாயகம் (சல்) சொல்கிறார். இறைவன் உருவமற்றவன். நான் இறையோதும் திருத்தூதன் என்கிறார். நாமும் கூட, சக்தி ஜோதிவடிவானவள், உருவமற்றவள் என்கிறோம். இன்னும் சொல்லப்போனால், உருவமற்ற கடவுளின் குறியீடாக மூன்று மதத்தவர்களுமே மூன்றாம் பிறையை தான் வைத்திருக்கிறார்கள் என்பது. எனவே எனக்கு பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

நான் நிறைய பயணிப்பேன். அப்படியான பயணங்களில் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயங்கள் நிறைய. அதில் குறிப்பிடத்தக்கது, கோவிலுக்குள் அனுமதியில்லாத தெய்வங்கள். இன்னும் சொல்லப்போனால், தமிழக ஊரகப்பகுதிகளில் தான் நான் தெய்வங்களிலும் ஜாதி பிரித்து கோவிலுக்கு உள்ளிருக்கக்கூடிய சாமி, வெளியிலிருக்கக்கூடிய சாமி என பாகுபாடு காட்டப்படுவதை கண்டிருக்கிறேன். மதுரைவீரன், பொம்மி, கருப்பண்ணசாமி போன்ற கடவுளர்களுக்கான மரியாதையும், சிவன், விஷ்ணு, முருகன், விநாயகன் போன்ற கடவுளர்களுக்கான மரியாதையும் வெவ்வேறானவை என்பது எனக்கு உண்மையில் ஆச்சரியம் தான் கொடுத்தது.

தெய்வங்களிலோ, பக்தர்களிலோ பாகுபாடு பார்ப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. கலைஞர் ஒருமுறை சொன்னார், “கடவுள் இருக்கிறாரோ இல்லையோ எனக்கு தெரியாது, ஆனால் கடவுள் இருப்பதாக நம்பி வழிபடுவோரின் உரிமையை நான் பாதுகாக்கவேண்டும்”. அந்த வகையில் கோவில்களில் எல்லாம் ஒரு வேளையாவது பூஜை நடைபெற வேண்டும், முறையாக குடமுழுக்கு நடத்தப்படவேண்டும் என்றெல்லாம் ஆணையிட்டு, தமிழகத்தில் முதல்முறையாக இந்து சமய அறநிலைய துறை என தனியாக ஒரு துறையையும் ஏற்படுத்தி அனைத்து ஆலையங்களுக்கும் பாதுகாப்பு தந்தார். அதை அவரது தனிப்பட்ட கருத்தோடு இணைத்து பார்த்து வம்பளக்கும் கூட்டத்தை புறக்கணித்து விட்டு பார்த்தால், அவரது அணுகுமுறையின் நாகரீகம் விளங்கும். “நான் கடவுள் மறுப்பு கொள்கை உடையவன். ஆனால் அதை இம்மக்கள் மீது திணிக்க மாட்டேன். மாறாக அவர்களது விருப்பம் வழிபாடு என்றால் அதற்கான வசதிகளை செய்து கொடுப்பேன்” என்கிற கலைஞரின் அந்த அணுகுமுறை எனக்கும் உடன்பாடான ஒன்றே. அப்படியான எண்ணத்திலிருந்த எனக்கு, சிலர் கோவிலுக்குள் செல்லக்கூடாதெனவும், சில இனத்து தெய்வங்களுக்கு கோவிலுக்கு வெளியே தான் இடம் எனவும் சொல்லப்பட்ட விஷயங்கள் ஆச்சரியத்தோடு சேர்த்து வெறுப்பையும் தந்தது.

வாதாபி கோட்டையில் மதிற்சுவரில் காவல் தெய்வமாக இருத்தப்பட்ட கணபதியை (எண்+கண+நாதன்=எட்டு திசை காவலன்; கண+பதி=திசைகளின் காவலன்) தளபதி பரஞ்சோதி பெயர்த்தெடுத்து தமிழகத்துக்குகொண்டுவந்து, பிள்ளையார்பட்டியில் வைத்து, பின்னர் கதைகள் மூலம் சிவன் குடும்பத்தில் சேர்ப்பதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் காவல் தெய்வமாக யாழி (குதிரை உடல், யானை துதிக்கை) இருந்து வந்தது. பின்னர் சிற்சில கதைகள் கட்டப்பட்டு கணபதியை நாம் வீட்டுக்குள் கொண்டுவந்துவிட்டாலும், இப்போதும் பெரும்பாலானோர் வீட்டு மதிற்சுவரிலும், ஊர் எல்லையிலும் மட்டுமே வைத்து வழிபட்டு வருகின்றனர்.
அப்படி கணபதிக்கு சில கதைகள் கட்டப்பட்டு வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டதை போல, மதுரைவீரன், பொம்மி, கருப்பண்ணசாமி வகையறாக்களுக்கும் ஏதேனும் கதைகள் கட்டி கோவிலுக்குள் அனுமதித்தால் நன்றாக இருந்திருக்குமே என நான் பலமுறை நினைத்ததுண்டு.

மக்களில் சிலரே கோவிலுக்குள் நுழைய முடியாது என்கிற நிலையில், அவர்களை ஆலைய பிரவேசம் செய்த மரியாதைக்குரிய பெரியாரின் மண்ணிலிருந்துகொண்டு, மனிதரிலும், கடவுளரிலும் வேற்றுமை விதைக்கவும் சிலரால் முடிந்திருக்கிறது என்பதே ஒரு ஆச்சரியம் தான். இன்றைக்கு கூட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்பதை போராட்டமாக முன்னெடுத்து செல்லப்படுவதாக செய்திகள் படித்தேன். ஆலைய பிரவேசமோ, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதோ இறைவன் முன்னால் அனைவரும் சமம் என காட்டுவதற்கே அன்றி, வேறு பிடிவாதம் இல்லை என்பதை நான் அறிவேன். ஆனாலும், கலைஞர் அவர்களே பல்லாண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருந்தும் கூட, ஆலையங்களில் பக்தர்களிடம் கட்டண அடிப்படையில் காட்டப்படும் பாகுபாட்டை களைவதற்கு எந்த சிறு முயற்சியும் எடுக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தமுண்டு.

கேரள கோவில்களில் ஒரே வரிசை தான். கடவுளை தொழ வந்தவர் ‘யாராகிலும்’ அவர்கள் பக்தர்கள் என்கிற ஒரே வரையறையில் வைத்தே பார்க்கப்படுகிறார்கள். அத்தகைய மனநிலையும், பண்பாடும் தமிழகத்தில் வர வாய்ப்பிருப்பதாக தோன்றவில்லை. தமிழக மக்களின் மனநிலையை மிக பண்பட்டதாக, முற்போக்காக மாற்றியதில் பெரும் பங்கு வகித்த கலைஞர் கூட இது விஷயத்தில் தோற்றுப்போனதாகவே கருதுகிறேன்.

என்னை பொறுத்தவரை, எந்த கோவிலென்றாலும் செல்வேன், மனம் உருகி பிரார்த்திப்பேன், என் சங்கடங்கள், வேண்டுதல்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு வருவேன். அவ்வளவு தான் எனக்கும் கடவுளுக்குமான உறவு. அதற்கான பரிகாரம், பூஜை, மந்திரம், மாந்திரீகம், ஸ்தோத்திரம், மண்சோறு, அலகு, மொட்டை இத்யாதி இத்யாதி போன்றவற்றை நான் அங்கீகரிப்பதில்லை. அதை ஆமோதிப்பதுமில்லை. முதலில் சொன்னது பக்தி. பின்னர் சொன்னது மூட நம்பிக்கை. இதையெல்லாம் செய்தால் தான் அது நடக்கும் என்றால் அதன் பெயர் வியாபாரம். நீ இதை செய்யாததால் உனக்கு கஷ்டம் என்றால் அது சிறுபிள்ளை தனம். கடவுளை இப்படியெல்லாம் நிர்பந்தங்கள் கொடுப்பவர் என வரையறுப்பதே கடவுளை இழிவுபடுத்தும் செயல் என கருதுகிறேன். இறைவன் அன்பு வடிவானவர். இறைவன் யாரையும் பாதுகாப்பதுமில்லை, யாரையும் அழிப்பதுமில்லை, யாரையும் துன்புறுத்துவதுமில்லை. ஆனால், நமது உள்ள குமுறல்களை அழுது தீர்க்க, யாரிடமும் சொல்ல முடியாதவற்றை கேட்டுக்கொண்டிருக்க, மொத்த மன பாரத்தையும் இறக்கி வைக்க அங்காங்கே வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பெயர்கள் அமர்ந்திருக்கிறார். என்னை பொறுத்தவரை கடவுள் அவ்வளவு தான்.

இறைவன் அதிசயங்களை செய்வார் எனில் அவனது வாசலில் அனுதினமும் யாசித்துக்கொண்டிருக்கும் யாசகர்களுக்கு என்றோ நல்லவழி காட்டி இருப்பார். எனவே அப்படியான அதிசய சக்தியாக எல்லாம் என்னால் அவரை காண முடியவில்லை. எதிர்த்து பேசாத, எதிர்த்து கேள்வி கேட்காத ஒரு தோழனை போலவும், எங்கிருந்தோ எனது நியாயமான ஆசைகளையும், தேவைகளையும் நிறைவேற்றுபவனாகவும், எனது துயரங்களை மெல்லமெல்ல துடைத்தெறியும் வலிமையை தருபவனாகவும் நானறியாமல் எனக்குள்ளே இயங்கிக்கொண்டிருப்பதாக மட்டுமே உணர்கிறேன்.

உன் ஆசைகளை கட. உனக்கு உள்ளே இருப்பான் இறைவன் என்கிற கட+உள் விளக்கத்தை விட, உன் ஆசைகளை அதிகரித்துக்கொண்டே இரு.. அதை அடையும் வழியை அவன் காட்டுவான் என்கிற தத்துவம் தான் எனக்கு இன்று வரை பயனளித்துக்கொண்டே இருக்கிறது. அவற்றை அடைந்ததற்கு நான் மட்டுமே காரணம் என ஒருபோதும் நான் நினைக்கவில்லை.

Saturday, June 22, 2013

சேது சமுத்திர போர் – நமது கடமை!


சேது சமுத்திர திட்டம் தமிழகத்துக்கு தேவையில்லை என்றொரு அதிர்ச்சியான அஃபிடவிட்டை தமிழக அரசு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ததிலிருந்தே இந்த பதிவை எழுத நினைத்திருந்தேன். ஆனால் திட்டம் குறித்து முழுமையாக அறிந்து தெளிவதில் மிகுந்த கால நேர தாமதமாகிவிட்டது.

சேது சமுத்திர திட்டம் என்பது ஒன்றரை நூற்றாண்டு கனவு. இதை முழுமையாகவும் விரிவாகவும் பதிவாக எழுதுவது இயலாத காரியம். ஏற்கனவே பலரும் இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் எழுதி தள்ளிவிட்டார்கள். எனவே இப்போதைய சூழலை மட்டும் அலசினால் போதுமானதாக இருக்கும் என கருதுகிறேன்.

இந்த திட்டத்துக்கான முதல் விதையை விதைத்தவர் ஆங்கிலேய அரசின் இளம் பொறியாளர் மேஜர் ஜேம்ஸ் ரென்னல் அவர்கள். 18ம் நூற்றாண்டிலேயே அவர் இந்த திட்டம் பற்றி சொன்னாலும், அப்போது பெரிதாக எடுபடாமல் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு பின் 1838ல் தான் திட்டத்துக்கான முதல் தோண்டுதல் தொடங்கியது. அப்போதும் அது அதிக முக்கியத்துவம் பெறாமல் நிறுத்தப்பட்டுவிட்டது. பின்னர் 1860லிருந்து திரு. ஆல்ஃபிரட் டண்டாஸ் டெய்லர் அவர்கள் மூலமாக தான் திட்டம் தீவிரமானது.

இந்தியா சுதந்திரம் பெற்றதும் 1956ல் முதல் குழு அமைக்கப்பட்டது. திராவிட பேரியக்கத்தின் மிகப்பெரிய கனவான சேது திட்டம், திமுக ஆட்சி பொறுப்பேற்றபோதெல்லாம் வலியுறுத்தப்பட்டு, பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு, இறுதியாக 2005, ஜூலை 2ல் பிரதமர் திரு.மன்மோஹன் சிங் அவர்களால் துவங்கப்பட்டது.

இந்த வரலாற்று சுருக்கத்திலிருந்தே ‘வைகோவின் கனவு திட்டம்’ என்கிற வாக்கியத்தின் உண்மை தன்மையை உணரலாம். ‘சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ என பாரதி பாடிய போது வைகோ இல்லை. திமுக தீவிரமாக சேது திட்டம் பற்றி பேசிய 1950களில் வைகோ இல்லை. 1970களில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் முன்னெடுத்து சென்ற போராட்டங்களில் வைகோ இல்லை. ஆதித்தனாருக்கு பின்னர் திமுகவின் பிரதிநிதியாக சேதுசமுத்திர திட்ட விவரணைகளை கையாண்ட வகையில் தான் வைகோ இந்த விஷயத்துக்குள் வருகிறார். இன்றைக்கு சேது சமுத்திர திட்டம் தனது கனவு திட்டம் என தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார். இப்படி சம்மந்தமேயில்லாத பலரும் இந்த திட்டத்துக்கான கிரெடிட் எடுத்துக்கொள்ள துடிக்கும் அளவுக்கு அப்படியென்ன அது நல்ல திட்டம்?

மன்னார் வளைகுடா பகுதியில் கடல் இருந்தாலும் பெரும் கப்பல்கள் அதில் பயணிக்க முடியாது. காரணம் 36 கிலோமீட்டருக்குள் எதிரும் புதிருமாக இந்திய இலங்கை கரைகள் இருப்பதால், அலைகள் இருவேறு திசைகளில் பயணிப்பதால், கடல்நடுவே பல பல மணல்திட்டுக்கள் இயற்கையாகவே உருவாகியிருக்கின்றன. இவை ராமபிரானால் கட்டப்பட்டவை என ஒரு சாராரும், இயற்கையாக உருவானவை என இன்னொரு சாராரும் இன்னமும் வாதாடிக்கொண்டிருக்கின்றனர். ஆதம்ஸ் பாலம் என பெயரிடப்பட்ட இந்த பகுதிக்கு, அவசரம் அவசரமாக ராமர் பாலம் என பெயரிட்டு, மத ரீதியான உணர்வுகளின் பாதுகாப்போடு அந்த பகுதியை பாதுகாக்க மத அமைப்புக்கள் முனைகின்றன.

மற்றொரு புறம், தென் கோடி தமிழகம் தொழில் வளர்ச்சியில் பின் தங்கியிருப்பதால் அதை ஈடுகட்ட தூத்துக்குடி துறைமுகத்தையும், சென்னை துறைமுகத்தையும் நேரடியாக இணைக்கும் நோக்கில், இந்த மணல் திட்டுக்களை கொஞ்சம் தகர்த்து ஆழப்படுத்தி பெரிய கப்பல்களை இயக்க முடிந்தால், அதன் அடிப்படையில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, கடலூர் மாவட்ட கடற்புறங்களில் பல சிறு துறைமுகங்களை ஏற்படுத்தி கடல் வாணிபத்தை பெருக்க முடியும் எனவும், தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்த இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையேயான கடல் எல்லையை நம் போர்க்கப்பல்கள் மூலம் பாதுகாக்க முடியும் (இப்போது வெறும் ரோந்து படகுகள் மட்டும் தான்) எனவும் உணர்ந்து, சேதுக்கால்வாய் திட்டத்துக்காக திராவிட இயக்கங்கள் போராடிவருகின்றன.

இந்த திட்டத்தின் மூலம், இலங்கையை சுற்றி சென்னை வர வேண்டிய அவசியம் கப்பல்களுக்கு இருக்காது. மேலும் மேலே சொன்னபடி பல்வேறு சிறு துறைமுகங்களை மாநிலம் முழுதும் ஏற்படுத்துகையில் உட்புற தமிழக தொழிற்சாலைகளிலிருந்து கடல்வணிகம் செய்வது எளிமையாகும். துறைமுகம் சார்ந்த ஊர்களில் மறைமுக வேலைவாய்ப்பு பெருகும். அந்த வகையில் தென் தமிழகம் வளர்ச்சிபெறும் என்பதெல்லாம் இந்த திட்டத்தின் தமிழகம் சார்ந்த பலன்கள். கடற்பாதுகாப்பு, இந்திய பெருங்கடலின் முழுமையான கட்டுப்பாடு ஆகியவை இந்திய தேசம் சார்ந்த பலன்கள்.

அதனால் தான் இந்த திட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த திட்டத்தை மறைமுகமாக எதிர்க்கும் இலங்கை, இந்தியாவிலுள்ள பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க போன்ற தங்கள் நண்பர்கள் மூலமாக இந்த திட்டத்துக்கான எதிர்ப்பை பல வகையிலும் முன்வைத்துக்கொண்டிருக்கிறது.

இலங்கை இந்த திட்டத்தை விரும்பாததற்கு வணிக / அரசியல் காரணங்கள் இருக்கிறது.


(கொழும்பு சர்வதேச சரக்கு பெட்டக முனையம்)
 

தற்போது சர்வதேச கண்டெயினர் டிரான்ஷிப்மெண்ட் கொழும்புவில் இருக்கிறது. சென்னை, தூத்துக்குடி, கொச்சி, மங்களூர் போன்ற இந்திய துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்டகங்கள் கூட கொழும்பு சென்று பின் அங்கிருந்து தான் பயணிக்கிறது. சேது கால்வாய் வருமாயின், சென்னையிலிருந்து புறப்படும் கப்பல்கள் கொழும்பு வராமலேயே ஆப்பிரிக்க, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு பயணிக்கும். இன்றைய தேதியில் மிக அதிக அளவில் சரக்கு கையாளும் சென்னை துறைமுகத்தின் வாயிலாக கொழும்பு பெற்று வரும் வருமானம் இதனால் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

சீனா சமீபத்தில் வெளியிட்ட ‘புளூ புக்’கில் இந்திய பெருங்கடலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியிருப்பதுடன், இலங்கையின் சில துறைமுகங்களை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வது, சீன கடற்படை தளம் அமைப்பது ஆகியன மூலம் இந்தியாவுக்கான மற்றுமொரு செக் வைக்கும் நடவடிக்கையிலும் ராஜீய ரீதியாக இலங்கை முயல்கிறது.

இந்த இரண்டுமே இந்தியாவுக்கு பாதகமானவை. அதனால் தான் பெரும் முதலீடு செய்து இந்த திட்டத்தை நிறைவேற்ற இந்தியா முன்வந்தது. சீனா, காங்கேசன் துறையில் மையம் கொள்ளுமாயின், இந்திய போர் கப்பல்கள் பாக் ஜலசந்தி வழியாக அனுதினமும் பாதுகாப்பு ரோந்து சென்றே ஆகவேண்டும். இல்லாவிட்டால், சென்னைக்கும் பெங்களூருக்கும் எந்த நிமிடமும் ஆபத்து தான். இந்திய பெருங்கடலின் மிக வலுவான பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யவேண்டும் எனில் பாக் ஜலசந்தியில் இந்திய போர் கப்பல்கள் பயணித்தாக வேண்டும்.

எனவே வணிகம், அரசியல் ஆகிய நோக்கில் இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு சேது திட்டத்தை முடக்குவதும், வணிகம், பாதுகாப்பு ஆகிய நோக்கில் இந்தியா இந்த திட்டத்தை முன்னெடுப்பதும் ஏன் என்பது அதன் முக்கியத்துவத்தோடு எளிதில் நமக்கு விளங்கும்.

பா.ஜ.க இந்த திட்டத்தை முடக்க ராமரை துணைக்கழைத்து மத ரீதியான உணர்வுகளை தூண்டிவிட்டதை பா.ஜ.கவின் தலைவராக இருந்து இந்த திட்டத்துக்கான முதல் கட்ட ஒப்புதலை அளித்த முன்னாள் பாரத பிரதமர் உயர்திரு. அட்டல் பிஹாரி வாஜ்பாய் அவர்களே விரும்பவில்லை. எனினும் அடிப்படையற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மூலமாக திட்டத்தை முடக்க எடுத்த முயற்சிகள் ஓரளவு வெற்றிபெறவே செய்தது.


(ஆராயப்பட்ட கால்வாய் பாதைகள்)

உச்சநீதிமன்ற மூலமாக வழக்கு தொடுக்கப்பட்டு முடக்கப்பட்டதன் காரணமாக மாற்றுவழிகள் சிந்திக்கப்பட்டன. மொத்தம் 6 வழிகள் ஆராயப்பட்டு, ஆடம்ஸ் பாலத்தின் வடக்கிலும், பாம்பன் தீவின் தென்கிழக்கிலுமாக இரண்டு அகழ்வுகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு பச்சோரி கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில் பொருளாதார ரீதியாகவும், சுற்றுசூழல் நோக்கிலும் இந்த திட்டம் செயற்படுத்தத்தக்கதல்ல என ஒரு குண்டை தூக்கி போட்டதுடன், மொத்த திட்டமும் முடிவுக்கு வந்துவிட்டது.

இது தொடர்பான வழக்கில் தான் மாண்புமிகு புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான தமிழக அரசு, எங்களுக்கு இந்த திட்டம் தேவையில்லை என தன் பங்குக்கு ஒரு அஃபிடவிட்டை தாக்கல் செய்திருக்கிறது.

தனது கனவு திட்டம் என சொந்தம் கொண்டாடிய ‘புரட்சி புயல்’ அண்ணன் வைகோ அவர்களும், அன்பு சகோதரியின் ஆட்சேபத்தை எதிர்க்க துணியாமல் முடங்கிவிட்டார்.

தமிழகத்தின் இப்போதைய மிக தலையாய பிரச்சனை சேது சமுத்திர திட்டம் தான். அதனால் தான், கடந்த ஜூன் 3ம் தேதி சென்னையில் தனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதை கோடிட்டு காட்டிய திமுக தலைவர் கலைஞர் அவர்கள், அதற்கான போராட்டத்தை ‘சேது சமுத்திர போர்’ என்றே முழங்கினார். நம்மையும், நம் மாநிலத்தையும் காப்பதற்கான போர்.

தமிழர்களாகிய நாம், தமிழகத்தின் நலனை கருதும் அக்கறை இருப்பின் இந்த திட்டத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவேண்டும். மக்கள் பணத்தை செலவழித்து கிட்டத்தட்ட முக்கால் பாக திட்டம் முடிந்துவிட்ட நிலையில் அதை முடக்கி இலங்கைக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் எதிராகவும் செயல்படும் நபர்களை அடையாளம் கண்டு கொள்ளவேண்டும். இந்த திட்டத்துக்கு எதிராக, தமிழக வளர்ச்சிக்கு எதிராக, தமிழக மக்களின் நலனுக்கு எதிராக யாரெல்லாம் செயல்படுகிறார்கள் என கண்டறிந்து, கற்றுணர்ந்து அவர்களுக்கான தக்க தண்டனையை தங்கள் வாக்குகளால் வழங்கவேண்டும்.

தமிழர்கள் சுய சிந்தனையும், பகுத்தறியும் திறனும் பெற்றவர்கள் என்பதால், இந்த திட்டம் குறித்து சுயமாகவே சிந்தித்து, அரசியலார் அரசியலுக்காக சொல்லும் புனை கதைகளை புரிந்து நடந்துகொள்வார்களா இல்லையா என்பது பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும் தானே?
 
மேலும் காண்க:
 
 
 

Wednesday, June 27, 2012

JailBharo by திமுக





முத்தமிழ் வித்தகர், தமிழின தலைவர், செம்மொழி வேந்தர், வாழும் வள்ளுவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்தின் போர்ப்படை தளபதிகளின் புதிய முழக்கம் இது தான்..

ஜெயில் பாரோ!

அப்படியென்றால் என்னவென்று உங்களுக்கு புரியலையா? எனில், நீங்கள் இந்த உலகத்திலேயே இல்லை. ஏனெனில், ஜெயில்பாரோ ங்கறது உலகளவில் பிரபலமான வார்த்தையாம். இதை சொன்னவர்கள் திமுக கழக முன்னோடிகளில் சிலர் தான்.

சரி, அது என்ன ஜெயில் பாரோ?




அதிமுகவின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து திமுக வருகிற ஜூலை 4ம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக இணையதளங்களில் விளக்கம் கொடுத்த சில கழக முன்னோடிகளின் முத்திரை முழக்கம் தான் ஜெயில் பாரோ என்கிற முழக்கம். ஏன் ஜெயில்பாரோ என்கிற பெயர் எனும் கேள்விக்கான அவர்களது விளக்கம் என்னவென்றால், உலக அளவில்(!) பிரபலமான மொழியான ஹிந்தி மொழியில் சொன்னால் தான் எல்லாவருக்கும் புரியும் என்பது. அது மட்டுமல்ல, இணைய வெளிகளில் உலகெங்குமுள்ள ‘தமிழர்கள்’ தெரிந்துகொள்ள வசதியாக தான் இந்த முழக்கம் பயன்படுத்தப்படுவதாக சொல்லி இருக்கிறார்கள். ( திமுக பேச்சாளர்களில் ஒருவரான திருமதி. குஷ்பு அவர்களும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி  சட்டமன்ற தொகுதியின் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ. அன்பழகன் அவர்களும் பங்கெடுத்த அந்த விவாதத்தின் சில துளிகள் இங்கே ( Link 1 & Link 2 ) தொகுக்கப்பட்டு இருக்கிறது. திரு. அன்பழகன் அவர்கள், திமுகவின் ஆரம்பகால கழக முன்னோடியும் தீவிர இயக்க போராளியுமான திரு பழக்கடை ஜெயராமனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது)



அந்த விவாதத்தில் இன்னொரு அதிர்ச்சியான விஷயமும் வெளிப்பட்டது. திமுகவின் பிரச்சார படையின் முக்கியமானவரான திருமதி குஷ்பு அவர்கள் "தமிழ் எனும் சாதீய (!) நோக்கத்துடனும் குறுகிய மனப்பான்மையுடனும் இந்தியாவை துண்டாடாமல் ஹிந்தியை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்" எனவும் "தமிழக பள்ளிகளில் ஹிந்தி சொல்லித்தருவதில்லையா? பின் 'ஜெயில் பாரோ'வை புரிந்துகொள்ள என்ன கஷ்டம்" எனவும் கேட்டிருக்கிறார். இது மிக பெரிய விவாதத்துக்குரிய விஷயம். திமுகவின் கொள்கைளை அறிந்த முன்னணி தலைவர்கள் யாரேனும் குஷ்புவின் இந்த கருத்தை அறிந்தால், கழகத்தின் கொள்கைகளுக்கு மாறாக நடந்துகொண்டதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு இருப்பதால், அது பற்றி நாம் இங்கே விரிவாக விவாதிக்காமல் இருப்போமாக!


திமுகவின் அடிப்படை கொள்கை என்னவென்றே தெரியாத இதுபோன்ற கழக முன்னணியினரை காணும்போதெல்லாம், எனக்கு திமுக தலைமை மீது தான் கோபம் வருகிறது. முன்பெல்லாம், கழக பேச்சாளர்களுக்கான பயிற்சி பட்டறை, பொதுமக்களுக்காக கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் எல்லாம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். இப்போது என்ன காரணத்தாலோ அதெல்லாம் நிறுத்தப்பட்டு விட்டதால், கழகத்தினருக்கே கூட கொள்கை மறந்துபோய்விட்டதென தோன்றுகிறது.

இந்தி திணிப்பு எதிர்ப்பை முன்னின்று நடத்தி, தாய்மொழி காக்க உயிர்தியாகங்கள் செய்த ஒரு இயக்கத்தின் போர்பிரகடனம் தாய்மொழியில் இல்லை என்கிற வருத்தத்தை விட, இந்தியில் இருக்கிறதே என்கிற அங்கலாய்ப்பு தான் பரவலாக காணமுடிகிறது.

சரி, எதற்காக இந்த போராட்டம்?


அதிமுக அரசின் அராஜக, அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து. அப்படியென்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, சமச்சீர் கல்விக்கு எதிரான நடவடிக்கை, வாட் வரி உயர்வு, ரேஷனில் மண்ணெண்ணெய் குறைப்பு போன்ற பல பல மக்கள் விரோத நடவடிக்கைகளின்போதோ, சட்டம் ஒழுந்து சீர்கெட்டு தினசரி கொலை, கொள்ளை, கற்பழிப்பு, காவல்நிலைய மரணங்கள், ஆள் கடத்தல் என மக்கள் அஞ்சி அஞ்சி வாழ்கின்ற வேளையிலோ பெரும் போராட்டம் நடத்தியிருக்கலாமே. ஒரு கண்டன ஆர்பாட்டம் கூட இல்லையே. வெறும் அறிக்கைகளும், சில பொதுக்கூட்டங்களும் மட்டும் தானே நடைபெற்றன? இப்போது என்ன திடீரென்று சிறை நிரப்பும் அளவுக்கு போராட்டம்?

இந்த போராட்டம் அறிவித்ததற்கான அடிப்படை விஷயமே, திமுக கழகத்தின் முன்னோடிகள் பலர் கடுமையான வழக்குகளின் பேரில் சிறை வைக்கப்பட்டது தான். அவர்கள் மீதெல்லாம் பதியப்பட்டவை பொய்வழக்கா, நிஜ வழக்கா, கைது செய்யப்பட்டவர்கள் எல்லாவருமே அப்பாவிகளா, அல்லது குற்ற முகாந்திரம் உள்ளவர்களா என்கிற பெரும் விவாதத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால், பாரம்பரியமாகவே சட்டத்தை மதித்து செயல்பட்டுவந்த திமுக, எப்போதும் சொல்லும் அதே வழக்கமான கருத்தான, நடவடிக்கைகளை சட்டப்படி சந்தித்து இருக்கலாம். “கழக முன்னோடிகள் தான் கழகத்தை காக்கிறார்கள், கழக முன்னோடிகளை காப்பது தான் மக்களுக்கான போராட்டம்” என இணைய தளத்தில் கழக முன்னோடிகளில் சிலரே பேசி வருவது, மக்களிடையே திமுக மீது எதிர்மறை கருத்தாக்கத்தை தான் உருவாக்கும் என்பதை கூடவா திமுக அறியாமல் இருக்கிறது?

அதே இணைய விவாதத்தில், சொல்லப்பட்டு இருக்கும் இன்னொரு கருத்து, மக்கள் படும் துன்பங்களை மனதில் வைத்து, அதற்கு காரணமான அதிமுக அரசை எதிர்த்து தான் இந்த போராட்டம், என்பது. மக்கள் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் துன்பங்களை உணர்ந்து அதற்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கமாக திமுக இன்னமும் இருப்பதை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன். ஏனெனில், தமிழகத்தின் அதிகாரப்பூர்வ எதிர்கட்சியான தேமுதிக எப்போதும் போல சத்தமின்றி அமைதிகாத்துக்கொண்டிருக்கையில் மக்களுக்கான ஒரே ஆறுதலாக எப்போதுமே திமுக தான் இருந்து வருகிறது.



ஆனால் மக்களின் இன்றைய துன்பங்களுக்கு மாநிலத்திலுள்ள அதிமுக அரசு மட்டும் தான் காரணமா என்ன? திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எந்தவிதத்திலும் மக்களை துன்புறுத்தவில்லையா? விலைவாசி உயர்வு, பணவீக்கம், வளர்ச்சிவிகித குறைபாடு, பெட்ரோல் விலை உயர்வு, கேஸ் தட்டுப்பாடு, உரவிலை உயர்வு மீனவர்மீதான தாக்குதல்/உயிரிழப்பு போன்றவை எதுவுமே மக்களை பாதிக்கவில்லையா? அப்படியென்றால் அதையெல்லாம் எதிர்த்து ஏன் திமுக போராட முன்வரவில்லை? அமைச்சரவை கூட்டத்தில் கூட ஏன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மக்கள் துன்பப்படுகிறார்கள் என  இப்போது வருந்தும் இதே திமுகவின் அமைச்சர் தானே மத்திய அரசின் உரத்துறை அமைச்சராக இருக்கிறார்? விவசாயிகளை பாதிக்கும் விலை உயர்வை நான் அங்கீகரிக்கமாட்டேன் என ஏன் மறுக்கவில்லை. மக்கள் படும் துன்பங்களுக்காக நாங்கள் சிறை செல்கிறோம் என முழங்குபவர்கள், மக்களை துன்புறுத்தும் அரசுடன் எங்களுக்கு எந்த உடன்பாடும் இல்லை என ஏன் இன்னமும் வெளியேறவில்லை? இதுபோன்ற விடை தெரியாத கேள்விகள் பல பல.. ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை நடைபெறும் ஜெயில்பாரோ போராட்ட விளக்க பொதுக்கூட்டங்களிலாவது இக்கேள்விகளுக்கு பதில்கிடைக்கும் என என்னை போலவே நீங்களும் பேராசை கொண்டால், நாம் இருவரும் ஏமாளிகளே!

சிறை நிரப்புவதால் என்ன பயன்? அது மட்டும் யாருக்கும் இது வரை தெரியவில்லை. மக்களிடம் சென்று தொடர் பொதுக்கூட்டங்கள் நடத்தி, அதிமுக அரசின் தவறான நடவடிக்கைகள், மறைமுகமாக மக்களை துன்புறுத்தும் நடவடிக்கைகள் பற்றி விளக்கவுரை ஆற்றி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையெல்லாம் விட்டுவிட்டு நேரடியாக சிறைநிரப்பும் போராட்டம் என்பது நெருடலாக இருக்கிறது. சரியான தருணங்களில் எல்லாம் தவறான முடிவுகளை எடுப்பவர் கலைஞர் என்கிற கருத்து மெல்ல மெல்ல இப்போது வலுப்பட்டுக்கொண்டு வருவதை தவிர்க்கமுடியவில்லை.

முதலில், திமுக தனது கழக முன்னணியினருக்கு போதிய பயிற்சி கொடுத்து, கொள்கை விளக்க குறிப்புக்களை அறியசெய்யுங்கள். அரசு, எந்த குற்றப்பின்னணியும் இல்லாத கழகத்தவரை பழிவாங்கும் நோக்கத்துடன் கைது செய்தால் அதை எதிர்த்து போராடுங்கள். தனிப்பட்டமுறையில் குற்றங்கள் மீதான வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்ளுங்கள். கழகத்தவர்களை காப்பதற்காக, ‘மக்களுக்கான போராட்டம்’ என  பெயரிட்டு போராடுவது போன்றவற்றை தவிருங்கள். அரசின் தவறான நடவடிக்கைகளை பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் மக்களிடம் தொடர்கூட்டங்கள் மூலம் எடுத்து சொல்லி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலாவது அதிமுகவுக்கு சரியான பாடம் புகட்டசெய்யுங்கள்.
இதையெல்லாம் விடுத்து ‘ஜெயில் பாரோ’ நடத்துவது என்னை பொறுத்தவரை அனாவசியமானது மட்டும் அல்ல, திமுக மீதான நன்மதிப்பை கூட குறைத்துவிடக்கூடும் என நினைக்கிறேன்.

Printfriendly