Sunday, June 30, 2013

அரசு காய்கறி கடை - பல்நோக்கு திட்டத்தின் புள்ளி!


சென்னையில் 31 மலிவு விலை காய்கறிகள் கடைகளை முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

கடந்த வாரம் இப்படி ஒரு செய்தி நாளிதழ்களில் ஃபிளாஷ் ஆனபோது அது பத்தோடு பதினொன்றாக தான் பார்க்கப்பட்டது. அதன் சரியான வீரியமும் தாக்கமும் பலரும் உணர்ந்திருக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்பு கூட கிலோ 110 ரூபாய் வரை விற்றுக்கொண்டிருந்த சின்ன வெங்காயம் இந்த கடைகளின் வரவுக்கு பின் இரண்டே நாளில் கிலோ 55 ரூபாய்க்கு குறைந்தது. இதே கதை தான் அனைத்து காய்கறிகளுக்கும்.

இடைத்தரகர்கள் மூலமாக புனைவாக விலையேற்றி விற்கபட்ட காய்கறிகளின் விலைகளை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அரசே நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து விற்க தொடங்கியதில், சட்டென வெளி மார்க்கெட்டிலும் இயல்பான விலைக்கு இறங்கிவிட்டது.

இது கிட்டத்தட்ட மத்திய அரசு கொண்டுவர எண்ணும், சில்லறை விற்பனையில் அந்நிய முதலீடு போன்றது தான். நேரடி கொள்முதல், நேரடி விற்பனை. ஆனால் அது தனியார் மூலம் நடைபெறும். இப்போது தமிழக அரசு கொண்டு வந்திருப்பது அரசு நிறுவனமான TUCS மூலமாக. அது தான் வித்தியாசம். அந்நிய முதலீடு மூலம் கடைகள் அமைத்தால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என பெரும்கூச்சலிட்டு போராடிய வணிகர்கள், அதை விட பன்மடங்கு தங்கள் விற்பனையை பாதிக்கும் இந்த அரசு கடைகள் பற்றி மூச்சு விடவில்லை. அதற்கான காரணம் எல்லோரும் அறிந்தது தான்!

கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட உழவர் சந்தை திட்டத்துக்கு பெயர் மாற்றி ஜெ. இந்த திட்டத்தை கொண்டுவந்தார் என்கிற ஒரு அரைகுறை தகவலும் வேகமாக இணைய தளங்களில் உலா வந்தது. உழவர் சந்தை என்பது அரசு அமைத்து கொடுத்த இடம் மட்டுமே. அங்கே விவசாயிகள் தங்கள் பொருட்களை நேரடியாக அவர்களே கொண்டுவந்து விற்றுக்கொள்ளலாம் என்பது தான் ஏற்பாடு. ஆனால் அந்த திட்டம் தோல்வியடைந்ததன் முக்கிய காரணம், பல விவசாயிகள் தங்கள் கைக்காசு செலவழித்து விவசாய பொருட்களை அங்கே கொண்டு செல்ல விரும்பாதது. அரசு பேருந்துகளில் இலவசமாக கொண்டு செல்லலாம் என அரசு அறிவித்திருந்தாலும், பெரும்பாலான கண்டக்டர்கள் அதை பின்பற்றவில்லை. விவசாய பொருட்களை பஸ்களில் ஏற்ற மறுத்தார்கள். இதன் பயனாக, பிற தரகர்களும் மளிகை கடைக்காரர்களுமே உழவர் சந்தையை பயன்படுத்த தொடங்கினார்கள். எனவே அது விலையில் பெரிய வித்தியாசம் ஏற்படுத்தவில்லை. அப்படியாக அந்த திட்டம் மெல்ல முடங்கியது.

ஆனால், இப்போதைய திட்டம் முற்றிலும் வேறு மாதிரி. ரிலையன்ஸ் ஃபிரஷ் நிறுவனத்தின் மாடலில் அமைந்தது. அதாவது அரசு நிறுவனம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, தனது கடைகள் மூலமாக விற்பனை செய்வது. ஏற்கனவே சிந்தாமணி, அமுதம் போன்ற கடைகளை நடத்தி வரும் அரசு அதன் ஒரு அங்கமாக இந்த காய்கறி கடைகளையும் தொடங்கி இருக்கிறது

சென்னையில் மட்டும் 31 கடைகள் என்பதன் மற்றும் சில பயன்களும் கவனிக்கப்படவேண்டியவை. ஏற்கனவே எனது சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு குறித்த தொடரில் சொல்லியதை போல, இன்றைய தேதியில் நாட்டின் மிகப்பெரிய வரி ஏய்ப்பை செய்துகொண்டு வருவோர் ‘மளிகை கடை’யினர் தான். அதை குறைத்து அரசுக்கு வரி வருவாயை அதிகரிக்கவும் இந்த காய்கறிகடைகள் அரசுக்கு உதவும். உதாரணமாக, நீங்கள் எப்படியும் வாரத்துக்கு ரூ.500 க்கு காய்கறிகள் / மளிகை பொருட்கள் உங்கள் வீட்டுக்கு வாங்குவதாக வைத்துக்கொள்வோம். எப்படியும் உங்களின் அந்த செலவு தவிர்க்கமுடியாதது. ஆனால், அதை உங்கள் பக்கத்திலிருக்கும் மளிகை கடையில் வாங்குகையில் அதில் இருந்து சல்லிக்காசு கூட அரசுக்கு வரியாக கிடைப்பதில்லை. ஆனால், அதே செலவை அரசு கடையில் செய்தால், அரசுக்கு 10% வருவாய், அதாவது ரூ.50 வரியாக கிடைக்கும். இப்படி தமிழகம் முழுதும் ஒரு நாளில் மளிகை கடையில் வியாபாரமாகும் தொகை அதிலிருந்து அரசுக்கு கிடைக்கக்கூடிய வரியை நீங்களே குத்துமதிப்பாக கணக்கிட்டு கொள்ளலாம்.

ஒருவேளை மதுவிலக்கு கொண்டு வரும் பட்சத்தில் அந்த கடைகளையெல்லாம் மளிகை/காய்கறி கடைகளாக மாற்றுவதன் மூலம் தெருவுக்கு தெரு அரசு காய்கறி கடைகள் மூலம் மலிவான விலையில் நமக்கு அன்றாட காயகறிகள் கிடைப்பதோடு, விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். அரசுக்கும் வரி வருவாய் அதிகரிக்கும். இப்படியான மல்டிப்பிள் மாங்காய் அடிக்கும் கல் இந்த கடை.

சமீப காலமாகவே தமிழக அரசு நிறைய அட்டகாசமான அறிவிப்புக்களை வெளியிட்டு வந்திருக்கிறது. அவை மீடியாக்களால் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டதோ என்கிற வருத்தம் எனக்கு உண்டு. அவற்றில் சிலவற்றை ஒரு வரி சுருக்கமாக உங்கள் கவனத்துக்கு:

Ø  குன்னூரில் தமிழ்நாடு தேயிலை கழக தோட்டத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் டான்டீ (TANTEA) யின் மேம்படுத்தப்பட்ட வகை அறிமுகம் செய்தது.

Ø  ஏகபோகமாக தனியாரிடம் இருக்கும் கிரானைட் விற்பனையை அரசின் டாமின் (TAMIN) மூலமாக அரசே விற்க முடிவெடுத்திருப்பதுடன், அதை ஏற்றுமதி செய்யவும் உத்தேசித்திருப்பது.

Ø  அரிசி விலை கட்டுக்கடங்காமல் செல்வதை தடுக்க அரசே ஒரு கிலோ அரிசி ரூ.20/-க்கு விற்பனை செய்ய முடிவெடுத்தது (இதில் அரிசி விலை கட்டுக்குள் வந்தது)

Ø  ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு மிக மிக மலிவான விலையில் உணவு பொருட்கள் கிடைக்க செய்தது. ஏற்கனவே திமுக அரசில் ரூ.20/-க்கு தான் எல்லா ஹோட்டல்களும் மதிய உணவு தரவேண்டும் என இட்ட உத்தரவை எந்த ஹோட்டலும் பின்பற்றவில்லை. இப்போது, அரசே ஹோட்டல் நடத்துவது, வேறு வழியின்றி பல தனியார் ஹோட்டலின் விலைப்பட்டியலை திருத்தி குறைக்க வழி செய்தது.

Ø  அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள், ஒரு லிட்டர் தண்ணீரை ரூ.20/- வரை கொடுத்து வாங்குவதை தவிர்க்க அரசே ரூ.10/- க்கு தண்ணீர் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது.

Ø  மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களான தினை, கேழ்வரகு, சாமை, தேன் போன்றவற்றை அரசே நேரடியாக கொள்முதல் செய்து கூட்டுறவு கடைகள் மூலம் விற்பனை செய்து அவர்களது வாழ்க்கை வருவாய்க்கு வழி செய்திருப்பது.

என பல பல திட்டங்கள் நீளமாக இருக்கிறது.

இவை எல்லாமே ஏதோ ஒரு வகையில் மறைமுகமாக சாதிக்க நினைப்பது இவற்றை தான்.

Ø  நுகர்வோருக்கு (மக்களுக்கு) நியாயமான விலையில் பொருட்கள் கிடைக்கவேண்டும் (எப்படியும் அவர்கள் செலவு செய்ய தயாராக தான் இருக்கிறார்கள். அந்த செலவை முடிந்த அளவுக்கு குறைப்பது)

Ø  உற்பத்தியாளருக்கு நியாயமான விலை கிடைக்க உதவுவது

Ø  மறைமுக இடைத்தரகு முறையை முற்றிலுமாக ஒழிப்பது

Ø  அரசுக்கான வரி வருவாயை அதிகரிப்பது

Ø  விலைவாசியை கட்டுக்குள் வைப்பது

இது ஒரு மிகச்சிறந்த அணுகுமுறை என நான் கருதுகிறேன்.

அரசின் மீது வைக்கப்படும் விமர்சனம், அரசு என்பது பிசினஸ் செய்யவேண்டிய அவசியம் என்ன? சேவை தானே அரசின் நோக்கம்? என்றெல்லாம் கேள்வி கேட்பவர்களும் உண்டு.

எல்லா தொழிலிலும் அரசும் ஒரு பங்குதாரராக இருப்பதை தான் தமிழக அரசு செய்கிறது. இதன் மூலம் ஏகபோகம் தடுக்கப்பட்டு, அரசின் நியாயமான விலையை ஒட்டியே எல்லோரும் விற்பனைவிலையை நிர்ணையிக்க முடியும். அரசே எல்லா தொழிலிலும் இறங்குவதென்பது, மக்களுக்கு ஒரு நம்பிக்கையையையும் உத்திரவாதத்தையும் நல்கும் என்பதில் சந்தேகமில்லை.

அரசின் நோக்கத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் விமர்சிப்பவர்களை கண்டுகொள்ளாமல், அரசின் நோக்கத்துக்கு உதவும் வகையில், கூடுமானவரை நமது தேவைகளை அரசு நிறுவனங்கள் மூலமாகவே நிறைவேற்றுவதன் மூலம் நமக்கும் சிக்கனமான செலவு, அரசுக்கும் வரி வருவாய் என தமிழகத்துக்கு உதவவேண்டிய தத்தமது கடமையை உணரக்கூடியவர்கள் தானே நாமெல்லோரும்? சரி தானே?
 

Saturday, June 22, 2013

சேது சமுத்திர போர் – நமது கடமை!


சேது சமுத்திர திட்டம் தமிழகத்துக்கு தேவையில்லை என்றொரு அதிர்ச்சியான அஃபிடவிட்டை தமிழக அரசு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ததிலிருந்தே இந்த பதிவை எழுத நினைத்திருந்தேன். ஆனால் திட்டம் குறித்து முழுமையாக அறிந்து தெளிவதில் மிகுந்த கால நேர தாமதமாகிவிட்டது.

சேது சமுத்திர திட்டம் என்பது ஒன்றரை நூற்றாண்டு கனவு. இதை முழுமையாகவும் விரிவாகவும் பதிவாக எழுதுவது இயலாத காரியம். ஏற்கனவே பலரும் இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் எழுதி தள்ளிவிட்டார்கள். எனவே இப்போதைய சூழலை மட்டும் அலசினால் போதுமானதாக இருக்கும் என கருதுகிறேன்.

இந்த திட்டத்துக்கான முதல் விதையை விதைத்தவர் ஆங்கிலேய அரசின் இளம் பொறியாளர் மேஜர் ஜேம்ஸ் ரென்னல் அவர்கள். 18ம் நூற்றாண்டிலேயே அவர் இந்த திட்டம் பற்றி சொன்னாலும், அப்போது பெரிதாக எடுபடாமல் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு பின் 1838ல் தான் திட்டத்துக்கான முதல் தோண்டுதல் தொடங்கியது. அப்போதும் அது அதிக முக்கியத்துவம் பெறாமல் நிறுத்தப்பட்டுவிட்டது. பின்னர் 1860லிருந்து திரு. ஆல்ஃபிரட் டண்டாஸ் டெய்லர் அவர்கள் மூலமாக தான் திட்டம் தீவிரமானது.

இந்தியா சுதந்திரம் பெற்றதும் 1956ல் முதல் குழு அமைக்கப்பட்டது. திராவிட பேரியக்கத்தின் மிகப்பெரிய கனவான சேது திட்டம், திமுக ஆட்சி பொறுப்பேற்றபோதெல்லாம் வலியுறுத்தப்பட்டு, பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு, இறுதியாக 2005, ஜூலை 2ல் பிரதமர் திரு.மன்மோஹன் சிங் அவர்களால் துவங்கப்பட்டது.

இந்த வரலாற்று சுருக்கத்திலிருந்தே ‘வைகோவின் கனவு திட்டம்’ என்கிற வாக்கியத்தின் உண்மை தன்மையை உணரலாம். ‘சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ என பாரதி பாடிய போது வைகோ இல்லை. திமுக தீவிரமாக சேது திட்டம் பற்றி பேசிய 1950களில் வைகோ இல்லை. 1970களில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் முன்னெடுத்து சென்ற போராட்டங்களில் வைகோ இல்லை. ஆதித்தனாருக்கு பின்னர் திமுகவின் பிரதிநிதியாக சேதுசமுத்திர திட்ட விவரணைகளை கையாண்ட வகையில் தான் வைகோ இந்த விஷயத்துக்குள் வருகிறார். இன்றைக்கு சேது சமுத்திர திட்டம் தனது கனவு திட்டம் என தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார். இப்படி சம்மந்தமேயில்லாத பலரும் இந்த திட்டத்துக்கான கிரெடிட் எடுத்துக்கொள்ள துடிக்கும் அளவுக்கு அப்படியென்ன அது நல்ல திட்டம்?

மன்னார் வளைகுடா பகுதியில் கடல் இருந்தாலும் பெரும் கப்பல்கள் அதில் பயணிக்க முடியாது. காரணம் 36 கிலோமீட்டருக்குள் எதிரும் புதிருமாக இந்திய இலங்கை கரைகள் இருப்பதால், அலைகள் இருவேறு திசைகளில் பயணிப்பதால், கடல்நடுவே பல பல மணல்திட்டுக்கள் இயற்கையாகவே உருவாகியிருக்கின்றன. இவை ராமபிரானால் கட்டப்பட்டவை என ஒரு சாராரும், இயற்கையாக உருவானவை என இன்னொரு சாராரும் இன்னமும் வாதாடிக்கொண்டிருக்கின்றனர். ஆதம்ஸ் பாலம் என பெயரிடப்பட்ட இந்த பகுதிக்கு, அவசரம் அவசரமாக ராமர் பாலம் என பெயரிட்டு, மத ரீதியான உணர்வுகளின் பாதுகாப்போடு அந்த பகுதியை பாதுகாக்க மத அமைப்புக்கள் முனைகின்றன.

மற்றொரு புறம், தென் கோடி தமிழகம் தொழில் வளர்ச்சியில் பின் தங்கியிருப்பதால் அதை ஈடுகட்ட தூத்துக்குடி துறைமுகத்தையும், சென்னை துறைமுகத்தையும் நேரடியாக இணைக்கும் நோக்கில், இந்த மணல் திட்டுக்களை கொஞ்சம் தகர்த்து ஆழப்படுத்தி பெரிய கப்பல்களை இயக்க முடிந்தால், அதன் அடிப்படையில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, கடலூர் மாவட்ட கடற்புறங்களில் பல சிறு துறைமுகங்களை ஏற்படுத்தி கடல் வாணிபத்தை பெருக்க முடியும் எனவும், தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்த இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையேயான கடல் எல்லையை நம் போர்க்கப்பல்கள் மூலம் பாதுகாக்க முடியும் (இப்போது வெறும் ரோந்து படகுகள் மட்டும் தான்) எனவும் உணர்ந்து, சேதுக்கால்வாய் திட்டத்துக்காக திராவிட இயக்கங்கள் போராடிவருகின்றன.

இந்த திட்டத்தின் மூலம், இலங்கையை சுற்றி சென்னை வர வேண்டிய அவசியம் கப்பல்களுக்கு இருக்காது. மேலும் மேலே சொன்னபடி பல்வேறு சிறு துறைமுகங்களை மாநிலம் முழுதும் ஏற்படுத்துகையில் உட்புற தமிழக தொழிற்சாலைகளிலிருந்து கடல்வணிகம் செய்வது எளிமையாகும். துறைமுகம் சார்ந்த ஊர்களில் மறைமுக வேலைவாய்ப்பு பெருகும். அந்த வகையில் தென் தமிழகம் வளர்ச்சிபெறும் என்பதெல்லாம் இந்த திட்டத்தின் தமிழகம் சார்ந்த பலன்கள். கடற்பாதுகாப்பு, இந்திய பெருங்கடலின் முழுமையான கட்டுப்பாடு ஆகியவை இந்திய தேசம் சார்ந்த பலன்கள்.

அதனால் தான் இந்த திட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த திட்டத்தை மறைமுகமாக எதிர்க்கும் இலங்கை, இந்தியாவிலுள்ள பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க போன்ற தங்கள் நண்பர்கள் மூலமாக இந்த திட்டத்துக்கான எதிர்ப்பை பல வகையிலும் முன்வைத்துக்கொண்டிருக்கிறது.

இலங்கை இந்த திட்டத்தை விரும்பாததற்கு வணிக / அரசியல் காரணங்கள் இருக்கிறது.


(கொழும்பு சர்வதேச சரக்கு பெட்டக முனையம்)
 

தற்போது சர்வதேச கண்டெயினர் டிரான்ஷிப்மெண்ட் கொழும்புவில் இருக்கிறது. சென்னை, தூத்துக்குடி, கொச்சி, மங்களூர் போன்ற இந்திய துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்டகங்கள் கூட கொழும்பு சென்று பின் அங்கிருந்து தான் பயணிக்கிறது. சேது கால்வாய் வருமாயின், சென்னையிலிருந்து புறப்படும் கப்பல்கள் கொழும்பு வராமலேயே ஆப்பிரிக்க, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு பயணிக்கும். இன்றைய தேதியில் மிக அதிக அளவில் சரக்கு கையாளும் சென்னை துறைமுகத்தின் வாயிலாக கொழும்பு பெற்று வரும் வருமானம் இதனால் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

சீனா சமீபத்தில் வெளியிட்ட ‘புளூ புக்’கில் இந்திய பெருங்கடலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியிருப்பதுடன், இலங்கையின் சில துறைமுகங்களை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வது, சீன கடற்படை தளம் அமைப்பது ஆகியன மூலம் இந்தியாவுக்கான மற்றுமொரு செக் வைக்கும் நடவடிக்கையிலும் ராஜீய ரீதியாக இலங்கை முயல்கிறது.

இந்த இரண்டுமே இந்தியாவுக்கு பாதகமானவை. அதனால் தான் பெரும் முதலீடு செய்து இந்த திட்டத்தை நிறைவேற்ற இந்தியா முன்வந்தது. சீனா, காங்கேசன் துறையில் மையம் கொள்ளுமாயின், இந்திய போர் கப்பல்கள் பாக் ஜலசந்தி வழியாக அனுதினமும் பாதுகாப்பு ரோந்து சென்றே ஆகவேண்டும். இல்லாவிட்டால், சென்னைக்கும் பெங்களூருக்கும் எந்த நிமிடமும் ஆபத்து தான். இந்திய பெருங்கடலின் மிக வலுவான பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யவேண்டும் எனில் பாக் ஜலசந்தியில் இந்திய போர் கப்பல்கள் பயணித்தாக வேண்டும்.

எனவே வணிகம், அரசியல் ஆகிய நோக்கில் இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு சேது திட்டத்தை முடக்குவதும், வணிகம், பாதுகாப்பு ஆகிய நோக்கில் இந்தியா இந்த திட்டத்தை முன்னெடுப்பதும் ஏன் என்பது அதன் முக்கியத்துவத்தோடு எளிதில் நமக்கு விளங்கும்.

பா.ஜ.க இந்த திட்டத்தை முடக்க ராமரை துணைக்கழைத்து மத ரீதியான உணர்வுகளை தூண்டிவிட்டதை பா.ஜ.கவின் தலைவராக இருந்து இந்த திட்டத்துக்கான முதல் கட்ட ஒப்புதலை அளித்த முன்னாள் பாரத பிரதமர் உயர்திரு. அட்டல் பிஹாரி வாஜ்பாய் அவர்களே விரும்பவில்லை. எனினும் அடிப்படையற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மூலமாக திட்டத்தை முடக்க எடுத்த முயற்சிகள் ஓரளவு வெற்றிபெறவே செய்தது.


(ஆராயப்பட்ட கால்வாய் பாதைகள்)

உச்சநீதிமன்ற மூலமாக வழக்கு தொடுக்கப்பட்டு முடக்கப்பட்டதன் காரணமாக மாற்றுவழிகள் சிந்திக்கப்பட்டன. மொத்தம் 6 வழிகள் ஆராயப்பட்டு, ஆடம்ஸ் பாலத்தின் வடக்கிலும், பாம்பன் தீவின் தென்கிழக்கிலுமாக இரண்டு அகழ்வுகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு பச்சோரி கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில் பொருளாதார ரீதியாகவும், சுற்றுசூழல் நோக்கிலும் இந்த திட்டம் செயற்படுத்தத்தக்கதல்ல என ஒரு குண்டை தூக்கி போட்டதுடன், மொத்த திட்டமும் முடிவுக்கு வந்துவிட்டது.

இது தொடர்பான வழக்கில் தான் மாண்புமிகு புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான தமிழக அரசு, எங்களுக்கு இந்த திட்டம் தேவையில்லை என தன் பங்குக்கு ஒரு அஃபிடவிட்டை தாக்கல் செய்திருக்கிறது.

தனது கனவு திட்டம் என சொந்தம் கொண்டாடிய ‘புரட்சி புயல்’ அண்ணன் வைகோ அவர்களும், அன்பு சகோதரியின் ஆட்சேபத்தை எதிர்க்க துணியாமல் முடங்கிவிட்டார்.

தமிழகத்தின் இப்போதைய மிக தலையாய பிரச்சனை சேது சமுத்திர திட்டம் தான். அதனால் தான், கடந்த ஜூன் 3ம் தேதி சென்னையில் தனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதை கோடிட்டு காட்டிய திமுக தலைவர் கலைஞர் அவர்கள், அதற்கான போராட்டத்தை ‘சேது சமுத்திர போர்’ என்றே முழங்கினார். நம்மையும், நம் மாநிலத்தையும் காப்பதற்கான போர்.

தமிழர்களாகிய நாம், தமிழகத்தின் நலனை கருதும் அக்கறை இருப்பின் இந்த திட்டத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவேண்டும். மக்கள் பணத்தை செலவழித்து கிட்டத்தட்ட முக்கால் பாக திட்டம் முடிந்துவிட்ட நிலையில் அதை முடக்கி இலங்கைக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் எதிராகவும் செயல்படும் நபர்களை அடையாளம் கண்டு கொள்ளவேண்டும். இந்த திட்டத்துக்கு எதிராக, தமிழக வளர்ச்சிக்கு எதிராக, தமிழக மக்களின் நலனுக்கு எதிராக யாரெல்லாம் செயல்படுகிறார்கள் என கண்டறிந்து, கற்றுணர்ந்து அவர்களுக்கான தக்க தண்டனையை தங்கள் வாக்குகளால் வழங்கவேண்டும்.

தமிழர்கள் சுய சிந்தனையும், பகுத்தறியும் திறனும் பெற்றவர்கள் என்பதால், இந்த திட்டம் குறித்து சுயமாகவே சிந்தித்து, அரசியலார் அரசியலுக்காக சொல்லும் புனை கதைகளை புரிந்து நடந்துகொள்வார்களா இல்லையா என்பது பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும் தானே?
 
மேலும் காண்க:
 
 
 

Tuesday, June 18, 2013

திருத்த வேண்டிய தீர்ப்பு!


நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கினார் நீதியரசர் உயர்திரு. கர்ணன் அவர்கள். சென்னை உயர்நீதிமன்றம் தன் பங்குக்கு பல பல விசித்திரமான தீர்ப்புக்களை தந்திருக்கிறது. பல பகுத்தறிவு ததும்பும் முற்போக்கான தீர்ப்புக்களையும் தந்திருக்கிறது. ஆனால் நேற்றைய தீர்ப்பை எந்த ரகத்தில் சேர்த்துவது என்று இன்னமும் தெரியவில்லை!

விஷயம் இது தான்!

கோவை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு. மனைவி தனது கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டது குறித்தான வழக்கு. இதில் இருவருக்கும் முறைப்படி திருமணம் நடைபெறவில்லை என்பதால் ஜீவனாம்சம் கொடுக்க தேவையில்லை என கணவன் வாதம் வைக்கிறார். ஆனால் இருவரும் இணைந்து வாழ்ந்ததையும், அதன் மூலமாக இரண்டு குழந்தைகள் பிறந்ததையும் அவர் மறுக்கவில்லை. இணைந்து வாழ்வது வேறு, திருமண பந்தம் என்பது வேறு. அதனால் ஜீவனாம்சம் கொடுக்க தேவையில்லை என்பது கணவரின் நிலைப்பாடு.


இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அவர்கள், “திருமண வைபோகம் என்பதெல்லாம் வெறும் சம்பிரதாயங்கள் தான். சமுதாயத்துக்கு அறிவிப்பதற்கான ஒரு சடங்கு தான். எனவே அவை எல்லாம் இல்லாவிட்டாலும், திருமணம் செய்துகொள்ளலாம்”. அது செல்லும் என்பதாகவும், “சட்டப்பூர்வமாக திருமண வயதை அடைந்த ஆணும் பெண்ணும் பரஸ்பர ஒப்புதலோடு உறவு வைத்துக்கொண்டால், அதை தகுந்த ஆதாரங்களோடு நிரூபித்தால்(?) அதன் அடிப்படையில் அதை சட்டப்பூர்வமான திருமணமாக அறிவிக்கலாம்” எனவும், “அந்த அடிப்படையில் இந்த குறிப்பிட்ட வழக்கில் கணவர் மனைவிக்கு மாதம் ரூ.500/- ம் குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000/- ம் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும்” எனவும் தீர்ப்பளித்திருக்கிறார்.

மனிதாபிமான நோக்கிலும் சட்ட நோக்கிலும் இந்த தீர்ப்பில் எந்த குறையும் யாரும் சொல்லிவிட முடியாது. மறுக்கப்பட்ட ஒரு நீதியை பத்தாண்டுகளாக போராடிய பெண்ணிற்கு, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று பெற்று கொடுத்திருக்கிறது என்கிற வகையில் மிகவும் பாராட்டுக்குரியதும் கூட.

ஏற்கனவே சில நீதிமன்றங்கள் இதே போன்ற சில தீர்ப்புக்களை கொடுத்து இருக்கின்றன. அவற்றுள் சில:

Ø  திருமணம் ஆகியிருந்தாலும் உறவுக்கு வற்புறுத்துவது, சம்மதமின்றி உறவு கொள்வது ஆகியவை பாலியல் வன்கொடுமை என கருதப்படவேண்டும்.

Ø  திருமணத்துக்கு பின்னர் இரண்டாண்டுகளுக்குள் அந்த திருமண பந்தம் உறவாக பரிணமிக்காத நிலையில் அந்த திருமணம் சட்டப்படி செல்லுபடியாகாது

Ø  திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், ஒன்றாக வாழ்வது, தெருவில் ஒன்றாக ஜோடியாக வலம் வருவது, பலரும் இவர்கள் இணைந்து பயணித்ததை பார்த்தது, ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டது போன்றவற்றை நிரூபிப்பதன் மூலம், அவர்களை தம்பதியாக அறிவிக்கலாம்

Ø  பதினாறு வயதுக்கு மேல் பரஸ்பர ஒப்புதலோடு உறவு கொள்வது சட்டவிரோதமாகாது

…மற்றும் பல.

சட்ட ரீதியாகவும், மனிதாபிமான அடிப்படையிலும், எந்த ஒரு பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்கிற நோக்கிலும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு மிகவும் வரலாற்று சிறப்புமிக்கதாகும்.

ஆனால், சமூக நோக்கில் அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.

பரஸ்பர ஒப்புதலோடு உறவு வைத்துக்கொண்டாலே சட்டப்பூர்வ திருமணமாக அது அங்கீகரிக்கப்படும் எனவும், அதன் பின் சம்மந்தப்பட்டவரிடமிருந்து எழுத்துமூலமான ஒப்புதலோ, சட்டப்பூர்வ விவாகரத்தோ வாங்காமல் செய்யப்படும் திருமணம் செல்லாது எனவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

இதன் படி, தற்போது குடும்பமாக வாழ்வோரைக்கூட அவர்களது முன்னாள் காதலர்கள் சட்டப்பூர்வமாக தொந்தரவு செய்ய முடியும். மேலும், சட்டப்பூர்வமான திருமணம் என அங்கீகரிக்கப்படுவதால் சொத்துரிமைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

காதலர்களாக மட்டும் அல்லாமல் அவர்களுக்கிடையே பரஸ்பர உறவும் ஏற்பட்டு இருந்து, பின் ஏதேனும் ஒரு காரணத்தால் பிரிய நேர்ந்தால், ‘சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து எழுத்துமூலமான ஒப்புதல்’ பெற்றபிறகே வேறு நபருடன் திருமணம் செய்யவேண்டியதிருக்கும், இனி!

இந்த தீர்ப்பின் அமலாக்கம் எப்போதிருந்து என தெரியவில்லை. பொதுவாகவே உயர்நீதிமன்ற தீர்ப்புக்கள் என்பது சட்டம் தான். அந்த வகையில் பார்த்தால், இதன் சிக்கலும் தீவிரமும் புரியும்!

இந்த தீர்ப்பின் மிக பெரிய அனுகூலமே, இனி தவறு செய்யும் முன் பலமுறை யோசிப்பார்கள். நினைத்தவுடன் பிரிவு என்பது அசாத்தியம். பெண்கள் அதிகம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவார்கள். ஏமாற்ற நினைக்கும் ஆண்களிடமிருந்து சட்டப்பூர்வ உரிமைகளை பெற முடியும்.

ஆனால், இந்த சட்டம் முன் தேதியிட்டு அமலானால், இப்போது வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் பலருக்கும் சிக்கலாக அமைந்து விடக்கூடும். ‘முன்னாள்கள்’ இனி தைரியமாக வீட்டுக்கு வந்து தற்போதிருக்கும் துணையை வெளியேற்றிவிடவும் முடியும், சொத்துரிமை பெறவும் வழி வகுக்கும். திருமண பேச்சுவார்த்தையின் போதே 'NOC' வாங்கி சமர்ப்பிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை!
எனவே பல பல சமூக சிக்கல்களுக்கு காரணமாக வாய்ப்பிருக்கும் இந்த தீர்ப்பு குறித்து தகுந்த விளக்கங்களையும், திருத்தங்களையும் சென்னை உயர்நீதிமன்றம் கொடுப்பது இப்போதைய அத்தியாவசியமாக உணர்கிறேன்!

சில தீர்ப்புக்கள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் திருத்தப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த தீர்ப்பின் நிலை என்ன என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடக்கூடும்!

Printfriendly