Showing posts with label Parliament. Show all posts
Showing posts with label Parliament. Show all posts

Saturday, September 14, 2013

தாமரையை மலர்த்துவாரா மோடி?


நேற்று நடந்த பாஜக காரிய கமிட்டி கூட்டத்தில் குஜராத் முதலமைச்சர் திரு. நரேந்திர மோடி அவர்களை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தி வெளியானதில் இருந்து இரு வேறு கருத்துக்கள் நாடெங்கும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. மோடி பிரதமராக வரக்கூடாது என ஒரு சாராரும், அவர் தான் வரவேண்டும் என ஒரு சாராரும் கடுமையாக விவாதிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

நேற்று மாலை மோடி அவர்கள், தான் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த மகிழ்ச்சியையும் தனது பொறுப்பையும் பற்றி மிக சிறந்த ஒரு உரை ஆற்றினார். கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால், நம்பிக்கை அளிக்கும் வாக்குறுதிகளால் மிக அருமையானதொரு உரை அது. நான் கேட்ட வரையில் மோடியின் மிக சிறந்த பேச்சு அது தான்.

மோடி மிக சிறந்த நிர்வாகி என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. குஜராத் மாநிலத்தின் இப்போதைய வளர்ச்சி, உள்கட்டமைப்பு, சீரிய நிர்வாகம் இதனை எல்லாம் நான் சூரத், வதோதரா, கச், அஹமதாபாத் போன்ற நகரங்களுக்கு சென்றபோதெல்லாம் கண்டு வியந்திருக்கிறேன். அங்குள்ள எனது நண்பர்கள் பலரும் மோடியின் அருமைகளை விளக்கமாக எடுத்து சொன்னார்கள். இன்றைக்கு தொழில், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு என பல துறைகளிலும் குஜராத் முன்னணியில் இருப்பதற்கு மோடியின் செயல்களும் திட்டங்களும் தான் அடிப்படை காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தொடர்ந்து அடுத்தடுத்து முதல்வராக அவர் நீடிப்பதன் காரணமும் அது தான். பரவலாக மாநிலம் முழுமையும் மோடி குறித்தான மிக நல்ல அபிப்பிராயமே நிலவுவதை நான் கண்டிருக்கிறேன்.

அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு என பார்த்தால் வகுப்பு வாதம், கோத்ரா கலவரம், கலவரத்தை ஊக்குவித்தது, இனப்படுகொலைக்கு துணை நின்றது போன்றவையாக மட்டும் தான் இருக்கமுடியும். அதுவும் இன்னமும் சட்டரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஒரு ஊகம் தான். எப்படி பார்த்தாலும் குஜராத்தை பொறுத்தவரை மோடி தான் ஹீரோ. அதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆனால் பிரதமர் பதவி வேட்பாளர் என வரும்பொழுது நான் குஜராத் முதலவராக மட்டுமே மோடியை பார்க்க விரும்பவில்லை. பிரதமர் பதவி என்பது நாடு முழுமைக்குமான பொதுவான பதவி. மேலும், அவர் முன் நிறுத்தப்படுவது பாஜக கட்சியின் பிரதமர் வேட்பாளராக.

இதை இரண்டு விதமாக அலசுவது நல்லது. ஒன்று, பாஜக என்கிற கட்சிக்கு இந்தியாவில் இப்போதைய நிலை என்ன என்பது. இரண்டு, மோடி என்கிற தலைவருக்கு அவரது சொந்த கட்சியான பாஜகவிலும், நாடு முழுமையுமுள்ள பொதுமக்களிடமும் உள்ள பிம்பம், செல்வாக்கு ஆகியவை என்ன என்பது. இந்த இரண்டு விஷயங்களின் அடிப்படையில் தான் நான் மோடி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன் நிறுத்தப்படுவதை கவனிக்க விரும்புகிறேன்.

பாரதிய ஜனதா கட்சி என்பது அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அடிப்படை கொள்கை என்ன என்பதுவும் எல்லோருக்கும் தெரியும். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்தில் யாரும் ஒரு மதம் சார்ந்த கொள்கையினை முன்னெடுத்து அரசியல் செய்வதை விரும்பமாட்டார்கள்.

இன்றைய தேதியில் பாஜகவின் வலுவான செல்வாக்கு என்பது ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் என்பதோடு, ஓரளவு செல்வாக்காக உத்தரபிரதேசம், உத்தரகாண்டு, பீஹார், ஜார்கண்டு, சட்டிஸ்கார், ஆகிய மாநிலங்களிலும் இருக்கிறது. இதை சற்று பரவலாக பார்த்தால், வட இந்தியாவின் ஒரு பகுதி, மேற்கு இந்தியா, மத்திய இந்தியா ஆகிய பகுதிகளில் மட்டும் தான் பாஜகவுக்கு ஆதரவுள்ளது என்பது புரியும். தென்மாநிலங்களில் கர்நாடகத்தில் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவு.

வடகிழக்கு மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள், தெற்கு இந்தியா, உச்ச வட இந்திய மாநிலங்கள் ஆகியவற்றில் பாஜகவுக்கு என எந்த செல்வாக்கும் இல்லை. கட்சியை இந்த பகுதிகளில் வளர்ப்பதற்கான எந்த முயற்சியையும் இதுவரை பாஜக எடுக்கவும் இல்லை. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, ஏ.பி.வி.பி, சங் பரிவார் போன்றவை அதிக பலத்துடன் உள்ள மேற்கு & மத்திய இந்தியாவை மட்டுமே முன்னிறுத்தி இதுவரை அரசியல் செய்துவந்த கட்சி தான் பாஜக. எனவே மிக பெரும்பான்மையான நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் பா.ஜ.க செல்வாக்காக இல்லை என்பது தெளிவாக விளங்கும்.

வட இந்தியாவை எடுத்துக்கொண்டால், உத்தரபிரதேசம் & உத்தரகாண்டு தான் இந்தியாவின் மிக அதிகமான நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட பகுதி. பஹுஜன் சமாஜ் பார்ட்டி, சமாஜ்வாடி பார்ட்டி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் தான் இந்த பகுதியில் செல்வாக்காக உள்ளது. பீஹாரில் நிதிஷ்குமாரும் லாலுவும் கோலோச்சுகிறார்கள். ஒடிஷாவில் பிஜு ஜனதா தளமும், பஞ்சாபில் அகாலிதளமும், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் & கம்யூனிஸ்டு கட்சிகளும், அசாமில் அசாம் கன பரிஷத்தும், மிக அதிக செல்வாக்குடன் இருக்கின்றனர். இந்த அத்தனை மாநிலங்களிலும் இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் தான் இப்போதும் இருக்கிறது.

தென் இந்தியாவை எடுத்துக்கொண்டால் ஆந்திராவில் தெலுங்கு தேசம், தமிழகத்தில் அதிமுக & திமுக, கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆகியவை ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் இருக்கிறது. ஆந்திராவில் இப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், செல்வாக்கு அடிப்படையில் அது இரண்டாம் இடத்தில் தான் இருக்கிறது.

எனவே சுருக்கமாக பார்த்தால் நாடு முழுதும் பரவலாக எல்லா மாநிலத்திலும் அந்தந்த மாநில கட்சிகளின் கையே ஓங்கி இருக்கின்றன. இரண்டாவதாக இருக்கும் காங்கிரஸுக்கும் கிட்டத்தட்ட ‘எல்லா’ மாநிலங்களிலும் கணிசமான ஓட்டுவங்கி நிரந்தரமாக இருக்கிறது.


ஆட்சி பெரும்பான்மையான 272 எம்.பிக்களை வென்றெடுப்பது தான் பிரதமர் பதவிக்கான அடிப்படை தகுதி என எடுத்துக்கொண்டால், என்னை பொறுத்தவரை காங்கிரஸ் அதை எளிதாக எட்டிப்பிடித்துவிடும் என்றே நினைக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் நாட்டு வளர்ச்சிக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் அவர்கள் கொண்டுவந்த அருமையான திட்டங்களை விரிவாகவும் முறையாகவும் எடுத்து சொன்னாலே போது. பயனை அனுபவித்தவர்கள் திட்டத்தின் நன்மை உணர்ந்து எளிதாக காங்கிரஸை ஆதரித்துவிடுவார்கள்.

காங்கிரஸுக்கு அடுத்தபடியாக மாநில கட்சிகள் அள்ளிக்கொள்வது போக, மீதமிருக்கும் தொகுதிகள் தான் பாஜகவுக்கு கிடைக்கக்கூடும். எனினும், பாஜக மிகுந்த செல்வாக்காக இருக்கும் மேற்கு, மத்திய இந்தியாவில் கணிசமான தொகுதிகளை வென்றெடுப்பதன் மூலம், எதிர்கட்சி வரிசையை தக்கவைத்துக்கொள்வதில் ஒன்றும் சிரமமிருக்காது என்றே நினைக்கிறேன்.


எனது இத்தனை கணக்கும், மூன்றாவது அணி என ஒன்று அமையாத நிலையில் தான். ஒருவேளை, மூன்றாவது அணி அமையுமானால், மாநில கட்சிகளின் தனி செல்வாக்கு ஓங்குமானால், எதிர்கட்சி வரிசை மூன்றாம் அணிக்கு கிடைக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், காங்கிரஸ் மீதான அதிருப்தியை சரியாக ஊதி பெரிதாக்க முடிந்து, மூன்றாவது அணியில் ஒற்றுமையும் இருந்து, பிரதமர் பதவிக்காக ஏகமனதாக ஒரு நபர் முன்னிறுத்தப்படுவாரேயானால், மூன்றாவது அணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கூட கிட்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மூன்றாவது அணி என நான் நினைக்கும் அணியில் நிறைய பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் சமாதானம் செய்து ஒருவர் வென்று நிற்பது கஷ்டம் தான்.

கட்சி சார்ந்து இது தான் பாஜகவின் தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் கள நிலை.

மோடி, மிக சிறந்த நிர்வாகி என்றாலும் கூட அவரது கட்சியிலேயே கூட அவர் 'ஏகமனதாக' வேட்பாளராக்கப்படவில்லை என்பதை நாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும். பாஜகவில் நிறைய அணிகள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். சுஷ்மா சுவராஜ், அத்வானி ஆகியோருக்கு பிரதமர் பதவி ஆசை இருந்ததும், அதற்காக அணிகள் அமைத்துக்கொண்டதும் பிரசித்தமான விஷயம்.


இப்போது கூட மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் தனது அதிருப்தியை அத்வானி வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். அத்வானி கிட்டத்தட்ட பாதி பாஜகவின் தலைவர். எனவே அவரது அதிருப்தி மோடியின் கனவுகளை தகர்த்துவிடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ராஜ்நாத் சிங்கின் தன்னிச்சையான முடிவு தான் மோடியை முன்னிறுத்துவது என்கிற வெதும்பல் சுஷ்மா ஆதரவாளர்களுக்கும், பாதி பாஜகவின் செல்வாக்கு மிக்க தலைவரான அத்வானிக்கும் இருப்பதை கவனத்தில் கொண்டால், சொந்த கட்சியினரையே சமாதானப்படுத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியாத மோடியின் திறமையின்மை பளிச்சென விளங்கும்.

மோடி நிர்வாகி என்பது ஒரு புறம். அடிப்படையில் அவரது மன ஓட்டம் என்பது வீரிய ஹிந்துத்துவாவை சார்ந்தது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அவரது வெளியுறவு கொள்கை அவ்வளவு பாராட்ட தக்கதல்ல. இன்றைக்கு கூட அமெரிக்கா, மோடிக்கான தனது விசா கொள்கையை உறுதி செய்திருக்கிறது. கோபம், பிடிவாதம், தீவிர ஹிந்துத்துவா, பின் விளைவுகள் குறித்த கவலையின்றி முடிவுகள் எடுத்து சிக்கலாக்கி கொள்வது என சமீப காலமாக மோடியின் செயல்பாடுகள் கவலையளிக்கக்கூடியவை தான். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதே தினத்தில் குஜராத் உயர்நீதிமன்றம், உள்கட்டமைப்பு, சாலைகளின் நிலை, நிர்வாக சீர்கேடு ஆகியவற்றுக்காக மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதையும் கவனிக்கவேண்டும். சூரத், அஹமதாபாத், வதோதரா போன்ற நகரங்களை மட்டுமே காட்டி மாநிலம் வளர்ந்துவிட்டது என விளம்பரம் செய்கிறார் என்கிற பிற கட்சியினரின் குற்றச்சாட்டுக்கள் உண்மையோ என்கிற ஐயம் பரவலாக தோன்ற தொடங்கி இருக்கிறது. அவருக்கென அமைக்கப்பட்ட தனியார் விளம்பர நிறுவனம், அவரது செல்வாக்கை உயர்த்துவதாக சொல்லி செய்யும் செய்கைகளில் உண்மையில் அவரது செல்வாக்கு சரிந்துகொண்டு தான் வருகிறது. இந்தியாவிலேயே தனது சுய செல்வாக்கை மேம்படுத்துவதற்காக தனியார் நிறுவனத்தை நியமித்து அவர்களின் ஆலோசனையின் படி செயல்படும் ஒரே தலைவர் என்கிற பெருமையும் மோடிக்கே உள்ளது!



பொதுவாக பாஜக கட்சி தலைவர்களில் வாஜ்பாயி மிதவாதி, எல்லோரையும் அனுசரித்து செல்லக்கூடியவராக இருந்தார். அத்வானி முன்பு பிடிவாத போக்கு கொண்டவராக விளங்கினாலும், தற்போது அவரும் மிதவாதியாகவே மாறிவிட்டார். நாட்டு நலன் சார்ந்த சிந்தனைகளும் கருத்துக்களும் அவரது தனிப்பட்ட வலைப்பூங்காவில் அதிகம் காணமுடிகிறது. மோடி அப்படிப்பட்டவரல்ல. எனவே பிரதமர் பதவி என்கிற உயர் அந்தஸ்து கிடைக்குமானால், அவரது செயல்பாடு என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்கவே முடியவில்லை. நம்மை போன்ற பொதுமக்களை விடுங்கள், பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒரு சாராருக்கே அந்த அச்சம் இருக்கிறதை உணரமுடிகிறது.

இதெல்லாம், 2014ம் ஆண்டு இறுதியில் முறைப்படி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதாக இருந்தால் இருக்கக்கூடிய சூழல் தான். ஒருவேளை காங்கிரஸ் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்து, மூன்றாம் அணி இன்னும் அமையவில்லை, பாஜவிலும் அதிருப்தி நிறைந்திருக்கிறது, இந்த சமயத்தில் முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தலை நடத்திவிட்டால் மொத்தமாக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்துவிட சாத்தியமிருப்பதை உணர்ந்து செயல்பட்டால், எல்லா கணக்குகளும் முடிந்தது.

நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும்? சொந்த கட்சியான பாஜகவின் தலைவர்களை மோடியால் சமாதானப்படுத்த முடிகிறதா? இந்திய மக்கள் அனைவரின் ஆதரவையும் பரவலாக பாஜக பெற முடியுமா? மூன்றாவது அணி அமையுமா? அப்படி அமைந்தால் மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் யார்? பாஜகவின் கூட்டணி நிலைப்பாடு என்ன? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கான விடையில் தான் இருக்கிறது மோடியின் பிரதமர் கனவு.

இப்போதைக்கு பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்ததையே மிகப்பெரிய வெற்றியாக கருதி அவரது ஆதரவாளர்கள் நாடுமுழுதும் கொண்டாடிக்கொண்டிருக்கட்டும். அதில் எந்த சங்கடமும் யாருக்கும் இல்லை!

Wednesday, March 20, 2013

மற்றுமொரு விலகல் நாடகம்!




2004 முதல் 2013 வரையிலான இந்த ஒன்பது ஆண்டு காலங்களில் திராவிட முன்னேற்ற கழகம், மத்திய அரசிலிருந்து விலகுவதாக, மத்திய கூட்டணியிலிருந்து விலகுவதாக இதுவரை ஆறு முறை அச்சுறுத்தி இருக்கிறது. அதில் மூன்று முறை தான் ஆசைப்பட்ட காரியத்தை சாதித்தும் இருக்கிறது. அந்த ஆறு முறையும் வெகு லாவகமாக பின்வாங்கி தங்கள் கட்சியின் பெயரை செவ்வனே கெடுத்துக்கொண்டும் உள்ளது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10% பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக பதவி விலகல் அச்சுறுத்தல் நடத்தி அதை தடுத்த பொது நிகழ்வாகட்டும், இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பதவி விலகல் அச்சுறுத்தல் நடத்தி மனித உரிமைகளுக்கான (பொய்யான?) வாக்குறுதியை பெற்ற சமூக நிகழ்வாகட்டும், ஏழு மத்திய அமைச்சர் பதவிகளை தரவேண்டும், அதுவும் தமிழக வளர்ச்சிக்கான துறைகளாக வேண்டும் என அச்சுறுத்தி பெற்ற சொந்த, சுயலாப, மாநில நலன் சார்ந்த நிகழ்வாகட்டும்… அவரது பதவி விலகல் நாடகத்தை எந்த சங்கடமும் இல்லாமல் தான் செய்து வந்துள்ளார்.

எனினும் இந்த முறை, அவர் விடுத்திருக்கும் அச்சுறுத்தல் என்பது உணர்வுப்பூர்வமானது மட்டுமல்ல, அவசிய தேவையானதும் கூட என்பதை எல்லா நடுநிலையாளர்களும் அறிவார்கள். மேலும், இன்றைய சூழலில், மாநிலத்தில் ஆளுங்கட்சியாகவும் இல்லை, எதிர்கட்சியாகவும் இல்லை. மாநில அரசு ஏகப்பட்ட வழக்குகளை கையில் வைத்து, மொத்த கட்சியினரையும் வளைக்க காத்துக்கொண்டிருக்கிறது. பொதுமக்களின் அபிமானத்தையும் இழந்து அனாதரவாக நிற்கிறது திமுக என்னும் பேரியக்கம். இந்த சூழலில், மத்திய அரசில் இருந்து வெளியேறுவது மட்டுமல்லாமல், மத்திய ஆளும் கூட்டணியிலிருந்தே மொத்தமாக வெளியேறுவது என்பது உச்சபட்ச ரிஸ்க் என்பதை உணராதவர்கள் இல்லை. இந்த பின்னணியில் வைத்து இந்த பதவி விலகலை காண்கையில் தான் இது மொத்த பணயம் என்பது விளங்கும்.

நேற்றிரவு குடியரசு தலைவரிடம் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளும் கடிதத்தையும், இன்று பிரதமரிடம் அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தையும் முறைப்படி சமர்ப்பித்தாயிற்று.

சரி இப்போது இத்தனை அழுத்தம் தரவேண்டிய அவசியம் என்ன?

2009-ல் இறுதிப்போரில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததற்கான ஆதாரங்களை மீடியாக்கள் அவ்வப்போது வெளிப்படுத்தி ஆவணங்களாக வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் இலங்கை தீவிரவாத ஒடுக்குதல் என்கிற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கும், மனித உரிமைகளை மீறியதற்கும் கண்டனங்களை தெரிவிக்கும் வகையில் அமெரிக்க, ஐநாவின் மனித உரிமை குழுவில் தீர்மானம் கொண்டு வரவிருக்கிறது.

அந்த தீர்மானம் வலுவானதாக இல்லை என்பதாலும், அது போர்க்குற்றம், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போன்றவை குறித்து தெளிவான குற்றச்சாட்டுக்கள் இல்லை என்பதாலும், முறையான சுதந்திரமான நடவடிக்கைகளை இலங்கைக்கு எதிராக எடுப்பதற்கான வலியுறுத்தல்கள் இல்லை என்பதாலும், அத்தகைய வலுவான திருத்தங்களை இந்தியா கொண்டுவரவேண்டும் என்கிற கோரிக்கை தமிழகத்திலிருந்து எழுந்தது.

அதை நோக்கிய பயணத்தை திமுக கடந்த 2012ம் ஆண்டே ஆரம்பித்து விட்டது. ஈழ விவகாரத்தில் ஒத்த கருத்துடைய இயக்கங்களை எல்லாம் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் வகையில் டெசோ வுக்கு மறுஜென்மம் கொடுத்து புதுப்பிக்கப்ப்ட்டது. ஐநாவிடமும் பல்வேறு நாடுகளின் பிரதமர்களிடமும் நேரில் சந்தித்து தனது கோரிக்கை மனுவை கொடுத்து விவகாரத்தின் வீரியத்தை விளக்கி சொல்லி, ஐ.நாவில் தீர்மானம் வருகையில் அதை ஆதரிக்க வேண்டுகோளும் விடுத்து விட்டு வந்தது.

இந்திய நாடாளுமன்றத்திலும், தனது குரலை கடந்த ஒராண்டு காலமாக ஓங்கி ஒலித்து வந்தது. இதன் அடிப்படையில் தான், கடந்த 2012ம் ஆண்டு ஐநாவில் தாக்கலான தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. ஆனால் அந்த தீர்மானம் மிக மென்மையாக அமைந்திருந்ததால் நாம் எதிர்பார்த்த பலனை அப்போது பெற முடியாமல் போய்விட்டது. இது வரை பட்ட அத்தனை பாடுகளும் வீணாகிப்போனதன் வலியை மனதுக்குள்ளேயே அடக்கி வைத்திருந்த திமுக, இந்த ஆண்டு அப்படி வீணாகப்போய்விடக்கூடாது என்பதற்காக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, விலகல் நாடகம்(!) நடத்தியேனும் இந்திய அரசு ஐநா தீர்மானத்தில் வலுவான திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என மெனக்கெட்டு கொண்டிருக்கிறது.

எதிர்பார்த்த பலன் கிடைக்கும் என்கிற நம்பிக்கையை இன்று, மத்திய அரசு சூசகமாக தெரிவித்து இருக்கிறது. சோனியா அவர்கள், இலங்கையிலுள்ள தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சொன்னதோடு, இந்திய அரசை எந்த நாடும் தங்கள் இஷ்டத்துக்கு வளைத்துக்கொள்வதை அனுமதிக்கமுடியாது என்பதையும்  உறுதியாக சொல்லி இருக்கிறார்.

மத்திய வெளியுறவு அமைச்சர், திரு.சல்மான் குர்ஷித், சோனியா அவர்களின் முடிவே இறுதியானது என தெரிவித்திருப்பதோடு, அவசரமாக ஐநாவுக்கான இந்திய தூதரை டெல்லி வரவழைத்து இன்று நீண்ட பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். இந்தியா ஐநா தீர்மானத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் 21ம் தேதிக்குள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால் தான் ஐநாவில் திருத்தம் கொண்டு வரமுடியும். அதனால் தான் திமுக விலகல் முடிவை அறிவித்த அதே நேரத்தில், அவருக்கு வந்த வேண்டுகோளை அடுத்து, இந்திய நாடாளுமன்றத்தில் 21ம் தேதிக்குள் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி, ஐநாவில் உரிய திருத்தங்கள் கொண்டு வந்தால், முடிவை ‘பரிசீலனை’ செய்யலாம் என்கிற ஒரு பரிகாரத்தையும் வெளியிட்டிருந்தார்.

இச்சமயத்தில், திமுகவை பகைத்துக்கொள்வது என்பது இந்திய நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் எதிர்காலத்துக்கும் ஆபத்து என்பதுணர்ந்த மத்திய அரசு, இன்று, அனைத்து கட்சி கூட்டம் கூட்டி அதில் நாடாளுமன்றத்தில் அவசர தீர்மானம் கொண்டுவருவது பற்றி விவாதித்து முடிவெடுக்கப்படும் என அறிவித்து இருக்கிறது.

இந்திய அளவில் ஈழ விவகாரத்தை கொண்டு சென்றதிலும், நாடாளுமன்றத்திலும், ஐநாவிலும், பிற உலக நாடுகளிலும் ஈழ ஆதரவை பெற்று தந்ததிலும் தனி ஒரு இயக்கமாக திமுக இயங்கியதை யாரும் மறுக்க முடியாது!

1950 களிலிருந்தே ஈழ விவகாரத்தில் முழுமையான ஆழ்ந்த அனுபவம் உள்ள கலைஞர் 1970 களிலேயே அகில இந்திய அளவில் இந்த விவகாரத்தை கொண்டு சென்று இந்திய தலைவர்களை ஈழ விவகாரத்தின்பால் ஈடுபடுத்தினார். வாஜ்பாயி, பஸ்வான், பகுகுணா போன்ற இந்திய தலைவர்கள் ஆகட்டும், தங்கபாலு, ராசாராம், போன்ற தமிழக தலைவர்கள் ஆகட்டும், எல்லோரையும் ஈழத்தின் பால் ஈர்த்து சென்றதில் அவரது பங்களிப்பு அளப்பரியது.

அது தான், இப்போதைய நாடாளுமன்ற விவாதத்தில் மிகவும் கை கொடுத்தது. பஸ்வான், யஷ்வந்த் சின்ஹா, டி.ராஜா, லாலு போன்ற தேசிய தலைவர்கள் ஈழ விவகாரம் குறித்து அக்கு வேறு ஆணி வேறாக அலசிய அந்த விவாதம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அந்த ஆதரவு தான் இன்றைக்கு நாடாளுமன்ற தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

இதுவரையும் வெறும் தமிழகம் சார்ந்த விவகாரமாக மட்டுமே இருந்துவந்த ஈழ விவகாரம், இப்போது இந்திய அளவிலான விவகாரமாக உருவெடுத்திருக்கிறது.

இத்தனை அடிப்படை கட்டமைப்பையும் ஏற்படுத்தி, ஒட்டு மொத்த இந்திய அரசியலையும் தன் பக்கம் ஈர்த்து தனக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டு வந்த பின் தான், விலகல் ‘நாடகத்தை’ அரங்கேற்றி இருக்கிறார்.

இப்போது மத்திய அரசுக்கு வேறு வழியில்லை. திமுக கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றியாகவேண்டிய ஒரு கட்டாய நிர்ப்பந்தத்தில் தத்தளிக்கிறது. இதை, நேற்றைய ப.சிதம்பரம் அவர்களின் பேட்டியில் தெளிவாக உணரமுடிந்தது.

"பொய்ம்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்”

என வள்ளுவர் சொன்னதை போல, இது வெறும் வழக்கமான நாடகமாகவே இருந்துவிட்டு போகட்டும். ஆனால் எதற்காக இந்த நாடகம் நடத்தப்பட்டதோ, அந்த நோக்கம், வழக்கம் போல நிறைவேறினால், அது தான் தமிழகத்தின் அவசிய தேவையாக இருக்கக்கூடும்.

அந்த வரம் கிடைக்குமா என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும். காத்திருப்போம்!

Monday, August 27, 2012

நம்பிக்கை வாக்கெடுப்பு – நியாயத்தீர்ப்பா?



ன்றைய தினம் அகில இந்தியாவையும் பரபரப்பாக்கிக்கொண்டிருக்கும் விஷயம், பிரதமர் ராஜினாமா செய்யவேண்டும் என நாடாளுமன்றத்தில் தினசரி நடைபெற்றுவரும் எதிர்கட்சிகளின் அமளி தான்!

எப்போதுமே எதிர்கட்சிகள் இப்படி எதையாவது ஒரு விஷயத்தை கையில் எடுத்து பிரதமரை ராஜினாமா செய்ய சொல்வதும், பிரதமர் மறுப்பதும், காங்கிரஸ் பிரதமரை பாதுகாப்பதும், நாடாளுமன்றத்தில் எந்த அலுவலும் நடைபெறாமல் முடங்கசெய்வதும் வழக்கமான ஒன்று தான்! ஆனால் இப்போதைய விஷயம் கொஞ்சம் கவனிக்க தக்க ஒன்று!

நிலக்கரி சுரங்கத்தை ஏலம் விட்டதில் கிட்டத்தட்ட ரூபாய். 1, 80,000 கோடி அரசுக்கு இழப்பு என்று தணிக்கை துறை கொடுத்திருக்கும் அறிக்கையின் அடிப்படையில் அது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும், அதற்காக தார்மீக பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்யவேண்டும் என்பது தான் இப்போதைய கோரிக்கை!

ஏற்கனவே 2G வழக்கில் இதே போலொரு குற்றச்சாட்டை மத்திய தணிக்கை துறை கொடுத்ததுமே, அவசரம் அவசரமாக வழக்கு பதிவு செய்து அந்த துறையின் அமைச்சராக இருந்த ராஜா ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டு, பதவி விலகியபின் கைது செய்யப்பட்டார். அது போலவே, இந்த வழக்கையும் கையாண்டு, பிரதமரை பதவி நீக்கம் செய்து அவரை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்பது தான் எதிர்கட்சிகளின் வாதம்.

2G வழக்கு யூகமான வழக்கு என்பதும் நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு நிச்சயமான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலான ஒன்று என்பதும் ஏற்கனவே இது குறித்த எனது பதிவை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும்!

நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டு தவறானது. மத்திய தணிக்கை துறை தனது வரம்பு மீறி செயல்படுகிறது. தவறான தகவல்களை கொடுக்கிறது என மத்திய அரசு சொல்கிறது. இந்த விவகாரம் குறித்து கருத்து சொன்ன, என் மதிப்பிற்குறிய திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் கூட, ராஜாவை பதவி நீக்கியதற்கு காரணம் அவர் அமைச்சர். ஆனால் பிரதமர் தான் இந்த அரசின் அச்சாணி. அதனால் அவவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என  சொல்லி இருக்கிறார். சுரங்கத்துக்கு அனுமதி தான் கொடுக்கப்பட்டு இருக்கிறதே தவிர, அதில் இருந்து ஒரு டன் நிலக்கரி கூட இன்னமும் வெட்டி எடுக்கப்படவில்லை. அப்படியிருக்க ஒரு பைசா கூட அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை என  மத்திய அமைச்சர். ப. சிதம்பரமும் முட்டாள்தனமான பேட்டி அளித்திருக்கிறார்.

இப்படியான சூழலில் இன்றைக்கு பிரதமர் அவர்கள் பாராளுமன்றத்தில் விளக்கங்களை கொடுக்கும் போது, இந்த விவகாரத்தில் தார்மீக பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து இருக்கிறார். ஆனால் பதவி விலகுவதை பற்றி எந்த தகவலும் இல்லை. விசாரணை விவரங்களும் இல்லை.


மேலும், இதில் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க, நம்பிக்கை வாக்கெடுப்புக்கும் அழைப்பு விடுத்து அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவிருக்கிறார் பிரதமர்.

அப்படி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டால் (விட்டால் என்ன, காங்கிரஸ் கூட்டணிக்கு தான் பெரும்பான்மை இருக்கிறது என்பதால் அவர் தான் வெற்றி பெறுவார்) இந்த ஊழல் குற்றச்சாட்டு தவறு என்றாகிவிடுமா? அரசுக்கு ரூ.1,80,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படவில்லை என்றாகிவிடுமா? ஆள் இருக்கிறார்கள் என்கிற தைரியத்தில் என்ன தவறை வேண்டுமானாலும் அரசு பொறுப்பில் உள்ளவர்கள் செய்து கொள்ளலாமா? புரியவில்லை.

2G விஷயம் போல இந்த நிலக்கரி விஷயம் இல்லை என்பதை எனது முந்தைய பதிவில் ஓரளவுக்கு விளக்க முற்பட்டு இருக்கிறேன். இன்னும் விரிவாக சொல்வதென்றால்:

மத்திய நிலக்கரி அமைச்சராக இருந்த சிபு சோரன் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டபின், அந்த துறையை பிரதமர் நிர்வகிக்க தொடங்கினார். திரு. தாசி நாராயணன் அவர்களும் திரு. சந்தோஷ் பாக்தோத்யா அவர்களும் இணை/துணை அமைச்சர்கள்.

2007ல் மார்கெட் விலையில் டன்னுக்கு ரூ.2000/- விற்கும் நிலக்கரியை டன்னுக்கு ரூ.100/-க்கும் குறைவாக இந்த அமைச்சர்கள் குழு தனியாருக்கு தாரை வார்த்தது. இதை நியாயப்படுத்துவதற்காக மத்திய அரசு கொண்டுவந்த சுரங்க சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் வெற்றி பெறவில்லை. நான்கு ஆண்டுகளாக அது நிலுவையில் உள்ளது.

2006-2011 கால கட்டத்தில் 175 சுரங்கங்கள் தனியாருக்கு இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் கொடுக்கப்பட்டன. லைசன்ஸ் பெற்ற நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் இதுவரை நிலக்கரியை வெட்டி விற்று வருகின்றன. இதன் மூலம், மார்கெட் விலையை விட மிக மிக குறைந்த அடிமாட்டு விலைக்கு நிலக்கரியை கொடுத்ததன் மூலம் கிட்டத்தட்ட 26 லட்சம் கோடி ரூபாய் ஒட்டுமொத்த நஷ்டம்! லைசன்ஸ் பெற்ற நிறுவனங்களில் வெறும் 26 நிறுவனங்கள் மட்டுமே இதுவரை நிலக்கரியை வெட்டி விற்று வருகின்றன. அதாவது அரசுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய 54 லட்சம் கோடி ரூபாய்க்கு பதிலாக, 28 லட்சம் கோடி ரூபாய் தான் கிடைத்திருக்கிறது.

இன்னொரு வேடிக்கை, லைசன்ஸ் பெற்ற நிறுவனங்கள் லைசன்ஸ் பெற்ற நாளில் இருந்து 48 மாதங்களுக்குள் நிலக்கரி உற்பத்தியை தொடங்காவிட்டால் அவர்களது லைசன்ஸை ரத்து செய்திருக்கவேண்டும். 

இந்த வகையில் கிட்டத்தட்ட 150 நிறுவனங்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்படாமல் இருக்கிறது. இப்படி செயல்படாத நிறுவனங்களின் லைசன்சை ரத்து செய்யாமல் விட்ட வகையில் மத்திய அரசு பெற்ற லாபம் என்ன என்பதெல்லாம் இனிமேல் தான் தெரியவரும், அதுவும் இது விஷயமாக விசாரணை ஏதும் நடந்தால் மட்டுமே!

2G வழக்கில் அரசுக்கு லாபம் கிடைத்தது. ஆனால் இன்னமும் கூடுதலாக லாபம் கிடைத்திருக்குமே என்பது தான் குற்றச்சாட்டு. ஆனால் நிலக்கரி விஷயத்தில் ஒட்டுமொத்தமாக அரசுக்கு நஷ்டம். சுரங்க ஒதுக்கீட்டு தொகையில் ஏற்பட்ட நஷ்டமான 1.80 லட்சம் கோடி பற்றி மட்டும் தான் இங்கே இப்போது பேசப்பட்டு வருகிறதே தவிர, வெட்டி எடுக்கப்பட்ட / இனி வெட்டி எடுக்கப்படவிருக்கின்ற நிலக்கரிக்கான மார்கெட் விலையுடன், அரசு நிர்ணயித்த விலையை ஒப்பிட்டால் வரக்கூடிய நஷ்டமான 26 லட்சம் கோடி ரூபாய் பற்றி இன்னும் யாரும் பெரிதாக பிரச்சனை கிளப்பவில்லை. இந்த இடத்தில் தான் சிதம்பரம் அவர்கள் சொன்னதை போல, இன்னமும் நிலக்கரி வெட்டி எடுக்கப்படவில்லை. அதனால் (இன்னும்) நஷ்டம் ஏற்படவில்லை என்கிற வாதம் பொருந்தும்.

சரி, நான் மீண்டும், இந்த பதிவின் நோக்கத்திற்கே மீண்டும் வருகிறேன்.

பிரதமர் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதற்கு உரிய ஆதாரங்களை மத்திய தணிக்கை துறையே விரிவாக சமர்ப்பித்து இருக்கிறது. அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இப்படி இழப்பை ஏற்படுத்தியதற்கான பலனை சிலர் அனுபவித்திருக்கிறார்கள். நியாயமாக என்ன  செய்திருக்கவேண்டும்?

சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சரான பிரதமர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்துவிட்டு, விசாரணையை எதிர்கொண்டு, தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்திருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு, நம்பிக்கை வாக்கெடுக்கிறேன். வென்றால் நான் குற்றமற்றவன், தோற்றால் பார்க்கலாம் என்பது என்ன வகையான நியாயம் என்பது எனக்கு தெரியவில்லை. இது தான் நியாய தீர்ப்பா என்பதும் புரியவில்லை.

உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?

Printfriendly