Showing posts with label Eelam. Show all posts
Showing posts with label Eelam. Show all posts

Wednesday, March 20, 2013

மற்றுமொரு விலகல் நாடகம்!




2004 முதல் 2013 வரையிலான இந்த ஒன்பது ஆண்டு காலங்களில் திராவிட முன்னேற்ற கழகம், மத்திய அரசிலிருந்து விலகுவதாக, மத்திய கூட்டணியிலிருந்து விலகுவதாக இதுவரை ஆறு முறை அச்சுறுத்தி இருக்கிறது. அதில் மூன்று முறை தான் ஆசைப்பட்ட காரியத்தை சாதித்தும் இருக்கிறது. அந்த ஆறு முறையும் வெகு லாவகமாக பின்வாங்கி தங்கள் கட்சியின் பெயரை செவ்வனே கெடுத்துக்கொண்டும் உள்ளது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10% பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக பதவி விலகல் அச்சுறுத்தல் நடத்தி அதை தடுத்த பொது நிகழ்வாகட்டும், இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பதவி விலகல் அச்சுறுத்தல் நடத்தி மனித உரிமைகளுக்கான (பொய்யான?) வாக்குறுதியை பெற்ற சமூக நிகழ்வாகட்டும், ஏழு மத்திய அமைச்சர் பதவிகளை தரவேண்டும், அதுவும் தமிழக வளர்ச்சிக்கான துறைகளாக வேண்டும் என அச்சுறுத்தி பெற்ற சொந்த, சுயலாப, மாநில நலன் சார்ந்த நிகழ்வாகட்டும்… அவரது பதவி விலகல் நாடகத்தை எந்த சங்கடமும் இல்லாமல் தான் செய்து வந்துள்ளார்.

எனினும் இந்த முறை, அவர் விடுத்திருக்கும் அச்சுறுத்தல் என்பது உணர்வுப்பூர்வமானது மட்டுமல்ல, அவசிய தேவையானதும் கூட என்பதை எல்லா நடுநிலையாளர்களும் அறிவார்கள். மேலும், இன்றைய சூழலில், மாநிலத்தில் ஆளுங்கட்சியாகவும் இல்லை, எதிர்கட்சியாகவும் இல்லை. மாநில அரசு ஏகப்பட்ட வழக்குகளை கையில் வைத்து, மொத்த கட்சியினரையும் வளைக்க காத்துக்கொண்டிருக்கிறது. பொதுமக்களின் அபிமானத்தையும் இழந்து அனாதரவாக நிற்கிறது திமுக என்னும் பேரியக்கம். இந்த சூழலில், மத்திய அரசில் இருந்து வெளியேறுவது மட்டுமல்லாமல், மத்திய ஆளும் கூட்டணியிலிருந்தே மொத்தமாக வெளியேறுவது என்பது உச்சபட்ச ரிஸ்க் என்பதை உணராதவர்கள் இல்லை. இந்த பின்னணியில் வைத்து இந்த பதவி விலகலை காண்கையில் தான் இது மொத்த பணயம் என்பது விளங்கும்.

நேற்றிரவு குடியரசு தலைவரிடம் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளும் கடிதத்தையும், இன்று பிரதமரிடம் அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தையும் முறைப்படி சமர்ப்பித்தாயிற்று.

சரி இப்போது இத்தனை அழுத்தம் தரவேண்டிய அவசியம் என்ன?

2009-ல் இறுதிப்போரில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததற்கான ஆதாரங்களை மீடியாக்கள் அவ்வப்போது வெளிப்படுத்தி ஆவணங்களாக வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் இலங்கை தீவிரவாத ஒடுக்குதல் என்கிற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கும், மனித உரிமைகளை மீறியதற்கும் கண்டனங்களை தெரிவிக்கும் வகையில் அமெரிக்க, ஐநாவின் மனித உரிமை குழுவில் தீர்மானம் கொண்டு வரவிருக்கிறது.

அந்த தீர்மானம் வலுவானதாக இல்லை என்பதாலும், அது போர்க்குற்றம், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போன்றவை குறித்து தெளிவான குற்றச்சாட்டுக்கள் இல்லை என்பதாலும், முறையான சுதந்திரமான நடவடிக்கைகளை இலங்கைக்கு எதிராக எடுப்பதற்கான வலியுறுத்தல்கள் இல்லை என்பதாலும், அத்தகைய வலுவான திருத்தங்களை இந்தியா கொண்டுவரவேண்டும் என்கிற கோரிக்கை தமிழகத்திலிருந்து எழுந்தது.

அதை நோக்கிய பயணத்தை திமுக கடந்த 2012ம் ஆண்டே ஆரம்பித்து விட்டது. ஈழ விவகாரத்தில் ஒத்த கருத்துடைய இயக்கங்களை எல்லாம் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் வகையில் டெசோ வுக்கு மறுஜென்மம் கொடுத்து புதுப்பிக்கப்ப்ட்டது. ஐநாவிடமும் பல்வேறு நாடுகளின் பிரதமர்களிடமும் நேரில் சந்தித்து தனது கோரிக்கை மனுவை கொடுத்து விவகாரத்தின் வீரியத்தை விளக்கி சொல்லி, ஐ.நாவில் தீர்மானம் வருகையில் அதை ஆதரிக்க வேண்டுகோளும் விடுத்து விட்டு வந்தது.

இந்திய நாடாளுமன்றத்திலும், தனது குரலை கடந்த ஒராண்டு காலமாக ஓங்கி ஒலித்து வந்தது. இதன் அடிப்படையில் தான், கடந்த 2012ம் ஆண்டு ஐநாவில் தாக்கலான தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. ஆனால் அந்த தீர்மானம் மிக மென்மையாக அமைந்திருந்ததால் நாம் எதிர்பார்த்த பலனை அப்போது பெற முடியாமல் போய்விட்டது. இது வரை பட்ட அத்தனை பாடுகளும் வீணாகிப்போனதன் வலியை மனதுக்குள்ளேயே அடக்கி வைத்திருந்த திமுக, இந்த ஆண்டு அப்படி வீணாகப்போய்விடக்கூடாது என்பதற்காக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, விலகல் நாடகம்(!) நடத்தியேனும் இந்திய அரசு ஐநா தீர்மானத்தில் வலுவான திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என மெனக்கெட்டு கொண்டிருக்கிறது.

எதிர்பார்த்த பலன் கிடைக்கும் என்கிற நம்பிக்கையை இன்று, மத்திய அரசு சூசகமாக தெரிவித்து இருக்கிறது. சோனியா அவர்கள், இலங்கையிலுள்ள தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சொன்னதோடு, இந்திய அரசை எந்த நாடும் தங்கள் இஷ்டத்துக்கு வளைத்துக்கொள்வதை அனுமதிக்கமுடியாது என்பதையும்  உறுதியாக சொல்லி இருக்கிறார்.

மத்திய வெளியுறவு அமைச்சர், திரு.சல்மான் குர்ஷித், சோனியா அவர்களின் முடிவே இறுதியானது என தெரிவித்திருப்பதோடு, அவசரமாக ஐநாவுக்கான இந்திய தூதரை டெல்லி வரவழைத்து இன்று நீண்ட பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். இந்தியா ஐநா தீர்மானத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் 21ம் தேதிக்குள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால் தான் ஐநாவில் திருத்தம் கொண்டு வரமுடியும். அதனால் தான் திமுக விலகல் முடிவை அறிவித்த அதே நேரத்தில், அவருக்கு வந்த வேண்டுகோளை அடுத்து, இந்திய நாடாளுமன்றத்தில் 21ம் தேதிக்குள் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி, ஐநாவில் உரிய திருத்தங்கள் கொண்டு வந்தால், முடிவை ‘பரிசீலனை’ செய்யலாம் என்கிற ஒரு பரிகாரத்தையும் வெளியிட்டிருந்தார்.

இச்சமயத்தில், திமுகவை பகைத்துக்கொள்வது என்பது இந்திய நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் எதிர்காலத்துக்கும் ஆபத்து என்பதுணர்ந்த மத்திய அரசு, இன்று, அனைத்து கட்சி கூட்டம் கூட்டி அதில் நாடாளுமன்றத்தில் அவசர தீர்மானம் கொண்டுவருவது பற்றி விவாதித்து முடிவெடுக்கப்படும் என அறிவித்து இருக்கிறது.

இந்திய அளவில் ஈழ விவகாரத்தை கொண்டு சென்றதிலும், நாடாளுமன்றத்திலும், ஐநாவிலும், பிற உலக நாடுகளிலும் ஈழ ஆதரவை பெற்று தந்ததிலும் தனி ஒரு இயக்கமாக திமுக இயங்கியதை யாரும் மறுக்க முடியாது!

1950 களிலிருந்தே ஈழ விவகாரத்தில் முழுமையான ஆழ்ந்த அனுபவம் உள்ள கலைஞர் 1970 களிலேயே அகில இந்திய அளவில் இந்த விவகாரத்தை கொண்டு சென்று இந்திய தலைவர்களை ஈழ விவகாரத்தின்பால் ஈடுபடுத்தினார். வாஜ்பாயி, பஸ்வான், பகுகுணா போன்ற இந்திய தலைவர்கள் ஆகட்டும், தங்கபாலு, ராசாராம், போன்ற தமிழக தலைவர்கள் ஆகட்டும், எல்லோரையும் ஈழத்தின் பால் ஈர்த்து சென்றதில் அவரது பங்களிப்பு அளப்பரியது.

அது தான், இப்போதைய நாடாளுமன்ற விவாதத்தில் மிகவும் கை கொடுத்தது. பஸ்வான், யஷ்வந்த் சின்ஹா, டி.ராஜா, லாலு போன்ற தேசிய தலைவர்கள் ஈழ விவகாரம் குறித்து அக்கு வேறு ஆணி வேறாக அலசிய அந்த விவாதம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அந்த ஆதரவு தான் இன்றைக்கு நாடாளுமன்ற தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

இதுவரையும் வெறும் தமிழகம் சார்ந்த விவகாரமாக மட்டுமே இருந்துவந்த ஈழ விவகாரம், இப்போது இந்திய அளவிலான விவகாரமாக உருவெடுத்திருக்கிறது.

இத்தனை அடிப்படை கட்டமைப்பையும் ஏற்படுத்தி, ஒட்டு மொத்த இந்திய அரசியலையும் தன் பக்கம் ஈர்த்து தனக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டு வந்த பின் தான், விலகல் ‘நாடகத்தை’ அரங்கேற்றி இருக்கிறார்.

இப்போது மத்திய அரசுக்கு வேறு வழியில்லை. திமுக கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றியாகவேண்டிய ஒரு கட்டாய நிர்ப்பந்தத்தில் தத்தளிக்கிறது. இதை, நேற்றைய ப.சிதம்பரம் அவர்களின் பேட்டியில் தெளிவாக உணரமுடிந்தது.

"பொய்ம்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்”

என வள்ளுவர் சொன்னதை போல, இது வெறும் வழக்கமான நாடகமாகவே இருந்துவிட்டு போகட்டும். ஆனால் எதற்காக இந்த நாடகம் நடத்தப்பட்டதோ, அந்த நோக்கம், வழக்கம் போல நிறைவேறினால், அது தான் தமிழகத்தின் அவசிய தேவையாக இருக்கக்கூடும்.

அந்த வரம் கிடைக்குமா என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும். காத்திருப்போம்!

Thursday, March 14, 2013

மாணவர் போராட்டம் – எனது பார்வையில் – பாகம் 1


மிழகம் முழுவதும் இப்போது பரபரத்து கிடக்கிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் மாணவர் போராட்டம் வீறு கொண்டு எழுச்சி பெற்றிருக்கிறது. இந்திய அரசுக்கு எதிராகவும் இலங்கைக்கு எதிராகவும் ஒட்டுமொத்த தமிழக மாணவர் சமுதாயமும் களம் கண்டுகொண்டிருக்கிறது.

ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்றும், இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களுக்கான பொது விசாரணை நடத்தி ராஜபக்சேவை தண்டிக்கவேண்டும் என்றும், ஈழ விடுதலையை வலியுறுத்தியும், இன்ன பிற கோரிக்கைகளுமாக லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க தொடங்கியதில் தொடங்குகிறது இந்த எழுச்சி போராட்டம்.



உண்ணாவிரத செய்தி கேள்விப்பட்டதும், ஈழ விவகாரத்தை கைகொண்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளான வைகோ, நெடுமாறன், திருமாவளவன், சுப.வீரபாண்டியன், போன்றோரும், காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு போன்றோரும் மாணவர்களை சந்திக்க வந்தனர். இதில் தங்கபாலு மீது செருப்பு எறியப்பட்டு, சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பி தங்கள் கோபத்தை கொட்டி தீர்த்து விட்டனர் மாணவர்கள்.

நான்கு நாட்கள் உண்ணாவிரதம் தொடர்ந்ததை அடுத்து, தமிழக அரசு சட்டப்படி மாணவர்களை கைது செய்து, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தது. பின்னர் அந்த மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக சொல்லி போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். ஆனால், அது அங்கே முடியவில்லை. மாநிலத்தில் பல்வேறு கல்லூரிகளும் அவரவர் அளவிலே குழுக்களாக தொடர்ந்து அலை அலையாக போராடி வருகின்றனர்.

இந்த போராட்டம், தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய மாணவர் போராட்டங்களை எல்லாம் நினைவு படுத்தினாலும், பொதுமக்களின், அரசியல் கட்சிகளின், ஊடகங்களின் ஆதரவு முழுமையாக அவர்களுக்கு கிடைக்கவில்லை.

2009 ம் ஆண்டு இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்று, பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களும், ஆயிரக்கணக்கான போராளிகளூம் கொன்று குவிக்கப்பட்ட போதும், அச்சம்பவம் நிகழ்ந்து கிட்டத்தட்ட நான்காண்டுகள் முடிவடைந்த நிலையிலும் இதுவரை அது தொடர்பான பெரும் போராட்டம் எதையும் தமிழகத்தில் யாரும் நடத்தவில்லை. இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பாகும் ‘சேனல் 4’ தொலைக்காட்சியில் அவ்வப்போது வெளியிடப்படும் கொடூரமான ஆவணப்படங்களில் பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் உள்ளிட்ட அப்பாவி தமிழர்கள் எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர் என கண்டபோதும் யாரும் எந்த பெரும் கிளர்ச்சியும் செய்யவில்லை.

ஆனால், இயக்க தலைவரின் மகனான பச்சிளம் பாலகன், பாலச்சந்திரன் கொல்லப்பட்ட ஆவணப்படம் கண்டதும், ஒட்டுமொத்த தமிழகமும் கிளர்ந்தெழுந்து விட்டது. திமுக, அதிமுக இருவரும் (அதிசயமாக) ஒரே குரலில் பாராளுமன்றத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து விவாதங்களில் இறங்கின. தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சிகளும் பெரும் கண்டனத்தை தெரிவித்தன. அதை தொடர்ந்து, மாணவர்கள் எட்டு பேர் திடீரென உண்ணாவிரதம் தொடங்கி பரபரப்பை கூட்டினர்.

இதை பலரும் இன உணர்வாக அல்லாமல், இயக்க உணர்வாக பார்க்க தொடங்கியதாலேயே, நியாயமாக இந்த போராட்டத்துக்கு கிடைத்திருக்கவேண்டிய ஆதரவு கிடைக்காமல் போய்விட்டதோ என்கிற ஐயம் எனக்குண்டு! இன உணர்வு போராட்டமாக இருந்திருந்தால் 2009 லோ அல்லது அதற்கு பின்னர் இந்த நான்கு ஆண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் நடைபெற்று இருக்கும். தமிழுணர்வு எனில், சேனல் 4 ல் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டபோதே கிளர்ந்திருக்கும்.

பொதுவாகவே தமிழகத்தை பொறுத்தவரை ஈழ தமிழர்களையும், விடுதலைப்புலைகளையும் குறித்த சரியான புரிதல் இல்லாமல் இருப்பது பரவலாக உணரப்படும் ஒன்று. எனவே, புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை வைத்திருக்கும் கட்சிகள், அதை வெளிப்படையாக வெளிப்படுத்தமுடியாமல் அதற்கு தமிழுணர்வு / இன உணர்வு சாயம் பூசி மெழுகுவது மதிமுக, வி.சி பொதுக்கூட்ட பேச்சுக்களை பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட மூவரின் விடுதலைக்காக போராடுவோரும் கூட, அவர்கள் தமிழர்கள், அதனால் தமிழுணர்வின் அடிப்படையிலே அவர்களது விடுதலையை கோருகிறோம் என்று தான் போராடுகிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், அவர்களது உதவியால் நடந்தேறிய இந்திய வரலாற்றின் மிகக்கொடூரமான கொலையில், எந்த சம்மந்தமுமற்ற 15 அப்பாவிகளும் கொல்லப்பட்டனர். அவர்களும் தமிழர்களே! ஆனால், ஏனோ தமிழுணர்வு அங்கே செல்லுபடியாகவில்லை.

தமிழக தமிழர்கள் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் நிலையிலும், ஈழ தமிழர்களுக்காக போராடுவது மட்டுமே தமிழுணர்வு என பல அரசியல் இயக்கங்களால் நிறுவப்பட்டு விட்டது.

எனவே, தமிழுணர்வு, இன உணர்வு, ஈழ உணர்வு என்பதெல்லாம் உடனடியாக பலன் தரக்கூடிய விஷயங்கள் என்கிற எண்ணம் தமிழகத்திலே பரப்பப்பட்டு விட்டது. அந்த வகையிலே, மாணவர்களும் ஈழ விவகாரத்தை கையில் எடுத்து போராட தொடங்கி இருக்கிறார்கள்.

போராட்டத்தின் நோக்கமாக சொல்லப்பட்டுள்ளவற்றில் ஒன்று, மத்திய அரசு ஐநாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்பதும் ஒன்று. ஆனால், அது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வரும் நடவடிக்கையையோ, ஆளுநரிடம் பேசுவதற்கான கோரிக்கையோ, மத்திய அரசு பிரதிநிதிகளை சந்திக்கும் முயற்சியோ அவர்கள் செய்ததாக தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கின்ற காங்கிரசின் முக்கிய தமிழக தலைவரான திரு. தங்கபாலுவே மாணவர்களை சந்திக்க முன்வந்தபோது கூட, அவரை சந்திக்காமல் செருப்பெறிந்து துரத்தி அடித்து, கிடைத்தற்கரிய அரிய வாய்ப்பை கெடுத்துக்கொண்டார்கள்.

தங்கபாலு அவர்கள் ஈழ போராட்டத்தில் எந்த அளவுக்கு ஈடுபட்டு இருந்தார் என்பதை வரலாறு அறிந்தவர்கள் அறிவர். 80களில் ஈழ விவகாரத்தில் முழுமையாக ஈடுபட்டவர்களில், ஈழ விவகாரத்தின் முழு பரிணாமத்தையும் முழுமையாக அறிந்தவர்களில் இப்போது உயிர்த்திருப்பவர்கள் மிக சிலரே. கலைஞர், நெடுமாறன், வைகோ, போன்றோருடன் தங்கபாலும் அதில் அடங்குவார்.

பிரபாகரனை ஜாமீனில் எடுக்க வந்த நெடுமாறன் ஐயா அவர்களையும் அடையாறில் தங்கி இருந்த பிரபாகரனுக்கு உணவு உதவி செய்த திருமாவளவன் அவர்களையும், திமுகவின் ஈழ விவகாரத்தை கவனிக்கும் முக்கிய நபராக இருந்த வைகோவையும் ஈழ ஆதரவாளர், ஈழ போராளி என்கிற அளவுக்கு சொல்வதில் எனக்கு எந்த நெருடலும் இல்லை. ஆனால் எந்த சம்மந்தமுமே இல்லாத சீமான் போன்றோரெல்லாம் ஈழ விவகாரம் அறிந்தவர் என போற்றப்படுவதை ஜீரணிக்கவே முடியவில்லை. அப்படியான பலரையும் சந்தித்து உரையாடிய மாணவர் குழு, மத்திய அரசின் கட்சிபிரதிநிதியான தங்கபாலுவை சந்திக்க மறுத்தது மிக மிக தவறான நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன்.


மத்திய அரசு என்ன செய்யவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி போராடும் மாணவர்கள், தங்கபாலுவை சந்திக்க மறுப்பதும், எந்தவித அதிகாரமும், கடமையுணர்வும் இல்லாத பிற சிறு அரசியல் தலைவர்களை கொண்டாடுவதும் சரியாகப்படவில்லை. மத்திய அரசை நிர்ப்பந்திப்பது தான் உண்மையான நோக்கம் எனில், வலிய வந்த தங்கபாலு மூலமாகவே தங்கள் உணர்வுகளையும், வேதனைகளையும், கோரிக்கைகளையும் மத்திய அரசுக்கு எடுத்து சென்றிருக்க முடியும். அவசியமானால், மாணவ பிரதிநிதிகள் அவருடனே கூட பிரதமரையோ, வெளியுறவு துறை அமைச்சரையோ சந்தித்து பேசியிருக்க முடியும். ஆனால், அதை எல்லாம் மொத்தமாக புறக்கணித்து விட்டு, மத்திய அரசை ஈர்ப்பதற்காக போராடுகிறோம் என சொல்வது எனக்கு உண்மையில் வியப்பை தான் தருகிறது.

சுப.வீரபாண்டியன், நெடுமாறன், வைகோ, திருமாவளவன் போன்றோரது ஆதரவை மேடையிலேயே பெற்றுக்கொண்டு, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, பேட்டி அளித்த பின்னால், எங்கள் மேடையில் எந்த அரசியல் கட்சிக்கும் அனுமதியில்லை. நாங்கள் மத்திய அரசை நிர்ப்பந்திக்கவே சுயமாக போராடுகிறோம் என மழுப்புவதன் உள்ளரசியலை தமிழக மக்கள் உணராமலில்லை.

பொதுவாகவே, இணைய தளங்களில் உள்ள சில நூறு இளைஞர்களின் கருத்து தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் கருத்து என்கிற ஒரு தவறான அபிப்பிராயம் இணைய வெளிகளிலே உலாவருகிறது. ஆனால் இணைய வெளிகளை விட யதார்த்த வாழ்க்கையிலுள்ள பொதுமக்களே அதிக அரசியல் அறிவு கொண்டவர்கள் என்கிற உண்மை பலரும் அறிந்த ஒன்றே!

இதுவரையும் தமிழக மக்கள், ஈழ விவகாரத்தை கையிலெடுத்த கட்சிகளான மதிமுக, வி.சி, பாமக போன்ற கட்சிகளை புறக்கணித்தே வந்திருக்கின்றன. அதிமுக, திமுக போன்றவர்கள் தமிழக தமிழர்களுக்கான தங்கள் திட்டங்களை பற்றி மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் செய்வதன் நோக்கமும் அதுவே. தமிழக தமிழர்களை பற்றி கவலைப்படுவோருக்கே இது வரை தமிழகம் ஆதரவுகொடுத்து வந்திருக்கிறது.

அந்த அடிப்படையில் பார்த்தால், மாணவர் போராட்டத்துக்கு தமிழக பொதுமக்களின் ஆதரவு கிட்டாததில் ஆச்சரியமில்லை. ஒரு பொதுநோக்கத்துக்காகவோ, சமூக பிரச்சனைக்காகவோ மாணவர்கள் போராடுபவர்களாக இதுவரை இல்லை. இப்போதும் இல்லை.

தமிழகத்தின் தலையாய பிரச்சனையான காவிரி, மற்றும் மின்வெட்டு, சமூகத்தை சீரழிக்கும் மது, விவசாய தற்கொலை, நெசவாளர் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு சீர் குலைவு, பெண்களின் பாதுகாப்பின்மை, தொடரும் கொலை கொள்ளை, விலைவாசி உயர்வு, போன்ற சமூக பிரச்சனைகளுக்கோ, அல்லது தங்களையே நேரடியாக பாதிக்கும் தரமற்ற கல்வி, கல்வி கட்டண பிரச்சனை, சமச்சீர் கல்வி குளறுபடி, பேருந்து கட்டண உயர்வு போன்ற தங்களின் பிரச்சனைகளுக்கோ கூட தங்களுக்கென்று கருத்தோ, அதை முன்னெடுக்கின்ற போராட்டமோ அவர்கள் இது வரை செய்ததில்லை.

எனவே, மாணவர்கள், தமிழ் உணர்விலோ, சமூக உணர்விலோ, மக்கள் பிரச்சனைக்காகவோ இந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்பதை தெளிவாக தெரிந்து கொண்டதாலோ என்னவோ, தமிழக மக்களின் ஆதரவு கிடைக்காமல் போய்விட்டது.

சந்தர்ப்பவாத அரசியலை புறக்கணித்து பழகிய ஊடகங்களும் மாணவர்களை அதிகம் கண்டுகொள்ளாததன் உள்ளீடும் அதுவாக இருக்கக்கூடும்.

மத்திய அரசை நிர்ப்பந்திப்பதற்காகவோ, ஐநாவின் தீர்மானத்துக்காகவோ போராடுவதாக இருந்திருந்தால், இந்நேரம் மத்திய அரசை சந்திக்கவோ, தங்கள் கோரிக்கையை குறைந்த பட்சம் ஐநாவுக்கே அனுப்புவதற்கோ எதேனும் முயற்சியை செய்திருப்பார்கள். அதுவும் இதுவரை இல்லை! மேலும் தங்கபாலு மீதான தாக்குதல் அவர்களது நோக்கம் அதுவல்ல என்பதை மிக தெளிவாகவே எடுத்து சொல்லிவிட்டது!

மாநிலம் முழுதும் ஒருங்கிணைந்து, முன் கூட்டியே தெளிவாக திட்டமிடப்பட்டு, அனைத்து மாணவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த தமிழக போராட்டமாக தொடங்காமல், எட்டு பேர் மட்டும் திடீரென்று எந்த முன்னறிவிப்புமின்றி தொடங்குவதும், அதை வாழ்த்த அரசியல் தலைவர்கள் அன்று ஒரு நாள், ஒரே ஒரு நாள் சம்பிரதாயமாக வந்து வாழ்த்திவிட்டு சென்று பின் அமைதியானதும், அதே போன்ற போராட்டத்தை மாவட்டம் தோறும் சின்ன சின்னதாக சிலர் தொடங்குவதும், அப்படி தொடங்கியபின் மற்றவர்களின் ஆதரவையும், நிதி உதவியையும் கேட்டு கோரிக்கை விடுத்தவண்ணம் இருப்பதும், எல்லாமாக சேர்ந்து பார்த்தால் ஒரு வெற்று பரபரப்புக்கான போராட்டமாக மக்கள் முன்னிலையில் ஒரு பிம்பம் விழுவதை தவிர்க்க முடியவில்லை.

இணைய வெளிகளில், தங்கள் முக்கிய கோரிக்கையை வலியுறுத்தும் பதிவுகளை விட மிக மிக அதிகமாக, நிதி உதவி வேண்டிய விண்ணப்பங்களும், ஆதரவு கேட்டு ஊடகங்களுக்கு விடுக்கும் கோரிக்கைகளுமே கொட்டி கொண்டு இருப்பது, சலிப்பையே தருகிறது.

மிக மிக அவசியமான ஒரு கோரிக்கையை, மிக மிக சாதாரணமாக கையாண்டு, அதற்கான மரியாதையை சிதைத்து விட்டார்களே என்கிற வருத்தமும் ஊடாடுவதை தவிர்க்க முடியவில்லை!

இன்றைய நிலையில் எதற்காக இந்த போராட்டம் உண்மையில் தொடங்கப்பட்டது என்கிற தெளிவில்லாமல் இருப்பது ஒரு புறம் எனில், மாநில அரசு, பிற அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன, ஒருங்கிணைப்பில்லாத இந்த போராட்டத்தின் நிலை என்னவாகும், இனி இதை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்து செல்ல என்ன செய்யவேண்டும், மாணவர்களின் இப்போதைய நிலைப்பாட்டால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய சங்கடங்கள் என்ன என்பதை எல்லாம் யோசிக்கையில் கொஞ்சம் வருத்தமாகவும் உள்ளது. அதை பற்றியெல்லாம் அடுத்த பதிவில் இன்னும் விரிவாக நாளை எழுதுகிறேன்.

இப்போதைக்கு கனத்த மனதுடன் விடைபெறுவதை தவிர வேறென்ன செய்ய?

Monday, August 13, 2012

டெசோ மாநாடு - எனது பார்வையில்


ரு வழியாக நேற்று டெசோ மாநாடு திட்டமிட்டபடியே நடந்து முடிந்துவிட்டது. (டெசோ மாநாடு எதற்காக என்கிற ஒரு பதிவையும்; டெசோ மாநாட்டை முடக்க நடந்த செயல்களை பற்றிய பதிவையும் ஏற்கனவே படித்திருப்பீர்கள் என்பதால், நான் நேரடியாக விஷயத்துக்கே வந்துவிடுகிறேன்!)  

உயர்நீதி மன்றம் வெள்ளிக்கிழமை சென்னை கமிஷனரிடம் பொறுப்பை ஒப்படைத்தபின் அவர் நள்ளிரவு இரண்டு மணிக்கு அனுமதி மறுக்க, அவசர வழக்காக சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஞாயிறு மதியம் விசாரணைக்கு பட்டியலிட, மாலை 4 மணி கூட்டத்துக்கு அனுமதியா இல்லையா என்கிற வழக்கே மதியம் 12 மணிக்கு தான் எடுத்துக்கொள்ளப்படும் என்கிற நிலையில், மாற்று ஏற்பாடாக அண்ணா அறிவாலையத்தில் மாநாடு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் உயர்நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்ததால், திட்டமிட்டபடியே ஒய்.எம்.சி.ஏ மைதானத்திலேயே மாநாடு நடைபெற்றது.

தமிழக காவல்துறை உரிய பாதுகாப்பு தராத போதும், திமுக இளைஞரணி தொண்டர்படையினர், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் எந்த சிரமமுமின்றி மாநாட்டை நடத்தி கொடுத்தது உண்மையில் பலராலும் கவனிக்கப்படாமலேயே போய்விட்டது!

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக ஒரு தனி தனி பதிவே எழுதலாம்! அந்த அளவுக்கு விஷயமுள்ள பயனுள்ள தொலைநோக்குடைய தீர்மானங்கள் அவை. காலையில் தி.நகர் அக்கர்டு ஹோட்டலில் நடைபெற்ற கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட விஷயங்களின் அடிப்படையிலும், கலந்துகொண்ட பிரதிநிதிகளின் கருத்துக்களின் அடிப்படையிலும் அந்த தீர்மானங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன!





தனி ஈழம் வேண்டும் என  நேரடியாக கேட்காமல், சட்ட சிக்கல்களை  கருத்தில் கொண்டு, மறைமுகமாக, ஈழ மக்களின் விருப்பத்தை தெரிந்துகொள்ளும் வகையில் ஐ.நா சபை கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என  ஒரு தீர்மானம் வலியுறுத்தியிருக்கிறது.


கச்சத்தீவு மீட்பு, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுப்பது, போன்றவற்றுடன், மண்டபம் / தனுஷ்கோடியில் இந்தியாவின் கப்பற்படை தளம் அமைக்கவேண்டும் என்கிற தீர்மானம் ஈழ தமிழர் பாதுகாப்பு, தமிழக மீனவர்கள் பாதுகாப்பு என்பதையும் தாண்டி, இலங்கையில் தற்போது அதிகரித்துவரும் சீன அதிகாரத்துக்கு செக் வைக்கும் முயற்சியாகவும், இந்தியாவின் கிழக்கு கரை பாதுகாப்பை பலப்படுத்தும் தொலைநோக்கிலும் இதை நான் காண்கிறேன்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் பார்த்தாலே அவை எந்த அளவுக்கு வலிமையானவை என்பது விளங்கும். (கடைசி 2 தீர்மானங்கள் அவசியமற்றது என்பது எனது கருத்து)

இப்போது நாம் சில விவாதங்களுக்கு வருவோம். இவை இன்று ஒரு நாளில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில. அவற்றுக்கு எனக்கு தெரிந்த பதில்களை விளக்க முயன்றிருக்கிறேன்.

மு.க முதல்வராக இருந்தபோதே ஏன் இப்படி ஒரு மாநாட்டை நடத்தவில்லை?

இந்த கேள்வியை இன்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். இந்திய அரசியல் சாசனப்படியான பதவியில் இருந்துகொண்டு இந்திய இறையாண்மைக்கும், இந்தியாவுடன் ராஜீய உறவுள்ள ஒரு நாட்டின் இறையாண்மைக்கும் எதிராக செயல்பட முடியாது என்கிற அடிப்படை கூட தெரியாத பலரும் இருப்பது உண்மையில் வியப்பு தான்! அதே காரணத்துக்காக தான் அதிமுகவும் இப்போது அதை செய்ய முன்வரவில்லை. 

ஆனால், அதே நண்பர், எந்தவிதமான அரசியல் சாசன நிர்பந்தமும் இல்லாத வைகோ, நெடுமாறன், சீமான், திருமா போன்றவர்கள் ஏன் இப்படி ஒரு முயற்சியை இதுவரையும் எடுக்கவில்லை என்கிற கேள்விக்கு பதிலின்றி தவித்ததும் பரிதாபகரமானது தான். 

எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது, இப்படி ஒரு மாநாட்டை கூட்டுவதற்கான உத்வேகமும், உறுதியும், திறனும், செல்வாக்கும் திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது என்பது. ஆனாலும், கலைஞரை விமர்சித்தாகவேண்டிய கட்டாயத்தாலோ  என்னென்னவோ கேள்விகளெல்லாம் கேட்கப்படுகின்றன.

போர்முடிந்துவிட்டதாக இலங்கை சொன்னதை நம்பி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டது ஏன்?

இந்த கேள்விக்கு நேற்றுகாலை கருத்தரங்கில் பதில் சொல்லியிருக்கிறார் கலைஞர். போர் முடித்துக்கொள்ளப்பட்டதாக / நிறுத்திக்கொள்ளப்பட்டதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் பேரில் இந்திய அரசும் அந்த தகவலை தன்னிடம் தெரிவித்ததால் தான் நான் முடித்துக்கொண்டேன். இலங்கை பொய் சொல்லியிருக்கிறது என்பது அப்போது எனக்கு தெரியாதுஎன சொல்லியிருக்கிறார்.

அந்த இடத்தில் யார் இருந்திருந்தாலும் அதை தான் செய்திருப்பார்கள். காரணம் ஒரு நாட்டின் அரசு அதிகாரப்பூர்வமாக தருகின்ற தகவலை நம்பாமல் இருக்கமுடியாது. இலங்கை அரசின் உறுதிமொழியை நம்பி தான் இந்திய அரசும் தகவலை தெரிவித்திருக்கிறது. இதில் குற்றம்சாட்டப்படவேண்டியது கலைஞரை அல்ல. 

இதை இன்னொரு கோணத்திலும் நீங்கள் பார்க்கவேண்டும்.

யாரோ எங்கேயோ உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என  இலங்கை உதாசீனப்படுத்தியிருக்கலாமே? அதைவிட்டுவிட்டு, தன்னுடைய இறையாண்மையை மீறி, சட்டத்துக்கு புறம்பாக, பொய்யான ஒரு அறிவிப்பை இந்தியாவிடம் அவசரம் அவசரமாக வழங்கியிருப்பதில் இருந்தே, கலைஞரின் உண்ணாவிரத போராட்டமும் அதன் விளைவுகளையும் கண்டு, இலங்கை அரசு எந்த அளவுக்கு பயந்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். 

கலைஞர் எடுக்கின்ற முடிவுகள் என்பது, வைகோ, சீமான், திருமா போன்றவர்கள் எடுக்கும் முடிவுகள் போல அல்ல, அதற்கு வலிமையும், வீச்சும், மக்கள் ஆதரவும் அதிகம் என்பதை நம் தமிழகம் உணர்கிறதோ இல்லையோ, இலங்கை நன்றாக உணர்ந்திருக்கிறது! அதனால் தான் அப்படி ஒரு பொய் தகவலை தந்து அந்த போராட்டத்தை தடுத்திருக்கிறது இலங்கை!

இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது எதற்காக இப்படி ஒரு மாநாடு?

2009 ல் இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்து ஆயுத போராட்டம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட பின், தமிழர்களுக்கு உரிமையுள்ள பகுதிகளில், உரிய அமைதிபணிகளை செய்து, அவர்கள் நல்லபடியாக வாழ்வதற்கான முயற்சிகள் நடைபெறும் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கையில், அங்கிருந்து வருகின்ற செய்திகளெல்லாம், அங்கே தமிழர்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து வழிபாட்டிடங்களை பண்பாட்டிடங்களை தகர்த்து தமிழர்கள் வாழமுடியாத ஒரு சூழலை வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக்கொண்டிருப்பதாக சொல்கிறது. 

அதனால் தான், இனி ஐ.நா மற்றும் உலக நாடுகளின் கண்காணிப்பை வலியுறுத்து, அதன் அடிப்படையில் அங்கே நல்லதொரு வாழ்வை நம் தமிழர்கள் வாழவேண்டும் என்பதற்காக ஈழ தமிழர் வாழ்வுரிமை மாநாடு இப்போது நடைபெறுகிறது, காலம் தாழ்த்தாமல்.

ஏன் உலகநாடுகளை கெஞ்சவேண்டும்?

ராம்விலாஸ் பஸ்வான் இந்த டெசோ மாநாட்டில் பேசும்போது மிக அழகாகவும் தெளிவாகவும் ஒரு பேருண்மையை சொன்னார். 


அதன் சாராம்சம் என்னவென்றால், ஈழ தமிழர் விவகாரம் என்பது, தமிழக எல்லையோடு முடிந்துவிட்டது. மற்ற மாநிலங்களில் அதன் வீரியம் புரியவில்லை. நமக்கு அசாம் மக்களின் நிலை, காஷ்மீர் மக்களின் நிலை எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனால், தமிழர்களின் நிலை பற்றி நாம் தமிழகத்துக்கு வெளியே அந்த விவகாரத்தை கொண்டு செல்லவேயில்லை. 

உலக நாடுகளின் ஆதரவில்லாத எந்த போராட்டமும் வெற்றிபெற்றதேயில்லை. ஆனால் நாமோ தமிழகத்திலேயே மூன்று வெவ்வேறு குழுக்களாக பிரிந்து நின்று போராடிக்கொண்டிருக்கிறோம். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறோம். யாருக்கு நற்பெயர் கிடைக்கும் என்கிற போராட்டம் தான் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறதே தவிர, ஈழ தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்று இதுவரை யாரும் உருப்படியாக சிந்திக்காமலேயே இருந்துவிட்டோம். 

அதனால் தான், இந்த விஷயத்தை முதல் கட்டமாக இந்திய அளவிலேயும் பின்னர் உலக அளவிலேயும் கொண்டு சென்று அவர்களுடைய ஆதரவையெல்லாம் பெறவேண்டும் என இந்த மாநாட்டில் சொல்லப்பட்டு இருக்கிறது.

இந்திய அரசை தமிழகம் மட்டுமே நிர்ப்பந்தப்படுத்தி எதையும் சாதித்துவிடமுடியவில்லை என்பதால் தான், இந்தியாவின் முக்கிய பிற கட்சிகளின் ஆதரவையும் இதில் கோரியிருக்கிறோம். பல கட்சிகளின் ஆதரவு இருந்தால் தான், நாளைக்கு பாராளுமன்றத்தில் ஒரு தனி தீர்மானத்தை கொண்டுவந்து வெற்றிபெற வைக்க முடியும் என்பது தானே அடிப்படை?

அதேபோல, ஐ.நாவில் ஒரு தீர்மானம் கொண்டு வருவதற்கோ, ஐ.நாவின் குழுவின் கண்காணிப்பில் தமிழர்கள் அமைதி வாழ்வு வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கோ, பல்வேறு நாடுகளின் ஆதரவும் தேவை என்பதால் தான், உலகநாடுகளில், ஒத்தகருத்துடைய பிரதிநிதிகளையெல்லாம் அழைத்து இந்த மாநாட்டில் அவர்களது மேலான கருத்துக்களையெல்லாம் அறிந்து அதன் படி தீர்மானம் வடிக்கப்பட்டிருக்கிறது.

தனி ஈழம் தாருங்கள் என  தீர்மானம் போட்டால் அது கிடைக்க நியாயமில்லை. அதை விட, தமிழர்கள் அங்கே அமைதியாக வாழுவதற்கு வழிசெய்யுங்கள் என்று உலக நாடுகளை வற்புறுத்துவதில் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இது தான் சரியான உறுதியான செயல்வடிவம் பெறத்தக்கதான வழியாக இருக்கமுடியும். 

தமிழகத்துக்குள்ளேயே ஒரு மூலையில் மேடையிட்டு, ஈழ விவகாரத்தில் எதிரணியினர் எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதை விட, ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு தான் உரிய பலன் தருகின்ற ஒன்றாக இருக்கமுடியும்.

*******

இந்த மாநாட்டில் 1956ல் சிதம்பரம் நகரில் தான் முன்மொழிந்த தனி ஈழ தீர்மான விஷயத்தில் தொடங்கி ஈழ விஷயத்தில் நடந்தவைகளையெல்லாம் மிக சுருக்கமாக விவரித்த கலைஞர், அதில் நெடுமாறன் அவர்களையும், வைகோ அவர்களையும் குறிப்பிட தவறவில்லை. இன பிரச்சனையில் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டு செயல்படவேண்டும் எனபதற்கான எடுத்துக்காட்டு அது.

திருமாவளவனின் பேச்சு அவரது அறியாமையையும், ஈழ விவகாரத்தில் அவருக்கு முழுமையான விவரங்கள் தெரியாது என்பதையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. மற்றவர்களெல்லாம் ஈழ தமிழர்களை பற்றி, ஈழ விவகாரத்தைபற்றி உணர்ச்சிகரமாக பேசிக்கொண்டிருக்கையில், திருமா மட்டுமே பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா போல தேவையற்ற புகழ்ச்சியுரைகளால் நேரத்தை நிரப்பிக்கொண்டிருந்தது நெருடலாக இருந்தது.
 
மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், மத்திய அரசை பகைத்துக்கொண்டாலும் பரவாயில்லை என  மிக கடுமையான தீர்மானங்களை வலியுறுத்தியிருப்பதன் மூலம், மத்திய அரசின் எந்த நிர்பந்தத்துக்கும் நாம் பணியப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் கலைஞர். 

நான் கூட, இந்த மாநாட்டில் மேலோட்டமாக சில தீர்மானங்கள், அதுவும், இந்திய அரசை கெஞ்சுவதுபோல தீர்மானங்கள் வெளியாகும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், இந்திய அரசின் மீது நம்பிக்கையில்லை, உலக நாடுகளே நீங்கள் எங்களுக்காக குரல்கொடுங்கள் என்கிற தொனியிலான தீர்மானங்கள் வெளியாகியிருப்பதில் இருந்தே, நமக்கு நம் இனம் தான் முக்கியம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது மாநாடு!

விமர்சிப்பவர்கள் விமர்சனம் இருப்பதால் விமர்சிப்பதில்லை. கலைஞரை விமர்சிக்கவேண்டுமே என்று விமர்சிக்கிறார்கள். விமர்சனங்களை ஏற்றுக்கொள்பவர் கலைஞர் என்பதால் தான் அவரை விமர்சிக்கிறார்கள். அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்ததேவையில்லை.

தமிழகத்தில் ஈழவிவகாரத்தை வைத்து விளம்பர அரசியல் செய்துகொண்டிருக்கும் சில அரசியல்கட்சிகளை மக்கள் எப்போதோ புறக்கணித்துவிட்டனர். உணர்ச்சிகரமாக பேசுவதாலும், மற்றவர்களை குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதாலும் கைதட்டல்களை மட்டுமே வாங்கிக்கொள்ள முடியும். அது எந்த விதத்திலும், ஈழ தமிழர்களுக்கு பயனளிக்காது. 

1950களிலிருந்து ஈழவிவகாரத்தில் முழுமையாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கலைஞரை தவிர இன்றைய தேதியில் ஈழதமிழர்களின் எதிர்காலத்தை பற்றி வேறு யாரும் உருப்படியாக சிந்திக்கமுடியாது என்பதை தான் நேற்றைய தீர்மானங்கள் தெளிவுபடுத்துகின்றன. இனியும், விளம்பர அரசியல்வாதிகள் ஈழ விஷயத்தை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல், ஒரு குடையின் கீழ் ஒன்று திரண்டு, உச்சஸ்தானியில் ஈழ மக்களுக்காக குரல்கொடுக்கவேண்டும் என்பது தான் பலரது ஆசை. 

அது பேராசையுமல்ல, நப்பாசையுமல்ல என்பதை காலம் தான் உறுதிசெய்யவேண்டும்!


Friday, August 10, 2012

டெசோ மாநாடு முடக்கமா?


ரும் 12ம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருக்கும் ஈழ மக்கள் வாழ்வுரிமை மாநாடு நடைபெறுமா என்கிற சந்தேகம் இன்றைக்கு மெல்ல மெல்ல எல்லோருக்கும் வலுவாக வரத்தொடங்கிவிட்டது.

 
முதலில் விழுப்புரத்தில் நடைபெறுவதாக சொல்லப்பட்டு, பின்னர் உலகின் மிக முக்கிய பிரதிநிதிகள் எல்லோரும் வரவிருப்பதால் அவர்களது தங்குமிடம், பயணவசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சென்னைக்கு மாநாடு மாற்றப்பட்டது. (இந்த மாநாட்டை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருப்பதால் நான் அதை பற்றி விரிவாக எதையும் விவாதிக்க விரும்பவில்லை).

 
இடம் தேர்வு செய்யப்பட்டு மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. உலகின் முக்கிய பிரதிநிதிகள் பலர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.அவர்களில் சுவீடன் நாட்டை சேர்ந்த H.E. Malik Nasim Ahmed, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பை சேர்ந்த திரு.கெமால் யில்டிரிம், ஈழ தமிழர்களுக்கு ஆதரவான மலேசியாவின் பீப்பிள்ஸ் ஜஸ்டிஸ் பார்டியை சேர்ந்த திரு யுஸ்மாடி யூசுப், மொராக்கோ நாட்டின் மனித உரிமை ஆர்வலர் திரு. டாய்டா முகமது ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் தவிர, அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் பிரதிநிதி, ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களித்த நைஜீரியா நாட்டின் பிரதிநிதி, மத்திய அமைச்சர் சரத் பவார் போன்றோரும் இந்த மாநாட்டுக்கு வருகை தருகின்றனர்.



இப்படியான உலக பிரதிநிதிகளை ஒருங்கிணைக்கும் திறன், இன்றைய தேதியில் கலைஞர் அவர்களுக்கு மட்டுமே உள்ளது என்பது வைகோ போன்றோர் கூட ஒப்புக்கொள்ளும் உண்மை. ஈழ தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் வேறு எவருக்கும் அத்தகைய திறனும் இல்லை. அவர்களது வார்த்தைகளுக்கு அப்படியான எந்த செல்வாக்கும் இல்லை.

கலைஞர் இப்படியானவர்களை எல்லாம் அழைத்து, அவர்களது மேலான கருத்துக்களையெல்லாம் கேட்டு, அதன் அடிப்படையில், இலங்கையில் நம் சொந்தங்களுக்கு தனியாக நாடு வேண்டுமா, அல்லது ஒருங்கிணைந்த இலங்கையிலேயே வாழ முடியுமா? அப்படி ஒருங்கிணைந்து வாழ்வதென்றால், ஈழ தமிழர் நலனுக்காகவும், அவர்களது வாழ்வுரிமைக்காகவும் எந்தெந்த மாதிரியான சட்ட திருந்தங்கள் எல்லாம் தேவை என்றெல்லாம் விரிவாக விவாதித்து அறிந்து, அதன் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளை தீர்மானமாக்கி இந்திய அரசை வலியுறுத்துவது என்பது தான் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்.

 
தனி ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை கூட, நாம் முடிவு செய்து அந்த முடிவை அவகள் மீது திணிக்கக்கூடாது என்பதற்காக தான் ஐ.நா மேற்பார்வையில் ஈழ தமிழர்களிடம் முறையான பொது வாக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் தனி ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை பற்றி முடிவு செய்யலாம் எனவும் சொல்லப்பட்டு இருக்கிறது. அப்படி ஈழ தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பை ஐ.நா நடத்துவது என்றாலே, அதற்கான அடிப்படை ஏற்பாடுகளாக நம் ஈழ தமிழர்களுக்கு உரிய வாழ்வாதாரத்தை இலங்கை அரசு செய்துகொடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுவிடும். அது தான் அந்த ஒற்றை வரி கோரிக்கையின் மறைபொருள் நோக்கம்.



கலைஞரை பற்றி முழுமையாக எதையும் தெரிந்து கொள்ளாமல், சிறுபிள்ளைத்தனமாக இணைய வெளிகளில் விமரிசித்துக்கொண்டிருக்கும் கத்துக்குட்டிகளை விட்டு தள்ளுங்கள். ஆனால், இலங்கை அரசு அப்படியான கத்துக்குட்டி அல்ல. அதனால் தான், கலைஞரின் இந்த மாநாடு கண்டு அஞ்சி அதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அது எடுத்து வருகிறது.



இன்றைக்கு கூட மத்திய அரசு, இந்த மாநாட்டுக்கு கொடுத்திருக்கும் அனுமதியில், மாநாட்டை நடத்திக்கொள்ள அனுமதித்துவிட்டு, அந்த மாநாட்டில் ‘ஈழம்’ என்கிற வார்த்தையை பயன்படுத்த தடை விதித்து இருக்கிறது. ஈழத்தை ஈழம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவதாம்? பண்டை தமிழ் இலக்கியமான குறவஞ்சியிலேயே ‘மலையாள மின்னல்; ஈழ மின்னல்; சூழ மின்னுதே’ என இலங்கையை ஈழம் என்று தானே குறிப்பிடப்பட்டு இருக்கிறது? மத்திய அரசுக்கு இப்போது இலங்கை ஒரு வணிக சந்தை. நாம் இப்போதைக்கு இலங்கையை நம்பி தான் நம் நிறுவனங்களை மேம்படுத்தியாகவேண்டி இருக்கிறது. (அது தனியாக விவரிக்கவேண்டிய பெரிய கதை.) என்வே இலங்கை அரசை சஞ்சலப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் இந்திய அரசு செய்ய வாய்ப்பில்லை. அதனால் தான் அப்படியொரு தடை விதித்து இருக்கிறார்கள் என நான் கருதுகிறேன்.



எனவே, இலங்கை இந்த மாநாட்டை கண்டு கொள்கின்ற அச்சம் தான் மாநாட்டின் / ஈழ மக்களின் முதல் வெற்றி.



இந்த மாநாட்டை முதலில் மிக சாதாரணமாக எடுத்துக்கொண்ட ஜெ.வும் கூட இப்போது இதன் வலிமையை புரிந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது.


அதனால் தான் அவசரம் அவசரமாக மாநாட்டுக்கு இரண்டு நாளுக்கு முன்பாக இந்த மாநாட்டுக்கு அனுமதி மறுத்திருக்கிறார். இது தொடர்பாக இன்று உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சென்னை நகர காவல்துறை ஆணையாளர் மாநாடு அனுமதி பற்றி முடிவெடுப்பார் என்று நீதிமன்றம் தன் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டது.

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 8,000 பேர் மட்டுமே வர முடியும் என்பதால், சென்னையில் இந்த மாநாடு நடத்த அனுமதியில்லை எனவும், சென்னையை தவிர தமிழகத்தில் வேறு எங்கே வேண்டுமானாலும் மாநாட்டை நடத்திக்கொள்ள எந்த தடையுமில்லை எனவும் தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

 
தமிழகத்தில் வேறு எங்குவேண்டுமானாலும் மாநாடு நடத்திக்கொள்ள நாங்கள் அனுமதிக்கிறோம் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதால், அதையே கூட சாதகமாக்கி, வேறொரு இடத்தில் ஒரே நாளில் மேடையை போட்டு மாநாட்டை நடத்தி விட முடியும். அது ஒன்றும் பெரிய காரியமேயல்ல. ஆனால், ஏன் இப்படி கடைசி நேரத்தில் ஒரு தடை?

ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தான் மாநாடு நடைபெறும் என்று பல நாட்களுக்கு முன்பே தெளிவாக எல்லா ஊடகங்களிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போதே அதை மறுத்திருக்கலாமே? கடந்த வாரம் கலைஞர் அவர்கள விழா ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவருடன் தமிழக போலீசும் தானே உடன் சென்றது? அப்போதே அந்த இடத்தில் மாநாடு நடத்தவேண்டாம் என மறுத்திருக்கலாமே? இலைமறை காய்மறையாக நடைபெறுகின்ற விஷயங்களை கூட கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் உளவுப்பிரிவுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட இந்த மாநாடும் அது நடைபெறும் இடமும் தெரியவில்லை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?

எனவே, இப்படி கடைசி நேரத்தில் இந்த மாநாட்டை முடக்கி வைப்பதற்கான நோக்கமும் அதன் நுண்ணரசியலும் வேறு!

டெசோ பற்றி ஜெ. குறைத்து மதிப்பிட்டுவிட்டாரோ என்று எனக்கொரு ஐயம். இப்போது டெசோ மாநாட்டுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டும், இன்னும் ஒரு வருடத்தில் பாராளுமன்ற தேர்தல் வருவதை கருத்தில் கொண்டும், கலைஞரின் இந்த மாநாட்டை தடை செய்துவிட்டு, விரைவில், தானே ஈழ தமிழர்களுக்கான ஒரு மாநாட்டை நடத்தி (வைகோ, சீமான் வகையறாக்களையும் சேர்த்துக்கொண்டு?) ஈழ தாய் என சீமான் கொடுத்த பட்டத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு திட்டம் இருக்கிறதோ என்று கூட எனக்கு தோன்றுகிறது.

பார்ப்போம் என்ன தான் நடக்கிறதென்று!

Printfriendly