Wednesday, July 17, 2013

நானும் கடவுளும்!

கடவுள் குறித்த எனது கருத்துக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது சொல்லிவந்தாலும், அது குறித்த விரிவான கட்டுரை எழுதுவேன் என்றெல்லாம் இன்றுவரை நான் எண்ணியதில்லை. எனினும் அப்படியான ஒரு சூழல் வந்து சேர்ந்ததை எந்த கணக்கில் வைப்பது?

எல்லா குழந்தைகளையும் போல எனக்கும் இறை நம்பிக்கை ஊட்டப்பட்டபடி தான் வாழ்க்கை தொடங்கியது. எனது அப்பா, முன்னாள் தீவிரமான திமுக காரர். எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியேறியபோது அவருடன் வெளியேறி அதிமுகவில் கடைசி வரை இருந்து வந்தவர். அதனால் அவர் எனக்கு பகுத்தறிவு சிந்தனைகளையும், பக்தி மார்க்கத்தையும் சரிவிகிதத்தில் சொல்லி தந்திருந்தார்.

சிறுவயதில் இருந்தே எனது இஷ்ட தெய்வம் முருகன் தான். எப்போதுமே கொஞ்சம் உரிமை எடுத்துக்கொள்வது முருகனிடம் தான். தமிழகத்திலுள்ள ஆறு படைவீடுகளுக்கும் சென்று தரிசித்திருக்கிறேன். என் அப்பா, எல்லா வருஷமும் ராணி முத்து காலண்டர் வாங்குவதே அந்த முருகனின் அழகுக்கு தான். எனினும் எல்லா தெய்வங்களிடமும் எனக்கு பிரியம் இருக்கிறது. இஸ்லாமிய, கிருத்தவ நண்பர்கள் அறிமுகத்தால் அவர்களது வழிபாட்டு தலங்களுக்கும் நிறைய சென்றிருக்கிறேன். வருடத்துக்கொருமுறையேனும் வேளாங்கண்ணி சென்று வருவது ஒரு வழக்கம். சென்னையில் சமயம் கிடைக்கும்போதெல்லாம் பெசண்ட் நகர் சர்ச்சிலோ, லஸ் சர்ச்சிலோ நான் இருப்பேன். தெய்வங்களில் நான் பாகுபாடு பார்ப்பது கிடையாது. தெய்வம் தெய்வம் தான். தெய்வம் இருக்கிறதா எனக்கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால், தெய்வசெயல்கள் பலவற்றை நான் நிறைய என் வாழ்வில் உணர்ந்திருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயம்.

கடவுள் விஷயத்தில் நான் ஒரு வகையில் கலைஞர் கட்சி. கடவுளை மறுக்கவில்லை. ஆனால் இது தான் கடவுள், இப்படி தான் வழிபடவேண்டும், இவர்களுக்கு மட்டும் தான் உரிமை, இன்னின்ன சடங்குகள் செய்யவேண்டும் போன்ற ஆதிக்கதன்மையை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். பக்தி என்பது வேறு, மூட நம்பிக்கை என்பது வேறு. எந்த கடவுளும், எந்த விதமான சாங்கியத்தையும் செய்ய சொல்லியதாக வரலாறில்லை. நாமாக ஒவ்வொரு காலகட்டத்தில் ஏற்படுத்திக்கொண்ட வழக்கங்கள் தான் அவை என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு.

பத்தாம் வகுப்பில் ஒரு செய்யுள் வரும்.

“அல்லா என்பார் சிலபேர்கள்; அரன் அரி என்பார் சிலபேர்கள்

வல்லான் அவன்பர மண்டலத்தே வாழும் தெய்வம் என்பார்கள்

சொல்லால் விளங்கா நிர்வாணம் என்றும் சிலபேர் சொல்வார்கள்

எல்லாம் இப்படி பலபேசும் ஏதோ ஒரு பொருள் இருக்கின்றதே”

இந்த செய்யுள் தான் எனது நிலைப்பாட்டை ஓரளவுக்கு விளக்கக்கூடியது என நினைக்கிறேன்.

தூய பக்தி, அன்பு, உள்ளார்ந்த வேண்டுதல், பிரார்த்தனை ஆகியவை மிக அற்புதங்களை நிகழ்த்தி காட்டியதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அதனால் கடவுள் இல்லை என ஒருபோதும் சொல்லமாட்டேன். ஆனால், அது தொடர்பான மூட பழக்க வழக்கங்களை, சடங்குகளை, சம்பிரதாயங்களை, கட்டுப்பாடுகளை, ஆதிக்க அடக்குமுறைகளை, வருணாசிரம வேறுபாடுகளை, வேதம் சொன்னதாக சொல்லி சொல்லி செய்யப்படும் புனை கற்பனை கதைகளை நான் ஏற்பதில்லை. புராணங்களை கூட அதன் கதை சொல்லும் திறனுக்காக தான் வாசித்தேன். ஆனால் அதை நான் ஒருபோதும் நம்பியதில்லை.

ராமாயணத்தை நம்பவேண்டும் என்றால், பேசும் கழுகு, பறக்கும் புஷ்பகவிமானம், தாவும் குரங்கு கூட்டம், மாய மான் என பலவற்றை நான் நம்பவேண்டி இருக்கும். அது இயலாத காரியம். கலைஞர் அவர்கள் 1970களில் காரைக்குடி கம்பன் கழகத்தில் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் ராமாயண சொற்பொழிவு நடத்தியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவர் கம்பனின் தமிழை வியந்தோதினார். இந்த ஒப்பீட்டுக்காக அனைத்து வடிவ, அனைத்து மொழி ராமாயணங்களையும் முழுமையாக கற்றவர். இன்றைய தேதியில் எல்லா வித ராமாயணத்தையும் அறிந்த ஒருவர் அவராக தான் இருக்க முடியும். புராணத்தை புராணம் என படிப்பதோடு சரி. அதை நம்பி செயல்படுவதில்லை. அதே கொள்கை தான் கிட்டத்தட்ட எனக்கும்.

என் அப்பா சொல்வார். “வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனிதர்களின் தகவல்களினால் பிரித்தாளப்பட்டாலும், கிருஷ்ணர், இயேசு, நபிகள் நாயகம் ஆகியோரின் வாழ்க்கையில் பல ஒற்றுமை இருக்க காணலாம். மூவருமே ஒருவராக இருக்க வாய்ப்புண்டு. அதை ஒவ்வொருவர் ஒவ்வொரு பெயரிட்டு ஒவ்வொரு விதமாக சொல்லியிருக்கவும் வாய்ப்புண்டு” என்பார். மூவரின் வரலாறையும் படித்த பின், ஓரளவுக்கு அவர் சொன்னது சரியாக இருக்கக்கூடும் என்றே நான் நினைக்கிறேன். மூவரையும் ஒரு மன்னர் கொல்ல துரத்துகிறார், மூவரது சொற்பொழிவின் சாராம்சமும் ஒன்றே, மூவருக்கும் சீடர்கள், ஒருவர் மாட்டு தொழுவத்திலும், ஒருவர் ஆட்டிடையிலும், ஒருவர் ஒட்டக பட்டியிலும் பிறந்ததாக சொல்லப்படுகிறது. எல்லாம் ஒருமாதிரி கிட்டத்தட்ட ஒத்து வருவது போல நானே கற்பனை செய்துகொள்வேன். எம்.ஜி.ஆரை சிலர் காங்கிரஸ் காரர் என்றும், சிலர் திமுக காரர் என்றும், சிலர் அதிமுக காரர் என்றும் வெவ்வேறு கால கட்டத்தை ஆதாரம் காட்டி சொல்வதில்லையா? அது போல என நானே நினைத்துக்கொள்வேன்.

கர்த்தர் தன்னை கடவுள் என சொல்லிக்கொள்வதில்லை. ஜெஹோவா தான் கடவுள், அவர் உருவமற்றவர், நான் அவரது தூதன் மட்டுமே என்கிறார். இதையே தான் நபிகள் நாயகம் (சல்) சொல்கிறார். இறைவன் உருவமற்றவன். நான் இறையோதும் திருத்தூதன் என்கிறார். நாமும் கூட, சக்தி ஜோதிவடிவானவள், உருவமற்றவள் என்கிறோம். இன்னும் சொல்லப்போனால், உருவமற்ற கடவுளின் குறியீடாக மூன்று மதத்தவர்களுமே மூன்றாம் பிறையை தான் வைத்திருக்கிறார்கள் என்பது. எனவே எனக்கு பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

நான் நிறைய பயணிப்பேன். அப்படியான பயணங்களில் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயங்கள் நிறைய. அதில் குறிப்பிடத்தக்கது, கோவிலுக்குள் அனுமதியில்லாத தெய்வங்கள். இன்னும் சொல்லப்போனால், தமிழக ஊரகப்பகுதிகளில் தான் நான் தெய்வங்களிலும் ஜாதி பிரித்து கோவிலுக்கு உள்ளிருக்கக்கூடிய சாமி, வெளியிலிருக்கக்கூடிய சாமி என பாகுபாடு காட்டப்படுவதை கண்டிருக்கிறேன். மதுரைவீரன், பொம்மி, கருப்பண்ணசாமி போன்ற கடவுளர்களுக்கான மரியாதையும், சிவன், விஷ்ணு, முருகன், விநாயகன் போன்ற கடவுளர்களுக்கான மரியாதையும் வெவ்வேறானவை என்பது எனக்கு உண்மையில் ஆச்சரியம் தான் கொடுத்தது.

தெய்வங்களிலோ, பக்தர்களிலோ பாகுபாடு பார்ப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. கலைஞர் ஒருமுறை சொன்னார், “கடவுள் இருக்கிறாரோ இல்லையோ எனக்கு தெரியாது, ஆனால் கடவுள் இருப்பதாக நம்பி வழிபடுவோரின் உரிமையை நான் பாதுகாக்கவேண்டும்”. அந்த வகையில் கோவில்களில் எல்லாம் ஒரு வேளையாவது பூஜை நடைபெற வேண்டும், முறையாக குடமுழுக்கு நடத்தப்படவேண்டும் என்றெல்லாம் ஆணையிட்டு, தமிழகத்தில் முதல்முறையாக இந்து சமய அறநிலைய துறை என தனியாக ஒரு துறையையும் ஏற்படுத்தி அனைத்து ஆலையங்களுக்கும் பாதுகாப்பு தந்தார். அதை அவரது தனிப்பட்ட கருத்தோடு இணைத்து பார்த்து வம்பளக்கும் கூட்டத்தை புறக்கணித்து விட்டு பார்த்தால், அவரது அணுகுமுறையின் நாகரீகம் விளங்கும். “நான் கடவுள் மறுப்பு கொள்கை உடையவன். ஆனால் அதை இம்மக்கள் மீது திணிக்க மாட்டேன். மாறாக அவர்களது விருப்பம் வழிபாடு என்றால் அதற்கான வசதிகளை செய்து கொடுப்பேன்” என்கிற கலைஞரின் அந்த அணுகுமுறை எனக்கும் உடன்பாடான ஒன்றே. அப்படியான எண்ணத்திலிருந்த எனக்கு, சிலர் கோவிலுக்குள் செல்லக்கூடாதெனவும், சில இனத்து தெய்வங்களுக்கு கோவிலுக்கு வெளியே தான் இடம் எனவும் சொல்லப்பட்ட விஷயங்கள் ஆச்சரியத்தோடு சேர்த்து வெறுப்பையும் தந்தது.

வாதாபி கோட்டையில் மதிற்சுவரில் காவல் தெய்வமாக இருத்தப்பட்ட கணபதியை (எண்+கண+நாதன்=எட்டு திசை காவலன்; கண+பதி=திசைகளின் காவலன்) தளபதி பரஞ்சோதி பெயர்த்தெடுத்து தமிழகத்துக்குகொண்டுவந்து, பிள்ளையார்பட்டியில் வைத்து, பின்னர் கதைகள் மூலம் சிவன் குடும்பத்தில் சேர்ப்பதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் காவல் தெய்வமாக யாழி (குதிரை உடல், யானை துதிக்கை) இருந்து வந்தது. பின்னர் சிற்சில கதைகள் கட்டப்பட்டு கணபதியை நாம் வீட்டுக்குள் கொண்டுவந்துவிட்டாலும், இப்போதும் பெரும்பாலானோர் வீட்டு மதிற்சுவரிலும், ஊர் எல்லையிலும் மட்டுமே வைத்து வழிபட்டு வருகின்றனர்.
அப்படி கணபதிக்கு சில கதைகள் கட்டப்பட்டு வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டதை போல, மதுரைவீரன், பொம்மி, கருப்பண்ணசாமி வகையறாக்களுக்கும் ஏதேனும் கதைகள் கட்டி கோவிலுக்குள் அனுமதித்தால் நன்றாக இருந்திருக்குமே என நான் பலமுறை நினைத்ததுண்டு.

மக்களில் சிலரே கோவிலுக்குள் நுழைய முடியாது என்கிற நிலையில், அவர்களை ஆலைய பிரவேசம் செய்த மரியாதைக்குரிய பெரியாரின் மண்ணிலிருந்துகொண்டு, மனிதரிலும், கடவுளரிலும் வேற்றுமை விதைக்கவும் சிலரால் முடிந்திருக்கிறது என்பதே ஒரு ஆச்சரியம் தான். இன்றைக்கு கூட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்பதை போராட்டமாக முன்னெடுத்து செல்லப்படுவதாக செய்திகள் படித்தேன். ஆலைய பிரவேசமோ, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதோ இறைவன் முன்னால் அனைவரும் சமம் என காட்டுவதற்கே அன்றி, வேறு பிடிவாதம் இல்லை என்பதை நான் அறிவேன். ஆனாலும், கலைஞர் அவர்களே பல்லாண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருந்தும் கூட, ஆலையங்களில் பக்தர்களிடம் கட்டண அடிப்படையில் காட்டப்படும் பாகுபாட்டை களைவதற்கு எந்த சிறு முயற்சியும் எடுக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தமுண்டு.

கேரள கோவில்களில் ஒரே வரிசை தான். கடவுளை தொழ வந்தவர் ‘யாராகிலும்’ அவர்கள் பக்தர்கள் என்கிற ஒரே வரையறையில் வைத்தே பார்க்கப்படுகிறார்கள். அத்தகைய மனநிலையும், பண்பாடும் தமிழகத்தில் வர வாய்ப்பிருப்பதாக தோன்றவில்லை. தமிழக மக்களின் மனநிலையை மிக பண்பட்டதாக, முற்போக்காக மாற்றியதில் பெரும் பங்கு வகித்த கலைஞர் கூட இது விஷயத்தில் தோற்றுப்போனதாகவே கருதுகிறேன்.

என்னை பொறுத்தவரை, எந்த கோவிலென்றாலும் செல்வேன், மனம் உருகி பிரார்த்திப்பேன், என் சங்கடங்கள், வேண்டுதல்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு வருவேன். அவ்வளவு தான் எனக்கும் கடவுளுக்குமான உறவு. அதற்கான பரிகாரம், பூஜை, மந்திரம், மாந்திரீகம், ஸ்தோத்திரம், மண்சோறு, அலகு, மொட்டை இத்யாதி இத்யாதி போன்றவற்றை நான் அங்கீகரிப்பதில்லை. அதை ஆமோதிப்பதுமில்லை. முதலில் சொன்னது பக்தி. பின்னர் சொன்னது மூட நம்பிக்கை. இதையெல்லாம் செய்தால் தான் அது நடக்கும் என்றால் அதன் பெயர் வியாபாரம். நீ இதை செய்யாததால் உனக்கு கஷ்டம் என்றால் அது சிறுபிள்ளை தனம். கடவுளை இப்படியெல்லாம் நிர்பந்தங்கள் கொடுப்பவர் என வரையறுப்பதே கடவுளை இழிவுபடுத்தும் செயல் என கருதுகிறேன். இறைவன் அன்பு வடிவானவர். இறைவன் யாரையும் பாதுகாப்பதுமில்லை, யாரையும் அழிப்பதுமில்லை, யாரையும் துன்புறுத்துவதுமில்லை. ஆனால், நமது உள்ள குமுறல்களை அழுது தீர்க்க, யாரிடமும் சொல்ல முடியாதவற்றை கேட்டுக்கொண்டிருக்க, மொத்த மன பாரத்தையும் இறக்கி வைக்க அங்காங்கே வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பெயர்கள் அமர்ந்திருக்கிறார். என்னை பொறுத்தவரை கடவுள் அவ்வளவு தான்.

இறைவன் அதிசயங்களை செய்வார் எனில் அவனது வாசலில் அனுதினமும் யாசித்துக்கொண்டிருக்கும் யாசகர்களுக்கு என்றோ நல்லவழி காட்டி இருப்பார். எனவே அப்படியான அதிசய சக்தியாக எல்லாம் என்னால் அவரை காண முடியவில்லை. எதிர்த்து பேசாத, எதிர்த்து கேள்வி கேட்காத ஒரு தோழனை போலவும், எங்கிருந்தோ எனது நியாயமான ஆசைகளையும், தேவைகளையும் நிறைவேற்றுபவனாகவும், எனது துயரங்களை மெல்லமெல்ல துடைத்தெறியும் வலிமையை தருபவனாகவும் நானறியாமல் எனக்குள்ளே இயங்கிக்கொண்டிருப்பதாக மட்டுமே உணர்கிறேன்.

உன் ஆசைகளை கட. உனக்கு உள்ளே இருப்பான் இறைவன் என்கிற கட+உள் விளக்கத்தை விட, உன் ஆசைகளை அதிகரித்துக்கொண்டே இரு.. அதை அடையும் வழியை அவன் காட்டுவான் என்கிற தத்துவம் தான் எனக்கு இன்று வரை பயனளித்துக்கொண்டே இருக்கிறது. அவற்றை அடைந்ததற்கு நான் மட்டுமே காரணம் என ஒருபோதும் நான் நினைக்கவில்லை.

Sunday, June 30, 2013

அரசு காய்கறி கடை - பல்நோக்கு திட்டத்தின் புள்ளி!


சென்னையில் 31 மலிவு விலை காய்கறிகள் கடைகளை முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

கடந்த வாரம் இப்படி ஒரு செய்தி நாளிதழ்களில் ஃபிளாஷ் ஆனபோது அது பத்தோடு பதினொன்றாக தான் பார்க்கப்பட்டது. அதன் சரியான வீரியமும் தாக்கமும் பலரும் உணர்ந்திருக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்பு கூட கிலோ 110 ரூபாய் வரை விற்றுக்கொண்டிருந்த சின்ன வெங்காயம் இந்த கடைகளின் வரவுக்கு பின் இரண்டே நாளில் கிலோ 55 ரூபாய்க்கு குறைந்தது. இதே கதை தான் அனைத்து காய்கறிகளுக்கும்.

இடைத்தரகர்கள் மூலமாக புனைவாக விலையேற்றி விற்கபட்ட காய்கறிகளின் விலைகளை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அரசே நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து விற்க தொடங்கியதில், சட்டென வெளி மார்க்கெட்டிலும் இயல்பான விலைக்கு இறங்கிவிட்டது.

இது கிட்டத்தட்ட மத்திய அரசு கொண்டுவர எண்ணும், சில்லறை விற்பனையில் அந்நிய முதலீடு போன்றது தான். நேரடி கொள்முதல், நேரடி விற்பனை. ஆனால் அது தனியார் மூலம் நடைபெறும். இப்போது தமிழக அரசு கொண்டு வந்திருப்பது அரசு நிறுவனமான TUCS மூலமாக. அது தான் வித்தியாசம். அந்நிய முதலீடு மூலம் கடைகள் அமைத்தால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என பெரும்கூச்சலிட்டு போராடிய வணிகர்கள், அதை விட பன்மடங்கு தங்கள் விற்பனையை பாதிக்கும் இந்த அரசு கடைகள் பற்றி மூச்சு விடவில்லை. அதற்கான காரணம் எல்லோரும் அறிந்தது தான்!

கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட உழவர் சந்தை திட்டத்துக்கு பெயர் மாற்றி ஜெ. இந்த திட்டத்தை கொண்டுவந்தார் என்கிற ஒரு அரைகுறை தகவலும் வேகமாக இணைய தளங்களில் உலா வந்தது. உழவர் சந்தை என்பது அரசு அமைத்து கொடுத்த இடம் மட்டுமே. அங்கே விவசாயிகள் தங்கள் பொருட்களை நேரடியாக அவர்களே கொண்டுவந்து விற்றுக்கொள்ளலாம் என்பது தான் ஏற்பாடு. ஆனால் அந்த திட்டம் தோல்வியடைந்ததன் முக்கிய காரணம், பல விவசாயிகள் தங்கள் கைக்காசு செலவழித்து விவசாய பொருட்களை அங்கே கொண்டு செல்ல விரும்பாதது. அரசு பேருந்துகளில் இலவசமாக கொண்டு செல்லலாம் என அரசு அறிவித்திருந்தாலும், பெரும்பாலான கண்டக்டர்கள் அதை பின்பற்றவில்லை. விவசாய பொருட்களை பஸ்களில் ஏற்ற மறுத்தார்கள். இதன் பயனாக, பிற தரகர்களும் மளிகை கடைக்காரர்களுமே உழவர் சந்தையை பயன்படுத்த தொடங்கினார்கள். எனவே அது விலையில் பெரிய வித்தியாசம் ஏற்படுத்தவில்லை. அப்படியாக அந்த திட்டம் மெல்ல முடங்கியது.

ஆனால், இப்போதைய திட்டம் முற்றிலும் வேறு மாதிரி. ரிலையன்ஸ் ஃபிரஷ் நிறுவனத்தின் மாடலில் அமைந்தது. அதாவது அரசு நிறுவனம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, தனது கடைகள் மூலமாக விற்பனை செய்வது. ஏற்கனவே சிந்தாமணி, அமுதம் போன்ற கடைகளை நடத்தி வரும் அரசு அதன் ஒரு அங்கமாக இந்த காய்கறி கடைகளையும் தொடங்கி இருக்கிறது

சென்னையில் மட்டும் 31 கடைகள் என்பதன் மற்றும் சில பயன்களும் கவனிக்கப்படவேண்டியவை. ஏற்கனவே எனது சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு குறித்த தொடரில் சொல்லியதை போல, இன்றைய தேதியில் நாட்டின் மிகப்பெரிய வரி ஏய்ப்பை செய்துகொண்டு வருவோர் ‘மளிகை கடை’யினர் தான். அதை குறைத்து அரசுக்கு வரி வருவாயை அதிகரிக்கவும் இந்த காய்கறிகடைகள் அரசுக்கு உதவும். உதாரணமாக, நீங்கள் எப்படியும் வாரத்துக்கு ரூ.500 க்கு காய்கறிகள் / மளிகை பொருட்கள் உங்கள் வீட்டுக்கு வாங்குவதாக வைத்துக்கொள்வோம். எப்படியும் உங்களின் அந்த செலவு தவிர்க்கமுடியாதது. ஆனால், அதை உங்கள் பக்கத்திலிருக்கும் மளிகை கடையில் வாங்குகையில் அதில் இருந்து சல்லிக்காசு கூட அரசுக்கு வரியாக கிடைப்பதில்லை. ஆனால், அதே செலவை அரசு கடையில் செய்தால், அரசுக்கு 10% வருவாய், அதாவது ரூ.50 வரியாக கிடைக்கும். இப்படி தமிழகம் முழுதும் ஒரு நாளில் மளிகை கடையில் வியாபாரமாகும் தொகை அதிலிருந்து அரசுக்கு கிடைக்கக்கூடிய வரியை நீங்களே குத்துமதிப்பாக கணக்கிட்டு கொள்ளலாம்.

ஒருவேளை மதுவிலக்கு கொண்டு வரும் பட்சத்தில் அந்த கடைகளையெல்லாம் மளிகை/காய்கறி கடைகளாக மாற்றுவதன் மூலம் தெருவுக்கு தெரு அரசு காய்கறி கடைகள் மூலம் மலிவான விலையில் நமக்கு அன்றாட காயகறிகள் கிடைப்பதோடு, விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். அரசுக்கும் வரி வருவாய் அதிகரிக்கும். இப்படியான மல்டிப்பிள் மாங்காய் அடிக்கும் கல் இந்த கடை.

சமீப காலமாகவே தமிழக அரசு நிறைய அட்டகாசமான அறிவிப்புக்களை வெளியிட்டு வந்திருக்கிறது. அவை மீடியாக்களால் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டதோ என்கிற வருத்தம் எனக்கு உண்டு. அவற்றில் சிலவற்றை ஒரு வரி சுருக்கமாக உங்கள் கவனத்துக்கு:

Ø  குன்னூரில் தமிழ்நாடு தேயிலை கழக தோட்டத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் டான்டீ (TANTEA) யின் மேம்படுத்தப்பட்ட வகை அறிமுகம் செய்தது.

Ø  ஏகபோகமாக தனியாரிடம் இருக்கும் கிரானைட் விற்பனையை அரசின் டாமின் (TAMIN) மூலமாக அரசே விற்க முடிவெடுத்திருப்பதுடன், அதை ஏற்றுமதி செய்யவும் உத்தேசித்திருப்பது.

Ø  அரிசி விலை கட்டுக்கடங்காமல் செல்வதை தடுக்க அரசே ஒரு கிலோ அரிசி ரூ.20/-க்கு விற்பனை செய்ய முடிவெடுத்தது (இதில் அரிசி விலை கட்டுக்குள் வந்தது)

Ø  ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு மிக மிக மலிவான விலையில் உணவு பொருட்கள் கிடைக்க செய்தது. ஏற்கனவே திமுக அரசில் ரூ.20/-க்கு தான் எல்லா ஹோட்டல்களும் மதிய உணவு தரவேண்டும் என இட்ட உத்தரவை எந்த ஹோட்டலும் பின்பற்றவில்லை. இப்போது, அரசே ஹோட்டல் நடத்துவது, வேறு வழியின்றி பல தனியார் ஹோட்டலின் விலைப்பட்டியலை திருத்தி குறைக்க வழி செய்தது.

Ø  அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள், ஒரு லிட்டர் தண்ணீரை ரூ.20/- வரை கொடுத்து வாங்குவதை தவிர்க்க அரசே ரூ.10/- க்கு தண்ணீர் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது.

Ø  மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களான தினை, கேழ்வரகு, சாமை, தேன் போன்றவற்றை அரசே நேரடியாக கொள்முதல் செய்து கூட்டுறவு கடைகள் மூலம் விற்பனை செய்து அவர்களது வாழ்க்கை வருவாய்க்கு வழி செய்திருப்பது.

என பல பல திட்டங்கள் நீளமாக இருக்கிறது.

இவை எல்லாமே ஏதோ ஒரு வகையில் மறைமுகமாக சாதிக்க நினைப்பது இவற்றை தான்.

Ø  நுகர்வோருக்கு (மக்களுக்கு) நியாயமான விலையில் பொருட்கள் கிடைக்கவேண்டும் (எப்படியும் அவர்கள் செலவு செய்ய தயாராக தான் இருக்கிறார்கள். அந்த செலவை முடிந்த அளவுக்கு குறைப்பது)

Ø  உற்பத்தியாளருக்கு நியாயமான விலை கிடைக்க உதவுவது

Ø  மறைமுக இடைத்தரகு முறையை முற்றிலுமாக ஒழிப்பது

Ø  அரசுக்கான வரி வருவாயை அதிகரிப்பது

Ø  விலைவாசியை கட்டுக்குள் வைப்பது

இது ஒரு மிகச்சிறந்த அணுகுமுறை என நான் கருதுகிறேன்.

அரசின் மீது வைக்கப்படும் விமர்சனம், அரசு என்பது பிசினஸ் செய்யவேண்டிய அவசியம் என்ன? சேவை தானே அரசின் நோக்கம்? என்றெல்லாம் கேள்வி கேட்பவர்களும் உண்டு.

எல்லா தொழிலிலும் அரசும் ஒரு பங்குதாரராக இருப்பதை தான் தமிழக அரசு செய்கிறது. இதன் மூலம் ஏகபோகம் தடுக்கப்பட்டு, அரசின் நியாயமான விலையை ஒட்டியே எல்லோரும் விற்பனைவிலையை நிர்ணையிக்க முடியும். அரசே எல்லா தொழிலிலும் இறங்குவதென்பது, மக்களுக்கு ஒரு நம்பிக்கையையையும் உத்திரவாதத்தையும் நல்கும் என்பதில் சந்தேகமில்லை.

அரசின் நோக்கத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் விமர்சிப்பவர்களை கண்டுகொள்ளாமல், அரசின் நோக்கத்துக்கு உதவும் வகையில், கூடுமானவரை நமது தேவைகளை அரசு நிறுவனங்கள் மூலமாகவே நிறைவேற்றுவதன் மூலம் நமக்கும் சிக்கனமான செலவு, அரசுக்கும் வரி வருவாய் என தமிழகத்துக்கு உதவவேண்டிய தத்தமது கடமையை உணரக்கூடியவர்கள் தானே நாமெல்லோரும்? சரி தானே?
 

Saturday, June 22, 2013

சேது சமுத்திர போர் – நமது கடமை!


சேது சமுத்திர திட்டம் தமிழகத்துக்கு தேவையில்லை என்றொரு அதிர்ச்சியான அஃபிடவிட்டை தமிழக அரசு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ததிலிருந்தே இந்த பதிவை எழுத நினைத்திருந்தேன். ஆனால் திட்டம் குறித்து முழுமையாக அறிந்து தெளிவதில் மிகுந்த கால நேர தாமதமாகிவிட்டது.

சேது சமுத்திர திட்டம் என்பது ஒன்றரை நூற்றாண்டு கனவு. இதை முழுமையாகவும் விரிவாகவும் பதிவாக எழுதுவது இயலாத காரியம். ஏற்கனவே பலரும் இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் எழுதி தள்ளிவிட்டார்கள். எனவே இப்போதைய சூழலை மட்டும் அலசினால் போதுமானதாக இருக்கும் என கருதுகிறேன்.

இந்த திட்டத்துக்கான முதல் விதையை விதைத்தவர் ஆங்கிலேய அரசின் இளம் பொறியாளர் மேஜர் ஜேம்ஸ் ரென்னல் அவர்கள். 18ம் நூற்றாண்டிலேயே அவர் இந்த திட்டம் பற்றி சொன்னாலும், அப்போது பெரிதாக எடுபடாமல் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு பின் 1838ல் தான் திட்டத்துக்கான முதல் தோண்டுதல் தொடங்கியது. அப்போதும் அது அதிக முக்கியத்துவம் பெறாமல் நிறுத்தப்பட்டுவிட்டது. பின்னர் 1860லிருந்து திரு. ஆல்ஃபிரட் டண்டாஸ் டெய்லர் அவர்கள் மூலமாக தான் திட்டம் தீவிரமானது.

இந்தியா சுதந்திரம் பெற்றதும் 1956ல் முதல் குழு அமைக்கப்பட்டது. திராவிட பேரியக்கத்தின் மிகப்பெரிய கனவான சேது திட்டம், திமுக ஆட்சி பொறுப்பேற்றபோதெல்லாம் வலியுறுத்தப்பட்டு, பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு, இறுதியாக 2005, ஜூலை 2ல் பிரதமர் திரு.மன்மோஹன் சிங் அவர்களால் துவங்கப்பட்டது.

இந்த வரலாற்று சுருக்கத்திலிருந்தே ‘வைகோவின் கனவு திட்டம்’ என்கிற வாக்கியத்தின் உண்மை தன்மையை உணரலாம். ‘சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ என பாரதி பாடிய போது வைகோ இல்லை. திமுக தீவிரமாக சேது திட்டம் பற்றி பேசிய 1950களில் வைகோ இல்லை. 1970களில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் முன்னெடுத்து சென்ற போராட்டங்களில் வைகோ இல்லை. ஆதித்தனாருக்கு பின்னர் திமுகவின் பிரதிநிதியாக சேதுசமுத்திர திட்ட விவரணைகளை கையாண்ட வகையில் தான் வைகோ இந்த விஷயத்துக்குள் வருகிறார். இன்றைக்கு சேது சமுத்திர திட்டம் தனது கனவு திட்டம் என தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார். இப்படி சம்மந்தமேயில்லாத பலரும் இந்த திட்டத்துக்கான கிரெடிட் எடுத்துக்கொள்ள துடிக்கும் அளவுக்கு அப்படியென்ன அது நல்ல திட்டம்?

மன்னார் வளைகுடா பகுதியில் கடல் இருந்தாலும் பெரும் கப்பல்கள் அதில் பயணிக்க முடியாது. காரணம் 36 கிலோமீட்டருக்குள் எதிரும் புதிருமாக இந்திய இலங்கை கரைகள் இருப்பதால், அலைகள் இருவேறு திசைகளில் பயணிப்பதால், கடல்நடுவே பல பல மணல்திட்டுக்கள் இயற்கையாகவே உருவாகியிருக்கின்றன. இவை ராமபிரானால் கட்டப்பட்டவை என ஒரு சாராரும், இயற்கையாக உருவானவை என இன்னொரு சாராரும் இன்னமும் வாதாடிக்கொண்டிருக்கின்றனர். ஆதம்ஸ் பாலம் என பெயரிடப்பட்ட இந்த பகுதிக்கு, அவசரம் அவசரமாக ராமர் பாலம் என பெயரிட்டு, மத ரீதியான உணர்வுகளின் பாதுகாப்போடு அந்த பகுதியை பாதுகாக்க மத அமைப்புக்கள் முனைகின்றன.

மற்றொரு புறம், தென் கோடி தமிழகம் தொழில் வளர்ச்சியில் பின் தங்கியிருப்பதால் அதை ஈடுகட்ட தூத்துக்குடி துறைமுகத்தையும், சென்னை துறைமுகத்தையும் நேரடியாக இணைக்கும் நோக்கில், இந்த மணல் திட்டுக்களை கொஞ்சம் தகர்த்து ஆழப்படுத்தி பெரிய கப்பல்களை இயக்க முடிந்தால், அதன் அடிப்படையில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, கடலூர் மாவட்ட கடற்புறங்களில் பல சிறு துறைமுகங்களை ஏற்படுத்தி கடல் வாணிபத்தை பெருக்க முடியும் எனவும், தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்த இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையேயான கடல் எல்லையை நம் போர்க்கப்பல்கள் மூலம் பாதுகாக்க முடியும் (இப்போது வெறும் ரோந்து படகுகள் மட்டும் தான்) எனவும் உணர்ந்து, சேதுக்கால்வாய் திட்டத்துக்காக திராவிட இயக்கங்கள் போராடிவருகின்றன.

இந்த திட்டத்தின் மூலம், இலங்கையை சுற்றி சென்னை வர வேண்டிய அவசியம் கப்பல்களுக்கு இருக்காது. மேலும் மேலே சொன்னபடி பல்வேறு சிறு துறைமுகங்களை மாநிலம் முழுதும் ஏற்படுத்துகையில் உட்புற தமிழக தொழிற்சாலைகளிலிருந்து கடல்வணிகம் செய்வது எளிமையாகும். துறைமுகம் சார்ந்த ஊர்களில் மறைமுக வேலைவாய்ப்பு பெருகும். அந்த வகையில் தென் தமிழகம் வளர்ச்சிபெறும் என்பதெல்லாம் இந்த திட்டத்தின் தமிழகம் சார்ந்த பலன்கள். கடற்பாதுகாப்பு, இந்திய பெருங்கடலின் முழுமையான கட்டுப்பாடு ஆகியவை இந்திய தேசம் சார்ந்த பலன்கள்.

அதனால் தான் இந்த திட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த திட்டத்தை மறைமுகமாக எதிர்க்கும் இலங்கை, இந்தியாவிலுள்ள பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க போன்ற தங்கள் நண்பர்கள் மூலமாக இந்த திட்டத்துக்கான எதிர்ப்பை பல வகையிலும் முன்வைத்துக்கொண்டிருக்கிறது.

இலங்கை இந்த திட்டத்தை விரும்பாததற்கு வணிக / அரசியல் காரணங்கள் இருக்கிறது.


(கொழும்பு சர்வதேச சரக்கு பெட்டக முனையம்)
 

தற்போது சர்வதேச கண்டெயினர் டிரான்ஷிப்மெண்ட் கொழும்புவில் இருக்கிறது. சென்னை, தூத்துக்குடி, கொச்சி, மங்களூர் போன்ற இந்திய துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்டகங்கள் கூட கொழும்பு சென்று பின் அங்கிருந்து தான் பயணிக்கிறது. சேது கால்வாய் வருமாயின், சென்னையிலிருந்து புறப்படும் கப்பல்கள் கொழும்பு வராமலேயே ஆப்பிரிக்க, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு பயணிக்கும். இன்றைய தேதியில் மிக அதிக அளவில் சரக்கு கையாளும் சென்னை துறைமுகத்தின் வாயிலாக கொழும்பு பெற்று வரும் வருமானம் இதனால் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

சீனா சமீபத்தில் வெளியிட்ட ‘புளூ புக்’கில் இந்திய பெருங்கடலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியிருப்பதுடன், இலங்கையின் சில துறைமுகங்களை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வது, சீன கடற்படை தளம் அமைப்பது ஆகியன மூலம் இந்தியாவுக்கான மற்றுமொரு செக் வைக்கும் நடவடிக்கையிலும் ராஜீய ரீதியாக இலங்கை முயல்கிறது.

இந்த இரண்டுமே இந்தியாவுக்கு பாதகமானவை. அதனால் தான் பெரும் முதலீடு செய்து இந்த திட்டத்தை நிறைவேற்ற இந்தியா முன்வந்தது. சீனா, காங்கேசன் துறையில் மையம் கொள்ளுமாயின், இந்திய போர் கப்பல்கள் பாக் ஜலசந்தி வழியாக அனுதினமும் பாதுகாப்பு ரோந்து சென்றே ஆகவேண்டும். இல்லாவிட்டால், சென்னைக்கும் பெங்களூருக்கும் எந்த நிமிடமும் ஆபத்து தான். இந்திய பெருங்கடலின் மிக வலுவான பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யவேண்டும் எனில் பாக் ஜலசந்தியில் இந்திய போர் கப்பல்கள் பயணித்தாக வேண்டும்.

எனவே வணிகம், அரசியல் ஆகிய நோக்கில் இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு சேது திட்டத்தை முடக்குவதும், வணிகம், பாதுகாப்பு ஆகிய நோக்கில் இந்தியா இந்த திட்டத்தை முன்னெடுப்பதும் ஏன் என்பது அதன் முக்கியத்துவத்தோடு எளிதில் நமக்கு விளங்கும்.

பா.ஜ.க இந்த திட்டத்தை முடக்க ராமரை துணைக்கழைத்து மத ரீதியான உணர்வுகளை தூண்டிவிட்டதை பா.ஜ.கவின் தலைவராக இருந்து இந்த திட்டத்துக்கான முதல் கட்ட ஒப்புதலை அளித்த முன்னாள் பாரத பிரதமர் உயர்திரு. அட்டல் பிஹாரி வாஜ்பாய் அவர்களே விரும்பவில்லை. எனினும் அடிப்படையற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மூலமாக திட்டத்தை முடக்க எடுத்த முயற்சிகள் ஓரளவு வெற்றிபெறவே செய்தது.


(ஆராயப்பட்ட கால்வாய் பாதைகள்)

உச்சநீதிமன்ற மூலமாக வழக்கு தொடுக்கப்பட்டு முடக்கப்பட்டதன் காரணமாக மாற்றுவழிகள் சிந்திக்கப்பட்டன. மொத்தம் 6 வழிகள் ஆராயப்பட்டு, ஆடம்ஸ் பாலத்தின் வடக்கிலும், பாம்பன் தீவின் தென்கிழக்கிலுமாக இரண்டு அகழ்வுகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு பச்சோரி கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில் பொருளாதார ரீதியாகவும், சுற்றுசூழல் நோக்கிலும் இந்த திட்டம் செயற்படுத்தத்தக்கதல்ல என ஒரு குண்டை தூக்கி போட்டதுடன், மொத்த திட்டமும் முடிவுக்கு வந்துவிட்டது.

இது தொடர்பான வழக்கில் தான் மாண்புமிகு புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான தமிழக அரசு, எங்களுக்கு இந்த திட்டம் தேவையில்லை என தன் பங்குக்கு ஒரு அஃபிடவிட்டை தாக்கல் செய்திருக்கிறது.

தனது கனவு திட்டம் என சொந்தம் கொண்டாடிய ‘புரட்சி புயல்’ அண்ணன் வைகோ அவர்களும், அன்பு சகோதரியின் ஆட்சேபத்தை எதிர்க்க துணியாமல் முடங்கிவிட்டார்.

தமிழகத்தின் இப்போதைய மிக தலையாய பிரச்சனை சேது சமுத்திர திட்டம் தான். அதனால் தான், கடந்த ஜூன் 3ம் தேதி சென்னையில் தனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதை கோடிட்டு காட்டிய திமுக தலைவர் கலைஞர் அவர்கள், அதற்கான போராட்டத்தை ‘சேது சமுத்திர போர்’ என்றே முழங்கினார். நம்மையும், நம் மாநிலத்தையும் காப்பதற்கான போர்.

தமிழர்களாகிய நாம், தமிழகத்தின் நலனை கருதும் அக்கறை இருப்பின் இந்த திட்டத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவேண்டும். மக்கள் பணத்தை செலவழித்து கிட்டத்தட்ட முக்கால் பாக திட்டம் முடிந்துவிட்ட நிலையில் அதை முடக்கி இலங்கைக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் எதிராகவும் செயல்படும் நபர்களை அடையாளம் கண்டு கொள்ளவேண்டும். இந்த திட்டத்துக்கு எதிராக, தமிழக வளர்ச்சிக்கு எதிராக, தமிழக மக்களின் நலனுக்கு எதிராக யாரெல்லாம் செயல்படுகிறார்கள் என கண்டறிந்து, கற்றுணர்ந்து அவர்களுக்கான தக்க தண்டனையை தங்கள் வாக்குகளால் வழங்கவேண்டும்.

தமிழர்கள் சுய சிந்தனையும், பகுத்தறியும் திறனும் பெற்றவர்கள் என்பதால், இந்த திட்டம் குறித்து சுயமாகவே சிந்தித்து, அரசியலார் அரசியலுக்காக சொல்லும் புனை கதைகளை புரிந்து நடந்துகொள்வார்களா இல்லையா என்பது பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும் தானே?
 
மேலும் காண்க:
 
 
 

Tuesday, June 18, 2013

திருத்த வேண்டிய தீர்ப்பு!


நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கினார் நீதியரசர் உயர்திரு. கர்ணன் அவர்கள். சென்னை உயர்நீதிமன்றம் தன் பங்குக்கு பல பல விசித்திரமான தீர்ப்புக்களை தந்திருக்கிறது. பல பகுத்தறிவு ததும்பும் முற்போக்கான தீர்ப்புக்களையும் தந்திருக்கிறது. ஆனால் நேற்றைய தீர்ப்பை எந்த ரகத்தில் சேர்த்துவது என்று இன்னமும் தெரியவில்லை!

விஷயம் இது தான்!

கோவை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு. மனைவி தனது கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டது குறித்தான வழக்கு. இதில் இருவருக்கும் முறைப்படி திருமணம் நடைபெறவில்லை என்பதால் ஜீவனாம்சம் கொடுக்க தேவையில்லை என கணவன் வாதம் வைக்கிறார். ஆனால் இருவரும் இணைந்து வாழ்ந்ததையும், அதன் மூலமாக இரண்டு குழந்தைகள் பிறந்ததையும் அவர் மறுக்கவில்லை. இணைந்து வாழ்வது வேறு, திருமண பந்தம் என்பது வேறு. அதனால் ஜீவனாம்சம் கொடுக்க தேவையில்லை என்பது கணவரின் நிலைப்பாடு.


இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அவர்கள், “திருமண வைபோகம் என்பதெல்லாம் வெறும் சம்பிரதாயங்கள் தான். சமுதாயத்துக்கு அறிவிப்பதற்கான ஒரு சடங்கு தான். எனவே அவை எல்லாம் இல்லாவிட்டாலும், திருமணம் செய்துகொள்ளலாம்”. அது செல்லும் என்பதாகவும், “சட்டப்பூர்வமாக திருமண வயதை அடைந்த ஆணும் பெண்ணும் பரஸ்பர ஒப்புதலோடு உறவு வைத்துக்கொண்டால், அதை தகுந்த ஆதாரங்களோடு நிரூபித்தால்(?) அதன் அடிப்படையில் அதை சட்டப்பூர்வமான திருமணமாக அறிவிக்கலாம்” எனவும், “அந்த அடிப்படையில் இந்த குறிப்பிட்ட வழக்கில் கணவர் மனைவிக்கு மாதம் ரூ.500/- ம் குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000/- ம் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும்” எனவும் தீர்ப்பளித்திருக்கிறார்.

மனிதாபிமான நோக்கிலும் சட்ட நோக்கிலும் இந்த தீர்ப்பில் எந்த குறையும் யாரும் சொல்லிவிட முடியாது. மறுக்கப்பட்ட ஒரு நீதியை பத்தாண்டுகளாக போராடிய பெண்ணிற்கு, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று பெற்று கொடுத்திருக்கிறது என்கிற வகையில் மிகவும் பாராட்டுக்குரியதும் கூட.

ஏற்கனவே சில நீதிமன்றங்கள் இதே போன்ற சில தீர்ப்புக்களை கொடுத்து இருக்கின்றன. அவற்றுள் சில:

Ø  திருமணம் ஆகியிருந்தாலும் உறவுக்கு வற்புறுத்துவது, சம்மதமின்றி உறவு கொள்வது ஆகியவை பாலியல் வன்கொடுமை என கருதப்படவேண்டும்.

Ø  திருமணத்துக்கு பின்னர் இரண்டாண்டுகளுக்குள் அந்த திருமண பந்தம் உறவாக பரிணமிக்காத நிலையில் அந்த திருமணம் சட்டப்படி செல்லுபடியாகாது

Ø  திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், ஒன்றாக வாழ்வது, தெருவில் ஒன்றாக ஜோடியாக வலம் வருவது, பலரும் இவர்கள் இணைந்து பயணித்ததை பார்த்தது, ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டது போன்றவற்றை நிரூபிப்பதன் மூலம், அவர்களை தம்பதியாக அறிவிக்கலாம்

Ø  பதினாறு வயதுக்கு மேல் பரஸ்பர ஒப்புதலோடு உறவு கொள்வது சட்டவிரோதமாகாது

…மற்றும் பல.

சட்ட ரீதியாகவும், மனிதாபிமான அடிப்படையிலும், எந்த ஒரு பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்கிற நோக்கிலும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு மிகவும் வரலாற்று சிறப்புமிக்கதாகும்.

ஆனால், சமூக நோக்கில் அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.

பரஸ்பர ஒப்புதலோடு உறவு வைத்துக்கொண்டாலே சட்டப்பூர்வ திருமணமாக அது அங்கீகரிக்கப்படும் எனவும், அதன் பின் சம்மந்தப்பட்டவரிடமிருந்து எழுத்துமூலமான ஒப்புதலோ, சட்டப்பூர்வ விவாகரத்தோ வாங்காமல் செய்யப்படும் திருமணம் செல்லாது எனவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

இதன் படி, தற்போது குடும்பமாக வாழ்வோரைக்கூட அவர்களது முன்னாள் காதலர்கள் சட்டப்பூர்வமாக தொந்தரவு செய்ய முடியும். மேலும், சட்டப்பூர்வமான திருமணம் என அங்கீகரிக்கப்படுவதால் சொத்துரிமைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

காதலர்களாக மட்டும் அல்லாமல் அவர்களுக்கிடையே பரஸ்பர உறவும் ஏற்பட்டு இருந்து, பின் ஏதேனும் ஒரு காரணத்தால் பிரிய நேர்ந்தால், ‘சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து எழுத்துமூலமான ஒப்புதல்’ பெற்றபிறகே வேறு நபருடன் திருமணம் செய்யவேண்டியதிருக்கும், இனி!

இந்த தீர்ப்பின் அமலாக்கம் எப்போதிருந்து என தெரியவில்லை. பொதுவாகவே உயர்நீதிமன்ற தீர்ப்புக்கள் என்பது சட்டம் தான். அந்த வகையில் பார்த்தால், இதன் சிக்கலும் தீவிரமும் புரியும்!

இந்த தீர்ப்பின் மிக பெரிய அனுகூலமே, இனி தவறு செய்யும் முன் பலமுறை யோசிப்பார்கள். நினைத்தவுடன் பிரிவு என்பது அசாத்தியம். பெண்கள் அதிகம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவார்கள். ஏமாற்ற நினைக்கும் ஆண்களிடமிருந்து சட்டப்பூர்வ உரிமைகளை பெற முடியும்.

ஆனால், இந்த சட்டம் முன் தேதியிட்டு அமலானால், இப்போது வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் பலருக்கும் சிக்கலாக அமைந்து விடக்கூடும். ‘முன்னாள்கள்’ இனி தைரியமாக வீட்டுக்கு வந்து தற்போதிருக்கும் துணையை வெளியேற்றிவிடவும் முடியும், சொத்துரிமை பெறவும் வழி வகுக்கும். திருமண பேச்சுவார்த்தையின் போதே 'NOC' வாங்கி சமர்ப்பிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை!
எனவே பல பல சமூக சிக்கல்களுக்கு காரணமாக வாய்ப்பிருக்கும் இந்த தீர்ப்பு குறித்து தகுந்த விளக்கங்களையும், திருத்தங்களையும் சென்னை உயர்நீதிமன்றம் கொடுப்பது இப்போதைய அத்தியாவசியமாக உணர்கிறேன்!

சில தீர்ப்புக்கள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் திருத்தப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த தீர்ப்பின் நிலை என்ன என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடக்கூடும்!

Tuesday, May 28, 2013

யாதொன்றும் யாமறியேன்!



“எனக்கு தெரியாமல் அரசு அதிகாரிகள் அவர்களாகவே முடிவெடுத்து அறிவித்துவிட்டார்கள்” இன்றைக்கும் மற்றுமொரு முறை இப்படி அப்பாவியாக சொல்லி இருக்கிறார் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு புரட்சி தலைவி பொன்மனசெல்வி காவிரி தந்த கலைச்செல்வி அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்கள். தமிழக வரலாற்றின் மிக சிறந்த நிர்வாகி என பெயரெடுத்தவர்.

விஷயம் வேறொன்றும் இல்லை. சமீபத்தில் தமிழக அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி, தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் (‘மற்றும்’ என்கிற சொல் பயன்படுத்தக்கூடாது. “கலையும் அறிவியலும்”-னு தான் சொல்லவேண்டும் எனும் குதர்க்கம் பேசும் தமிழுணர்வு தோழர்கள் மன்னிப்பார்களாக!) உட்தேர்வுகள் (இண்டர்னல் எக்ஸாம்ஸ்) இனிமேல் ஆங்கில மொழியில் தான் எழுதவேண்டும். மாணவர்களுக்கு ஆங்கில அறிவை மேம்படுத்தும் நோக்கில் இப்படி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு பல முனைகளிலிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இன்றைக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள், அப்படி ஒரு அறிவிப்பு வந்ததே தனக்கு தெரியாது எனவும், தனக்கு தெரியாமல் அரசு அதிகாரிகளே அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதாகவும் சொல்லி, அந்த உத்தரவை ரத்து செய்திருக்கிறார்.


இப்படி அவர் சொல்லுவது இது முதல் முறை அல்ல. மிக மிக நீளமான பட்டியலே இருக்கிறது. அவற்றுள் சில உங்கள் மறு நினைவுறுத்தலுக்காக.

டான்சி நில விற்பனை விவகாரத்தில் ஆவணங்களில் இருந்தது தனது கையெழுத்தே அல்ல என சொல்லி, உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தபின் தனது கையெழுத்து தான் என ஒப்புக்கொண்டார்.

2006 சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு, அப்படி போட்டியிட்ட நான்கு தொகுதி வேட்புமனு பட்டியலிலும் ‘நான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட விண்ணப்பிக்கவில்லை’ என அத்தாட்சி அளித்திருந்தார். தேர்தல் விதிமுறை படி, இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக்கூடாது என்பதால் அந்த வழக்கு இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

2011 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போழுதே வேட்பாளர் பட்டியல் வெளியானது. வாத பிரதிவாதங்கள் வலுக்கவே வேட்பாளர் பட்டியல் தனக்கு தெரியாமலேயே வெளியிடப்பட்டுவிட்டதாக சொல்லி பட்டியலை ரத்து செய்தார்.

அண்ணா பவழவிழா வளைவு அகற்றப்பட்டபோதும், பலத்த எதிர்ப்பு வந்ததும் தனக்கு தெரியாமலேயே அந்த வளைவு இடிக்கப்பட்டதாக சொல்லி, மீண்டும் அதை அதே இடத்தில் மறு நிர்மாணம் செய்தார்.

தமிழகத்தில் கடுமையான மின் வெட்டு நிலவுவதை எதிர்த்து தமிழகம் முழுதும் பொதுமக்கள் பரவலாக சாலையில் இறங்கி மறியல் செய்தவுடன், தமிழகத்தில் இப்படி ஒரு மின்வெட்டு நிலவுவதை அமைச்சர்கள் என் கவனத்துக்கு கொண்டுவரவேயில்லை. எனக்கு இந்த விஷயமே தெரியாது என சொல்லி கைதட்டல் வாங்கிக்கொண்டார்.

சமீபத்தில் கூட, கட்சியிலும், ஆட்சியிலும் தனக்கு தெரியாமலேயே சிலர் பல்வேறு நிர்வாக முடிவுகளை எடுத்து வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். பின்னர் அப்படி தான் பேசவில்லை என்றொரு சிறிய அறிக்கையும் வெளியானது.

அண்ணா நூலக கட்டிடம் திருமணவரவேற்புக்கு வாடகைக்குவிட்டது, ராணிமேரி கல்லூரி தலைமை செயலகமாக மாற்றப்பட முயற்சித்தது, கண்ணகி சிலை அகற்றப்பட்டது என முதல்வருக்கு தெரியாமலேயே நடைபெற்ற நிகழ்வுகள் பல பல.

ஒரு விஷயத்துக்காக அவரை பாராட்டவேண்டும்.

இப்படி எல்லாம் சொல்லி அந்த நேரத்தில் விவகாரத்தை சரிக்கட்டிவிட்டாலும், இது வரை எந்த அதிகாரியையும், அமைச்சரையும் இந்த காரணத்துக்காக அவர் நடவடிக்கை எடுத்ததில்லை. ‘பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? எதுவும் தவறல்லவே’ என்பதை முதல்வர் நன்றாக உணர்ந்து நடுநிலையோடு நடந்துகொண்டிருக்கிறார்.

இவ்வளவு கடுமையான மின்வெட்டு நிலவுவதை தன்னிடம் மறைத்து, தன்னை ஆருயிர் அன்பு சகோதரியாக கொண்டாடும் தமிழக மக்களை வாட்டி வதைத்த மின் துறை அமைச்சர் மீதே அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதில் இருந்தே அவரது தாயுள்ளத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

எனக்கு மிக நெருங்கிய ஒரு அரசு அதிகாரி முன்பு ஒருமுறை என்னிடத்தில் சொன்னார். தமிழகத்தில் ஜெ. தலைமையிலான அதிமுக அரசு அமைந்தால் உடனடியாக அமலுக்கு வரும் ஒரே கொள்கை “அதிகாரிகளின் சாதனைகள் என்பது அரசின் சாதனையாக பார்க்கப்படும்; ஆனால் அரசின் தவறுகள் எல்லாம் அதிகாரிகளின் தவறுகளாகவே சித்தரிக்கப்படும்” ஆறுதல் என்னவென்றால், அப்படி சித்தரிக்கப்பட்ட தவறுகளை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எதுவும் இருக்காது.

எது எப்படியோ, தமிழகத்தின் மிக சிறந்த நிர்வாகி என புகழப்பட்ட ஜெயலலிதா அவர்களின் நிர்வாக பல்டிகள் மக்களுக்கும் மீடியாவுக்கும் பழகிப்போய்விட்டன. அதனால் தான் ஒவ்வொரு முறை அவர் தவறு செய்யும்போதும், அந்த தவறை மற்றவர்கள் மீது தூக்கி எறியும்போதும் யாரும் பெரிதாக எந்த உணர்வும் வெளிப்படுத்துவதில்லை.

அப்படியான ஒரு நிகழ்வாகவே இன்றைய நிகழ்வும் அமையும், இனியும் அமையும் என எதிர்பார்ப்போமாக. ஒரு வழிப்போக்கன் போல காட்சிமாற்றங்களை கண்டு ரசிக்கும் நமக்கு இவை ஒரு நல்ல கேளிக்கை என்பதை தவிர குறிப்பிடத்தக்க எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

Monday, May 27, 2013

அரசு பள்ளியும் ஆங்கில கல்வியும்


 
சமீபத்தில் தமிழக அரசு ஒரு உத்தரவை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டில் இருந்து ஆங்கில வழி கல்வியும் வழங்கப்படவேண்டும்.

இந்த அறிவிப்பு வெளியானதும் திமுக தலைவர் தனது முதலாவது கண்டன அறிக்கையை வெளியிட்டு அரசின் அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தியுள்ளார். மேலும் பல தமிழுணர்வாளர்களும் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்!

என்னை பொறுத்தவரை அரசின் இந்த அறிவிப்பில் எதிர்ப்பதற்கு எதுவுமிருப்பதாக தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் மகிழ்ச்சியோடு வரவேற்கவேண்டிய ஒரு அறிவிப்பு இது.

இந்த திட்டம் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1982ல் கொண்டு வந்த திட்டம் தான். குறிப்பிட்ட சில அரசு பள்ளிகளில் மட்டும் இருக்கும் இந்த திட்டம் இனி அனைத்து அரசு பள்ளிகளுக்கும், மாநகராட்சி/நகராட்சி பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட்டு இருக்கிறது.

1985 ம் ஆண்டு வரை (எனது ஐந்தாம் வகுப்பு வரை) நான் ஆங்கிலவழி மெட்ரிகுலேஷன் பள்ளியில் தான் படித்து வந்தேன். அப்பாவின் வேலை பிரச்சனைகாரணமாகவும் குடும்ப சூழல் காரணமாகவும் 6 ம் வகுப்பிலிருந்து தனியார் பள்ளியில் தொடர்ந்து பயில முடியாத நிலை.

கோவை சித்தாபுதூரில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தான் எனது 6 ம் வகுப்பு தொடர்ந்தது. அதுவும் ஆங்கில வழியில். அப்போதே அந்த வசதி இருந்ததை சுட்டிக்காட்டவே இந்த சம்பவத்தை சொல்கிறேன்.

 

குறைந்த கட்டணத்தில், அரசு பள்ளியில் தரமான ஆங்கில கல்வி பெற்றதன் பயன் தான் எனது இன்றைய வளர்ச்சி என்பதில் எனக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு!

ஆங்கிலவழி கல்வி ஏன்?

இந்தியா மிக வேகமாக வளரும் நாடு. பல்வேறு நாடுகளுடனும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வர்த்தக தொடர்புடையவர்கள் தான் நாம் எல்லோருமே. எனவே எந்த ஒரு விஷயத்துக்கும் நமக்கு ஆங்கில அறிவு அவசியமாகிவிட்டது.

ஆயிரம் ரூபாய்க்கு ஒரு செல்ஃபோன் வாங்கினாலே அதன் வழிகாட்டி புத்தகத்தை படித்தறிந்துகொள்ள ஆங்கிலம் தேவை. தமிழகத்துக்குள்ளேயே உழன்றுகொண்டிருக்கும் புழுக்கள் அல்ல நாம். பிற மாநிலங்கள் பயணிக்கையிலும், பிற நாடுகள் கடக்கையிலும் நமக்கு ஆங்கிலம் அவசியம் ஆகிறது.

ஆங்கில அறிவு என்பது கிட்டத்தட்ட அடிப்படை தகுதி என்கிற அளவிற்கு இன்று ஆகிவிட்டது. எந்த ஒரு தகவலும் ஆங்கிலம் இன்றி வருவதில்லை.

தாய்மொழியிலேயே பயின்றால் என்ன குறை?

ஒரு சாரார் தங்களது வழக்கமான குதர்க்க கேள்விகளை முன்வைத்து வாதாடுவது உண்டு. இந்த விஷயத்திலும் அது இல்லாமல் இல்லை. சீனா போன்ற நாடுகள் முழுமையாக தாய்மொழி கல்வி தானே அமல்படுத்தி இருக்கின்றன? அவர்கள் வளரவில்லையா? என்றொரு கேள்வி இணையதமிழுணர்வாளர்களால் சுற்றுக்கு விடப்பட்டு இருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் நியாயமான கேள்வி போல தான் தோன்றும்!

சீனா மிக பெரிய நாடு. மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு. ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி என்பதால் பரந்து விரிந்த அந்த நாட்டின் எந்த மூலை முடுக்குக்கு சென்றாலும் ஒரு சீனன் தகவல் பிரச்சனையில் சிக்கிக்கொள்ளாமல் முழு ஆயுள்காலமும் வாழ்ந்துவிட முடியும். வெளிநாடு செல்ல நேர்கையில் மட்டும் தான் அவனுக்கு சிக்கல்.

இந்தியா அப்படி அல்ல. இந்தியா அடிப்படையில் ஒரு நாடு அல்ல. இது மாநிலங்களின் கூட்டமைப்பு. இங்கு வழக்கத்தில் இருக்கும் மொழிகள் 200க்கும் மேல். அதில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 21.

நமது தாய்மொழியை எடுத்துக்கொண்டால், தமிழகம் புதுவை தவிர பிற மாநிலங்களுக்கு செல்கையில் நமக்கு நம் தாய்மொழியால் எந்த உபயோகமும் இல்லை. இதே நிலை தான் மற்ற நாடுகளுக்கு பயணிக்கையிலும்.

தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்து புதைந்துகொள்ளும் மனிதர்களுக்கும், தமிழகம் தவிர பிற மாநிலங்களோடோ, பிற நாடுகளோடோ எந்த தகவல் தொடர்பும் வைத்துக்கொள்ளாத மனிதர்களுக்கும் வேண்டுமானால் தமிழ் போதுமானதாக இருக்கும். ஆனால் பிற மாநிலங்கள், பிற நாடுகள் ஆகியவற்றுடன் தொழில், பயண தொடர்பு கொண்டவர்களுக்கு தமிழ் போதாது.

இதை இன்னும் கொஞ்சம் சுருக்கி பார்த்தால், இந்தியாவில் பயணிக்க ஹிந்தியும், பிற நாடுகளுடன் தொடர்புக்கு ஆங்கிலமும் என்றொரு மும்மொழி கொள்கைக்கு முன்னர் இந்திய அரசு முயற்சி செய்தது நினைவுக்கு வரலாம். ஒருவேளை அந்த கொள்கை வென்றிருந்தால், இந்தியாவில் அனைத்து மாநிலத்தவரும் தத்தம் தாய்மொழியோடு, ஆங்கிலம் ஹிந்தி ஆகிய பொதுமொழியையும் கற்று இந்தியாவுக்கு என்று ஹிந்தியும் பிற நாடுகளுக்கு என்று ஆங்கிலமும் என வழக்கத்திற்கு வந்திருக்கும். இது கிட்டத்தட்ட சீனாவை உதாரணம் காட்டும் ‘தமிழுணர்வாளர்களின்’ கருத்துக்கு உடன்பாடானதாக இருந்திருக்கும்.

ஆனால், நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் இரு மொழி கொள்கையே போதும் என உறுதியாக இருந்ததால், மாநிலத்துக்கு தாய்மொழி என்றும், பிற மாநிலங்கள், பிற நாடுகள் என அனைத்துக்கும் பொதுவாக ஆங்கிலம் என்றும் இன்றைக்கு முடிவாகி இருக்கிறது.

இப்போது என்ன அவசியம்?

இதுவரை தமிழகம் உலக வரைபடத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்திருந்த ஒற்றை மாகாணம். ஆனால் இப்போதோ உலக வரைபடத்தில் மிக முக்கியமான மாகாணம். தகவல் தொழில் நுட்பம், வாகன உற்பத்தி, உயர் தகுதி இயந்திர உற்பத்தி, என பல துறைகளிலும் வேகமாக முன்னேறி வரும் பகுதி. இங்குள்ளவர்களுக்கு அடுத்த இருபது ஆண்டுகளுக்கான தொழில்வாய்ப்புக்கு இப்போதே ஆச்சாரம் இட்டுக்கொண்டிருக்கும் பகுதி.

நம் மக்களுக்கான வேலை வாய்ப்பு, வளர்ச்சி எல்லாமும் இது போன்ற பெரும் தொழில் நிறுவனங்களை நம்பி என ஆகிவரும் சூழலில், உலகோடு ஒத்திசைந்து வாழவேண்டும் எனும் வள்ளுவன் வாய்மொழிக்கேற்ப நம்மை நாமே தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசர அவசிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது. எனவே தான் அனைவரும் ஆங்கில கல்வி பயின்று அதில் தக்க தேர்ச்சியும் பெறவேண்டும், அது தான் இனி வரும் காலங்களில் அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் என்பதை இப்போதைய அரசு உணர்ந்து இந்த திட்டத்தை அறிவித்து இருக்கிறது.

எதிர்கால கல்வி வளர்ச்சி?

ஆங்கிலம் என்பது அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் மட்டுமே பயில முடியும் என்கிற நிலையில் இருந்ததால், நம் மக்களில் 63% பேர் இன்னமும் அரசு பள்ளிகளில் தான் பயின்று வருகிறார்கள். இன்றைக்கு வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களிடம் திறமை இருக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு இல்லாததால் தான் பலரும் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கிறோம் என்கிற ஆணவத்திலேயே பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஏகபோகமாக செயல்பட்டு வருவதையும் நாம் அறிவோம்.

அரசே அரசு பள்ளிகளில் குறைந்த கட்டணத்தில் ஆங்கில கல்வி அளிப்பதன் மூலம் இனி அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கவும், தங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளவும், வேலை வாய்ப்பில் தன்னம்பிக்கையுடன் போட்டியிடவும் ஒரு சிறப்பான வாய்ப்பு ஏற்படும்.

ஆங்கில கல்வி அறிவு இல்லாததால் மேல்படிப்பு படிக்க தயங்கி 12ம் வகுப்போடு படிப்பை ஏறக்கட்டிய நிலை மாறி அனைவருமே பட்டதாரியாகவும் இது அடிப்படை வாய்ப்பாக அமையும்.

இதன் மூலம் கல்வி வளர்ச்சியும் மேம்படும். தனியார் கல்வி நிலையங்களின் ஆதிக்கமும் மட்டுப்படும். ஊரக மாணவர்களும் நகர மாணவர்களுக்கு நிகரான கல்வியறிவு பெறுவார்கள்.

இப்படியான ஒரு திட்டத்தை கண்டிக்கும் நபர்கள் யாராயினும் அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, நம் மாணவர்களை ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே அடைத்து வளர்ச்சியடைய முடியாமல் செய்ய விரும்பும் சிறுமதியாளர்கள் என்றும் முத்திரை குத்தப்படவேண்டியவர்களாகின்றார்கள்.

*** **** **** ****

பிற்சேர்க்கை : 17 ஆண்டுகளுக்கு பின் என் பள்ளிக்கு மீண்டும் சென்று வந்த நினைவலைகள். புகைப்பட தொகுப்பு http://www.facebook.com/media/set/?set=a.1210434535992.2034092.1082597225&type=3

Monday, April 15, 2013

கருணை மனு - மீண்டும் முதலிலிருந்து?



ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தூக்கு தண்டனை கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதே போன்ற மற்றொரு வழக்கின் முடிவுக்காக காத்திருந்த(?) நிலையில், அந்த வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கிலும் அதே முறை பின்பற்றப்படும் என தெரிகிறது.

உச்சநீதிமன்றம் கருணை மனுவை நிராகரித்ததோடு, உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கும் செல்லாததாகிவிட்டது. என்னை பொறுத்தவரை, ஆளுநர், உச்சநீதிமன்றம், குடியரசு தலைவர் ஆகியோர் நிராகரித்தபின்னர், மறு ஆய்வு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதே சரியல்ல. இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் குடியரசு தலைவர் தான் இறுதி அதிகாரம் மிக்கவர். அதனை எதிர்த்து மறு ஆய்வு மனு என்பது உரிய காரணங்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதே சரியல்ல.

இப்போது எல்லா முறையீடுகளும் முடிந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் ஈழ ஆதரவு அரசியல் கட்சிகள் அந்த மூவருக்கும் தண்டனையை குறைக்க வலியுறுத்துவதும், தமிழக அரசு அவசரமாக அமைச்சரவையை கூட்டி தீர்மானமியற்றி ஆளுநருக்கு அனுப்பவேண்டும் என வலியுறுத்துவதுமாக முயற்சிகள் தொடங்கி இருக்கின்றன. நீண்ட அரசியல் / அரசு அனுபவமுள்ள கலைஞரே இப்படியான கோரிக்கையை வைத்திருப்பது தான் ஆச்சரியம்.

இத்தனை நீண்டகால தண்டனையா என இப்போது கண்ணீர் உகுக்கும் கலைஞர் அவர்களுக்கே நன்றாக தெரியும், அவர்களுக்கு அளிக்கப்பட்டது தண்டனையே அல்ல என்பது. சட்டம் அவர்களுக்கான தண்டனையை உறுதி செய்தபோதும், இந்திய சட்டத்தின் படி, அவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய வாய்ப்புக்களை வழங்கும் பொருட்டும், அவர்கள் தரப்பில் ஏதேனும் ஒரு துளி நியாயமேனும் இருந்தால் அதை நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் பொருட்டும், சட்டவழியான மேல்முறையீட்டுக்கான அனைத்து வாய்ப்புக்களையும் வழங்கி அவற்றின் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருந்த காலகட்டம் தான் இத்தனை நாள். இதற்கிடையில் படித்து பட்டம் பெற விரும்பிய பேரறிவாளன் படித்து பட்டமும் பெற்றுவிட்டார். முருகன் – நளினி திருமணம் செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு சிறையிலேயே குழந்தை பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. இப்படியான வசதிகள் எந்த தண்டனை கைதிகளுக்கும் செய்துகொடுக்கப்பட்டதில்லை.

உண்மையில், அவர்கள் தண்டனை கைதிகளேயான போதும், அவர்களுக்கு அப்படி எந்த தண்டனையும் தரப்படவில்லை. மக்களிடமிருந்து அவர்களையும், அவர்களிடமிருந்து மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு அவர்கள் வேலூர் சிறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தார்களேயன்றி, தண்டனை அனுபவித்தார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது.

இந்தியாவின் மேன்மை தாங்கிய சட்ட நடைமுறை, அவர்கள் தரப்பில் ஏதேனும் நியாயம் இருக்குமா என தேடிய தேடல்கள், அதற்காக வழங்கப்பட்ட வாய்ப்புக்கள், அதன் நடைமுறை காலம் போன்றவை தான் இத்தனை நாளும் அவர்கள் தண்டிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு வந்ததன் காரணி. இப்போது எல்லா நிலையிலும் அவர்களது குற்றமும் தண்டனையும் உறுதிசெய்யப்பட்டு உள்ள நிலையில், நீண்டகாலமாக தண்டனை அனுபவித்துவிட்டார்கள் என்கிற மாயக்கதை சொல்லி விடுவிக்க வேண்டும் கலைஞரின் அறிக்கை எந்த ரீதியிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நளினியின் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க இதே கலைஞர் தான் முடிவெடுத்து அறிவித்தார். அப்போதே பிறரது கருணை மனுக்களை சட்டப்படி மட்டுமே கையாள்வதாக சொல்லியிருந்தார். இப்போது அவரே அதை மாற்றி சொல்வதற்கு காரணம், இப்போது அவர் அரசாளவில்லை என்பதும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாம் அணி அமைக்கும் யோசனையில் இருப்பதும் தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

கலைஞர் அவர்களது வேண்டுகோளில், “ஏற்கனவே நீண்டகாலம் தண்டனையை அனுபவித்து இருப்பதால், இப்போது தூக்கு தண்டனை அளிப்பது என்பது இரட்டை தண்டனையாக அமைந்துவிடும்” என்று வருத்தப்பட்டு இருக்கிறார். ஆனால், உண்மையில் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனை இத்தனை நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது என்பதும், அவர்கள் சட்ட ரீதியான நியாயமான பரிகாரத்தை தேடிக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் தண்டனை ஒத்திவைக்கப்பட்டதும் தான் உண்மை. இப்போது சட்டத்தின் எல்லா நிலையிலும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும், முதலிலிருந்து ஆளுநரிடம் கருணை மனு அளிப்பதில் தொடங்குவது சரியான நடைமுறை அல்ல.

பொதுவாகவே தமிழகத்தில் இன உணர்வு என்கிற பெயரில் இயக்க உணர்வே முன்வைக்கப்பட்டு வருவதை அனைவரும் அறிவர். இந்த மூவர் விஷயத்திலும் அவ்வாறே நடந்து வருகிறது.

இந்த மூவரின் தண்டனையை குறைக்கவேண்டும் என்பதற்காக சொல்லப்படும் காரணங்களுள் மற்றொன்று, இவர்கள் தமிழர்கள் என்பது. அப்படியானால், சிறையில் தண்டனை அல்லாமல் விசாரணை கைதிகளாக அடைபட்டுக்கிறக்கும் நூற்றுக்கணக்கான தமிழர்களை விடுதலை செய்ய இவர்கள் என்றேனும் கோரிக்கை வைத்திருக்கிறார்களா என்றால், அப்படி எதுவும் இல்லை. எனவே தமிழர்கள் என்பதற்காக தண்டனை குறைப்பு என்கிற வாதம் அடிபட்டு போய்விடுகிறது.

தமிழின உணர்வின் அடிப்படையில் இந்த அப்பாவிகளுக்காக குரல்கொடுக்கிறோம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இவர்கள் உதவியால் நடந்தேறிய இந்திய வரலாற்றின் மிகக்கொடூரமான தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தது ராஜீவ் மட்டுமல்ல, பதினைந்து அப்பாவிகளும் தான். ( பி.கே.குப்தா, இக்பால், ராஜகுரு, எட்வார்ட், ஜோசஃப் எத்திராஜ், சுந்தரராஜு, ரவி, தர்மன், சந்திரா, லதா கண்ணன், கோகிலவாணி, சாந்தனி, டேரி பீட்டர், சரோஜா தேவி, முனுசாமி.) அதிலும் ஒன்பது பேர் தமிழர்கள். அதில் ஒருவர் சிறுமி கோகிலவாணி.

தமிழினத்துக்காக ஆதரவு குரல் கொடுப்பதாக சொல்லும் எவரும் இந்த அப்பாவி தமிழர்களுக்காக எந்த குரலும் ஆதரவும் கொடுத்ததாக நினைவில்லை. உண்மையில் தமிழுணர்வாளர்கள், எங்கள் அப்பாவி தமிழ் மக்களை கொன்றுவிட்டீர்களே என கோபம் வந்திருக்கவேண்டும். ஆனால், வரவில்லை!

ஆழ்ந்து சிந்தித்து பார்க்கும் எவருக்கும், இந்த ஆதரவெல்லாம் புலிகள் இயக்க ஆதரவாளர்களுக்கு தண்டனை கிடைக்கக்கூடாது என்கிற அக்கறையின் வெளிப்பாடு என்பது புரியும். ஆனால் இயக்க ஆதரவு என வெளிப்படையாக சொல்ல முடியாத சூழலால் அதற்கு இன உணர்வு சாயம் பூசப்பட்டு இருக்கிறது.

இப்போதைய சூழலில், அரசியல் அழுத்தம் அதிகரித்துக்கொண்டு இருப்பதால், நாம் மெல்ல ஒதுங்கி நின்று சட்டம் வெல்கிறதா, பலியான அப்பாவி தமிழக தமிழர்களுக்கான நீதி வெல்கிறதா, அரசியல் அழுத்தம் வெல்கிறதா என்பதை கவனிப்போம். சாமானியனரான நம்மால் அதை தானே செய்ய முடியும்??

Printfriendly