Saturday, September 19, 2015

சகாயமும் கிரானைட் ஊழலும் – ஒரு சாமானியனின் பார்வையில்

ராது வந்த மாமணியாய் தமிழகத்தில் பல நேர்மையான அதிகாரிகள் வந்து போனதுண்டு. பிரமிக்கத்தக்க சாதனைகள் செய்தும், மக்களிடம் எளிமையாக பழகியும், நேர்மையை மட்டுமே கைக்கொண்டும் பெயரும் பெருமையும் பெற்றவர்கள் மிக பலர்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் எஸ்.ராதாகிருஷ்ணன், சி.வி.ராவ், மு.கலைவாணன், அபூர்வா போன்றோரும், ஐ.பி.எஸ் அதிகாரிகளில் சைலேந்திரபாபு, ரவி ஆறுமுகம், கருணாசாகர், திரிபாதி போன்றோரும் அந்த நீளமான பட்டியலில் சிலர். இதில் பலரும் எந்த விளம்பரமும் இன்றி மக்கள் சேவையும் நேர்மையும் மட்டுமே பிரதானமாக கொண்டு தங்கள் அரசு பணியை சிறப்பாக செயல்படுத்தி மக்களிடமும் அன்பையும் அபிமானமும் பெற்றவர்கள். சிலர் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து துணிச்சலுடன் போராடி அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல் பணியாற்றி பெருமை சேர்த்துள்ளனர்.
 
திரு. சகாயம் IAS
இந்த பட்டியலில் மிக சமீபத்திய இணைப்பு திரு. உபகாரம்பிள்ளை சகாயம் அவர்கள். பெயரை போலவே எல்லோருக்கும் உபகாரமாக திகழ்பவர். பல பல அதிரடி நடவடிக்கைகளை மக்களுக்காக எடுத்தவர். 23 முறைக்கு மேல் அவரது நேர்மைக்காகவே பந்தாடப்பட்டவர். எத்தனை மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் வந்தாலும் கலங்காமல் நேர்மையாய் இருப்பவர். எளிமையான அதிகாரி. முதல் முதலாக தானாக முன்வந்து தனது சொத்து கணக்கை வெளியிட்ட அதிகாரி. மக்களிடம் எளிமையாக பழக்கக்கூடியவர். அதைஎல்லாம் விட என்னை மிகவும் கவர்ந்தது அவரது தெளிவான வெள்ளமெனப்பாயும் அழகு தமிழ் பேச்சு. மிக மிக அதிகமாக நம்மால்  நேசிக்கப்படும் அந்த அதிகாரி தான் இப்போது சமீப காலமாக மீடியாக்களில் அதிகம் அடிபடும் நபராக இருக்கிறார். காரணம் கிரானைட் குவாரி முறைகேடு.

பின் கதை சுருக்கம்:

2008 ஆம் ஆண்டு ஒரு சமூக சேவகரால் வெளிக்கொண்டு வரப்பட்டது தான் இந்த கிரானைட் முறைகேடு விவகாரம். அப்போது அது யாராலும் அதிகமாக கண்டுகொள்ளப்படவில்லை. 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதுரை மாவட்ட கலெக்டராக திரு சகாயம் அவர்கள் பொறுப்பேற்றதும், இந்த முறைகேடு குறித்து விசாரித்து, மூன்று பெரிய நிறுவனங்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டி 2012 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி முதல்வர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினார். திரு. பி. ஆர். பழனிச்சாமி அவர்களின் பி.ஆர்.பி கிரானைட்ஸ் மற்றும் சிந்து கிரானைட்ஸ், ஒலிம்பஸ் கிரானைட்ஸ் ஆகியவை தான் அந்த மூன்று நிறுவனங்கள். இந்த கடிதம் கிடைக்கபெற்ற .நான்கு தினங்களிலேயே அதாவது 2012 மே 23 ஆம் தேதியே அப்போதைய முதல்வர் புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் சகாயத்தை மதுரை கலெக்டர் பதவியிலிருந்து விடுவித்து கோ ஆப்டெக்ஸின் அதிகாரியாக நியமித்து பந்தாடினார். அப்போது முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் பலத்த விமர்சனத்துக்கு ஆளானது தனி கதை. (சகாயம் மதுரை கலெக்டராக பணியாற்றிய காலம் மத்திய அரசு அறிக்கையில் வேறு மாதிரி காட்டப்பட்டு இருக்கிறது. அது ஏன் என்பதும் புரியவில்லை.)
 
சகாயம் அவர்களது சர்வீஸ் ரெகார்டு. ஹைலைட் செய்த காலம் அவர் மதுரை கலெக்டராக இருந்தார். ஆனால் ரெக்கார்டில் வேறு மாதிரி இருக்கிறது 
ஆனால் சகாயத்துக்கு பதிலாக மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்ட திரு அன்சுல் மிஸ்ரா, இந்த கிரானைட் முறைகேட்டை விரிவாக ஆராய்ந்து மொத்தம் 175 நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கண்டு பிடித்து அவற்றில் 02.08.2012 ஆம் தேதி ரெய்டு நடத்த உத்தரவிட்டார். (இதில் ஆச்சரியமான விஷயம் 19.05.2012 ஆம் தேதி முதல்வருக்கு சகாயம் அனுப்பிய கடிதம், அன்சுல் மிஸ்ரா ரெய்டுக்கு முந்தய நாள் அதாவது 01.08.2012 ஆம் தேதி யாராலோ லீக் செய்யப்பட்டு, பத்திரிக்கைகளில் வெளியானது. ஆனால் 2012 ஜூன் மாதத்திலிருந்தே அன்சுல் மிஸ்ரா முறைகேடுகள் குறித்து விசாரித்து விரிவான அறிக்கையை அரசுக்கு அனுப்பி ரெய்டுக்கு அனுமதியும் பெற்று அதன் பேரில் தான் 02.08.2012 ஆம் தேதி ரெய்டு நடத்தப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும். ரெய்டுக்கான நடவடிக்கை தொடங்கியதை துறையின் பிற அதிகாரிகள் மூலம் அறிந்த திரு சகாயம் அவர்கள் தான் ரெய்டுக்கு முந்தய நாள் அந்த கடிதத்தை வெளியிட்டார் என பரபரப்பாக பேசப்பட்டாலும், அப்படியெல்லாம் விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு தனக்கான கிரெடிட்டை தேடி பெற்று கொள்ளும் நபர் சகாயம் அல்ல என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.)

திரு. அன்சுல் மிஸ்ரா IAS

அப்படி அன்சுல் மிஸ்ரா ரெய்டு நடத்தி பதிவு செய்த வழக்குகள் தான் நீதிமன்றத்தில் வேகம் பிடித்து இன்றைக்கு மிக பெரிய முறைகேட்டை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ஏன் சகாயம் அவர்கள் மூன்றே மூன்று நிறுவனங்களை மட்டும் குற்றம் சாட்டினார் என பலரும் விவாதித்துக்கொண்டிருந்தாலும், அந்த மூன்று நிறுவனங்களில் முக்கியமான பி.ஆர்.பி நிறுவனம் தான் இந்த முறைகேட்டில் மிக முக்கியமான நிறுவனம் என்பதை எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள். (அன்சுல் மிஸ்ரா கிரானைட் முறைகேட்டை மிக மிக தீவிரமாக விசாரிக்க தொடங்கியதும் அவரும் மதுரை கலெக்டர் பதவியிலிருந்து மாண்புமிகு புரட்சி தலைவி அவர்களால் மாற்றப்பட்டார். அன்சுல் என்ன நினைத்தாரோ, அவர் தமிழக அரசு பணியே வேண்டாம் என்று மத்திய அரசு பணிக்கே சென்று விட்டார்.) 

நரபலி விவகாரம்:

பி.ஆர்.பி நிறுவனம் சார்பாக மனநலம் பாதிக்கப்பட்ட சிலரை நரபலி கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டு 2004 ஆம் ஆண்டிலேயே புகாராக கொடுக்கப்பட்டது. ஆனால் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சகாயம் கலெக்டராக இருந்தபோதும் (2011-12) அதன் மீது நடவடிக்கை எதுவும் இல்லை. ஆனால் அன்சுல் மிஸ்ரா அந்த புகாரை விசாரித்தபின் என்ன காரணத்தாலோ புகார் தாரரான சேவற்கொடியோனை அழைத்து அவர் குறிப்பிடும் இடங்களில் ஏதேனும் அடையாளத்தை நட்டு வைத்து கண்காணித்துவர சொன்னார். அவரும் அதே மாதிரி அந்த இடங்களில் கல் நட்டு கண்காணித்து வந்தார். 2013 ஆம் ஆண்டு மீண்டும் சேவற்கொடியோன் இந்த நரபலி தொடர்பாக மாவட்ட எஸ்.பிக்கு ஒரு புகார் அளித்தார். அதன் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் போனது.

இப்போதைய எபிசோட்:

இந்த நிலையில் சமூக சேவகர்கள் சார்பாக கிரானைட் முறைகேடு உயர்நீதிமன்றத்தை எட்டியது. நீதிபதிகள் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி மூலம் விசாரிக்கவேண்டும் என சொல்ல திரு சகாயம் அவர்களின் பெயர் முன்மொழியப்பட்டு 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அவர் கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டார். ஆனால் தமிழக அரசு அவருக்கு எந்த ஒத்துழைப்பையும் கொடுக்க மறுத்து விட்டது. அவருக்கான அலுவலகம், வாகனம், உதவியாளர்கள் ஏன் ஸ்டேஷனரி கூட கொடுக்க முன்வரவில்லை. ஒவ்வொன்றுக்கும் உயர்நீதிமன்றத்தை நாடி தான் சகாயம் அவர்கள் இந்த முறைகேட்டை விசாரிக்க தொடங்கினார்.  சகாயம் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால் அதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அதன் பின் உயர்நீதிமன்றம் கொடுத்த கண்டிப்பான உத்தரவுகளால் தமிழக அரசு வேறு வழி இல்லாமல் திரு. சகாயத்துக்கு ஒத்துழைக்க தொடங்கியது.

அக்டோபர் மாதம் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் கிரானைட் மற்றும் கனிம வள விவரங்கள் குறித்த தகவல்களை தனக்கு தாக்கல் செய்யவேண்டும் என சகாயம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2014 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவில், சகாயத்தின் விசாரணை எல்லை மதுரை மாவட்டத்துக்குள் மட்டும் தான் எனவும் மற்ற மாவட்ட கலெக்டர்களை அவர் கட்டுப்படுத்தமுடியாது என சொல்லிவிட்டது. அதன் பின் தான் மதுரை கிரானைட் முறைகேடு விசாரணை தீவிரமடைந்தது. (அவர் எதற்காக எல்லா மாவட்ட ஆட்சியாளர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுக்க முனைந்தார் என்பது இன்னமும் கூட புரியாத புதிர் தான்)

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டிய நிர்பந்தம் இருந்த நிலையில், கிரானைட் முறைகேடு எனும் மெயின் மேட்டரை விட்டு நகர்ந்து நரபலி விவகாரத்தை கையில் எடுத்தார் சகாயம். 2004, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட புகார்களை தூசு தட்டி எடுத்து அவற்றை விசாரிக்க தொடங்கினார்.

நரபலி கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தை தோண்டி ஆய்வு செய்ய அவர் முடிவு செய்தபோதும் தமிழக அரசு அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அன்றைய இரவில் அவர் அந்த மயானத்திலேயே படுத்து உறங்கி போராடி பின்னர் தான் அரசின் ஒத்துழைப்பை அவரால் பெற முடிந்தது.

தோண்டிய இடத்தில் 5 எலும்புக்கூடுகள் தென்பட்டது. அதில் 4 எலும்பு கூடுகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. எலும்புக்கூடுகள் 4 முதல் 5 அடி ஆழத்தில் கிடைத்திருக்கின்றன. (10 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட பிணத்தின் எலும்புகள் எப்படி 5 அடி ஆழத்திலேயே கிடைத்தது என்கிற கேள்வி பதிலளிக்கப்படாமல் கிடக்கிறது)

முதல் பிணம் தெற்கு நோக்கி தலைவைத்தும் மற்றவை தென்மேற்கு திசை நோக்கி தலைவைத்தும் புதைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சிறுவனின் பிணம் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த மரணம் பற்றி  ஊர்க்காரர்கள் விவரித்து உறுதிப்படுத்தியதால் அதன் மீதான விசாரணை கைவிடப்பட்டது.

நரபலி புகார் கொடுத்த திரு சேவற்கொடியோன் பி.ஆர்.பி நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்தவர். கிரானைட் முறைகேடு விசாரணையை திசை திருப்பத்தான் இப்படி ஒரு நரபலி புகாரை அவர் முன்வைத்திருக்கிறார் என பேசப்பட்டாலும், கிடைத்திருக்கும் சடலங்கள் அவர் சொல்லியதில் உண்மை இருக்கலாமோ என சந்தேகிக்க வைக்கிறது.

இன்னொருபுறம், அந்த இடம் மயானமே அல்ல என சகாயம் அரசு ஆவணங்களை காட்டி சொல்லி இருக்கிறார். அதாவது, அந்த இடத்தை மயான பயன்பாட்டுக்காக அரசு ஒதுக்கவில்லை, அதனால் அங்கே கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் நரபலி கொடுக்கப்பட்டவை தான் என்கிறார். ஆனால் ஊர்க்காரர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடத்தை தான் மயானமாக பயன்படுத்தி வருகிறார்கள் எனவும், இப்போது கண்டு பிடிக்கப்பட்ட சடலங்கள் எல்லாம் சமீபத்தில் புதைக்கப்பட்டவை எனவும், சேவற்கொடியோனும் சகாயமும் சொல்வதை போல 10 வருடங்களுக்கு முன் புதைக்கப்பட்டவை அல்ல எனவும், அப்படி இருந்திருந்தால் அவை வெறும் 5 அடி ஆழத்திலேயே கிடைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் சிலரால் பேசப்படுகிறது. எலும்புக்கூடுகளில் சுற்றப்பட்ட சிவப்பு துணி (உறவினர்கள் போர்த்தும் கோடி துணி?) சற்றே புதிதாக தென்படுவதை அதற்கு ஆதாரமாக சொல்கிறார்கள்.

ஒரு சாமானியனாக நமக்குள் எழும் கேள்விகள் எல்லாம்..


  1. முக்கிய வழக்கான கிரானைட் முறைகேட்டை விட்டு நகர்ந்து நரபலி பக்கம் விசாரணை திசை திரும்பியது எதற்காக?
  2. நரபலி தானா அவை? அல்லது மயானத்தில் இயல்பாக கிடைக்கும் சடலங்களை வைத்து வழக்கை நரபலி என மேலும் இறுக்க முயற்சி நடக்கிறதா?
  3. குறித்த காலகெடுவுக்குள் முடிக்கப்படவேண்டிய விசாரணையின் தாமதத்தை நரபலி விசாரணை மூலம் சரி செய்ய முயற்சி நடக்கிறதா?
  4. தமிழக அரசு ஏன் இந்த அளவுக்கு இந்த முறைகேடு விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறது?
  5. விசாரணை கால அளவை நீட்டிக்கவும், திட்ட செல்வை விட அதிக தொகையை ஒதுக்குமாறும் கேட்டு சகாயம்  இப்போது கோரிக்கை வைக்க வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?
  6. உயர்நீதிமன்றம் கொடுத்திருக்கும் விசாரணை வரம்பின் கீழ் கிரானைட் முறைகேடு மற்றும் அரசுக்கு அதன் மூலமான இழப்பை கணக்கீட்டு தருவது மட்டும் தானே அடங்கும்?

என்றெல்லாம் நீள்கிறது தான்.

இதற்கான விடை அடுத்த மாதம் விசாரணை அறிக்கை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படுகையில் தெரிய வரலாம். அதுவரை காத்திருப்போம் நண்பர்களே.
  


Thursday, September 3, 2015

வருங்கால முதல்வர் ஸ்டாலின்?


ட்டமன்ற தேர்தல் நெருங்குது. வழக்கமான தேர்தல் அலைன்னு எதுவும் இப்போதைக்கு இல்லை. (இனிமேல் தான் யாராச்சும் அப்படி ஒண்ணை உருவாக்கணும்). ஆனா யார் முதல்வர்ங்கற விவாதம் மட்டும் சூடு பிடிச்சிருச்சு.

லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பில் ஸ்டாலினுக்கு கலைஞரை விட அதிக ஆதரவு கிடைச்சது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்திருக்கு. (பிற சலசலப்புக்கள்: சீமானுக்கும் வைகோவுக்கும் கிட்டத்தட்ட சரிநிகர் செல்வாக்கு, அதாவது சீமான் வைகோ அளவுக்கு உயர்ந்துட்டார் என்பதும், அன்புமணி கணிசமான மக்களிடம் டீசண்டான ஆதரவு வாங்க்கிருக்கார் என்பதும்). 

திமுகவின் சலசலப்பை மேலும் கல்லு விட்டு கலகலக்க வைக்கும் விதமா அண்ணன் அழகிரி கொடுத்திருக்கும் பேட்டியில் “ஸ்டாலின் முதல்வராக முடியாது”ன்னு சொல்லி இருக்கார். அவர் என்ன காரணத்துக்காக சொல்லி இருக்கார்னு தெரியாது. ஆனா அதுக்கு லைட்டா சாத்தியமிருக்குன்னு தான் எனக்கு தோணுது. நாம அது பத்தி கொஞ்சம் விரிவா பேசலாம்.


நான் ஏற்கனவே பல பதிவுகளில் சொல்லியிருப்பது மாதிரி, ஸ்டாலின் சட்டுனெல்லாம் அரசியல் அரங்கத்துக்கோ லைம்லைட்டுக்கோ வந்தவர் அல்ல. மிக இளம் வயதிலிருந்தே கழகத்தின் அடிப்படை தொண்டரா இருந்து களங்கள் பல கண்டு சிறை ஏகி காலங்களாய் காத்திருந்து தலைவர் மகனெனும் சலுகைகளையெல்லாம் புறம்தள்ளி சுய திறமையால் மெல்ல மெல்ல முன்னேறி கழக அரசின் துணை முதல்வராக அமர்ந்தவர். மிக பெரிய சரித்திர சாதனை புத்தகமே எழுதலாம். அத்தனை தன்னம்பிக்கை நிறைந்த போராட்ட வாழ்வு அவருடையது. ஆனால் இப்போதைய நிலைமை என்ன?

100 க்கு 80 சதவீதம் அடுத்தமுறையும் அதிமுகவே ஆட்சி அமைக்கும்ன்ற பரவலான எண்ணத்தை முதலில் உடைச்சவர் அவர் தான். மெல்ல மெல்ல மக்களுடன் மீடியாக்கள் மூலமா பழகி, அவருடைய இயல்பான எளிய பழகும் திறனால் மக்களின் மனதிலிருந்த வேதனைகளை எல்லாம் அறிந்து அது தொடர்பான போராட்டங்கள் பொதுக்கூட்டங்கள் ஆர்பாட்டங்கள் மாநாடுகள் என நடத்தி, உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என கழகத்தை மக்கள் மனதில் உயரத்தில் மீண்டும் உட்கார்த்தி வைத்திருக்கிறார். இப்போதைய மக்களின் மனநிலை மெல்ல மாறி அதிமுக திமுக இரண்டுக்கும் அடுத்த தேர்தலில் சம வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டாலும், திமுகவுக்கு ஒரு அதீத நம்பிக்கை துளிர்த்திருப்பதை பரவலாக காண முடிகிறது. கழக உடன்பிறப்புக்களுக்கெல்லாம் அடுத்ததா நம்ம ஆட்சி தான் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையே ஏற்பட்டு இருக்கு. நல்ல விஷயம் தான். ஆனா யார் முதல்வர்? ஸ்டாலினா அல்லது மீண்டும் தலைவரேவா? இது தான் குழப்பம். இந்த மாதிரியான ஒரு சீன்ல தான் அண்ணன் அழகிரியின் சமீபத்திய டயலாக் டெலிவரியை பார்க்கிறேன் நான்.

2016 தேர்தலில் வெற்றி பெற்றதுமே ஸ்டாலின் முதல்வராகணும்னு ஒரு தரப்பும், இல்லை இல்லை தலைவர் ஒருவருஷமோ ரெண்டுவருஷமோ முதல்வரா இருந்துட்டு அதுக்கு பின் ஸ்டாலினை முதல்வராக்கலாம், அதுவரைக்கும் துணை முதல்வரா இருக்கட்டும்னு மற்றொரு தரப்பும் விவாதிச்சிட்டு இருக்காங்க. (இப்படியான விவாதங்கள் மக்கள் மத்தியில் என்ன மாதிரியான மனநிலையை உண்டுபண்ணும்னு கலைஞர் அறியாதவர் அல்ல, ஆனாலும் அதை தடுக்கும் எந்த நடவடிக்கையும் காணோம்)

ஏன் கலைஞர் முதல்வரா இருக்கணும்?

இப்போதைக்கு தமிழகத்தை பொருத்தவரைக்கும் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் ஸ்தம்பிச்சு கிடக்கு. சுத்தமா எந்த ஒரு விஷயத்திலும் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படலை. வளர்ச்சி திட்டங்கள்னு எதுவுமே செயல்படுத்தப்படலை. துறை அமைச்சர்களுக்கு தங்கள் துறையில் என்ன நடந்துட்டு இருக்குன்னே தெரியலை. (துறையில் இருப்பவங்களுக்கு யார் அமைச்சர்னே தெரியலை, அது வேறொரு தனி கதை). அதிமுககாரங்களே சலிப்படையுற அளவுக்கு எல்லா திட்டங்களிலும் முடக்கம். அதிமுக மீதான இந்த விரக்தி மனநிலை திமுகவுக்கு சாதகமா மாறும் தான். அப்படி மாறி திமுக கையில் ஆட்சிக்கு வந்ததும், முதலில் செய்யவேண்டிய பணியே நிர்வாக சீர்திருத்தம் தான். அதுக்கு தலைவர் தான் சரியான ஆள். குறுகிய காலத்துக்குள் நிர்வாகத்தை அதன் சீரான பாதையில் நிறுத்தும் திறன் இப்போதைக்கு அவருக்கு மட்டும் தான் இருப்பதா பலரும் நம்புகிறார்கள்.

அவர் அப்படி இரண்டு வருஷம் நிர்வாகத்தை சீராக்கி அதன் பின் ஸ்டாலினை அரியணையில் அமர்த்தினால் எந்த சிக்கலும் இருக்காது. மாறாக ஸ்டாலின் எடுத்த எடுப்பிலேயே முதல்வராகி அவரால் சீர்திருத்த நடவடிக்கைகளை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் போனால் கழகத்துக்கு அது ஒரு தீராத களங்கமாக, மக்கள் மத்தியில் திமுகவின் நிர்வாகத்திறமை தோற்றுவிட்டதான உணர்வாக, மீண்டு எழமுடியாத ஒரு அவநம்பிக்கையாக மாற வாய்ப்பு இருக்கு. இது தான் அந்த பயம்.

சரி, ஏன் ஸ்டாலினால் சீர்திருத்தம் செய்ய முடியாது?

ஏற்கனவே சென்னை மாநகர மேயராக, உள்ளாட்சி துறை அமைச்சராக, துணை முதல்வராக சிறப்பாக பணியாற்றி மக்களிடம் பெரும் பாராட்டை பெற்றவர் ஸ்டாலின். ஆனாலும் அவர் மிக எளிமையாக பழக்கக்கூடியவர், யாரிடமும் அனாவசியமாக அதிகமாக கண்டிப்பு காட்டாதவர், சிலர் கொடுக்கும் சமாளிபிக்கேஷன் விளக்கங்களை அப்படியே எற்றுக்கொண்டவர் என்றெல்லாம் சில செய்திகள் வந்தன. மேலும் அவரது பேச்சாற்றல் திமுகவிலேயே பலரை சங்கடப்படுத்தக்கூடியவை. பேச்சை அடிப்படையாக வைத்து மக்களிடம் வளர்ந்த ஒரு மாபெரும் இயக்கத்தில் பேச்சு திறமை அற்ற ஒரு தலைவர் என்பதை பலரும் ஜீரணிக்கவில்லை.


இணைய தளங்களில் அவர் எழுதுவதில் தெறிக்கும் தெளிவும் சிந்தனை செறிவும் நிர்வாக திறமும் பேச்சில் தெரிவதில்லை. பெரும்பாலும் மேடைகளில் பேசுவதை விட வாசிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனால் என்ன பிரச்சனை என்று பலரும் கேட்கலாம். இணைய தளங்களை படித்து தெரிந்து கொள்பவர்களை விட செய்தி ஊடகங்களிலும் செய்தி தாள்களிலும் நேரடியான மேடைகளிலும் பேச்சுக்களை கேட்டு பெர்சனாலிட்டியை தீர்மானிக்கும் மக்களை அதிகமாக கொண்ட தமிழகத்தில் அவர் ஒவ்வொரு மேடையிலும் தெளிந்த நீரோடை போலல்லாமல் ஆங்காங்கே திக்கி அவ்வப்போது தடுமாறி (மன்னிக்கவும்னு செய்தி வாசிப்பாளர் மாதிரி சொன்னாலும் கூட) பேசுவதை கவனிக்கும் மக்கள் அதை வைத்து அவரது திறமையை எடைபோட்டு கொண்டிருப்பதை அவர் அறிவாரோ என்னவோ? அந்த எடைபோடல் தான் அவருக்கான செல்வாக்கை தீர்மானிக்கும், அவருக்கு கட்டுப்படும் தன்மையை மற்றவர்களிடம் வளர்க்கும் சக்தியாக விளங்குகிறது. அந்த அடிப்படையில் அவரது பேச்சை ஒலிபரப்பு மூலமும் மேடையிலும் காணும் மக்களின் / அதிகாரிகளின் மனநிலை, இவரை ஜமாய்ச்சிறலாம் எனும் தொனியில் இருப்பதாலோ என்னவோ, குறுகிய காலத்துக்குள் நிர்வாகத்தை அவரால் சீரமைத்துவிட முடியுமா என்கிற சந்தேகத்தை எல்லோர் மனதிலும் தூவி விட்டு சென்றிருக்கிறது. அப்படி தூவப்பட்ட விதை நாற்றாக பரிணமிக்கும் முன் அவர் சுதாரித்துக்கொள்வது, அவருக்கும், கழகத்துக்கும் தமிழகத்துக்கும் நல்லது என்று நினைக்கிறேன்.

பேச்சு பயிற்சிக்காக பாசறை நடத்திய பேரியக்கம் திமுக. ஆனால் இப்போதெல்லாம் அவை அரிதாகிவிட்டன. இரண்டாம் மூன்றாம் நிலை தலைவர்கள் கூட தங்கு தடையில்லாமல் பேசும் திறன் இழந்திருப்பதும், முன்போல் அடிக்கடி பொதுக்கூட்டங்கள் நடத்தாமல் இருப்பதும் (இப்போது தொடங்கி இருக்கிறது) மக்கள் மனதில் ஒரு தேக்க நிலையை ஏற்படுத்தி இருக்கக்கூடும். கலைஞர் இனியேனும் சுதாரித்து கழக பேச்சு பயிற்ச்சி பாசறைகளை தீவிரமாக முன்னெடுத்து சென்றாலொழிய மக்களிடம் இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பது கடினம் என நினைக்கிறேன்.

நிச்சயமாக ஸ்டாலின் முதல்வரானால் அடிப்படை மக்களின் துயரங்கள் களைவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கு முன்பாக அவர் செய்யவேண்டிய விரைவான குறுகிய கால பணியான நிர்வாக சீர்திருத்தத்தில் எந்த அளவுக்கு வெற்றி பெற்று தமிழக அதிகாரிகளை, மேலாண்மையை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்போகிறார் என்பதில் தான் இருக்கிறது எல்லாமே.

அதை விட பெட்டர், கலைஞரே சில காலம் முதல்வராக இருந்து எல்லா சீர்திருத்தங்களையும் செய்து அலுங்காமல் குலுங்காமல் நிர்வாகத்தை ஸ்டாலினிடம் ஒப்படைத்தால் அதை முன்னெடுத்து மெருகேற்றி செல்லக்கூடிய திறமை அவரிடம் இருப்பதால் தமிழகம் நலம் பெறும்.

அடுத்த வருஷம் இதை பற்றி ஆராயலாம் நாம்.



Saturday, August 22, 2015

வராக்கடன் – இந்தியாவின் பெருநோய்

ன்னைக்கு காலையில் பேப்பரில் என்னை பகீர்னு அதிர்ச்சியாக்கிய செய்திகளில் முக்கியமானது “இந்திய பொதுத்துறை வங்க்கிகளின் வராக்கடன் தொகை 2.67 லட்சம் கோடி” என்பது.

2014-15 ஆண்டுக்கான அறிக்கை படி பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 2.67 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன். இது முந்தைய ஆண்டான 2013-14 இல் 2.16 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது பாஜக அரசின் ஓராண்டு ஆட்சியில் வராக்காடன் மட்டும் 51 ஆயிரம் கோடி.



பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசின் நிதி நிலையை உயர்த்தவும் ஏழை மக்களுக்கான நல திட்டங்கள் வழங்குவதற்கு வசதி செய்யவும் பொதுமக்கள் தங்களின் கேஸ் மானியத்தை விட்டுக்கொடுக்குமாறு உருக்கமான வேண்டுகோளை அனைத்து மீடியாக்களிலும் வெளியிட்டார். அவரது அற்புதமான பேச்சு மற்றும் அதன் நியாயமான காரணங்கள் ஆகியவற்றால் இதுவரை சுமார் 6.50 லட்சம் பேருக்கு மேல் தங்கள் மானியத்தை விட்டு கொடுத்து இருக்கிறார்கள்.

பிரதமரின் பேச்சுக்கு பொதுமக்கள் காட்டிய அளப்பரிய மரியாதை ஆச்சரியப்பட வைத்தது. நாடு இருக்கும் இக்கட்டான நிலையை சொல்லி அதற்கு உதவுமாறு அவர் கொடுத்த கோரிக்கை மெகா ஹிட் அடித்தது.

இன்றைய செய்திக்கு வருவோம்

இந்த வாரா கடன் என்பது தொழிற்சாலைகள், நிறுவனங்கள் எல்லாவரும் வங்க்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் விட்டதால் ஏற்பட்ட நிலுவை தொகை. மார்ச் 31, 2015 நிலவரப்படி அந்த தொகை ரூ.2.67 லட்சம் கோடி. இந்த அளவுக்கு நிலுவை வராக்கடன் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என நேற்று மத்திய நிதி அமைச்சர் திரு. அருண் ஜெட்லி கண்டிப்பு காட்டி இருக்கிறார். ஏற்கனவே ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. ரகுராம் ராஜனும் வங்கிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததுடன், அவர்கள் சொல்லும் வராக்கடன் முழுமையான தகவல் அல்ல, அது மறைக்கப்படுகிறது என்றும் சொல்லி இருக்கிறார். (அதன் படி பார்த்தால் தொகை இன்னும் கூடலாம்).



இந்த வராக்கடன் என்பது நியாயமாக பார்த்தால் அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவை தொகை தான். இதில் கால அவகாசம் கொடுக்க எந்த காரணமும் இல்லை. சட்டப்படி அதை வசூலித்து அரசிடம் சேர்த்திருக்கவேண்டிய கடமை வங்கிகளுக்கு இருக்கிறது. ஆனால் இதுவரை அப்படி எதையும் வங்கிகள் செய்ததாக தெரியவில்லை. இந்த 2.67 லட்சம் கோடியில் சுமார் 1.82 லட்சம் கோடி பெரிய கார்ப்பொரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் நிலுவை தொகை. அவர்களால் அதை செலுத்தமுடியாத நிலை எல்லாம் இப்போது இல்லை. நல்ல முறையில் இயங்கி கொண்டிருக்கும் பல பெரிய நிறுவனங்கள் கூட வேண்டுமென்றே அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவை கடன் பாக்கியை செலுத்தாமல் வைத்திருக்கிறது. அவர்கள் சொத்துக்களை முடக்கி, விற்று கடனை சரிக்கட்டக்கூடிய அதிகாரம் இருந்தும் வங்கிகள் மெத்தனமாக இருக்கின்றன. 2014-15 ஆம் ஆண்டில் ரூ. 41,236 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்தது  வங்கிகள். அது போக தான் இந்த 2.67 லட்சம் கோடி.

தன்னுடைய மேலான நேரத்தை ஒதுக்கி பொதுமக்களிடமிருந்து சுமார் 250 ரூபாய் மானியத்தை நாட்டு நலனுக்காக விட்டுக்கொடுக்க சொல்லி கெஞ்சும் பாரத பிரதமர், இதுவரை கார்ப்பொரேட் நிறுவனங்களிடம் அவர்கள் செலுத்தவேண்டிய நிலுவை தொகையை செலுத்துமாறு கோரிக்கை கூட விடுக்கவில்லை என்பது ஒரு ஆச்சரியம் தான்.

அமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆகியோரின் கவலைகளை பிரதமர் உணர்ந்திருக்கிறாரா என்பது கூட தெரியவில்லை. அவரது அபரிமிதமான செல்வாக்கை பயன்படுத்தி கார்ப்பொரெட்டுகளுக்கு கோரிக்கை விடுத்து நிலுவையை வசூல் செய்தால் இந்தியா பொருளாதாரம் சட்டென தழைக்கும், ரூபாயின் மதிப்பும் உயரும். பொதுமக்களிடம் 250 ரூபாய்க்கு கெஞ்சிக்கொண்டிருப்பதை விட, நாடு நாடாக சென்று முதலீட்டுக்கு கையேந்திக்கொண்டிருப்பதை விட, நிலுவை கடன் தொகை, நிலுவை வரி பாக்கிகளை வசூல் செய்ய உறுதியான நடவடிக்கை எடுத்தாலே போதும், இந்தியாவின் பொருளாதாரத்தை சீரமைக்க.

செய்வாரா பிரதமர்?

References:





Monday, August 3, 2015

Still-Birth – துயரங்களில் பெருந்துயரம்

Still-Birth. 

இந்த வார்த்தையை நான் அறிந்துகொண்டது 2013 ஆம் ஆண்டு இதே போன்றதொரு ஆகஸ்ட் மூன்றாம் நாள் தான். ஆசை ஆசையாய் குழந்தைக்காக காத்திருக்கையில் அவன் இறந்தே பிறந்த கொடும் அதிர்ச்சியினூடே அறிந்துகொண்ட வார்த்தை. அப்போதிருந்த அதிர்ச்சியில் அது பற்றி எல்லாம் அறிந்துகொள்ள ஆவல் இல்லாமல் இருந்தது. சில வாரங்கள் கழித்து ஓரளவு அந்த அதிர்ச்சியிலிருந்தெல்லாம் மீண்டு வந்த பின் தான் அதை பற்றிய என் ஆராய்ச்சி தொடங்கியது. இது குறித்த எந்த விஷயமும் அறியாத பலர் இப்போதும் இருப்பதை அறிந்தே இந்த பதிவு.

முதலில் எனக்கு என்ன நடந்தது என்பதை சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.



எல்லோரையும் போலவே குழந்தைகள் என்றால் எனக்கும் ஆசை தான். அப்படியான அளவற்ற ஆசையோடு தான் நான் தந்தையாக போகும் தகவல் அறிந்து துள்ளி குதித்தேன். ஆனால் முதல் செக்கப்புக்கு சென்றபோது அந்த மருத்துவர் ஒரு பெரும் குண்டை தூக்கி போட்டார்.

என் மனைவிக்கு தைராய்டு & சுகர் இரண்டுமே இருப்பதால் இந்த குழந்தை பிறப்பது கஷ்டம். அது உங்கள் மனைவியின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். முதலில் கலைத்து விடுங்கள். பின் தைராய்டு & சுகர் இரண்டையும் கட்டுக்குள் கொண்டு வந்த பின் முறையாக முயற்சிக்கலாம் என்று அவர் சொன்னபோது அவர் மீது எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

நாம் திருப்தியடையும் பதில் கிடைக்கும் வரை அதற்கான நபர்களை தேடி செல்லும் இயல்பான மனித சுபாவம் என்னையும் வேறொரு மருத்துவரை நாடி செல்ல வைத்தது. அவர் கொஞ்சம் நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினார்.

சுகர் இப்போது எல்லோருக்குமே இருக்கு. குழந்தைகளில் கூட டையாபட்டீஸ் இருக்கு. அதனால் அது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. மருந்து, உடற்பயிற்சி, உணவு கட்டுபாடு இருந்தால் போதும்னு சொல்லி, அதற்கான மருந்துகள் கொடுத்தார். உணவு பழக்கத்தை அடியோடு மாற்றிக்கொள்ள டையட்டீஷியன் நிறைய கட்டுப்பாடுகள் கொண்ட உணவு லிஸ்ட் தந்தார். தைராய்டு பிரச்சனைக்காக ஏற்கனவே மாத்திரைகள் எடுத்து கொண்டு இருப்பதால் அது ஓரளவு கட்டுபாடாக இருக்கிறது. ஏற்கனவே மூன்று மாதம் ஆகிவிட்டதால் இரும்பு சத்து, போலிக் ஆசிட் குறைபாடு இருப்பதால் அதற்கான மாத்திரைகள் கொடுத்தார். என்னென்ன உடற்பயிற்சி செய்யவேண்டும் என விளக்கமாக வகுப்பெடுத்தார்.

கிடைத்த குழந்தை பேறை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்கிற முனைப்பு அத்தனை கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்தித்தது.

எல்லாம் நல்லபடியாக தான் போய்க்கொண்டு இருந்தது.

ஒவ்வொரு மாதமும் முறையாக செக்கப் செய்து கொண்டோம். அவ்வப்போது காண்பிக்கப்படும் ஸ்கேன் ரிப்போர்ட் கண்டு மகிழ்ந்தோம். ஏழாம் மாதம் எல்லோரையும் கூட்டி சிறப்பாக வளைகாப்பு வைபோகம் நடத்தினோம். வாழ்க்கை மிக சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது.

2013 ஜூலை மாதம் ஸ்கேன் செய்தபோது, குழந்தை மிக ஆரோக்கியமாக இருப்பதை காட்டினார்கள். மூவ்மெண்ட்ஸ் நன்றாக தெரிந்தது. அநேகமாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி வாக்கில் டெலிவெரி இருக்கும். ஆனாலும் எப்போது வலி வந்தாலும் உடனடியாக வந்து அட்மிட் ஆக்கிக்கொள்ள சொன்னார்கள். திக் திக் நாட்கள் தொடங்கியது. முதல் பிரசவம் என்பது மரண அவஸ்தை தானே?

ஆகஸ்ட் 2 ஆம் தேதி இரவு வலி வந்தது. இரவு 11 மணி. கழிப்பறைக்கு சென்றவளுக்கு அங்கேயே பனிக்குடம் உடைந்து நீர் வெளியேற தொடங்கியது. உடனடியாக ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டு விஷயத்தை சொன்னதும் இம்மீடியட்டாக அட்மிட் செய்ய சொன்னார்கள். எனது காரில் மனைவியையும் துணைக்கு இருவரையும் அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் பறந்தேன். 10 நிமிட பயணம். சரியாக 12 மணிக்கு அட்மிட் செய்தார்கள்.

டாக்டர் வந்து பார்த்து டெஸ்ட் செய்தார். மூவ்மெண்ட் எதுவும் காணோம் என்றார். திக்கென்றது. என்னிடம் வந்து விரிவாக சிக்கலை சொன்னார். அதாவது குழந்தையின் மூவ்மெண்ட் இல்லை. அதனால் எப்படி அதை வெளியே எடுப்பது என பார்க்கவேண்டும். இயல்பாக வெளிவர முயற்சிக்கிறோம். இருவரில் ஒருவர் தான் பிழைக்க வாய்ப்பு என சொன்னதும் நான் கதறிய கதறல் ஹாஸ்பிடல் முழுவதையும் விழிப்புக்கு கொண்டுவந்துவிட்டது. 

டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த என் மனைவியை கண்டபோது மிக பாவமாக இருந்தது. சில நொடி யோசனை தான், டாக்டரிடம் தீர்க்கமாக சொல்லிவிட்டேன், “என் மனைவி எனக்கு வேண்டும்”. இரண்டு பேரையும் காப்பாற்ற முயற்சிப்பதாக எனக்கு தைரியம் சொன்னார்

பிரசவ அறைக்குள் நானும் சென்றேன். என் மனைவி அங்கே பட்ட துயரங்களும் துடிப்புக்களும் கண் கொண்டு பார்க்க சகிக்கவில்லை. மனதை திடப்படுத்திக்கொண்டு தான் அவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தேன். அவளது கைகளை பற்றி ஆறுதல் சொல்லிக்கொண்டே இருந்தேன். அவளது வேதனையான கதறல்களுக்கிடையே, அதிக சிக்கலின்றி மென்மையாக வெளிவந்தான் என் மகன். ஆனால் உயிரற்று.

மிக அழகான மகன். தலையில் நிறைய முடி இருந்தது. லேசாக புன்னகைத்தபடியே இறந்துபோயிருந்தான் அவன்.

எதிர்பார்த்த ஒன்று தான் ஆனாலும் துக்கம் தாளமுடியவில்லை. மனைவிக்கு எந்த விவரமும் தெரியாமல் மயக்கத்தில் இருந்தாள். இனி ஆக வேண்டியதை பார்க்கவேண்டும் என்கிற கட்டாயம் என்னை நானே திடப்படுத்திக்கொள்ள போதுமானதாக இருந்தது.

டாக்டருக்கு ஒரு பெரும் நிம்மதி. அவர் எதிர்பார்த்தது, மிஸ்-கேரேஜ் (வெளியே எடுக்க முடியாத நிலையில் தவறாக சென்று சிக்கிக்கொள்வது) அல்லது வழியில் சிக்கிக்கொண்டு வெளிவராமல் இருப்பது என்பதை தான். அப்படி ஆகி இருந்தால் மனைவிக்கு உத்தரவாதமில்லை. ஆனால் அப்படி எதுவும் நிகழ்ந்துவிடாமல் சுமுகமாக வெளிவந்து என் மனைவியை காப்பாற்றிவிட்டான் மகன்.

பின் அவனை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து அதற்கான அனுமதி கடிதம், மாநகராட்சி அனுமதி, சடங்குகள் என எல்லாவற்றையும் முன்னின்று நடத்தவேண்டிய கட்டாயம் இருந்ததால், இறந்த துயரத்தை உடனடியாக அடக்கிக்கொண்டு, ஆக வேண்டியதை கவனித்து நல்லபடியாக அடக்கம் செய்துவிட்டு வந்தேன்.

அன்றைக்கு மதியம் தான் மனைவிக்கு மயக்கம் தெளிந்தது. அவளிடம் நடந்ததை எடுத்து சொல்லி புரியவைத்து அவளது கதறலை கட்டுப்படுத்தி, சமாதானப்படுத்தி ஒரு வழியாக அமைதி பெற வைத்து.. மிக மிக கொடுமையான நாள் அது.

********

இரண்டு நாள் வரை புரியவேயில்லை. என்ன நடந்தது என்று. பின்னர் இணையத்தில் அது குறித்து படிக்க தொடங்கினேன். அதில் தான் எனக்கு அறிமுகமானது இந்த Still-Birth என்னும் சொல்லின் மிக பெரும் பரிமாணம்.


உலகில் ஏற்படும் Still-Birth களில் 66% இந்தியாவில் தான் ஏற்படுகிறது என்கிற பேரதிர்ச்சி தரும் செய்திகள் கண்ணில் பட்டன. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி 1000 பிரசவத்தில் 22.1 பிரசவங்கள் இப்படியான Still-Birth ஆக நிகழ்கிறது. (உலக அளவில் சராசரி என நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது 18.9 per 1000). 2009 ஆம் ஆண்டு மட்டும் இப்படி இறந்தே பிறந்த குழந்தைகள் இந்தியாவில் மட்டும் 6,05,230.

2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழகம் கிராமப்புற பிரசவங்களில் 1000க்கு 14 பிரசவங்கள் Still-Birth ஆக நடைபெறுவதாக சொல்லி இந்தியாவில் இரண்டாம் இடம் கொடுத்து இருக்கிறது தென் கிழக்கு ஆசிய பொது சுகாதார அமைப்பு (முதலிடம் கர்நாடகாவுக்கு 16/1000). நகர்ப்புறங்களில் தமிழகம் பரவாயில்லை (5/1000). ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த Still-Birth பிரச்சனையில் மிக குறைந்த அளவிலான உயிரிழப்புக்களை (1/1000) கொண்டிருக்கும் மாநிலங்கள், நாம் பின் தங்கிய மாநிலங்கள் என கிண்டலடிக்கும் பீகார் & ஜார்க்கண்ட்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்திய உடல்நல மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின், திவ்யா K பாரதி அவர்களின் ஆய்வு கட்டுரையில், இந்தியாவில் இந்த Still-Birth பிரச்சனை மிக பெரிய அளவில் இருப்பதாகவும் அதற்கு உரிய நடவடிக்கைகளை அரசுகள் எடுக்க தவறிவிட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.


இந்த Still-Birth பிரச்சனை மிக மிக எளிமையாக தவிர்க்கப்பட கூடியது தான். அதாவது சரியான நேரத்தில், முறையான மருத்துவ பரிசோதனைகள், உணவு கட்டுபாடு, போதிய சத்துமிக்க உணவுகள், ஆரோக்கியமான சுற்றுப்புறம், சுகாதாரமான வாழ்க்கைமுறை போன்றவைகளை வைத்தே கட்டுப்படுத்த முடியும். இதில் இருந்தே தமிழக அரசு பொது சுகாதாரத்தில் எந்த அளவுக்கு அக்கறை இல்லாமல் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.

நாமும் நம் மக்களிடம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த தவறிவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். கருத்தரிப்பிற்கு முன்னரே ஒரு முறை மருத்துவரை கண்டு தங்கள் உடல்நிலையை, குறைபாடுகளை கண்டறிந்து கொள்ளுவது எல்லாவித எதிர்கால பிரச்சனைகளிலிருந்தும் நம்மை காக்கும். இந்த அடிப்படை விஷயம் கூட எனக்கு தெரியாமல் போனது தான் எனது இழப்புக்கு காரணம்.

இப்போதெல்லாம் நான் என் நண்பர்கள் உறவினர்கள் தெரிந்தோர் அறிந்தோர் என யார் புதிதாக திருமணம் செய்தாலும், செய்திருந்தாலும் அவர்களிடம் இது போல pre-pregnancy test செய்ய சொல்லிவிடுகிறேன்.


பத்து மாதங்கள் சுமந்து ஒவ்வொரு கணமும் ஆசை ஆசையாய் காத்திருந்து கடைசியில் கைக்கு எட்டும் போது இல்லாது போகும் துயரம் துயரங்களில் ஆக பெரும் கொடும் துயரம் என்று அறிந்தவன் என்பதாலோ என்னவோ.

******

Reference:


Monday, July 20, 2015

குச்சனூர் பயண குறிப்புகள்

ங்க விசாக நட்சத்திரத்துக்கு இனிமேல் அமோகமான காலம் தான். ஆனா பாருங்க எல்லாமே கைக்கிட்டே வரும். ஆனா கைக்கு வராது. ஏதோ ஒரு மறைமுக தடை இருந்துட்டே இருக்கும். அந்த தடையை யார் வெச்சிருக்கா தெரியுமா? சாட்சாத் சனிபகவானே தான். அதுக்காக பயப்பட எல்லாம் தேவை இல்லை. எல்லாத்துக்கும் ஒரு பரிகாரம் இருக்குல்ல. நீங்க யாருக்காவது பாவம் செஞ்சிருந்தாலோ, நம்பிக்கை துரோகம் பண்ணி இருந்தாலோ அந்த சாபம் எல்லாம் தான் உங்களை சுத்துது. அது தவிர முன்னொருக்கான வழிபாடு செய்யாம விட்டது, அறிந்தும் அறியாமலும் உயிர்களை கொன்னது மாதிரியான நிறைய பாவங்கள் அப்பப்போ சேர்ந்திருக்கும். அதான் இம்புட்டு கஷ்டம். நேரே குச்சனூர் போய் தலை முழுகிட்டு, தோஷம் நீங்க சனீஸ்வரனை தொழுதுட்டு வாங்க. எல்லா தடையும் நீங்கி நீங்க நல்லா இருப்பீங்க

இப்படி தான் யாரோ ஒரு ஜோசிய சிகாமணி நம்ம குடும்பத்துல கொளுத்தி போட்டு இருக்காங்க. அவர் அந்த ஊர் காரரா இருப்பார் போல. இப்பல்லாம், கோவில்களுக்கு ஜோசியர்கள் தானே மார்க்கெட்டிங் மேனேஜர். இல்லைனா திருநள்ளாரை சொல்லாம குச்சனூரை சொல்லுவாரா? விடுங்க. அவர் சொன்னது கிட்டத்தட்ட விதி 110 இன் கீழ் சொல்லப்பட்ட விஷயத்துக்கு சமமானது என்பதால் எந்த விவாதமும் எதிர்ப்பும் இன்றி ஏகமனதாக தீர்மானம் நிறைவேறி பயணிக்க முடிவாயிருச்சு குடும்பம். ஏன் பேரை சொல்லி ஒரு இன்ப சுற்றுலா.

குச்சனூர் போகணும்னா கூடை மேல கூடை வேணும்னு வைரமுத்துவே சொல்லிருக்காரே என நான் சொன்னதை யாரும் காதில் போட்டுக்கலை. கூடை எதுவும் எடுக்காமலேயே தான் கிளம்பினோம்.

முதலில் தாராபுரம், ஒட்டன்சத்திரம், செம்பட்டி, பெரியகுளம், தேனி வழியா குச்சனூர் பயண திட்டம் வகுத்தோம். விடிகாலையில் அங்கே போய் சேருற மாதிரி டைமிங் செலக்ட் பண்ணிட்டு கிளம்பினோம். ஏன்னா குச்சனூர்ல தங்கறதுக்கெல்லாம் சொல்லிக்கற மாதிரி எந்த ஹோட்டலும் இல்லை. லாட்ஜ் கூட ரொம்ப சுமார் தான். தங்கறதா இருந்தா தேனியில் தங்கணும். ஆனா அந்த கோவிலுக்கு குளிக்காம போயி அங்கே தான் குளிக்கணுமாமே? அதனால் தங்கற ஐடியா சுத்தமா இல்லை. விடிகாலை சேர்ந்தா போதும். குளிச்சிட்டு தரிசனம் முடிச்சிட்டு கிளம்பிராலாம்னு, அதிக ஹால்ட் இல்லாத மோடி சுற்று பயணம் மாதிரி பிளான் பண்ணினோம்.

குச்சனூருக்கு சில வழிபாட்டு முறைகள் இருக்கு. அந்த கோவில் எதிரில் ஒரு நதி ஓடுது. அந்த நதியில் தான் குளிக்கணும். நதின்னா... ஒரு நாலடி அகலம் ரெண்டடி ஆழம், அவ்வளவு தான். (அதை வாய்க்கால்னெல்லாம் சொல்லி கொச்சை படுத்த கூடாது!) அந்த நதியில் குளிக்கும்போது நாம அணிஞ்சிருந்த அத்தனை உடைகளையும், அண்டர்லைன் “அத்தனை” உடைகளையும், ஆத்தோட அனுப்பிடணும். அதாவது, நம்மை அதுவரை பீடிச்சிட்டிருந்த தீயவைகளையும் சாப தோஷங்களையும் நதியில் விட்டு விடுவதன் சிம்பாலிக்கான குறியீடு அது. அதன்பின், புது துணி போட்டுட்டு திதி கொடுக்கணும். இது யாருக்காகன்னா, நம்ம முன்னோர்கள் மூதாதையர்களுக்கு ஒருவேளை நாம முறையா திதி கொடுக்காம விட்டிருந்தா, மறந்திருந்தா எல்லாத்துக்கும் ஒரே தவணையில் இங்கே கொடுத்துக்கலாம். (அதே தான், இன்கம் டேக்ஸின் சமாதான் ஸ்கீம் மாதிரி தான்.) அங்கேயே சோறு, எள், நெய் எல்லாம் போட்டு ஒரு பேப்பர் தட்டில் தருவாங்க.  நதியோரம் ஒரு விநாயகர் சிலை இருக்கு. அங்கே நாம நம் முன்னோர்களை நினைச்சு, நாம செய்த துரோகங்கள் பாவங்கள் எல்லாத்தையும் நினைச்சு (சுருக்கமா தான், எல்லாத்தையும் லிஸ்ட் போட்டுட்டு இருக்கக்கூடாது!) பிண்டம் உருட்டி படையல் வெக்கணும். பின்னர் விநாயகரை தொழுது வலம் வரணும்.

அடுத்ததா, காக வடிவில் ஓட்டில் செய்த சிற்பம் தருவாங்க. அதை நம்ம தலையை இடம் வலமா மூணு முறை சுத்தி அங்கே இருக்கும் காக பீடத்தில் வைச்சு உடைச்சிரணும். அதோட நம்ம பிடிச்ச சனி ஒழிஞ்சிருமாம். அதுக்கடுத்து, எள் முடிச்சிட்ட எண்ணெய் தீபம். அதை அங்கே ஏற்றி வெக்க ஒரு டேபிள் போட்டிருக்காங்க. அங்கே அதை ஏற்றியதும் நம் வாழ்க்கை பிரகாசிக்க தொடங்குமாம். இதை எல்லாம் முடிச்சிட்டு தான் சனீஸ்வர வழிபாடு. அது வழக்கமான வழிபாடு தான். அர்ச்சனை, தேங்கா பழம் உடைத்தல், தீபாராதனை. முடிஞ்சுது நாம வெளியே வந்திரலாம். அதுவரை தடைபட்ட காரியங்கள் கிரீன் சிக்னல் பார்த்த கார்கள் போல நம்மை தேடி ஓடி வந்திரும். அதை லட்சியமா கொண்டு தான் இந்த திடீர் பயணம்.

என்னதான் பக்காவா பிளான் பண்ணி புறப்பட்டாலும் ஒட்டன்சத்திரம் தாண்டும்போதே மணி 5:30 ஆயிருச்சு. அங்கிருந்து செம்பட்டி போற ரோடு, செம நாஸ்த்தி. குண்டும் குழியுமா 50 கிமீக்கு மேல காரை ஒட்டவே முடியலை. ஏன் மதுரை போற பஸ்செல்லாம் திண்டுக்கல்லை சுத்தி போகுதுன்னு அப்ப தான் புரிஞ்சுது. ஆனா செம்பட்டி ரோடு அழகானது. வலது புறம் கோடைக்கானல் மலை கூடவே வந்துச்சு. ரோட்டுக்கு ரெண்டு புறமும் வயல்கள்.. விவசாயம். பூக்கள் அதிகமா சாகுபடி பண்ணி இருக்காங்க. அது தவிர வாழை, கீரை, காய்கறிகள் அதிகம் பார்த்தேன். பாரம்பரியமான நெல் விவசாயத்தை நம்பி நஷ்டம் அடையாம பணப்பயிர்களா சாகுபடி பணம் சம்பாதிக்கும் அந்த புத்திசாலித்தனம் சந்தோஷம் தந்தது.

செம்பட்டி ஜங்க்ஷன்லருந்து ரைட் டேர்ன். அருமையான ஹைவே. இந்த ஹைவே திண்டுக்கல் – குமுளி – கோட்டையம் வரை போகுது. (அந்த ரூட்டில் கம்பம் – குமுளி – தொடுபுழா வரை பகல் நேரத்தில் பைக்கில் போகணும்னு ஒரு நீண்ட நாள் ஆசை பெண்டிங்க்லயே இருக்கு. நல்ல நண்பர் கிடைச்சா டிரிப் போட்டிரணும்).

ரம்மியமான விடியல் காலை, அமைதியான சாலை, மெல்லிய குளிர். பத்தலகுண்டு தாண்டினதும் ஒரு ரோட்டோர டீக்கடையில் நிறுத்தி டீ குடிச்சிட்டு கிளம்பினோம். அப்பவே மணி 7 ஆயிருச்சு. லேட் ஆகுதேன்னு எல்லோரும் பதறுனாங்க. அட அது ரொம்ப சின்ன கோவில்மா, அதிகம் யாரும் வரமாட்டாங்க, நீங்க தான் இந்த கோவிலுக்கு வரணும்னு அடம் பிடிக்கிறீங்க. போயிட்டு சீக்கிரமா திரும்பிடலாம். கூட்டமெல்லாம் இருக்காதுன்னு எல்லோரையும் சமாதானம் செஞ்சிட்டு வண்டியை எடுத்தேன்.

பெரியகுளம் வரைக்கும் ரோடு சூப்பரா இருந்துச்சு. அதுக்கு அப்புறம் ரோடு ரோடாவே இல்லை. குண்டும் குழியுமா ரொம்ப கேவலமா இருந்துச்சு. இத்தனைக்கும் இது விவிஐபி தொகுதி. முன்னாள் / எதிர்கால முதல்வர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களது தொகுதி. தேனி வரைக்குமே அப்படி தான் இருந்துச்சு ரோடு. தேனி தாண்டினப்பறம் தான் ஓரளவுக்கு சுமாரான ரோடு தென்பட்டுச்சு. பெரியகுளம் – தேனி போற வழியில் கடக்கிற ஊரை பத்தியெல்லாம் பிரஸ்தாபிச்சிட்டே போனேன். (வடுகப்படி – வைரமுத்து ஊரு, அல்லி நகரம் – பாரதிராஜா ஊரு). பல ஊர்களும் பாடல் பெற்ற திருத்தலங்கள். உபயம் எரியாக்காரரான வைரமுத்து. உசிலம்பட்டி, குச்சனூரு, கூடலூரு, பள்ளப்பட்டின்னு கிட்டத்தட்ட எல்லா ஊரையும் அவரது பாடல்களில் எங்கேயாவது நுழைச்சு வெச்சிருக்காரு. அதைஎல்லாம் சொல்லிட்டே தேனி கடந்து குச்சனூர் ரோட்டில் திரும்பினேன். தேனி தாண்டி சின்னமனூர் போற ரோடில் வரும் முதல் மிகப்பெரிய ரைட் டர்ன் மூணாறு போவது. அதில் தவறுதலா திரும்பிரக்கூடாது. இன்னும் 2 கிமீ தூரம் போனா இன்னொரு ரைட் வரும். அது தான் குச்சனூர் போறதுக்கான ரூட். தமிழக அரசின் இந்து சமய அறநிலய துறை சார்பா கோவிலுக்கு போகும் வழின்னு ஒரு பெரிய போர்டு வெச்சிருக்காங்க. அந்த ரூட்டில் திரும்பினா மிக அருமையான மாநில நெடுஞ்சாலை. அங்கிருந்து 13 கிமீ கோவில். அழகான சுற்றுப்புறம். கிராமங்களினூடேயான பயணம். நல்லா இருந்துச்சு.

குச்சனூர் கோவில் லைன் 

குச்சனூரை நெருங்கினதுமே பக்குன்னு ஆயிருச்சு. ஊருக்கு முன்னாலேயே வண்டியை தடுத்து ரூ.50 டோக்கன் போட்டு வாங்கினாங்க. அதுலருந்து ஒரு பத்தடி போயிருப்போம், காரை நிறுத்திட்டு நடந்து போக சொன்னாங்க. கார் நிறுத்த ஒரு பார்க்கிங் ஏரியா நல்லா சேறும் சகதியுமா இருந்துச்சு. அதுல காரை நிறுத்திட்டு அங்கே இருந்த போலீஸ்காரர் கிட்டே, கோவில் எவ்வளவு தூரம் சார், எப்படி போகணும்னு கேட்டேன். கோவில் ரொம்ப தூரம். இங்கே இருந்து ஆட்டோ பிடிச்சு போங்க. ரூ.30 தான்னாரு. ஆட்டோ அசோசியேஷனுக்கு மார்க்கெட்டிங் ரெப்பா இருப்பார் போல. ஏன் சொந்த காரை அங்கே நிறுத்திட்டு ஆட்டோ பிடிச்சு கோவிலுக்கு போனேன். கூட்டம்னா கூட்டம் சும்மா அள்ளுது. திக்கி திணறி நடந்து ஊர்ந்து நகர்ந்து எப்படி எல்லாம் கோவிலுக்கு போகமுடியுமோ அப்படி எல்லாம் போனோம்.

முதலில் ஆற்று குளியல். ஆற்றில் குளிச்சிட்டு வரும் பெண்கள் உடை மாற்ற ஆங்காங்கே நல்ல ரூம்கள் கட்டி வெச்சிருக்காங்க. (நாம அப்படியே மரத்தடியில் மாத்திக்க வேண்டியது தான்!).  ஆற்றுக்கு அந்தப்பக்கம் பச்சை பசேல்னு வயல்வெளி. நாத்து நட்டுக்கிட்டு இருந்தாங்க. ஆடி பட்டமாச்சே.

கும்பலோடு கும்பலா அவசரம் அவசரமா குளிச்சிட்டு, மத்த சாங்கியங்களை எல்லாம் முடிச்சிட்டு தரிசன லைனில் நின்னோம். அங்கே இருந்த கோவில்காரர்ட்ட லேசா பேச்சு கொடுத்தேன். “வழக்கமா கூட்டமே இருக்காது சார். சனிக்கிழமை மட்டும் தான் கூட்டம். இது ஆடிமாசம் வேறையா? அஞ்சு சனிக்கிழமையும் கூட்டம் ஜாஸ்த்தியா இருக்கும். நாளைக்கு வந்தீங்கன்னா கூட்டம் இருக்காது. இந்த கோவிலை வெச்சு தான் நிறைய பிஸினஸ் இங்கே. அதனால தான் 2 கிமீ முன்னாடியே வண்டிய நிறுத்தி உள்ளூர் ஆட்டோவுக்கு சவாரி கொடுக்கிறோம். இன்னொரு வகையில் இங்கே வாகன நெரிசலையும் அது தடுக்குமுல்லே”ன்னு ரொம்ப லாஜிக்கா பேசுனாரு.

ஆற்றில் குளியல் படித்துறை
மாவட்ட நிர்வாகம் எல்லா ஏற்பாடையும் சூப்பரா பண்ணி இருந்தாங்க. நிறைய போலீஸ், தடுப்பு தட்டிகள், புறக்காவல் நிலையம், சுகாதார துறை மூலமா மருத்துவ குழு, பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாமே அட்டகாசமா இருந்துச்சு. கோவில் ரொம்ப சின்ன கோவில் தான். ஆனா கீர்த்தி பெரிசாச்சே.

சிறப்பு தரிசனமெல்லாம் போகாம இலவச தரிசன லைன்லயே நின்னோம். லைன் வேக வேகமா போச்சு. தரிசனம் முடிஞ்சு அரை மணிநேரத்துலயே வெளியே வந்துட்டோம்.

அப்புறம் அப்படியே ஒரு நகர்வலம். நிறைய கடைகள். கிராமத்து ஸ்பெஷல் உணவுகள். பண்ட பாத்திரங்கள், விளையாட்டு பொருட்கள்னு நிறைய கடைகள். பரவாயில்லை, இந்த திருவிழா கூட ஒரு வகையில் நம்ம சிட்டியில் போடும் ஷாப்பிங் மேளா மாதிரி தான். ஒரே நாள், ஓஹோன்னு வியாபாரம்.

மீண்டும் ஆட்டோ பிடிச்சு கார்பார்க்கிங் வந்து காரை எடுத்து கிளம்பினோம்.

கார் பார்க்கிங் (!)

ஏற்கனவே டிவிட்டர்ல தேனியில் நல்ல ஹோட்டல் எதுன்னு கேட்டதுக்கு வந்த ரிபரன்ஸை மனசில் வெச்சிட்டே தேனி நோக்கி பயணிச்சோம். பசி வேற வயித்தை கிள்ளுது. பின்னே? மணி 11 ஆயிருச்சுல்ல?

தேனி – மதுரை ரூட்டில் அகிலா ஜூவெல்லரி அருகில் மாருதி ரெஸ்டாரண்ட். அது தான் டார்கெட். ஆனா மதுரை நோக்கி போகும்போது ரோட்டுக்கு வலதுபுறம் இருக்கு ரெஸ்டாரண்ட். யூ டர்ன் போடுறதுக்கு சோம்பேறித்தனம். அதனால் லெப்ட்ல ஒதுக்கு வண்டிய நிறுத்திட்டு ரோடை கிராஸ் பண்ணி தான் ஹோட்டலுக்கு போனோம். பரவாயில்லை, நல்ல அருமையான ஹோட்டல், சுவையான டிபன். நியாயமான விலை.

மீண்டும் ரிடர்ன் ஜர்னி. அதே யூ டர்ன் போட சோம்பேறித்தனப்பட்டுட்டு கொஞ்ச தூரம் மதுரை ரோட்டிலேயே பயணிச்சு பெரியகுளத்துக்கு திரும்பும் லெப்ட் ரோடில் திருப்பி பெரியகுளம் போனோம். மீண்டும் அதே ரூட், செம்பட்டி, ஒட்டன்சத்திரம், தாராபுரம்.


இந்த பயணத்தால் தோஷம் நீங்குதோ இல்லையோ சந்தோஷம் நிறைஞ்சிருச்சு. முழுக்க முழுக்க கிராமிய பகுதி வழியா ஒரு நாள் முழுக்க பயணம் பண்ற சுகமும் புத்துணர்ச்சியும் வார்த்தைகளில் சொல்லி மாளாது. சனீஸ்வரனுக்காக இல்லைன்னாலும், ஜஸ்ட் அந்த இயற்கை அழகை ரசிக்கவாவது ஒரு ட்ரிப் அடிங்க. பக்கத்துலே நிறைய அருவிகள் வேற இருக்கு. நாங்க அதுக்கெல்லாம் போகலை. எங்களுக்கு நேரமில்லை. உங்களுக்கு நேரமிருந்தா ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வாங்க. என்ஜாய்.

ஜெ - எந்த வதந்தி நிஜம்?

மீப காலங்களாக தமிழக மீடியாவையும் தேசிய மீடியாவையும் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் வதந்திகளில் பெரும்பாலானவை தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா குறித்தானது. அவற்றை சொத்து குவிப்பு வழக்கு, உடல்நலம் என இரண்டாக பிரிக்கலாம்.



சொத்து குவிப்பு வழக்கை பொறுத்தவரை, கர்நாடக அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தவுடனேயே பல பல ஹேஷ்யங்கள் இறக்கை கட்டி பறக்க தொடங்கி விட்டது. அதே போல சமீப காலமாக அவரது உடல் நிலை குறித்தும் சில வதந்திகள் வந்து கொண்டு இருக்கிறது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை என நான் கருதுவது

  • வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – அதிமுக கூட்டணி அமையும், அதில் அதிக இடங்களை கோருவதற்கான முதற்படி தான் இந்த அப்பீல் பூச்சாண்டி (ஆனால் இது யதார்த்தம் அல்ல. ஏனென்றால் முறைப்படி மனு தாக்கல் செய்து விசாரணைக்கும் வரவிருக்கிறது)

  • நில கையகப்படுத்தும் சட்டத்துக்கு ஆதரவு எதிர்ப்பு என மாறி மாறி கருத்து தெரிவிக்கும் அதிமுக இதுவரை அது குறித்து தெளிவான எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனால் தான் பாஜகவும் இந்த அப்பீல் விஷயத்தில் மவுனம் காக்கிறது (பாஜக இந்த வழக்கு விவகாரத்தில் எந்த தலையீடும் ஆதரவும் எதிர்ப்பும் செய்யவில்லை என்பது தெரியவருகிறது 

  • அப்பீல் மிக நியாயமான காரணங்களை கொண்டதால் உச்சநீதிமன்றம், சட்டத்தின் மீதான நம்பிக்கையை நிலைநாட்டுவ்தற்காக கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து தண்டனை அளிக்கும்.

  • உச்சநீதிமன்றம் எப்போதுமே ஜெயலலிதாவுக்கு உரிய சாதகமான நடவடிக்கைகளையே இதுவரையும் எடுத்து வந்துள்ளது. புதிய விதிமுறைகளை புகுத்தியோ இருக்கும் விதிகளை மீறியோ அவருக்கு சாதகமான தீர்ப்புகளை அளிப்பதே வழக்கம். அதுவே தான் இப்போதும் நடக்கும்

  • உச்சநீதிமன்றமே நீதியை நிலைநாட்ட இந்த வழக்கில் அதீத ஆர்வம் காட்டுகிறது. குறைகளை காரணம் காட்டி மனுவை ரிஜக்ட் செய்யாமல் திருத்தி வாங்கி இருப்பதுடன், முந்தய தாக்கல் தேதியான ஜூன் 23 ஆம் தேதியிட்டே அந்த வழக்குக்கு சீனியாரிட்டி கொடுத்திருப்பதிலிருந்தே தெரியவில்லையா, உச்சநீதிமன்றம் இனி சட்டப்படி மட்டுமே செயல்படும் என்று?

  • மதில்மேல் பூனை போலிருக்கிறது உச்சநீதிமன்றத்தின் இப்போதைய நிலை. ஜெ.வுக்கு சாதகமாக நடந்துகொண்டால் நீதியை குழி தொண்டி புதைத்ததாக ஆகிவிடும். எனவே வழக்கை ஆறப்போட்டு நீட்டித்து கொண்டே இருப்பது தான் உச்சநீதிமன்றத்தின் திட்டம். 2008 ஆம் ஆண்டு தாக்கலான ஸ்பெஷல் லீவ் பெட்டிஷனையே அடுத்த வாரம் தான் விசாரணைக்கு எடுக்கிறது உச்சநீதிமன்றம். எனவே இன்னும் சில ஆண்டுகளாவது ஆகும்.

  • ஃபாலி நாரிமன் இன்னமும் ஜெ. தரப்பு சார்பாக ஆஜராக முடிவெடுக்கவில்லை. அவரது நெருங்கிய வட்டாரங்களும், நீதித்துறை நண்பர்களும் அவரிடம் இதுபோன்ற அப்பட்டமான விதிமீறல் வழக்குகளை ஆதரித்து ஆஜராகி உங்கள் இமேஜை கெடுத்துக்கொள்ளவேண்டாம் என அக்கறையோடு சொல்லிக்கொண்டிருப்பதாக கேள்வி

  • வழக்கு எப்படியும் தனக்கு சாதகமாக தான் அமையும் என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருக்கிறார். அதனால் தான் எந்த பதற்றமோ அவசரமோ இல்லாமல் கட்சி அமைதியாக இருக்கிறது

  • ஜெயலலிதாவுக்கு தீவிர உடல்நல குறைவு. வெளிநாடு சென்று அதற்கான வைத்தியம் பார்க்க போகிறார்.

  • ஜெயலலிதா நலமாக தான் உள்ளார். வழக்கில் கைது செய்யப்படும் சூழல் வந்தால் அதிலிருந்து தப்பிக்க தான் அவர் வெளிநாடு செல்ல முயல்கிறார். அதற்காக தான் உடல் நலம் இல்லாமல் இருப்பதாக எல்லோரையும் நம்ப வைக்கிறார்

  • உடல்நலத்தை காரணம் காட்டி வெளிநாடு சென்றுவிட்டு, லலித் மோடி போல வெளிநாட்டிலிருந்தபடியே இண்டர்நெட் மூலம் செயல்படுவார். இங்கே தனது நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் பெயரளவில் பதவியை கொடுத்துவிட்டு அங்கிருந்தபடி ஆட்சியை நடத்துவார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நிர்வாகம் செய்வதற்கான பயிற்சியை அதற்காக தான் எடுத்து வருகிறார்.

  • லண்டனில் உள்ள நட்சத்திர ஹோட்டல் வாங்கப்பட்டதே பின்னாளில் அங்கே போய் செட்டில் ஆகி அமைதியாக வாழத்தான். அதை இப்போது செயல்படுத்தி அரசியலில் இருந்து ஒதுங்கி அங்கே போய் செட்டில் ஆகிவிடுவார்


இவையும்.. இவை போன்ற இன்னும் பலவும் வதந்திகளாக பறந்துகொண்டிருக்கிறது மீடியாக்களில். ஆனால் அதிமுக தரப்பில் இருந்து எந்த உறுதியான மறுப்போ விளக்கமோ எதற்கும் தரப்படாமல் இயல்பாக தான் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

எது எப்படியாயினும், என்னளவில் ஜெ. தமிழகத்தின் தவிர்க்கமுடியாத தலைவர். ஒருமுறை அவர் சொன்னதை போல, “தமிழகம் பெரியாரின் புண்ணிய பூமி. அவரது வழித்தோன்றல்கள் மட்டுமே ஆட்சி செய்ய உரிமையுள்ள நிலம்.” அது அத்தனை சத்தியமான வார்த்தை. அதன்படி பார்த்தால் காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகள் அல்லாமல் திமுக அதிமுக இருவர் மட்டுமே ஆள உரிமை கொண்டவர்கள் என்கிற பொருள் வருகிறது.

தமிழகத்தின் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் அதிமுக திமுக இருவருக்குமே பங்கு இருக்கிறது. இன்றைய சூழலில் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால், ஜெ. போன்ற ஒரு தலைவர் உடல் நல குறைவுதான் இருக்கிறார் என்பதை கேட்டபின் வருந்தாமல் இருக்க முடியவில்லை. அவர் மிக நல்லபடியாக குணமடைந்து வரவேண்டும் என்பது ஒவ்வொரு தமிழக மக்களின் வேண்டுதல் என்பதை எல்லோரும் அறிவார்.

சட்ட ரீதியான போராட்டங்களில் சட்டம் தான் ஜெயிக்கவேண்டும் என்பது ஒரு புறம். எனினும் மனதின் ஒரு ஓரத்தில் எப்படியாவது ஜெயலலிதா அந்த வழக்கிலிருந்து விடுபட்டு வெளிவந்துவிடுவார் என்கிற கருத்தும் ஒரு ஓரத்தில் இருக்க தான் செய்கிறது.

எத்தனை எத்தனையோ வதந்திகள் சுற்றி கொண்டு இருக்கின்றன. ஆனால் அந்த வதந்திகளில் எந்த வதந்தி நிஜமாகும் என்பதை காலம் தான் சொல்ல வேண்டும். அது நல்ல வதந்தியாக இருக்கவேண்டும் என்பது மட்டுமே எனது ஆசை.





Printfriendly