Monday, June 28, 2010

தமிழ் படித்தால் வேலையில் முன்னுரிமை!

கொங்கு மண்டல கோவை மாநகரில் ஆரபாட்டமாய் நடந்து முடிந்து இருக்கிறது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு. 

இது உலக தமிழ் ஆராய்ச்சி மையத்தின் அங்கீகரிக்க பட்ட மாநாடு அல்ல எனினும், தமிழ் சார்ந்த நல்ல விஷயங்கள் பல அரங்கேறின அங்கே.

தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட மாநாடு என்பதை, தமிழுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத "கோவை காந்திபுறம் பகுதியில் நூறு கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கப்படும்" போன்ற அறிவிப்புக்கள் தெளிவு படுத்தினாலும், நாம் தமிழ் சார்ந்த விஷயங்களுக்கே வருவோம்.

முக்கியமான ஒரு அறிவிப்பு - "தமிழ் வழி கல்வி கற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்டம் கொண்டு வரப்படும்" என்பது.

தமிழகத்தில் உள்ள அரசு பணிகளுக்கான வேலை நியமன தேர்வுகளில் பெரும்பாலும் நன்கு படித்தவர்களே தேறி வருகிறார்கள் எனினும் வட்டார வழக்கு மொழி அறியாமையால் பல நேரங்களில் அரசு பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது.  கட்டாயமாக தமிழ் கற்றிருக்க வேண்டும் என்றொரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டும், அரசு அதிகாரிகள் தமிழிலே கையெழுத்து இடவேண்டும் என்று ஒரு அரசானை பிறப்பிக்கப்பட்டும், அது எதிர்பார்த்த பயனை தரவில்லை.

ஒரு கிராமத்தில் உள்ள பிரச்னையை தீர்க்கவேண்டிய ஒரு அதிகாரிக்கு தமிழ் தெரியாவிட்டால் எத்தனை கஷ்டம் என்பதை நான் நேரடியாக பார்த்து உணர்ந்திருக்கிறேன்.  அவர் நன்கு படித்தவர் தான்.. சிறந்த நிர்வாகி தான்.. எனினும் மிகவும் அன்னியப்பட்டு போனது போல ஒரு உணர்வு.. அவருக்கு தமிழ் புலமை இல்லாததால் ஏற்பட்டு விடுகிறது.

எனவே தமிழ் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை என்கிற இந்த அறிவிப்பு இரண்டு விதங்களில் நன்மை பயக்கும்.

ஒன்று: 

இன்றைய காலகட்டத்தில் தமிழ் வழி கல்விக்கு குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கையே நடைபெறுகிறது.  ஆங்கில வழி கல்வி கற்று, தமிழை ஒரு பாடமாக படித்து வருவதே பெரும்பான்மையாக நடைபெறுகிறது.  இது தமிழ் ஆர்வத்தை ஒரு பாடம் என்கிற அளவிலே கட்டுப்படுத்தி விடுவதால், ஆழ்ந்த தமிழ் அறிவு மாணவர்களுக்கு ஏற்படுவதில்லை. 

எனவே அரசு பணிகளில் தமிழ் வழி கல்வி கற்றோருக்கு முன்னுரிமை என்கிற அறிவிப்பு மிகுந்த எண்ணிக்கையில் தமிழ் வழி கல்வி கற்க மாணவர்களை தூண்டும் / பெற்றோரை ஊக்குவிக்கும் என்பதும், அதனை சார்ந்த தமிழாசிரியர் பணியிடங்களின் தேவை அதிகரித்தல் மற்றும் தமிழ் வழி களை சொற்கள் மிகுதி பாடல் என தமிழ் செழித்து ஓங்கி வளர ஒரு வாய்ப்பாக அமையும்.

இரண்டு:

தமிழை பயிற்று மொழியாக கற்று அரசு பதவிகளில் அமர்கின்றவர்களால் தமிழகத்தின் மக்கள் தேவைகளை எளிதாகவும் உணர்வுப்பூர்வமாகவும் உணர்ந்து கொள்ள இயலும்.  அது சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கவும் ஏதுவாகும்.

தமிழ் வழி உரையாடல் என்பது அரசு அதிகாரிகளுக்கும் சாமானிய பொதுமக்களுக்கும் இடையில் இப்போது இருக்கும் இடைவெளியை முற்றிலுமாக ஒழிக்கும் என்றும் நம்பலாம்.

மாநாட்டில் எத்தனையோ அறிவிப்புக்கள் வெளியானாலும், இந்த ஒரு அறிவிப்பாவது செயல்வடிவம் பெறவேண்டும் என்பது எனது ஆவல்...

ஆசைக்கு அளவில்லை தானே?

1 comment:

  1. pl check this news to know how Tamil scholars are treated in TN . High court has slammed the GOVT .
    Read this .http://www.vikatan.com/news/news.asp?artid=3803

    ReplyDelete

Printfriendly